Friday, October 31, 2008

ஆன்மீகம் - கிரகிப்பு - IV - உணர்வு - கலாச்சாரம்



ஆன்மீகம் - பற்றிய முந்தய
ஆன்மீகம் - கிரகிப்பு - I, ஆன்மீகம் - கிரகிப்பு - II - இயற்கை & ஆன்மீகம் - கிரகிப்பு - III - அறிவியல் ஆகிய மூன்று பதிவுகளின் தொடர்ச்சியாக ஆன்மீக உணர்வு, நம்பிக்கை மற்றும் அதனடிப்படையில் விளையும் சமூகக் கலாச்சாரம் மற்றும் அதன் எதிர்வினைகள் என இக்கட்டுரை நீள்கிறது.

ஆன்மீகம், மனிதனின் வளர்சூழல் சார்ந்த பார்வையினடிப்படையில் எழும் உணர்வு ரீதியான தேடல் என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது. ஆனால், ஆன்மீக உணர்வுகள் வளர்சூழல் சார்ந்த கிரகிப்புகளினடிப்படையில் பழக்கப்படுத்திக்கொள்பவை என்ற கண்ணோட்டத்தில் அது இயற்கையிலேயே பிறக்கும்போது தோன்றுமோர் உணர்வல்ல. வளர்சூழலில் தோன்றியதாயிருந்தாலும் ஆன்மீகமும் மனிதனின் சிந்தனைத்திறத்தால் உருவாகும் ஓர் உணர்வே.

இவ்வுணர்வு ரீதியினாலான தேடலும், கடுமையான பயிற்சியின் மூலமே சாத்தியப்படுத்தப் படமுடியும் என்பதாக நம்பப்படுகிறது. மேலும், இப்பிரபஞ்ச இரகசியத்தை நோக்கிய ஒரு உண்ணதத் தேடல் என்றும், அத்தேடலின் விளைவால் அறிந்த உண்மைகளின் உதவியோடு சமூக வாழ்விலிருந்து மனிதனை உய்விப்பதையே தனது தலையாயக் கடமையாக வரிந்துக்கொள்கிறது ஆன்மீகம். மேலும், மனதை சுத்தப்படுத்துதல், அழிவில்லாத ஆன்மா, பிரபஞ்ச இரகசியத்தை உணர்தல் என்பன போன்ற கதையாடலாக சமூகத்தினுள் நுழைந்து தனது இருத்தலுக்கான அவசியத்தையும், நியாயத்தையும் கற்பிக்கிறது. இதனடிப்படையிலேயே ஆன்மீகத் தேடல் ஒருவனது வாழ்வினை முழுமைப்படுத்துவதாகவும், மனிதனின் பிறப்பே இத்தேடலுக்காக, போன்ற கருத்துக்கள் நம்பிக்கைகளாகின்றன. இவ்வகையான தத்துவ அடிப்படைகள் மெல்ல உடலைத் தாழ்த்தி, ஆன்மாவை முதன்மைப் படுத்து முனைகின்றன. இவ்வகையான தத்துவ அடிப்படைகளைக் கொண்ட இனக்குழுக்களின் உளவியல் எப்படியிருக்கிறது, அல்லது அதன் விளைவாகச் சமூகச் சூழல் எப்படி உருமாறியிருக்கிறது என்பது கருத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்று.

ஆன்மாவையும், மனதையும் முதன்மைபடுத்தி உடலை வருத்திக்கொள்ளும் அல்லது தாழ்த்திக்கொள்ளும் இனக்குழுக்களிடம் இருக்கும் பொதுவான பண்புகளில் சில:

1. குழந்தைகளுக்கு தண்டனையாக உடலில் வலியை ஏற்படுத்துதல்.

2. சமூகத் தண்டனைகளாக உடல் வன்முறைகளை அதிகமாகப் பயன்படுத்துதல்.

3. பெண்களை, ஒரு பொருளாகக் கருதுதல். மேலும், உடல்குறித்தான கட்டுப்பாடுகளை முன்னிறுத்தி பெண்களை ஒடுக்குதல். இதன் மூலம் திருமணங்களை ஒரு வியாபாரம் போல பாவித்து, பொருள் கொடுத்துப் பெண்ணின் உடலைக் கொள்ளுதல். (இது நமது சமூகத்தில் இன்னும் மோசமாகயுள்ளது, பெண்ணை ஒரு பயனுள்ள பொருளாகக் கூடக் கருதாமல், பெண்ணையும் பொருளையும் சேர்த்துக் கொடுத்தல்.)

4. இவ்வகைச் சமூகத்தின் இளைய தலைமுறையினருக்கு உடல் ரீதியான கட்டுப்பாடுகள் அதிகமாக இருப்பதால், மது, போதை ஆகியப் பழக்கங்களில் ஆர்வம் காட்டுதல்.

5. மணவாழ்க்கைக்கு வெளியே (குறிப்பாகப் பெண்கள்) உடலுறவு வைத்துக் கொள்ளுதல், உயிரை எடுக்கும் அளாவிற்கான குற்றமாகக் கருதுதல்.

6. ஆயுதம் தாங்கியக் கடவுளரை வழிபடுதல்.

இவை பல்வேறு தென்னாப்பிரிக்க மற்றும் தென்னமெரிக்கப் பழங்குடியினரையும், ஒப்பீடு செய்தும், வட அமெரிக்காவின் சில மாகாணங்களில் பெருகிவரும் வன்முறைக்கும், இளைஞர்களின் போதைகளுக்குமான காரணங்களாகவும் கண்டறியப்பட்டவை. இப்பண்புகளோடு நமது தற்ப்போதைய சமூகப் பண்புகளின் ஒப்புமையை வாசகரிடமே விட்டுவிடுகிறேன்.

மேலும், முன்னர் விடுத்த இரண்டு புள்ளிகளையும் நினைவு கூர்தல் நன்று. முற்றிலும் துறத்தல் என்பதில் துவங்கிய தத்துவங்கள் பின்னர் தங்களது இறை வடிவத்தில் கூட நிர்வாணத்தை ஏற்றுக் கொள்ளாதது, இயற்கை குறித்தான கருத்துக்களில் மனித விலங்கின் சமூக வாழ்விலிருந்து விலகி, பேரண்டம், பிரபஞ்சத்தின் தோற்றம், உண்மை அல்லது தோன்றவைத்து இயக்கிக் கொண்டிருக்கும் ஆற்றல்/சக்தி குறித்த கதையாடல்களுக்குள் நுழைந்தது, என தொடர்ச்சியாக உயிரும் பொருண்மையும் சிறுமைப்படுத்தப்பட்டதை உணர்தல் அவசியம்.

வளர்சூழலின் கிரகிப்பினடிப்படையில் தோன்றிய ஓர் உணர்வாகயிருந்தாலும், இப்படியானதொரு உணர்வை மறுப்பதற்கில்லை. சிந்தனைத் திறனால் ஏற்படும் அறிதல் வேட்கைக்கான ஒரு வடிகாலாகவே இவ்வகையுணர்வு செயல்படுகிறது. இவ்வுணர்வும், ஒருவகை போதைக்கிணையான ஒன்றாகவே நோக்கலாம். இவ்வகைச் செயல்பாடுகளின் போது மூளை எனப்படும் உயிர்வேதிக்கலனில் நடக்கும் வேதியியல் மாற்றங்களால் சுரக்கும் ஒரு வகைத் திரவம் அளிக்கும் சுகானுபவமே இவ்வுணர்வும். ஆன்மீகம் இவ்வகையானச் செயல்பாடே என்பதைச் செயற்கையாகத் தியானத்தின் உணர்வை ஒருவரின் மூளையின் சில பகுதிகளை மின் தூண்டியதன் மூலம் அறிவியல் நிரூபித்திருக்கிறது.[1,2] உணர்வுகளின் ஒன்றான வலியை முதன்முதலாக அருதியிட்டு எண்மதிப்பில் அளப்பதற்கான படிநிலையை அடைந்திருக்கின்றன ஆய்வுகள்[3]. வரும் காலங்களில் உணர்வுகள் உணரப்படவேண்டியவை போன்ற சொற்றொடர்கள் வழக்கொழிந்து போகலாம்.

ஆன்மீகம் எனும் உணர்வு குறித்த மதிப்பீடுகள் தனிமனித உரிமை சார்ந்தது. ஆனால், அது மனிதனின் பிறப்பின் போது இயற்கையாகத் தோன்றும் ஒரு உணர்வல்ல. அதுவே, சித்தாந்தமாக மாறி பின்னர் நம்பிக்கைகளாகச் சமூகக் கலாச்சாரத்தினுள் நுழைந்து இயற்கையான மற்றவுணர்வுகளைச் சிறுமைப்படுத்தும் ஏற்றத்தாழ்வு அரசியல் மற்றும் அதன்வழிப் பெருகும் உளவியல் வன்முறைகள் ஆகியவை கேள்விக்குட்படுத்தி அவற்றை மீள்பரிசோதனைக்குட்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

பிறக்கும் போது பாலூட்டிவிலங்குகளுக்குப் பொதுவானதாகத் தோன்றும் பலவகையுணர்வுகள் தவிர அனைத்தும் வளர்சூழல், மற்றும் கிரகிப்புத் தன்மை சார்ந்தவை. மனிதனின் சுற்றுச் சூழலும், அறிவியல் அறிவும் வளர்ந்து வரும் சூழலில், இவ்வகையுணர்வுகளும் அதனடிப்படையில் முளையில் உருவகிக்கப்படும் பிம்பங்களும் மாற்றமடைந்து வருவன. உதாரணமாகப் பிரபஞ்சம் குறித்த அரைகோள பிம்பம் துவங்கி பால்வழி அண்டத்தின் அமைப்பு வரை.

இப்பூமியில் உயிர் தோன்றியிருந்தாலும் அல்லது தோன்றாவிட்டாலும் பொருண்மை மற்றும் ஆற்றல் உறவினடிப்படையில் பிரபஞ்சங்கள் தோன்றிக் கொண்டும் அழிந்துகொண்டுமிருக்கும். இப்பிரபஞ்சம் ஏதோவொரு நோக்கத்தினடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கிறது, அல்லது இப்படியியக்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் குறித்த புரிதலில் ஒருவேளை ஆன்மீகத்தில் விடைகிடைத்தாலும் சூரியன் தன் அழிவை நிறுத்திவைத்துக் கொள்ளப் போவதில்லை. மேலும், இப்பிரபஞ்ச நிகழ்வுகள் அனைத்தும் ஒரு நோக்கத்துடன் நிகழ்கின்றன என்ற உணர்வே மனிதனின் சுயார்வத்தினால் விளைந்த கேள்விக்கான தேடுதல் வேட்கையைத் தணிப்பதற்கான அனுமானமேயன்றி, பூமிக்குச் சூரியனைச் சுற்றுவதற்கோ அல்லது தனது பரப்பில் உயிரைத் தோற்றுவித்திக் கொள்ளவேண்டுமென்ற நோக்கமோ எண்ணமோ கிடையாது.

உயிரின் இரகசியம்- ஆன்மீகத்தின் வாழ்வும் சாவும், இவையணைத்தும் இங்கே புதைந்திருக்கிறது பொருண்மை (உணவு).
இப்படியாக எழுதத் தூண்டிய சாத்தானின் உறக்கத்தினால், எனது இருள்நீங்கி துவங்குகிறது உங்களிருள், தற்காலிக முடிவுகளோடு தற்காலிகமாக முடிகிறது கட்டுரைத் தொடர். :)


1.
இனி அறிவியல் மூலமாக யோகநிலை அடையலாம் - சதுக்கபூதம்
2. http://www.nytimes.com/2007/08/23/science/23cnd-body.html?_r=2&hp&oref=slogin&oref=slogin
3. "எல்லாம் தனக்கு வந்தால் தெரியும்" - பொய்க்கப் போகும் சொல் வழக்குகள் - கையேடு

இதையும் வாசிக்கலாம்
காம அரசியல், காமத்தின் அரசியல், காமமே அரசியல் - பைத்தியக்காரன்.


புகைப்படம்: பிரெஞ்சு ஓவியம்.

2 comments:

Anonymous said...

//ஆன்மீகம் எனும் உணர்வு குறித்த மதிப்பீடுகள் தனிமனித உரிமை சார்ந்தது. ஆனால், அது மனிதனின் பிறப்பின் போது இயற்கையாகத் தோன்றும் ஒரு உணர்வல்ல. அதுவே, சித்தாந்தமாக மாறி பின்னர் நம்பிக்கைகளாகச் சமூகக் கலாச்சாரத்தினுள் நுழைந்து இயற்கையான மற்றவுணர்வுகளைச் சிறுமைப்படுத்தும் ஏற்றத்தாழ்வு அரசியல் மற்றும் அதன்வழிப் பெருகும் உளவியல் வன்முறைகள் ஆகியவை கேள்விக்குட்படுத்தி அவற்றை மீள்பரிசோதனைக்குட்படுத்தப்பட வேண்டியது அவசியம்.//

சிந்திக்கவைக்கும் வரிகள்... !!! ஆனால், தமிழ் கூறும் நல்லுலகில் இப்படி மீள்பரிசோதனையில் இறங்குபவர்களை நாத்திகர்கள் என்னும் ஒற்றைச் சொல்லில் சுருக்கிவிடுவதாக நான் கருதுகின்றேன்.. :)

கையேடு said...

//நாத்திகர்கள் என்னும் ஒற்றைச் சொல்லில் சுருக்கிவிடுவதாக நான் கருதுகின்றேன்.. :)//

உண்மைதான்..

நன்றி பதி.. :)