Showing posts with label பரிணாமம். Show all posts
Showing posts with label பரிணாமம். Show all posts

Friday, April 23, 2010

பரிணாமம் - சில சுட்டிகள்

தமிழ் வலைப்பதிவுகளில் பரிணாமம் பற்றிய எதிர்கருத்துகளை உள்ளடக்கிய சில சுட்டிகளை சேகரித்து வைத்துக் கொள்ளவே இவ்விடுகை. உங்களிடமும் சில சுட்டிகள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் பின்னூட்டத்தில். இது என(நம)க்கான தரவிற்காகவே இச்சேகரிப்பு.


மனிதம் களிமண்ணால் படைக்கப்பட்டதா? - http://kuddusa35.blogspot.com/2010/04/blog-post.html


புதிய படிம கண்டுபிடிப்புகள் பரிணாம வளர்ச்சி கோட்பாடுகளை தகர்க்கிறது —ஹாருன் யஹ்யா

- http://seasonsnidur.wordpress.com/2010/04/19/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/

Evolution Theory --- மக்கள் என்ன சொல்கிறார்கள்?

http://ethirkkural.blogspot.com/2010/04/evolution-theory.html

பரிணாமவியலை நம்புபவர்கள் இதையும் நம்புவார்களா?


பரிணாமவியல் உண்மையென்றால் அறிவியலாளர்களிடம் ஏன் இவ்வளவு கருத்து வேறுபாடுகள்?


Thursday, April 1, 2010

மனிதனின் பரிணாமம்.. !!!???

குறிப்பு: கட்டுரையின் நீளம் கருதி எழுத்துறு சிறிதாக இருக்கிறது. "cntrl +" பயன்படுத்திப் பெரிது படுத்திக் கொள்ளலாம்.

நண்பர் வால்பையன் அவர்களின்
இந்த இடுகையைப் பார்த்தவுடன் நீண்ட நெடுநாட்களாக எழுதாமல், சோம்பலாக அவ்வப்போது குறிப்புகள் செய்து காலம் கடத்தி வந்த இடுகையை தூசு தட்டி எழுதியிருக்கிறேன்.

பொதுவாக பரிணாமம் குறித்த பெரும்பான்மையினருக்கு எழும் சில கேள்விகள், மனிதன் குரங்கிலிருந்து வந்தால் குரங்கு ஏன் இன்னும் இருக்கிறது? மனிதன் குரங்கிலிருந்து வந்தால் இப்போதிருக்கும் குரங்கு எப்போ மனிதனாகும்? ம
னிதன் பரிணமிக்கிறானா அப்படியென்றால் எப்படிப்பட்ட உயிரினமாகப் பரிணமிப்பான் ? மனிதன் பரிணமிக்க வில்லையென்றால் ஏன் இல்லை? இதில் குரங்கு பற்றிய கேள்விக்கான பதிலைச் சுருக்கமாக ஏற்கனவே இங்கே எழுதியிருப்பதால், அடுத்த கேள்விக்கு நகருவோம். இக்கேள்விக்கான விடை பற்றி உரையாடும் முன்னர், சிலவற்றைப் பேசிவிட்டுப் போகலாம்.

மனிதன் பரிணமிக்க முடியுமா அல்லது பரிணமிக்கிறானா? என்பது குறித்த சில கேள்விகளையும் விளக்கங்களையும் முன்வைக்கவே இவ்விடுகை. இவ்விடுகை முற்றுமுடிவானது அல்ல, இவ்விடுகையில் பேசப்பட்டுள்ள கண்டுபிடிப்புகளை முன்வைத்து நாம் உரையாடலாம் அல்லது வேறு புள்ளிக்கு நமது புரிதலை நகர்த்திக்கொள்ளலாம், அவ்வளவே. இக்கட்டுரையில் உள்ள ஆய்வுகளுக்கு எதிரான முடிவுகள் இருந்தால் தெரியப்படுத்துங்கள். இணைந்து யோசிக்கலாம்.

பரிணாமத்தைப் பற்றிய ஒரு மீள் பார்வை

1. பரிணாமம் என்றால் என்ன?

பரிணாமம் என்பது இயற்கை மாற்றத்தினால் ஒரு உயிர் எப்படிப் பலவகை உயிரிகளாக மாறுகிறது/மாறியது என்பதை விளக்கும் ஒரு உயிரியல் கொள்கை. பரிணாமம் உலகிலுள்ள அனைத்து "உயிரினங்களும்" (species) காலச்சக்கரத்தில் பின்னோக்கி நகர்ந்தால் ஒரே மூதாதையரைக் கொண்டிருப்பவை எனபதை விளக்கும் ஒரு கொள்கை. சுருக்கமாகச் சொன்னால் "எல்லோரும் ஒரு மரத்துப் பறவைகளே" என்பதுதான் பரிணாமக் கொள்கையின் அடிப்படைச் சாரம்.

முக்கியாமானதொரு நினைவுப் புள்ளி: "பரிணாமக் கொள்கை உயிரின் மூலத்தை விளக்கும் ஒரு கொள்கையல்ல, உயிரினங்களின் மூலத்தை விளக்க முற்படும் ஒரு கொள்கை" "It does not explain origin of life, it (tries to) explain(s) origin of species"

2. பரிணாமத்தை எப்படிப் புரிந்து கொள்வது?

இவ்வுலகில் தோன்றிய முதல் உயிர் தனது சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு தனது இருத்தலுக்காக உள்ளான மாற்றமே பரிணாமம். மிக முக்கியமானதொன்றைக் குறிப்பிட விரும்புகிறேன், இம்மாற்றத்தை அவ்வுயிர் தேர்ந்தெடுக்கவில்லை மாறாக இயற்கை நிகழ்வாக சுயமாக நிகழ்கிறது. இம்முதல் உயிரிலிருந்து பிரிந்து விரிந்த ஒரு மரமாக இன்றைய அனைத்து உயிர்களையும் நோக்கலாம். இச்சூழல் மாற்றத்தினடிப்படையில் தகவமைத்துக் கொள்ளும் பண்பையே சார்லஸ் டார்வின் "natural selection" என்று தனது பரிணாமக் கொள்கையில் குறிப்பிடுகிறார்.

சரி இப்போ மனிதன் பரிணமிக்கிறானா என்ற கேள்விக்கு வருவோம்:

மனிதன் பரிணமிக்கிறானா என்பதற்கு முன்னர், மற்ற உயிரிகள் இன்றும் பரிணமித்துக் கொண்டிருக்கின்றனவா என்பதைப் பார்க்கலாம்.


தற்போதைய சூழலுக்கு தகுந்தார்போல் பிற விலங்குகளின் உடலில்/மரபணுக்களில் மாற்றம் நிகழ்கிறதா?

பிற விலங்குகள் தற்போதும் பரிணமித்துக் கொண்டிருந்தால், தங்களது சூழலுக்கு தகுந்தார்போல், அவற்றின் வாழ்க்கைமுறை/ உடற்கூறுகள்
மாறியிருக்க வேண்டும். இரண்டு எளிய உதாரணங்களைக் கொண்டு மேற்குறிப்பிட்ட கூற்றைக் காணலாம்.

உதாரணம் 1: பசுபிக் பெருங்கடலில் வாழும் குறிப்பிட்ட வகை மீனினத்தின் இனப்பெருக்கத்தில் பெரும் மாற்றத்தை அவதானித்திருக்கிறார்கள். அதாவது இத்துனை ஆண்டுகளில் இம்மீனினத்தின் எண்ணிக்கை குறைந்து வந்திருக்கிறது. அதற்கு முக்கியக் காரணிகளில் ஒன்று அம்மீன் அதிக அளவில் உணவாக உட்கொள்ளப்பட்டதுதான் என்று முன்மொழியப்பட்டது. ஆனால், சமீப காலமாக அவற்றின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அது எப்படி? என்று நோக்கினால், அவற்றின் இனப்பெருக்க சுழற்சியின் கால அளவை அவை குறைத்திருக்கின்றன. அதாவது குறுகிய காலத்தில் இனப்பெருக்கம் செய்யத் துவங்கியிருக்கின்றன. ஆக இக்குறிப்பிட்ட இம்மீனினத்தை அதிகரிக்க அவற்றை அதிகமாகச் சாப்பிட வேண்டும் போல.. :)

உதாரணம் 2: இரண்டாவது உதாரணம் இயற்கையான சூழலோடு நேரடியாக ஒப்பிட முடியாவிட்டாலும் மிக முக்கியமான மற்றும் மிக ஆச்சர்யமூட்டும் ஒரு குறுகிய கால மாற்றத்தைக் குறிக்கிறது.

ஸ்பெயின் நாட்டின் உயிரியல் பூங்கா ஒன்றில் சிம்பன்சி ஒன்றின் செயல்பாடுகளில் திடீர் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அது மிகவும் முரட்டு
த்தனமாக மாறியதாகவும், பூங்காவிற்கு வருபவர்களை கற்களை கொண்டு தாக்குவதாகவும் புகார் எழுந்திருக்கிறது. இதனை அவதானிப்பதற்காக ஒரு குழு பணிக்கப்பட, அவர்களோ மிகவும் ஆச்சர்யமூட்டும் நிகழ்வுகளை அவதானித்திருக்கிறார்கள்.

வாரயிறுதி நாட்களில் இப்பூங்காவிற்கு சிறுவர் சிறுமியர் அதிகமாகத் தொடர்ந்து வந்திருக்கின்றனர். அதோடு கூட்டம் அதிகரிக்க அவர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டும், இக்குரங்கினை விளையாட வைக்கும் பொருட்டு, குச்சிகள் மற்றும் கற்கள் கொண்டு அதனை இடையூறு செய்திருக்கின்றனர். அவர்களை எதிர்கொள்ளும் நோக்கில் அச்சிம்பன்சி கற்களை வீசத் துவங்கியிருக்கிறது. அட இதுதான் நம்ம
குரங்கு-தொப்பிக்காரன் கதையிலேயே கேள்விப்பட்டிருக்கிறோமேன்னு தோணுதா?? அவசரப் படாதீங்க, செய்தி இன்னும் முடியலை.

இதில் சிறப்பு என்னவெனில், வாரயிறுதி நாட்களில் மட்டும் பூங்கா திறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்னர், அது இருக்கும் திறந்த வெளிக் கூண்டில் இ
ருக்கும் கற்களை சேகரித்து தன்னைச் சுற்றி அடுக்கித் தாக்குதலுக்கு தயார் நிலையில் இருக்கத் துவங்கியிருக்கிறது. இதுதான் மிகவும் ஆச்சர்யம் தரும் நிகழ்வு. அதாவது வாரத்தின் எந்த நாட்களிலும் செய்யாமல், வாரயிறுதி நாட்களில் மட்டும் விடயற்காலையில் கற்களை சேகரித்து தன்னைச் சுற்றி அடுக்கி வைக்கத் துவங்கியிருக்கிறது. பின்னர் மக்கள் வந்தவுடன் தனது தாக்குதலைத் துவங்கியிருக்கிறது.

இதுவரை, மனிதன் தவிர வேறு எந்தவொரு விலங்கும் (யானைகள் விதிவிலக்காக இருக்கலாம்) பசி தவிர வேறு எதற்காகவும், எதிர்காலம் குறித்த சி
ந்தனையுடன் இருந்தது கிடையாது.
இது தவிர, காலம் குறித்த ஒரு கணக்கீட்டையும் செய்
திருக்கிறது. ஆக, நீண்ட கால நினைவு மற்றும், எதிர்காலம் பற்றிய உணர்வு இவை இரண்டிற்கும் அது தன்னை தயார் செய்து கொண்டுள்ளது.

மேலே சொன்ன உதாரணங்களில் இரண்டாவதை ப
ரிணாம மாற்றமாக கொள்ளயியலாது, ஆனால், சூழலின் நிர்பந்தத்தில் மனிதனின் தனித்துவமாக கருதப்படுபவற்றை மனிதனின் நெருங்கிய உறவினர்களில் ஒருவரான சிம்பன்சி தாமாகவே பழகிக்கொண்டிருக்கிறது என்பது மிகவும் ஆச்சர்யமான நிகழ்வுகளில் ஒன்று.

நான் வாசிப்பு சுவாரஸ்யத்திற்காக எளிதான உதாரணங்களைக் குறிப்பிட்டாலும், மரபணுவியல் ஆய்வுகளில் தொடர்ந்து பல விலங்குளின்/தாவரங்களின் பரிணாம மாற்றம் இன்றைக்கும் உறுதி செய்யப்பட்டு வந்திருக்கிறது/வருகிறது. குறிப்பிட்ட இரண்டு உயிரினம் சார்ந்த பரிணாமத்தை கூட்டுப் பரிணாமம் (co-evolution) என்று அழைக்கின்றனர். அப்படியானதொரு கூட்டுப் பரிணாமம் குறிந்த இயற்கையின் வினோதங்கள் அவர்களின் இடுகை இங்கே . ஆக, பரிணாமம், இயற்கைச் சூழல் மாற்றத்துக்கினங்க விலங்குகளில் இப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தொடர் நிகழ்வுதான். (அபரிவிதமான திடீர் சூழல் மாற்றங்கள் நிகழாதவரை)

சரி இப்போ மனித விலங்குக்கு வருவோம்.

பரிணாமக் கொள்கையை முன்மொழிந்த டார்வின் கூ
ட மனிதன் பற்றிய தனது ஆய்வுகளை வெளியிட தயக்கம் காட்டியே வந்திருக்கிறார். பின்னர், வாலஸ், மற்றும் இன்னபிறரின் தூண்டுகோலினால் மனிதன் குறித்த தனது ஆய்வு முடிவுகளையும் வெளியிட்டதாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால், இது முழுக்க உண்மையில்லை, டார்வின் தமக்கே மனிதன் குறித்த பார்வையை உறுதிப்படுத்திக் கொள்ள கால அவகாசம் தேவைப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.

சரிங்க விசயத்துக்கு வருவோம்:

அனைத்து விலங்குகளுக்கும் பொதுவானது, உணவு மற்றும் இனப்பெருக்கம். பரிணாம மாற்றம் என்பது உணவு மற்றும் இனப்பெருக்கம் சார்ந்ததாகவே இருக்கும், என்பதை ஒருமுறை நினைவு படுத்திக் கொள்வோம்.

மனிதன் பரிணமித்திக்கொண்டேயிருந்தால் அவனது சூழல் மாற்றத்திற்கிணங்க அவனது உடற்கூறில் மாற்றங்கள் வந்திருக்க வேண்டும் அப்படி வந்திருக்கிறதா? மனிதனின் உடலில் அவனாக உண்டாக்கிய சமூக அமைப்பின் தாக்கங்கள் என்ன? இப்படியான கேள்விகளை முன்வைத்து மேலும் பேசலாம். ஆனால் அதற்கு கலவையான பல்வேறு ஆய்வு முடிவுகளை முன்னிறுத்தி உரையாட வேண்டியிருக்கும்.

கலவையான பல ஆய்வு முடிவுகளை எளிதான தர்க்
கத்திற்காக, I. இல்லை பரிணமிக்கவில்லை , II.ஆம் பரிணமிக்கிறான்,என இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.

முதலில் மனிதன் பரிணமிக்க வில்லை என்பதற்கான காரணிகள் மற்றும் ஆய்வு முடிவுகள் பற்றி பேசலாம்.

I. மனிதன் பரிணமிக்க வில்லை - ஏன்?

பரிணாம மாற்றம் என்பது மரபணுக்களின் விதங்கள் (variety) பொறுத்தே அமையும், ஆக மரபணுக்களில் இருக்கும் விதங்களைத் தொடர்ந்து அவதானித்தே பரிணாமம் ஏற்படுகிறதா என்பதை கணிக்க முடியும். மனிதனது சமூக அமைப்பு எப்படி அவர்களின் மரபணுக்களில் பொதிந்து விடுகிறது என்பதைப் பற்றிய சில ஆய்வுக்குறிப்புகளைப் பார்க்கலாம்.

பூமியின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து மனிதனது மரபணுக்களைப் பரிசோதித்துப் பார்த்த ஆய்வாளர்கள், அறியப்பட்ட மனித இங்களது மரபணுக்களில் பெரிய வேறுபாடு இல்லை என்று குறிப்பிடுகின்றனர். இன்றளவில் மரபணுக்களில் பல விதங்களை உள்ளடக்கிய மனிதர்கள் இருக்கும் ஒரு நிலப்பிரதேசம் ஆப்பிரிக்கா மட்
டுமே என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மற்ற பிரதேசங்களைச் சேர்ந்த மனிதனின் மரபணுக்களனைத்தும் அப்பிரிக்காவுடன் தொடர்புடையதே என்றும் குறிப்பிடுகின்றனர். இதைப் பற்றிய சமீபத்திய ஆய்வறிக்கையும், சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ஆய்வு முடிவுகளைப் பற்றிய குறிப்புகளையும் நம்ம பேராசிரியர் தருமி அவர்களின் இந்த இடுகையில் காணமுடியும். ஆக மனிதயினத்தில், உலகத்தின் ஒரு மூலையில் இருக்கும் மனிதனுக்கும் மற்றொரு மூலையில் இருக்கும் மனிதனுக்கும் மரபணுக்களில் பெரிய அளவில் வேறுபாடில்லாமல் இருக்கிறது. இச்சூழ்நிலையில், மனிதன் இனிமேலும், பரிணமிக்க முடியாது என்ற முடிவை நோக்கி நாம் நகரலாம். இதற்கு வலு சேர்க்கும் விதமான ஆய்வு முடிவுகளையும் பார்த்துவிடலாம்.

சமூக அமைப்பின் தாக்கங்கள்

அ). ஆப்பிரிக்க கண்டத்தில் நதிக்கரைக்கு இரு பக்கங்களிலும் இருந்த இருவேறு ஆதிவாசியினங்கள் பற்றிய ஆய்வுக்குறிப்பை முதலில் பார்ப்போம். இவர்கள் தங்களது முக அலங்காரங்களில் தங்களை வேறுபடுத்திக் கொள்கின்றனராம். இவ்வாறு வேறுவித முக அலங்காரம் கொண்ட இருகுழுக்களுக்கிடையே கலப்பு மணம் (அதாவது மரபணுப் பரிமாற்றம்) நடைபெறாமல் இருந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

ஆ). அதேபோல், 19 ஆம் நூற்றாண்டு வரை, ஐரோப்பா
விலுள்ள பல்வேரு மொழி பேசும் மக்களிடையே மிகுந்த மொழித் தேசிய உணர்வினால் அவர்களிடையே நீண்ட நெடுங்காலம் மரபணுப் பரிமாற்றம் நிகழாமல் இருந்தது என்பதுவும் நிரூபிக்கப்பட்ட ஒன்று.

இ). நமது தமிழ்ச்சமூகத்தில், மரபணுக் கலப்பு என்பது சாதீயம், மதம், மொழி மூலம் தடுக்கப்பட்டு வந்ததையும் ஒப்பிட்டுக் கொள்ளலாம். இதன் மூலம், பல்வேறு விதமான மனிதனது மரபணுக்கள் கலக்காமல் இருப்பதுவும், சாதீயத்தின் சுவடுகள் அல்லது கூறுகள் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே வேர்விடத் துவங்கிவிட்டது என்பதையும் இதன் மூலம், கட்டுக்கோப்பான சமூக அமைப்பிற்கே உண்டான மரபணு சார்ந்த நோய்கள் அப்படியே தங்கிப் போகும் அபாயம் உண்டு என்பதையும் முன்மொழிந்து சமீபத்திய ஆய்வுக்குறிப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதைப் பற்றிய தருமி சாரின் இடுகை இங்கே .

ஈ). "Sexual selection" - மனிதனது இனப்பெருக்கத் துணைத் தேடல் என்பது எப்படி இருக்கிறது? இதைப் பற்றி டார்வினின் கருத்தை ஒரு தனி நெடும் கட்டுரையாகவே எழுதலாம். (வாய்ப்பிருந்தால் பின்னர் பேசலாம்.) இப்போதைக்கு சுருக்கமாக: மற்ற விலங்குகளில் துணைத் தேடல் என்பது ஆரோக்கியமான வாரிசுகளை உருவாக்கும் வலிமையுடைய ஆண், மற்றும் தனக்கும் தனது குழந்தைகளுக்குமான உணவு மற்றும் பாதுகாப்பைத் தரவல்ல ஆண் இணை என்ற அடிப்படையிலேயே தேர்வுகள் இருக்கும். இத் துணைத் தேடலை சில பறவைகள் எப்படிச் செய்கின்றன என்பதை நண்பர் இயற்கையின் வினோதங்கள் அவர்களின் இந்த இடுகையில் பார்க்கலாம். பெரும்பாலும், துணைத்தேடலில், தனது துணையை உறுதி செய்யும் பொறுப்பு பெண்ணிடமே இருக்கும், ஆண்கள் முட்டி மோதி தகுதியானவன் என்று நிரூபிக்கும் வரை அமைதியாகக் காத்திருக்கும், பெண்.

இயற்கையின் இணைத் தேடலின் அடிப்படையில் மனிதனது இணைத் தேடலும் இருக்க வேண்டுமென்றால், உடல் வலிமை உள்ளவனும், விலங்குகளை வேட்டையாடியோ அல்லது உணவு உற்பத்தியில் சிறந்தவனோதான் இனப்பெருக்கம் செய்ய முடியும். இப்போ அப்படி இருக்கா என்ற நாம் தர்க்கம் செய்து புரிந்து கொள்ளவேண்டியதில்லைன்னு நினைக்கிறேன்.. :).

பல மனித சமூகங்களில் இணைத்தேடுதல் உரிமை என்பது பெண்ணுக்கு வழங்கப்படுவதேயில்லை என்றும், இணையைத் தீர்மானிக்கும் காரணிகள் புறக்காரணிகளாகவே இருக்கின்றன என்றும் டார்வின் குறிப்பிடுகிறார்.

மனிதனது வாழ்க்கை முறையானது இயற்கையிலுள்ள மற்ற விலங்குகளிடம் இருந்து வேறுபட்டு, தனது சமூகக் கட்டமைப்பு தரும் சூழலைச் சார்ந்தும் நோக்கியும் இருக்கிறது. இப்படி இயற்கையினடமிருந்து தனித்து அல்லது இயற்கையின் போக்கில் பரிணாம மாற்றம் நடைபெற பெரும் தடையாக இருப்பவை அல்லது மனிதனை இயற்கையான வாழ்விலிருந்து பிரித்துவைப்பதில் மிக முக்கியமானவையாக நான் கருதுவது.

i. உணவு உற்பத்தி.

ii.சமூகக் காரணிகளை உள்ளடக்கிய தடைகளை சுருக்கமாகக் கீழுள்ள கோட்டோவியம் மூலம் கொடுத்திருக்கிறேன்.




கோட்டோவியத்தை மேலும் புரிந்து கொள்ள இச்சுட்டி பயன்படலம். http://en.wikipedia.org/wiki/Chastity_belt

அடுத்து மனிதன் இன்றைக்கும் பரிணமித்துக் கொண்டிருக்கிறான் என்ற தர்க்கப் புள்ளிக்கு வருவோம்.

II. மனிதன் பரிணமித்துக் கொண்டிருக்கிறான் - எப்படி?

மனிதன் பரிணமிக்க வேண்டும் என்றால் அவனது சூழலுக்கு ஏற்றார்போல், அவனது உயிரியல் உடலில் ஏதாவது மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றிருக்க வேண்டும். இந்தக் கேள்விக்கு ஒரேயொரு புள்ளியில் இருந்து பதில் தேடினால் ஒரு முடிவுக்கு வர இயலாது. வெவ்வேறு துறை சார்ந்த ஆய்வுகளைக் கலந்து யோசித்தால் சில புள்ளிகளைச் சென்றடையலாம்.

சரி மனிதனுக்கும் அவனது சூழல் மாற்றத்திற்கும் உயிரியல் ரீதியாக தொடர்பு இருக்கிறதா?

அ). முதலில் சமீப காலங்களில் (ஏறத்தாழ 10,000 ஆண்டுகளில்) மனிதனின் சமூக மாற்றங்களால் உடலமைப்பில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறதா என்பதற்கு அகழ்வாராய்ச்சியில் செய்யப்பட்ட ஒரு ஆய்வு முடிவை பார்க்கலாம்.

பொதுவாக குழந்தைப் பெற்றெடுக்கும் காலங்களில் பெண்களுக்கு, உமிழ் நீர் சுரப்பது, சர்க்கரையின் அளவில் மாறுபாடு எனப் பல மாற்றங்கள் ஏற்படுவதால், அவை பெண்களுக்கு அதிகமான சொத்தைப் பற்களை உண்டாக்குகின்றன, என்பது நிரூபிக்கப்பட்ட ஆய்வு முடிவுகள். இதனடிப்படையில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பெண் எலும்புக் கூடுகளின் உடற்கூறுகளை ஆய்ந்திருக்கிறார்கள்.

கீழ்த் தாடையைப் பரிசோதிக்கும் போது, சற்றேரக்குறைய 10000 ஆண்டுகளுக்கு முன்னர் வயதினையுடைய எலும்புக்கூடுகளில் பெண்களுக்கு சொத்தைப் பற்கள் உண்டாவது மிகவும் அரிதாகவும், அதே சமயம் 10000 ஆண்டுகளுக்குப் பின்னர் வயதுடைய எலும்புக்கூடுகளில் சொத்தைப் பற்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருப்பது அவதானிக்கப்பட்டிருக்கிறது.
அது மட்டுமல்லாமல், அதிக அளவில் இனப்பெருக்கம் செய்வதற்கான ஈடுபாடும் ஏற்பட்டிருக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுதான் மனிதயினம் ஒரேயிடத்தில் தங்கி உணவு உற்பத்தியைத் துவங்கிய காலகட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, வேட்டையாடுதல், உணவுக்காக இடம்பெயர்தல் போன்றவற்றால் இனப்பெருக்கம் செய்யும் வாய்ப்பு குறைவாக இருக்கும் என்பதற்கும் மேலாக, அப்போது பெண்களுக்கும் இனப்பெருக்கத்தின் மேல் அதீத ஈடுபாடு இல்லாமல் இருந்திருக்கிறது என்பது தெரியவருகிறது. தனது வாரிசு மற்றும் தனக்கான உணவுத் தேவைஅதாவது, விவசாயம் மூலம் உணவு உற்பத்தி முறையைக் கண்டடைந்தவுடன் பெண்களினது உயிரியல் உடலில் இனப்பெருக்கத்திற்கான தூண்டுதல்தன்மை அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனாலேயே, ஏறத்தாழ 800-10000 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணினது எலும்புக்கூடுகளில் அதிகமான சொத்தைப் பற்கள் உள்ளன என்று முன்மொழியப்பட்டது.

(குறிப்பு: குறிப்பிடத் தகுந்த எண்ணிக்கையிலான எலும்புக் கூடுகளும், அக்காலத்தைய மனிதனது உணவு முறை மாற்றங்கள், மற்றும் அதனால் உண்டாகும் பற்சிதைவுகளும் கணக்கில் கொள்ளப்பட்டிருக்கிறது ஆய்வில்.)

ஆ). மனிதனது மரபணுக்களில் பிற விலங்குகளின் (ஆடு, மாடு) பாலை செரித்துக்கொள்ளும் தன்மை உட்புகுந்ததே ஒரு பரிணாம மாற்றம்தான் என்று குறிப்பிடுகின்றனர். அதிகமாக விலங்குகளை மேய்த்தலையும் நாடோடி வாழ்க்கை முறையும் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தினரிடையே தான் இம்மாற்றம் மிகுதியாக இருந்திருக்கிறது. வேட்டையாடுதல் முறையில் உணவு சேகரித்தல் மற்றும், காடுகளில் வசிக்கும் குழுவினரிடம் இவ்வகை செரிப்புத்தன்மை இயல்பானதாக இருக்கவில்லை என்றும் குறிப்பிடுகின்றனர்.

இ). இன்றைக்கும் சில பிரதேசங்களில் வாழும் மக்களிடையே அவர்கள் வாழும் இடத்திற்கேற்ற நோய் எதிர்ப்புச் சக்திகள் உற்பத்தியாகியிருப்பதுவும், பல புதிய நோய்களுக்கு மனிதனது உடல் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கிக்கொண்டிருப்பதுவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அப்படியானால், மனிதனது உடலில் சூழலுக்குத் தகுந்த மாற்றம் நடை பெற்று வந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.


சரி என்னதான் முடிவு இப்போது

தற்காலிக முடிவு: மனிதன் பரிணமித்துக் கொண்டுதான் இருக்கிறான். ஆனால், பெரும்பாலும் பலரும் எதிர்பார்ப்பது போன்ற வேறு ஒரு வகை உயிரனமாகவோ அல்லது முழுவதும் புதிய வடிவம் கொண்ட ஒரு புதிய உயிரியாகவோ பரிணமிக்க வில்லை அல்லது அதற்கான சாத்தியங்களும் குறைவு. (உதாரணமாக மனிதனுக்கு இனி வாலோ, கொம்போ முளைக்காது.. :) கொம்பிருப்பதாகக் கருதிக்கொள்வது இங்கு கணக்கில் வராது ).

கட்டுரையின் மையக்கரு:

ஒரு கலவையான புரிதலில், மனிதயினம் பரிணமிப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. ஆனால், அந்தப் பரிணாமம் மற்ற விலங்குகளுக்கு நிகழ்வது போலல்லாமல் மனிதன் வகுத்துக் கொண்ட சமூக அமைப்பையினையொட்டி நிகழ்வதுவாக இருக்கிறது. அதனால், மனிதன் இனி தனித்து வேறு வடிவம் கொண்ட ஒரு புதிய உயிரினமாக மாறுவதற்கான சாத்தியங்கள் இல்லை. ஆனால், மொழி, இனம், தேசம், சாதி, மதம், உணவு உற்பத்தி போன்ற சமூகக் கட்டமைப்பினடிப்படையில் உருவாகும் மரபணு பரிமாற்றக் கட்டுப்பாடுகளை மாற்றிக் கொள்ளாதவரை தனது சமூகக் கட்டமைப்பு சார்ந்த மாற்றங்களுக்குத் தொடர்ந்து உள்ளாகிக் கொண்டிருக்கும் மனிதனது உடல்.

*********************************************************************************************

தரவுகள்:

ஆங்காங்கே வாசித்த கட்டுரைகளின் முடிவுகளின் தொகுப்பு இக்கட்டுரை. மேலே குறிப்பிட்டுள்ள ஆய்வுகளுக்கான தரவுகளில் சில pdf வடிவத்தில் இருக்கின்றன அதனை முழுமையாக வாசிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம் (kaiyedu@gmail.com).

ஏற்கனவே குறிப்பிட்டது போல இக்கட்டுரையில் இருப்பவை எனது வாசிப்பு மற்றும் புரிதலுக்கு உட்பட்டவையே, மாற்று முடிவுகளைக் கொண்ட நிரூபனங்கள் இருப்பின் அறியத்தாருங்கள் இணைந்து பேசலாம்.

Friday, January 9, 2009

டார்வின்-200, பரிணாமக்கொள்கை-150


Image: http://fisher.berkeley.edu/cteg/images/photos/darwin.jpg


2009 - சார்லஸ் டார்வினின் 200வது பிறந்தநாள் காணும் ஆண்டாகவும், பரிணாமக் கொள்கையினை வெளியிட்டு 150ஆவது நிறைவு ஆண்டாகவும் திகழ்கிறது. 19 -ஆம் நூற்றாண்டின் சிறந்த இயற்கை விஞ்ஞானியாகவும், பரிணாமக் கொள்கையின் தந்தையாகவும் போற்றப் படுபவர் சார்லஸ் டார்வின். தமது வாழ்நாளில் பரிணாமக் கொள்கை குறித்து ஏறத்தாழ 16 புத்தகங்களும், 5000க்கும் மேற்பட்ட கட்டுரைகளும் எழுதியவர் டார்வின்.


பிறப்பு : 12 பிப்ரவரி 1809, இறப்பு: 19 ஏப்ரல் 1882,


பரிணாம விளக்கங்கள் உள்ளடக்கிய "Origin of species" வெளியீடு - 22 நவம்பர்1859


டார்வீனது 200 ஆவது பிறந்த ஆண்டு மற்றும் பரிணாமக் கொள்கையின் 150 ஆவது நிறைவு ஆண்டு ஆகிய இரண்டையும் கொண்டாடும் வண்ணம் அறிவியல் கட்டுரைகளுக்கான சர்வதேச இதழ்களுள் முதன்மையானவற்றுள் ஒன்றான "அறிவியல்(science)" வாரயிதழ் ஒரு மாத காலத்திற்கு, பரிணாமம் குறித்த சிறப்புக் கட்டுரைகள் மற்றும் உரையாடல்களையும் தொகுக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது, இத்தொகுப்பு அனைவருக்கும் இலவசமாகயிருக்காது, ஆனால், "Origins" என்ற தலைப்பில் ஒருசிறப்பு வலைப்பதிவு ஒன்றைத் துவங்கியிருக்கிறது. இவ்வலைப்பதிவிலும் பரிணாமம் மற்றும் டார்வின் பற்றிய செய்திகள், ஆய்வுகள், விமர்சனங்கள் என பலவும் இடம்பெறும் என அறிவித்திருக்கிறது. ஆனால், வலைப்பதிவின் கட்டுரைகளை முழுவதும் இலவசமாக வாசிப்பதற்கு, பெயர்ப் பதியவைத்தலும் அதற்காக வழங்கப்பட்ட கடவுச்சொல்லும் தேவைப்படும்.

இவ்வலைப்பதிவின் முதல் கட்டுரை உயிர்த்தோற்றம் பற்றிய டார்வினின் பார்வை மற்றும் நவீன கண்டுபிடுப்புகள் மற்றும் கருத்துக்கள் என விரிகிறது. உயிரினங்களின் தோற்றம் குறித்து விவரித்த டார்வினின், உயிர்த்தோற்றம் பற்றிய கருத்து குறித்தும் பேசப்பட்டிருக்கிறது.

டார்வினின் பரிணாமக் கொள்கை பற்றி ரிச்சர்ட் டாக்கின்ஸ் "ஒருவேளை வேற்று கிரகம் ஒன்றில் பூமியை ஒத்த உயிரினங்களின் தோற்றம் இருந்து, மனிதனையொத்த ஒருவுயிரினமும் இருந்து அவ்வுயிரினத்தை நான் பூமியில் சந்திக்க நேர்ந்தால், அவர்களை நோக்கிய எனது முதல் கேள்வி இதுவாகத்தான் இருக்கும்; பரிணாமக் கொள்கையை கண்டுபிடித்துவிட்டீர்களா....!!!???" என்று குறிப்பிடுகிறார்.

ரிச்சர்ட் டாக்கின்ஸ் - பரிணாமம் பற்றிய ஒரு மரபணுப்பார்வை என்ற கருத்தினை முன்னிருத்தி "The selfish gene" மற்றும் "The God Delusion" ஆகிய புகழ்பெற்ற புத்தகங்களை எழுதியவர்.

டார்வின் பற்றிய தனிப்பட்ட செய்திகள், பிறப்பு, இறப்பு, குடும்பம் போன்ற தகவல்களை இங்கே காணலாம்.


இனி டார்வின் மற்றும் பரிணாமக் கொள்கை பற்றிய எனது பார்வை

எனக்கு மிகவும் பிடித்த அல்லது ஆர்வமுடன் வாசிக்கும் ஒரு விஞ்ஞானத்துறை பரிணாமம். என்னை மிகவும் கவர்ந்த விஞ்ஞானிகளுள் முக்கியமானவரும் முதன்மையானவரும் சார்லஸ் டார்வின்.

நியூட்டன், கலிலியோ, ஐன்ஸ்டீன், நீல் போர், மாக்ஸ் பிளான்க், ஹாக்கிங்ஸ், ஃபியன்மேன் எனப்பல உலப்புகழ் பெற்ற விஞ்ஞானிகள் சிறந்த கண்டுபிடிப்புகளையும், அறிவியல் சித்தாந்தங்களையும் முன்மொழிந்த சிந்தனையாளர்கள் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லையெனினும், அவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டுப் பயன்படுத்துமொரு நியூட்டனின் புகழ்பெற்ற வாசகம் "On the shoulders of the giants". பலரது சிந்தனைகளைப் புரிந்து கொண்டு பின்னர், புரிதலின் விளிம்புகளை மாற்றியும் திருத்தியும் அமைத்தனர் என்பதற்கான ஒரு தன்னிலை விளக்க வாசகமாக இதனை நோக்கலாம்.

ஆனால், இயற்கை பற்றிய ஒரு ஆழமான மற்றும் அகன்ற பார்வையையும், சில தாவர மற்றும் உயிரியல் ஆய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய சிந்தனையைத் தோற்றுவித்து அச்சிந்தனை முறையையே டார்வினிஸம் என்று அழைக்குமளவிற்கு ஒரு புதியசெய்தியை உலகுக்கு அறிவித்தவர் டார்வின்.

மேலும், பூமியில் தோன்றி ஊன்றிய பல்வேறு கலாச்சாரங்கள், மற்றும் அக்கலாச்சாரக் குழுக்களின் நம்பிக்கைகள் எனப் பலவகைப்பட்ட மனித சமூகக் குழுக்களுள் இருந்த ஒற்றுமைகளுள் ஒன்று படைப்புத்தத்துவம். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ படைப்புத்தத்துவம் மனிதச் சமூகத்தின் அடிப்படை நம்பிக்கைகளுள் ஒன்றாகயிருந்தது. அப்படியானதொரு சூழலில், மொத்த உலகத்தின் பார்வையிலிருந்து தனித்து ஒரு சிந்தனை மற்றும் அதன்பயன் எழுந்த மாற்றுப்பார்வையை முன்வைப்பது என்பது எளிதல்ல.

டார்வினின் 200வது பிறந்த ஆண்டாக கொண்டாடும் வேளையில் இவ்வாண்டின் முதல் இடுகை டார்வின் குறித்து எழுதநேர்ந்ததில் மகிழ்ச்சி.

Thursday, November 13, 2008

மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை - பரிணாம விளக்கமும், விளக்கப் பரிணாமமும்


மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை - பரிணாமக் கொள்கை குறித்த தவறான புரிதலுக்கான விளக்கமும், பின்னூட்டத்தின் விளக்கப் பரிணாமமும்

1. பரிணாமம் என்றால் என்ன?

பரிணாமம் என்பது இயற்கை மாற்றத்தினால் ஒரு உயிர் எப்படிப் பலவகை உயிரிகளாக மாறுகிறது/மாறியது என்பதை விளக்கும் ஒரு உயிரியல் கொள்கை. பரிணாமம் உயிரின் தோற்றத்தை விளக்கும் ஒரு கொள்கையல்ல, மாறாக உலகிலுள்ள அனைத்து "உயித்தொகுப்புகளும்" (species) காலச்சக்கரத்தில் பின்னோக்கி நகர்ந்தால் ஒரே மூதாதையரைக் கொண்டிருப்பவை எனபதை விளக்கும் ஒரு கொள்கை. சுருக்கமாகச் சொன்னால் "எல்லோரும் ஒரு மரத்துப் பறவைகளே" என்பதுதான் பரிணாமக் கொள்கையின் அடிப்படைச் சாரம்.

2. பரிணாமத்தை எப்படிப் புரிந்து கொள்வது?

இவ்வுலகில் தோன்றிய முதல் உயிர் தனது சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு தனது இருத்தலுக்காக உள்ளான மாற்றமே பரிணாமம். மிக முக்கியமானதொன்றைக் குறிப்பிட விரும்புகிறேன், இம்மாற்றத்தை அவ்வுயிர் தேர்ந்தெடுக்கவில்லை மாறாக இயற்கை நிகழ்வாக சுயமாக நிகழ்கிறது. இம்முதல் உயிரிலிருந்து பிரிந்து விரிந்த ஒரு மரமாக இன்றைய அனைத்து உயிர்களையும் நோக்கலாம். இச்சூழல் மாற்றத்தினடிப்படையில் தகவமைத்துக் கொள்ளும் பண்பையே சார்லஸ் டார்வின் "natural selection" என்று தனது பரிணாமக் கொள்கையில் குறிப்பிடுகிறார்.

3. அது என்ன பரிணாம மரம்?


படம் 1. http://www.peabody.yale.edu/exhibits/treeoflife/convergent.html

பரிணாமத்தை ஒரு மரமாக பாவித்து விளக்குகின்ற முறையை "phylogeny" என்றழைக்கின்றனர். இதற்கான விளக்கப்படத்தை (படம் 1.)காணலாம். ஒரு உயிர் முதலில் தோன்றி அதன் பின்னர் வெவ்வேறு காலத்தில் சூழல் மாற்றங்களுக்கேற்றவாறு வெவ்வேறு வகையான உயிர்த்தொகுப்புகளாக மாறியதைப் பற்றிய ஒரு விளக்கத்தையே இப்பரிணாம மரம் விளக்குகிறது. இம்மரத்தின் ஆதி புள்ளியிலிருந்து நகர்ந்தால் முதலில் கிளைக்கும் புள்ளி வெவ்வேறு வகை உயிரிகளாகப் பிரிந்த தருணத்தைக் குறிக்கிறது. ஒரு கிளையின் நுணியில் இருந்து பின்னோக்கி நகர்ந்தால் சந்திக்கும் முதல் கிளைத்தல்-புள்ளி மிகச் சமீபத்தில் அவ்வுயிரினம் மாற்றம் அடைந்த தருணத்தைக் குறிக்கிறது. சூழலுக்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் போது மாற்றங்கள் சீரானவையாகவும் இருக்கலாம் சீரற்ற தாவல்களாகவும் இருக்கலாம்.

அதில் மனிதனும் குரங்கும் ஏதோவொரு சூழல் மாற்றத்தினால் ஒரு புள்ளியில் துவங்கிய இரண்டு உயிரிகள். ஒரே துவக்கப்புள்ளியைக் கொண்ட இரண்டு சிறு கிளைகள் மிகவும் நெருங்கிய உடல்கூறுகள், மற்றும் வாழ்வுமுறைகளைக் கொண்டதாகவும்,(நமது குடும்பத்தில் இருக்கும் நெருங்கிய உறவினரைப் போல) ஒரு பெருங்கிளையினைத் துவக்கப் புள்ளியாகக் கொண்டப் பலவகை உயிரிகளுக்கு அடிப்படையான பொது உயிரமைப்பும் கொண்டிருக்கும் (நமது தூரத்து உறவினர் போல). ஆனால், சிறுகிளைகள் வெகுதூரத்தில் இணைந்தாலும் அவற்றுக்கிடையே அடிப்படையானதொரு பெரும் ஒப்புமை இருக்கலாம். இதனாலேயே மருந்துகளுக்கான சோதனைகள் முதலில் எலிகளில் பெரும்பாலும் செய்யப்படுகின்றன. அதாவது மனிதன் உள்ளிட்ட பல்வேறு உயிர்த்தொகுப்புகள் துவங்கும் ஒரு பெரும்கிளையின் துவக்கப்புள்ளியில் இருப்பவை எலிகள்.
அப்பெருங்கிளையில் இருக்கும் அனைத்து உயிரிகளுக்கும் அடிப்படையானதொரு ஒப்புமை இருக்கும்.


4. குரங்கிலிருந்து மனிதன் தோன்றினானா?

கண்டிப்பாக இல்லை. மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை. இப்படியான கருதுகோல், பரிணாமத்தைப் பற்றிய தவறானபுரிதல்களில் முதன்மையானது. ஒருவேளை, இப்படியான கருதுகோலை உருவாக்கிப் பரப்பியதில் சமூகத்தில் விரவியிருந்த நம்பிக்கைகள் மற்றும் ஊடகங்களின் பங்கு முதன்மையானதாக இருக்கலாம். அல்லது ஏற்கனவே தனக்கென்று சிறப்பான குணாதீசியங்கள் உண்டு என்றும், தான் மற்ற விளங்குகளிடமிருந்து தனித்த ஒரு சிறப்பான உயிரி என்ற எண்ணத்தில் இருக்கும் போது "நீயும் குரங்கும் நெருங்கிய உறவினர்கள்" என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத அகம்பாவமாகயிருக்கலாம்.


5. அப்படியானால் குரங்கிற்கும் மனிதனுக்கும் உள்ள ஒப்புமையை எப்படிப் புரிந்து கொள்வது?




படம் 2. http://evolution.berkeley.edu/evolibrary/article/0_0_0/evo_05

மனிதனும் குரங்கும் பரிணாம மரத்தில் பின்னோக்கிச் சென்றால் சமீபத்திய புள்ளியில் துவங்கிய இரு உயிரிகள் (நெருங்கிய உறவினர்கள்). தமக்குள்ளே உடல் கூறுகள் மற்றும் பண்புகள் எனப் பலவற்றில் பெரும் ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்ளும் இரு உயிரிகள்.


6. இப்போ கடைசியா என்னதான் சொல்ல வர்றாங்க இந்த பரிணாம உயிரியலாளர்கள் (evolutionary biologists)?

படம் 3. ( http://evolution.berkeley.edu/evosite/misconceps/IBladder.shtml)

பரிணாமம் என்பது ஒரு மரத்தைப் போன்றது, ஏணியைப் போன்றதல்ல. ஒற்றைச் செல் உயிரிகள் துவங்கி இன்றைய மனிதன் வரை சுழல் மாற்றத்திற்கிணங்க தன்னை மாற்றியமைத்துக் கொண்ட ஒற்றை உயிர் மூலக்கூறின் வெவ்வேறு வடிவங்களே இப்படியாகப் பரிணமித்திருக்கும் அனைத்து உயிரினங்களும். அதனால், அனைத்து உயிரிகளும் ஒன்றோடொன்று சக காலத்தில் உயிரோடிருக்க முடியும் (மிகவும் அபரிவிதமான திடீர் சூழல் மாற்றங்கள் நிகழாதவரை). எல்லோரும் ஒரு மரத்துப் பறவைகளே என்பதுதான் பரிணாமக் கொள்கையின் அடிப்படைச் சாரம்.


7. சரி அப்போ அந்த முதல் உயிர் எங்கிருந்து வந்தது?

முதலில் இக்கேள்விக்குப் பரிணாமக் கொள்கை பதிலளிக்கத் தேவையில்லை. ஏனெனில், ஏற்கனவே குறிப்பிட்டது போல் அது "உயிரின்" மூலத்தை விளக்கும் ஒரு கொள்கையல்ல, மாறாக "உயிர்த்தொகுப்புகளின்" மூலத்தை விளக்கும் ஒன்று. (It does not explain "origin of life", it (tries to) explains "origin of species").

இப்போ ஒற்றை உயிர் பற்றிய கேள்விக்கு வருவோம் அது பூமியின் கருப்பொருட்கள் மற்றும் சூழல் மாற்றங்களை முன்னிறுத்தி அனுமானிக்கப்பட்டது. அனுமானம் என்றாலும் ஆய்வங்களில் அப்படியான சூழலைச் செயற்கையாக உருவாக்கி உயிர் மூலக்கூறுகளின் அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கியதன் மூலம் இவ்வனுமானம் தற்போது ஏற்புடையதாகயிருக்கிறது. முன்னரே, இங்கே( இறப்பு - உரையாடல் - II - உயிர்த் தோற்றம், செல்-அற...) சிறிது விளக்கியிருக்கிறேன்.


8. பரிணாமம் முழுமையடைந்துவிட்டதா? மேலும் பரிணாமம் நிகழுமா?

பரிணாமம் ஒரு தொடர் நிகழ்வு, அது நிகழ்ந்து கொண்டேயிருக்கும். உதாரணமாகச் சரியாகப் பள்ளி உணவு இடைவேளகளில் குழந்தைகள் மரத்தடிகளில் உணவு உட்கொள்வதால் சிதறுபவற்றை உண்பதற்காக அங்கே வந்தமரும் பறவைகள். (இது பரிணாம மாற்றமல்ல, தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலுக்கேற்றவாறு உணவு வேட்டையை மாற்றிக் கொள்ளும் அப்பறவைகளின் செயல்பாடுகளுக்கான ஒரு மிக எளிமைப்படுத்தப்பட்ட ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இது போல பல எடுத்துக் காட்டுகளை நாம் எல்லோராலும் நினைவுக்கு கொண்டுவர முடியும்.) சரி இப்போது எதற்கு இவ்வெடுத்துக்காட்டு. பரிணாம மரத்தில் மனிதன் தவிர அனைத்து உயிரினங்களும் இன்றும் தங்கள் வாழ்வியல் ஆதாரத்திற்குத் தனது சூழல் மற்றும் இயற்கையுடன் நேரடியிணைப்பில் இருக்கின்றன. அதனால், பரிணாமம் முற்றுப்பெறாத தொடர் நிகழ்வு (மிகவும் அபரிவிதமான திடீர் சூழல் மாற்றங்கள் நிகழாதவரை).


9. மற்ற உயிரினங்கள் இயற்கைச் சூழலோடு இணைந்து வாழும் போது, இன்றும் பல உயிரினங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன என்று கூப்பாடு போடுவதேன்?

பரிணாமம் ஒரு தொடர் நிகழ்வாகயிருந்தாலும், பரிணாம மாற்றங்கள் நிகழும் கால அளவு பல்வேறு உயிரிகளின் ஆயுட்காலத்தோடு ஒப்பிடுகையில் பன்மடங்கு அதிகம். மனிதன் எனும் உயிரி தனது வாழ்வியல் சூழலை மாற்றிக் கொண்டதன் மூலம் இவ்வுலகில் ஏற்படுத்திய சூழல் மாற்றங்கள் மிகவும் ஆபத்தானது, மற்றும் அதிவிரைவானது.மிகக்குறுகிய காலத்திலேயே உலகின் இயற்கைச் சூழலை பெரிதும் நாசமாக்கிவிட்டது மனிதன் எனும் உயிரி (ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்குள்). பரிணாம மாற்றங்கள் நிகழும் கால அளவோடு ஒப்பிட்டால் ஏறத்தாழ 4 அடுக்குகள்(மடங்கு அல்ல) சிறிய கால அளவு. இவ்விரைவான சூழல் மாற்றத்தினைத் தாக்குப் பிடிக்கமுடியாத பல்வேறு உயிரிகள் சத்தமில்லாமல் அழிந்து கொண்டிருக்கின்றன. "சில" உயிரினங்களைப் பொருத்தவரை 1000 ஆண்டுகளில் மாற்றம் என்பது அதிவிரைவான சூழல் மாற்றமே.


10. அப்படியானால் மனித உயிரி பரிணமிக்குமா?

இன்றைய சூழலைக் கருத்தில் கொண்டால் மனிதன் இனி பரிணமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென்று கருதுகின்றனர். இது தொடர்பாகச் சிலர் கருத்துக்களை கூறும் போது "மனிதன்" எனும் உயிரியிலிருந்து மற்றொரு பரிணாமம் நடை பெற்றால் மனிதன் அவ்வுயிரியின் முதல் உயிரை விட்டுவைக்க மாட்டான்" என்பது. இக்கூற்றைப் பகடிக்காக மட்டுமே பயன்படுத்துவோருண்டு. இதனை ஒரு கருதுகோலாக நோக்கினால் உடனடியாக இது சரியானதல்ல என்பது விளங்கிவிடும். பரிணாமம் என்பது ஒரு தொடர் நிகழ்வு, மேலும் அது நிகழும் கால அளவு மனிதனின் ஆயுட்காலத்தோடு ஒப்பிட்டால் மிக அதிகம். அதனால், மனிதன் எனும் உயிரி பரிணமித்துக் கொண்டிருக்கிறதா என்பதை உணர்ந்துகொள்வதே கடினம். இது மேலேயுள்ள கருதுகோளுக்கான எதிர் கருத்து மட்டுமே.

ஆனால், மனிதன் எனும் உயிரியின் சிறு கிளை மேலும் கிளைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதற்கு வேறு பல அறிவியல் சான்றுகளை முன்வைக்கின்றனர். அப்படியென்ன சான்று? மனிதன் இயற்கையிலிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டதாகக் கருதுகின்றனர். பெண்களுக்கு அதிகமாக உருவாகும் சொத்தைப் பல்லை இதற்கான சான்றுகளுள் ஒன்றாக நோக்கலாம். அதைப்பற்றிய விரிவான இடுகைக்கு முன் இப்படியொரு இடுகையின் அவசியம் இருப்பதை உணர முடிந்தது. அதனால் இப்பதிவு.

குறிப்பு:
பரிணாம உயிரியலை நான் ஆய்ந்து அறிந்தவனல்ல, வெறும் வாசிப்பும் மொழிபெயர்ப்பும் மட்டுமே. எனது புரிதலில் தவறிருந்தால் சு(கு)ட்டலாம்.
சுட்டிகளில் நேரடியாகவும் வாசித்துச் சரிபார்த்துப் புரிந்துகொள்ளலாம்.

பின்வரும், பகுதி அறிவியல் (என்ற) மதம் ! என்ற பதிவில் நிகழ்ந்த பின்னூட்ட உரையாடலினால் எழுதப்பட்டது.

புராண அவதாரங்கள் பரிணாமத்தைத்தான் குறிக்கின்றனவா?
கண்டிப்பாக சார்லஸ் டார்வினின் தொகுப்பிற்கிணையாக எந்த புராண, இதிகாச, புனித நூல்களிலும் விளக்கங்களோ ஆதாரங்களோ இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

அதே சமயம், பரிணாமக் கொள்கையின் ஆழ்ந்த புரிதல்களுக்கிணையாக இல்லாவிடினும், உயிர்களுக்கிடையேயான ஒருவகை ஒப்புமையை மனிதன் எனும் உயிரி உணர்ந்ததன் விளைவாக அப்படியான கதைகளையும் வகைப்படுத்தல்களையும் தங்கள் இலக்கியங்களில் புகுத்தியிருக்கலாம். புராணத்தை எழுதியவனும் சிந்தனைத்திறனுடைய ஒரு மனிதனாகத்தானே இருக்க வேண்டும். மேலும், மனிதனின் சூழல் குறித்த பார்வைதானே இலக்கியங்களில் பதியவைக்கப் படுகின்றன. அவை நம்பிக்கைகளாக மாறுகின்றனவா அல்லது இதிகாசமாக மாறுகின்றனவா அல்லது புனித நூலாக மாறுகின்றனவா என்பது மனிதச்சமூகத்தின் சூழல் சார்ந்தது.

ஆனால், பரிணாமக்கொள்கையைத் தான் புராண இதிகாசங்கள் விளக்குகின்றன என்ற கூற்று மிகைப்படுத்தலேயன்றி வேறல்ல.


ஆனால், அனைத்து மதங்களையும் சார்ந்த இவ்விதிகாச புராணங்கள் புழங்கும் சமூகச் சூழல்களைப் பார்க்கும் போது ஒன்றைச் சொல்லத் தோன்றுகிறது.

"It is more difficult to unlearn, than learning" என்று ஒரு சொல்வழக்குண்டு. தற்போதைய சமூகச் சூழலில் இருக்கும் குழப்பங்களுள் முதன்மையானவற்றுள் ஒன்றாக இதைக் காண முடிகிறது "எதை, unlearn செய்வது..??..!!".

எந்தெந்தச் சூழலில் மனித சமூகம் எதை "learn" செய்கிறது எதை "unlearn" செய்கிறது என்பது சமூகவியல், உளவியல், ஊடகவியல் என பண்முகத் தன்மைகொண்டு பயணிக்குமொரு நீண்ட உரையாடலுக்கான கருப்பொருளாகயிருக்கலாம்.

இறுதியாக, உண்மை புராணத்தில் இருந்தால் என்ன, அறிவியலில் இருந்தாலென்ன, இயற்கை மற்றும் இயற்கை நிகழ்வுகள் முன் நாம் சிறுத்துப் போவதுதாம் உண்மை.

தகவல் மூலங்கள்:

http://www.peabody.yale.edu/exhibits/treeoflife/learn.html
http://evolution.berkeley.edu/evolibrary/article/0_0_0/evo_toc_01

பரிணாமத்தை விளக்கும் ஒரு குறும்படம்
http://www.peabody.yale.edu/exhibits/treeoflife/film_discovering.html

"Phylogeny" குறித்த விரிவான விளக்கங்களுக்கு
http://evolution.berkeley.edu/evolibrary/article/phylogenetics_02

படங்களுக்கருகேயுள்ள சுட்டிகளிலும் சில விளக்கங்கள் உள்ளன.


பின்னூட்டத்தில் ஒரு அனானி குறிப்பிட்டதற்கிணங்க species என்பதற்கான பயன்பாடு உயிரித்தொகுப்பு என பின்னர் திருத்தி வெளியிடப்பட்டுள்ளது.


Wednesday, February 6, 2008

இறப்பு - உரையாடல் - II - உயிர்த் தோற்றம், செல்-அறிமுகம்

இறப்பு குறித்தான இத்தொடர் உரையாடலின் முதல் பகுதியில் குறிப்பிட்டது போல அனைத்து உயிரினங்களின் அடிப்படைக் கட்டுமானமாக இருப்பது செல்கள்தான். மனிதனின் இறப்பு என்பது அவரது உடலிலுள்ள செல்களின் இறப்பின் விளைவே என்பது கண்டறியப்பட்ட உண்மை. ஆதலால், இறப்பை குறித்து எழுந்த தொடர் கேள்விகளை செல்களை ஆராய்ந்ததன் விளைவாக அறியப்பட்ட முடிவுகளினடிப்படையிலேயே தொடருவோம். இப்பகுதியில் உயிரின் தோற்றம் மற்றும் செல் குறித்த ஒரு சிறு அறிமுகமும் அதன் பின்னர் அதன் இறப்பில் ஏற்படும் நிகழ்வு குறித்தும் உரையாடுவோம். இப்பகுதியில் பேசப்பட்டிருக்கும் பலவும் உங்களுக்கு முன்னரே தெரிந்திருக்கலாம், ஆனாலும் ஒரு முழுமைக்காக அல்லது ஒரு revisit ஆக இருக்கட்டும் என்பதால் மீண்டும் பேசியிருக்கிறேன்.

உயிர்த் தோற்றம்:

பலருக்கு இருக்கும் ஒரு ஆவலான கேள்வி பூமியின் முதல் உயிர்த்தோற்றம் பற்றியது. பூமியில் உயிர்த்தோற்றம் என்பது நம்மைப்போன்ற பலசெல் உயிரிகளுடன் துவங்கவில்லை என்பது உறுதியாக அறியப்பட்ட ஒன்று. இப்பூமியின் வயது ஏறத்தாழ 5 பில்லியன் (5x10^9 - சுமார் 500 கோடி) ஆண்டுகள்.

துவக்கத்தில் பூமியின் வளிமண்டலம் தற்போதிருப்பது போல இருந்திருக்க வாய்ப்பேயில்லை, ஏனெனில் புதிதாக இறுக்கமடைந்த பூமியின் கருப்பொருட்களிலுருந்து வெளிவந்த வாயுக்கள், தற்போது நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து மிகவும் மாறுபட்டது. புவியின் பரப்பிலிருந்த அதீத அழுத்தம், அபரிமிதமான வெப்ப, மின் மற்றும் கதிரியக்க ஆற்றல்களினால், கடலிலிருந்த கார்பன் மற்றும் நைட்ரஜன் அடிப்படையிலான மூலக்கூறுகள் உயிரின் அடிப்படைக்கட்டுமானமான புரோட்டின்களையும் நீயூக்ளிக் அமிலங்களையும் தோற்றுவித்தன. இவ்வேதிவினையானது, அப்போதைய சூழலை உருவாக்கி, ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்டு நிரூபிக்கப்பட்டவை.

மேற்கூறிய உயிரின் அடிப்படை மூலக்கூறுகளிலிருந்து முதல் உயிர்த்தோற்றம் அதாவது முதல் செல், சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அப்படித்தோன்றிய முதல் உயிரின் வழிமுறை இப்படித்தான் என்று அறுதியிட்டுக் கூறமுடியாவிட்டாலும் ஒருவாறு அனுமானிக்கப்பட்டிருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.
அது என்னங்க உயிர்? உயிருள்ளவைன்னா என்ன?


முதல் செல்லுக்கு முன்னர் இருந்த மூலக்கூறுக்கும் இந்த உயிருள்ள என்று சொல்லப்படுகின்ற செல்லுக்கும் என்ன வித்தியாசம். இந்த வேதிவினையில்(chemical reaction) விளைந்த இந்த விளைபொருளுக்கு (product) மட்டும் என்ன ஒரு தனியான உயிர் என்ற மரியாதை.

உயிருள்ளவை என்பதை ஒரு சில பண்புகள் அடிப்படையிலேயே வரையறுக்கிறோம். உணவு உட்கொள்ளுதல், சூழலுக்குத் தகுந்தார்போல் இடம்பெயர்தல், இனப்பெருக்கம் செய்தல் அல்லது தம்மைப்போன்ற ஒன்றை உருவாக்குதல் (பிரதியெடுத்தல்-self replicating). இவையனைத்தும் ஒரு செல்லுக்கு உண்டு. ஆனால், முதல் செல்லுக்கு முன்னர் இருந்த மூலக்கூறுகளுக்கு இப்பண்புகளில்லை. இப்படிப்பட்ட உயிரிகள், பாக்டீரியா, அமீபா போன்ற பல ஒரு செல் உயிரிகளாக இன்றும் இருக்கின்றன. ஆனால் மேற்கூறிய, வேதிவினையடிப்படையில் புதிய உயிர்தோன்றும் சாத்தியக்கூறுகள் தற்போது பூமியிலில்லை, இனப்பெருக்கம் அல்லது பிரதியெடுத்தல் அடிப்படையிலேயே புதிய உயிரிகள் தற்போது தோன்றுகின்றன. (**குறிப்பு)

சரி ஒரு வேதிக்குழம்பிலிருந்து முதல் உயிர் தோன்றியாயிற்று, இப்போது அது வாழ வேண்டுமே. அவ்வுயிர் வாழும் சூழலானது மிகவும் ஆபத்தானது, சில நிமிடங்களுக்கு ஒரு முறை மாறக்கூடிய வெப்பநிலையும், நீரும், உணவும் மாறி மாறி வந்து செல்லக்கூடிய சூழலும், அமிலத்தன்மையும் (acidity), உப்பினளவும் (salt level) நினைத்த நேரத்தில் மாறக்கூடிய சூழலுக்கும் நடுவே வாழ்வது என்பது ஒரு மிகப்பெரிய போராட்டமே. இப்போராட்டத்தை அவ்வுயிரி தனித்துச் சந்தித்தேயாக வேண்டும், குறுக்கு வழிகள் கிடையாது. இப்படிச் சூழலுக்குத் தகுந்தாற் (ஒரு வரம்புக்குள்) போல் தம்மை மாற்றிக்கொள்ளும் (physiological balancing) செயலை உயிரியலில் ஹோமியோஸ்டேடிஸ் (homeostatis) என்று குறிப்பிடுகின்றனர்.

மேலே குறிப்பிட்டதைவிட அவ்வுயிரிக்கு மிகப்பெரிய ஆபத்து அல்லது வாழ்வா சாவா என்ற போராட்டத்தின் விளிம்பிற்குத் தள்ளுவது யார் தெரியுமா? நம்ம குடும்பத் தலைவர் சூரியன் தான். அதிலும் குறிப்பாக சூரியனின் கதிர்வீச்சிலுள்ள புறஊதாக் கதிர்களும் அதர்க்குமேல் அதிர்வெண்ணும் கொண்ட கதிர்களும்தான். சூரியனின் கதிர்வீச்சிலுள்ள பலவகைக் கதிர்கள்குறித்தான மேலதிகமான தகவல்கள் இங்கே கிடைக்கும். இக்கதிர்வீச்சிலிருந்து அவைத் தப்பிக்க வேண்டுமெனில் அவை ஆழ்கடலுக்குள்ளோ அல்லது பாறைகளுக்கு அடியிலோ இருந்தால் மட்டுமே உண்டு. இந்த ஒளி குறித்தான ஆபத்தைப் பற்றி நான் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதற்கு ஒரு மிகமுக்கியமானப் பரிணாமக் காரணம் இருக்கிறது.

நமது மூதாதையரான ஒருசெல் உயிரிகள் வாழ்தலுக்கான வேட்கையில் இந்த கதிர்வீச்சுப் பிரச்சனையை எப்படிக் கையாண்டனர் என்பது பரிணாமத்தில் ஒரு முக்கியமானத் திருப்பு முனை என்று குறிப்பிடுகின்றனர் விஞ்ஞானிகள். ஒரு வகையில் இந்த ஆபத்திலிருந்து தாமாகவே தம்மைக் காப்பற்றிக் கொள்ளும் முயற்சியில் தோன்றியவர்கள்தான் நாம்.

நம்மையெல்லாம் உருவாக்குவதற்கு நம் மூதாதையர்கள் எவ்வளவு பாடுபட்டிருக்கிறார்கள்.!! வாழ்க்கை என்பது ஒரு மிகப்பெரிய போராட்டமாயிருந்தாலும் அதில் அம்முதல்வுயிரி வெற்றி பெற்றிருக்கிறது என்பதற்கான சாட்சி..?? இதைப்படிக்கும் உங்களையும், தட்டச்சு செய்த என்னையும் உள்ளடக்கி, இப்படியாகப் பரிணமித்திருக்கும் பல வகையான உயிர்கள்தான்.

அப்படி என்ன வித்தை செய்தது அவ்வுயிரிகள்? தமக்கான இருளை தாமே உருவாக்கிக்கொண்டன. அதாவது பல செல்கள் ஒன்று கூடி ஒன்றன் கீழ் ஒன்றாகத் தங்கிக் கொண்டு தம்மை ஒளியிலிருந்து காப்பற்றிக் கொண்டன. இதுதான் பல செல் உயிரிகளின் தோற்றத்திற்கான அடிப்படை. அப்படியானால் மேலேயுள்ள செல்கள் என்னவாயின? பரிணாமத்தில் நடந்த பல உயிர்ப்புகளின் பின் பல இறப்புகள் இருக்கின்றன, அல்லது அப்படி நடந்த பல இறப்புகளினால்தான் புதியவையே பிறந்தன என்று கூறலாம். ஆனால், அது ஒரு தற்காலிகமான நிகழ்வுதான், பலசெல் உயிரிகளாக மாறிய பின்னர் அவை பாதுகாப்பாக இருக்கத் துவங்கின. ஆனால் என்ன?அவை இதற்கு முன்னர் அவற்றிற்கு இருந்த உயிர்த்தலுக்கான போராடும் குணத்தை இழந்தன என்பது இந்நிகழ்வின் பின் இருக்கும் தீமை. சூழ்ல் மாற்றத்தினை எதிர்கொள்ளும் கடினத்தன்மையை இழந்தன. இவ்வுயிர் தோற்றத்தை இங்கே விட்டுவிடுவோம், தேவைப்பட்டால் மீண்டும் வந்து செல்வோம்.

கவனிக்கவும்: முதல் உயிரிகளில், ஆண், பெண், விலங்கு, தாவரம் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. மேலும் அவற்றின் இனப்பெருக்கம் குறித்து நான் எதுவும் குறிப்பிடவில்லை (அங்குதான் நமது உரையாடல் தலைப்பின் கருவே இருக்கிறது அதனால் இனப்பெருக்கம் குறித்து விரிவாக வரும் பகுதிகளில் உரையாடுவோம்).


செல் அறிமுகம்


இப்படி மிகச்சிறந்த போராளியான ஒரு செல்லின் அளவு சுமார் 10^-5 மீட்டர்(1/100,000). இதை 10 மைக்ரான் (1 மைக்ரான் = 10^-6 மீ)என்றும் கூறலாம். ஒரு மீட்டர் நீளமுள்ள ஏதாவது ஒரு பொருளை 1 லட்சம் சம பங்குகளாகப் பிரித்தால் அப்பங்குகளின் அளவு 10 மைக்ரானாக இருக்கும். நுண்ணோக்கிகளின் உதவியுடன் மட்டுமே காணயியலும்.

உங்கள் கைகளில் உலகின் தலை சிறந்த தொலைநோக்கியிருந்தால் (telescope) நீங்கள் அதில் காணக்கூடிய பிம்பத்தின் தூரம் 10^24 என்று கொள்வோம். அதே போல் உலகின் தலை சிறந்த நுண்ணோக்கியிருந்தால் (microscope) நீங்கள் அதில் காணக்கூடிய பொருளின் அளவு 10^-16 என்று கொள்வோம். இந்த எண்கள் பற்றிய மேலதிகப் புரிதலுக்கு பிம்பங்களுடனான எடுத்துக்காட்டுகள் வேண்டுமாயின், இங்கே (அவசியம்/பரிந்துரைக்கிறேன்) செல்லுங்கள்.

ஆனால் நம் கையில் நுண்ணோக்கியிருந்தாலும் சரி தொலைநோக்கியிருந்தாலும் சரி, இறுதியில் சிறுத்துப்போவது என்னமோ நாம்தான். சரி, ரொம்ப வெட்டிப்பேச்சு பேசாமல் விசயத்துக்கு வருகிறேன்.

ஒரு செல்லின் அளவு 10 மைக்ரான்தான். அதனால் சாதாரணமாக நம் கண்களுக்குப் புலப்படாது, நுண்ணோக்கிகளின் உதவியுடன் தான் அவற்றைக் காணமுடியும். அப்படியொரு கண்ணுருஒளி நுண்ணோக்கியில் (optical microscope) ஒளியுடம் சேர்ந்து தற்போதிருக்கும் ஒரு விலங்கு செல்லுக்குள் நாமும் பயணிப்போம், என்னதான் தெரிகிறது என்று பார்ப்போம். கீழிருக்கும் படம் போன்ற ஒரு அமைப்புதான் தெரியும்.





அட, நமக்கு யாருங்க வழிகாட்றது செல்லுக்குள்ள, ஒரே இருட்டா இருக்கு இதெல்லாம் என்ன எதுக்கிருக்குன்னு எப்படித் தெரிஞ்சுகறது. இதோ, நம்ம தியோடர் ஷ்வான் (Theodre Schwann) மற்றும் மத்தியாஸ் ஷெலெய்டன் (Matthias Shleiden) ரெண்டு பேரும் வாசல்லயே காத்துகிட்டுருக்காங்க. இவங்க வேற யாருமில்ல நமக்கு செல் கொள்கையை அறிமுகப்படுத்தினவங்க. இதைப்பற்றின சுவாரஸ்யமான வரலாறு இங்கே கொஞ்சம் இருக்கு, ஆர்வமிருந்தா போய் பாத்துட்டு வரலாம்.

இது என்னங்க..!!?? இந்த செல் மேல ஒரு மெல்லிய நீரோடைமாதிரியான திரவம் செல்மேல பரவிகிட்டேயிருக்கு. இத்திரவம்தான் lymph (interstitial fluid), இது இரத்த ஒட்டத்துடன் தொடர்புடையது, அதாவது இந்த lymph சீராகச் செல் மேல பரவிகிட்டுருக்கு அப்படின்னா நம்ம இருக்குற செல்லுக்கு உணவும் ஆக்ஸிஜனும் சீரா வந்துகிட்டுருக்குன்னு அர்த்தம். சரி செல்லுக்குள்ள போவோம்.

இதோ இங்க இருக்கு பாருங்க செல்லின் பெரும்பகுதிய அடைச்சுகிட்டு அதுதான் உட்கரு (nucleus), நமக்கு இருக்குற மாதிரி செல்லுக்கு மூளைன்னு ஒன்னு இருந்துச்சுன்னா அது இவ்வுட்கரு தான். இவ்வுட்கருக்குள்தான் அச்செல்லின் DNA(Deoxiribonucleic acid) (ஜீன்கள் வடிவில்) இருக்கிறது. இதில்தான் ஒரு செல்குறித்தும் அதன் செயல்பாடுகள் மற்றும் செல்லின் உள்ளிருக்கும் உறுப்புகளின் செயல்பாட்டிற்கான கட்டளைகளும் பொறிக்கப்பட்டிருக்கும். இதில் வேடிக்கை என்னவெனில் ஒரு பகுதி DNA க்களில் மட்டும்தான் உருப்படியான விசயங்கள் இருக்கும் மீதமெல்லாம் சும்மா வெட்டியா இருக்கும் அவ்ளோதான் (nonsense DNAs). அது என்ன உட்கருவின் புறப்பரப்பில் ஏதோ சிறு துளைகள் இருக்கின்றன? இத்துளைகளின் மூலம்தான் கருவின் உள்ளும் புறமும் சில மூலக்கூறுகள் (molecules) பயணிக்கும்.

இது என்ன இது கருவுக்கு வெளியே, செல்லுக்குள்ளயும் கூழ்மாதிரி திரவம் சுத்திகிட்டுருக்கு. இந்த திரவம்தான் சைட்டோப்ளாசம்(cytoplasm). இத்திரவம் முழுவதும் சில வேதிப்பொருட்கள், புரோடின்கள் மற்றும் சில அயனிகள், உப்புகள் என செல்லின் உயிர்தலுக்கு தேவையானவை இருக்கும்.

இங்கே உருளை மாதிரி மிதந்துகிட்டிருக்கு பாருங்க இவைதான் செல்லின் ஆற்றல் மூலங்கள் என்றழைக்கப்படும் மைட்டோகாண்டிரியா (mitochondria). இவற்றின் முக்கியப் பணி உணவிலிருந்து செல்லின் செயல்பாட்டிற்குத் தேவையான ஆற்றலாக அதாவது ATP யாக் (adenosine triposphate) மாற்றுவது.

இதோ இங்கே ஒரு மெல்லிய இழையால் கட்டப்பட்டிருக்கும் ரைபோசோம்கள் (ribosomes) மிக முக்கியமாக செல்லுக்குத் தேவையான புரோட்டின் உற்பத்தியாளர்கள். இவை தனியாகவும் சுழலும் அல்லது mRNA(messenger Ribonucleic acid) என்ற இழையால் கொத்தாகக் கட்டப்பட்டும் இருக்கும்.

இங்க கொஞ்சம் பாத்து ஜாக்கிரதையா வாங்க தடுக்கி இந்த லைசோசோம்களுக்குள் (lysosomes) விழுந்துராதீங்க. இதுகுள்ள செல்லின் அத்தனைக் கழிவுகளும் கொட்டப்படும், இதனுள் கொட்டப்படும் எதையும், சில வேதிப்பொருட்கள் மற்றும் என்சைம்கள் (enzymes) உதவியுடன் அது ஒரு மக்கிய சூப்பாக மாற்றிவிடும்.

அட இது என்ன பல இழைகள் சேர்த்துக் கட்டப்பட்ட கயிறு போல செல்லுக்கு குறுக்கே போயிகிட்டுருக்கு? ஓ!! இதுவரைக்கும் நாம பார்த்த பல உறுப்புகள் எல்லா செல்லுக்கும் பொதுவானவை, ஆனா நாம கொஞ்சம் சிறப்பு பணிகள் செய்கிற ஒரு செல்லுக்குள் நுழஞ்சிட்டோம். இக்கயிறு போன்ற நார்அமைப்புகள் இச்செல்லின் சிறப்பு பணிக்காக உள்ள ஒன்று அதனாலதான் மேல இருக்குற வரைபடத்துல கூட இந்தக்கற்றையான நார்கள் இல்லை. நாம அவசரத்துல ஒரு மனிதனின் இருதயச் செல்லுக்குள் நுழைஞ்சுட்டோம், அதனால இதயத்தின் சிறப்புப் பணியான சுருங்கி விரிதல் என்ற சிறப்புப்பணியை இந்தச்செல்தான் செய்யவேண்டும். அப்படிச்சுருங்கி விரியருத்துக்கான ஒரு சிறப்பு உபகரணம் தான் இப்புரோட்டின் நார்கள். இவை சுருங்கி விரிவதற்கு உதவியாகத் தேவையான ஆற்றலை அளிக்க ஆற்றல் மூலங்களான மைட்டோகாண்டிரியாக்கள் பக்கத்துலயே இருக்கு. இதேபோல், சிறப்புப் பணிகளுக்கான செல்களில் அப்பணியைச் செய்வதற்கான சிறப்புறுப்பிருக்கும்.

ஒரு வழியா செல்லின் மறு முனைக்கு வந்தாச்சு, இதோ நாம வெளியே வரும்போது இருக்குதே இந்த பஞ்சு போன்ற இலகுவான சவ்வுஇழைகள் இதுதான் ஒரு விலங்குச் செல்லின் சுவர். இதன் தனிப்பட்ட செயலே செல்லை அதன் வெளிப்புறச் சூழலிருந்து பாதுகாப்பதுதான். ஆனால் இது ஒரு கடினமான ஒரு சுவரைப்போன்றதல்ல, இதன் பரப்பிலும் பல சிறிய பம்புகள் (pumps - தமிழ்ல என்ன?) உண்டு. செல்லின் உள்ளே இருக்கக்கூடிய திரவத்தில் பொட்டசியம் அயனிகள் செறிந்து காணப்படும், ஆனால் செல்லின் வெளிப்புறத்தில் நீரும், கால்சியம் அயனியும் செறிந்து காணப்படும். இந்த கால்சியம் அயனி உள்ளே நுழைந்தாலும் சரி, நீர் உள்ளே நுழைந்தாலும் சரி, செல்லின் செயல்பாடுகளும் பாதிக்கப்படும், மேலும் உள்ளே பாயும் நீரினால் செல் ஒரு பலூன் போல உப்பி வெடித்துச் சிதறிவிடும். செல்லுக்கு வெளியே நீரின் செறிவும் அழுத்தமும் அதிகமாக இருப்பதால், எப்போதும் நீர் உள்ளே நுழைய முனைப்புடன் இருக்கும். அதனால் வெளியிலிருந்து உள்ளே நுழையும் நீரை வெளியேற்றுவதுதான் இப்பம்புகளின் வேலை.

ஆனால், முக்கியமான உறுப்புகளையும் அதன் செயல்பாடுகளையும் மட்டும்தான் நாம பாத்திருக்கோம், இன்னும் செல்லுக்குள்ள நிறைய கண்டுபிடிக்கப்படாத மற்றும் ஏனென்று தெரியாத உறுப்புகளும் உண்டு.

ஒரு வழியா செல்லுக்குள்ள போயிட்டு வெற்றிகரமா திரும்பியாச்சு, ஆனா நீங்க ஒன்னு கவனிச்சீங்களா நாம வெளிய வரும்போது உள்ளே ஒரு பரபரப்பு சூழல் உருவாக ஆரம்பிச்சுது. ஆமாம் நீங்க ஊகிச்சது சரிதான் நாம உள்ளே போய் சுற்றுப் பயணம் செஞ்ச செல் இறக்கப்போகுது அல்லது இறக்கவேண்டிய கட்டாயத்திலிருக்கிறது. ஆனால் அது இறக்க வேண்டிய கட்டாயம் என்ன? எப்படி இறக்கும்? என்பதை அடுத்த பகுதியில் உரையடுவோம்.(நெக்ரோசிஸ் - நிர்பந்திக்கப்பட்ட இறப்பு முறை)

************************
ஏற்கனவே குறிப்பிட்டது போல் காலஅவகாசங்கள் பொறுத்து கூடுமானவரை வாரத்திற்கு ஒரு பகுதியில் உரையாடுவோம்.

1.http://fig.cox.miami.edu/~cmallery/150/unity/cell.text.htm
2.http://www.animalport.com/img/Animal-Cell.jpg
3.http://imagine.gsfc.nasa.gov/docs/science/know_l1/emspectrum.html
4. "SEX & THE ORIGINS OF Death", by William R.Clark


** குறிப்பு

பூமியின் அடியாழத்தில், ஏறத்தாழ 4100 மீட்டர் ஆழத்தில், மிகவும் அரிதாக பூமியின் மையப்பகுதியில் இருக்கும் உருகுநிலை மாக்மாவும் கடல் நீரும் சேருமிடத்திலுள்ள வெப்பப் புள்ளிகளில் புதிய உயிர் தோற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறியுள்ளனர். மேலும் அங்குள்ள புதிய உயிரிகளைக் குறித்த மேலதிக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.