Saturday, February 2, 2008

இறப்பு - உரையாடல் - I

இறப்பு - கண்முன்னே நிகழும் ஒரு வாழ்வியல் யதார்த்தம், என்பதையும் தாண்டி, தாமும் ஒரு நாள் இல்லாமல் போயிவிடுவோம் என்ற சிந்தனை ஒரு விநாடியேனும் நம்மை உலுக்கத்தான் செய்கிறது, அல்லது ஒரு வெறுமையை ஒரு நொடிப்பொழுதாவது நம்மைச் சுற்றி படரச் செய்துவிட்டுத்தான அகல்கிறது. இறப்பு குறித்துப் பேசாத தத்துவங்களும் தத்துவ ஞானிகளும் மிகவும் அரிது. இறப்பு குறித்தான அறிவியல் பார்வைகள் என்ன என்பதை இப்பதிவிலோ அல்லது தொடர்பதிவாகவோ பகிர்கிறேன்.

இறப்பு குறித்தான ஒரு அறிவியல் கருத்து முரணை முன்வைத்துவிட்டுப், பின்னர் சில தேடுதல்களுக்கான விடைகளைப் பற்றிப் பார்ப்போம். தான் ஒரு நாள் இறந்துவிடுவோம் என்ற அறிவு மனிதவிலங்கிற்கு மட்டுமே உண்டு, என்று ஒரு சில அறிவியலாளர்கள் கூறுவதுண்டு. மனிதனின், தான் உயர்ந்தவன், என்ற அகம்பாவ எண்ணத்தினால் விளைந்த உடனடி முடிவு இது என்றும், அக்கூற்றிற்கான போதிய ஆய்வு அடிப்படையிலான ஆதாரங்கள் இல்லை என்றும் ஒரு சிலர் கூறுவதுண்டு. உண்மை எப்படியிருந்தாலும் இறப்பு குறித்தான சில ஆய்வுகளையும் சில அடிப்படைக்கேள்விகளுக்கான தேடல்களையும் பார்க்கலாம்.

முதலில் இறப்பு என்றால் என்ன? ஒருவர் ஏன் இறக்க வேண்டும்? ஒருவரின் உடலின் பல பாகங்கள் செயலிழந்து போனாலும், கோமாநிலையிலிருந்தாலும் அவர் இறக்கவில்லை என்றால் அதன் பொருள் என்ன? விபத்தில் எப்பகுதிகளில் எவ்வளவு சதவிகிதம் பாதிக்கப்பட்டால் உடனடி இறப்பும் எவ்வளவு சதவிகிதம் பாதிக்கப்பட்டால் உடலின் உயிர்ப்பு மீள்தலும் சாத்தியம் என்பன போன்ற பல அடிப்படைக்கேள்விகள் நாம் அனைவருக்கும் என்றாவது ஒரு முறை தோன்றி மறையும். இயற்கை மரணம் என்றால் என்ன? பிறக்கின்ற எல்லா உயிரினமும் இறக்க வேண்டும் என்ற தத்துவக்கூற்றுகள் எவ்வளவு உண்மையானவை? எல்லா உயிரினமும் இறந்துதான் ஆகவேண்டுமென்றால் இறப்பு என்பது பிறப்பின்போது பொறிக்கப்பட்ட ஒன்றா? என்பது போன்ற தொடர்க் கேள்விகள் நம்மை அலைக்கழித்து வீசியடிக்கும் சமயங்கள் உண்டு.

உயிருள்ள அல்லது உயிர்ப்புள்ள அனைத்தும் உயிரற்ற அணுக்களால் ஆனவை என்பது அனைவரும் அறிந்ததே. இப்படி உயிரற்ற அணுக்களின் வேதியல் வினைகளிலிருந்து உயிர் தோன்றியது என்பது ஒரு தனி சமுத்திரமளவிற்கான ஆராய்ச்சிகளின் கருப்பொருள். இப்போதைக்கு அச்சமுத்திரத்தின் கரையிலிருந்தே அதை இரசிப்போம். உயிர் தோற்றத்தில் ஒரு செல் உயிரிகள் தொடங்கிப் பல செல் உயிரிகள் வரை பரிணமித்தது மற்றுமொரு சமுத்திரம். இவை இரண்டுக்குள்ளும் மூழ்கி முத்தெடுக்க இருவேறு நெடுந்தொடர்ப் பதிவுகள் தேவை. ஆதலால் ஒரு உயிரின் அல்லது ஒரு உயிரினத்தின் இறப்பு என்ற ஒற்றைக் கேள்வியை முன்னிறுத்தி, சில அடிப்படை கருத்துக்களை ஏற்று அதனடிப்படையில் தொடரலாம். எல்லா பொருட்களும் அதன் அடிப்படைக் கட்டுமானமான மூலக்கூறுகள், மற்றும் அணுக்களால் ஆனது போல், எல்லா உயிரினத்திற்கும் அடிப்படைக்கட்டுமானமாக (fundamental building block) இருப்பவை செல்கள்.

மனித உடலில் மட்டும் ஏறத்தாழ 10^14 (10 ன் அடுக்கு 14) செல்கள் இருப்பதாகவும், அவற்றில் பல வகையான செல்கள் இருப்பதாகவும் (உதாரணமாக, மூளை, நரம்பு, தோல், நோய் எதிர்ப்புச் செல்கள்...) கூறுகின்றனர். ஒரு மனிதனின் இறப்பு என்பதின் மூலத்தைத் ஆராய்ந்தால், அது ஒருவரது உடலிலுள்ள செல்களின் இறப்பின் விளைவே என்பது புலப்படும். ஒரு செல்லின் இறப்பு என்றால் என்ன? ஒரு செல் எப்போது இறக்கும்? எந்த வகையான செல்கள் எவ்வளவு இறந்தால் ஒரு மனிதன் முழுமையாக இறந்தவனாகிறான்? என்பவை இயற்கையாகத் தோன்றும் கேள்விகள்.


செல்களின் இறப்பை சில வகைகளாகப் பிரிக்கலாம். அதில் விபத்து அல்லது ஒரு திடீர் நிகழ்வினடிப்படையில் நிகழும் இறப்பு நெக்ரோசிஸ் (necrosis) என்றழைக்கபடுகிறது. அதாவது, திடீரென தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள நிர்பந்திக்கப்படும் வகை. உதாரணமாக, தற்கொலை முயற்சிகளின் போதும், மாரடைப்புகளின் போதும், உடலில் உள்ள பலசெல்கள் இறப்பதற்கு நிர்பந்திக்கப்படுகின்றன. இவ்வகைச் செல் இறப்பு என்பது மிகவும் கொடூரமான அல்லது ஒரு சீரற்ற நிகழ்வு(disordered or chaotic ) என்று கொள்ளலாம். இவ்வகை இறப்பில், வலியின் தாக்கத்தைப் புற உடலின் இயக்கத்திலும் காணயியலும்.

மற்றுமொரு வகையான இறப்பு என்பது பகுக்கப்பட்ட ஒரு நிகழ்வு (programmed cell death). இவ்வகையான செல் இறப்பு மிகவும் அமைதியான ஒரு நிகழ்வாகவே இருக்கும். இவ்வகையான இறப்பிற்கு உதாரணமாக ஒரு குழந்தைக் கருவறையில் உள்ள போது அதன் கைகள் முதலில் ஒரு துடுப்பு போன்ற அமைப்பையே பெற்றிருக்கும் பின்னர் தொடர் செல்லிறப்புகளினால் கைகளில் விரல்கள் தோன்ற ஆரம்பித்துவிடும். இறப்பதற்காகப் பிறக்கிறோம் என்பதன்றி இறந்ததனால் பிறக்கிறோம் என்பதுவும் உண்மையே. இவ்வகை இறப்பு என்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்று என்றே கூறலாம். அச்செல்லுக்கு எப்படித் தெரிந்தது தாம் அப்போது இறக்க வேண்டுமென்பது? அதற்கான கட்டளைகள் எங்கிருந்து வருகின்றன?, அப்படி இறப்பதற்கான கட்டளை வந்தவுடன் அந்தச் செல் எப்படி இறக்கும் அல்லது அதன் வாழ்க்கையை எப்படி முடித்துக் கொள்ளும்? என இதிலும் பல தொடர் கேள்விகள் எழும்.
இப்படிச் செல் இறப்பு மற்றும் இறப்பு என்னும் நிகழ்வு செல்களுக்குள் நுழைந்தது எப்படி? இறப்பு என்பது பரிணாமத்தில் விளைந்த ஒன்றா? எனப் பல கேள்விகளுக்கான விடைகளை இனி இறப்பு என்றத் தொடர் பதிவுகளில் இணைந்து தேடுவோம்,/உரையாடுவோம்.
கூடுமானவரை வாரத்திற்கு ஒரு பகுதியில் உரையாடுவதற்கு முயற்சிக்கிறேன்.
இக்கட்டுரையில் (வரவிருக்கும் தொடர்களிலும்) பேசப்பட்டிருக்கும் பெரும்பாலான கருத்துக்கள் "SEX & THE ORIGINS OF Death" என்ற William R. CLARK ன் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை.










10 comments:

ஜமாலன் said...

நண்பருக்கு...

அருமையான தத்துவச் சிக்கல் உள்ள ஒரு பிரச்சனையை அறிமுகப்படுத்த முயன்றுள்ளீர்கள். தொடராக படிக்க காத்திருக்கிறேன்.

உயிர்ப்பு அல்லது வாழ்வு பற்றி பேசுவதைவிட இறப்பு பற்றி பேசி வாழ்வை புரிந்து கொள்ள முயல்வது சிறப்பானது. நேற்று சமணத் தத்துவம் பற்றி படிதத்துக் கொண்டிருந்தபோது.. அதில் ஒரு சுவராஸ்யமான விவாதம் இருந்தது. அவர்களது விவாத முறை முடிவிலிருந்து தொடக்கத்தை அடைவது. பொருளை உடைத்துக் கொண்டே போனால் உடையாத ஒரு பகுதியை அடைவோம். அதுதான் அணு. அதிலிருந்துதான் இவ்வுலக தோற்றம் என்கிறார்கள். அதாவது பிறப்பிலிருந்து வாழ்வை புரிந்து கொள்வதைவிட மரணத்திலிருந்து புரிந்து கொள்வது சிறப்பானது என்பதை சொல்லவே.

'வலி' போன்றே அறிவியலால் அருதியிட முடியாதது இறப்பு என்பது.

//இறப்பதற்காகப் பிறக்கிறோம் என்பதன்றி இறந்ததனால் பிறக்கிறோம் என்பதுவும் உண்மையே. //

மிகவும் சிந்திக்கவைத்த ஒரு வாக்கியம். தீவிரமான யோசனைகளை உருவாக்கக்கூடியது.

தொடருங்கள். யாரும் தொடாத ஒரு சிக்லை தொட்டு பேசுகிறீர்கள்.. காத்திருக்கிறேன் தொடருக்காக.

அன்புடன்
ஜமாலன்

கையேடு said...

உங்களுடைய தொடர் ஊக்கத்திற்கு மிக்க நன்றி திரு. ஜமாலன்.

இறப்பு குறித்த உங்களுடனான தொடர் உரையாடல்கள் என் புரிதலை மெருகேற்றும் என்பதில் எனக்கு ஐயமில்லை. தொடர்ந்து உரையாடுவோம்.

CVR said...

அட!!சுவாரஸ்யமா இருக்கே!! அடுத்த பகுதிகளை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்!! :-)

ramachandranusha(உஷா) said...

சுவாரசியமாய் இருக்கிறது. தொடருங்கள்.அரும்புகளும், இளசுகளும் மடிய, உயிரை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டு இருக்கும்
பழுத்த இலைகள்! ஏன் எதற்கு எப்படி என்றலெல்லாம் அன்று சித்தார்த்தன் எழுப்பிய கேள்விக்கு
இன்றும் பதில் இல்லாத கேள்வி. மரணம் அழகானதா? என்ற தலைப்பில் முன்பு நான் எழுதிய என் அனுபவம் http://nunippul.blogspot.com/2006/07/blog-post_115193840037434536.html

கையேடு said...

ஊக்கத்திற்கு நன்றி..CVR & ramachandranusha(உஷா)

வாரத்திற்கொரு பகுதியில் உரையாட முயற்சிக்கிறேன்.

Unknown said...

கையேடு,
//இறப்பதற்காகப் பிறக்கிறோம் என்பதன்றி இறந்ததனால் பிறக்கிறோம் என்பதுவு ம் உண்மையே. //

மனித உடலில் தினமும் செல்கள் அழிவதும் புதிய செல்கள் தோன்றுவதும் தவறாமல் நடைபெறும்.

கருவில் இருக்கும் போதும் சில செல்கள் அழிந்தும் பல செல்கள் தோன்றியவண்ணமும் இருக்கும். அது ஒரு நிகழ்ச்சி.அந்த தொடர் நிகழ்ச்சி உயிர்த்து இருக்கும் வரை இருக்கும்.

சில செல்கள் இறப்பதாலும், சில செல்கள் பிறப்பதாலும் உயிர்திருக்கிறோம் என்பதுவே சரி.

இயற்கை மரணம் (programmed death) எப்போது ,எப்படி என்பது இன்னும் அறிவியல் கண்டறியாத ஒன்று. ஒரு உயிருக்கான அனைத்து விசயங்களையும் கொண்ட (stem cell ??) ஏதேனும் ஒரு மூல செல்லில் (prime cell) death programme செய்யப்பட்டு இருக்கலாம். அப்படியே இருந்தாலும் அது புறக்காரணிகளால் (நோய்கள்) முன்னரே நிகழ வாய்ப்பும் உள்ளது.


***

//இப்படிச் செல் இறப்பு மற்றும் இறப்பு என்னும் நிகழ்வு செல்களுக்குள் நுழைந்தது எப்படி? இறப்பு என்பது பரிணாமத்தில் விளைந்த ஒன்றா? எனப் பல கேள்விகளுக்கான விடைகளை இனி இறப்பு என்றத் தொடர் பதிவுகளில் இணைந்து தேடுவோம்,/உரையாடுவோம். //

தேடுவோம்

கையேடு said...

திரு. கல்வெட்டு - வருகைக்கு நன்றி.

//இறப்பதற்காகப் பிறக்கிறோம் என்பதன்றி இறந்ததனால் பிறக்கிறோம் என்பதுவு ம் உண்மையே. //

எனது இவ்வாக்கியத்தில் "ம்" என்ற எழுத்தை எதோவொரு காரணத்திற்காக தனிமைப்படுத்தியுள்ளீர்கள். அதிலிருந்து நான் புரிந்து கொள்ள வேண்டியது என்ன என்பதை கொஞ்சம் தெளிவுபடுத்தினால் நல்லது.

//மனித உடலில் தினமும் செல்கள் அழிவதும் புதிய செல்கள் தோன்றுவதும் தவறாமல் நடைபெறும்.

கருவில் இருக்கும் போதும் சில செல்கள் அழிந்தும் பல செல்கள் தோன்றியவண்ணமும் இருக்கும். அது ஒரு நிகழ்ச்சி.அந்த தொடர் நிகழ்ச்சி உயிர்த்து இருக்கும் வரை இருக்கும். //

செல்களின் இறப்பு-பிறப்பு குறித்து நீங்கள் கூறியிருப்பது பலசெல் உயிரிகள் என்ற பரிணாமப் பார்வையில் ஏற்புடையதே.

//சில செல்கள் இறப்பதாலும், சில செல்கள் பிறப்பதாலும் உயிர்திருக்கிறோம் என்பதுவே சரி.//

எனது வாக்கியத்திலிருந்து இவ்வாக்கியத்திற்கு வருவதற்குப் பின்னர் ஏறத்தாழ ஒரு பில்லியன் ஆண்டுகளின் நிகழ்வுகள் புதைந்திருக்கிறது என்றே கருதுகிறேன்.

மேலும், இதுவே சரி என்பதை இதுவும் சரி என்று புரிந்து கொள்கிறேன்.

//இயற்கை மரணம் (programmed death) எப்போது ,எப்படி என்பது இன்னும் அறிவியல் கண்டறியாத ஒன்று. ஒரு உயிருக்கான அனைத்து விசயங்களையும் கொண்ட (stem cell ??) ஏதேனும் ஒரு மூல செல்லில் (prime cell) death programme செய்யப்பட்டு இருக்கலாம். அப்படியே இருந்தாலும் அது புறக்காரணிகளால் (நோய்கள்) முன்னரே நிகழ வாய்ப்பும் உள்ளது.//

இது முழுக்கப் பலசெல் உயிரிகள் என்ற தளத்திற்கு நமது புரிதலை நகர்த்துகிறது.

மரணம் எப்போது என்பது கண்டறியாத ஒன்று, ஆனால் எப்படி என்ற உண்மை ஓரளவிற்கு புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்றே கருதுகிறேன்

வருகின்ற தொடர்களில் இது குறித்து மேலும் உரையாடுவோம். உங்களுடனான தொடர் உரையாடல் மிகுந்த பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

மேலும் நான் கணினித் துறையில் பணிபுரிபவனல்ல.. அதனால் பின்னூட்ட வெளியீடு மற்றும் உரையாடலில் சில கால தாமதங்கள் இருக்கலாம்.. மன்னிக்கவும்

Unknown said...

சுவாரஸ்யமாக இருக்கிறது. இறப்பு / பிரபஞ்ச அழிவு பற்றிய ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் வாத/பிரதிவாதங்களைப் பற்றியும் (அணுவ‌ளவு) படித்திருக்கிறேன். நீங்கள் பதியும் செய்திகள் சில நான் அறியாதவை. தொடர்ந்து படிக்கிறேன்.

ஒன்றே ஒன்று: கல்வெட்டு சொல்வது: //ஒரு உயிருக்கான அனைத்து விசயங்களையும் கொண்ட (stem cell ??) ஏதேனும் ஒரு மூல செல்லில் (prime cell) death programme செய்யப்பட்டு இருக்கலாம். அப்படியே இருந்தாலும் அது புறக்காரணிகளால் (நோய்கள்) முன்னரே நிகழ வாய்ப்பும் உள்ளது.// நோய்கள் அகக்காரணிகளாலும் நிகழ வாய்ப்பு அதிகம். அதுவும் ப்ரோக்ராம் செய்யப்பட்டிருக்க‌லாம் அல்லவா?

Unknown said...

கெக்கேபிக்குணி
// நோய்கள் அகக்காரணிகளாலும் நிகழ வாய்ப்பு அதிகம். அதுவும் ப்ரோக்ராம் செய்யப்பட்டிருக்க‌லாம் அல்லவா? //

நான் நோய் என்று சொல்வது , திட்டமிடப்படாத , புறக்காரணிகளால் விளையக்கூடிய ஒரு தாக்கம்.

நான் சொன்ன ஒரு உயிருக்கான அனைத்து விசயங்களையும் கொண்ட (stem cell ??) ஏதேனும் ஒரு மூல செல்லில் (prime cell) death programme செய்யப்பட்டு இருக்கலாம்.

என்பதில் அந்த மூல செல்லும் புறக்காரணிகளால் தாக்கப்படலாம். அப்போது programmed death பாதிக்கப்படலாம்.

கையேடு

//இறப்பதற்காகப் பிறக்கிறோம் என்பதன்றி இறந்ததனால் பிறக்கிறோம் என்பதுவு ம் உண்மையே. //

எனது இவ்வாக்கியத்தில் "ம்" என்ற எழுத்தை எதோவொரு காரணத்திற்காக தனிமைப்படுத்தியுள்ளீர்கள். அதிலிருந்து நான் புரிந்து கொள்ள வேண்டியது என்ன என்பதை கொஞ்சம் தெளிவுபடுத்தினால் நல்லது.


ம் என்ற எழுத்தை தனிமைப்படுத்த எந்த சிறப்புக் காரணமும் இல்லை.
"இறப்பதற்காகப் பிறக்கிறோம் என்பதன்றி இறந்ததனால் பிறக்கிறோம் என்பதுவும் உண்மையே" - என்று நீங்கள் சொன்னதில் இருந்து எடுத்துப் போட்டேன்.

அதில் நீங்கள் "அதுவும் உண்மை" என்று சொன்னதை கோடிட்டுக் காட்டி எனது உரையாடலைத் தொடங்கினேன். மற்றபடி உங்களுக்கு நான் எந்த பொடியும் வைக்கவில்லை :-)

***

பல செல் உள்ள ஒரு உயிரில் (மனிதன்) சில செல்கள் இறப்பதாலும் நாம் பிறந்தோம் என்பது உண்மையாகாது அல்லது சரியான ஒன்று அல்ல.

கருவில் உள்ள குழந்தையின் கையில் உதிரும் செல்களை சுட்டி விளக்கும் போது நீங்கள் சொன்னது அந்த அவரிகள். சரியா?

அந்த எடுத்துக்காட்டை சுட்டியபோது."அந்த சில செல்கள் இறந்ததனாலேயே பிறக்கிறோம் என்பதுவும் உண்மை" என்று சொல்வது சரியல்ல.

"இறப்பதற்காகப் பிறக்கிறோம் என்பதன்றி சில செல்கள் இறந்ததனால் இந்த வடிவம எடுத்தோம் என்பதாக இருக்க வேண்டும்"

**

நீங்கள் பல செல் உயிர்களைப் பற்றித்தான் (மனிதன்) பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன். மரணம் ஒரு புதிரான ஒன்று தான் . மேலும் பேசுவோம்.

கையேடு said...

programmed (PCD)செல் இறப்புக்கான உதாரணத்திற்கு கருவறையிலிருக்கும் ஒரு குழந்தையின் எடுத்துக்காட்டை குறிப்பிட்டேன். அடுத்த வாக்கியம் முந்தைய உதாரணத்தை மட்டும் மனதில் வைத்து எழுதப்பட்டதல்ல. இது என்னுடைய விவரிப்பின் குறைபாடு.

ஆனால், இப்பதிவு ஒரு அறிமுகப் பதிவு மட்டுமே. சோளிகளை இறைத்துவிட்டுத் தேடுவது போல், கேள்விகளை இறைத்துவிட்டிருக்கிறேன். கேள்விகளுக்கான பதில் ஒரு செல் உயிரியிலும் இருக்கலாம் பல செல் உயிரிகளிலும் இருக்கலாம்.

அதனால், தேவைப்பட்டால் பரிணாமத்தில் பின்னோக்கிச் சென்று ஒரு செல் உயிரிகளிடமும் தேட வேண்டியிருக்கும்.

அடுத்த பதிவில் விரிவாக உரையாடுவோம். தொடர் உரையாடலுக்கு நன்றி.