Thursday, November 13, 2008

மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை - பரிணாம விளக்கமும், விளக்கப் பரிணாமமும்


மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை - பரிணாமக் கொள்கை குறித்த தவறான புரிதலுக்கான விளக்கமும், பின்னூட்டத்தின் விளக்கப் பரிணாமமும்

1. பரிணாமம் என்றால் என்ன?

பரிணாமம் என்பது இயற்கை மாற்றத்தினால் ஒரு உயிர் எப்படிப் பலவகை உயிரிகளாக மாறுகிறது/மாறியது என்பதை விளக்கும் ஒரு உயிரியல் கொள்கை. பரிணாமம் உயிரின் தோற்றத்தை விளக்கும் ஒரு கொள்கையல்ல, மாறாக உலகிலுள்ள அனைத்து "உயித்தொகுப்புகளும்" (species) காலச்சக்கரத்தில் பின்னோக்கி நகர்ந்தால் ஒரே மூதாதையரைக் கொண்டிருப்பவை எனபதை விளக்கும் ஒரு கொள்கை. சுருக்கமாகச் சொன்னால் "எல்லோரும் ஒரு மரத்துப் பறவைகளே" என்பதுதான் பரிணாமக் கொள்கையின் அடிப்படைச் சாரம்.

2. பரிணாமத்தை எப்படிப் புரிந்து கொள்வது?

இவ்வுலகில் தோன்றிய முதல் உயிர் தனது சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு தனது இருத்தலுக்காக உள்ளான மாற்றமே பரிணாமம். மிக முக்கியமானதொன்றைக் குறிப்பிட விரும்புகிறேன், இம்மாற்றத்தை அவ்வுயிர் தேர்ந்தெடுக்கவில்லை மாறாக இயற்கை நிகழ்வாக சுயமாக நிகழ்கிறது. இம்முதல் உயிரிலிருந்து பிரிந்து விரிந்த ஒரு மரமாக இன்றைய அனைத்து உயிர்களையும் நோக்கலாம். இச்சூழல் மாற்றத்தினடிப்படையில் தகவமைத்துக் கொள்ளும் பண்பையே சார்லஸ் டார்வின் "natural selection" என்று தனது பரிணாமக் கொள்கையில் குறிப்பிடுகிறார்.

3. அது என்ன பரிணாம மரம்?


படம் 1. http://www.peabody.yale.edu/exhibits/treeoflife/convergent.html

பரிணாமத்தை ஒரு மரமாக பாவித்து விளக்குகின்ற முறையை "phylogeny" என்றழைக்கின்றனர். இதற்கான விளக்கப்படத்தை (படம் 1.)காணலாம். ஒரு உயிர் முதலில் தோன்றி அதன் பின்னர் வெவ்வேறு காலத்தில் சூழல் மாற்றங்களுக்கேற்றவாறு வெவ்வேறு வகையான உயிர்த்தொகுப்புகளாக மாறியதைப் பற்றிய ஒரு விளக்கத்தையே இப்பரிணாம மரம் விளக்குகிறது. இம்மரத்தின் ஆதி புள்ளியிலிருந்து நகர்ந்தால் முதலில் கிளைக்கும் புள்ளி வெவ்வேறு வகை உயிரிகளாகப் பிரிந்த தருணத்தைக் குறிக்கிறது. ஒரு கிளையின் நுணியில் இருந்து பின்னோக்கி நகர்ந்தால் சந்திக்கும் முதல் கிளைத்தல்-புள்ளி மிகச் சமீபத்தில் அவ்வுயிரினம் மாற்றம் அடைந்த தருணத்தைக் குறிக்கிறது. சூழலுக்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் போது மாற்றங்கள் சீரானவையாகவும் இருக்கலாம் சீரற்ற தாவல்களாகவும் இருக்கலாம்.

அதில் மனிதனும் குரங்கும் ஏதோவொரு சூழல் மாற்றத்தினால் ஒரு புள்ளியில் துவங்கிய இரண்டு உயிரிகள். ஒரே துவக்கப்புள்ளியைக் கொண்ட இரண்டு சிறு கிளைகள் மிகவும் நெருங்கிய உடல்கூறுகள், மற்றும் வாழ்வுமுறைகளைக் கொண்டதாகவும்,(நமது குடும்பத்தில் இருக்கும் நெருங்கிய உறவினரைப் போல) ஒரு பெருங்கிளையினைத் துவக்கப் புள்ளியாகக் கொண்டப் பலவகை உயிரிகளுக்கு அடிப்படையான பொது உயிரமைப்பும் கொண்டிருக்கும் (நமது தூரத்து உறவினர் போல). ஆனால், சிறுகிளைகள் வெகுதூரத்தில் இணைந்தாலும் அவற்றுக்கிடையே அடிப்படையானதொரு பெரும் ஒப்புமை இருக்கலாம். இதனாலேயே மருந்துகளுக்கான சோதனைகள் முதலில் எலிகளில் பெரும்பாலும் செய்யப்படுகின்றன. அதாவது மனிதன் உள்ளிட்ட பல்வேறு உயிர்த்தொகுப்புகள் துவங்கும் ஒரு பெரும்கிளையின் துவக்கப்புள்ளியில் இருப்பவை எலிகள்.
அப்பெருங்கிளையில் இருக்கும் அனைத்து உயிரிகளுக்கும் அடிப்படையானதொரு ஒப்புமை இருக்கும்.


4. குரங்கிலிருந்து மனிதன் தோன்றினானா?

கண்டிப்பாக இல்லை. மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை. இப்படியான கருதுகோல், பரிணாமத்தைப் பற்றிய தவறானபுரிதல்களில் முதன்மையானது. ஒருவேளை, இப்படியான கருதுகோலை உருவாக்கிப் பரப்பியதில் சமூகத்தில் விரவியிருந்த நம்பிக்கைகள் மற்றும் ஊடகங்களின் பங்கு முதன்மையானதாக இருக்கலாம். அல்லது ஏற்கனவே தனக்கென்று சிறப்பான குணாதீசியங்கள் உண்டு என்றும், தான் மற்ற விளங்குகளிடமிருந்து தனித்த ஒரு சிறப்பான உயிரி என்ற எண்ணத்தில் இருக்கும் போது "நீயும் குரங்கும் நெருங்கிய உறவினர்கள்" என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத அகம்பாவமாகயிருக்கலாம்.


5. அப்படியானால் குரங்கிற்கும் மனிதனுக்கும் உள்ள ஒப்புமையை எப்படிப் புரிந்து கொள்வது?




படம் 2. http://evolution.berkeley.edu/evolibrary/article/0_0_0/evo_05

மனிதனும் குரங்கும் பரிணாம மரத்தில் பின்னோக்கிச் சென்றால் சமீபத்திய புள்ளியில் துவங்கிய இரு உயிரிகள் (நெருங்கிய உறவினர்கள்). தமக்குள்ளே உடல் கூறுகள் மற்றும் பண்புகள் எனப் பலவற்றில் பெரும் ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்ளும் இரு உயிரிகள்.


6. இப்போ கடைசியா என்னதான் சொல்ல வர்றாங்க இந்த பரிணாம உயிரியலாளர்கள் (evolutionary biologists)?

படம் 3. ( http://evolution.berkeley.edu/evosite/misconceps/IBladder.shtml)

பரிணாமம் என்பது ஒரு மரத்தைப் போன்றது, ஏணியைப் போன்றதல்ல. ஒற்றைச் செல் உயிரிகள் துவங்கி இன்றைய மனிதன் வரை சுழல் மாற்றத்திற்கிணங்க தன்னை மாற்றியமைத்துக் கொண்ட ஒற்றை உயிர் மூலக்கூறின் வெவ்வேறு வடிவங்களே இப்படியாகப் பரிணமித்திருக்கும் அனைத்து உயிரினங்களும். அதனால், அனைத்து உயிரிகளும் ஒன்றோடொன்று சக காலத்தில் உயிரோடிருக்க முடியும் (மிகவும் அபரிவிதமான திடீர் சூழல் மாற்றங்கள் நிகழாதவரை). எல்லோரும் ஒரு மரத்துப் பறவைகளே என்பதுதான் பரிணாமக் கொள்கையின் அடிப்படைச் சாரம்.


7. சரி அப்போ அந்த முதல் உயிர் எங்கிருந்து வந்தது?

முதலில் இக்கேள்விக்குப் பரிணாமக் கொள்கை பதிலளிக்கத் தேவையில்லை. ஏனெனில், ஏற்கனவே குறிப்பிட்டது போல் அது "உயிரின்" மூலத்தை விளக்கும் ஒரு கொள்கையல்ல, மாறாக "உயிர்த்தொகுப்புகளின்" மூலத்தை விளக்கும் ஒன்று. (It does not explain "origin of life", it (tries to) explains "origin of species").

இப்போ ஒற்றை உயிர் பற்றிய கேள்விக்கு வருவோம் அது பூமியின் கருப்பொருட்கள் மற்றும் சூழல் மாற்றங்களை முன்னிறுத்தி அனுமானிக்கப்பட்டது. அனுமானம் என்றாலும் ஆய்வங்களில் அப்படியான சூழலைச் செயற்கையாக உருவாக்கி உயிர் மூலக்கூறுகளின் அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கியதன் மூலம் இவ்வனுமானம் தற்போது ஏற்புடையதாகயிருக்கிறது. முன்னரே, இங்கே( இறப்பு - உரையாடல் - II - உயிர்த் தோற்றம், செல்-அற...) சிறிது விளக்கியிருக்கிறேன்.


8. பரிணாமம் முழுமையடைந்துவிட்டதா? மேலும் பரிணாமம் நிகழுமா?

பரிணாமம் ஒரு தொடர் நிகழ்வு, அது நிகழ்ந்து கொண்டேயிருக்கும். உதாரணமாகச் சரியாகப் பள்ளி உணவு இடைவேளகளில் குழந்தைகள் மரத்தடிகளில் உணவு உட்கொள்வதால் சிதறுபவற்றை உண்பதற்காக அங்கே வந்தமரும் பறவைகள். (இது பரிணாம மாற்றமல்ல, தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலுக்கேற்றவாறு உணவு வேட்டையை மாற்றிக் கொள்ளும் அப்பறவைகளின் செயல்பாடுகளுக்கான ஒரு மிக எளிமைப்படுத்தப்பட்ட ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இது போல பல எடுத்துக் காட்டுகளை நாம் எல்லோராலும் நினைவுக்கு கொண்டுவர முடியும்.) சரி இப்போது எதற்கு இவ்வெடுத்துக்காட்டு. பரிணாம மரத்தில் மனிதன் தவிர அனைத்து உயிரினங்களும் இன்றும் தங்கள் வாழ்வியல் ஆதாரத்திற்குத் தனது சூழல் மற்றும் இயற்கையுடன் நேரடியிணைப்பில் இருக்கின்றன. அதனால், பரிணாமம் முற்றுப்பெறாத தொடர் நிகழ்வு (மிகவும் அபரிவிதமான திடீர் சூழல் மாற்றங்கள் நிகழாதவரை).


9. மற்ற உயிரினங்கள் இயற்கைச் சூழலோடு இணைந்து வாழும் போது, இன்றும் பல உயிரினங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன என்று கூப்பாடு போடுவதேன்?

பரிணாமம் ஒரு தொடர் நிகழ்வாகயிருந்தாலும், பரிணாம மாற்றங்கள் நிகழும் கால அளவு பல்வேறு உயிரிகளின் ஆயுட்காலத்தோடு ஒப்பிடுகையில் பன்மடங்கு அதிகம். மனிதன் எனும் உயிரி தனது வாழ்வியல் சூழலை மாற்றிக் கொண்டதன் மூலம் இவ்வுலகில் ஏற்படுத்திய சூழல் மாற்றங்கள் மிகவும் ஆபத்தானது, மற்றும் அதிவிரைவானது.மிகக்குறுகிய காலத்திலேயே உலகின் இயற்கைச் சூழலை பெரிதும் நாசமாக்கிவிட்டது மனிதன் எனும் உயிரி (ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்குள்). பரிணாம மாற்றங்கள் நிகழும் கால அளவோடு ஒப்பிட்டால் ஏறத்தாழ 4 அடுக்குகள்(மடங்கு அல்ல) சிறிய கால அளவு. இவ்விரைவான சூழல் மாற்றத்தினைத் தாக்குப் பிடிக்கமுடியாத பல்வேறு உயிரிகள் சத்தமில்லாமல் அழிந்து கொண்டிருக்கின்றன. "சில" உயிரினங்களைப் பொருத்தவரை 1000 ஆண்டுகளில் மாற்றம் என்பது அதிவிரைவான சூழல் மாற்றமே.


10. அப்படியானால் மனித உயிரி பரிணமிக்குமா?

இன்றைய சூழலைக் கருத்தில் கொண்டால் மனிதன் இனி பரிணமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென்று கருதுகின்றனர். இது தொடர்பாகச் சிலர் கருத்துக்களை கூறும் போது "மனிதன்" எனும் உயிரியிலிருந்து மற்றொரு பரிணாமம் நடை பெற்றால் மனிதன் அவ்வுயிரியின் முதல் உயிரை விட்டுவைக்க மாட்டான்" என்பது. இக்கூற்றைப் பகடிக்காக மட்டுமே பயன்படுத்துவோருண்டு. இதனை ஒரு கருதுகோலாக நோக்கினால் உடனடியாக இது சரியானதல்ல என்பது விளங்கிவிடும். பரிணாமம் என்பது ஒரு தொடர் நிகழ்வு, மேலும் அது நிகழும் கால அளவு மனிதனின் ஆயுட்காலத்தோடு ஒப்பிட்டால் மிக அதிகம். அதனால், மனிதன் எனும் உயிரி பரிணமித்துக் கொண்டிருக்கிறதா என்பதை உணர்ந்துகொள்வதே கடினம். இது மேலேயுள்ள கருதுகோளுக்கான எதிர் கருத்து மட்டுமே.

ஆனால், மனிதன் எனும் உயிரியின் சிறு கிளை மேலும் கிளைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதற்கு வேறு பல அறிவியல் சான்றுகளை முன்வைக்கின்றனர். அப்படியென்ன சான்று? மனிதன் இயற்கையிலிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டதாகக் கருதுகின்றனர். பெண்களுக்கு அதிகமாக உருவாகும் சொத்தைப் பல்லை இதற்கான சான்றுகளுள் ஒன்றாக நோக்கலாம். அதைப்பற்றிய விரிவான இடுகைக்கு முன் இப்படியொரு இடுகையின் அவசியம் இருப்பதை உணர முடிந்தது. அதனால் இப்பதிவு.

குறிப்பு:
பரிணாம உயிரியலை நான் ஆய்ந்து அறிந்தவனல்ல, வெறும் வாசிப்பும் மொழிபெயர்ப்பும் மட்டுமே. எனது புரிதலில் தவறிருந்தால் சு(கு)ட்டலாம்.
சுட்டிகளில் நேரடியாகவும் வாசித்துச் சரிபார்த்துப் புரிந்துகொள்ளலாம்.

பின்வரும், பகுதி அறிவியல் (என்ற) மதம் ! என்ற பதிவில் நிகழ்ந்த பின்னூட்ட உரையாடலினால் எழுதப்பட்டது.

புராண அவதாரங்கள் பரிணாமத்தைத்தான் குறிக்கின்றனவா?
கண்டிப்பாக சார்லஸ் டார்வினின் தொகுப்பிற்கிணையாக எந்த புராண, இதிகாச, புனித நூல்களிலும் விளக்கங்களோ ஆதாரங்களோ இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

அதே சமயம், பரிணாமக் கொள்கையின் ஆழ்ந்த புரிதல்களுக்கிணையாக இல்லாவிடினும், உயிர்களுக்கிடையேயான ஒருவகை ஒப்புமையை மனிதன் எனும் உயிரி உணர்ந்ததன் விளைவாக அப்படியான கதைகளையும் வகைப்படுத்தல்களையும் தங்கள் இலக்கியங்களில் புகுத்தியிருக்கலாம். புராணத்தை எழுதியவனும் சிந்தனைத்திறனுடைய ஒரு மனிதனாகத்தானே இருக்க வேண்டும். மேலும், மனிதனின் சூழல் குறித்த பார்வைதானே இலக்கியங்களில் பதியவைக்கப் படுகின்றன. அவை நம்பிக்கைகளாக மாறுகின்றனவா அல்லது இதிகாசமாக மாறுகின்றனவா அல்லது புனித நூலாக மாறுகின்றனவா என்பது மனிதச்சமூகத்தின் சூழல் சார்ந்தது.

ஆனால், பரிணாமக்கொள்கையைத் தான் புராண இதிகாசங்கள் விளக்குகின்றன என்ற கூற்று மிகைப்படுத்தலேயன்றி வேறல்ல.


ஆனால், அனைத்து மதங்களையும் சார்ந்த இவ்விதிகாச புராணங்கள் புழங்கும் சமூகச் சூழல்களைப் பார்க்கும் போது ஒன்றைச் சொல்லத் தோன்றுகிறது.

"It is more difficult to unlearn, than learning" என்று ஒரு சொல்வழக்குண்டு. தற்போதைய சமூகச் சூழலில் இருக்கும் குழப்பங்களுள் முதன்மையானவற்றுள் ஒன்றாக இதைக் காண முடிகிறது "எதை, unlearn செய்வது..??..!!".

எந்தெந்தச் சூழலில் மனித சமூகம் எதை "learn" செய்கிறது எதை "unlearn" செய்கிறது என்பது சமூகவியல், உளவியல், ஊடகவியல் என பண்முகத் தன்மைகொண்டு பயணிக்குமொரு நீண்ட உரையாடலுக்கான கருப்பொருளாகயிருக்கலாம்.

இறுதியாக, உண்மை புராணத்தில் இருந்தால் என்ன, அறிவியலில் இருந்தாலென்ன, இயற்கை மற்றும் இயற்கை நிகழ்வுகள் முன் நாம் சிறுத்துப் போவதுதாம் உண்மை.

தகவல் மூலங்கள்:

http://www.peabody.yale.edu/exhibits/treeoflife/learn.html
http://evolution.berkeley.edu/evolibrary/article/0_0_0/evo_toc_01

பரிணாமத்தை விளக்கும் ஒரு குறும்படம்
http://www.peabody.yale.edu/exhibits/treeoflife/film_discovering.html

"Phylogeny" குறித்த விரிவான விளக்கங்களுக்கு
http://evolution.berkeley.edu/evolibrary/article/phylogenetics_02

படங்களுக்கருகேயுள்ள சுட்டிகளிலும் சில விளக்கங்கள் உள்ளன.


பின்னூட்டத்தில் ஒரு அனானி குறிப்பிட்டதற்கிணங்க species என்பதற்கான பயன்பாடு உயிரித்தொகுப்பு என பின்னர் திருத்தி வெளியிடப்பட்டுள்ளது.


37 comments:

கல்வெட்டு said...

// "It is more difficult to unlearn, than learning" என்று ஒரு சொல்வழக்குண்டு. தற்போதைய சமூகச் சூழலில் இருக்கும் குழப்பங்களுள் முதன்மையானவற்றுள் ஒன்றாக இதைக் காண முடிகிறது "எதை, unlearn செய்வது..??..!!".

எந்தெந்தச் சூழலில் மனித சமூகம் எதை "learn" செய்கிறது எதை "unlearn" செய்கிறது என்பது சமூகவியல், உளவியல், ஊடகவியல் என பண்முகத் தன்மைகொண்டு பயணிக்குமொரு நீண்ட உரையாடலுக்கான கருப்பொருளாகயிருக்கலாம்.//


unlearn என்பது லேசுப்பட்ட காரியம் இல்லை. :-))

**

ஏணி (ஒரே உயிரி அடுத்தடுத்து மாறுவது)

மரம் (கிளை பரப்பல்...பல உயிரிகள்)

மரத்தை தொடர்புபடுத்திப் பார்த்தாலும் பரிணாமக் கொள்கையின்படி , அனைத்திற்குமான மூல உயிரி "origin of species" ஒன்றுதான் என்று கொள்ளலாமா?

கையேடு said...

நீங்கள் சொல்வது உண்மைதான். "unlearn" செய்வது அவ்வளவு எளிதான ஒன்றல்ல.

life and species இவற்றை வேறுபடுத்த நான் பயன்படுத்திய இரண்டு சொற்களே உயிர் மற்றும் உயிரி.
அதனால் அனைத்து உயிரிகளுக்குமான (species) மூலம் ஒரேயொரு உயிர் (life).

தருமி said...

ரத்தினச் சுருக்கமாக இருந்தாலும் புரிந்துகொள்ள, தெரிந்துகொள்ள விரும்புவோருக்கு ஒரு நல்ல ஆரம்பம்.

இன்னும் கொஞ்சமாக ஜீன்களைப் பற்றியும் சொல்லியிருந்தால் நன்றாக இருக்குமோ?

கல்வெட்டு said...

கொழப்புறீங்களே தல வாழப்பழக்கத மாதிரி வேண்டாம். :-)))

**

உயிரி (species) இல்லாமல் உயிர் (life) இல்லை சரியா?
அல்லது உயிரியில்(species)தான் உயிர் (life) இருக்கிறது.

**
//life and species இவற்றை வேறுபடுத்த நான் பயன்படுத்திய இரண்டு சொற்களே உயிர் மற்றும் உயிரி.அதனால் அனைத்து உயிரிகளுக்குமான (species) மூலம் ஒரேயொரு உயிர் (life).//

நீங்கள் சொல்வது போலவே மூலம் ஒரேயொரு உயிர் (life) என்று கொண்டாலும் அதுவும் ஏதோ ஒரு உயிரியைத்தானே (species) அடையாளப்படுத்துகிறது?

**
பளிச்சுன்னு சொல்லுங்க நெசமாவெ புரியல ..வீண்வாதம் அல்ல தெரிந்து கொள்ளும் ஆவல்.

அனைத்திற்குமான மூல உயிரி "origin of species" ஒன்றுதான் என்று கொள்ளலாமா?

வருண் said...

குரங்குக்கும் மனிதனுக்கும் ஒரே மூதாதையார் இல்லையா?

In other words<

They had a same great great great great grandma and grandpA!!

Just like a white and black had a same ancestors, monkey and humans had the same ancestors!

நான் சொல்லுவது தவறா?

தவெறென்றால் எப்படி தவறு?

குடுகுடுப்பை said...

அப்போ ஆதாம் தான் பரிணாம மரமா?:)

கையேடு said...

திரு கல்வெட்டு அவர்களுக்கு,

//உயிரி (species) இல்லாமல் உயிர் (life) இல்லை சரியா?//

இல்லை, உயிர் என்று ஒன்று தனியாக இருக்கலாம் இருந்திருக்கிறது. மீண்டும் வருகிறேன்.

//அல்லது உயிரியில்(species)தான் உயிர் (life) இருக்கிறது.//

இது சரி, உயிரியினுள் பல உயிர்கள் இருக்கிறது.

//அனைத்திற்குமான மூல உயிரி "origin of species" ஒன்றுதான் என்று கொள்ளலாமா//

இல்லை, எல்லா உயிரிகளும் ஒரேபுள்ளியில் இனைந்து விட்டபின்பு அதற்கு முன்னர் இருந்தவை technically உயிர்கள் மட்டுமே.

அனைத்து உயிரிகளுக்குமான மூலம் ஒரேயொரு உயிர். every species originated from a single life. What is that first form of single life and its origin? is still not clear.

ஆனால், இப்பரிணாம மரத்தில் வேரிலிருந்து மேல்நோக்கிச் செல்லும் போது, ஒரேயொரு ஒற்றை உயிர் முதன் முதலில் மூன்று bacteria, eucaryota, archaea என்ற பெரும் clade(collection of thousands of species) களாக பிரிவடைகிறது. இப்புள்ளிதான் பரிணாம மரத்தின் முதல் கிளைத்தல். that node point is the "origin of species". அதற்கு முன்னரே உயிர் இருந்திருக்கிறது.

அப்படியானல் அந்த ஒற்றை உயிர் என்பது அது ஒரேயொரு உயிராக இருந்திருக்கிறது என்பதே தற்போதைய பதில். அதாவது வெவேறு வடிவங்களும் உறவுகளும் இல்லாமல் (without any other form of relatives and having no other form of life, ie. technically it cannot be called as species, it can be called only as life) அதுதான் துவக்கமாக இருந்திருக்கிறது.

அது்(gene)ஜீனாகயிருக்குமா என்பது போன்ற கேள்விகளுக்குத் தெளிவான விடையில்லை. அதற்குப் போதிய சான்றுகள் இல்லை என்று தெரிவிக்கின்றனர். அல்லது எனது வாசிப்பும் தேடலும் போதவில்லையென்றும் கொள்ளலாம்.

தருமி ஐயா, அவர்கள் அதனை மனதில் கொண்டே ஜீன்களைப்பற்றி எழுதியிருக்கலாம் என்று குறிப்பிடுகிறார் என்று கருதுகிறேன்.

இப்போதும் குழப்புகிறேனா.. :)

கையேடு said...

தருமி ஐயா, அவர்களுக்கு,

ஜீன்கள் குறித்து எனது வாசிப்பு போதாது. எனது புரிதலில் வளச்சியடைந்தால் மீண்டும் எழுதுகிறேன்.
நன்றி.

கையேடு said...

திரு வருண் அவர்களுக்கு,
//குரங்குக்கும் மனிதனுக்கும் ஒரே மூதாதையார் இல்லையா?//

உங்கள் புரிதல் சரியானதுதான். அல்லது நானும் இப்படித்தான் புரிந்து கொண்டுள்ளேன்.. :)

கையேடு said...

//அப்போ ஆதாம் தான் பரிணாம மரமா?:)//

:)

நன்றி திரு.குடுகுடுப்பை.

கல்வெட்டு said...

//(without any other form of relatives and having no other form of life, ie. technically it cannot be called as species, it can be called only as life) அதுதான் துவக்கமாக இருந்திருக்கிறது.
//


ம்.ம்ம்..

இன்னும் கொஞசம் வேப்பிலை அடிங்க பாசு புரிஞ்சுரும்னு நினைக்கிறேன் :-))

1.எல்லா உயிரிகளும் ஏதோ ஒரு மூலத்தில்(origin) இருந்தே (ஒரே origin ) வந்துள்ளது.

2.அந்த மூலம்(origin) உயிரியாக( species) அறியப்படவில்லை. அல்லது அதையும் உயிரி( species) என்ற வகைக்குள் கொண்டுவரக்கூடாது.

3.அந்த மூலம்(origin) உயிர் (life) உள்ள ஒன்று ஆனால் உயிரிக்கான( species) இலக்கணம் இல்லாமல் டப்பாக்குள் அடைக்கப்பட்ட ஒரு வஸ்துவாக இருந்துள்ளது.

சரியா தல ?

இயற்கை நேசி|Oruni said...

3.அந்த மூலம்(origin) உயிர் (life) உள்ள ஒன்று ஆனால் உயிரிக்கான( species) இலக்கணம் இல்லாமல் டப்பாக்குள் அடைக்கப்பட்ட ஒரு வஸ்துவாக இருந்துள்ளது ======>

Kalvettu,

it is so called "the primordial soup" ;)

evolutionary treeயைப் பத்தி சுட்டிக்காட்டாமல் இயற்கை நேசியில சில பதிவுகள் இருக்கலாம்.

கையேடு, நல்ல முயற்சி!

kaiyedu said...

திரு. கல்வெட்டு, அவர்களுக்கு
1,2,3 மூன்று புரிதலுக்கும் ஆம் அப்படித்தான்.

கையேடு said...

//கையேடு, நல்ல முயற்சி!//

நன்றிங்க இயற்கை நேசி.

suvanappiriyan said...

//அனைத்திற்குமான மூல உயிரி "origin of species" ஒன்றுதான் என்று கொள்ளலாமா?//

ஒவ்வொரு இனங்களின் மூல உயிரியும் தனித்தனியே ஆதியில் ஒன்றாக இருந்ததாக கொண்டால்தான் பல குழப்பங்களிலிருந்து விடுபட முடியும்.

மேலும் குழப்புகிறோனோ...:-)

கையேடு said...

//
ஒவ்வொரு இனங்களின் மூல உயிரியும் தனித்தனியே ஆதியில் ஒன்றாக இருந்ததாக கொண்டால்தான் பல குழப்பங்களிலிருந்து விடுபட முடியும்.//

திரு. சுவனப்பிரியன் அவர்களுக்கு, இது கேள்வியா இல்லை விளக்கமா. :)

உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஒரே மூலம்தான். அதுதான் படிமக் கலவையில் (premordial soup) இருந்து தோன்றிய முதல் உயிர்.

நன்றி.

துளசி கோபால் said...

லேசாப் புரியுது.

நல்ல விளக்கம்.

கையேடு said...

//நல்ல விளக்கம்//

நன்றிங்க மேடம்.

கையேடு said...

திரு. கல்வெட்டு அவர்களுக்கு,
பலூன் பதிவுகளில் நீண்ட நாட்களாக ஒன்றும் புதியவற்றைக் காணமுடியவில்லையே.

Anonymous said...

ஜெயமோகனில் இருந்து கோவி கண்ணன் வரை அறிவியல் பயிற்சியோ, அறிவியல் ஆய்வு முறை குறித்த புரிதலோ இல்லாத பலர் அறிவியல் என்ற பெயரில் அபத்தக் கருத்துக்களை உதிர்க்கும் ஆபத்தான அறிவுச் சூழலில், மிகவும் சிரத்தையுடன் பரிணாம அறிவியலை சரியான புரிதலுடன் மிகவும் செறிவாக விளக்கியிருப்பதற்கு நன்றி. கோவி கண்ணனுக்கும் நன்றி சொல்ல வேண்டும். அவர் அப்படி ஓர் அசட்டுத்தனமான பதிவு எழுதி உங்களை இக்கட்டுரையை எழுதத் தூண்டியதற்காக.

உயிர், உயிரி என்று வித்தியாசப்படுத்தியது முக்கியமானது என்றாலும், species என்ற பன்மைச் சொல்லை உயிரி என்று ஒருமையில் மொழிபெயர்க்க முடியாது. உயிரி என்பது organism என்ற சொல்லுக்கு சரியான மொழி பெயர்ப்பாக இருக்கும். Species என்பது collection of organisms என்பதால் அதை உயிரித்தொகுப்பு என்று வேண்டுமானால் எழுதலாம்.

கையேடு said...

//என்பதால் அதை உயிரித்தொகுப்பு என்று வேண்டுமானால் எழுதலாம்.//

மிக்க நன்றிங்க அனானி, உயிரி என்ற வார்த்தைப் பயன்பாடு சரியானதா என்ற நெருடல் நேற்றிலிருந்து இருந்து வந்தது.
தகுந்த வார்த்தையைச் சுட்டியதற்கு நன்றி.

தனிநபர்கள் குறித்த உங்களது மதிப்பீடு என்னளவில் தேவையற்றதும் கூட.

ராஜ நடராஜன் said...

வணக்கம்.கொஞ்ச காலமாக இதுபோன்ற விவாதங்கள் பக்கமே போவதை நிறுத்தி வைத்திருந்தேன்.நீங்கள் மீண்டும் தலையைச் சுற்றவைக்கிறீர்கள்:)

எழில் said...

//உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஒரே மூலம்தான். அதுதான் படிமக் கலவையில் (premordial soup) இருந்து தோன்றிய முதல் உயிர்.

நன்றி.
//

அதிலிருந்து ஒரே ஒரு உயிர் தோன்றியது என்று யாரும் இப்போது கூறுவதில்லை. உயிர் என்பதற்கும் உயிரற்றது என்பதற்குமான இடைவெளி காணமுடியாதது. பெரும் மூலக்கூறுகளாக வைரஸ்களை பார்க்கலாம். ஆகவே வைரஸ்களை உயிர் என்று கொண்டால், வைரஸ் போல ஏராளமான வைரஸ்கள் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி பல்வேறுவிதமான கட்டுமானங்களில் தோன்றின என்றுதான் எடுத்துகொள்ளவேண்டும். ஒரே ஒரு ஆதி உயிர் தோன்றியது என்பது அறிவியற்பூர்வமானது அல்ல.

கையேடு said...

நன்றிங்க திரு.ராஜநடராஜன்.

கையேடு said...

திரு எழில் அவர்களுக்கு,

//அதிலிருந்து ஒரே ஒரு உயிர் தோன்றியது என்று யாரும் இப்போது கூறுவதில்லை. //

இந்த "யாரும்" யாரைக் குறிக்கிறது?
இன்றைக்கும் அறிவியலாளர்கள் சிலர் இப்படித்தான் குறிப்பிடுகிறார்கள். அதனை மறுப்பதற்கான சான்றுகளை விளக்கினால் அனைவருக்கும் பயனுள்ளதாகயிருக்கும்.

//உயிர் என்பதற்கும் உயிரற்றது என்பதற்குமான இடைவெளி காணமுடியாதது.//

நிச்சயமாக.. எல்லா உயிரும் உயிரற்ற அணுக்களால்தானே கட்டப்பட்டுள்ளது. ஆனால், உயிர் என்றால் என்ன என்பதற்கு அறிவியல் சில விதிமுறைகளை வைத்திருக்கிறது.

// பெரும் மூலக்கூறுகளாக வைரஸ்களை பார்க்கலாம்.//

இல்லங்க இது தவறு. வைரஸ்களை வெறும் மூலக்கூறுகளாகப் பார்க்க முடியாது.

//ஆகவே வைரஸ்களை உயிர் என்று கொண்டால், வைரஸ் போல ஏராளமான வைரஸ்கள் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி பல்வேறுவிதமான கட்டுமானங்களில் தோன்றின என்றுதான் எடுத்துகொள்ளவேண்டும்.//

ஏன்? அப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.

//ஒரே ஒரு ஆதி உயிர் தோன்றியது என்பது அறிவியற்பூர்வமானது அல்ல.//

ஏன் இது அறிவியற்பூவமானதாக உங்களுக்குத் தோன்றவில்லை?

பல கேள்விகளை உங்களை நோக்கி வைப்பதற்குக் காரணம் உங்களுடைய பின்னூட்ட பதிலிரைக்குப் பின்னிருக்கும் புரிதலை அறிந்து கொள்வதற்கு மட்டுமே. வெறும் தர்க்கத்தை வளர்ப்பதற்காக அல்ல.
நன்றி.

Anonymous said...

//தனிநபர்கள் குறித்த உங்களது மதிப்பீடு என்னளவில் தேவையற்றதும் கூட//

வெகுஜன அரசியல், இலக்கியம், ஆன்மிகம் போன்ற அகவயத் துறைகளில் யார் வேண்டுமானாலும் கருத்தை உதிர்த்துச்செல்லலாம். அதை அவரவர் கருத்து என்று ஒதுங்கிப்போய்விடலாம். அதனால் அந்த அறிவுத் துறைகளுக்கு பெருமளவு கெடுதலும் இல்லை. ஆனால் தங்கள் அறிவின் எல்லைக்குள் நின்றுகொண்டு பொதுபுத்தி சார்ந்த தர்க்க முறையை மட்டுமே நம்பி அறிவியல் போன்ற கறாரான துறைகளின் உண்மைகளையும் விளக்கக் கூடிய விற்பன்னர்களாக பாவனை செய்வதை அறிவுசூழலின் ஆரோக்கியம் கருதி எதிர்க்கப்பட வேண்டும். அந்தப் பதிவிலும், இப்பதிவிலும் நடக்கும் வாத-எதிர் வாதங்கள் பாதிக்கு மேல் அந்த வகையில் தான் இருக்கிறது. ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள அறிவியல் உண்மைகளை கற்றறிந்து கொள்ளும் சிரத்தை இல்லாமலேயே புத்திசாலித்தனமாக வாதம் செய்வதே அறிதலுக்கான வழி என்ற மனநிலையை வேறெப்படி எதிர்கொள்வது? அறிந்துகொள்ள முயற்சிப்பது வேறு. அறிந்தது போல் பாவனை செய்வது வேறு. இந்த வகையில் "பரிணாம உயிரியலை நான் ஆய்ந்து அறிந்தவனல்ல, வெறும் வாசிப்பும் மொழிபெயர்ப்பும் மட்டுமே. எனது புரிதலில் தவறிருந்தால் சு(கு)ட்டலாம்" என்று வெளிப்படையாக அறிவித்துள்ள உங்கள் நேர்மையையும், அறிந்துகொண்டு அதை பிறருக்கு விளக்கும் உங்கள் சிரத்தையையும் வெகுவாக பாராட்டுகிறேன். அதேபோல வருண், தருமி ஆகியவர்களும் செறிவான கருத்துக்களை கூறியுள்ளதையும் வரவேற்கிறேன்.

எழில் said...

http://en.wikipedia.org/wiki/Origin_of_life

புரோட்டோசெல்ஸ் என்பதுதான் குறிப்பிடப்படும். புரோட்டோசெல் என்று குறிப்பிடப்படாது.

மேலும் அபயோஜெனஸிஸ் என்று கூறப்படும் இதில் பல்வேறு தேற்றங்கள் தற்போது உள்ளன.

இவற்றில் ஒன்றே ஒன்றுதான் உயிரின் மூலம் என்றும் கூறவியலாது. ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் மூலம் உயிர்களின் ஆரம்பம் இருக்கலாம்.

ஜோசப் பால்ராஜ் said...

வணக்கம் பேராசியர் அய்யா,
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க, ஆனா எனக்கு தான் அதையெல்லாம் புரிஞ்சுக்குற அளவுக்கு எனக்கு தான் அறிவு இல்லைன்னாலும் ( அது உங்களுக்கே தெரிஞ்சுருக்கும்) கொஞ்சம் புரியுது. அதுதான் உங்க எழுத்தோட வெற்றி.

இதுமாதிரியெல்லாம் எழுத உங்கள மாதிரி ஆட்களால் தான் முடியும். தொடர்ந்து இது போல எழுங்க Professor.

கையேடு said...

விளக்கத்திற்கு நன்றிங்க அனானி.

ஜமாலன் said...

எளிமையாகவும், செறிவாகவும் விளக்கப்ட்டுள்ள பதிவு. அருமை.

கையேடு said...

திரு எழில் அவர்களுக்கு,

நீங்கள் அளித்துள்ள சுட்டியை ஓரளவிற்குப் புரிந்து கொண்டு பின் எனது புரிதல்களை புரிந்து கொள்கிறேன்.

ஆனால் தற்போதைக்கு சிலவற்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.

அறிவியல் மற்றும் நுட்பமான விடயங்களுக்கு, விக்கிப்பீடியா நம்பகமான தளமாகவும், ஆதாராமகவும் ஏற்றுகொள்ள முடியாது என்பதைப் பல அறிவியல் நிறுவனங்கள் வெளிப்படையாக அறிவித்துவிட்டன.

இதனால் உங்களது சுட்டியை புறந்தள்ளுவதல்ல எனது நோக்கம்.(just a word of caution)

நீங்கள் அளித்துள்ள சுட்டியில் கூட ஒற்றை உயிரிலிருந்து வருவதற்கான ஆய்வுமுறைகளும் விளக்கங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

அப்படியிருக்கையில் நீங்கள் அதை அறிவியற்பூர்வமானதல்ல என்று உங்களது முந்தய பின்னூட்டத்தில் குறிப்பிட்டது ஏன் என்று எனக்குப் புரியவில்லை.

இனி உங்கள் சுட்டியை வாசித்து புரிந்து கொண்டு மீண்டும் வருகிறேன்.

கையேடு said...

வாங்க பால்,
உங்க நக்கல் மட்டும் இன்னும் குறையவேயில்லை.. :)

கையேடு said...

நன்றிங்க ஜமாலன்.

http://rajavani.blogspot.com/ said...

“இயற்கை மற்றும் இயற்கை நிகழ்வுகள் முன் நாம் சிறுத்துப் போவதுதாம் உண்மை.”

உண்மை தானே கையேடு..நல்லா இருக்கு

கையேடு said...

நன்றிங்க தவறு.

சதுக்க பூதம் said...

நல்ல பதிவு

கையேடு said...

//நல்ல பதிவு//

நன்றிங்க சதுக்க பூதம்.