மரணம் என்கின்ற வாழ்வியல் யதார்த்தத்தை எந்த நொடியிலும் நான் சந்திக்க நேருமாதலால், இக்கடிதத்தை உனக்காக இப்போதே எழுதிவைக்கிறேன். முதலில் என்னை மன்னித்துவிடு. சரி, நான் செய்த குற்றங்களும், துரோகங்களும் மன்னிக்க முடியாதவைதான், ஒப்புக்கொள்கிறேன்.
அதனால் தயவு செய்து என்னை மன்னித்துவிடாதே.
குற்றங்களும் துரோகங்களும் எண்ணிலடங்காதவை, நீ பிறந்தவுடனேயே உன்னைப் பால்வகைப்படுத்தி அடையாளப்படுத்தும் அவலத்தை வளரவிட்டமைக்கும், நீ கொஞ்சி விளையாடிய உன் மழலை மொழியல்லாத வேற்றுமொழியில் உனக்கு இவ்வுலகத்தை அறிமுகப்படுத்தும் பழக்கங்களைப் போற்றியமைக்காகவும், நான் உனக்காக வைத்திருக்கும் ஒரு கல்விமுறையை, தினமும் பள்ளிமுடிவின் மணியோசையில் பீரிட்டு எழும்பிய சந்தோசக்கூக்குரல் அதை எள்ளி நகையாடியதைப் புரிந்துகொள்ளாமைக்கும், குறிப்பிட்ட குடிலில் பிறந்தமைக்காக நீ இந்தப் பிரிவைச் சேர்த்தவன் என்றும், இந்தக் கடவுளைத்தான் நீ வணங்க வேண்டும் என்பவை போன்ற அடிப்படை மனித உரிமையைத் தட்டிப்பறிக்கின்ற அவலத்தை வளரவிட்டமைக்கும், நீ வளர்ந்தபின் உயிரியலின் அடிப்படைச் சாரமான காதலை வெளிப்படுத்துவதற்குக்கூட நீ ஒரு கள்வனைப்போல் பயந்து பதுங்கிச் செய்கின்ற ஒரு ஈனத்தை வளரவிட்டமைக்கும், பின்னர் உயர்கல்வி என்கின்ற போர்வையில் முகம்தெரியாத முதலாளியின் தேவைக்கேற்ப உன்னைத் தயார்படுத்தும் அவலநிலையை வளர விட்டமைக்கும், உன் வாழ்க்கைத்துணையத் தேர்ந்தெடுப்பதைக்கூடக் கண்மூடிச் சடங்குகளால் வியாபாரமாக்கியதற்கும், போலியான தேசியவாதம், மற்றும் ஒடுக்குமுறைகள், என ஏராளமான அவலங்களைக் களையாமல் விட்டுச் செல்வதற்காகவும் அல்லது இந்தச் சூழலில் உன்னைத் தவிக்கவிடுவதற்காகவும் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன்.
மேற்கூறிய குற்றங்களுக்கெல்லாம் நீ ஒருவேளை என்னை மன்னிக்கலாம், ஆனால் மன்னிப்புக் கோருவதற்குக் கூட அருகதையற்ற ஒரு மாபெரும் குற்றம், இல்லை, ஒரு நம்பிக்கை துரோகம் இழைத்திருக்கிறேன். நீ வாழப்போகும் சூழலை ஒரு குப்பைத் தொட்டியாக்கி, நீ சுவாசிக்கப் போகும் காற்றைக் கரியாக்கி, குடிநீருக்காகக் கூட நீயொரு போராட்டம் நடத்த வேண்டிய அவலநிலையை விட்டுவைக்கிறேன். இத்துரோகத்திற்காக ஒரு இரக்கமற்ற தண்டனையைக் கொடுத்துவிடு நிச்சயம் மன்னித்துவிடாதே.
ஆனால், இக்கடிதத்தை நீ படிக்கும் போது இக்கடிதத்திற்கான அவசியமில்லாமலிருக்க வேண்டும் என்பது என்னுடைய ப்+ஏஏஏஏஏஏ.... ராசை. ஆனால் நீயும் இப்படி ஒரு கடிதம் எழுதிவிடக்கூடாது என்பது என்னுடைய கனவு.
ஒரு வேளை இக்கடிதத்துடன் நான் உன்னை நோக்கிப் பயணிக்கும்போது மரணித்திருந்தால், யாராவது இக்கடிதத்தை இன்று புதிதாய்ப் பிறந்த ஒரு குழந்தையிடம் சேர்த்துவிடுங்களேன். தயவுசெய்து இதை அரசு மருத்துவமனையிலுள்ள தொட்டில் குழந்தையிடம் கொடுத்துவிடாதீர்கள். அது படிக்கும் முன் கிழித்துவிடும், "தண்டனை கொடுக்கும் முன் தப்பிவிட்டான் துரோகி" என்று.
இப்படிக்கு,
நிகழ்காலம்.