Showing posts with label உரையாடல். Show all posts
Showing posts with label உரையாடல். Show all posts

Friday, June 26, 2009

எப்போதும் வாழும் எசக்கி்கள் - உரையாடல் சிறுகதைப் போட்டிக்கு




கால்களை மாற்றிப் போட்டு "தப்பு"ல தனக்கு தெரிஞ்ச தாளத்தை வாசித்துக் கொண்டிருந்தான் பத்து வயசு மாரி. அவனுக்கெதிரே கண்களில் நீர்முட்ட அமர்ந்திருந்தார் குருட்டுத் தாத்தா.

குருடு என்றால் முழுவதும் குருடுயில்ல பார்வை சற்று மங்களாகத் தெரியும் அவ்வளவுதான், அதுவும் இப்பதான் ஒரு அஞ்சாறு வருசமா. தலை லேசாக ஆடிக்கொண்டிருந்தது, கொஞ்சம் எட்டியிருந்து பார்ப்பவருக்கு அவர் தாளத்துக்கு தலையாட்டுவது போல தெரியும், ஆனால், கிட்டத்துல வந்தாதான் தலை எப்போதுமே லேசான ஆட்டத்தோடு இருப்பது தெரியும். உடலெங்கும் வாழ்வின் வரிகளாக சுருக்கங்கள், எப்படியும் தொண்ணூறு வயசிருக்கும். பார்வைதான் மங்கலே தவிர மற்றபடி நடை, உடையுடன் தான் இருப்பார்.

திடிரென மாரி, பறையை அடித்துக் கொண்டே எழுந்து லேசாக ஆட ஆரம்பித்தான். கிழவனுக்கு உடனே எசக்கியின் நியாபகம் வர கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

"அப்படிப்போடுறா என் சிங்கக் குட்டி" என்று எசக்கி வாசிக்கும் போது அருகில் இருந்து பார்த்தது நினைவு வந்தது.

உறவுமுறையில் தாத்தா இல்லாவிட்டாலும் எதிர்க் குடிசையில் இருந்ததால, ரொம்பவும் நெருக்கமாகிவிட்டார் குருட்டுத் தாத்தா. ஊருக்குதான் அவர் குருட்டுத் தாத்தா, ஆனால் எசக்கிக்கு மட்டும் இவர் வாத்தித் தாத்தா. ஆம் பத்து வயசிருக்கும் போது குருட்டுத் தாத்தாவின் வாசிப்புக்கு ஆடத்துவங்கியவன் எசக்கி, அப்படியே அவருடைய சிஷ்யப்பிள்ளையாகிவிட்டான். அவரது முதல் அபிமான மாணவன், இரசிகன் எல்லாம் எசக்கிதான். அன்னிலிருந்து தாத்தாவோட தப்பை சூடேத்தறதுக்கு வைக்கோலை கொளுத்தறதுலேருந்து, ஊர்ல செத்துப் போன மாட்டுலேருந்து தோல் உரிக்கிறவரைக்கும் எல்லாத்துக்கும் எசக்கிதான் துணை தாத்தாவுக்கு.

குருட்டுத்தாத்தாவுக்கு பறை வாசிப்பதில் கொஞ்சம் அதிகப்படியான திறமையும் பெருமையும் உண்டு. அதுவே அவரோட தனிமைக்கும் காரணமாயிருச்சு. வெறும் மூணு தெருவுள்ள அந்த கிராமத்துல ரெண்டு தெரு தள்ளியிருந்த காலனிலதான் இருந்தார்கள் தாத்தாவும் எசக்கியும்.

வாலிப வயசுல உச்சிப் பொழுதுகூட தெக்கெயிருக்குற சுடுகாட்டுலதான் தாத்தா அதிகமா வாசிச்சுக்கிட்டேயிருப்பார். அவரு அங்க வாசிக்கிறார்னா அன்னிக்கு அவரோட மரியாதைக்கு சோதனை வந்து, தோத்துப்போன கோபத்துல இருக்கார்னு அர்த்தம். இவர் என்னதான் திணவோட காரியஞ்செஞ்சாலும், அதிக நேரம் சுடுகாட்டுலதான் செலவழிக்க வேண்டியிருந்தது. அவரோட கோபமும் தோல்வியும் காலப்போக்கில அவர தனியாளாவே விட்டிருச்சு .

எசக்கிக்குத் தன்னோட கலைய மட்டும் சொல்லிக் கொடுக்காம, அதுமேல அவருக்கிருந்த மரியாதையையும், பெருமிதத்தையும் சேத்து சொல்லிக் கொடுத்துட்டார். அவர் சொல்லி கொடுத்த மரியாதைதான் எசக்கிக்கும் வாழ்க்கையை போராட்டமாக்கிருச்சு. குருட்டுத் தாத்தா அளவுக்கு அவனால செயிச்சு வரமுடியலன்னுதான் சொல்லனும். தினம் அவனோட கலைக்கும், மரியாதைக்கும் ஏதாவது சோதனை வச்சிகிட்டே இருக்கும் அந்த கிராமம்.பொதுவா கிராமத்துக்கும் வடக்கெயிருக்கும் குடியானச் சுடுகாடும் தெக்கெயிருக்கும் காலனிகாரங்களுக்கான சுடுகாடும்தான் எசக்கி அதிகமா தன்னோட வாசிப்பைக் காட்டுற எடம்.

தாத்தா அளவுக்கு நெஞ்சுரம் இல்லாததாலோ, அல்லது குடும்பச்சுமையோ தெரியாது, எசக்கிக்கும் சந்தோசம் துக்கம்னு இந்த ரெண்டுக்குமிடையே தான் தேர்வு செய்ய முடிஞ்சிது.

என்னதான் உரிமையா எல்லா வேலையும் செஞ்சு குடுத்தாலும், எவ்ளோ பாசம் வச்சிருந்தாலும், தன்னோட ஆண்டையோட பொண்ணு கல்யாணத்துல "நீ என்னடா மொதோ பந்திக்கே வந்துட்ட" ன்ற ஒரு கேள்வி போதும், இவன் சுருங்கிப் போயி அன்னிக்கு ராத்திரி பூராவும் தெக்கேதான் கெடப்பான். வருத்தம் தீர்ற வரைக்கும் வாசிச்சுத் தீத்துடுவான்.

என்னதான் இவனோட திறமைக்காக வேலை குடுத்தாலும், வேலை முடிஞ்சவுடனே கூலிய கொறச்சு குடுக்கறுதுக்காகவே
" **** வேலையே அரை வேலதான்னு" காலங்காலமா சொல்லிகிட்டே வர்ற ஒரு வார்த்தை போதும் அன்னிக்கு இராத்திரி முழுக்க தெக்கதான் இருப்பான்.

இப்படி பெரும்பாலும், தெக்கயேதான் வாசிச்சுகிட்டிருப்பான். அப்பொவெல்லாம் மாரிதான் அடுத்த நாள் போயி எழுப்பிகிட்டு வருவான். பெரும்பாலும் தாத்தா கோவத்துல வாசிச்ச இடத்துல
எசக்கியால சோகமாதான் வாசிக்க முடிஞ்சுது. தாத்தாவுக்கும் இது தெரியும், அதனால தெக்கெயிருந்து சத்தம் கேட்டாலே குடிசைல இருந்த படியே மனசு கணத்து போயி உக்காந்துருப்பார்.

ரொம்ப விவரம் தெரியாத வயசுல சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் சந்தோசப்பட்டு வடக்க இருக்க குடியானச் சுடுகாட்டுக்குப் பக்கத்துல இருக்கற அரச மரத்துல உக்காந்து வாசிச்சுகிட்டிருப்பான், தாத்தாவும் அவன் சந்தோசத்துல வாசிச்சா வீட்டுலயே ஒரு புன்னகையோட உக்காந்து ரசிச்சிகிட்டிருப்பாரு. ஆனா விவரம் தெரிஞ்சதுக்கப்புறம் அவன் வடக்க வாசிச்சு வருசக்கணக்காச்சு.

ரொம்ப வருசம் கழிச்சு முந்தாநேத்து சாயங்காலம் வடக்கேருந்து எசக்கி வாசிச்ச சத்தம் கேட்டவுடனேயே தாத்தாவுக்கு இங்க குடிசைல இருப்பு கொள்ளல. எப்ப அவன் வீடு வந்து சேருவான் விவரம் கேக்கலாம்னு காத்துகிட்டிருந்தார். ஆனா அன்னிக்குன்னு அவன் சீக்கிரம் வர்ற வழியக் காணும்.

அடுத்த நாள் எசக்கியோட குடிசைல ஒரே கலேபரம், அழுகை, கூச்சல். ஒரு வழியா தட்டுத்தடுமாறி வெளியே வந்த தாத்தா ஒரு கணம் அதிர்ந்து போயிட்டாரு. குடியான தெருக் கோடில இருந்த வீட்டுப் பொண்ணும் எசக்கியும் முந்தாநேத்து ராத்திரி டவுனுக்குப் போயி புது வாழ்க்கை தொடங்கலாம்னு இருந்தாங்கலாம். அப்படி போன எசக்கிய அந்தப் பொண்ணோட சொந்தங்கள் எல்லாம் துண்டு துண்டா திருப்பி எடுத்து வந்து காலனில போட்டுட்டானுங்கன்னு விபரம் சொன்னான், பக்கத்து வீட்டுப் பையன்.

"சரி வா தாத்தா வீட்டுக்கு போகலாம்"னு மாரிசொன்னதும் கிளம்பினார் தாத்தா. மாமன் எதுக்காக செத்துப்போனான்னு கூட விபரம் புரியாமல், கைல இருந்த எசக்கியோட "தப்புல" தட்டிகிட்டே தாத்தாவோட நடந்து கொண்டிருந்தான் மாரி. எரிஞ்சிகிட்டிருந்த எசக்கியின் உடலை திரும்பி பாத்துக்கிட்டே, இனி எல்லா குடியானச் சாவுக்கும் சந்தோசமா வாசிக்கச் சொல்லிக்குடுக்கனும் மாரிக்குன்னு வெம்மிகிட்டே நடந்தார் தாத்தா.






Sunday, August 10, 2008

ஆன்மீகம் - கிரகிப்பு - I


இதுபோன்ற கட்டுரைகளை எழுதத்தான் வேண்டுமா, என்ற அயற்சியினூடே பலகாலமாக இதுபோன்ற பேசுபொருட்களிலிருந்து விலகியேயிருந்தாலும், எனக்குள்ளிருக்கும் சாத்தான் “இருள் பரவட்டும்” என்ற நோக்கில் எனது கணினியையும் எனது நேரத்தையும் எடுத்துக்கொண்டது. அதனால், போற்றுதலும் தூற்றுதலும் போகட்டும் இறைவனை வாழவைக்கும் சாத்தானுக்கே.[1]


இக்கட்டுரை அறிவுரையுமல்ல, அறவுரையுமல்ல, ஒரு உரையாடல்.

கடவுள் - இந்த ஒற்றை வார்த்தை செய்யும் ஜாலம் உண்மையில் வியக்க வைக்கிறது. இவ்வார்த்தை வெறும் வார்த்தையல்ல, மொழியின் உணர்வு ரீதியிலான ஆளுமையை சர்வ வல்லமையுடனும், வீச்சுடனும் தெரியப்படுத்தும் ஒரு வார்த்தை. இவ்வார்த்தையும், அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளும் (அல்லது அவ்வார்த்தையின் போர்வைக்குள்) மட்டுமே தற்போதைக்கு, உலகின் பெரும்பாலான வன்முறைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் காரணமென்று கூறலாம்.

கடவுள் - சர்வவல்லமை படைத்த படைப்பாளி, ஆதியிலிருந்து அந்தம் வரை அனைத்துப் பருப்பொருட்களும் எவ்வாறிருக்கும் அல்லது இருக்கவேண்டும் என்ற வரையறையை வகுத்தவன்(ள்). ஆனால், யாரும் கண்டறியமுடியா உருவமுமில்லா, வரையறையுமில்லாத ஒன்றாக குவார்க்குகளுக்கும் (quarks - அணுவின் உட்கருவுக்குள்ளிருக்கும் துகள்) நெபுலாக்களுக்குமிடையே (nebulas - பேரண்டத்தில் இருக்கும் அடர்வான ஹைட்ரஜனைப் பெரிதும் உள்ளடக்கிய வாயு) கூடுவிட்டு கூடு பாய்ந்து கொண்டிருக்கும் அச்சர்வவல்லமை. உருவமில்லாதது என்றவுடனேயே, கோயில்களுக்குள் இருக்கும் உருவங்களெல்லாம் வெறும் கலைவடிவங்களாகவும், அக்கற்சிலைகளைவிட அதைச் செதுக்கிய சிற்பி அதிக மதிப்பையும் பெற்றுவிடுகிறான் என்பதுதான் உண்மை. அப்படியானால் உருவம் கொடுத்த படைப்பாளி சிறந்தவனாகிவிடுகிறான். அது அவனது உணர்தலுக்கான உருவமெனில், அதே கடவுளரை நிர்வாணமாக உணரும் ஒரு படைப்பாளி நாடு கடத்தப்படவேண்டியவனாகவோ அல்லது தேசத்துரோகியாகவோ சித்தரிக்கவேண்டிய அவசியமில்லையென்றாகிறது, அல்லது, அப்படிச் சித்தரிக்கப்படவேண்டிய நிர்பந்தத்தின் பின்னிருக்கும் பக்தி கேள்விக்குறியதாகிறது. (இப்புள்ளிக்கு மீண்டும் வருவோம்)

குவார்க்குளையும், நெபுலாக்களையும், கடவுள் படைத்தானா? என்ற விடை தெரியாத கேள்வி ஒரு புறமிருந்தாலும், உயிரையும் உயிருள்ளவற்றையும் படைத்தது கடவுள் அல்ல என்பது ஆய்வகங்களிலேயே நிரூபிக்கப்பட்டுவிட்டது[2]. அப்படியானால், உயிருள்ளவற்றுக்கு கடவுள் தேவையில்லை, ஏனெனில் அவற்றைக் கடவுள் படைக்கவில்லை. உயிரற்ற குவார்க்குக்கும், நெபுலாவுக்கும் ஒருவேளை நன்றிக்கடனாக அது (கடவுள் என்ற கருத்தாக்கம்) தேவைப்படலாம்.

உருவமுள்ள மற்றும் ஓரிடத்தில் அமர்ந்து படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முப்பணிகளைச் செய்யும் கடவுளே அவசியமற்றதாகிவிட்டது எனும்போது அதனைச் சுமந்துகொண்டிருக்கும் மதங்களும் மத அடையாளங்களும் குப்பையில் வீசப்பட வேண்டியவையாகிவிடுகிறது. அதனால், முப்பணிகளைச் செய்யும், உருவமுள்ள கடவுள் மற்றும் மதம் ஆகிய இரண்டுவார்த்தைகளையும் அதனுடன் சேர்ந்த விவாதங்களையும் இப்போதே புறந்தள்ளிவிடலாம். அவை அயற்சி தருபவை. ஆன்மீகக் கருத்துக்களையும், சிந்தனைகளையும் குறித்த உரையாடலாகத் தொடரலாம்.

“ஆன்மீகம்”, ஒரு அதிர்வை நம்மைச் சுற்றி உருவாக்ககூடிய வார்த்தை, நமக்கும் இப்பிரபஞ்சத்திற்குமிடையே உள்ள தொடர்பை அற்ப மானிடருக்குப் புரிய வைக்கும், கடவுளுக்கிணையான மற்றொரு வார்த்தை. இப்படியான கருத்துருவாக்கத்துக்குப் பின்னிருக்கும் கலாச்சாரம், சமூகச்சூழல், அரசியல், அறிவியல், மாயப் பிம்பங்கள், உணர்வுகள் என இது குறித்தான உரையாடலைத் தொடர்வோம்.

“ஆன்மீகம்” - முழுமையை நோக்கிய தேடல், ஒருமுகப்பட்ட சிந்தனை, அல்லது வெறுமையை நோக்கிய பயணம், ஆன்மாவின் உன்னதத் தேடல், ஒரு வகையான உயரிய உணர்வு, பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் இயக்கத்தையும் நடத்தும் ஒற்றைச் சக்தி மூலத்தை உணர்தல், நமக்கும் அண்டவெளிக்குமிடையே ஒரு தொடர்பை உணரச்செய்பவை, மனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்தி, செழுமைப்படுத்தும், முழுமைப்படுத்தும் ஒரு உணர்வு ... என அடுக்கிகொண்டே போகலாம். இவ்வார்த்தையின் வாழ்வாதாரமே அது தெளிவான வரையறையற்றிருப்பதுதான் அல்லது வரையறுக்கமுடியாதது என்ற வரையறையைச் சுமந்து கொண்டிருக்கும் ஒரு முரண்.

மதம் சாராத ஆன்மீகம் என்பது, மனிதனின் சூழல் மற்றும் கிரகிப்புத் தன்மை சார்ந்த, பொதுஅறிவின் சுயஆர்வத்தினால் ஏற்பட்ட கருத்தாக்கத்தின் பரிணாம வெளிப்பாடு என்ற திசையில் உரையாடல் தொடரும்.



Saturday, February 2, 2008

இறப்பு - உரையாடல் - I

இறப்பு - கண்முன்னே நிகழும் ஒரு வாழ்வியல் யதார்த்தம், என்பதையும் தாண்டி, தாமும் ஒரு நாள் இல்லாமல் போயிவிடுவோம் என்ற சிந்தனை ஒரு விநாடியேனும் நம்மை உலுக்கத்தான் செய்கிறது, அல்லது ஒரு வெறுமையை ஒரு நொடிப்பொழுதாவது நம்மைச் சுற்றி படரச் செய்துவிட்டுத்தான அகல்கிறது. இறப்பு குறித்துப் பேசாத தத்துவங்களும் தத்துவ ஞானிகளும் மிகவும் அரிது. இறப்பு குறித்தான அறிவியல் பார்வைகள் என்ன என்பதை இப்பதிவிலோ அல்லது தொடர்பதிவாகவோ பகிர்கிறேன்.

இறப்பு குறித்தான ஒரு அறிவியல் கருத்து முரணை முன்வைத்துவிட்டுப், பின்னர் சில தேடுதல்களுக்கான விடைகளைப் பற்றிப் பார்ப்போம். தான் ஒரு நாள் இறந்துவிடுவோம் என்ற அறிவு மனிதவிலங்கிற்கு மட்டுமே உண்டு, என்று ஒரு சில அறிவியலாளர்கள் கூறுவதுண்டு. மனிதனின், தான் உயர்ந்தவன், என்ற அகம்பாவ எண்ணத்தினால் விளைந்த உடனடி முடிவு இது என்றும், அக்கூற்றிற்கான போதிய ஆய்வு அடிப்படையிலான ஆதாரங்கள் இல்லை என்றும் ஒரு சிலர் கூறுவதுண்டு. உண்மை எப்படியிருந்தாலும் இறப்பு குறித்தான சில ஆய்வுகளையும் சில அடிப்படைக்கேள்விகளுக்கான தேடல்களையும் பார்க்கலாம்.

முதலில் இறப்பு என்றால் என்ன? ஒருவர் ஏன் இறக்க வேண்டும்? ஒருவரின் உடலின் பல பாகங்கள் செயலிழந்து போனாலும், கோமாநிலையிலிருந்தாலும் அவர் இறக்கவில்லை என்றால் அதன் பொருள் என்ன? விபத்தில் எப்பகுதிகளில் எவ்வளவு சதவிகிதம் பாதிக்கப்பட்டால் உடனடி இறப்பும் எவ்வளவு சதவிகிதம் பாதிக்கப்பட்டால் உடலின் உயிர்ப்பு மீள்தலும் சாத்தியம் என்பன போன்ற பல அடிப்படைக்கேள்விகள் நாம் அனைவருக்கும் என்றாவது ஒரு முறை தோன்றி மறையும். இயற்கை மரணம் என்றால் என்ன? பிறக்கின்ற எல்லா உயிரினமும் இறக்க வேண்டும் என்ற தத்துவக்கூற்றுகள் எவ்வளவு உண்மையானவை? எல்லா உயிரினமும் இறந்துதான் ஆகவேண்டுமென்றால் இறப்பு என்பது பிறப்பின்போது பொறிக்கப்பட்ட ஒன்றா? என்பது போன்ற தொடர்க் கேள்விகள் நம்மை அலைக்கழித்து வீசியடிக்கும் சமயங்கள் உண்டு.

உயிருள்ள அல்லது உயிர்ப்புள்ள அனைத்தும் உயிரற்ற அணுக்களால் ஆனவை என்பது அனைவரும் அறிந்ததே. இப்படி உயிரற்ற அணுக்களின் வேதியல் வினைகளிலிருந்து உயிர் தோன்றியது என்பது ஒரு தனி சமுத்திரமளவிற்கான ஆராய்ச்சிகளின் கருப்பொருள். இப்போதைக்கு அச்சமுத்திரத்தின் கரையிலிருந்தே அதை இரசிப்போம். உயிர் தோற்றத்தில் ஒரு செல் உயிரிகள் தொடங்கிப் பல செல் உயிரிகள் வரை பரிணமித்தது மற்றுமொரு சமுத்திரம். இவை இரண்டுக்குள்ளும் மூழ்கி முத்தெடுக்க இருவேறு நெடுந்தொடர்ப் பதிவுகள் தேவை. ஆதலால் ஒரு உயிரின் அல்லது ஒரு உயிரினத்தின் இறப்பு என்ற ஒற்றைக் கேள்வியை முன்னிறுத்தி, சில அடிப்படை கருத்துக்களை ஏற்று அதனடிப்படையில் தொடரலாம். எல்லா பொருட்களும் அதன் அடிப்படைக் கட்டுமானமான மூலக்கூறுகள், மற்றும் அணுக்களால் ஆனது போல், எல்லா உயிரினத்திற்கும் அடிப்படைக்கட்டுமானமாக (fundamental building block) இருப்பவை செல்கள்.

மனித உடலில் மட்டும் ஏறத்தாழ 10^14 (10 ன் அடுக்கு 14) செல்கள் இருப்பதாகவும், அவற்றில் பல வகையான செல்கள் இருப்பதாகவும் (உதாரணமாக, மூளை, நரம்பு, தோல், நோய் எதிர்ப்புச் செல்கள்...) கூறுகின்றனர். ஒரு மனிதனின் இறப்பு என்பதின் மூலத்தைத் ஆராய்ந்தால், அது ஒருவரது உடலிலுள்ள செல்களின் இறப்பின் விளைவே என்பது புலப்படும். ஒரு செல்லின் இறப்பு என்றால் என்ன? ஒரு செல் எப்போது இறக்கும்? எந்த வகையான செல்கள் எவ்வளவு இறந்தால் ஒரு மனிதன் முழுமையாக இறந்தவனாகிறான்? என்பவை இயற்கையாகத் தோன்றும் கேள்விகள்.


செல்களின் இறப்பை சில வகைகளாகப் பிரிக்கலாம். அதில் விபத்து அல்லது ஒரு திடீர் நிகழ்வினடிப்படையில் நிகழும் இறப்பு நெக்ரோசிஸ் (necrosis) என்றழைக்கபடுகிறது. அதாவது, திடீரென தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள நிர்பந்திக்கப்படும் வகை. உதாரணமாக, தற்கொலை முயற்சிகளின் போதும், மாரடைப்புகளின் போதும், உடலில் உள்ள பலசெல்கள் இறப்பதற்கு நிர்பந்திக்கப்படுகின்றன. இவ்வகைச் செல் இறப்பு என்பது மிகவும் கொடூரமான அல்லது ஒரு சீரற்ற நிகழ்வு(disordered or chaotic ) என்று கொள்ளலாம். இவ்வகை இறப்பில், வலியின் தாக்கத்தைப் புற உடலின் இயக்கத்திலும் காணயியலும்.

மற்றுமொரு வகையான இறப்பு என்பது பகுக்கப்பட்ட ஒரு நிகழ்வு (programmed cell death). இவ்வகையான செல் இறப்பு மிகவும் அமைதியான ஒரு நிகழ்வாகவே இருக்கும். இவ்வகையான இறப்பிற்கு உதாரணமாக ஒரு குழந்தைக் கருவறையில் உள்ள போது அதன் கைகள் முதலில் ஒரு துடுப்பு போன்ற அமைப்பையே பெற்றிருக்கும் பின்னர் தொடர் செல்லிறப்புகளினால் கைகளில் விரல்கள் தோன்ற ஆரம்பித்துவிடும். இறப்பதற்காகப் பிறக்கிறோம் என்பதன்றி இறந்ததனால் பிறக்கிறோம் என்பதுவும் உண்மையே. இவ்வகை இறப்பு என்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்று என்றே கூறலாம். அச்செல்லுக்கு எப்படித் தெரிந்தது தாம் அப்போது இறக்க வேண்டுமென்பது? அதற்கான கட்டளைகள் எங்கிருந்து வருகின்றன?, அப்படி இறப்பதற்கான கட்டளை வந்தவுடன் அந்தச் செல் எப்படி இறக்கும் அல்லது அதன் வாழ்க்கையை எப்படி முடித்துக் கொள்ளும்? என இதிலும் பல தொடர் கேள்விகள் எழும்.
இப்படிச் செல் இறப்பு மற்றும் இறப்பு என்னும் நிகழ்வு செல்களுக்குள் நுழைந்தது எப்படி? இறப்பு என்பது பரிணாமத்தில் விளைந்த ஒன்றா? எனப் பல கேள்விகளுக்கான விடைகளை இனி இறப்பு என்றத் தொடர் பதிவுகளில் இணைந்து தேடுவோம்,/உரையாடுவோம்.
கூடுமானவரை வாரத்திற்கு ஒரு பகுதியில் உரையாடுவதற்கு முயற்சிக்கிறேன்.
இக்கட்டுரையில் (வரவிருக்கும் தொடர்களிலும்) பேசப்பட்டிருக்கும் பெரும்பாலான கருத்துக்கள் "SEX & THE ORIGINS OF Death" என்ற William R. CLARK ன் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை.