Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Monday, September 13, 2010

பயண அனுபவம்

சமீபத்திய கார்பயண அனுபவம் பற்றி சில குறிப்புகள். நீல நிறத்தில் இருப்பவை எனது சொற்கள். மற்றவை ஓட்டுனருடையது.

"குட் மார்னிங்க சார்.. "

போய்க்கொண்டிருக்கும்போது, "யாரோ பெரியவங்களாயிருப்பாங்கன்னு நினைச்சு வந்தேன் சார், இவ்ளோ சின்னப்பையனா இருப்பீங்கன்னு எதிர்பார்க்கலை சார்.. "

" :( "

" பாட்டு போடட்டுமா சார்"

"ம் போடுங்க.."

"காலையில பக்தி பாட்டுலதான் சார் ஆரம்பிப்பேன், நீங்க பக்திப் பாட்டெல்லாம் கேப்பீங்கள்ள சார்"

"ம் கேட்பேங்க"

" இந்த அம்மாவுக்கு (எல். ஆர். ஈஸ்வரி) என்னா குரல் சார், எங்க ஊர் அம்மன் திருவிழா எல்லாம் இந்த அம்மாவோட பாட்டோடதான் ஆரம்பிக்கும்"

"இந்தோ வருது பாருங்க சார், இந்த காலேஜ் பசங்க, அன்னிக்கு ..... இப்படியெல்லாம் கூத்தடிச்சாங்க சார். நீங்க படிக்கும்போது, இப்படியெல்லாம் ஜாலியா இருந்தீங்களா சார்.."

" நீங்க சொல்ற அளவுக்கு இல்லை"

"பாத்தாலே தெரியுது சார், ஒரு மணி நேரமா ஒன்னா வர்றோம், இப்போதான் சார் பேசறீங்க, நானேதான் பேசிகிட்டு வந்தேன். "

" :) "

போகிற வழியில் வந்த ஒவ்வொரு பொறியியல் கல்லூரி பற்றியும் அதன் மாணவர்கள் மற்றும் நிறுவனர்கள் பற்றியும் ஒவ்வொன்றைக் குறிப்பிட்டார்.

" பக்திப்பாட்டு போதும் சார், வேற பாட்டு போடுவோமா சார்"

"ம். போடுங்க"

"சினிமாவெல்லாம் பாப்பீங்களா சார், சினிமா பாட்டெல்லாம் கேப்பிங்களா"

".. ம்.. கேட்பேங்க"

"என்னதான் சொல்லுங்க சார், ஆஸ்கர் அப்படி இப்படின்னாலும், நம்ம இளைய ராஜா பாட்டு மாதிரி வராது சார். வந்த புதுசுல கேக்கறமாதிரி இருக்கும்சார், ஆனா போகப்போக போரடிக்கும் சார், ஆனா இளையராஜா பாட்டு அப்படி இல்லை சார், எப்போ வேணாலும் கேக்கலாம் சார்."

" :) " (மனதிற்குள் : நீங்க மட்டும் பதிவரா இருந்தா உங்களைக் கும்மிருப்பாங்க)

"நான் சின்னப் புள்ளையா இருந்தப்போ எங்க வீட்டுல ஒரு ரேடியோ இருக்கும் சார், அதுல தினமும் காலைல கொஞ்ச நேரம் பாட்டு போடுவாங்க, அதக் கேட்டுட்டுதான் சார் ஸ்கூலுக்கே போவோம். இப்போதான் டிவி வந்துடுச்சு எப்போ பாத்தாலும் பாட்டு போடுறாங்க.."

"உங்களுக்கு இளையராஜா பாட்டு புடிக்குமா இல்ல ரகுமான் பாட்டு புடிக்குமா சார்"

" .... "

"ரெண்டு பேரும், நல்லாதான் சார் போடுறாங்க, ஆனாலும் நமக்கு ரொம்ப புடிச்சதுன்னு ஒன்னு இருக்கும்ல சார்"

" ..... "

" இளையராஜாவோட பாட்டுல ஒரு உயிர் இருக்கும் சார். அவரு எல்லாத்தையும் ஏற்கனவே போட்டுவச்சுட்டாரு சார், இப்போ இருக்கவங்க அவரு போட்டு வச்சதை அங்கங்க உருவி கலந்து அடிக்கிறாங்க சார் அவ்ளோதான்"

" :) "


" நீங்க என்ன வேலை பாக்குறீங்க?"

" .... "

" அப்படின்னா என்னா செய்வீங்க? எனக்கு கூட ஸைன்ஸல் ரொம்ப இண்டரஸ்ட் உண்டு சார்?

அது எப்படி வேலை செய்யுது, இது என்ன? இதை எப்படி சார் கண்டுபிடிச்சாங்க? என தொடர்ந்து கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார்.

" இந்த மனுசன் தனக்காக என்னவெல்லாம் கண்டு பிடுச்சு வச்சிருக்கான் சார், நினைச்சுப் பார்க்கவே ஆச்சர்யமா இருக்கு சார்"

" சார் உங்களுக்கு ஹிந்தி தெரியுமா சார்? எத்தனை மொழி சார் தெரியும்"

"ஹிந்தி தெரியாதுங்க.."

" நமக்கு தமிழும் கொஞ்சம் இங்கிலீசும் தான் வரும். அதான் நம்ம கலைஞர் ஹிந்தியெல்லாம் வேணாண்டா தமிழ மட்டும் படிடா போதும்னு சொல்லிட்டாரு"

" கோயம்பத்தூர் செம்மொழி மாநாடு டிவில பாத்தீங்களா சார்? எவ்ளவோ பேர் வெளிநாட்லேருந்தெல்லாம் வந்திருந்தாங்களாம் சார்"

அதெல்லாம்விட இந்த மொழின்றத யார் சார் கண்டுபிடிச்சாங்க? இது இப்படி எழுதினா இதுன்னு யாரு சொன்னாங்க? எப்படி உலகத்துல இத்தனை மொழியைக் கண்டுபிடிச்சாங்க?

எனக்கு தெரிந்தவரை எதையோ சொல்லி வச்சேன்.

" உங்களாள இன்னைக்கு ஒரு புது விசயம் தெரிஞ்சிகிட்டேன் சார், இதை நியாபகம் வச்சிருப்பேன், இரஞ்சித் சார் வந்தாரு அவருகிட்டேருந்து இதைத் தெரிஞ்சிகிட்டோம்னு"

"காபி சாப்பிடலாமா சார்.. "

" ம்.. சாப்பிடலாங்க.."

மொத்தமாக காரில் அவருடன் பயணம் செய்த அந்த ஐந்து மணி நேரத்தில், எவ்வளவோ பேசமுடிந்தது. அடிக்கடி " நான் ரொம்ப பேசி டிஸ்டர்ப் பண்றேனா சார் " னு கேட்டுக்கொண்டார். ஆனாலும், எல்லாவற்றைப் பற்றியும் ஏதோயொரு கருத்தை முன்வைத்தே ஆகவேண்டும் என்று நினைக்காமல், தனக்கு என்ன தெரியும், எது தனக்கு ஆர்வமூட்டும் என்பதை அறிந்து அந்த திசையிலேயே உரையாடலை இட்டுச் சென்றுகொண்டிருந்தார். இடையிடேயே காரின் டோர்லாக்குகளைக் கையால்வது பற்றியும், தற்போது வெளிவரும் பல மாதிரிகளின் நிறை குறைகள் என்னென்ன என்றும், தனது பணி நிமித்தமான அறிவையும் பகிர்ந்து கொண்டார்.

இந்த பயணத்தின் உரையாடல் அவருடைய போக்கிலேயும், மையக்கரு அவரிடமிருந்தே வருமாறும் கவனமாகப் பார்த்துக்கொண்டேன். இந்த சார் எல்லாம் வேணாம்னு சொன்னாலும், பின்னர் சாரோடு எனது பெயரைச் சேர்த்திக்கொண்டு இரஞ்சித் சார் என்று அழைக்க ஆரம்பித்தார். புகைப்படக் கருவி எதுவும் கையில் இல்லாததால் புகைப்படம் எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. எப்படியோ ஆர்வமூட்டும் ஒரு மனிதராகவும் நல்ல பயண அனுபவமும் தந்தார் என்பது மட்டும் உண்மை.








Thursday, March 4, 2010

இது "வேனில்" காலம்


நமது சக வலைப்பதிவர், நண்பர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருந்த போது, "பேறுகாலத் தனிமை" பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அதாவது மனைவி கருவுற்றிருக்கும் போது, தாய் வீட்டுக்கு அனுப்பிட்டு ஜாலியா இல்லாம அவளோடு இருந்து அவள் அனுபவிக்கும் வலிகளை தாமும் அனுபவிப்பது போன்றுபாவிப்பது என்று குறிப்பிட்டார். இது தமிழகத்தில் சில ஆதிச்சமூகங்களிலே முக்கியமானதொரு சடங்காக இருந்து வந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டார். உடனே (கையிலேயே வைத்திருப்பார்னு நினைக்கிறேன்) ஒரு புத்தகத்தை எடுத்து அதுல என்ன போட்ருக்குன்னு வாசிச்சு காமிச்சார்.

அவர் எப்பவுமே அப்படித்தாங்க, அவருடன் பேசினால், அன்றைக்கு கண்டிப்பாக காத்திரமாக ஏதாவது வாசிச்சோ எழுதியோ தீரணும், இல்லன்னா தூக்கம் வராது. நானும் அவரிடம் பேசும்போதெல்லாம், அதப் பண்றேன் இதப்பண்றேன்னு வாக்குறுதி குடுக்க வேண்டியது அப்புறம் காத்துல பறக்கவிடவேண்டியது, இப்படியே போகுது அவர்கிட்ட என்னோட பில்டப்புகளும்.

இப்போ எதுக்கு அதைப் பத்தி பேசினோம்னு தோணுதில்ல, ஆமாம், அப்படித்தான் கேட்டார் என்னப் பாத்து. என்ன பேறுகாலத் தனிமையை அனுபவிக்கிறீங்களான்னு?

அப்படின்னா என்னான்னே தெரியாதுன்னு சொன்னபோது மேலே சொன்னதை விளக்கினார்.

பேறுகாலத் தனிமையை அனுபவித்தேனான்னு தெரியாது, ஆனா, இந்தப் பத்துமாத உடற்கூறியல் வாசிப்பும் அவதானிப்பும், வாழ்க்கையையும் உடலையும் இன்னும் பக்குவமா பாக்க வச்சிடுச்சு. பக்கத்தில இருந்து பாத்ததுக்கே இப்படின்னா, உள்ள அனுபவிச்சவங்களுக்கு எப்படி இருக்கும்? அதனாலதான் பெண்கள் சில விசயங்களில் ரொம்ப பக்குவப்பட்டு இருக்காங்களோன்னு கூட தோணிச்சு.

ஆனாலும், வரும் ஆனா வராது ரேஞ்சுக்கு ஒரு 36 மணிநேரம் காத்திகிட்டிருந்தோம். அப்புறம் பெரிய மனசு பண்ணி தானாவே வெளில வந்துட்டாங்க.

ஆமாங்க, இப்படி ஒரே அழுகையோட வெளிய வந்தாங்க.



தலைய வெளில நீட்டின உடனே சர்ருன்னு எடுத்து இப்படி துக்கிப் பிடிச்சதுதான், சில விநாடிகள் எப்படி ரியாக்ட் பண்ணனும்னே தெரியலை, ஆனா கண் கலங்கிருச்சு, மூளை "off" ஆயிருந்துது. அப்புறம், வந்தவுடன் திறப்பு விழா செய்யுன்னு சொல்லி கத்திரிக்கோலை கைல குடுத்துட்டாங்க, டாக்டருங்க. அப்புறம் ஏதோ ரிப்பன் வெட்றது போல வெட்டி பிரிச்சேன், தாயையும் சேயையும். நான் நினைத்ததைவிட கொடி உறுதியா இருந்தது.. :)

அப்புறம் அன்னிலேருந்து தினம் இப்படித்தான் படத்துல இருக்குற மாதிரி ஒரே சவுண்டு உடுறாங்க.

அப்புறம் மெதுவா அடங்கி அப்பப்போ முழிக்கிறாங்க..



அப்பப்போ சிரிக்கிறாங்க தூக்கத்துலயே.




17 பிப்ரவரிலேருந்து எங்க வீட்டுல "வேனில்" காலம் தொடங்கியாச்சு.. ஆமாங்க அவங்க பேரு "வேனில்".

எப்படி ஃபீல் பண்றேன் என்றார்கள் பலரும்? இன்னும் "off" ஆன அந்த கணத்தையே அசை போட்டுகிட்டிருக்கேன்....

Tuesday, July 21, 2009

சத்யாவின் பட்டறை

நீங்கள் வாரயிறுதி நாட்களில் அண்ணா பல்கலைக்கழகம் அல்லது சென்னைப் பல்கழைக்கழகத்தின் (கிண்டி) வளாகங்களைக் கடந்திருக்கிறீர்களா, அப்படியென்றால் உணவு இடைவேளையின்போது வளாக உணவகங்களில் இவரை நிச்சயம் சந்தித்திருக்கலாம். இருபதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கிடையில் தன்னை மறந்து கைகளால் அபிநயம் பிடித்துக் காற்றில் படம் வரைந்து கொண்டிருக்கிறாரா ஒருவர் அப்படியானால் அவர் 'சத்யா'வாகயிருக்கலாம்.

ஆந்திர மாநிலம் குண்டூரில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றின் கம்பவுண்டரின் மகனாகப் பிறந்து தெலுங்கு வழியிலேயே பனிரெண்டாம் வகுப்புவரைக் கல்விகற்று, மைசூரின் கல்விக்கான மண்டலக் கல்லூரியில் முதுகலை இயற்பியல் படித்தவர் "சத்யா (எ) சத்யநாராயணன்". பின்னர் "GATE" எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் தேர்ச்சிபெற்று கல்பாக்கம் இந்திரா காந்தி அணுவாராய்ச்சி மையத்தில்(IGCAR) தனது முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டவர். பின்னர் அதே IGCAR'ல் விஞ்ஞானியாகவும் இணைந்தவர். "CHAOS"ல் தனது முனைவர் பட்டத்துக்கான கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டார். பின்னர் புரோட்டின்களின் அமைப்பு மற்றும் உயிரியல் மூலக்கூறுகளின் இயக்கம் என அவரது ஆராய்ச்சிகளும் விரிவடைந்தன, இன்றைக்கும் விரிவடைந்து கொண்டிருக்கிறது.

இதிலென்ன சிறப்பிருக்கிறது, இந்தியாவில் பலரும் இப்படித்தானே, கிராமத்தில் படித்து பின்னர், வாழ்க்கையில் முன்னேறியவர்கள்தானே என்று உங்களுக்குத் தோன்றக்கூடும். ஆனால், சத்யாவைப் பற்றி இன்னும் இருக்கிறது சொல்வதற்கு.

சென்னை மற்றும் வடதமிழ்நாட்டின் பல கிராமப் புற மாணவர்களுக்கு, இயற்பியல் ஆய்வு மேற்படிப்புக்கான தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கும், தேசிய உயர்கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களின் நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்காக (CSIR, NET, GATE, IISc, TIFR, IIT, ...) இன்றைக்கும் இலவசமாக பயிற்சியளிப்பவர்தான் சத்யா. சென்னைப் பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்திலுள்ள, அணுக்கரு இயற்பியல் துறையின் ஒரு வகுப்பறையில்தான் துவங்கியது சத்யாவின் பட்டறை. இவ்வகுப்புகள் துவங்கிய நாட்களில் ஞாயிற்றுக்கிழமை காலைவேளைகளில் மட்டும் நடந்து வந்தன. இலவச வகுப்பு என்பதால் அந்த ஆண்டுக்கான முதல் வகுப்பில் வகுப்பறை நிரம்பி வழியும், எப்படியும் சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் என 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பார்கள். ஆனால், அப்படியே தேய்ந்து ஆண்டு இறுதியில் சராசரியாக 20 மாணவர்கள் எஞ்சியிருப்பார்கள்.

தொலைவிலிருந்து வரும் மாணவர்களுக்காக, ஞாயிற்றுக்கிழமை மாலை வரை வகுப்புகளை நீட்டித்தார்.
அதில் ஒருவர் வேலூருக்கருகிலுள்ள போலூர் எனும் கிராமத்திலிருந்து அதிகாலை நான்கு மணிக்குக் கிளம்பி 9.30 மணிக்கு வகுப்புக்கு வந்து சேர்ந்து பின்னர் மாலை வகுப்பு முடிந்து பின்னர் நள்ளிரவு நேரத்திற்கு வீட்டிற்கு செல்பவரும் உண்டு. அவரது பயண உழைப்பை அறிந்து கொள்வதற்காக அவருடனேயே ஒருமுறை பயணம் செய்தும் பார்த்தார் சத்யா. அடுத்தடுத்த ஆண்டுகளில், வகுப்பின் இறுதிவரை தொடரும் மாணவர்கள் பெரும்பாலும் புறநகர் மற்றும் கிராமப் புற மாணவர்களாகவேயிருப்பதால், வாரத்தில் இரண்டு நாட்கள் என சனி மற்றும் ஞாயிறு என்று நீட்டித்தார், ஒரு சில மாணவர்களை ஒரு இரவுக்குத் தமது வீட்டிலேயே தங்கிக்கொள்ளவும் உதவிகள் செய்தார்.

இதே போல், நாகர்கோயில் அருகில் ஒரு கிராமத்திலிருந்து வந்த மாணவி முதுகலைப் படிப்பிற்கே போராடித்தான் சேர்ந்திருந்தார். சத்யாவின் வகுப்பிற்குப் பின்னர், இந்திரா காந்தி அணுஆராய்ச்சி மையத்தில் ஒரு விஞ்ஞானியாகச் சேருவதற்கு தேர்ச்சி பெற்றுப் பணியாற்றிவருவதோடல்லாமல், பின்னர் அவரது வாழ்க்கைத் துணையாகவும் இப்போது வகுப்பறைத் துணையாகவும் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

வருடத்தில் இரண்டு முறை நடக்கும் CSIR நுழைவுத் தேர்வுகளின் போது சில மாணவர்கள் அவரோடு அவரது வீட்டிலேயே திருவான்மியூரில் தங்கிவிடுவதும் உண்டு. தேர்வு முடியும் வரை அவர்களோடு சேர்ந்து நள்ளிரவு வரை கண்விழிப்பார் சத்யா. பொதுவாக கல்பாக்கத்தில் தனக்காக வழங்கப்பட்ட தனி வீடொன்று இருந்தாலும், தேர்வு சமயங்களில் மாணவர்களுக்காக தினமும் மாலை சென்னையிலிருக்கும் அவரது வீட்டிற்கு வந்துவிடுவார். தனது தாய், தங்கை என மூன்று பேர் மட்டுமே வாழக்கூடிய ஒரு சாதாராண ஓட்டுவீடுதான் சத்யாவினுடையது, ஆனாலும், மாணவர்களுக்காக ஒரு வாரம் அந்தக் குடும்பமே கண்விழிக்கும், உணவு சமைக்கும்.

முதலில், ஞாயிற்றுக்கிழமை காலைகளில் தொடங்கி, பின்னர், ஞாயிறு மற்றும் சனி பகல் வேலை முழுவதுமாக எனப் பரிணமித்து பத்தாண்டுகளைக் கடந்துவிட்டது சத்யாவின் பட்டறை. மேலும், முதலில், தனது வகுப்பறையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கிய சென்னைப் பல்கலைக்கழகம், பின்னர், இவ்வகுப்பின் வெற்றியையும், மாணவர்களினது ஆர்வத்தையும் கண்டு, பல இருக்கை வசதிகளும், பலகை வசதிகளையும் உள்ளடக்கிய கருத்தரங்குகளுக்கான தனது சிறப்பு அறையைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதியளித்தது. இன்றைக்கும் இவ்வகுப்புகள் இலவசமாகவே சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

இயற்பியலுக்கான ஒவ்வொரு CSIR தேர்விலும், தமிழகத்தின் மொத்த தேர்ச்சி எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே இருந்தாலும், அதில் இருவர் கண்டிப்பாக சத்யாவினது வகுப்பு மாணவராயிருப்பர். CSIR தேர்வுகளில் எல்லா தேர்வுகளிலும் அவரது வகுப்பிலிருந்து குறைந்தது ஐந்திலிருந்து பத்து மாணவரைத் தேர்ச்சி பெறவைப்பதையே அவர் அவரது வகுப்பினது வெற்றிக்கான அளவுகோலாக வைத்திருந்தாலும், அவரது பட்டறையின் துவக்க காலங்களில் அவரிடம் பயின்றவர்களுள் சிலர் இன்றைக்கு,IIT, மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் போன்றவற்றில் துணைப் பேராசிரியாரகவும், பலர், இந்திய அரசின் ஆய்வுக்கூடங்களில் விஞ்ஞானிகளாகவும், பல தேசிய ஆய்வுக்கூடங்களில் ஆய்வு மாணவர்களாகவும் பணி புரிகின்றனர்.

இன்னும் பத்தாண்டுகளில் தமிழகத்திலிருந்து இந்தியாவின் பல ஆய்வு நிறுவனங்களிலும் ஆராய்ச்சிக் கூடங்களிலும் இணையும் பலர் சத்யாவின் பட்டறையிலிருந்து வந்தவராகயிருப்பர் என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும்

மாணவருக்கும், ஆசிரியருக்குமான இடைவெளி கரைந்து நண்பர்கள் குழுவொன்று அறிவியல் விவாதிப்பது போன்ற சூழலை வகுப்பறையில் கொண்டுவருவார். இதுவே அவரின் பலம் அல்லது அந்த வகுப்பறையின் பலம். இவரது மாணவர்கள் பெரும்பாலும், முதுகலை இயற்பியல் படிப்பவர்களே. இவ்விடுகையப் படித்து உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரைக்கலாம்.

சத்யா என்று உரிமையோடும் நட்போடும் அழைத்தாலும், அவர் இப்போது ஒரு மத்திய பல்கலைக்கழத்தில் மூத்த விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். ஆம் மாணவர்களுடன் நெருங்கிப் பழகுவதற்காகவே கல்பாக்கத்தில் பணியை விட்டுவிட்டு பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.


புகைப்படம்: மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் சத்யா.
(புகைப்படம் outlook அங்கில இதழில் திரு ஆனந்த் அவர்களால் வகுப்பரையிலேயே நேர்முகம் காணப்பட்டு வெளிவந்த கட்டுரையிலிருந்து எடுக்கப் பட்டது.)
அவரது வகுப்பு குறித்து டிசம்பர் 2004ல் "outlook" இதழில் வெளிவந்த கட்டுரையின் சுட்டி கீழே.

http://www.outlookindia.com/article.aspx?226027

சத்யாவைப் பற்றிப் பேச இவ்வொரு இடுகை போதாது. ஒரு ஞாயிற்றுக்கிழமைக் காலையில் உண்டுவிட்டு வெட்டிக்கதை பேசும்போதுதான் சத்யாவைப்பற்றிக் குறிப்பிட்டார் எங்களுக்கு முந்தைய ஆண்டு மாணவரான நண்பர் குருவெங்கட். அன்றிலிருந்து இன்றுவரை ஞாயிற்றுகிழமைகளில் சென்னையிலிருந்தால் சத்யாவின் பட்டறைக்குச் செல்வது என்பது எழுதப்படாத விதியாகவே இருக்கிறது. ஆனால், எல்லா வகுப்பறையிலும் கடைசிபெஞ்ச் மாணவனாகவேயிருந்ததாலோ என்னவோ இந்தப் பட்டறையிலும் கடைசிபெஞ்ச்தான்.

அவரிடம் பயின்ற மாணவரும் எனது நெருங்கிய தோழியுமான ஒருவர் சத்யாவின் தீவிர மாணவியாகி கடும் பயிற்சிக்குப் பின்னர் CSIR தேர்வில் வெற்றிபெற்றுவிட்டு பின்னர் அவரிடம் முடிவைத் தெரிவிக்கும் போது இருவருமே கண்ணீர் மல்க நின்றகாட்சி இன்றும் பசுமையாக இருக்கிறது.

இப்படியான ஒரு உணர்வுப் பூர்வமான தருணத்தை என்னால் உங்களுக்கு வழங்கமுடியாமல் போயிருக்கலாம் சத்யா, ஆனால், ஒவ்வொரு மனிதரது வாழ்க்கையும் அவரவர்க்கு ஒரு கலைக்கூடமெனில், எனது கலைக்கூடத்தின் சுவர்கள் நீங்கள் சத்யா....


Friday, January 25, 2008

குழந்தையும், இதுவும் அதுவும் - இடையில் நானும்

விழிப்புநிலையில் காலத்தைப் போக்கவேண்டுமே என நானும் குழந்தையும் விளையாட ஆரம்பித்தோம்.

எதை வைத்து விளையாடுவது.. என்று குழந்தைத் தனமாக நான் கேட்க, 'இந்தா பிடி நீ இதை வைத்துக்கொள் நான் அதை வைத்துக்கொள்கிறேன்' என்றது.
சரி விளையாடுவதற்கு முன் ஒரு சந்தேகம் என்றது குழந்தை..

இன்னும் ஆரம்பிக்கவேயில்லை அதுக்குள்ள சந்தேகமா என்றேன்..
'அது'க்குள்ள இல்ல 'இது'க்குள்ள என்றது..
இதுக்குள்ளயா அப்படீன்னா.. இதோ உன்கிட்ட இருக்கே 'இது' இதுக்குள்ள என்றது.. 'இது'க்குள்ளயா சரி கேள் என்றேன்.

'இது' ஏன் இப்படியிருக்கிறது என்றது.. இதுவா 'இது' இதனால் இப்படியிருக்கிறது என்றேன்.. உடனே 'அது..?' என்றது குழந்தை.. ஓ 'அது'வா அது அதனால் அப்படியிருக்கிறது என்றேன்..
சரி விளையாடுவோமா என்றேன்..

இதனால், இப்படியிருப்பதால் 'இது' ஏன் 'இது'வாக இருக்கவேண்டும்.. என்றது.. ம்ம்ம்ம்ம்... அதனால் அப்படியிருக்கும் 'அது' 'அது'வாக இருப்பதால் இப்படியிருக்கும் 'இது' இதனால் இதுவாக இருக்கிறது என்றேன்.. ம்ஹீம் புரியல.. என்றது.. ம்ம்.. 'இது' 'இது'தான் 'அது' 'அது'தான் சரியா... ம் என்றது..
'இது' இப்படித்தான் 'அது' அப்படித்தான் சரியா.. ம் என்றது..

சரி சரி நாம் விளையாடுவோமா.. என்றேன்..

'இது' 'அது'வாக முடியுமா என்றது.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... இதை அப்படியாக்கினால் அதனால் 'இது' 'அது'வாகிவிடும் என்றேன்.. அப்போ 'அது' 'இது'வாக முடியுமா..என்றது.. அதை இப்படியாக்கினால் இதனால் 'அது' 'இது'வாகிவிடும் என்றேன்..
இல்லையே அதிலிருந்து 'இது' 'அது'வாகத்தானே இருக்கிறது என்றது.. இல்லை இல்லை இதிலிருந்து 'இது' 'இது'வாகவும் 'அது' 'அது'வாகவும்தான் இருக்கும்.

சரி நீ போய் தூங்கு..என்றேன்..

இதிலிருந்து 'இது' 'இது'வாகவும் 'அது' 'அது'வாகவும், அதிலிருந்து 'அது' 'இது'வாகவும் 'இது' 'அது'வாகவும் இருந்தால் 'இது' 'இது'வா இல்ல 'அது'வா.. 'அது' 'அது'வா இல்ல 'இது'வா..

எனக்குப் பசிக்குது நீ போய் தூங்கு..

இப்போது குழந்தை நகைத்தது... என்ன?? என்றேன்.. இல்ல அங்க பாத்தியா ஒரு புதிய 'அது' இருக்கு, அதையும் வச்சு விளையாடுவோமா..

சரி.. வா.. அந்த 'அது' அதனால் அப்படியிருப்பதால் அதுவாகயிருந்தால் இந்த புதிய 'அது' புதிய அதனால் புதிய 'அது'வாக இருக்கா..!? என்றது.. ஆம் என்றேன்..

மீண்டும் குழந்தை ஆரம்பித்தது, இந்தப் புதிய 'அது' வந்தவுடன் பழைய 'இது'வும் 'அது'வும் சேர்ந்து 'அது'வாவும், இப்புதிய 'அது' புதிய 'இது'வாவும் ஆயிடுச்சே ஏன்.. என்றது.

நீ விளையாடுறத விட தூங்கறதுதான் நல்லது.. என்றேன்.. யாருக்கு?? என்றது..

சரி எனக்குப் பசிக்குது நீ போய் தூங்கு..

சரி நாளைக்கு புதிய 'அது'க்களையும் 'இது'க்களையும் வைத்துத் தொடருவோம் என்று கூறி கையில் ஒட்டியிருந்த கற்பூர வாசனையை முகர்ந்துகொண்டு குழந்தை உறங்கச் சென்றது..

கீழே சிதறியிருந்த வெங்காயத் தோல்களையும் காய்ந்து போன நீர்திவளைகளையும் பார்த்துவிட்டு உண்டு உறங்கச் சென்றேன்.


குறிப்பு: வெங்காயம் - நண்பருடனான உரையாடலில் கிடைத்தது.

Wednesday, October 17, 2007

இருவழிப்பாதை - தோழியுடன் ஓர் பயணம்


நீ எப்போது எப்படி எனக்கு அறிமுகமானாய் என்றெனக்கு நினைவிலில்லை. எத்தனையோ அறிமுகங்களின் நிகழ்வுகள் நினைவற்றுப் போவதுபோல் உன்னுடைய அறிமுக ஆச்சர்யங்கள் எதுவும் நினைவில் இல்லை. ஆனால் உன்னுடனான உறவு இனி இறுதிவரை நீளப்போகின்ற ஒன்று என்பது உனக்கு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

நிகழ்வுகளின் தாக்கங்களில் சலிப்புற்றிருந்தாலும் சரி, சோம்பலின் வெளிப்பாடாய் முடங்கிக் கிடந்தாலும் சரி, நான்கு சுவற்றுக்குள் சிறைவைத்துக்கொண்ட என்னைப் பிடரியில் இடித்து, எனக்கும் இவ்வுலகிற்குமான நெருக்கத்தைப் புரிய வைப்பாய். அறைக்குள் முடங்கிக் கிடந்த என்னை அழைத்து மழைச் சாரலின் இன்பத்தையும், மாமரக் குயிலின் ஒலியீர்ப்பையும் உணர வைத்தவள் நீ. துக்கம், இன்பம், சலனம் என்றெந்தவொரு மனோநிலையையும் ஒரு மெல்லிய தென்றலினுதவியில் சீர்செய்து சமன் செய்யும் வித்தையை நீ எங்கு கற்றாய்.

உன்னுடனான இருத்தலைவிட உன்னோடான எனது பயணங்கள் எப்போதும் சுகமளிப்பவை. என்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்து இன்றுவரை, ஏன் என்றுமே உன் தோள்களில் தலைசாய்த்து பயணிப்பதையே விரும்புகிறேன்.


என் பயணங்களின் நோக்கமும், மார்க்கமும் எதுவாயினும் உன்னுடனான பயணம் ஒரு சுகானுபவமே. இவ்வுலகத்தின் பல்வேறு பிரதேசங்கள், மக்கள், அவர்களின் வாழ்வியல், அறிமுகமில்லாக் குழந்தைகளின் கையசைப்பு அறிமுகம் என்று உன்னோடு கதைத்துக்கொண்டே செய்த எனது வாழ்வியல் பயணங்களில் எனது வாழ்க்கைப்பயணத்தை செழுமைப்படுத்தினாய்.
ஊடலும் கூடலும் கலந்த களவுவாழ்வுபோல் உன்னுடனான பூசல்கள், உன் கண்களை மறைத்து ஆடை அணிவித்து என் ஆடை களைந்த வேளைகள் மட்டுமே. என்ன செய்வது நீ என்னை மட்டுமா இவ்வுலகிற்கு அறிமுகப் படுத்துகிறாய், எப்போதும் இருவழிப்பாதையாகவே இருக்கிறாய்.
நீயில்லாத ஒரு அறை சிறைக்கூடமாகவும், நீ இல்லாத ஒரு வாழ்வு தண்டனையாகவும் இருப்பதில் வியப்பொன்றுமில்லை.
உன் தோழமையின் பெருமையுணர்ந்ததால்தான் பில்கேட்ஸ் கூட அவர் மென்பொருளுக்கு "windows" என்று உன் பெயரை வைத்திருப்பாரோ...!!!