Thursday, March 4, 2010

இது "வேனில்" காலம்


நமது சக வலைப்பதிவர், நண்பர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருந்த போது, "பேறுகாலத் தனிமை" பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அதாவது மனைவி கருவுற்றிருக்கும் போது, தாய் வீட்டுக்கு அனுப்பிட்டு ஜாலியா இல்லாம அவளோடு இருந்து அவள் அனுபவிக்கும் வலிகளை தாமும் அனுபவிப்பது போன்றுபாவிப்பது என்று குறிப்பிட்டார். இது தமிழகத்தில் சில ஆதிச்சமூகங்களிலே முக்கியமானதொரு சடங்காக இருந்து வந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டார். உடனே (கையிலேயே வைத்திருப்பார்னு நினைக்கிறேன்) ஒரு புத்தகத்தை எடுத்து அதுல என்ன போட்ருக்குன்னு வாசிச்சு காமிச்சார்.

அவர் எப்பவுமே அப்படித்தாங்க, அவருடன் பேசினால், அன்றைக்கு கண்டிப்பாக காத்திரமாக ஏதாவது வாசிச்சோ எழுதியோ தீரணும், இல்லன்னா தூக்கம் வராது. நானும் அவரிடம் பேசும்போதெல்லாம், அதப் பண்றேன் இதப்பண்றேன்னு வாக்குறுதி குடுக்க வேண்டியது அப்புறம் காத்துல பறக்கவிடவேண்டியது, இப்படியே போகுது அவர்கிட்ட என்னோட பில்டப்புகளும்.

இப்போ எதுக்கு அதைப் பத்தி பேசினோம்னு தோணுதில்ல, ஆமாம், அப்படித்தான் கேட்டார் என்னப் பாத்து. என்ன பேறுகாலத் தனிமையை அனுபவிக்கிறீங்களான்னு?

அப்படின்னா என்னான்னே தெரியாதுன்னு சொன்னபோது மேலே சொன்னதை விளக்கினார்.

பேறுகாலத் தனிமையை அனுபவித்தேனான்னு தெரியாது, ஆனா, இந்தப் பத்துமாத உடற்கூறியல் வாசிப்பும் அவதானிப்பும், வாழ்க்கையையும் உடலையும் இன்னும் பக்குவமா பாக்க வச்சிடுச்சு. பக்கத்தில இருந்து பாத்ததுக்கே இப்படின்னா, உள்ள அனுபவிச்சவங்களுக்கு எப்படி இருக்கும்? அதனாலதான் பெண்கள் சில விசயங்களில் ரொம்ப பக்குவப்பட்டு இருக்காங்களோன்னு கூட தோணிச்சு.

ஆனாலும், வரும் ஆனா வராது ரேஞ்சுக்கு ஒரு 36 மணிநேரம் காத்திகிட்டிருந்தோம். அப்புறம் பெரிய மனசு பண்ணி தானாவே வெளில வந்துட்டாங்க.

ஆமாங்க, இப்படி ஒரே அழுகையோட வெளிய வந்தாங்க.தலைய வெளில நீட்டின உடனே சர்ருன்னு எடுத்து இப்படி துக்கிப் பிடிச்சதுதான், சில விநாடிகள் எப்படி ரியாக்ட் பண்ணனும்னே தெரியலை, ஆனா கண் கலங்கிருச்சு, மூளை "off" ஆயிருந்துது. அப்புறம், வந்தவுடன் திறப்பு விழா செய்யுன்னு சொல்லி கத்திரிக்கோலை கைல குடுத்துட்டாங்க, டாக்டருங்க. அப்புறம் ஏதோ ரிப்பன் வெட்றது போல வெட்டி பிரிச்சேன், தாயையும் சேயையும். நான் நினைத்ததைவிட கொடி உறுதியா இருந்தது.. :)

அப்புறம் அன்னிலேருந்து தினம் இப்படித்தான் படத்துல இருக்குற மாதிரி ஒரே சவுண்டு உடுறாங்க.

அப்புறம் மெதுவா அடங்கி அப்பப்போ முழிக்கிறாங்க..அப்பப்போ சிரிக்கிறாங்க தூக்கத்துலயே.
17 பிப்ரவரிலேருந்து எங்க வீட்டுல "வேனில்" காலம் தொடங்கியாச்சு.. ஆமாங்க அவங்க பேரு "வேனில்".

எப்படி ஃபீல் பண்றேன் என்றார்கள் பலரும்? இன்னும் "off" ஆன அந்த கணத்தையே அசை போட்டுகிட்டிருக்கேன்....