Tuesday, February 19, 2008

பட்டொளி வீசி பறக்குது பாரீர்

பட்டொளி வீசி பறக்குது பாரீர் என்று இந்தியாவின் பெருமையை பலரும் பலவிதமாகப் பார்க்க நினைத்தனர். ஆனால் இப்படித்தான் வீசச்செய்வோம் என்று சிலர் முனைப்புடன் இருக்கின்றனர்.

இறப்பு தொடருக்கு இடையில் இப்படி ஒரு தகவல் பதிவு தேவையா? என்று யோசித்தாலும் பேசப்படவேண்டியவை என்பதால் பதிவிடுகிறேன்.

இதோ இந்த ஆண்டிலும் இந்தியாவிலிருந்து ஒரு அறிவியல் கயமைத்தனம். சென்ற ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை, இந்த ஆண்டு ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை.

//A Massive Case Of Fraud
Journal editors are left reeling as publishers move to rid their archives of scientist's falsified research
William G. Schulz
A CHEMIST IN INDIA has been found guilty of plagiarizing and/or falsifying more than 70 research papers published in a wide variety of Western scientific journals between 2004 and 2007, according to documents from his university, copies of which were obtained by C&EN. Some journal editors left reeling by the incident say it is one of the most spectacular and outrageous cases of scientific fraud they have ever seen.//

முழுத்தகவல் இங்கே.

http://www.pubs.acs.org/cen/science/86/8607sci1.html

பல வகையில் ஆராய்ந்து அனுகவேண்டிய ஒரு நிகழ்வு. பொறுத்திருந்து பார்ப்போம், இந்திய அறிவியல் ஆராய்ச்சிகளின் மற்றுமொரு நிகழ்வாய்ப் போகப்போகிறதா இல்லை ஏதாவது ஒரு மாற்றத்தின் துவக்கமாக இருக்குமா என்று.

Thursday, February 14, 2008

இறப்பு - உரையாடல் - III - நெக்ரோசிஸ் - சீரற்ற இறப்பு முறை

இறப்பு குறித்த இத்தொடர் உரையாடலில், முதல் இரண்டு பகுதிகளில் உயிர்த்தோற்றம் பற்றிய ஒரு சிறு உரையாடலும், செல்கள் குறித்தும் உரையாடினோம். செல்லுக்குள்ளான நமது சுற்றுப்பயணம் உங்களையும் வியக்கவைத்திருக்குமென்று நினைக்கிறேன். 10 மைக்ரான் இருந்து கொண்டு உள்ளே ஒரு தனி அரசாங்கம் செய்துகொண்டிருப்பது மட்டுமல்லாமல் வெளியே இருக்கும் ஒரு பெரிய மிருகக்கூட்டை (நாமதான்)இயக்கிக்கொண்டிருக்கிறது.

போனபகுதியில நாம பேசுனது ஒன்னும் ஞாபகமில்லாவிட்டாலும் பரவாயில்லை இப்பகுதி உரையாடலுக்கு சில அடிப்படைகள் மட்டும் நினைவிலிருந்தால் போதும். ஆங்காங்கே தேவைப்பட்டால் எட்டிப்பார்த்துவிட்டு தொடர்ந்து பேசுவோம்.

நாம் சுற்றுப்பயணம் செய்துவிட்டு செல்லிற்கு வெளியே வரும்போது, ஒரு பரபரப்புசூழல் உருவானது என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஏன் அந்த பரபரப்பு?

இப்போது கவனித்தீர்களா செல்லின் மேல் இருந்த lymph திரவத்தின் ஓட்டம் குறைந்திருக்கிறது. ஆனால் இந்த திரவம் இரத்தஓட்டத்துடன் சம்பந்தப்பட்டது என்றல்லவா பார்த்தோம், இப்போது அதன் ஒட்டம் குறைந்திருக்கிறது என்றால்..?? ஆமாம் நீங்கள் ஊகித்தது சரிதான் இவ்விருதயச் செல்லான மையோகார்டியல் (myocardial) செல்லுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் ஏதோ குறைபாடு. அதனால் தான் இந்த லிம்ப் திரவத்தின் ஓட்டத்திலும் குறைபாடு இருக்கிறது.

அது என்னங்க குறைபாடு? ஏன் இந்தக் குறைபாடு? அதவிடுங்க.. அதுவா முக்கியம், ஒரு செல்லுக்கு.. அதுவும் இருதயச்செல்லுக்கு இரத்தம் செல்லவில்லையென்றால்..என்ன ஆகும்!? இது ஒரு மோசமான அறிகுறியாச்சே? மனித உடலிலுள்ள ஒரு செல்லுக்கு இரத்தம் போகலைன்னா என்ன அர்த்தம்? அச்செல்லுக்கு உணவும், ஆக்ஸிஜனும் போகவில்லையென்று அர்த்தம். ஒரு செல்லுக்குள் உணவும் ஆக்ஸிஜனும் செல்லவில்லையென்றால் என்னாவது? இருப்பு போதவில்லை அல்லது போதிய காச்சாப்பொருளின்மையால் தனது ஆற்றல் உற்பத்தியை உடனடியாக நிறுத்திக்கொள்கிறார் ஆற்றல் மூலங்கள் என்றழைக்கப்படும் மைட்டோகாண்டிரியா (mitochondria). உங்கள் பதட்டம் புரிகிறது , மைட்டோகாண்டிரியா தனது வேலையை செய்யமுடியாத சூழலில் இருந்தால் என்னாவது, செல்லின் உயிர்த்தலுக்குத் தேவையான ATP (adenosine triphosphate) இல்லாமல் போய்விடும்.

ATP இல்லையென்றால் செல்லின் மற்ற உறுப்புகளின் செயல்பாட்டிற்குத் தேவையான ஆற்றல் இல்லையென்று அர்த்தம். செல்லுக்குள் ATP ன் அளவு தேவையான அளவைவிடக் குறைய ஆரம்பிக்கிறது. நம் செல் இது போன்ற சூழ்நிலைகளை எதிர்பார்க்காத ஒன்றல்ல, உடனடியாக மாற்று ஆற்றல் மூலங்கள் முடுக்கிவிடப்படுகின்றன. அது என்ன மாற்று ஆற்றல் மூலம்? செல்லுக்குள்ளேயே இருக்கும், கொழுப்பு மற்றும் சில புரதங்களை ஆற்றலாக மாற்றிக் கொண்டு இவ்வாற்றல் தேவையை சமாளிப்பது. (செல்கள் கூட மாற்று ஆற்றலின் அவசியத்தை உணர்ந்திருக்கின்றன). ஆனால் இது ஒத்திப்போடுதலுக்கான ஒரு முனைப்பேயன்றி இதுமட்டுமே தீர்வல்ல. செல்லின் உயிர்ப்பு இயக்கம் உறைநிலையை நோக்கிச் சென்றுவிட்டது அல்லது செல்லுக்குளிருக்கும் இயந்திரங்கள் அனைத்தும் ஸ்தம்பித்து நின்றுவிட்டன.

ஏறக்குறைய அந்நிகழ்வு துவங்கியாகிவிட்டது. மேலே விளக்கப்பட்ட நிகழ்வில் பெரிதும் பாதிக்கப்படுபவை செல்லின் சுவற்றில் இருக்கும் பம்புகள்தான். இவற்றின் முக்கியப் பணியே, உள்ளே இருக்கும் பொட்டஷியம் அயனியின் செறிவை சீராக வைத்திருப்பதும், உள்ளே புகும் நீரையும் கால்ஷியம் அயனியையும் கட்டுக்குள் வைத்திருப்பதும்தான் என்று பார்த்தோம். மீண்டும் இயல்புநிலை திரும்பும் வரை இறப்பு நேராமல் இருப்பதற்கு இப்பம்புகளின் செயல்பாடு மிகவும் அவசியம். செல்லின் செயல்பாடுகளையும் மீறி வாழ்வா? சாவா? என்ற ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது நம் செல். இந்நிலையில் செல்லின் மற்ற உறுப்புகளுக்குச் செல்ல வேண்டிய ஆற்றல் அனைத்தையும் இப்பம்புகளுக்கே வழங்குகிறது செல்.**

செல்லுக்குள்ளிருக்கும் புரதத்தாயாரிப்புகள் அப்படியே உறைநிலையில் வைக்கப்பட்டுவிட்டன, மேலும் உட்கருவிலிருந்து வரும் கட்டளைகள் உறுப்புகளுக்குப் போய்ச் சேராமல், உறைந்து கிடக்கின்றன. இப்படி வேளை செய்யாத உறுப்புகள் எல்லாம் அப்படியே கழிவு போல தனது மறுசுழற்சியாளரான லைசோசோம்களுக்குள் தள்ளப்படுகின்றன. ஆனால், போதிய ஆற்றலின்மையால் அவையும் திணறிக்கொண்டிருக்கின்றன. இப்போது, செல்லுக்குள் எங்கு நோக்கினும் ஒரே கேள்வி, எங்கே ATP ?

என்னதான் கையிருப்பு ஆற்றலை செல்லின் சுவரில் இருக்கும் பம்புகளுக்கு மட்டுமே கொடுத்தாலும், தொடர் பற்றாக்குறையினால் பம்புகளும் இப்போது வேலை செய்ய முடியாமல் திணறி தனது முயற்சியை கைவிட்டு அமைதியாகின்றன. இதற்காகவே காத்திருந்தது போல் கால்ஷியம் அயனி மெதுவாக செல்லுக்குள் நுழைந்து அனைத்து உறுப்புகளையும் அரிக்கத் துவங்குகின்றன. மேலும், வெளியிலிருக்கும் நீர் மெதுவாக செல்லின் உள்ளே நுழைந்து, அச்செல்லை ஒரு பலூன் போல உப்பச் செய்து விடுகிறது. ஓரளவிற்கு மேல் செல்லை அதன் சுற்றுப்புறத்திலிருந்து காத்துவந்த செல்சுவரில் விரிசல்விழத் துவங்குகிறது. பின்னர் நீரின் அழுத்தத்தால், தன் உறுப்புகளை உடலின் இருளில் உமிழ்ந்துவிட்டு சலனமற்று கிழிந்து தொங்குகிறது அச்செல்.

இப்படி இறப்பதற்கு நிர்பந்திக்கப்படும் இறப்பு முறை நெக்ரோசிஸ் (Necrosis) என்றழைக்கப்படுகிறது.


சரி இப்போ இது ஏன் நிகழ்ந்தது? அல்லது இச்செல் இறப்பதற்கு நிர்பந்தித்தக் குறைபாடு என்ன? என்று பார்ப்போம். எல்லாம் கொழுப்புதான்.. அட திட்டலங்க.. கொழுப்புதான் காரணம். இருதயத்திற்கு செல்லும் இரத்தப் பாதையில் சேர்ந்த கொழுப்பு, இரத்த செல்களின் இறந்த உடல் என ஒரு குப்பையான கலவை அதன் சீரான ஓட்டத்தை தடைசெய்து கொண்டே இருந்து ஒரு நாள் அதுவே மிகப்பெரிய அபாயமாக மாறிவிட்டது. இதுபோன்ற கழிவுகளின் சேர்க்கையைக் களைவதற்கு உடலில் தற்காப்பு வீரர்கள் இருந்தாலும் நிலமை கட்டுக்கடங்காமல் போய்விட்டால் அவையும் இத்தடையை அப்படியே விட்டுவிடுகின்றனர். இப்படிப் பலநாட்கள் சேர்ந்த கழிவுகள் தீடீரென்று ஒருநாள் இருதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டத்தையே தடுத்துவிடுவதால், இருதயச் செல்கள் இறப்பதற்கு நிர்பந்திக்கப்படுகின்றன. இதை மாரடைப்பு என்ற பெயரில் புற உடலில் இதன் தாக்கங்களைப் பற்றி பலரும் அறிந்த ஒன்றுதான்.

அப்படியானால், இவ்விருதயத்துக்கு சொந்தக்காரர்.. ஆம், அவரை இப்போது உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கவேண்டும் அதனை அவருடைய துணைவியாரும் உறவினர்களும் பார்த்துக் கொண்டதால் அவரது நிலமையையும் அவரது தாக்கத்தையும் பற்றி மீண்டும் வேறு பகுதியில் மீண்டும் வந்து பார்ப்போம்.

ஆனால் செல்களின் இறப்பு என்பது இப்படிப்பட்ட கொடூரமான நிகழ்வுதானா? வேறு வழிகளில் செல்கள் இறப்பதற்கான வழிமுறைகளே கிடையாதா? என்ற கேள்வி நியாயமானதுதானே. ஆனால், உயிரியலில் இறப்பு என்பது இப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் (நெக்ரோசிஸ்) என்று பலகாலம் நம்பிவந்தனர் விஞ்ஞானிகள். ஆனால் பிறப்பைவிட அல்லது அதற்கு இணையான சுவாரஸ்யமான விசயம் இயற்கை இறப்பு. Programmed cell death (PCD) அல்லது அபோப்டிஸ் (Apoptosis) என்றழைக்கப்படும் இறப்பு முறை பின்னர் கண்டறியப்பட்ட ஒன்றுதான். இதன் கிரேக்க அர்த்தம் மலரிலிருந்து உதிரும் இதழ்கள் என்பது. இவ்வகை இறப்புமுறை தான் பரிணாமத்தில் விளைந்தது. இதைப் பற்றி விரிவாக அடுத்த பகுதியில் உரையாடுவோம்.

************************************

1. "SEX & THE ORIGINS OF Death", by William R. Clark


** குறிப்பு


//இந்நிலையில் செல்லின் மற்ற உறுப்புகளுக்குச் செல்ல வேண்டிய ஆற்றல் அனைத்தையும் இப்பம்புகளுக்கே வழங்குகிறது செல்.** //


இவ்வாக்கியத்தில் ஒரு மிக முக்கியமான உண்மை புதைந்திருக்கிறது என்றே கருதுகிறேன். வாழ்வதற்கான முனைப்பில் அச்செல் அதன் முக்கியப் பணியான சுருங்கி விரிதல் குறித்து முக்கியத்துவம் கொடுக்காமல், தனது உயிரைக்காப்பாற்றுவதற்கான முயற்சிகளிலேயே கவனம் செலுத்தியிருக்கிறது. இதை இரண்டு வகைகளில் அனுகலாம், 1. இது போன்ற சூழ்நிலையில், இச்செல் உயிர்த்திருந்தால்தான் மொத்த விலங்கும் உயிரோடு இருக்க முடியும் என்பதால் இப்படிப்பட்ட செயலைச் செய்ய அதற்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம். 2. தாம் ஒரு பகுதியாக இருக்கின்ற விலங்கின் உயிர்ப்போ அல்லது இறப்போ பற்றிக் கவலையில்லாமல், தன்னுடைய உயிரைக்காத்துக் கொள்வதில் அச்செல் முனைப்புடன் இருக்கலாம்.


இயற்கையாக இறக்கின்ற ஒரு மனிதனின் உடலில் ஒருவரது மூளையும், இருதயமும் முழுவதுமாக (இயற்கையாக) இறந்துவிட்டபின்னும், உடலின் பல பகுதிகளிலிருக்கும் உறுப்புகளின் செல்கள் இயற்கையாக இறக்காமலிருக்கும். மேலும், அவை பின்னர் இறப்பதற்கு நிர்பந்திக்கப்பட்டு நெக்ரோசிஸ் இறப்பு முறையில் இறக்கின்றன. இந்நிகழ்வு நாம் மேற்கூறிய இரண்டு காரணிகளில் இரண்டாவது காரணியையே முன்னிலைப்படுத்துகிறது.

உயிரியலின்(உலகின்) அடிப்படைச் சாரமே வாழ்தலுக்கான முனைவு என்றுதான் கருதத் தோன்றுகிறது. வெறும் முனைவு என்பதைவிட இம்முனைப்பில் ஏற்பட்ட மாற்றங்களும், பரிணாமங்களும் பிரமிக்க வைக்கின்றன அல்லது மிகவும் சிறுக்க வைக்கின்றன என்றுதான் கூறவேண்டும்.

Wednesday, February 6, 2008

இறப்பு - உரையாடல் - II - உயிர்த் தோற்றம், செல்-அறிமுகம்

இறப்பு குறித்தான இத்தொடர் உரையாடலின் முதல் பகுதியில் குறிப்பிட்டது போல அனைத்து உயிரினங்களின் அடிப்படைக் கட்டுமானமாக இருப்பது செல்கள்தான். மனிதனின் இறப்பு என்பது அவரது உடலிலுள்ள செல்களின் இறப்பின் விளைவே என்பது கண்டறியப்பட்ட உண்மை. ஆதலால், இறப்பை குறித்து எழுந்த தொடர் கேள்விகளை செல்களை ஆராய்ந்ததன் விளைவாக அறியப்பட்ட முடிவுகளினடிப்படையிலேயே தொடருவோம். இப்பகுதியில் உயிரின் தோற்றம் மற்றும் செல் குறித்த ஒரு சிறு அறிமுகமும் அதன் பின்னர் அதன் இறப்பில் ஏற்படும் நிகழ்வு குறித்தும் உரையாடுவோம். இப்பகுதியில் பேசப்பட்டிருக்கும் பலவும் உங்களுக்கு முன்னரே தெரிந்திருக்கலாம், ஆனாலும் ஒரு முழுமைக்காக அல்லது ஒரு revisit ஆக இருக்கட்டும் என்பதால் மீண்டும் பேசியிருக்கிறேன்.

உயிர்த் தோற்றம்:

பலருக்கு இருக்கும் ஒரு ஆவலான கேள்வி பூமியின் முதல் உயிர்த்தோற்றம் பற்றியது. பூமியில் உயிர்த்தோற்றம் என்பது நம்மைப்போன்ற பலசெல் உயிரிகளுடன் துவங்கவில்லை என்பது உறுதியாக அறியப்பட்ட ஒன்று. இப்பூமியின் வயது ஏறத்தாழ 5 பில்லியன் (5x10^9 - சுமார் 500 கோடி) ஆண்டுகள்.

துவக்கத்தில் பூமியின் வளிமண்டலம் தற்போதிருப்பது போல இருந்திருக்க வாய்ப்பேயில்லை, ஏனெனில் புதிதாக இறுக்கமடைந்த பூமியின் கருப்பொருட்களிலுருந்து வெளிவந்த வாயுக்கள், தற்போது நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து மிகவும் மாறுபட்டது. புவியின் பரப்பிலிருந்த அதீத அழுத்தம், அபரிமிதமான வெப்ப, மின் மற்றும் கதிரியக்க ஆற்றல்களினால், கடலிலிருந்த கார்பன் மற்றும் நைட்ரஜன் அடிப்படையிலான மூலக்கூறுகள் உயிரின் அடிப்படைக்கட்டுமானமான புரோட்டின்களையும் நீயூக்ளிக் அமிலங்களையும் தோற்றுவித்தன. இவ்வேதிவினையானது, அப்போதைய சூழலை உருவாக்கி, ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்டு நிரூபிக்கப்பட்டவை.

மேற்கூறிய உயிரின் அடிப்படை மூலக்கூறுகளிலிருந்து முதல் உயிர்த்தோற்றம் அதாவது முதல் செல், சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அப்படித்தோன்றிய முதல் உயிரின் வழிமுறை இப்படித்தான் என்று அறுதியிட்டுக் கூறமுடியாவிட்டாலும் ஒருவாறு அனுமானிக்கப்பட்டிருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.
அது என்னங்க உயிர்? உயிருள்ளவைன்னா என்ன?


முதல் செல்லுக்கு முன்னர் இருந்த மூலக்கூறுக்கும் இந்த உயிருள்ள என்று சொல்லப்படுகின்ற செல்லுக்கும் என்ன வித்தியாசம். இந்த வேதிவினையில்(chemical reaction) விளைந்த இந்த விளைபொருளுக்கு (product) மட்டும் என்ன ஒரு தனியான உயிர் என்ற மரியாதை.

உயிருள்ளவை என்பதை ஒரு சில பண்புகள் அடிப்படையிலேயே வரையறுக்கிறோம். உணவு உட்கொள்ளுதல், சூழலுக்குத் தகுந்தார்போல் இடம்பெயர்தல், இனப்பெருக்கம் செய்தல் அல்லது தம்மைப்போன்ற ஒன்றை உருவாக்குதல் (பிரதியெடுத்தல்-self replicating). இவையனைத்தும் ஒரு செல்லுக்கு உண்டு. ஆனால், முதல் செல்லுக்கு முன்னர் இருந்த மூலக்கூறுகளுக்கு இப்பண்புகளில்லை. இப்படிப்பட்ட உயிரிகள், பாக்டீரியா, அமீபா போன்ற பல ஒரு செல் உயிரிகளாக இன்றும் இருக்கின்றன. ஆனால் மேற்கூறிய, வேதிவினையடிப்படையில் புதிய உயிர்தோன்றும் சாத்தியக்கூறுகள் தற்போது பூமியிலில்லை, இனப்பெருக்கம் அல்லது பிரதியெடுத்தல் அடிப்படையிலேயே புதிய உயிரிகள் தற்போது தோன்றுகின்றன. (**குறிப்பு)

சரி ஒரு வேதிக்குழம்பிலிருந்து முதல் உயிர் தோன்றியாயிற்று, இப்போது அது வாழ வேண்டுமே. அவ்வுயிர் வாழும் சூழலானது மிகவும் ஆபத்தானது, சில நிமிடங்களுக்கு ஒரு முறை மாறக்கூடிய வெப்பநிலையும், நீரும், உணவும் மாறி மாறி வந்து செல்லக்கூடிய சூழலும், அமிலத்தன்மையும் (acidity), உப்பினளவும் (salt level) நினைத்த நேரத்தில் மாறக்கூடிய சூழலுக்கும் நடுவே வாழ்வது என்பது ஒரு மிகப்பெரிய போராட்டமே. இப்போராட்டத்தை அவ்வுயிரி தனித்துச் சந்தித்தேயாக வேண்டும், குறுக்கு வழிகள் கிடையாது. இப்படிச் சூழலுக்குத் தகுந்தாற் (ஒரு வரம்புக்குள்) போல் தம்மை மாற்றிக்கொள்ளும் (physiological balancing) செயலை உயிரியலில் ஹோமியோஸ்டேடிஸ் (homeostatis) என்று குறிப்பிடுகின்றனர்.

மேலே குறிப்பிட்டதைவிட அவ்வுயிரிக்கு மிகப்பெரிய ஆபத்து அல்லது வாழ்வா சாவா என்ற போராட்டத்தின் விளிம்பிற்குத் தள்ளுவது யார் தெரியுமா? நம்ம குடும்பத் தலைவர் சூரியன் தான். அதிலும் குறிப்பாக சூரியனின் கதிர்வீச்சிலுள்ள புறஊதாக் கதிர்களும் அதர்க்குமேல் அதிர்வெண்ணும் கொண்ட கதிர்களும்தான். சூரியனின் கதிர்வீச்சிலுள்ள பலவகைக் கதிர்கள்குறித்தான மேலதிகமான தகவல்கள் இங்கே கிடைக்கும். இக்கதிர்வீச்சிலிருந்து அவைத் தப்பிக்க வேண்டுமெனில் அவை ஆழ்கடலுக்குள்ளோ அல்லது பாறைகளுக்கு அடியிலோ இருந்தால் மட்டுமே உண்டு. இந்த ஒளி குறித்தான ஆபத்தைப் பற்றி நான் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதற்கு ஒரு மிகமுக்கியமானப் பரிணாமக் காரணம் இருக்கிறது.

நமது மூதாதையரான ஒருசெல் உயிரிகள் வாழ்தலுக்கான வேட்கையில் இந்த கதிர்வீச்சுப் பிரச்சனையை எப்படிக் கையாண்டனர் என்பது பரிணாமத்தில் ஒரு முக்கியமானத் திருப்பு முனை என்று குறிப்பிடுகின்றனர் விஞ்ஞானிகள். ஒரு வகையில் இந்த ஆபத்திலிருந்து தாமாகவே தம்மைக் காப்பற்றிக் கொள்ளும் முயற்சியில் தோன்றியவர்கள்தான் நாம்.

நம்மையெல்லாம் உருவாக்குவதற்கு நம் மூதாதையர்கள் எவ்வளவு பாடுபட்டிருக்கிறார்கள்.!! வாழ்க்கை என்பது ஒரு மிகப்பெரிய போராட்டமாயிருந்தாலும் அதில் அம்முதல்வுயிரி வெற்றி பெற்றிருக்கிறது என்பதற்கான சாட்சி..?? இதைப்படிக்கும் உங்களையும், தட்டச்சு செய்த என்னையும் உள்ளடக்கி, இப்படியாகப் பரிணமித்திருக்கும் பல வகையான உயிர்கள்தான்.

அப்படி என்ன வித்தை செய்தது அவ்வுயிரிகள்? தமக்கான இருளை தாமே உருவாக்கிக்கொண்டன. அதாவது பல செல்கள் ஒன்று கூடி ஒன்றன் கீழ் ஒன்றாகத் தங்கிக் கொண்டு தம்மை ஒளியிலிருந்து காப்பற்றிக் கொண்டன. இதுதான் பல செல் உயிரிகளின் தோற்றத்திற்கான அடிப்படை. அப்படியானால் மேலேயுள்ள செல்கள் என்னவாயின? பரிணாமத்தில் நடந்த பல உயிர்ப்புகளின் பின் பல இறப்புகள் இருக்கின்றன, அல்லது அப்படி நடந்த பல இறப்புகளினால்தான் புதியவையே பிறந்தன என்று கூறலாம். ஆனால், அது ஒரு தற்காலிகமான நிகழ்வுதான், பலசெல் உயிரிகளாக மாறிய பின்னர் அவை பாதுகாப்பாக இருக்கத் துவங்கின. ஆனால் என்ன?அவை இதற்கு முன்னர் அவற்றிற்கு இருந்த உயிர்த்தலுக்கான போராடும் குணத்தை இழந்தன என்பது இந்நிகழ்வின் பின் இருக்கும் தீமை. சூழ்ல் மாற்றத்தினை எதிர்கொள்ளும் கடினத்தன்மையை இழந்தன. இவ்வுயிர் தோற்றத்தை இங்கே விட்டுவிடுவோம், தேவைப்பட்டால் மீண்டும் வந்து செல்வோம்.

கவனிக்கவும்: முதல் உயிரிகளில், ஆண், பெண், விலங்கு, தாவரம் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. மேலும் அவற்றின் இனப்பெருக்கம் குறித்து நான் எதுவும் குறிப்பிடவில்லை (அங்குதான் நமது உரையாடல் தலைப்பின் கருவே இருக்கிறது அதனால் இனப்பெருக்கம் குறித்து விரிவாக வரும் பகுதிகளில் உரையாடுவோம்).


செல் அறிமுகம்


இப்படி மிகச்சிறந்த போராளியான ஒரு செல்லின் அளவு சுமார் 10^-5 மீட்டர்(1/100,000). இதை 10 மைக்ரான் (1 மைக்ரான் = 10^-6 மீ)என்றும் கூறலாம். ஒரு மீட்டர் நீளமுள்ள ஏதாவது ஒரு பொருளை 1 லட்சம் சம பங்குகளாகப் பிரித்தால் அப்பங்குகளின் அளவு 10 மைக்ரானாக இருக்கும். நுண்ணோக்கிகளின் உதவியுடன் மட்டுமே காணயியலும்.

உங்கள் கைகளில் உலகின் தலை சிறந்த தொலைநோக்கியிருந்தால் (telescope) நீங்கள் அதில் காணக்கூடிய பிம்பத்தின் தூரம் 10^24 என்று கொள்வோம். அதே போல் உலகின் தலை சிறந்த நுண்ணோக்கியிருந்தால் (microscope) நீங்கள் அதில் காணக்கூடிய பொருளின் அளவு 10^-16 என்று கொள்வோம். இந்த எண்கள் பற்றிய மேலதிகப் புரிதலுக்கு பிம்பங்களுடனான எடுத்துக்காட்டுகள் வேண்டுமாயின், இங்கே (அவசியம்/பரிந்துரைக்கிறேன்) செல்லுங்கள்.

ஆனால் நம் கையில் நுண்ணோக்கியிருந்தாலும் சரி தொலைநோக்கியிருந்தாலும் சரி, இறுதியில் சிறுத்துப்போவது என்னமோ நாம்தான். சரி, ரொம்ப வெட்டிப்பேச்சு பேசாமல் விசயத்துக்கு வருகிறேன்.

ஒரு செல்லின் அளவு 10 மைக்ரான்தான். அதனால் சாதாரணமாக நம் கண்களுக்குப் புலப்படாது, நுண்ணோக்கிகளின் உதவியுடன் தான் அவற்றைக் காணமுடியும். அப்படியொரு கண்ணுருஒளி நுண்ணோக்கியில் (optical microscope) ஒளியுடம் சேர்ந்து தற்போதிருக்கும் ஒரு விலங்கு செல்லுக்குள் நாமும் பயணிப்போம், என்னதான் தெரிகிறது என்று பார்ப்போம். கீழிருக்கும் படம் போன்ற ஒரு அமைப்புதான் தெரியும்.

அட, நமக்கு யாருங்க வழிகாட்றது செல்லுக்குள்ள, ஒரே இருட்டா இருக்கு இதெல்லாம் என்ன எதுக்கிருக்குன்னு எப்படித் தெரிஞ்சுகறது. இதோ, நம்ம தியோடர் ஷ்வான் (Theodre Schwann) மற்றும் மத்தியாஸ் ஷெலெய்டன் (Matthias Shleiden) ரெண்டு பேரும் வாசல்லயே காத்துகிட்டுருக்காங்க. இவங்க வேற யாருமில்ல நமக்கு செல் கொள்கையை அறிமுகப்படுத்தினவங்க. இதைப்பற்றின சுவாரஸ்யமான வரலாறு இங்கே கொஞ்சம் இருக்கு, ஆர்வமிருந்தா போய் பாத்துட்டு வரலாம்.

இது என்னங்க..!!?? இந்த செல் மேல ஒரு மெல்லிய நீரோடைமாதிரியான திரவம் செல்மேல பரவிகிட்டேயிருக்கு. இத்திரவம்தான் lymph (interstitial fluid), இது இரத்த ஒட்டத்துடன் தொடர்புடையது, அதாவது இந்த lymph சீராகச் செல் மேல பரவிகிட்டுருக்கு அப்படின்னா நம்ம இருக்குற செல்லுக்கு உணவும் ஆக்ஸிஜனும் சீரா வந்துகிட்டுருக்குன்னு அர்த்தம். சரி செல்லுக்குள்ள போவோம்.

இதோ இங்க இருக்கு பாருங்க செல்லின் பெரும்பகுதிய அடைச்சுகிட்டு அதுதான் உட்கரு (nucleus), நமக்கு இருக்குற மாதிரி செல்லுக்கு மூளைன்னு ஒன்னு இருந்துச்சுன்னா அது இவ்வுட்கரு தான். இவ்வுட்கருக்குள்தான் அச்செல்லின் DNA(Deoxiribonucleic acid) (ஜீன்கள் வடிவில்) இருக்கிறது. இதில்தான் ஒரு செல்குறித்தும் அதன் செயல்பாடுகள் மற்றும் செல்லின் உள்ளிருக்கும் உறுப்புகளின் செயல்பாட்டிற்கான கட்டளைகளும் பொறிக்கப்பட்டிருக்கும். இதில் வேடிக்கை என்னவெனில் ஒரு பகுதி DNA க்களில் மட்டும்தான் உருப்படியான விசயங்கள் இருக்கும் மீதமெல்லாம் சும்மா வெட்டியா இருக்கும் அவ்ளோதான் (nonsense DNAs). அது என்ன உட்கருவின் புறப்பரப்பில் ஏதோ சிறு துளைகள் இருக்கின்றன? இத்துளைகளின் மூலம்தான் கருவின் உள்ளும் புறமும் சில மூலக்கூறுகள் (molecules) பயணிக்கும்.

இது என்ன இது கருவுக்கு வெளியே, செல்லுக்குள்ளயும் கூழ்மாதிரி திரவம் சுத்திகிட்டுருக்கு. இந்த திரவம்தான் சைட்டோப்ளாசம்(cytoplasm). இத்திரவம் முழுவதும் சில வேதிப்பொருட்கள், புரோடின்கள் மற்றும் சில அயனிகள், உப்புகள் என செல்லின் உயிர்தலுக்கு தேவையானவை இருக்கும்.

இங்கே உருளை மாதிரி மிதந்துகிட்டிருக்கு பாருங்க இவைதான் செல்லின் ஆற்றல் மூலங்கள் என்றழைக்கப்படும் மைட்டோகாண்டிரியா (mitochondria). இவற்றின் முக்கியப் பணி உணவிலிருந்து செல்லின் செயல்பாட்டிற்குத் தேவையான ஆற்றலாக அதாவது ATP யாக் (adenosine triposphate) மாற்றுவது.

இதோ இங்கே ஒரு மெல்லிய இழையால் கட்டப்பட்டிருக்கும் ரைபோசோம்கள் (ribosomes) மிக முக்கியமாக செல்லுக்குத் தேவையான புரோட்டின் உற்பத்தியாளர்கள். இவை தனியாகவும் சுழலும் அல்லது mRNA(messenger Ribonucleic acid) என்ற இழையால் கொத்தாகக் கட்டப்பட்டும் இருக்கும்.

இங்க கொஞ்சம் பாத்து ஜாக்கிரதையா வாங்க தடுக்கி இந்த லைசோசோம்களுக்குள் (lysosomes) விழுந்துராதீங்க. இதுகுள்ள செல்லின் அத்தனைக் கழிவுகளும் கொட்டப்படும், இதனுள் கொட்டப்படும் எதையும், சில வேதிப்பொருட்கள் மற்றும் என்சைம்கள் (enzymes) உதவியுடன் அது ஒரு மக்கிய சூப்பாக மாற்றிவிடும்.

அட இது என்ன பல இழைகள் சேர்த்துக் கட்டப்பட்ட கயிறு போல செல்லுக்கு குறுக்கே போயிகிட்டுருக்கு? ஓ!! இதுவரைக்கும் நாம பார்த்த பல உறுப்புகள் எல்லா செல்லுக்கும் பொதுவானவை, ஆனா நாம கொஞ்சம் சிறப்பு பணிகள் செய்கிற ஒரு செல்லுக்குள் நுழஞ்சிட்டோம். இக்கயிறு போன்ற நார்அமைப்புகள் இச்செல்லின் சிறப்பு பணிக்காக உள்ள ஒன்று அதனாலதான் மேல இருக்குற வரைபடத்துல கூட இந்தக்கற்றையான நார்கள் இல்லை. நாம அவசரத்துல ஒரு மனிதனின் இருதயச் செல்லுக்குள் நுழைஞ்சுட்டோம், அதனால இதயத்தின் சிறப்புப் பணியான சுருங்கி விரிதல் என்ற சிறப்புப்பணியை இந்தச்செல்தான் செய்யவேண்டும். அப்படிச்சுருங்கி விரியருத்துக்கான ஒரு சிறப்பு உபகரணம் தான் இப்புரோட்டின் நார்கள். இவை சுருங்கி விரிவதற்கு உதவியாகத் தேவையான ஆற்றலை அளிக்க ஆற்றல் மூலங்களான மைட்டோகாண்டிரியாக்கள் பக்கத்துலயே இருக்கு. இதேபோல், சிறப்புப் பணிகளுக்கான செல்களில் அப்பணியைச் செய்வதற்கான சிறப்புறுப்பிருக்கும்.

ஒரு வழியா செல்லின் மறு முனைக்கு வந்தாச்சு, இதோ நாம வெளியே வரும்போது இருக்குதே இந்த பஞ்சு போன்ற இலகுவான சவ்வுஇழைகள் இதுதான் ஒரு விலங்குச் செல்லின் சுவர். இதன் தனிப்பட்ட செயலே செல்லை அதன் வெளிப்புறச் சூழலிருந்து பாதுகாப்பதுதான். ஆனால் இது ஒரு கடினமான ஒரு சுவரைப்போன்றதல்ல, இதன் பரப்பிலும் பல சிறிய பம்புகள் (pumps - தமிழ்ல என்ன?) உண்டு. செல்லின் உள்ளே இருக்கக்கூடிய திரவத்தில் பொட்டசியம் அயனிகள் செறிந்து காணப்படும், ஆனால் செல்லின் வெளிப்புறத்தில் நீரும், கால்சியம் அயனியும் செறிந்து காணப்படும். இந்த கால்சியம் அயனி உள்ளே நுழைந்தாலும் சரி, நீர் உள்ளே நுழைந்தாலும் சரி, செல்லின் செயல்பாடுகளும் பாதிக்கப்படும், மேலும் உள்ளே பாயும் நீரினால் செல் ஒரு பலூன் போல உப்பி வெடித்துச் சிதறிவிடும். செல்லுக்கு வெளியே நீரின் செறிவும் அழுத்தமும் அதிகமாக இருப்பதால், எப்போதும் நீர் உள்ளே நுழைய முனைப்புடன் இருக்கும். அதனால் வெளியிலிருந்து உள்ளே நுழையும் நீரை வெளியேற்றுவதுதான் இப்பம்புகளின் வேலை.

ஆனால், முக்கியமான உறுப்புகளையும் அதன் செயல்பாடுகளையும் மட்டும்தான் நாம பாத்திருக்கோம், இன்னும் செல்லுக்குள்ள நிறைய கண்டுபிடிக்கப்படாத மற்றும் ஏனென்று தெரியாத உறுப்புகளும் உண்டு.

ஒரு வழியா செல்லுக்குள்ள போயிட்டு வெற்றிகரமா திரும்பியாச்சு, ஆனா நீங்க ஒன்னு கவனிச்சீங்களா நாம வெளிய வரும்போது உள்ளே ஒரு பரபரப்பு சூழல் உருவாக ஆரம்பிச்சுது. ஆமாம் நீங்க ஊகிச்சது சரிதான் நாம உள்ளே போய் சுற்றுப் பயணம் செஞ்ச செல் இறக்கப்போகுது அல்லது இறக்கவேண்டிய கட்டாயத்திலிருக்கிறது. ஆனால் அது இறக்க வேண்டிய கட்டாயம் என்ன? எப்படி இறக்கும்? என்பதை அடுத்த பகுதியில் உரையடுவோம்.(நெக்ரோசிஸ் - நிர்பந்திக்கப்பட்ட இறப்பு முறை)

************************
ஏற்கனவே குறிப்பிட்டது போல் காலஅவகாசங்கள் பொறுத்து கூடுமானவரை வாரத்திற்கு ஒரு பகுதியில் உரையாடுவோம்.

1.http://fig.cox.miami.edu/~cmallery/150/unity/cell.text.htm
2.http://www.animalport.com/img/Animal-Cell.jpg
3.http://imagine.gsfc.nasa.gov/docs/science/know_l1/emspectrum.html
4. "SEX & THE ORIGINS OF Death", by William R.Clark


** குறிப்பு

பூமியின் அடியாழத்தில், ஏறத்தாழ 4100 மீட்டர் ஆழத்தில், மிகவும் அரிதாக பூமியின் மையப்பகுதியில் இருக்கும் உருகுநிலை மாக்மாவும் கடல் நீரும் சேருமிடத்திலுள்ள வெப்பப் புள்ளிகளில் புதிய உயிர் தோற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறியுள்ளனர். மேலும் அங்குள்ள புதிய உயிரிகளைக் குறித்த மேலதிக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Saturday, February 2, 2008

இறப்பு - உரையாடல் - I

இறப்பு - கண்முன்னே நிகழும் ஒரு வாழ்வியல் யதார்த்தம், என்பதையும் தாண்டி, தாமும் ஒரு நாள் இல்லாமல் போயிவிடுவோம் என்ற சிந்தனை ஒரு விநாடியேனும் நம்மை உலுக்கத்தான் செய்கிறது, அல்லது ஒரு வெறுமையை ஒரு நொடிப்பொழுதாவது நம்மைச் சுற்றி படரச் செய்துவிட்டுத்தான அகல்கிறது. இறப்பு குறித்துப் பேசாத தத்துவங்களும் தத்துவ ஞானிகளும் மிகவும் அரிது. இறப்பு குறித்தான அறிவியல் பார்வைகள் என்ன என்பதை இப்பதிவிலோ அல்லது தொடர்பதிவாகவோ பகிர்கிறேன்.

இறப்பு குறித்தான ஒரு அறிவியல் கருத்து முரணை முன்வைத்துவிட்டுப், பின்னர் சில தேடுதல்களுக்கான விடைகளைப் பற்றிப் பார்ப்போம். தான் ஒரு நாள் இறந்துவிடுவோம் என்ற அறிவு மனிதவிலங்கிற்கு மட்டுமே உண்டு, என்று ஒரு சில அறிவியலாளர்கள் கூறுவதுண்டு. மனிதனின், தான் உயர்ந்தவன், என்ற அகம்பாவ எண்ணத்தினால் விளைந்த உடனடி முடிவு இது என்றும், அக்கூற்றிற்கான போதிய ஆய்வு அடிப்படையிலான ஆதாரங்கள் இல்லை என்றும் ஒரு சிலர் கூறுவதுண்டு. உண்மை எப்படியிருந்தாலும் இறப்பு குறித்தான சில ஆய்வுகளையும் சில அடிப்படைக்கேள்விகளுக்கான தேடல்களையும் பார்க்கலாம்.

முதலில் இறப்பு என்றால் என்ன? ஒருவர் ஏன் இறக்க வேண்டும்? ஒருவரின் உடலின் பல பாகங்கள் செயலிழந்து போனாலும், கோமாநிலையிலிருந்தாலும் அவர் இறக்கவில்லை என்றால் அதன் பொருள் என்ன? விபத்தில் எப்பகுதிகளில் எவ்வளவு சதவிகிதம் பாதிக்கப்பட்டால் உடனடி இறப்பும் எவ்வளவு சதவிகிதம் பாதிக்கப்பட்டால் உடலின் உயிர்ப்பு மீள்தலும் சாத்தியம் என்பன போன்ற பல அடிப்படைக்கேள்விகள் நாம் அனைவருக்கும் என்றாவது ஒரு முறை தோன்றி மறையும். இயற்கை மரணம் என்றால் என்ன? பிறக்கின்ற எல்லா உயிரினமும் இறக்க வேண்டும் என்ற தத்துவக்கூற்றுகள் எவ்வளவு உண்மையானவை? எல்லா உயிரினமும் இறந்துதான் ஆகவேண்டுமென்றால் இறப்பு என்பது பிறப்பின்போது பொறிக்கப்பட்ட ஒன்றா? என்பது போன்ற தொடர்க் கேள்விகள் நம்மை அலைக்கழித்து வீசியடிக்கும் சமயங்கள் உண்டு.

உயிருள்ள அல்லது உயிர்ப்புள்ள அனைத்தும் உயிரற்ற அணுக்களால் ஆனவை என்பது அனைவரும் அறிந்ததே. இப்படி உயிரற்ற அணுக்களின் வேதியல் வினைகளிலிருந்து உயிர் தோன்றியது என்பது ஒரு தனி சமுத்திரமளவிற்கான ஆராய்ச்சிகளின் கருப்பொருள். இப்போதைக்கு அச்சமுத்திரத்தின் கரையிலிருந்தே அதை இரசிப்போம். உயிர் தோற்றத்தில் ஒரு செல் உயிரிகள் தொடங்கிப் பல செல் உயிரிகள் வரை பரிணமித்தது மற்றுமொரு சமுத்திரம். இவை இரண்டுக்குள்ளும் மூழ்கி முத்தெடுக்க இருவேறு நெடுந்தொடர்ப் பதிவுகள் தேவை. ஆதலால் ஒரு உயிரின் அல்லது ஒரு உயிரினத்தின் இறப்பு என்ற ஒற்றைக் கேள்வியை முன்னிறுத்தி, சில அடிப்படை கருத்துக்களை ஏற்று அதனடிப்படையில் தொடரலாம். எல்லா பொருட்களும் அதன் அடிப்படைக் கட்டுமானமான மூலக்கூறுகள், மற்றும் அணுக்களால் ஆனது போல், எல்லா உயிரினத்திற்கும் அடிப்படைக்கட்டுமானமாக (fundamental building block) இருப்பவை செல்கள்.

மனித உடலில் மட்டும் ஏறத்தாழ 10^14 (10 ன் அடுக்கு 14) செல்கள் இருப்பதாகவும், அவற்றில் பல வகையான செல்கள் இருப்பதாகவும் (உதாரணமாக, மூளை, நரம்பு, தோல், நோய் எதிர்ப்புச் செல்கள்...) கூறுகின்றனர். ஒரு மனிதனின் இறப்பு என்பதின் மூலத்தைத் ஆராய்ந்தால், அது ஒருவரது உடலிலுள்ள செல்களின் இறப்பின் விளைவே என்பது புலப்படும். ஒரு செல்லின் இறப்பு என்றால் என்ன? ஒரு செல் எப்போது இறக்கும்? எந்த வகையான செல்கள் எவ்வளவு இறந்தால் ஒரு மனிதன் முழுமையாக இறந்தவனாகிறான்? என்பவை இயற்கையாகத் தோன்றும் கேள்விகள்.


செல்களின் இறப்பை சில வகைகளாகப் பிரிக்கலாம். அதில் விபத்து அல்லது ஒரு திடீர் நிகழ்வினடிப்படையில் நிகழும் இறப்பு நெக்ரோசிஸ் (necrosis) என்றழைக்கபடுகிறது. அதாவது, திடீரென தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள நிர்பந்திக்கப்படும் வகை. உதாரணமாக, தற்கொலை முயற்சிகளின் போதும், மாரடைப்புகளின் போதும், உடலில் உள்ள பலசெல்கள் இறப்பதற்கு நிர்பந்திக்கப்படுகின்றன. இவ்வகைச் செல் இறப்பு என்பது மிகவும் கொடூரமான அல்லது ஒரு சீரற்ற நிகழ்வு(disordered or chaotic ) என்று கொள்ளலாம். இவ்வகை இறப்பில், வலியின் தாக்கத்தைப் புற உடலின் இயக்கத்திலும் காணயியலும்.

மற்றுமொரு வகையான இறப்பு என்பது பகுக்கப்பட்ட ஒரு நிகழ்வு (programmed cell death). இவ்வகையான செல் இறப்பு மிகவும் அமைதியான ஒரு நிகழ்வாகவே இருக்கும். இவ்வகையான இறப்பிற்கு உதாரணமாக ஒரு குழந்தைக் கருவறையில் உள்ள போது அதன் கைகள் முதலில் ஒரு துடுப்பு போன்ற அமைப்பையே பெற்றிருக்கும் பின்னர் தொடர் செல்லிறப்புகளினால் கைகளில் விரல்கள் தோன்ற ஆரம்பித்துவிடும். இறப்பதற்காகப் பிறக்கிறோம் என்பதன்றி இறந்ததனால் பிறக்கிறோம் என்பதுவும் உண்மையே. இவ்வகை இறப்பு என்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்று என்றே கூறலாம். அச்செல்லுக்கு எப்படித் தெரிந்தது தாம் அப்போது இறக்க வேண்டுமென்பது? அதற்கான கட்டளைகள் எங்கிருந்து வருகின்றன?, அப்படி இறப்பதற்கான கட்டளை வந்தவுடன் அந்தச் செல் எப்படி இறக்கும் அல்லது அதன் வாழ்க்கையை எப்படி முடித்துக் கொள்ளும்? என இதிலும் பல தொடர் கேள்விகள் எழும்.
இப்படிச் செல் இறப்பு மற்றும் இறப்பு என்னும் நிகழ்வு செல்களுக்குள் நுழைந்தது எப்படி? இறப்பு என்பது பரிணாமத்தில் விளைந்த ஒன்றா? எனப் பல கேள்விகளுக்கான விடைகளை இனி இறப்பு என்றத் தொடர் பதிவுகளில் இணைந்து தேடுவோம்,/உரையாடுவோம்.
கூடுமானவரை வாரத்திற்கு ஒரு பகுதியில் உரையாடுவதற்கு முயற்சிக்கிறேன்.
இக்கட்டுரையில் (வரவிருக்கும் தொடர்களிலும்) பேசப்பட்டிருக்கும் பெரும்பாலான கருத்துக்கள் "SEX & THE ORIGINS OF Death" என்ற William R. CLARK ன் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை.