Showing posts with label சமச்சீர் கல்வி. Show all posts
Showing posts with label சமச்சீர் கல்வி. Show all posts

Monday, June 27, 2011

சமச்சீர் கல்வி - 2011




சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து பலரும் பேசியாகிவிட்டது நாம் என்ன புதிதாகச் சொல்லப் போகிறோம் என்ற எண்ணமும், எல்லாவற்றைப் பற்றியும் ஏதாவது சொல்லித்தான் ஆகவேண்டுமா என்ற அயர்ச்சியும் இருந்தாலும், மனதில் தோன்றிவிட்டது எங்காவது இறக்கி வைத்து விடலாம் என்பதால் சமச்சீர்கல்வி குறித்து இங்கே சில குறிப்புகளும் எண்ணங்களும்.

சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட, பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தின் மென்பதிப்பு பார்வைக்குக் கிடைத்தது.

புத்தகத்தின் உள்ளடக்கத்தில் சில புதியவை சேர்க்கப்பட்டுள்ளன. பழைய பாடத்திட்டத்திற்கும் இதன் உள்ளடக்கத்திற்கும் பெரிய அளவில் மாற்றமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

ஆனால், அவை விளக்கப்பட்டுள்ள முறை நிச்சயமாக பாராட்டத்தக்க வகையிலேயே இருந்தது. பாடத்தின் பின்னிருக்கும், பயிற்சி மற்றும் கேள்விகள் மிகச் சிறப்பாக கவனத்துடன் கையாளப்பட்டுள்ளன. வழக்கமாக புத்தகத்தை திறந்தவுடன் எந்திரவியலோ அல்லது அளவீடுகள் என்று வறட்டுத்தன்மையோடு துவங்கும் ஆனால் இப்புத்தகம் பரிணாம உயிரியலுடன் உயிர்ப்புடன் துவங்குகிறது.. :)

பயிற்சிக் கேள்விகள் மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கேள்விகள் மாணவரின் மனனத்திறமையையும், மீதமிருக்கும் கேள்விகள் மாணவரின் புரிதலை வெளிப்படுத்தும் விதமாகவும், சில கேள்விகள் பள்ளிக்கு வெளியே உள்ள சூழலில் மாணவர்களின் அவதானத்தையும், அதை பாடத்துடன் தொடர்புபடுத்தி அறிந்து கொள்ளும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இதில் குறிப்பிட்டு கூறவேண்டியது அதே துறையில் சமகாலத்தில் என்னென்ன மாற்றங்கள் நடைபெற்றுவருகின்றன என்ற குறிப்புகளும் ஆங்காங்கே வழங்கப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில் மிகவும் பாராட்டத்தக்க வகையிலே இருந்தது இம்மாற்றம். ஆங்காங்கே சில அச்சுப் பிழைகளும், முழுமையின்மையும் இருக்கலாம், ஆனால் அவை இக்கல்வித்திட்டத்தையே புறக்கணிக்கும் அளவில் இல்லை. அப்படியே இருந்தாலும், அவை வடிவமைப்பு மற்றும் அச்சுப்பணியின் கோளாறேயன்றி கல்வித்திட்டத்தின் கோளாறல்ல.

இக்கல்வித்திட்டம் நிச்சயம் மாணவர்களுக்கு ஒரு புதிய கல்வியனுபவத்தை வழங்கும் மாற்றுக்கருத்தில்லை, ஆனால், பாடங்களுக்குப் பின் இருக்கும் பயிற்சிக் கேள்விகளை முறையாக அதன் சாரம் குறையாமல் ஆசிரியர்கள் முன்னெடுத்துச் செல்வார்களா என்பதுதான் அய்யத்திற்குரியது.

இக்கல்வித்திட்டம் கண்டிப்பாக மாணவ-ஆசிரிய கூட்டுழைப்பை வேண்டி நிற்கிறது. மாணவர்களைப் பொருத்தவரை இவ்வகையான கல்வித்திட்டத்திற்கு அவர்கள் தயாராக இருப்பார்கள் என்று இப்பயிற்சியை வைத்து நான் உரையாடிய சில மாணவர்களின் ஆர்வத்திலிருந்து தெரிகிறது. ஆசிரியர்கள் தங்களை முழுமையாகத் தயார் நிலையில் வைத்திருக்கிறார்களா என்பது கேள்விக்குரியது.

தொடர்ந்து நோட்ஸ் வியாபாரம் செய்யும் ஆசிரியர்கள், நகல் எடுக்கும் எந்திரம் போல இதுவரை உள்ள கல்வித்திட்டத்திற்காக பயிற்று முறை தயாரித்து வைத்திருந்த நாமக்கல் வகையறா தனியார்க் கல்விநிறுவனங்கள், வினா-வங்கிப் பதிப்பகங்கள், உயர்ந்த கல்விமுறை என்ற கற்பிதத்தில் வாழ்க்கை நடத்திய மெட்ரிக் பள்ளிகள் போன்ற கூட்டு வியாபாரிகள் இக்கல்வித்திட்டத்தை எதிர்ப்பதில் இருக்கும் நோக்கத்தை எளிதாகப் புரிந்து கொள்ளமுடிகிறது.

இதுவன்றி இதனைத் தடைசெய்வதற்குப் பின்னிருக்கும் அரசியல் அனைவருக்கும் தெரிந்ததுதான் அதுகுறித்துப் பேச ஒன்றுமில்லை.

இணையத்தில் நான் வாசித்தவரை கால்புள்ளி இல்லை, அரைப்புள்ளி என்று அச்சுப்பிழைகள், இலக்கணப் பிழைகள் குறித்து பகுதி பகுதியாகவும், தரமில்லை என்று மேம்போக்கான குற்றச் சாட்டுகளும், மற்ற அரசியல் காரணங்களும் மட்டுமே சொல்லப்படுகின்றன, யாரும் காத்திரமான உரையாடலையோ அல்லது புறக்கணிக்க வலுவான காரணங்களோ முன்வைத்ததாகத் தெரியவில்லை.

எந்தக் கல்வித்திட்டமாகவும், எந்தப்பதிப்பகத்தைச் சேர்ந்ததாகவும் இருக்கட்டும், தமிழகத்தில் பிழையற்ற (அச்சு, இலக்கணம், தகவல், தவறான விளக்கம், ஆங்கிலம்/தமிழ்) ஒரு கல்விசார் புத்தகத்தை யாராவது பரிந்துரைத்தால் நன்றியுடவனாவேன்.

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தைப் பொறுத்தவரை சமச்சீர் கல்வித் திட்டம், பயிற்று முறை, வாசிப்பு, அவதானம் மற்றும் பொருத்திப் பார்த்து அறிந்துகொள்ளுதல் என அனைத்திலும், ஆசிரியர் - மாணவரின் கூட்டுழைப்பை வேண்டி நிற்கிறது.

இக்கல்வித்திட்டதினை தடை செய்வதற்கு என்னால் கீழ்வரும் ஒரேயொரு காரணத்தைப் புரிந்து ஏற்றுக் கொள்ளமுடிகிறது.

"பெரும்பான்மை ஆசிரியர்கள் இதனைக் கையாள போதுமான பயிற்சியும் வாசிப்பும் இல்லாமல் இருக்கிறார்கள். ஆசிரியர்களை முறையாகப் பயிற்றுவித்தபின் இதனை அறிமுகப்படுத்தலாம்."