Tuesday, December 21, 2010

நந்தலாலா - வாழ்த்துகள் மிஷ்கின்ஒரு வழியாக நந்தலாலா பாத்தாச்சு, என்ன ஒரேயொரு குறை, நாங்கள் வசிக்கும் இடத்தில் நந்தலாலா போன்ற படங்களை திரையரங்கில் வெளியிட யாரும் முன்வருவதில்லை. இராவணன், எந்திரன் எல்லாம் திரையரங்கில் ஒருநாள் காட்சியாக வெளியிட்டார்கள் பாத்தாச்சு ஆனா இந்த படத்துக்கெல்லாம் கூட்டம் வராது அதனால வாங்கறதில்லைன்னு சொல்லிட்டாங்க. சரி நாம நந்தலாலாவுக்கு வருவோம். திரையரங்கில் பார்க்கும் வரை பொறுமையில்லை இணையத்தில் கிடைத்த ஓரளவுக்குத் தரமான சுட்டிகளில்தான் பார்த்தேன் - மிஷ்கின் மன்னிப்பார்னு நம்புறேன்.

வாழ்த்துகள் மிஷ்கின் - எனக்கு ரொம்ப பிடிச்சது படம்.. அப்புறம் இளையராஜா எனும் சூரியனுக்கு என்னுடைய டார்ச் தேவையில்லை, ஆனாலும் மயக்குறார்னுதான் சொல்லனும். என்றும் இளமையென நிரூபித்துக்கொண்டேயிருக்கிறார், சாரு போன்ற இசை விமர்சகர்களை உங்களைப் போலவே நாங்களும் புறந்தள்ளப் பழகிவிட்டோம்.

என்னதான் அம்மா செண்டிமெண்ட் இல்லை என்று சொன்னாலும், என்னைப் போன்ற சராசரிப் பார்வையாளனுக்கு அப்படித் தோன்றுவதைத் தவிர்க்க முடியலை. இப்போதான் இடைவேளையே வருதான்னு தோணுவதையும் தவிர்க்க முடியலை. பின்னர் அந்த இராணுவ உடையில் வரும் இருவர் கதைக்கும் சூழலுக்கு ஒட்டாதது போன்ற நெருடல், ஒருவேளை இங்கதான் கிகுஜிரோ வருதோ என்னவோ. கால்களை வைத்துக் கதை சொல்லும் முறையை தனது முத்திரையாக்கிக முயற்சி செய்யறார் மிஷ்கின்னு தான் தோணுது. அஞ்சாதேவில் காட்சியோடு ஒட்டி இரசிக்க முடிந்த அளவிற்கு, நந்தலாலாவில் இரசிக்க முடியவில்லை, தேவையை யொட்டி கதை சொல்லும் முறையை வைத்திருக்கலாம், வலிந்து கால்கள் காட்ச்சியை திணிக்கத் தேவையில்லை. குறைன்னு சொல்லனும்னா எனக்கு மேல சொன்னவைதான் மற்றவையெல்லாம் நிறைதான்.

பல இடங்களில் வசனத்திலும், நடிப்பிலும், காட்சியமைப்பிலும், பிரமிக்கவும் இரசிக்கவும் வைத்திருக்கிறார் மிஷ்கின்..

உதாரணமாகக் காப்பகத்திலிருந்து தப்பி வந்தபின் ரோட்டில் நடந்து வரும் போது பின்னணியில் மணியடித்தபின் வயிற்றைத் தடவிக்கொண்டு அருகில் இருப்பவரிடம் சென்று பசிக்குது என்று சொல்லும் காட்சி. ஒழுங்குமுறையில் வளர்க்கப்படும் ஒரு மனித மூளை தனது உடல் தேவையினைக் கூட எப்படி புறவயமானதொன்றோடு தொடர்பு படுத்திக்கொள்கிறது எனும் உளவியலை காட்டும் ஒரு நுட்பமான காட்சி அது.

அந்தச் சிறுவனைப் போல வயிற்றைத் தடவிவிட்டு மூன்று விரலைக் காட்டிவிட்டு ஓடுவது, மாற்றுத்திரன் கொண்டவர் தனது கோலை வெட்டும்ப்போது கால் என்று அழுவதும், இறுதிவரை அந்தக் கோலையே காலாகப் பற்றிக்கொண்டு அழும் காட்சி.

இறுதியில் உங்க அம்மா செத்துட்டா என்றவுடன், வரும் சிறுவனின் முகத்தில் தெரியும் நடிப்பு மிக அருமை. அதை வெளிக்கொணர்ந்த மிஷ்கினும் பாராட்டுக்குரியவரே. ஒரு சிறுவன் எப்படி எதிர்வினை புரிவானோ அப்படியே இருந்தது அந்தக் காட்சி முழுவதும், வசனமும் வசன உச்சரிப்புகளும். "போடா மெண்டலில்" போடாவின் அழுத்தம் இன்னமும் காதுகளில் கேட்கிறது. அதனைத் தொடர்ந்து மிஷ்கினின் நடிப்பும் அருமை. பொதுவாக குழந்தைகளின் எதிர்வினைகளில் இந்த போடா அல்லது போடியில் உள்ள அழுத்தம்தான் அதிகமாக இருக்கும், அடுத்து வரும் வசவுச்சொல்லில் இருக்காது. அதை நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார் மிஷ்கின்.

வசனங்களில் பல இடங்களில் திடீரென நுழையும் நகைச்சுவை, மிகவும் இரசிக்க வைக்குது.
இருவரும் ஒருவரையொருவர் ஏமாற்ற முயன்று தோற்கும் பேருந்திநிலையக் காட்சி, இருவருமே அதற்கு சொல்லும் ஒரே காரணம்,
பஸ் ரோட்ல போகுது, வாய் ஊமையாயிடும், அய்யோ ராத்திரியாயிடுச்சு, அப்பந்தானே ஓடுவான் நீயேன் ஓடுன போன்ற வசனங்கள் மிக நேர்த்தியாக சரியான நேரத்தில் தெரித்து விழுவது இரசிக்க வைக்கின்றன.

ஆனால் எனக்கு சில இடங்களில் ஏன் அப்படிப்பட்ட காட்சியமைப்புன்னு புரியாம இருந்தது.

1. உப்புமாவில் இருக்கும் இந்தப் பச்சப் புல் சிவப்பு புல்லுன்னு எதைச் சொல்றார்னு தெரியலை.
2. ஏன் ஒரு மலைப்பாம்பு ஊர்ந்து போறதைக் காட்டினார்னு நானும் மனைவியும் பேசிகிட்டோம். எங்களுக்குத் தோன்றியது அவர்கள் அவ்வளவு அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் அதனால் அவர்களால் தங்களது வாகனம் உடைக்கப்படுவதை உணரமுடியவில்லை ன்னு நாங்களாகவே ஒரு லாஜிக்கை உருவாக்கிக் கொண்டோம். அப்புறம் இயற்கை மனிதன் அப்படின்னு கொஞ்சம் தத்துவம் பேசியும் பாத்தாச்சு, ஆனா சரியா வருமான்னு தெரியலை, யாராவது தெரிஞ்சா சொல்லுங்களேன்.


மொத்தமாக எங்களுக்கு மிகவும் பிடித்த படங்களுள் நந்தலாலாவும் ஒன்று - குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.

Friday, December 3, 2010

வேறொரு உயிர்

உயிர் குறித்து தத்துவார்த்தமான, மத ரீதியான, கடவுள் படைத்த மற்றும் அறிவியல் ரீதியான புரிதல்கள் பல உள்ளன.

அறிவியல் ரீதியாக கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், கந்தகம் (சல்பர்) மற்றும் பாஸ்பரஸ் போன்ற தனிமங்களே உயிரின் அடிப்படைக் கட்டுமானப் பொருளாக அறியப்பட்டது. அதில் பாஸ்பரஸ் பெரும்பான்மையான உயிரியின் மரபணுச் செய்திகளை உள்ளடக்கிய டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ ஆகிய வேதிப்பொருட்களின் முதுகெலும்பாகக் கருதப்பட்டு வந்தது. மேலும், பெரும்பான்மையான செல்களின் ஆற்றல் சுமக்கும் மூலக்கூறாகவும், செல் இழைகளில் லிபிட்களாகவும் பாஸ்பரஸ் அடிப்படையிலான மூலக்கூறு செயல்படுகிறது.

வேதி அட்டவனையில், பாஸ்பரஸிற்கு இணையான வேதிப்பண்புகளையுடைய தனிமமாக ஆர்சனிக் கருதப்படுகிறது. ஆனால், ஆர்சனிக் மனிதனுக்கும் மற்ற பெரும்பான்மையான உயிரிகளுக்கும் பெரும் தீங்கு விளைவிக்கக் கூடிய ஒரு தனிமம். அவை உடனடியாக உயிரின் வளர்சிதை மாற்றத்தை (metabolism) பாதிக்கக்கூடிய தனிமமாக கருதப்பட்டது.

பாஸ்பரஸிற்கு இணையான வேதிப் பண்புகளைக் கொண்ட ஆர்சனிக் உயிரிகளுக்கான நச்சுப் பொருளாக இருக்கும் முரண் ஆர்வமூட்டும் செய்தியாகவே இருந்து வந்தது.அதே சமயம், ஒரு சில பாக்டிரியாக்கள் மட்டும் ஆர்சனிக்கை சுவாசிக்கக் கூடிய பண்புகளைக் கொண்டிருந்தன என்பதுவும் அறியப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது கலிஃபோர்னியாவில் இருக்கும் "MonoLake" என்ற ஏரியில் GFAJ-1 என்ற புதிய நுண்ணுயிரி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது, அவ்வுயிர் பொது பாக்டீரியா வகையைச் சேர்ந்தது என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் அவ்வுயிர், பாஸ்பரஸிற்கு பதிலாக ஆர்சனிக்கைக் கொண்டு கட்டமைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பாஸ்பரஸிற்கு பதிலாக ஆர்சனிக்கை மாற்றுவது என்பது கணக்கீடு அளவிலேயே இருந்தது. முதல் முறையாக ஆய்வு ரீதியாக நிரூபனம் செய்யப்பட்டிருக்கிறது.

கலிஃப்போரினியாவில் இருக்கும் "Mono lake" எனும் ஏரியின் அடியிலே இவ்வகை உயிர் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவ்வேரி நீரில் உள்ள அசாதாரணமான உப்பும், காரத்தன்மையும் கொண்ட வேதியியல் அமைப்பிற்காகவே இவ்வேரியை ஆய்விற்காக தேர்ந்தெடுத்தனர் என்று குறிப்பிடுகின்றனர்.

இவ்வுயிரியை ஆய்வகத்தில் வைத்து, மிகக்குறைந்த பாஸ்பரஸும், அதிக அளவிளான ஆர்சனிக் சூழலையும் உருவாக்கி, அதிக ஆர்சனிக் சூழலில் மட்டுமே இவ்வுயிர் வளர்வதைக் கண்டிருக்கின்றனர்.

மேலும், இவ்வுயிரில் ஆர்சனிக், பாஸ்பரஸை முழுவதுமாக பதிலீடு செய்திருக்கிறதா என்பதை பல்வேறு ஆய்வுக்குழுக்களின் உதவியுடனும் அதியுயர் தொழில்நுட்பங்கள் மூலமும் நிரூபித்திருக்கின்றனர்.

"நமக்கு அருகில் பூமியில் இப்படி எதிர்பாராத ஒன்று நிகழுமாயின், நமக்குப் புலப்படாத அதிசயங்கள் இன்னும் எத்தனையோ இருக்கலாம்" என்று இவ்வாய்வில் முக்கியப்பங்காற்றிய "Felisa Wolfe-Simon" குறிப்பிடுகிறார்.

தகவல் (புகைப்பட) மூலம்:http://science.nasa.gov/science-news/science-at-nasa/2010/02dec_monolake/

மூலக் கட்டுரை: http://www.sciencemag.org/content/early/2010/12/01/science.1197258.full.pdf (ஆர்வமிருப்போர் (kaiyedu@gmail.com) தொடர்புகொண்டால் கட்டுரயை மின்னஞ்சலில் பெறலாம்)

http://gizmodo.com/5704158/ - இவ்விணைப்பில் காணொளி விளக்கமும் உள்ளது - நன்றி பதிவர் கும்மி அவர்களுக்கு.

இவ்வுயிர் குறித்து உரையாட அறிவியல் ரீதியாக விளக்கப்படாத பல கேள்விகள் உள்ளன, எப்படியாயினும் இது ஒரு ஆர்வமூட்டும் துவக்கம் மட்டுமே.

*************************************************************************************


தங்கள் மதப் புத்தகத்திற்கு எதிராக இவ்வாய்வு குறிப்பிடுகிறது அதனால் ஏற்க முடியாது என்று ஜல்லி அடிக்க விரும்புவோர் கீழுள்ள முகவரிக்கு தங்களது அய்யங்களை எழுதி தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

dr.tony.phillips@earthlink.net - நாசா கட்டுரையின் தொகுப்பாசிரியர்
felisawolfesimon@gmail.com - ஆய்வுக் கட்டுரையின் தொடர்பாசிரியர்.

Tuesday, October 5, 2010

நோபல் பரிசு 2010 - Dr.சுபாஷ் முகர்ஜிக்காக வருந்துவோம்


இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிப்புகள் வெளிவரத் துவங்கிவிட்டன. நேற்று அக்.4, 2010. மருத்துவத்துறைக்கான சிறந்த கண்டுபிடுப்புக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு, மருத்துவத் துறையில் செயற்கை கருத்தரிப்பு முறையைக் (invitro fertilization IVF) கண்டுபிடித்ததற்காக வழங்கப்படுகிறது. இப்பரிசு இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் எட்வார்ட்ஸ் Dr.Robert Edwards,க்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவர் 1950 ஆம் ஆண்டு செயற்கை கருத்தரிப்பு முறைகள் குறித்த தனது ஆய்வுப்பணிகளைத் துவங்கியிருக்கிறார். இவரது அயராத உழைப்பின் மூலம், 25 ஜூலை 1978 ஆம் ஆண்டு டெஸ்ட் டியூப் பேபி என்று சொல்லப்படும் முதல் ஆய்வுக்குழாய் குழந்தை பிறந்தது.
மருத்துவத்துறையில் இவர் ஒரு புதிய துறையையே திறந்துவைத்திருக்கிறார் என்றால் மிகையில்லை என்றுதான் கூறவேண்டும். இது குறித்த விரிவான அறிவிப்பு இங்கே: http://nobelprize.org/nobel_prizes/medicine/laureates/2010/press.html


முதலில் அவரது உழைப்பிற்குண்டான மரியாதையையும் வாழ்த்துகளையும் வழங்கிவிடுவோம்.

டாக்டர். ராபர்ட் அவர்களினது உழைப்பை எவ்வித குறைந்த மதிப்பீடுகளுக்கும் உள்ளாக்காத அதே வேளையில், டாக்டர் சுபாஷ் முகர்ஜி என்ற இந்தியரைப் பற்றி இவ்வேளையில் குறிப்பிடுவதும் வருந்துவதும் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஏன் அவருக்காக வருந்த வேண்டும்?

டாக்டர் சுபாஷ் முகர்ஜி எனும் இந்திய மருத்துவர், சுனித் முகர்ஜி மற்றும் சரோஜ் கண்டி பட்டாச்சார்யா ஆகிய இருவருடன் இணைந்து செயற்கை கருத்தரிப்பு முறைகளைப்பற்றி ஆய்வு செய்தவர். இவரது ஆய்வின் முடிவில் 3 அக்டோபர் 1978 ல் உலகின் இரண்டாவதும் ஆசியாவின் முதலாவதுமான ஆய்வுக்குழாய் குழந்தையை உருவாக்கியவர். முதல் மற்றும் இரண்டாம் குழந்தையின் பிறப்பின் தேதிகளை மீண்டும் கவனியுங்கள். வெறும் 69 நாட்கள் இடைவெளியில் அடுத்த குழந்தை பிறந்திருக்கிறது.
இன்றைய நவீன காலத்திலேயே குறைந்த பட்சம் மூன்று மாத இடைவெளி அறிவுத்திருட்டு அல்லாத இணையான கண்டுபிடிப்பாக ஒப்புக்கொள்ளப்படுகிறது.

அப்படி இருக்கையில் 1978-ல் தகவல் தொடர்பு மற்றும் ஆய்வுக்கட்டுரைகளினது பரிமாற்றம் இவை எதுவும் தற்போதிருக்கும் நிலையில் இல்லாத காலத்தில் வெறும் 69 நாட்கள் இடைவெளியில் ஒரு கண்டுபிடிப்பு என்பது சற்றேரக்குறைய உலகின் முதல் கண்டுபிடிப்பு என்ற தகுதியுடையதுதான்.

மேலும் முக்கியமாக டாக்டர் சுபாஷின் வழிமுறைகள் இங்கிலாந்தின் ராபர்ட் எட்வார்ட்ஸின் வழிமுறைகளிலிருந்து மாறுபட்டது என்பதும் கவனிக்கப்படவேண்டும்.

மருத்துவத் துறை சார்ந்த வார்த்தைகள் இருப்பதால் அவரது சாதனைகளாக அறியப்படுபவற்றை அப்படியே கொடுத்திருக்கிறேன்.

Some of his remarkable achievements are:
Used HMG for ovarian stimulation for IVF First to use transvaginal approach for ovum pick up
First to cyropreserve human embryos First to transfer embryo in a subsequent untreated cycle

இப்போது நாம் டாக்டர் சுபாஷ் இவ்விருதைத் தவறவிட்டதற்காக வருந்த வேண்டியதில்லை அதைவிட அதிகமாக வருந்த வேண்டிய செய்தி வேறு இருக்கிறது.

ஆம், 3-அக்டோபர் 1978 அவர் தனது ஆய்வு முடிவின் வெற்றியை அறிவிக்கிறார். இவரது ஆய்வின் முடிவுகளைச் சரிபார்க்க ஒரு குழு அமைக்கப்படுகிறது. இக்குழு அவரது முடிவுகளை தவறு என்று மறுக்கிறது, அதோடு அவரது ஆய்வு முறைகளையும், கண்டுபிடிப்பையும் விரிவாக விவரித்து ஒரு கட்டுரை எழுதவும், பின்னர் அக்கட்டுரையை ஜப்பானில் நடக்கவிருந்த ஒரு கருத்தரங்கில் சமர்பிக்கவும் அவருக்கு விடுப்பு மறுக்கப்படுகிறது.

அதோடு நிற்கவில்லை, அவரது கண்டுபிடிப்புகள் ஏமாற்று வேளையெனவும் அதற்கான தண்டனையாக அவரை துறைமாற்றம் செய்கிறது அரசு. இந்த அவமானத்தைத் தாங்கிக்கொள்ள இயலாமல் அவர் 1981 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சில முக்கிய நிகழ்வுகள்.

3 அக்டோபர்1978 - தனது கண்டுபிடிப்பை உலகுக்கு அறிவிக்கிறார்.

1978 ல் ஹார்மோனல் ஸ்டெராய்ட்ஸ் குறித்த சர்வதேச கூட்டமைப்பிலும், 1979 ஜனவரியில் இந்திய அறிவியல் கூட்டமைப்பிலும் தனது முடிவுகளை சமர்ப்பிக்கிறார்.

தனது ஆய்வின் முடிவுகளுக்கான நிரூபனங்களை அரசு ஏற்றுக்கொள்ளாததோடு அவரது ஆய்வின் நேர்மையும் சந்தேகத்திற்கிடமானதால், 1981-ல் தற்கொலை செய்துகொள்கிறார்.

அவரது இறப்பிர்க்குப் பிறகு 19 ஜூன், 1985 ல் ஜாதவ்பூரில் (மேற்கு வங்காலம்) அவருடைய பெயரில் உயிரியல் இனப்பெருக்கம் குறித்த ஒரு ஆய்வு மையம் நிறுவப்பட்டது.

பின்னர் 1991 ல் அவரது வாழ்க்கையை முன்வைத்து Ek doctor ki maut என்ற ஹிந்தித் திரைப்படம் தயாரிக்கப்பட்டது, பின்னர் அதற்கு தேசிய விருது கிடைத்தது என்பது தனிக்கதை.

ஆனால், முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது 1997 - 8 பிப்ரவரியில், மும்பையைச் சேர்ந்த உயிரியல் இனப்பெருக்க ஆய்வு மையத்தின் முன்னால் இயக்குனர் டாக்டர். டி.சி. ஆனந்த குமார் அவர்கள் புறஉதவியில் கருத்தரிப்பு தொழில்நுட்பம் குறித்த மூன்றாவது சர்வதேச கருத்தரங்கில், டாக்டர் சுபாஷ் முகர்ஜி நினைவுரை ஒன்றை ஆற்றுகிறார். டாக்டர் டி.சி ஆனந்த குமார், அவ்வுரையை நிகழ்த்தும் போது இந்தியாவில் முதல் செயற்கை கருத்தரிப்பு குழந்தையை உருவாக்கியவர் என்ற பெருமையைத் தாங்கி நிற்பவர் எனபது குறிப்பிடத்தக்கது.

அவ்வுரையில், டாக்டர் டி.சி ஆனந்த குமார் அவர்கள், டாக்டர் சுபாஷ் முகர்ஜி 1978-ல் வெளியிட்ட ஆய்வுக்குறிப்புகள், மத்திய மாநில அரசுகளிடம் சமர்ப்பித்த ஆய்வுமுடிவுகள் மற்றும் அவர் வெளியிடாமல் வைத்திருந்த அவரது ஆய்வுக்குறிப்புகள், நூலேடுகள் கட்டுரை என அனைத்தையும், ஒன்று திரட்டி, அவற்றைச் சரிபார்த்து பின்னர் அதன் முடிவகளையும் அதே உரையில் குறிப்பிடுகிறார். அவரது உரையில் இந்தியாவில் முதல் ஆய்வுக்குழாய் குழந்தையை உருவாக்கியவர் டாக்டர் சுபாஷ் முகர்ஜியே என்றும் அவருக்குத்தான் அந்தப் பெருமை உரித்தாகும் என்றும் குறிப்பிடுகிறார்.

அதோடு நில்லாமல், அதே ஆண்டு 10ஏப்ரல்1997 ல் "current science" என்ற இந்திய அறிவியல் பத்திரிக்கையில் இதனை விவரித்து கட்டுரையாக எழுதியிருக்கிறார் டாக்டர்.டி.சி ஆனந்த குமார் அவர்கள். இந்த நேரத்தில் டாக்டர் டி.சி ஆனந்த் குமார் அவர்களினது நேர்மையையும் பாராட்டுவது பொருத்தமாக இருக்கும்.

டாக்டர் சுபாஷ் முகர்ஜி அவர்களினது ஆய்வை அலட்சியப்படுத்தாமல் இருந்திருந்தால், சுதந்திரத்திற்குப் பின்னர் முழுக்க முழுக்க உள்நாட்டு உழைப்பிலும் சிந்தனையிலும் உருவான ஒரு அரிய கண்டுபிடிப்பிற்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும்.

டாக்டர் சுபாஷ் அவர்களினது வாழ்வின் முக்கிய தருணங்களை விளக்கும் சுட்டி இங்கே:
http://drsubhasmukherjee.com/doctor_subhas_mukherjee_recognition.html

டாக்டர் சுபாஷ் முகர்ஜி குறித்த அலுவல் வலைத்தளம் இங்கே: http://www.drsubhasmukherjee.com/index.html
Monday, October 4, 2010

காகங்களுக்காக சாலை விதிகளை மதிப்போம்

இந்தக் காணொளி, மனிதன் அமைத்துக்கொண்ட சமூக அமைப்பை நம்மை சுற்றியுள்ள ஒரு உயிரி எப்படி உள்வாங்கியிருக்கிறது என்பதை அற்புதமாக விளக்குகிறது. இந்தியாவில் இருக்கும் காகத்தின் பாடு கொஞ்சம் திண்டாட்டம்தான்.

*****************************************************************************************

***************************************************************************************

Friday, September 17, 2010

இன்று இப்படியாக

தமிழகம் இன்று இப்படியாகப் இருப்பதில், மிகவும் முக்கியப் பங்காற்றியவர்களுள் ஒருவர் என்றால் அதில் தந்தைப் பெரியாருக்கு மிக முக்கியமான இடமுண்டு.

பெரியாரின் பிறந்த தினமான (17 செப்டம்பர்) இன்றைக்கு அவரது உழைப்பையும் சிந்தனைகளையும் நினைவு கூர்வதில் மகிழ்ச்சி.
பெரியாரிய சிந்தனைகளையோ அல்லது பெரியாரினது எழுத்துக்களையோ அதிகம் வாசித்தவன் கிடையாது. அதனால் பெரிய திறனாய்வுக் கட்டுரை எழுதும் அளவிற்கு சரக்கும் கிடையாது. ஆனால், இன்றைக்கு நான் நானாக இருப்பதில் பெரியாரின் பங்கு முக்கியமானது என்ற ஒன்றே அவரை நினைவு கூற போதுமானதாக இருக்கிறது.

தமிழ்மணம் அறிமுகம் செய்த பூங்காவின் முதல் இதழில் நண்பர்/அண்ணன் திரு. தங்கமணி அவர்களது கட்டுரை பெரியார் குறித்த மிக நுட்பமானதொரு பார்வையை முன்னிறுத்துகிறது.

http://poongaa.com/content/view/66/1/Monday, September 13, 2010

இளங்கலை கணிதம் மாணவர்களுக்கு - ACM2010


இளங்கலை கணிதம் பயிலும் மாணவர்களுக்கு, Indian Institute of Mathematical Sciences, Taramani யில் ஐந்து நாள் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. அறிவியலில் கணிதத்தின் பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குறிப்பாக "Algebra and Analysis" இல் மாணவர்களின் புரிதலையும் பங்களிப்பையும் ஊக்கப்படுத்தும் முகமாக இப்பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.(பெரிது படுத்திப்பார்க்க புகைப்படத்தின் மேல் அழுத்தவும். கீழே சுட்டியில் தெளிவான வண்ணப்படம் காணக்கிடைக்கும்)

அங்கீகரிக்கப்பட்ட தரமான கல்வி நிறுவனங்களில் துறை முதல்வரின் பரிந்துரையுடன், இறுதியாண்டு இளங்கலை கணிதம் பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு கூறுகிறது. மேலும், Federation of Science clubs of Tamil Nadu (FSCT) இல் ஏற்கனவே உறுப்பினராக இயங்கும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் 20 -24 , 2010 ல் காலை 9 - மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என அறிவிப்பு குறிப்பிடுகிறது.

பதிவுசெய்தல் அனைவருக்கும் இலவசம் எனவும், பயிற்சி வகுப்புகளில் வழங்கப்படும் கல்விச்சாதனங்கள், பங்கேற்புச் சான்றிதழ், சிற்றுண்டி, மற்றும் உணவு என அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.கீழுள்ள சுட்டியில் இப்பயிற்சி வகுப்பு குறித்து மேலதிகத் தகவல்கள் பெறலாம் :
http://www.imsc.res.in/~office/acm2010/ACM2010Poster.pdf
(மேலே புகைப்படமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.)

கீழுள்ள சுட்டியில் விண்ணப்பப் படிவம் கிடைக்கிறது:
http://www.imsc.res.in/~office/acm2010/ACM2010RegistrationForm.pdf

உங்களுக்கோ அல்லது உங்கள் வீட்டிலோ அல்லது நட்பு வட்டத்திலோ யாருக்கேனும் பயன்படலாம், என்ற நோக்கில் இங்கே பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது.

மின்னஞ்சலில் பகிர்ந்து கொண்ட நண்பர் திரு. டில்லி பாபு அவர்களுக்கு நன்றிகள்

பயண அனுபவம்

சமீபத்திய கார்பயண அனுபவம் பற்றி சில குறிப்புகள். நீல நிறத்தில் இருப்பவை எனது சொற்கள். மற்றவை ஓட்டுனருடையது.

"குட் மார்னிங்க சார்.. "

போய்க்கொண்டிருக்கும்போது, "யாரோ பெரியவங்களாயிருப்பாங்கன்னு நினைச்சு வந்தேன் சார், இவ்ளோ சின்னப்பையனா இருப்பீங்கன்னு எதிர்பார்க்கலை சார்.. "

" :( "

" பாட்டு போடட்டுமா சார்"

"ம் போடுங்க.."

"காலையில பக்தி பாட்டுலதான் சார் ஆரம்பிப்பேன், நீங்க பக்திப் பாட்டெல்லாம் கேப்பீங்கள்ள சார்"

"ம் கேட்பேங்க"

" இந்த அம்மாவுக்கு (எல். ஆர். ஈஸ்வரி) என்னா குரல் சார், எங்க ஊர் அம்மன் திருவிழா எல்லாம் இந்த அம்மாவோட பாட்டோடதான் ஆரம்பிக்கும்"

"இந்தோ வருது பாருங்க சார், இந்த காலேஜ் பசங்க, அன்னிக்கு ..... இப்படியெல்லாம் கூத்தடிச்சாங்க சார். நீங்க படிக்கும்போது, இப்படியெல்லாம் ஜாலியா இருந்தீங்களா சார்.."

" நீங்க சொல்ற அளவுக்கு இல்லை"

"பாத்தாலே தெரியுது சார், ஒரு மணி நேரமா ஒன்னா வர்றோம், இப்போதான் சார் பேசறீங்க, நானேதான் பேசிகிட்டு வந்தேன். "

" :) "

போகிற வழியில் வந்த ஒவ்வொரு பொறியியல் கல்லூரி பற்றியும் அதன் மாணவர்கள் மற்றும் நிறுவனர்கள் பற்றியும் ஒவ்வொன்றைக் குறிப்பிட்டார்.

" பக்திப்பாட்டு போதும் சார், வேற பாட்டு போடுவோமா சார்"

"ம். போடுங்க"

"சினிமாவெல்லாம் பாப்பீங்களா சார், சினிமா பாட்டெல்லாம் கேப்பிங்களா"

".. ம்.. கேட்பேங்க"

"என்னதான் சொல்லுங்க சார், ஆஸ்கர் அப்படி இப்படின்னாலும், நம்ம இளைய ராஜா பாட்டு மாதிரி வராது சார். வந்த புதுசுல கேக்கறமாதிரி இருக்கும்சார், ஆனா போகப்போக போரடிக்கும் சார், ஆனா இளையராஜா பாட்டு அப்படி இல்லை சார், எப்போ வேணாலும் கேக்கலாம் சார்."

" :) " (மனதிற்குள் : நீங்க மட்டும் பதிவரா இருந்தா உங்களைக் கும்மிருப்பாங்க)

"நான் சின்னப் புள்ளையா இருந்தப்போ எங்க வீட்டுல ஒரு ரேடியோ இருக்கும் சார், அதுல தினமும் காலைல கொஞ்ச நேரம் பாட்டு போடுவாங்க, அதக் கேட்டுட்டுதான் சார் ஸ்கூலுக்கே போவோம். இப்போதான் டிவி வந்துடுச்சு எப்போ பாத்தாலும் பாட்டு போடுறாங்க.."

"உங்களுக்கு இளையராஜா பாட்டு புடிக்குமா இல்ல ரகுமான் பாட்டு புடிக்குமா சார்"

" .... "

"ரெண்டு பேரும், நல்லாதான் சார் போடுறாங்க, ஆனாலும் நமக்கு ரொம்ப புடிச்சதுன்னு ஒன்னு இருக்கும்ல சார்"

" ..... "

" இளையராஜாவோட பாட்டுல ஒரு உயிர் இருக்கும் சார். அவரு எல்லாத்தையும் ஏற்கனவே போட்டுவச்சுட்டாரு சார், இப்போ இருக்கவங்க அவரு போட்டு வச்சதை அங்கங்க உருவி கலந்து அடிக்கிறாங்க சார் அவ்ளோதான்"

" :) "


" நீங்க என்ன வேலை பாக்குறீங்க?"

" .... "

" அப்படின்னா என்னா செய்வீங்க? எனக்கு கூட ஸைன்ஸல் ரொம்ப இண்டரஸ்ட் உண்டு சார்?

அது எப்படி வேலை செய்யுது, இது என்ன? இதை எப்படி சார் கண்டுபிடிச்சாங்க? என தொடர்ந்து கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார்.

" இந்த மனுசன் தனக்காக என்னவெல்லாம் கண்டு பிடுச்சு வச்சிருக்கான் சார், நினைச்சுப் பார்க்கவே ஆச்சர்யமா இருக்கு சார்"

" சார் உங்களுக்கு ஹிந்தி தெரியுமா சார்? எத்தனை மொழி சார் தெரியும்"

"ஹிந்தி தெரியாதுங்க.."

" நமக்கு தமிழும் கொஞ்சம் இங்கிலீசும் தான் வரும். அதான் நம்ம கலைஞர் ஹிந்தியெல்லாம் வேணாண்டா தமிழ மட்டும் படிடா போதும்னு சொல்லிட்டாரு"

" கோயம்பத்தூர் செம்மொழி மாநாடு டிவில பாத்தீங்களா சார்? எவ்ளவோ பேர் வெளிநாட்லேருந்தெல்லாம் வந்திருந்தாங்களாம் சார்"

அதெல்லாம்விட இந்த மொழின்றத யார் சார் கண்டுபிடிச்சாங்க? இது இப்படி எழுதினா இதுன்னு யாரு சொன்னாங்க? எப்படி உலகத்துல இத்தனை மொழியைக் கண்டுபிடிச்சாங்க?

எனக்கு தெரிந்தவரை எதையோ சொல்லி வச்சேன்.

" உங்களாள இன்னைக்கு ஒரு புது விசயம் தெரிஞ்சிகிட்டேன் சார், இதை நியாபகம் வச்சிருப்பேன், இரஞ்சித் சார் வந்தாரு அவருகிட்டேருந்து இதைத் தெரிஞ்சிகிட்டோம்னு"

"காபி சாப்பிடலாமா சார்.. "

" ம்.. சாப்பிடலாங்க.."

மொத்தமாக காரில் அவருடன் பயணம் செய்த அந்த ஐந்து மணி நேரத்தில், எவ்வளவோ பேசமுடிந்தது. அடிக்கடி " நான் ரொம்ப பேசி டிஸ்டர்ப் பண்றேனா சார் " னு கேட்டுக்கொண்டார். ஆனாலும், எல்லாவற்றைப் பற்றியும் ஏதோயொரு கருத்தை முன்வைத்தே ஆகவேண்டும் என்று நினைக்காமல், தனக்கு என்ன தெரியும், எது தனக்கு ஆர்வமூட்டும் என்பதை அறிந்து அந்த திசையிலேயே உரையாடலை இட்டுச் சென்றுகொண்டிருந்தார். இடையிடேயே காரின் டோர்லாக்குகளைக் கையால்வது பற்றியும், தற்போது வெளிவரும் பல மாதிரிகளின் நிறை குறைகள் என்னென்ன என்றும், தனது பணி நிமித்தமான அறிவையும் பகிர்ந்து கொண்டார்.

இந்த பயணத்தின் உரையாடல் அவருடைய போக்கிலேயும், மையக்கரு அவரிடமிருந்தே வருமாறும் கவனமாகப் பார்த்துக்கொண்டேன். இந்த சார் எல்லாம் வேணாம்னு சொன்னாலும், பின்னர் சாரோடு எனது பெயரைச் சேர்த்திக்கொண்டு இரஞ்சித் சார் என்று அழைக்க ஆரம்பித்தார். புகைப்படக் கருவி எதுவும் கையில் இல்லாததால் புகைப்படம் எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. எப்படியோ ஆர்வமூட்டும் ஒரு மனிதராகவும் நல்ல பயண அனுபவமும் தந்தார் என்பது மட்டும் உண்மை.
Wednesday, September 1, 2010

உமாசங்கர் I.A.S. - விண்ணப்பம்

உமாசங்கர் I.A.S. இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர் என்பது வெள்ளிடை மலை. புதிய திட்டங்கள், செயல் முறைகள் என்று தனக்கென ஒரு பாணியில் நற்பணி செய்து வந்த அவருக்கு இன்றைய அரசு அளித்துவரும் "தண்டனை" , அதற்குரிய காரணம் எல்லாமே என் போன்ற ஒரு குடிமகனுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.

அரசு இது போன்ற அதிகாரிகளுக்கு தண்டனைகளைத் தருவதற்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும், கண்டனத்தையும் இவ்விடுகை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

*************************************************************************************

இந்தத் தேரிழுப்பில் சற்று தாமதத்தில் வந்த கையாக இங்கே பதியப்படுகிறது.

Saturday, June 26, 2010

FIFA-2010_கால்பந்துத் தொழில்நுட்பம்

FIFA2010 ல் பயன்படுத்தப்படும் கால்பந்தின் வடிவமைப்பு, தயாரிப்பு, மற்றும் தரப் பரிசோதனைத் தொழில்நுட்பங்கள் அடங்கிய காணொளிகள்.

**************************************************************************************
பந்து வடிவமைப்பும் எண் - 11 ம்****************************************************************************************
பந்து தயாரிப்பு முறை****************************************************************************************
காற்றில் பந்தின் இயக்கம் குறித்த தொழில்நுட்பமும் வடிவமைப்பும்.**************************************************************************************
பந்தின் தரம் பரிசோதித்தல்.


*************************************************************************************

சென்ற உலக்கோப்பைக் கால்பந்தாட்டச் சுற்றில் 60% பந்துகள் சண்டிகரில் தயாரிக்கப்பட்டவையே, இந்த ஆண்டில் கேரளாவின் இரப்பர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. விளையாட்டிலும் பங்கேற்காமல், தொழில்நுட்பத்திலும் பங்கேற்காமல், மனிதவளத்திலும், இயற்கை வளத்திலும் மட்டும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறோமோ..

Friday, June 25, 2010

பிரேசில்-போர்சுகல்_FIFA-2010_25-06-2010

இன்று 25ஜூன் 2010 ல் பிரேசில் மற்றும் போர்சுகல் அணியினர் மோதினர். எனது அபிமான வீரர்கள், ராபின்ஹோவும், ரொனால்டோவும் (போர்சுகல்) எப்படி ஆடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. ஆட்டம் துவங்கும் முன்னர் ராபின்ஹோ இல்லையென்றதும் சிறிது ஏமாற்றம்தான், ஆனாலும், இது ஆட்ட நுணுக்கங்களுள் ஒன்றுதான், என்று மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.

ஆட்டம் ஆரம்பிக்கும் முன்னரே இந்த ஆட்டம் விறுவிறுப்பு குறைவானதாக இருக்கும் என்று கருதினேன். அதே போல் மிகவும் மந்தமான ஒரு ஆட்டம். என்ன சொல்வது, இரண்டு அணிகளுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தன. அதனால், வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இரண்டு அணிகளுக்குமே இல்லாமல் இருந்தது.

இரண்டு அணிகளும் தடுப்பாட்டம்தான் ஆடினர் மொத்த ஆட்டத்திலும், இரண்டு அணிகளும் தலா மூன்று முறை மட்டுமே, இலக்கை நோக்கி உதைத்தனர். ஏற்கனவே ஆட்டம் மந்தமாகப் போய்க்கொண்டிருந்தது, ஆனால் நடுவர் வேறு தொட்டால் குத்தம், பட்டால் குத்தம் என்று நினைத்த நேரத்திலெல்லாம் மஞ்சள் அட்டையை எடுத்துக் காட்டிக்கொண்டிருந்தார். சிவப்பட்டை வாங்கினால், அடுத்த போட்டியில் விளையாட முடியாது என்ற நிலையிருப்பதால் கொஞ்சம் அடக்கி வாசித்தே விளையாடிக்கொண்டிருந்தனர். அதே சமயம், இரண்டு அணியின் பயிற்றுனர்களுமே தற்காப்புக்காக மஞ்சள் அட்டை பெற்றவர்களை விரைவில் வெளியேற்றி மாற்று ஆட்டக்காரர்களை உள்ளே அனுப்பிவிட்டார்கள்.

போர்சுகலின் ரொனால்டோவை ஆள்குறிப்பு செய்தவர் பிரேசில் அணியின் தலைவர் லூசியோ. இந்த ஆட்டத்தில் கவர்ந்தவர் லூசியோ மட்டுமே. தனது பணியைச் சிறப்பாக செய்தார். பல இடங்களில் ரொனால்டோவை நன்றாகச் சமாளித்தார்.

ரொனால்டோ தன்னிடம் வரும் போது மட்டும் விளையாடிவிட்டு மற்றபடி ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு வேளை அதிகம் விளையாடி எதுவும், காயம் பட்டுக்கொள்ள வேண்டாம் என்று கருதியிருக்கலாம்.

இரண்டாவது பாதி துவங்கியவுடனேயே, போர்சுகல் அணியினர் விறுவிறுப்பாகத் துவங்கினர். சரி இரண்டாவது பாதியாவது விறுவிறுப்பாக இருக்கும் என்று பார்த்தால் சிறிது நேரத்தில்அதுவும் குறைந்துபோனது. போர்சுகளின் மாற்று ஆட்டக்காராக வந்த SIMAO கொஞ்சம் விறுவிறுப்பாக விளையாடினார்.

2002 FIFA வின் போது நண்பர்கள் குழுவுடன் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம் அப்போது பிரேசிலின் அணியில் காகாவும், மாற்று ஆட்டக் காரராக ராபின்ஹோவும் வருவார்கள். பிரேசிலுக்கான வருங்கால நட்சத்திரமாக வருவார்கள் என்று அப்போதே எங்களுக்குள் பேசிக்கொண்டது இன்று நிஜமாகியிருக்கிறது. அதேபோல், இன்றைக்கு காகா, ராபின்ஹோ என்று வர்ணனையாளர்கள் விடாமல் பேசிக்கொண்டிருக்கும் வகையில் அடுத்த உலகப்கோப்பையில், நில்மர், நில்மர் என்று சொன்னால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

அவர் பிரேசிலுக்கான எதிர்கால நட்சத்திரமாக இருக்கப்போகும் ஒருவர் என்பதற்கான அனைத்து சாத்தியங்களையும் காட்டினார். என்ன.. சிறிய வயதுக்காரராகவும் உடல் வலுவில்லாதவராகவும் இருப்பதால், ஒரு சில இடங்களில் தடுமாறினார் ஆனால், போகப் போக நிபுணராகிவிடுவார் என்று கருதுகிறேன்.

இறுதியில் இரண்டு அணியினரும் கோல் எதுவும் போடாமல் ஆட்டம் முடிந்தது. எப்படியோ ஒரு அலுவல் நிமித்தமான ஆட்டமாகவே இருந்தது எவ்வித விறுவிறுப்பும் இல்லாமல்.

அடுத்த சுற்றில் மிகவும் ஆர்வமாக எதிர்பார்க்கும் ஆட்டம் அர்ஜெண்டினா - மெக்சிகோ.. இனிமேல் எந்த போட்டியையும் லேசாக எடுத்துக்கொள்ள முடியாது அதனால், வரும் ஞாயிறு கண்டிப்பாக காண வேண்டிய ஒரு ஆட்டமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Thursday, June 24, 2010

அர்ஜெண்டினா - கிரீஸ்_ FIFA2010

அர்ஜெண்டீனா - கிரீஸ் அணிகளுக்கிடையே கடந்த ஜூன் 22ஆம்தேதி நடந்த போட்டி, இதுவரையில் FIFA 2010 ல் நான் பார்த்த அனைத்துப் போட்டிக்களைக் காட்டிலும், சிறப்பாக இருந்தது. அதிலும் அர்ஜெண்டினா விளையாடும் போட்டிகள் அனைத்திலுமே அர்ஜெண்டினாவின் விளையாட்டு விறுவிறுப்பாகவே இருந்தது.

அர்ஜெண்டினாவைப் பொறுத்தவரை ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தாலும், கிரீஸிற்கு இது மிக முக்கியமான ஆட்டம், வெற்றி பெற்றாலும் குறிப்பிட்ட கோல் கணக்கிலோ அல்லது தென்கொரியா - நைஜீரியா அணிகளின் ஆட்டமுடிவும் இணைந்து கிரீஸின் அடுத்த சுற்றுக்கான தகுதியை நிர்ணயிப்பதாக இருந்தது.

ஆட்டம் துவங்கியவுடன் மெஸ்ஸி, மெஸ்ஸி எங்கு பார்த்தாலும் மெஸ்ஸி, ஆனால் மெஸ்ஸியை இன்று விளையாடவே விடக்கூடாது என்ற முடிவில் கிரீஸ் அணியினர் இருந்தனர். பந்து எங்கிருக்கிறது என்பதைப் பற்றி அவர்களுக்குப் பெரிதும் கவலையில்லை, மெஸ்ஸி எங்கிருக்கிறார் என்பதுதான் அவர்களது முக்கியக் கவலையாக இருந்தது. அதிலும், கிரீஸ் அணியின் தலைவர் Georgios KARAGOUNIS (10) மெஸ்ஸியின் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தார், அதுதான் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையாகவும் இருந்திருக்கும். முதல் பாதி முழுவதும், கிரீஸின் முன்னணி வீரரான சமராஸ் தவிர அனைவரும் கிரீஸின் பகுதியிலேயே நின்று அர்ஜெண்டினாவைத் தடுத்தாடிக்கொண்டிருந்தார்கள்.

இரண்டாம் பாதியில் கிரீஸ் அணியினர் சிறிது முன்னேறி ஆட முயற்சித்தாலும், என்ன காரணமோ தெரியவில்லை, அதுவரை சிறப்பாக தனக்களிக்கப்பட்ட வேலையைச் செய்துவந்த KARAGOUNIS வெளியேறி மாற்று ஆட்டக்காரர் வந்தார். இரண்டாம் பாதியில் மெஸ்ஸியை கொஞ்சம் விளையாடவிட்டார்கள், அவ்வளவுதான் தோற்றுவிட்டார்கள். மெஸ்ஸி பந்துடன் நகரும் வேகமும் லாவகமும், ... என்ன சொல்வது பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஆனாலும், அவர் மிக லாவகமாக முன்னேறிச் சென்று உதைத்தது பக்கவாட்டுக் கம்பியில் பட்டுத் திரும்பியது மிகவும் ஏமாற்றமளித்தது.

இறுதியில் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் அர்ஜெண்டினா வென்றது.

ஆட்டத்தில் கிரீஸின் கோல் கீப்பர் Sergio Romero பற்றி நிச்சயம் குறிப்பிட வேண்டும், மிகச் சிறப்பாக தனது பணியினைச் செய்தார். ஆனாலும், அவருக்கு சக ஆட்டக்காரர்கள் சரியாகத் துணைபோகாததாலேயே இரண்டு கோல் விட்டுவிட்டார்.

மற்றபடி அட்டத்தில் குறிப்பிடப்படும்படியாக அன்று விளையாடிவர்கள் என்றால், அர்ஜெண்டினாவின் வெரொன், அதிலும், யாரும் எதிர்பாராத நேரத்தில், சற்றேறக்குரைய 35-40 மீட்டர் தூரத்தில் இருந்து அவர் கோலை நோக்கி உதைத்த பந்து ஒன்று (GK) Sergio Romero வால் தடுக்கப்பட்டது. ஆட்டம் முழுவதும் வெரோன் அவருடைய பணியைச் சிறப்பாகச் செய்திருந்தார்.

கிரீஸின் பகுதியில் சிறப்பாக விளையாடியவர் அல்லது தனியாகப் போராடிக்கொண்டிருந்தவர், சமராஸ் மட்டுமே, அவரை விட முக்கியமாக கிரீஸின் கோல்கீப்பரின் விளையாட்டு மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

எப்படியாயினும், இந்த உலகப் கோப்பைக் கால்பந்தாட்டப் போட்டிகளில் மிகவும் கவர்ந்த ஆட்டக்காரர் "மெஸ்ஸி". அவரது ஆட்டம் அத்தனை அழகு.

கீழேயுள்ள சுட்டியில் விளையாட்டின் முக்கிய தருணங்கள் இருக்கின்றது.

http://www.fifa.com/worldcup/highlights/video/video=1255368/index.html

*************************************************************************************
மேலும் பள்ளிப்பருவத்தில் மிகவும் கவர்ந்தவர் மரடோனா . அவரைப் போல நினைத்துக் கொண்டு விளையாடுவது மற்றும் அவரது எண் மற்றும் பெயர் கொண்ட ஸ்டிக்கர்களை புத்தகங்களில் ஒட்டிய பலவாயிரம் பேர்களில் நானும் ஒருவன்.

அவரது "God's Hand" என்ற புகழ்பெற்ற வாக்கியமும் அந்த கோல் சென்ற விதமும் கீழே உள்ளது.*************************************************************************************
மரடோனாவைப்போலவே விளையாடும் மெஸ்ஸியும் இதேபோல ஒரு கோல் போட்டு இதே வாக்கியத்தைப் பயன்படுத்தினார் என்பது மேலும் குறிப்பிடத்தகுந்த ஒற்றுமை. அதுமட்டுமில்லாமல் விளையாட்டுத் திறன் மற்றும் பந்துடன் முன்னேறும் பாங்கு அனைத்திலும் இருவருக்கும் உள்ள ஒற்றுமை வியக்கத்தக்கது. கீழே அவர்கள் இருவர் பற்றிய ஒரு ஒப்பீட்டுக் காணொளி ஒன்று உள்ளது.
*************************************************************************************
நான் எதிர்பார்த்த மற்றொரு வீரர் பிரேஸிலின் ராபின்ஹோ.. அவர் இன்னும் பிரகாசிக்க ஆரம்பிக்கவில்லை, பிரேஸில் அணியே இன்னும் பிரகாசிக்கத் துவங்கவில்லை என்பது எனது ஆதங்கமும் கூட.

Thursday, June 10, 2010

எதிர் கேள்விகள் - மின்னஞ்சலில் வந்தது

நண்பர் ஒருவர் மின்னஞ்சல் குழுமத்தில் கொலம்பஸிற்கு திருமணம் ஆகியிருந்தால் அவரது மனைவி கேட்டிருக்கக் கூடிய கேள்விகள் என ஒரு பட்டியல் அனுப்பினார். உடனடியாக அதற்கு எதிர்வினையாக தோழி ஒருவர்,
திருமதி கொலம்பஸ் எவ்வகையான கேள்விகளை எதிர்நோக்கியிருப்பார் என ஒரு பதிலுரையை அனுப்பினார். உங்கள் பார்வைக்கு இங்கே இரண்டும்.
------------------------------------------------------------------------------------------------

கொலம்பஸ் எதிர்நோக்க வேண்டியிருந்த கற்பனைக் கேள்விகள்

எங்கே போகிறாய்?

யாருடன் போகிறாய்?

ஏன் போகிறாய்?

எப்படிப் போகிறாய்

எதைக் கண்டுபிடிக்கப் போகிறாய்?

ஏன் நீதான் போகவேண்டுமா?

நீ இல்லாத போது நான் என்ன செய்வது?

நானும் உன்னுடன் வரலாமா?

எப்போது திரும்புவாய்?

இரவு உணவுக்கு வருவாயா?

எனக்கு என்ன கொண்டு வருவாய்?

நீ வேண்டுமென்றே என்னைத் தவிர்த்து பயணம் செய்கிறாய் இல்லையா?

நீ இது போன்ற பயணங்களைக் கடைசி நேரங்களில் செய்கிறாய்

எனக்கு பதில் சொல்?

நான் என் தாயார் வீட்டுக்குப் போக வேண்டும்.

என்னை அங்கு விட்டுவிட்டுச் செல்

எனக்குத் திரும்ப வரவே விருப்பமில்லை.

சரி. என்றால் என்ன அர்த்தம்?

ஏன் என்னை மறுக்காமல் இருக்கிறாய்?

என்ன கண்டுபிடிப்போ? என்னவோ? எனக்குப் புரியவில்லை

நீ எப்பவும் இப்படித்தான் செய்கிறாய்

சென்ற முறையும் நீ இப்படித்தான் செய்தாய்.

இப்போது நீ அடிக்கடி இது போலச் செய்கிறாய்.

இன்னும் என்னதான் கண்டுபிடிக்கப் படாமல் இருக்கிறதோ எனக்குப் புரியவேயில்லை.

****************************************************************************

இதுவே திருமதி கொலம்பஸ் கண்டுபிடிப்பிற்காக கிளம்பியிருந்தால் எதிர்நோக்க வேண்டியிருந்திருக்கும் கேள்விகள் என தோழி எழுதியவை.


"இது திருமதி கொலம்பஸ் என்றில்லை எந்த திருமதியானாலும் கீழ்க்கண்ட கேள்விகளை எதிர் நோக்க வேண்டியிருக்கும்" - தோழி

குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள்?

என்னை யார் பார்த்துக் கொள்வார்கள்?

நீ இப்படி போகிறேன் என்றால் என் பெற்றோர்களை யார் பார்த்துக் கொள்வார்கள்?

உன்னுடைய பொறுப்புகளிலிருந்து நீ தப்பித்துக் கொள்ள முடியாது.

நீ நெடுங்காலம் வராதிருந்தால் நான் இரண்டாவது திருமணம் குறித்து யோசிக்கலாமா?

நீ உன்னைப் பற்றி மட்டும் சிந்திக்கக் கூடாது, மொத்தக் குடும்பத்தையும் சேர்ந்து சிந்திக்க வேண்டும்.

நீ போவதால் எனக்கோ எனது குடும்பத்திற்கோ என்ன லாபம்?

"அதனால், ஆண்கள் மட்டும் இதுபோன்ற கேள்விகளை எதிர்நோக்குவது கிடையாது, ஒரு கண்டுபிடிப்பிற்காக வீட்டை விட்டு வெளியே செல்ல எத்தனிக்கும் பெண்கள் சந்திக்கும் கேள்விகளும் அதிகம்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். "- தோழி

********************************************************************************

கொலம்பஸ் எதிர்நோக்கிய கேள்விகள் பற்றி நேற்றோ முந்தைய தினமோ வலைப்பதிவுகளில் வாசித்ததாக நினைவு. எந்தப் பக்கத்தில் என்று உடனடியாக நினைவுக்கு வரவில்லை, பின்னூட்டத்தில் யாராவது தெரிவித்தால் சுட்டியைச் சேர்த்து விடலாம்.

கண்டுபிடித்துவிட்டேன் திரு கேபிள் சங்கர் அவர்களின்
- கொத்து பரோட்டா-08/06/10 இல் சிறுபகுதி இருக்கிறது

Friday, May 21, 2010

மீண்டும் ஜுபீடர்

சென்ற ஆண்டில் ஜூலை மாதத்தில் நடந்த இந்த 19 ஜூலை 2009 ஜுபீடரில் நடந்தது என்ன??? அதிசயத்தைத் தொடர்ந்து மீண்டும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது ஜூபீடர்.

தற்போது ஜூபீடரின் தென்பகுதியில் இருந்த மேகப் பட்டைகளில் இரண்டு முழுவதுமாக காணாமல் போயுள்ளது. இது மிகவும் முக்கியம் வாய்ந்த நிகழ்வு என நாசாவின் விஞ்ஞானிகளுள் ஒருவரான Glenn Orton தெரிவித்திருக்கிறார்.
கீழே நாசா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றில் என்ன நிகழ்ந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
புகைப்பட மூலம்: http://science.nasa.gov/media/medialibrary/2010/05/19/loststripe_strip.jpg

சென்ற முறை 19 ஜூலை 2009 ல் ஜூபிடரின் நிகழ்ந்த மர்மமான மோதலைக் கண்டறிந்து சொன்ன Anthony Wesley யே இந்த முறையும் இதை அவதானித்ததில் பெரும்பங்கு வகித்திருக்கிறார். மேலும், "ஜூபீடர் தொடர்ந்து ஆச்சர்யப்படுத்துகிறது, ஜூபீடரை ஆய்வு செய்வது கண்டிப்பாக பல புதிய செய்திகளைத் தரும் என்றும், ஜுபீடரைப் பற்றிய நமது புரிதல் மிகவும் துவக்க நிலையிலேயே இருக்கிறது" என்றும் குறிப்பிடுகிறார்.

ஆனால், இந்த மேகப்பட்டையின் நிறச்செறிவானது 1973-75, 1989-90, 1993, 2007, 2010, ஆகிய ஆண்டு காலங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தேய்ந்தும் மறைந்தும் வந்திருக்கிறது. 2007 ஆம் ஆண்டு இத்தேய்மானம் உடனடியாக நின்று அம்மேகப்பட்டை முழுவதுமாகத் தோன்றியதாகவும், மற்றைய ஆண்டுகாலங்களில் தற்போதிருப்பது போல அச்செந்நிறப்பட்டை முழுவதுமாக மறைந்திருந்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.

பூமியில் நீர்மூலக்கூறின் பரவல் வெந்நிறமேகமாகத் தோன்றுவதுபோல ஜுபீடரில் அமோனியா (NH3) மூலக்கூறுகளினால் தோன்றும் மேகங்கள் உண்டு.

இவ்வெண்மை நிறத்திற்கான காரணமாக அமோனியாவின் நுண்படிகங்கள் மேகத்தினும் விரவியிருப்பதுவே காரணமாகயிருக்கலாம் என்றும், இவ்வமோனியாப் படிகங்களின் பரவல் குறைந்து மீண்டும் செந்நிறப்பட்டை தீடிரென தோன்றலாம் என்றும் அனுமானித்திருக்கின்றனர். இப்படிக் குறிப்பிட்ட கால இடைவெளியில் அமோனியா மேகங்கள் கிளம்ப்புவதற்கான காரணங்கள் குறித்து சில அனுமானங்களே முன்மொழியப்பட்டுள்ளன, உறுதியான காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை என்றும் குறிப்பிடுகின்றனர்.

தகவல் மூலம்: http://science.nasa.gov/science-news/science-at-nasa/2010/20may_loststripe/

இப்படியான நவீன வானியல் கண்டுபிடிப்புகள் பற்றிய தகவல்களை வாரம் ஒரு முறை உங்கள் மின்னஞ்சலில் பெறுவதற்கு நீங்கள் இந்தப் பக்கத்தில் இலவசமாக பதியவைத்துக் கொள்ளலாம். http://science.nasa.gov/about-us/email-updates/************************************************************************************

ஒருவேளை பூமியின் புகைப்படத்தை இன்னும் 50 ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் பல இடங்களில் பச்சைப் பட்டை மறைந்து செந்நிறப்பட்டை தெரியலாம். இப்படியானதொரு சூழல் வராமல் இருக்க உழைக்கும் நமது நண்பர்களுக்கு இந்நேரத்தில் பாராட்டுதலையும் அவர்களது சமீபத்திய அங்கீகாரத்திற்கு

கோடியில் இருவர் - பாராட்டு விழா ,

"பூவுலகு" இதழுக்கு 'சுஜாதா விருது 2010' !

வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்ளலாம்.

Friday, April 23, 2010

பரிணாமம் - சில சுட்டிகள்

தமிழ் வலைப்பதிவுகளில் பரிணாமம் பற்றிய எதிர்கருத்துகளை உள்ளடக்கிய சில சுட்டிகளை சேகரித்து வைத்துக் கொள்ளவே இவ்விடுகை. உங்களிடமும் சில சுட்டிகள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் பின்னூட்டத்தில். இது என(நம)க்கான தரவிற்காகவே இச்சேகரிப்பு.


மனிதம் களிமண்ணால் படைக்கப்பட்டதா? - http://kuddusa35.blogspot.com/2010/04/blog-post.html


புதிய படிம கண்டுபிடிப்புகள் பரிணாம வளர்ச்சி கோட்பாடுகளை தகர்க்கிறது —ஹாருன் யஹ்யா

- http://seasonsnidur.wordpress.com/2010/04/19/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/

Evolution Theory --- மக்கள் என்ன சொல்கிறார்கள்?

http://ethirkkural.blogspot.com/2010/04/evolution-theory.html

பரிணாமவியலை நம்புபவர்கள் இதையும் நம்புவார்களா?


பரிணாமவியல் உண்மையென்றால் அறிவியலாளர்களிடம் ஏன் இவ்வளவு கருத்து வேறுபாடுகள்?


Sunday, April 11, 2010

பாட்டில் தண்ணீரின் கதை - பகிர்வு

The story of bottle water

நண்பர் ஒருவரிடம் இருந்து கிடைத்தது, ஒரு பகிர்வுக்காக இங்கே..

**********************************************************************************************************************************
பின்னூட்டத்தில் நண்பர் பதி இதனுடன் தொடர்புடைய மற்றொரு காணொளியை அளித்தார், அதனையு இதனுடம் பிறசேர்க்கையாக இணைத்துள்ளேன்.*******************************************************************************

Thursday, April 1, 2010

மனிதனின் பரிணாமம்.. !!!???

குறிப்பு: கட்டுரையின் நீளம் கருதி எழுத்துறு சிறிதாக இருக்கிறது. "cntrl +" பயன்படுத்திப் பெரிது படுத்திக் கொள்ளலாம்.

நண்பர் வால்பையன் அவர்களின்
இந்த இடுகையைப் பார்த்தவுடன் நீண்ட நெடுநாட்களாக எழுதாமல், சோம்பலாக அவ்வப்போது குறிப்புகள் செய்து காலம் கடத்தி வந்த இடுகையை தூசு தட்டி எழுதியிருக்கிறேன்.

பொதுவாக பரிணாமம் குறித்த பெரும்பான்மையினருக்கு எழும் சில கேள்விகள், மனிதன் குரங்கிலிருந்து வந்தால் குரங்கு ஏன் இன்னும் இருக்கிறது? மனிதன் குரங்கிலிருந்து வந்தால் இப்போதிருக்கும் குரங்கு எப்போ மனிதனாகும்? ம
னிதன் பரிணமிக்கிறானா அப்படியென்றால் எப்படிப்பட்ட உயிரினமாகப் பரிணமிப்பான் ? மனிதன் பரிணமிக்க வில்லையென்றால் ஏன் இல்லை? இதில் குரங்கு பற்றிய கேள்விக்கான பதிலைச் சுருக்கமாக ஏற்கனவே இங்கே எழுதியிருப்பதால், அடுத்த கேள்விக்கு நகருவோம். இக்கேள்விக்கான விடை பற்றி உரையாடும் முன்னர், சிலவற்றைப் பேசிவிட்டுப் போகலாம்.

மனிதன் பரிணமிக்க முடியுமா அல்லது பரிணமிக்கிறானா? என்பது குறித்த சில கேள்விகளையும் விளக்கங்களையும் முன்வைக்கவே இவ்விடுகை. இவ்விடுகை முற்றுமுடிவானது அல்ல, இவ்விடுகையில் பேசப்பட்டுள்ள கண்டுபிடிப்புகளை முன்வைத்து நாம் உரையாடலாம் அல்லது வேறு புள்ளிக்கு நமது புரிதலை நகர்த்திக்கொள்ளலாம், அவ்வளவே. இக்கட்டுரையில் உள்ள ஆய்வுகளுக்கு எதிரான முடிவுகள் இருந்தால் தெரியப்படுத்துங்கள். இணைந்து யோசிக்கலாம்.

பரிணாமத்தைப் பற்றிய ஒரு மீள் பார்வை

1. பரிணாமம் என்றால் என்ன?

பரிணாமம் என்பது இயற்கை மாற்றத்தினால் ஒரு உயிர் எப்படிப் பலவகை உயிரிகளாக மாறுகிறது/மாறியது என்பதை விளக்கும் ஒரு உயிரியல் கொள்கை. பரிணாமம் உலகிலுள்ள அனைத்து "உயிரினங்களும்" (species) காலச்சக்கரத்தில் பின்னோக்கி நகர்ந்தால் ஒரே மூதாதையரைக் கொண்டிருப்பவை எனபதை விளக்கும் ஒரு கொள்கை. சுருக்கமாகச் சொன்னால் "எல்லோரும் ஒரு மரத்துப் பறவைகளே" என்பதுதான் பரிணாமக் கொள்கையின் அடிப்படைச் சாரம்.

முக்கியாமானதொரு நினைவுப் புள்ளி: "பரிணாமக் கொள்கை உயிரின் மூலத்தை விளக்கும் ஒரு கொள்கையல்ல, உயிரினங்களின் மூலத்தை விளக்க முற்படும் ஒரு கொள்கை" "It does not explain origin of life, it (tries to) explain(s) origin of species"

2. பரிணாமத்தை எப்படிப் புரிந்து கொள்வது?

இவ்வுலகில் தோன்றிய முதல் உயிர் தனது சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு தனது இருத்தலுக்காக உள்ளான மாற்றமே பரிணாமம். மிக முக்கியமானதொன்றைக் குறிப்பிட விரும்புகிறேன், இம்மாற்றத்தை அவ்வுயிர் தேர்ந்தெடுக்கவில்லை மாறாக இயற்கை நிகழ்வாக சுயமாக நிகழ்கிறது. இம்முதல் உயிரிலிருந்து பிரிந்து விரிந்த ஒரு மரமாக இன்றைய அனைத்து உயிர்களையும் நோக்கலாம். இச்சூழல் மாற்றத்தினடிப்படையில் தகவமைத்துக் கொள்ளும் பண்பையே சார்லஸ் டார்வின் "natural selection" என்று தனது பரிணாமக் கொள்கையில் குறிப்பிடுகிறார்.

சரி இப்போ மனிதன் பரிணமிக்கிறானா என்ற கேள்விக்கு வருவோம்:

மனிதன் பரிணமிக்கிறானா என்பதற்கு முன்னர், மற்ற உயிரிகள் இன்றும் பரிணமித்துக் கொண்டிருக்கின்றனவா என்பதைப் பார்க்கலாம்.


தற்போதைய சூழலுக்கு தகுந்தார்போல் பிற விலங்குகளின் உடலில்/மரபணுக்களில் மாற்றம் நிகழ்கிறதா?

பிற விலங்குகள் தற்போதும் பரிணமித்துக் கொண்டிருந்தால், தங்களது சூழலுக்கு தகுந்தார்போல், அவற்றின் வாழ்க்கைமுறை/ உடற்கூறுகள்
மாறியிருக்க வேண்டும். இரண்டு எளிய உதாரணங்களைக் கொண்டு மேற்குறிப்பிட்ட கூற்றைக் காணலாம்.

உதாரணம் 1: பசுபிக் பெருங்கடலில் வாழும் குறிப்பிட்ட வகை மீனினத்தின் இனப்பெருக்கத்தில் பெரும் மாற்றத்தை அவதானித்திருக்கிறார்கள். அதாவது இத்துனை ஆண்டுகளில் இம்மீனினத்தின் எண்ணிக்கை குறைந்து வந்திருக்கிறது. அதற்கு முக்கியக் காரணிகளில் ஒன்று அம்மீன் அதிக அளவில் உணவாக உட்கொள்ளப்பட்டதுதான் என்று முன்மொழியப்பட்டது. ஆனால், சமீப காலமாக அவற்றின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அது எப்படி? என்று நோக்கினால், அவற்றின் இனப்பெருக்க சுழற்சியின் கால அளவை அவை குறைத்திருக்கின்றன. அதாவது குறுகிய காலத்தில் இனப்பெருக்கம் செய்யத் துவங்கியிருக்கின்றன. ஆக இக்குறிப்பிட்ட இம்மீனினத்தை அதிகரிக்க அவற்றை அதிகமாகச் சாப்பிட வேண்டும் போல.. :)

உதாரணம் 2: இரண்டாவது உதாரணம் இயற்கையான சூழலோடு நேரடியாக ஒப்பிட முடியாவிட்டாலும் மிக முக்கியமான மற்றும் மிக ஆச்சர்யமூட்டும் ஒரு குறுகிய கால மாற்றத்தைக் குறிக்கிறது.

ஸ்பெயின் நாட்டின் உயிரியல் பூங்கா ஒன்றில் சிம்பன்சி ஒன்றின் செயல்பாடுகளில் திடீர் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அது மிகவும் முரட்டு
த்தனமாக மாறியதாகவும், பூங்காவிற்கு வருபவர்களை கற்களை கொண்டு தாக்குவதாகவும் புகார் எழுந்திருக்கிறது. இதனை அவதானிப்பதற்காக ஒரு குழு பணிக்கப்பட, அவர்களோ மிகவும் ஆச்சர்யமூட்டும் நிகழ்வுகளை அவதானித்திருக்கிறார்கள்.

வாரயிறுதி நாட்களில் இப்பூங்காவிற்கு சிறுவர் சிறுமியர் அதிகமாகத் தொடர்ந்து வந்திருக்கின்றனர். அதோடு கூட்டம் அதிகரிக்க அவர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டும், இக்குரங்கினை விளையாட வைக்கும் பொருட்டு, குச்சிகள் மற்றும் கற்கள் கொண்டு அதனை இடையூறு செய்திருக்கின்றனர். அவர்களை எதிர்கொள்ளும் நோக்கில் அச்சிம்பன்சி கற்களை வீசத் துவங்கியிருக்கிறது. அட இதுதான் நம்ம
குரங்கு-தொப்பிக்காரன் கதையிலேயே கேள்விப்பட்டிருக்கிறோமேன்னு தோணுதா?? அவசரப் படாதீங்க, செய்தி இன்னும் முடியலை.

இதில் சிறப்பு என்னவெனில், வாரயிறுதி நாட்களில் மட்டும் பூங்கா திறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்னர், அது இருக்கும் திறந்த வெளிக் கூண்டில் இ
ருக்கும் கற்களை சேகரித்து தன்னைச் சுற்றி அடுக்கித் தாக்குதலுக்கு தயார் நிலையில் இருக்கத் துவங்கியிருக்கிறது. இதுதான் மிகவும் ஆச்சர்யம் தரும் நிகழ்வு. அதாவது வாரத்தின் எந்த நாட்களிலும் செய்யாமல், வாரயிறுதி நாட்களில் மட்டும் விடயற்காலையில் கற்களை சேகரித்து தன்னைச் சுற்றி அடுக்கி வைக்கத் துவங்கியிருக்கிறது. பின்னர் மக்கள் வந்தவுடன் தனது தாக்குதலைத் துவங்கியிருக்கிறது.

இதுவரை, மனிதன் தவிர வேறு எந்தவொரு விலங்கும் (யானைகள் விதிவிலக்காக இருக்கலாம்) பசி தவிர வேறு எதற்காகவும், எதிர்காலம் குறித்த சி
ந்தனையுடன் இருந்தது கிடையாது.
இது தவிர, காலம் குறித்த ஒரு கணக்கீட்டையும் செய்
திருக்கிறது. ஆக, நீண்ட கால நினைவு மற்றும், எதிர்காலம் பற்றிய உணர்வு இவை இரண்டிற்கும் அது தன்னை தயார் செய்து கொண்டுள்ளது.

மேலே சொன்ன உதாரணங்களில் இரண்டாவதை ப
ரிணாம மாற்றமாக கொள்ளயியலாது, ஆனால், சூழலின் நிர்பந்தத்தில் மனிதனின் தனித்துவமாக கருதப்படுபவற்றை மனிதனின் நெருங்கிய உறவினர்களில் ஒருவரான சிம்பன்சி தாமாகவே பழகிக்கொண்டிருக்கிறது என்பது மிகவும் ஆச்சர்யமான நிகழ்வுகளில் ஒன்று.

நான் வாசிப்பு சுவாரஸ்யத்திற்காக எளிதான உதாரணங்களைக் குறிப்பிட்டாலும், மரபணுவியல் ஆய்வுகளில் தொடர்ந்து பல விலங்குளின்/தாவரங்களின் பரிணாம மாற்றம் இன்றைக்கும் உறுதி செய்யப்பட்டு வந்திருக்கிறது/வருகிறது. குறிப்பிட்ட இரண்டு உயிரினம் சார்ந்த பரிணாமத்தை கூட்டுப் பரிணாமம் (co-evolution) என்று அழைக்கின்றனர். அப்படியானதொரு கூட்டுப் பரிணாமம் குறிந்த இயற்கையின் வினோதங்கள் அவர்களின் இடுகை இங்கே . ஆக, பரிணாமம், இயற்கைச் சூழல் மாற்றத்துக்கினங்க விலங்குகளில் இப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தொடர் நிகழ்வுதான். (அபரிவிதமான திடீர் சூழல் மாற்றங்கள் நிகழாதவரை)

சரி இப்போ மனித விலங்குக்கு வருவோம்.

பரிணாமக் கொள்கையை முன்மொழிந்த டார்வின் கூ
ட மனிதன் பற்றிய தனது ஆய்வுகளை வெளியிட தயக்கம் காட்டியே வந்திருக்கிறார். பின்னர், வாலஸ், மற்றும் இன்னபிறரின் தூண்டுகோலினால் மனிதன் குறித்த தனது ஆய்வு முடிவுகளையும் வெளியிட்டதாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால், இது முழுக்க உண்மையில்லை, டார்வின் தமக்கே மனிதன் குறித்த பார்வையை உறுதிப்படுத்திக் கொள்ள கால அவகாசம் தேவைப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.

சரிங்க விசயத்துக்கு வருவோம்:

அனைத்து விலங்குகளுக்கும் பொதுவானது, உணவு மற்றும் இனப்பெருக்கம். பரிணாம மாற்றம் என்பது உணவு மற்றும் இனப்பெருக்கம் சார்ந்ததாகவே இருக்கும், என்பதை ஒருமுறை நினைவு படுத்திக் கொள்வோம்.

மனிதன் பரிணமித்திக்கொண்டேயிருந்தால் அவனது சூழல் மாற்றத்திற்கிணங்க அவனது உடற்கூறில் மாற்றங்கள் வந்திருக்க வேண்டும் அப்படி வந்திருக்கிறதா? மனிதனின் உடலில் அவனாக உண்டாக்கிய சமூக அமைப்பின் தாக்கங்கள் என்ன? இப்படியான கேள்விகளை முன்வைத்து மேலும் பேசலாம். ஆனால் அதற்கு கலவையான பல்வேறு ஆய்வு முடிவுகளை முன்னிறுத்தி உரையாட வேண்டியிருக்கும்.

கலவையான பல ஆய்வு முடிவுகளை எளிதான தர்க்
கத்திற்காக, I. இல்லை பரிணமிக்கவில்லை , II.ஆம் பரிணமிக்கிறான்,என இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.

முதலில் மனிதன் பரிணமிக்க வில்லை என்பதற்கான காரணிகள் மற்றும் ஆய்வு முடிவுகள் பற்றி பேசலாம்.

I. மனிதன் பரிணமிக்க வில்லை - ஏன்?

பரிணாம மாற்றம் என்பது மரபணுக்களின் விதங்கள் (variety) பொறுத்தே அமையும், ஆக மரபணுக்களில் இருக்கும் விதங்களைத் தொடர்ந்து அவதானித்தே பரிணாமம் ஏற்படுகிறதா என்பதை கணிக்க முடியும். மனிதனது சமூக அமைப்பு எப்படி அவர்களின் மரபணுக்களில் பொதிந்து விடுகிறது என்பதைப் பற்றிய சில ஆய்வுக்குறிப்புகளைப் பார்க்கலாம்.

பூமியின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து மனிதனது மரபணுக்களைப் பரிசோதித்துப் பார்த்த ஆய்வாளர்கள், அறியப்பட்ட மனித இங்களது மரபணுக்களில் பெரிய வேறுபாடு இல்லை என்று குறிப்பிடுகின்றனர். இன்றளவில் மரபணுக்களில் பல விதங்களை உள்ளடக்கிய மனிதர்கள் இருக்கும் ஒரு நிலப்பிரதேசம் ஆப்பிரிக்கா மட்
டுமே என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மற்ற பிரதேசங்களைச் சேர்ந்த மனிதனின் மரபணுக்களனைத்தும் அப்பிரிக்காவுடன் தொடர்புடையதே என்றும் குறிப்பிடுகின்றனர். இதைப் பற்றிய சமீபத்திய ஆய்வறிக்கையும், சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ஆய்வு முடிவுகளைப் பற்றிய குறிப்புகளையும் நம்ம பேராசிரியர் தருமி அவர்களின் இந்த இடுகையில் காணமுடியும். ஆக மனிதயினத்தில், உலகத்தின் ஒரு மூலையில் இருக்கும் மனிதனுக்கும் மற்றொரு மூலையில் இருக்கும் மனிதனுக்கும் மரபணுக்களில் பெரிய அளவில் வேறுபாடில்லாமல் இருக்கிறது. இச்சூழ்நிலையில், மனிதன் இனிமேலும், பரிணமிக்க முடியாது என்ற முடிவை நோக்கி நாம் நகரலாம். இதற்கு வலு சேர்க்கும் விதமான ஆய்வு முடிவுகளையும் பார்த்துவிடலாம்.

சமூக அமைப்பின் தாக்கங்கள்

அ). ஆப்பிரிக்க கண்டத்தில் நதிக்கரைக்கு இரு பக்கங்களிலும் இருந்த இருவேறு ஆதிவாசியினங்கள் பற்றிய ஆய்வுக்குறிப்பை முதலில் பார்ப்போம். இவர்கள் தங்களது முக அலங்காரங்களில் தங்களை வேறுபடுத்திக் கொள்கின்றனராம். இவ்வாறு வேறுவித முக அலங்காரம் கொண்ட இருகுழுக்களுக்கிடையே கலப்பு மணம் (அதாவது மரபணுப் பரிமாற்றம்) நடைபெறாமல் இருந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

ஆ). அதேபோல், 19 ஆம் நூற்றாண்டு வரை, ஐரோப்பா
விலுள்ள பல்வேரு மொழி பேசும் மக்களிடையே மிகுந்த மொழித் தேசிய உணர்வினால் அவர்களிடையே நீண்ட நெடுங்காலம் மரபணுப் பரிமாற்றம் நிகழாமல் இருந்தது என்பதுவும் நிரூபிக்கப்பட்ட ஒன்று.

இ). நமது தமிழ்ச்சமூகத்தில், மரபணுக் கலப்பு என்பது சாதீயம், மதம், மொழி மூலம் தடுக்கப்பட்டு வந்ததையும் ஒப்பிட்டுக் கொள்ளலாம். இதன் மூலம், பல்வேறு விதமான மனிதனது மரபணுக்கள் கலக்காமல் இருப்பதுவும், சாதீயத்தின் சுவடுகள் அல்லது கூறுகள் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே வேர்விடத் துவங்கிவிட்டது என்பதையும் இதன் மூலம், கட்டுக்கோப்பான சமூக அமைப்பிற்கே உண்டான மரபணு சார்ந்த நோய்கள் அப்படியே தங்கிப் போகும் அபாயம் உண்டு என்பதையும் முன்மொழிந்து சமீபத்திய ஆய்வுக்குறிப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதைப் பற்றிய தருமி சாரின் இடுகை இங்கே .

ஈ). "Sexual selection" - மனிதனது இனப்பெருக்கத் துணைத் தேடல் என்பது எப்படி இருக்கிறது? இதைப் பற்றி டார்வினின் கருத்தை ஒரு தனி நெடும் கட்டுரையாகவே எழுதலாம். (வாய்ப்பிருந்தால் பின்னர் பேசலாம்.) இப்போதைக்கு சுருக்கமாக: மற்ற விலங்குகளில் துணைத் தேடல் என்பது ஆரோக்கியமான வாரிசுகளை உருவாக்கும் வலிமையுடைய ஆண், மற்றும் தனக்கும் தனது குழந்தைகளுக்குமான உணவு மற்றும் பாதுகாப்பைத் தரவல்ல ஆண் இணை என்ற அடிப்படையிலேயே தேர்வுகள் இருக்கும். இத் துணைத் தேடலை சில பறவைகள் எப்படிச் செய்கின்றன என்பதை நண்பர் இயற்கையின் வினோதங்கள் அவர்களின் இந்த இடுகையில் பார்க்கலாம். பெரும்பாலும், துணைத்தேடலில், தனது துணையை உறுதி செய்யும் பொறுப்பு பெண்ணிடமே இருக்கும், ஆண்கள் முட்டி மோதி தகுதியானவன் என்று நிரூபிக்கும் வரை அமைதியாகக் காத்திருக்கும், பெண்.

இயற்கையின் இணைத் தேடலின் அடிப்படையில் மனிதனது இணைத் தேடலும் இருக்க வேண்டுமென்றால், உடல் வலிமை உள்ளவனும், விலங்குகளை வேட்டையாடியோ அல்லது உணவு உற்பத்தியில் சிறந்தவனோதான் இனப்பெருக்கம் செய்ய முடியும். இப்போ அப்படி இருக்கா என்ற நாம் தர்க்கம் செய்து புரிந்து கொள்ளவேண்டியதில்லைன்னு நினைக்கிறேன்.. :).

பல மனித சமூகங்களில் இணைத்தேடுதல் உரிமை என்பது பெண்ணுக்கு வழங்கப்படுவதேயில்லை என்றும், இணையைத் தீர்மானிக்கும் காரணிகள் புறக்காரணிகளாகவே இருக்கின்றன என்றும் டார்வின் குறிப்பிடுகிறார்.

மனிதனது வாழ்க்கை முறையானது இயற்கையிலுள்ள மற்ற விலங்குகளிடம் இருந்து வேறுபட்டு, தனது சமூகக் கட்டமைப்பு தரும் சூழலைச் சார்ந்தும் நோக்கியும் இருக்கிறது. இப்படி இயற்கையினடமிருந்து தனித்து அல்லது இயற்கையின் போக்கில் பரிணாம மாற்றம் நடைபெற பெரும் தடையாக இருப்பவை அல்லது மனிதனை இயற்கையான வாழ்விலிருந்து பிரித்துவைப்பதில் மிக முக்கியமானவையாக நான் கருதுவது.

i. உணவு உற்பத்தி.

ii.சமூகக் காரணிகளை உள்ளடக்கிய தடைகளை சுருக்கமாகக் கீழுள்ள கோட்டோவியம் மூலம் கொடுத்திருக்கிறேன்.
கோட்டோவியத்தை மேலும் புரிந்து கொள்ள இச்சுட்டி பயன்படலம். http://en.wikipedia.org/wiki/Chastity_belt

அடுத்து மனிதன் இன்றைக்கும் பரிணமித்துக் கொண்டிருக்கிறான் என்ற தர்க்கப் புள்ளிக்கு வருவோம்.

II. மனிதன் பரிணமித்துக் கொண்டிருக்கிறான் - எப்படி?

மனிதன் பரிணமிக்க வேண்டும் என்றால் அவனது சூழலுக்கு ஏற்றார்போல், அவனது உயிரியல் உடலில் ஏதாவது மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றிருக்க வேண்டும். இந்தக் கேள்விக்கு ஒரேயொரு புள்ளியில் இருந்து பதில் தேடினால் ஒரு முடிவுக்கு வர இயலாது. வெவ்வேறு துறை சார்ந்த ஆய்வுகளைக் கலந்து யோசித்தால் சில புள்ளிகளைச் சென்றடையலாம்.

சரி மனிதனுக்கும் அவனது சூழல் மாற்றத்திற்கும் உயிரியல் ரீதியாக தொடர்பு இருக்கிறதா?

அ). முதலில் சமீப காலங்களில் (ஏறத்தாழ 10,000 ஆண்டுகளில்) மனிதனின் சமூக மாற்றங்களால் உடலமைப்பில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறதா என்பதற்கு அகழ்வாராய்ச்சியில் செய்யப்பட்ட ஒரு ஆய்வு முடிவை பார்க்கலாம்.

பொதுவாக குழந்தைப் பெற்றெடுக்கும் காலங்களில் பெண்களுக்கு, உமிழ் நீர் சுரப்பது, சர்க்கரையின் அளவில் மாறுபாடு எனப் பல மாற்றங்கள் ஏற்படுவதால், அவை பெண்களுக்கு அதிகமான சொத்தைப் பற்களை உண்டாக்குகின்றன, என்பது நிரூபிக்கப்பட்ட ஆய்வு முடிவுகள். இதனடிப்படையில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பெண் எலும்புக் கூடுகளின் உடற்கூறுகளை ஆய்ந்திருக்கிறார்கள்.

கீழ்த் தாடையைப் பரிசோதிக்கும் போது, சற்றேரக்குறைய 10000 ஆண்டுகளுக்கு முன்னர் வயதினையுடைய எலும்புக்கூடுகளில் பெண்களுக்கு சொத்தைப் பற்கள் உண்டாவது மிகவும் அரிதாகவும், அதே சமயம் 10000 ஆண்டுகளுக்குப் பின்னர் வயதுடைய எலும்புக்கூடுகளில் சொத்தைப் பற்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருப்பது அவதானிக்கப்பட்டிருக்கிறது.
அது மட்டுமல்லாமல், அதிக அளவில் இனப்பெருக்கம் செய்வதற்கான ஈடுபாடும் ஏற்பட்டிருக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுதான் மனிதயினம் ஒரேயிடத்தில் தங்கி உணவு உற்பத்தியைத் துவங்கிய காலகட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, வேட்டையாடுதல், உணவுக்காக இடம்பெயர்தல் போன்றவற்றால் இனப்பெருக்கம் செய்யும் வாய்ப்பு குறைவாக இருக்கும் என்பதற்கும் மேலாக, அப்போது பெண்களுக்கும் இனப்பெருக்கத்தின் மேல் அதீத ஈடுபாடு இல்லாமல் இருந்திருக்கிறது என்பது தெரியவருகிறது. தனது வாரிசு மற்றும் தனக்கான உணவுத் தேவைஅதாவது, விவசாயம் மூலம் உணவு உற்பத்தி முறையைக் கண்டடைந்தவுடன் பெண்களினது உயிரியல் உடலில் இனப்பெருக்கத்திற்கான தூண்டுதல்தன்மை அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனாலேயே, ஏறத்தாழ 800-10000 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணினது எலும்புக்கூடுகளில் அதிகமான சொத்தைப் பற்கள் உள்ளன என்று முன்மொழியப்பட்டது.

(குறிப்பு: குறிப்பிடத் தகுந்த எண்ணிக்கையிலான எலும்புக் கூடுகளும், அக்காலத்தைய மனிதனது உணவு முறை மாற்றங்கள், மற்றும் அதனால் உண்டாகும் பற்சிதைவுகளும் கணக்கில் கொள்ளப்பட்டிருக்கிறது ஆய்வில்.)

ஆ). மனிதனது மரபணுக்களில் பிற விலங்குகளின் (ஆடு, மாடு) பாலை செரித்துக்கொள்ளும் தன்மை உட்புகுந்ததே ஒரு பரிணாம மாற்றம்தான் என்று குறிப்பிடுகின்றனர். அதிகமாக விலங்குகளை மேய்த்தலையும் நாடோடி வாழ்க்கை முறையும் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தினரிடையே தான் இம்மாற்றம் மிகுதியாக இருந்திருக்கிறது. வேட்டையாடுதல் முறையில் உணவு சேகரித்தல் மற்றும், காடுகளில் வசிக்கும் குழுவினரிடம் இவ்வகை செரிப்புத்தன்மை இயல்பானதாக இருக்கவில்லை என்றும் குறிப்பிடுகின்றனர்.

இ). இன்றைக்கும் சில பிரதேசங்களில் வாழும் மக்களிடையே அவர்கள் வாழும் இடத்திற்கேற்ற நோய் எதிர்ப்புச் சக்திகள் உற்பத்தியாகியிருப்பதுவும், பல புதிய நோய்களுக்கு மனிதனது உடல் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கிக்கொண்டிருப்பதுவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அப்படியானால், மனிதனது உடலில் சூழலுக்குத் தகுந்த மாற்றம் நடை பெற்று வந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.


சரி என்னதான் முடிவு இப்போது

தற்காலிக முடிவு: மனிதன் பரிணமித்துக் கொண்டுதான் இருக்கிறான். ஆனால், பெரும்பாலும் பலரும் எதிர்பார்ப்பது போன்ற வேறு ஒரு வகை உயிரனமாகவோ அல்லது முழுவதும் புதிய வடிவம் கொண்ட ஒரு புதிய உயிரியாகவோ பரிணமிக்க வில்லை அல்லது அதற்கான சாத்தியங்களும் குறைவு. (உதாரணமாக மனிதனுக்கு இனி வாலோ, கொம்போ முளைக்காது.. :) கொம்பிருப்பதாகக் கருதிக்கொள்வது இங்கு கணக்கில் வராது ).

கட்டுரையின் மையக்கரு:

ஒரு கலவையான புரிதலில், மனிதயினம் பரிணமிப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. ஆனால், அந்தப் பரிணாமம் மற்ற விலங்குகளுக்கு நிகழ்வது போலல்லாமல் மனிதன் வகுத்துக் கொண்ட சமூக அமைப்பையினையொட்டி நிகழ்வதுவாக இருக்கிறது. அதனால், மனிதன் இனி தனித்து வேறு வடிவம் கொண்ட ஒரு புதிய உயிரினமாக மாறுவதற்கான சாத்தியங்கள் இல்லை. ஆனால், மொழி, இனம், தேசம், சாதி, மதம், உணவு உற்பத்தி போன்ற சமூகக் கட்டமைப்பினடிப்படையில் உருவாகும் மரபணு பரிமாற்றக் கட்டுப்பாடுகளை மாற்றிக் கொள்ளாதவரை தனது சமூகக் கட்டமைப்பு சார்ந்த மாற்றங்களுக்குத் தொடர்ந்து உள்ளாகிக் கொண்டிருக்கும் மனிதனது உடல்.

*********************************************************************************************

தரவுகள்:

ஆங்காங்கே வாசித்த கட்டுரைகளின் முடிவுகளின் தொகுப்பு இக்கட்டுரை. மேலே குறிப்பிட்டுள்ள ஆய்வுகளுக்கான தரவுகளில் சில pdf வடிவத்தில் இருக்கின்றன அதனை முழுமையாக வாசிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம் (kaiyedu@gmail.com).

ஏற்கனவே குறிப்பிட்டது போல இக்கட்டுரையில் இருப்பவை எனது வாசிப்பு மற்றும் புரிதலுக்கு உட்பட்டவையே, மாற்று முடிவுகளைக் கொண்ட நிரூபனங்கள் இருப்பின் அறியத்தாருங்கள் இணைந்து பேசலாம்.

Thursday, March 4, 2010

இது "வேனில்" காலம்


நமது சக வலைப்பதிவர், நண்பர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருந்த போது, "பேறுகாலத் தனிமை" பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அதாவது மனைவி கருவுற்றிருக்கும் போது, தாய் வீட்டுக்கு அனுப்பிட்டு ஜாலியா இல்லாம அவளோடு இருந்து அவள் அனுபவிக்கும் வலிகளை தாமும் அனுபவிப்பது போன்றுபாவிப்பது என்று குறிப்பிட்டார். இது தமிழகத்தில் சில ஆதிச்சமூகங்களிலே முக்கியமானதொரு சடங்காக இருந்து வந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டார். உடனே (கையிலேயே வைத்திருப்பார்னு நினைக்கிறேன்) ஒரு புத்தகத்தை எடுத்து அதுல என்ன போட்ருக்குன்னு வாசிச்சு காமிச்சார்.

அவர் எப்பவுமே அப்படித்தாங்க, அவருடன் பேசினால், அன்றைக்கு கண்டிப்பாக காத்திரமாக ஏதாவது வாசிச்சோ எழுதியோ தீரணும், இல்லன்னா தூக்கம் வராது. நானும் அவரிடம் பேசும்போதெல்லாம், அதப் பண்றேன் இதப்பண்றேன்னு வாக்குறுதி குடுக்க வேண்டியது அப்புறம் காத்துல பறக்கவிடவேண்டியது, இப்படியே போகுது அவர்கிட்ட என்னோட பில்டப்புகளும்.

இப்போ எதுக்கு அதைப் பத்தி பேசினோம்னு தோணுதில்ல, ஆமாம், அப்படித்தான் கேட்டார் என்னப் பாத்து. என்ன பேறுகாலத் தனிமையை அனுபவிக்கிறீங்களான்னு?

அப்படின்னா என்னான்னே தெரியாதுன்னு சொன்னபோது மேலே சொன்னதை விளக்கினார்.

பேறுகாலத் தனிமையை அனுபவித்தேனான்னு தெரியாது, ஆனா, இந்தப் பத்துமாத உடற்கூறியல் வாசிப்பும் அவதானிப்பும், வாழ்க்கையையும் உடலையும் இன்னும் பக்குவமா பாக்க வச்சிடுச்சு. பக்கத்தில இருந்து பாத்ததுக்கே இப்படின்னா, உள்ள அனுபவிச்சவங்களுக்கு எப்படி இருக்கும்? அதனாலதான் பெண்கள் சில விசயங்களில் ரொம்ப பக்குவப்பட்டு இருக்காங்களோன்னு கூட தோணிச்சு.

ஆனாலும், வரும் ஆனா வராது ரேஞ்சுக்கு ஒரு 36 மணிநேரம் காத்திகிட்டிருந்தோம். அப்புறம் பெரிய மனசு பண்ணி தானாவே வெளில வந்துட்டாங்க.

ஆமாங்க, இப்படி ஒரே அழுகையோட வெளிய வந்தாங்க.தலைய வெளில நீட்டின உடனே சர்ருன்னு எடுத்து இப்படி துக்கிப் பிடிச்சதுதான், சில விநாடிகள் எப்படி ரியாக்ட் பண்ணனும்னே தெரியலை, ஆனா கண் கலங்கிருச்சு, மூளை "off" ஆயிருந்துது. அப்புறம், வந்தவுடன் திறப்பு விழா செய்யுன்னு சொல்லி கத்திரிக்கோலை கைல குடுத்துட்டாங்க, டாக்டருங்க. அப்புறம் ஏதோ ரிப்பன் வெட்றது போல வெட்டி பிரிச்சேன், தாயையும் சேயையும். நான் நினைத்ததைவிட கொடி உறுதியா இருந்தது.. :)

அப்புறம் அன்னிலேருந்து தினம் இப்படித்தான் படத்துல இருக்குற மாதிரி ஒரே சவுண்டு உடுறாங்க.

அப்புறம் மெதுவா அடங்கி அப்பப்போ முழிக்கிறாங்க..அப்பப்போ சிரிக்கிறாங்க தூக்கத்துலயே.
17 பிப்ரவரிலேருந்து எங்க வீட்டுல "வேனில்" காலம் தொடங்கியாச்சு.. ஆமாங்க அவங்க பேரு "வேனில்".

எப்படி ஃபீல் பண்றேன் என்றார்கள் பலரும்? இன்னும் "off" ஆன அந்த கணத்தையே அசை போட்டுகிட்டிருக்கேன்....

Thursday, February 25, 2010

தி ஹிந்து - பற்றியதொரு உரையாடல்

மின்னஞ்சலில் வந்தது, ஒரு பகிர்வுக்காக இங்கே.
வரும் 28- பிப்ரவரி 2010 மாலை 4 மணி அளவில். முழுவிபரத்திற்கு படத்தை பெரிதுபடுத்திப் பார்க்கலாம் (படத்தின் மேல் சுட்டவும்).யார் இந்த permanent people's tribunal என்று அறிய - http://en.wikipedia.org/wiki/Permanent_Peoples%27_Tribunal .

Tuesday, February 9, 2010

ஆதிவாசிகள் - பகிர்வு

என்ன எழுதறது..!! ஏதாவது எழுதணுமா என்ன..!!??

************************************************************************************************

அந்தமானிலுள்ள "ஜாரவா" க்கள் பற்றியதொரு குறும்படம்.

****************************************************

********************************************************

1. http://www.survivalinternational.org/films/mine
2. http://www.survivalinternational.org/tribes/jarawa

Wednesday, January 13, 2010

வாடிவாசல் - பொங்கல் வாழ்த்துகள்

டேய், வாடா பசிக்குதுடா..

இருடா போகலாம்.

...... :(

டேய்ய்..

ம்ம்.. இருடா இதோ வர்றேன்டா மணி..

........... :(

டேய் அரை மணிநேரமா வெயிட் பண்றேண்டா.. இதுக்கும் மேல லேட்டா போனா மெஸ்ஸில ஒன்னும் இருக்காது..

ம்ம்ம்.. சரி வா..போகலாம்..நான் இதோடவே வர்றேன் மெஸ்சுக்கும்..

டேய் இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலை.. இப்போதான தொறந்த அப்புறம் பாத்துகலாம் வாடா..

சரி நடங்க போகலாம் இதோடவே வர்றேன்..

டேய் சாப்புட்றா..

நீங்க சாப்பிடுங்க.. பின்னாடி சேந்துகிறேன்..

ம்ம்ம்ம்ம் அப்ப்ப்பாடா.... இப்போதாண்டா இரத்த கொதிப்பு அடங்கிருக்கு...

என்னமோ ஏதோன்னு நினைக்காதீங்க.. ஒரு முறை கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் போது புத்தகங்கள் வாங்கிட்டு வந்தோம். உள்ள நுழைஞ்ச வுடனே திறந்த புத்தகம்தாங்க திரு. சி.சு செல்லப்பா எழுதிய - "வாடிவாசல்" .

அதை வாசிக்கத் துவங்கியபின் நண்பனுக்கும் எனக்கும் இடையே நடந்த உரையாடல்தான் மேலே இருப்பது.

இந்த புத்தகத்தை வாசிப்பதற்கு முன்னரும் சரி இதுவரையிலும் கூட இப்படி வெறியூட்டப்பட்ட நிலையில் ஒரு புத்தகத்தை வாசித்ததாக நினைவில்லை. (கிராமியப் பின்புலம் இருப்பதாலும், அதன் மீது ஒரு ஈடுபாடும் இருப்பதாலும் கூட இருக்கலாம்).

இதைச் சிலர் குருநாவல்னு சொல்றாங்க, சிலர் நெடுங்கதைன்னு சொல்றாங்க, எப்படிவேனா இருந்துட்டுப் போகட்டும் ஆனா, சிறப்பான வாசிப்பனுபவம் தரும்னு மட்டும் என்னால உறுதியாச் சொல்ல முடியும்.

இது அப்படியே உங்களை கிராமியச் சூழலுக்கு இழுத்துட்டுப் போகும்னோ, ஜல்லிக்கட்டை நேர்ல பார்க்கிற மாதிரி அனுபவம் தரும்னோ எழுதினா அது குறைந்த மதிப்பீடுன்னுதான் தோணுது.

பக்கங்களை புரட்ட புரட்ட நீங்கள் உங்கள் முறுக்கேறிய உடலுடன் ஒரு மாட்டை எதிர்கொள்ளத் தயாராக இருப்பீர்கள், என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

இப்புத்தகம் ஒரு பன்முக வாசிப்பைக் கோரும் புத்தகமும் கூட, அப்படியெல்லாம் இல்லாமல் ஒரு நேர்கோட்டுப் பார்வையில் வாசித்தாலும் நான் மேலே சொன்ன எல்லாமும் உங்களுக்கும் நிகழும்.
படம்: http://tamilnol.blogspot.com/2006/12/blog-post_2230.html

பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வரும் எல்லாவற்றோடும் இப்போது, சி.சு.செல்லப்பாவும், வாடிவாசலும் சேர்ந்திருக்கிறது..

எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்