Saturday, September 22, 2007

கடல் நீருக்கடியிலுள்ள இந்திய - இலங்கை நில இணைப்பு

சேது சமுத்திரத்திட்டம், இந்திய - இலங்கை கடல்நீருக்கடியிலுள்ள நில இணைப்பு, இதைப்பற்றி இணையத்தில் பலரும் அவர்களுடைய கருத்துக்களைப் பதித்துவிட்ட நிலையில், இந்நிகழ்வு பற்றியும் அதற்குத் தொடர்புடைய சிலவற்றையும், இந்தக் கையேட்டில் பதித்து வைக்கிறேன்.

நாசாவின் புகைப்படம் பெரிதும் பயன்படுத்தப்பட்டிருக்கும் இவ்வேளையில், நாசா இப்புகைப்படம் பற்றி என்ன சொல்லியிருக்கிறது. நாசா, இந்திய - இலங்கைக்கிடையேயான இந்நில அமைப்பின் வடிவம் மற்றும் அதன் கருப்பொருட்கள் ஆகியவற்றைப் பற்றி ஒற்றை வரியில் கூறியிருக்கிறது[1]. இது மனிதனால் அமைக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என்ற ஒரு யூகத்தையே இலங்கையின் தொல்பொருள் ஆராய்ச்சி முடிவுகளும் வெளிப்படுத்தியிருக்கின்றன [2,3]. இந்நில அமைப்பு மனிதனால்தான் எழுப்பப்பட்டது என்பதற்கான போதிய ஆதாரங்களில்லையென்றுதான் இலங்கையின் தொல்பொருள் ஆராய்ச்சி தெரிவிக்கிறது[2,3]. கால அளவுகளைப் பொருத்து இது இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கால அளவுடன் ஒத்திருப்பதாக அறிவித்திருக்கின்றனர். இந்து மித்தாலஜி என்று நாம் கூறினால் கூட அந்நில அமைப்பிற்கு இராமர் பாலம் என்று பெயரிடாமல் ஆதாம் பாலம் என்றுதான் பெயர் சூட்டியிருக்கிறது நாசா. இதற்காக நீங்கள் புஷ்ஷின் தலையையெல்லாம் கேட்கக் கூடாது.
இப்படிப்பட்ட ஒரு நில இணைவு வரலாற்றில் முக்கியம் வாய்ந்த மற்றொரு நிகழ்விலும் இருக்கிறது. இங்கே கி.மு 332. கிரேக்க மன்னனாகிய மாவிரன் அலெக்சாண்டர் உலகை வெற்றி கொள்ளப் படையெடுத்த போது, தற்போதைய லெபனானும் அப்போது ஃபினீஷியன் நகரங்களான பிப்லோஸ் மற்றும் சிடான் ஆகிய நகரங்களைக் கைப்பற்றியவுடன் அருகில் இருக்கும் டையர் என்ற தீவினை நோக்கிப் போர் தொடுக்கும் போது கடலில் அவனது பொறியாளர்கள் எழுப்பிய பாலத்தை வரலாற்று அதிசயமாகவே அனைவரும் சிலாகித்தனர்[4].

ஆனால் ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுப்புறச்சூழல் மற்றும் புவிஅறிவியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தைச் (Center for Research and teaching on the geoscience of the environment (CEREGE)) சேர்ந்த நிக் மரினர் (Nick Marriner) தலைமையில், 10,000 ஆண்டுகளுக்கு முன்னரிலிருந்து ஏற்பட்ட நிலப் படிமங்களை(sediments) ஆராய்ந்து, இப்பாலம் பற்றிய உண்மையை ஆராய்ச்சி செய்து அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அவ்வறிக்கையில் 5500 ஆண்டுகளுக்கு முன்னரிலிருந்து, அருகிலிருந்த லிடானி டெல்டா பகுதிகளிலிருந்து வந்த நிலப் படிமங்கள், டையர் தீவிற்க்கும், தற்போதைய லெபனானிற்கும்மிடையே நீருக்கடியில் ஒரு நிலப்பரப்பைத் தோன்றச் செய்ததாகவும், மேலும், டையர் தீவு லெபனானை நோக்கி வந்த பெருவாரியான கடலலைகளைத் தடுத்ததோடல்லாமல், மேலும் நிலப்படிமங்கள் எளிதாக அத்தீவிற்கும் லெபனானிற்குமிடையே சேர்வதற்குத் துனைபுரிந்திருக்கிறது, என்று கூறியுள்ளனர். இவ்வாய்வறிக்கையைப் பற்றி வாஷிங்டன் டி.சி.யிலுள்ள Jean Stanley (Smithsonian Institution) எனும் geoarcheologist (புவியியத்தொல்பொருள் ஆரய்ச்சியாளர்-இந்த மொழிபெயர்ப்பு சரியா என்று தெரியவில்லை) கூறுகையில், நீரோட்டங்களினால் ஏற்படும் படிம நகர்வு மாற்றங்களைப் பற்றி ஆராய்ந்தால் இப்படி நீருக்கடியில் ஏற்படும் நிலப்பாலங்கள் வியக்கத்தக்க ஒன்று அல்ல என்றும் அதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும் இவ்வாராய்ச்சியின் மூலம் 332 B.C யில் 10 மீட்டர் ஆழம் கொண்ட கடலில் அலெக்சாண்டரின் பொறியாளர்கள் பாலம் எழுப்பினார்கள் எனும் வரலாற்றுச் செய்தி உண்மையல்ல என்றும், அது இயற்கையாகவே ஏற்பட்ட ஒன்று என்றும் அவ்வறிக்கையின் மூலம் நிரூபித்துள்ளனர் [4].

ஒரு தீவிற்கும் அருகிலிருக்கும் நிலப்பரப்பிற்கும் இடையே நீருக்கடியில் எழும் நில இணைப்பு இயற்கையான ஒன்று என்றாலும், இங்கே அதன் வடிவத்தை நிர்ணயிப்பது எது? அதற்குப் பல காரணிகள் இருந்தாலும், நிச்சயம் தீவின் வடிவம் மற்றும் அருகிலிருக்கும் பெரிய நிலப்பரப்பின் கடற்கரைகள் மற்றும் நில அமைப்பு ஆகியவை உடனடியாகத் தோன்றும் காரணிகள், புவியியல் படித்தவர்களால் இதைவிடச் சிறப்பான மற்றும் முக்கியமான காரணிகளைக் கூறமுடியும்.

இலங்கைத் தீவின் நில அமைப்பையும், வடிவத்தையும், பாலம் தோன்றிய இடத்தையும் பார்க்கும் போது, நிச்சயம் பாலத்திற்கு இரண்டு பக்கங்களிலிருந்து வரும் கடல் நீரோட்டம் சமமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. மேலும், தென்னிந்திய மற்றும் இலங்கையின் கடற்கரையோரப் பகுதிகளிலுள்ள நிலத்தின் தன்மை மற்றும் கருப்பொருள், இத்தனை இலட்சம் ஆண்டுகளாக ஏற்பட்ட கடல் நீரோட்ட மாற்றங்கள், மற்றும் புவியியல் மாற்றங்கள் எனப்பலதரப்பட்ட காரணிகளைக் கொண்ட ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதா, அப்படியாயின் அவற்றின் முடிவுகள் என்ன??

இப்படி இந்தியா - இலங்கைக் கிடையே நீருக்கடியிலுள்ள நில இணைப்பு மனிதனால் கட்டப்பட்டது என்று திட்டவட்டமாக, ஆதாரப்பூர்வமாகக் கூறுவதற்கான போதிய சான்றுகள் இல்லை எனும் நிலையில், இதைக் கட்டிய கொத்தனார் யார் மற்றும் சித்தாள் யார் என்பது போன்ற கேள்விகள் இன்னும் பின்னுக்குத்தள்ளப்படவேண்டிய ஒன்று.

இவ்விவகாரத்தில் பெரும்பாண்மை மக்களின் நம்பிக்கைக்கு ஊறுவிளைவிக்கக் கூடாது என்று கூறும் சிலருக்கான கேள்விகள்.

செயற்கை மழை பொழிய வைக்க விஞ்ஞானிகளை அழைத்தபோது, வருண பகவான், என்ற நம்பிக்கை அழிந்துபோகவில்லையா, விளக்கையும், சூடத்தையும் பற்றவைக்க சிவகாசியின் குழந்தைத் தொழிலாளர்கள் தயாரித்த தீப்பெட்டியை உரசும்போது அக்னிதேவன் என்ற நம்பிக்கை பொசுங்கவில்லையா, சூர்ய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஆகியவற்றைப் பற்றிய அறிவியல் உண்மைகள் இராகு, கேது ஆகிய நம்பிக்கைகளைக் கேளிசெய்யவில்லையா மேலும், சூரியன் ஒரு நட்சத்திரம் என்றும் அதன் தோற்றத்தையும், அதன் ஆயுட்காலத்தில் பாதி முடிவடைந்துவிட்டது என்பது போன்ற உண்மைகள், சூர்ய தேவன் என்ற நம்பிக்கைக்கு ஊறுவிளைவிக்கவில்லையா.

அறிவியல் மனித உணர்வுகளுக்கு அப்பார்ப்பட்டு உண்மைகளை விளக்கவல்லது. அது, ஆறு நாட்களில் உலகம் படைக்கப்பட்டது என்ற பைபிளை எதிர்க்கும் டார்வினின் கொள்கையாயிருந்தாலும் சரி, வேறு அடிப்படைவாத சிந்தனை கொண்ட எந்த மூட நம்பிக்கையாயிருந்தாலும் சரி, அதனை எதிர்த்து அறிவியல் உண்மைகள் காலப் போக்கில் வெளிவந்து கொண்டுதானிருக்கும். இங்கே அந்த நம்பிக்கை எந்த பெயரைத் தாங்கிக்கொண்டு வருகிறது என்பது அறிவியல் பார்வைக்கு ஒரு பொருட்டே அல்ல என்பதுதான் உண்மை.


இப்படிப்பட்ட அறிவியல் ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு தாயாரிக்கப் பட்ட விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கையை நம் அரசு கையாண்டிருக்கும் விதம் மிகவும் கண்டனத்துக்குறியது. அரசியல் காரணங்களுக்காக ஆய்வுகள் அடிப்படையில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையை ஏதோ தட்டச்சுப் பிழையைத் திருத்துவது போல் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப திருத்திக்கொள்வதாயிருந்தால் எதற்காக இவ்வரசுக்கு விஞ்ஞானிகள். காங்கிரஸ் உயர்மட்டக் குழுவே கூடி ஒரு முடிவெடுத்திருக்கலாமே.

பெருவாரியான மக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் கருத்துக்களை அவ்வாய்வறிக்கை தெரிவிப்பதாயிருந்தால், அவ்விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் பிரதியை, சர்வதேச அளவிலும், இந்தியாவிலும் இருக்கும் மற்ற, தொல்பொருள், ஆராய்ச்சியாளர்களின் துணையோடு சரிபார்த்திருக்கலாம், அல்லது சர்வதேச தொல்பொருள் விஞ்ஞான இதழ்களுக்கு சமர்ப்பித்து ஆய்வுகளையும் அதன்வழி எடுக்கப்பட்ட முடிவுகளையும் சரி பார்த்திருக்கலாம். இதனை விடுத்து அறிவியல் ஆய்வறிக்கையை தங்களின் வசதிக்கேற்ப மாற்றி எழுதிக்கொள்வது, சர்வாதிகார ஆட்சிகளில் நடக்கக்கூடிய ஒரு நிகழ்வு என்பது வரலாறு கூறும் உண்மை.

அப்படி இராமர் பற்றிய அறிக்கையை சமர்ப்பித்த விஞ்ஞானிகளின் ஆய்வு மற்றும் அதன் வழி எடுக்கப்பட்ட முடிவுகள் ஆகியவை சர்வதேச தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அது ஆதாரப்பூர்வமான உண்மை எனும்பட்சத்தில், காஷ்மீரிலிருந்து, குமரிவரை அனைவருடைய நம்பிக்கையும் பொய்த்துப்போனாலும் சரி அதை தம்முடைய மக்களுக்குச் சொல்ல வேண்டியது ஒரு ஜனநாயக அரசின் கடமை. ஒருவேளை அவ்விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கையிலுள்ள கூற்றுக்களுக்கு போதிய ஆதாரங்களோ அல்லது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் குறைபாடும் இருக்குமாயின், அவ்விஞ்ஞானிகளின் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்கலாம்.

3- ஜனவரி 2007 அன்று சிதம்பரத்தில் நடந்த 94 வது இந்திய அறிவியல் கூட்டமைப்பை (94th- Indian Science Congress) துவங்கி வைத்து ஆற்றிய உரையில், இந்திய அறிவியல் கல்வித்தரம், மற்றும் ஆராய்ச்சித் தரம் ஆகியவை குறைந்து வருவதாகவும், மேலும் இந்நிலைத் தொடருமானால், ஆராய்ச்சிக் கூடங்களை சர்வதேசத் தர ஆய்வுகளுக்கு உட்படுத்தப்போவதாகவும் தெரிவித்தவர் நம் பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்கள்[5]. இப்படிக் கூறிய அவரது அரசு ஒரு ஆய்வுக்கட்டுரையைக் கையாண்டிருக்கும் விதம் கண்டனத்துக்குரிய, மற்றும் வேதனைக்குரிய விசயமாகும்.

அரசின் இத்தகைய நடவடிக்கைகள் அறிவியல் ஆராய்ச்சியின் தரத்தை நிச்சயமாகக் குறைத்துவிடும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.


அந்த ஆய்வறிக்கை உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை அரசியல் காரணங்களுக்காகவும், மத சிந்தனைகளுக்காவும் அரசு அவ்வறிக்கையை மூடிமறைக்குமானால், பல தலைமுறைகளைத் தாண்டி எதிரொளிக்கக் கூடிய ஒரு தவறுக்குப் பொறுப்பேற்கின்றன, நம் அரசியல் கட்சிகளுள் பல. மேலும் அவ்வாய்வறிக்கை உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதை ஒரு சமூக நலன் கருதி அரசு வெளியிடுமானால் தற்போது ஆட்சி கவிழலாம், அல்லது கலவரங்கள் எழலாம் ஆனால் இது வரும் காலங்களில் தொடரவுள்ள பல அடிப்படைவாத செயல்களுக்கு ஒரு முற்றுப் புள்ளிவைக்கும் என்பதில் மாற்றுக் கருத்திருக்கமுடியாது. ஒரு வகையில் பைபிலுக்கும், டார்வின் மற்றும் கலிலியோ கூறிய விஞ்ஞான உண்மைகளுக்கும் இடையே நடந்த ஒரு போராட்டத்திற்கு இணையானது இந்நிகழ்வு.

இனி என் தனிப்பட்ட கருத்துக்கள் - அவ்விஞ்ஞானிகளின் ஆய்வு மற்றும் அதன்வழி எடுக்கப்பட்ட முடிவுகள் சரியென்று சர்வதேச விஞ்ஞானிகளால் ஒப்புக்ககொள்ளப்படுமானால், நிச்சயம் அவ்விஞ்ஞானிகளுக்குத் தலைவணங்குவேன்.

சர்வதேச அளவில், மானுடவியல், தொல்பொருள் ஆராய்ச்சி, மொழியியல் மற்றும் மரபணு சோதனைகள் ஆகியவற்றின் ஒரு கூட்டாய்வின் மூலம் பல வரலாற்றுத் திரிபுக்கதைகளின் பின்புலத்திலிருக்கும் உண்மைகளை அறிவியல் உலகம் விளக்கிக்கொண்டிருக்கிறது. மனிதன் தோன்றிய இடத்தையும், அங்கிருந்து எப்படியெல்லாம் பிரிந்து பல்வேறு நிலப்பரப்புகளுக்குச் சென்று இன்றைக்கு வெவேறு இனமாக, நாடாக, சமூகக்குழுக்களாகப் பிரிந்து சென்றான் என்ற உண்மையை ஒரளவுக்கு நெருங்கிவிட்டது அறிவியல் உலகம்.

அப்படிப்பட்ட உண்மையை உலகுக்கு உணர்த்துவதற்கு மற்றும் விடைதெரியாத சில புதிர்களை விளக்குவதற்கும் இந்தியா-இலங்கை இடையே நீருக்கடியில் இருக்கும் இப்பாலம் மிகவும் இன்றியமையாதது. பெரிங் ச்ட்ரைட் என்று சொல்லப்படக்கூடிய இடத்தில் ஒரு நில இணைப்பு இருந்ததற்கான சில ஆதாரங்களும் தற்போது அவ்விணைப்பு இல்லாததாலும் இருக்கும் ஆராய்ச்சிக்கான முட்டுக்கட்டைகள் ஏராளம்[6].

இந்தச் சூழலில் இலங்கையில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த மனிதக் கூட்டம் பற்றியும், அவர்களுக்கும் தென்னிந்தியாவிற்குமிருக்கும், இருந்த தொடர்புகள் பற்றியும் பல குழப்பமான அனுமானங்களுக்கான சில தீர்வுகளுக்கு இப்பாலம் உறுதுணையாக இருக்கலாம். இந்திய நிலப்பரப்பிற்கு வெவேறு காலகட்டத்தில் வந்த திரவிட மற்றும் ஆரிய இனங்கள் பற்றிய உண்மையை உலகிற்கு உணர்த்தியது மரபணு சோதனைகள். மேலும், இராமன் இருக்கிறானா இல்லையா என்பதை ஆராய்வதற்குக் கூட அப்பாலம் இடிக்கப்படாமல் இருப்பது அவசியமே.

மீண்டும் என் தனிப்பட்ட கருத்தை தெளிவுபடுத்துவது நல்லது. இப்புவிப்பரப்பில், மனிதனின் தோற்றம், சமூக வாழ்வு, மற்றும் வெவ்வேறு கண்டங்களுக்கான அவனது பயணம், என்பது போன்ற உலக வரலாற்றை நிர்ணயிப்பவை இந்த நில இணைப்புகள். ஆதலால், இப்படிப்பட்ட அறிவியல் உண்மைகள் இப்பாலத்தை இடிப்பதனால் வரக்கூடிய பொருளாதாரத்தை விட நிச்சயம் முக்கியமான ஒன்று. ஆதலால் அந்தப் பாலம் இன்னும் சிறிது காலம் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லாவிடில் இன்னும் பல தலைமுறைகளுக்கு, பொய்க் கூற்றுக்களும், செவிவழிச்செய்திகளும் நிரந்தரமான வரலாறாகிவிடும் அபாயம் இருக்கிறது.



[1].http://photojournal.jpl.nasa.gov/catalog/PIA06670
[2].
http://www.geocities.com/uk20020/bridge_Srilanka_review.htm
[3].
http://www.lankalibrary.com/geo/dera2.html
[4].John Simpson, Science NOW, 14 May 2007. http://sciencenow.sciencemag.org/cgi/content/full/2007/514/1?etoc
[5]. K.S. Jayaraman, Nature, Volume 445, 134 ( 11th Jan 2007).

[6]. http://www.sciencedaily.com/releases/2002/08/020816072026.htm

**References 4 and 5 might require subscribtion.

Sunday, September 9, 2007

நமக்கான அறிவியல்...!!!???

நமக்கான மொழி, கலாச்சாரம், இசை, வரலாறு என்று பரவலாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், நமக்கான அறிவியல் என்று ஒன்று இருக்கிறதா என்கிற சிந்தனையின் பயனாக எழுதப்பட்டது இப்பதிவு. இங்கே நாம், நமக்கான, என்று பொதுவான சொல்லாடல் இருப்பதால் இந்த நாம் என்பதற்கான பயன்பாட்டினை விளக்கிவிடுவது நல்லது. நாம் என்பது பழமை பற்றிப் பேசும்போது தமிழர்களையும், பின்னர் நவீன கால எடுத்துக்காட்டுகளின் போது ஒருங்கிணைக்கப்பட்ட மாநிலங்களைக் கொண்ட இந்தியாவையும், குறிப்பதாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. விவாதக் கருத்தின் காலங்களைப் பொறுத்து இந்த நாம் பற்றிய ஒரு புரிதலை வாசகரிடம் விட்டுவிடுகிறேன்.

நமது பண்டைய இலக்கியங்களில் உள்ள அறிவியல் சிந்தனைகள் பற்றிய கேள்வியெழும்போது, எட்டுத்தொகை நூல்களுல் ஒன்று நினைவிற்கு வந்தது. அதில் வேம்பையும் அதன் பண்புகளைப் பற்றி பத்துப்பாடல்கள், வயலில்வாழும் நண்டுபற்றிப் பத்துப் பாடல்கள் என்று தொகுக்கப்பட்டிருக்கும். இப்படி வாழ்வியலோடு இயைந்த பலவற்றைப் பற்றி பத்துப் பத்துப்பாடல்களாக தொகுக்கப்பட்டிருக்கும். இப்போது நிழல்படக்கருவியையும், தொழில்நுட்பத்தையும் வைத்து நேஷனல் ஜியாகரஃபி தொலைக்காட்சி செய்வதை மிக எளிதாக மொழிவடிவத்தில் இலக்கியத்தில் பதியவைத்திருப்பது நிச்சயம் அதிசயிக்க வைக்கின்ற ஒன்று. இலக்கியமும், கலையும், வாழ்வியலுடன் பிண்ணிப் பிணைந்திருந்தால் மட்டுமே இரண்டிலுமே வளர்ச்சியிருக்கும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இருந்தது கிடையாது. அதே போல் சித்தர் பாடல்களில் மருத்துவம், மற்றும், பல அறிவியல் சார்ந்த கூறுகளைக் காண இயலும். இங்கே எடுத்துக்காட்டாக எனக்குத் தெரிந்த சிலவற்றை மட்டுமே கூறியிருக்கிறேன். தமிழை தன்னார்வத்துடன் படித்தவர்கள் நிச்சயம், இதைவிடச் சிறந்த பல உதாரணங்களைக் கூறமுடியும். ஆனால் பக்தி இலக்கியங்கள் பெருகியபின் இலக்கியத்தில் அறிவியல் பார்வை எந்த அளவு இருந்தது என்பதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பதே உண்மை. ஆனால், எல்லாம் நீயே, என்று தொழுது எழுதப்பட்டிருக்கும் அக்கடினமான மொழிவடிவங்களுக்கிடையே அறிவியல் கூறுகளைத் தேடுவது சற்று அயர்ச்சியாக இருக்கிறது என்பதுதான் உண்மை. அப்படியே ஏதாவது தோன்றினால் கூட அது என் கற்பனையா அல்லது பாடலாசிரியரின் உண்மையான கூற்றா என்கின்ற சந்தேகமே விஞ்சுகிறது. எப்படியிருந்தாலும் பண்டைய இலக்கியங்களில் வாழ்வியலோடு சேர்ந்த அறிவியல் கூற்றுகள் நிரம்பக்காணக் கிடைக்கிறது.

நவீன அல்லது தற்போது நாம் வாழ்கின்ற சமூகத்தில் வாழ்வியலும் அறிவியலும் இணைந்து இருக்கிறதா என்பதற்கான தேடுதலில் சிக்கியவற்றைப் பார்ப்போம். நவீன அறிவியலைப் பற்றி நாம் பேசும் முன்னர் இந்த அறிவியல் என்ற வார்த்தையின் பயன்பாட்டினை வரையறுத்துவிடுவது நல்லது. பொறியியல், தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல், கணிதவியல் எனப் பகுக்கப் பட்டகாலங்கள் மாறி எல்லாமே அறிவியல் என்ற ஒரு பொது வரையறைக்குள் மீண்டும் புகுந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதுதான் உண்மை. ஆனால் நமது வசதிக்காக அடிப்படை அறிவியல் பயன்பாட்டு அறிவியல் என இரண்டே பிரிவுகளாக வைத்துக்கொள்வோம். உதாரணமாக ஒரு கோழிமுட்டையை எடுத்துக் கொள்வோம், ஏன் அது கோளவடிவத்தில் இல்லாமல் நீள்கோள வடிவில் இருக்கிறது, அதனுள்ளே இருக்கும் கூழ்மங்கள் ஏன் ஒன்றோடொன்று கலப்பதில்லை என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் தேடுவது அடிப்படை அறிவியல் எனவும், முட்டை உற்பத்தியை பெருக்குவதற்கு, மற்றும் அவற்றைப் பாதுக்காப்பதற்கான சாதனங்களைச் செய்வது போன்றவற்றை பயன்பாட்டு அறிவியல் எனவும் பிரிப்பது ஒரு குறைந்த அல்லது ஏறத்தாழ சரியான வரையறை (close to proper definition) எனக்கொள்ளலாம். ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அறிவியல் வளர்ச்சியும் மிகவும் இன்றியமையாதது என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. இதில் அடிப்படை அறிவியல் என்பது உடனடியாகப் பயன்பாட்டிற்கு உதவாமலும், அல்லது அது ஒரு அறிவுத்தேடல் என்பதோடு நின்றுவிடுவது போலவும் ஒரு தோற்ற மயக்கத்தை அளிக்கக்கூடியது. ஆனால் சற்று உற்றுநோக்கினால் இதுபோன்ற அடிப்படை அறிவியல் சிந்தனைகள் பல பொதுவான அறிவியல் உண்மைகளை விலக்கவல்லவை. ஆதலால் சமுதாயத்தின் மொத்த அறிவியல் வளர்ச்சிக்கு இரண்டுமே இன்றியமையாதது. இப்போது நம்முடைய சமுதாயத்தில் வாழ்வியலும் அறிவியலும் ஒரு சேர இருக்கிறதா என்பதற்கான விளக்கங்களைச் சில எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம்.
ஒரு வசதிக்காக விவசாயம் மற்றும் மருத்துவம் ஆகிய இரண்டையும் முதன்மையாக வைத்துக்கொள்வோம். சமீபத்தில், வெளிவந்த பூங்கா மின்னிதழில் ஒருவர் புற்றுநோய் பற்றியும் அச்சிகிக்கைக்கான மருத்துவச் செலவுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள தொகைகள் மலைக்க வைக்கின்றன, நடுத்தர வர்க்கத்து மக்களால்கூட கொடுக்க இயலாத ஒரு தொகை. இந்த தொகை மிகுதியாக இருப்பதற்குப் பல சமுதாய மற்றும் மருத்துவமனையின் பேராசை எனப் பல காரணங்கள் இருந்தாலும், ஒரு நேரடிக்காரணமாகப் பல வெளிநாட்டு மருத்துவக் கருவிகளுக்கான இறக்குமதிச் செலவு மிகுதியாக இருப்பதுவும் ஒன்றாகும். இங்கே அறிவியலின் பயன்பாடு என்ன செய்துவிடமுடியும் என்பதையும் ஒரு எடுத்துக்காட்டுடன் பார்த்துவிடலாம். தமிழகத்தில் உள்ள அரவிந்த் கண்மருத்துவமனை, 1990 ஆம் ஆண்டுவரை கேடராக்ட் சிகிச்சைமுடிந்தபின் பொருத்தப்படும் கான்டாக்ட் லென்சுகளை தலா 200$ என்கின்ற மதிப்பில் இறக்குமதி செய்தன. ஆனால் அவற்றை நம் நாட்டிலேயே தயாரித்து, மற்றும் அதற்கான தொழில்நுட்பத்தையும் தாமே வடிவமைத்து, பின்னர் இந்திய விஞ்ஞான மையத்தில் உள்ள ஒரு ஆய்வகத்துடன் இணைந்து, அந்த லென்சுகளின் புறப்பரப்பை ஃபுளோரினேற்றம் செய்து பயன்பாட்டினை மேம்படுத்துதல் ஆகியவற்றைச் செய்து தற்போது அதே லென்சுகளை தலா 5$ என்கின்ற மதிப்பில் ஏற்றுமதி செய்கின்ற அளவிற்கு வளர்ந்துள்ளனர்[1].
சமீபத்தில் ரிலையன்ஸ் மற்றும் வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்களின் வருகையை ஆதரித்து ஒருவர் கூறுகிறார் "மூக்கைச் சிந்திப்போட்ட கைகளால் அளக்கப்படும் காய்கறிகளையும், நசுங்கி, அழுகிய பழங்களையும் எத்தனை நாட்களுக்கு உண்பது" என்று. ஏதோ அவர்கள் தங்களுடைய மூக்கை ஒழுகிய நிலையில் வைத்துக் கொண்டிருப்பதையே பெருமையாக நினைப்பது போலவும், நகரத்து மக்களுக்கு அழுகிய பழங்களையும் காய்கறிகளையுமே விற்பது என்று சபதம் எடுத்திருப்பது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இந்தியாவின் பழங்கள் மற்றும் தானிய உற்பத்தி மேம்பட, அல்லது எதிர்பார்த்த அளவு மேம்படாமல் இருப்பதற்கான காரணிகளாக, தன்னுடைய 2006 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் உலக வங்கி சிலவற்றை முன்வைக்கிறது. அவற்றுள், போதிய மின்சார மற்றும் நீர்வளமின்மை, போதிய சேமிப்பு வசதிகள், கிடங்குகள் இல்லாமை எனப்பலக் காரணங்களையும் கூறியுள்ளது[2]. மேலும் வேதியல் உரங்கள் மற்றும் பருவகால மாற்றங்களால், பயிர்களைத்தாக்கும் புதியவகை நோய்க்கிருமிகள், என இவையும் உற்பத்தியை வெகுவாக பாதிக்கக்கூடியவை. இங்கே சமுதாய அடிப்படையிலான பல்வேறு இன்னல்கள் இருந்தாலும் அறிவியல் துணைகொண்டு அழிக்கக்கூடிய நேரடிப் பிரச்சனைகளை மட்டுமே கூறியுள்ளேன்.
இவை போன்ற சில வாழ்வியல் பிரச்சனைகளுக்கான தீர்வுகளில் நம்முடைய தேசிய விஞ்ஞான ஆய்வகங்கள் மற்றும் பல்கலைக்கழங்களின் பங்களிப்பு என்பது இல்லையென்றே சொல்லலாம், அல்லது மிகமிகச் சொற்பம் என்று சொல்லலாம். இப்பங்களிப்பை நிகழச்செய்வதற்கு, இந்தியாவின் பல்கலைக்கழகங்கள், மற்றும் தேசிய நிறுவனங்கள் என அனைத்தும், சமுதாயத்தில் கடைநிலையில் உள்ள அடிப்படைப் பிரச்சனைகளுக்கான அறிவியல் தீர்வுகளில் தங்களது ஆராய்ச்சிகளை ஈடுபடுத்த வேண்டும், அல்லது ஈடுபட அரசால் ஊக்குவிக்கப்பட வேண்டும். இவைபோன்ற ஆராய்ச்சிகள் அடிப்படை மற்றும் பயன்பாட்டு அறிவியல் என இரண்டிலும் ஒரு சேர மேம்படவேண்டும். இப்படியான ஒரு முன்னேற்றம் நிகழ இந்தியாவிலுள்ள, பல்கலைக்கழங்கள், மற்றும் ஆராய்ச்சிக் கூடங்கள் ஆகியவற்றுக்கிடையே ஒரு கூட்டு முயற்சிக்கான இணைப்பு மிக அவசியம். இக்கூட்டுமுயற்சி பல வகைகளில் பயனளிக்கக் கூடியது, 1. ஒரே வழிமுறையில், ஒரே பிரச்சனைக்கானத் தீர்வை இருவர் அல்லது இருகுழுக்கள் முயல்வதைத் தவிர்க்கும், 2. ஆராய்ச்சிக் கூடங்களிலும், பல்கலைகழக ஆய்வகங்களிலும் இருக்கும் உபகரணங்களைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளிக்கும், 3.சிந்தனைப் பகிர்வுகள் எனப்பல வகைகளில் இந்தக் கூட்டுமுயற்சி உதவிபுரியும். பல்கலைக்கழக அறிவியல் துறைகளை, தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் (DST/CSIR) துறையின் ஆய்வகங்களுடன் இணைத்தல். இங்கே இணைத்தல் என்பது தேசிய ஆய்வுக்கூடங்களில் இருக்கும் விஞ்ஞானிகளையும், பல்கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கிடயேயான கலந்துரையாடல் மற்றும் ஆய்வுகளை ஒருசேரச் செய்தல் என்ற அர்த்தத்தில் புரிந்துகொள்ளவேண்டும். மேலும் பல்கலைக்கழகங்கள், கடைநிலை மக்களிடம் நேரடித்தொடர்புள்ள, மருத்துவமனைகள், வேலாண் அலுவலகங்கள் ஆகியவற்றுடனான தொடர்புகளை அதிகப்படுத்தவேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் நாட்டின் தேசிய ஆராய்ச்சிக் கூடங்களுக்கும், மக்களுக்குமான ஒரு தொடர்பு அல்லது உறவைப் பலப்படுத்தமுடியும்.
இங்கே, முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது, இந்தத் தொடர்பு ஏதோ ஏட்டில் படித்தவன் ஏட்டில் படிக்காதவனுக்கு அளிக்கும் அறிவுரையாக இல்லாமல் இருவழிப்பாதையாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் பல தலைமுறைகளாக ஒரு துறையில் அனுபவம் உள்ளவர்கள் ஏட்டில் படித்ததைவிட சிலவற்றில் மதிநுட்பம் உடையவர்களாக இருப்பர். இதற்கு உதாரணமாக இயற்கை விவசாயத்தைக் கொள்ளலாம். மேலும், மரக்காணம் பாலா அவர்களின் புகைப்படங்களில் பனங்கள்ளில் பல்லி விழுந்தால் அது நச்சுத்தன்மை பெறுவதில்லை எனவும் குறிப்பிடிருந்தார். இதை நேரில் கண்ட மற்றும் புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில் அனுபவ உண்மையாகக் கொள்வோம். இவை போன்ற அனுபவ அறிவுகளின் பின் உள்ள அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்தால் அவை மிகுந்த பயனளிக்கக்கூடும். உதாரணமாக, பல்லி விழுந்தால் அக்கள் ஏன் நச்சுத்தன்மை பெறுவதில்லை என்பதை உயிர்வேதியல் மற்றும் மூலக்கூறு அடிப்படையிலான ஒரு ஆய்வை அருகிலுள்ள பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகமும், தேசிய வேதியல் ஆய்வகமும் இணைந்து கண்டறிவதாகக் கொள்வோம். இக்கண்டுபிடிப்பானது, சத்துணவுக் கூடங்களில் உணவில் பல்லி விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கான ஒரு மருந்து தயாரிக்கப்பயன்படலாம். ஆதலால், மக்களுக்கும் ஆராய்ச்சி மையங்கலுக்குமான உறவு இருவழிப்பதையாக இருக்கவேண்டியது அவசியம்.
இப்படி ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சி நடைபெறுவதற்கு நிச்சயம் மூலதனம் ஒரு தடையல்ல, ஏனெனில், 2005-06 ஆம் ஆண்டிற்கான நிதியாண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான வளர்ச்சி நிதியில் 20% செலவிடப்படவேயில்லை எனக்கூறுகிறார் குடியரசுத் தலைவர் [3]. அதனால் பழியை எளிதாக அரசியல்வாதிகளின் மேல்போட்டுவிட்டுத் தப்பிக்க முடியாது. ஆனால் இது சாத்தியப்படுவதற்கு, தேசிய நிறுவனங்கள், பல்கலைக்கழங்களைத் தாழ்வாகவும், பல்கலைக்கழகங்கள் அவற்றுக்குக் கீழுள்ள கல்விநிறுவனங்களைத் தாழ்வாகவும் நோக்காமல் இருக்க வேண்டும். இந்த ஏற்றத்தாழ்வு மனப்பான்மை நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு நிச்சயம் பெருந்தடையாக இருக்கும். ஆக, நமக்கான அறிவியலைச் சாத்தியப்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த பல அறிவியல் கூட்டணிகள் தேவைப்படுகிறது.
எல்லாம் சரி, 70% கிராமப்புற மாணவர்களைக் கொண்ட நம் நாட்டில் உள்ள பாடப்புத்தகத்தில், குடும்பப் படத்தில் தந்தையார் கப் அன்ட் ஸாசரில் தேநீர் அருந்துவது போன்ற படங்களுடன் கூடிய கல்வித்திட்டத்தையும், காலையில் அணுக்கரு இணைவு மற்றும் பிளவு பற்றிப் பாடம் நடத்திவிட்டு மாலையில் வீட்டில் தம் குழந்தைகளுக்கு அனுமார் சூரியனைப் பிடித்த கதைகளைச் சொல்லும் ஆசிரியர்களையும், இந்தப் பட்டம் வேண்டுமா இவ்வளவு கொடு என்று கேட்கின்ற பல்கலைக்கழகங்களையும், மனுதர்மத்திர்க்கு எவ்வித தீங்கும் வந்துவிடக்கூடாது என்று கவனத்துடன் அதன் சுற்றுச்சுவர்களுக்குள் பாதுகாக்கும் பணியிலேயே பாதி நேரத்தைச் செலவிடும், இந்திய விஞ்ஞான, தொழில்நுட்ப, மருத்துவ மற்றும் மேலாண்மை நிறுவனங்களையும், மற்றும் விண்வெளிக்குச் செயற்கைகோள் அனுப்பும் போதுகூட இராகு காலம் எமகண்டம் பார்க்கும் ஆராய்ச்சிக் கூடங்களையும், வைத்துக் கொண்டு நான் ஒரு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் நமக்கான அறிவியல் என்று கனவு காண்கிறேன் என்பது உண்மைதான். என்ன செய்வது 2020 க்குள் இந்தியாவை வல்லரசாக்க வேண்டுமே அதனால்தான் கனவு காண்கிறேன். சரி ஒன்றும் கவலைப்படாதீர்கள், அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் வந்துவிட்டது, அணுகுண்டுகளைக் கூடையில் சுமந்து விற்றாவது வல்லரசாக்கிவிடலாம். என்ன இது இவ்வளவு துர்நாற்றம், ஓ வீட்டின் கீழே இருக்கும் பாதாள சாக்கடைக் குழி நிரம்பிவழிகிறது, இந்த நாற்றத்தால் கனவு பெரிதும் தடைபடுகிறது. அந்த சாக்கடைக்குள் மூழ்கி அடைப்பை எடுக்கும் தொழிலாளி நாளைதான் வருவாராம், அதனால் என்ன.. நம் வல்லரசுக் கனவுகளை ஒரு நாள் ஒத்திவைப்போம்.
[3] K.S. Jayaraman, Nature, vol 445, 134 (2007).