Friday, November 23, 2007

"வீதிச்சமூகம்" - கண்டதும் கற்றதும் - சில பகிர்வுகள்

இக்கட்டுரை நமது சக நண்பர்களான "நாய்கள்" சமூகத்தில் அன்றாடம் நடைபெறும் சில நிகழ்வுகள் பற்றியது. இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ள சம்பவங்கள் மற்றும் புரிதல்கள் எனது நண்பர் சீனிவாசனுடன் இணைந்து, வெவ்வேறு உறுப்பினர்களையும் சமூகக்குழுக்களையும் இரண்டாண்டுகள் கண்காணித்ததில் விளைந்தது.


இக்கட்டுரையை நீங்கள் முழுமையாகப் படிக்கும் முன்னர் ஒரு விசயத்தைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். இனி கட்டுரையில் அச்சமூகத்தில் அவ்வுறுப்பினர்களுக்கு இருக்கும் பொதுப்பெயர்கள் மற்றும் உயர்தினைச் சொற்கள் கொண்டே அழைக்கப்படுவர் [தாய், குழந்தை, காதலன், காதலி, தலைவர் (குழுவின் தலைவர்)....]. இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ள அனைத்துச் சம்பவங்களும் அச்சமூகத்தில் சுதந்திரமாகத் திரியும் உறுப்பினர்களை மட்டுமே கண்காணித்ததில் விளைந்தது (நம்மால் பாசத்தோடு "தெரு நாய்கள்" என்றழைக்கப்படுபவர்கள்). மேலும், இக்கட்டுரையை முழுவதுமாக வாசிப்பதற்கோ அல்லது நிகழ்வுகளை இரசிப்பதற்கோ ஓரளவுக்கேனும் விலங்குகள் மீது ஒரு பற்றுதலும், ஈடுபாடும் வேண்டும், இல்லையென்றால் காலவிரயம் என்ற அயர்ச்சிதான் மிஞ்சும்.

எந்த உயிரினமாயிருந்தாலும் முதலில் பிறப்பில்தானே ஆரம்பிக்கவேண்டும், ஆதலால் நாமும் பிறப்பிலிருந்தே ஆரம்பிப்போம்.


I - தாயும் குழந்தைகளும்


சூழல் - மனித நடமாட்டமும், சிறுவாகனங்களின் போக்குவரத்தும், வெகுவாக உள்ள ஒரு சாலைக்கருகே நான்கு குழந்தைகளுடன் மரங்களும் சில புதர்ச்செடிகளும் கொண்ட திறந்தவெளியில் தஞ்சமடைந்திருந்தது அக்குடும்பம்.

மனித சஞ்சாரமிகுந்த பகுதியாதலாலும், பல இன்னல்களிலிருந்து பாதுகாக்க வேண்டியிருப்பதாலும், குழந்தைகள் சாலையிலிருந்து 20 அடி தள்ளியிருக்கும் ஒரு புதரிலேயே உறங்கவைக்கப்பட்டிருந்தன. சாலையையும் அப்புதர்ப்பகுதிகளையும் தடுப்பது அரையடிக்கும் குறைவாக வெளியே தெரியும் கருங்கல் புதைக்கப்பட்ட எல்லை. ஒரு மாலை குழந்தைகளுக்கு உணவு வழங்கிவிட்டு புதரிலிருந்து வெளிப்பட்டதாயைப் பின் தொடர்ந்து குழந்தைகளும் சாலையை நோக்கி ஒடிவந்தன. சாலையை நெருங்கியவுடன் தாய் சற்று வேகமான பாய்ச்சலில் சாலையில் வந்து நின்று தன் குழந்தைகளை நோக்கித் திரும்பி ஒரு பார்வையை வீசினாள். குழந்தைகள் அப்படியே அந்த இடங்களில் உறைந்து போய் நின்றன. பின்னர் வெகுநேரம் தாய் செல்வதையே வேடிக்கை பார்த்த குழந்தைகள், மெதுவாகப் புதருக்குள் நுழைந்தன. இங்கு அவ்வெல்லையை தாண்டக்கூடாது என்பதை அனுபவரீதியாக அக்குட்டிகள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை, அப்படியிருக்கையில் தாய் இல்லாதபோது கூட அவ்வெல்லையைத் தாண்டஎத்தனிக்காத அளவிற்கு அர்த்தப்படும் அந்த பார்வையின் பொருளை அவை எவ்வாறு உணர்ந்திருக்க முடியும் என்பது வியக்கவைக்கிற ஒன்று.


திடீரென்று ஒரு கோடை மதியத்தில் மண்வாசனையுடனான மழைத் தூரல். இரவும் மழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் எங்களுக்கே தெரிந்தன, நான்கு குழந்தைகளுடன் பாதுகாப்பற்ற மர நிழலில் வாழும் அத்தாய்க்குத் தெரியாதா என்ன? இரவு மழை வலுப்பதற்குள் நான்கு குழந்தைகளையும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும்.

அன்று மாலை தன் குட்டிகளுக்கு உணவுவழங்கிய பின்னர், வழக்கம் போல் தன் குழந்தைகளுடன் விளையாட ஆரம்பித்தாள் அத்தாய். சிறிது நேரம் தனது நான்கு குழந்தைகளுடன் விளையாடிய அவள், ஒரே ஒரு குழந்தையின் மேல் அதிக கவனம் செலுத்தினாள். ஏறத்தாழ 10 நிமிடம் ஒரே குழந்தையிடம் விளையாடிய தாயின் செய்கை எங்களை வியப்பில் ஆழ்த்தியது போல் மற்றகுழந்தைகளையும் வியக்கவைத்திருக்கிறது. மற்றகுழந்தைகளும் விளையாட்டை நிறுத்திவிட்டு தாயின் இச்செய்கையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தன. வேடிக்கை பார்த்ததோடல்லாமல், தாயின் செயலுக்கான காரணம் புரியாததால், அக்குட்டிகள் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டன. என்ன நடக்கிறது? ஏன் நடக்கிறது? என்பது புரியாத தவிப்பு. இங்கு தவிப்பு என்று ஒற்றை வார்த்தையில் குறிப்பிட்டிருந்தாலும் அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாத செயல்பாடுகள் என்றுதான் குறிப்பிடவேண்டும், அல்லது, தவிப்பு என்ற வார்த்தையின் முழு வீச்சுக்கான செயல்வடிவம் என்று கொள்ளலாம்.

அங்கே நடைபெற்றதெல்லாம், குழந்தைகளின் இடமாற்றத்துக்கான முன்னேற்பாடுகள் என்பது எங்களுக்குப் புரிவதற்கே 15 நிமிடங்கள் ஆனது. குழந்தைகள் ஓரளவுக்குப் பெருத்துவிட்டதால் எளிதாக தாயின் வாயினுள் நுழையவில்லை. இதனால் தாயின் வேலைப்பளு இரட்டிப்பாகிவிட்டது, என்னதான் தனது குட்டியாயிருந்தாலும், இப்போது தனது தாயின் மீதான நம்பகத்தன்மையை இழந்திவிட்டிருந்தது அக்குழந்தை. கடைசியாக குழந்தையின் பின்னங்கால்களில் ஒன்றைக் கவ்விக்கொண்டு குழந்தையின் முன்னங்கால்களைத் தரையில் நடக்கவிட்டு தரையில் இழுத்துச் சென்றாள் அத்தாய். அன்றிரவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம், சிலவாரங்கள் பயன்படுத்தாமல் நிறுத்தப்பட்டிருந்த காரின் அடிப்புறம்.

இப்போது புதிய இடத்தில் இக்குழந்தை தனியாக இருக்க வேண்டுமே அதனால், மாற்றப்பட்ட குழந்தையுடன் சில நேரம் அத்தாய் செலவிடவேண்டியிருந்தது. பின்னர் ஒரு 15 நிமிடம் கழித்து மீண்டும் மற்ற குழந்தைகளிடம் வந்தாள் அத்தாய். ஒரு குழந்தையை இடமாற்றம் செய்ய அவள் எடுத்துக் கொண்ட நேரம் மட்டும் ஏறத்தாழ 45 நிமிடங்கள். இப்போது மீண்டும் அதே விளையாட்டு குழந்தைகளிடம், பின்னர் மீண்டும் ஒரே குழந்தை குறிவைக்கப்பட்டது, இப்போதும், அதே தொடர் நிகழ்வுகள், ஆனால் இப்படி உடனடியாக நிகழும் நிகழ்வுகளில் கூட அத்தாய் முன் செய்த தவறையே திரும்பவும் செய்தாள், அதாவது முதலில் தனது வாயினாலேயே கவ்விச் செல்ல முனைந்தது, இதனால் மீண்டும் தனது நம்பகத்தன்மைக்கான போராட்டத்தை நிகழ்த்த வேண்டியிருந்தது. இப்போதும் மற்றுமொரு 45 நிமிடம். ஆனால் அப்படித் தேர்ந்தெடுத்த இடமான அக் காரின் அடிப்புறம் தற்காலிகமானதுதான் என்பது எங்களுக்கு அடுத்த நாள் மாலைதான் புரிந்தது. குழந்தைகளை இடப்பெயர்ச்சி செய்வது ஒரு போராட்டமாகவே இருந்தது அத்தாய்க்கு. இந்நிகழ்வினிடையே சில மனிதர்கள், சில சக சமூக உறுப்பினர்கள் எனப் பலரையும் எதிர்கொள்ளவேண்டியிருந்தாலும், அதன் நுணுக்கங்களையும் அத்தாயின் எதிர்கொள்ளல்களையும் பதிவின் நீளம் கருதி விளக்கவில்லை.

இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ள சில நிகழ்வுகளில் மேலே குறிப்பிட்டுள்ள இந்நிகழ்வை மட்டும், எதிரேயிருக்கும் எங்கள் விடுதியின் மாடியிலிருந்து, நிழற்படக்கருவி மூலம் ஒரு மணி நேரம் நிகழக்கூடிய ஒரு நிகழ்வாகப் படம்பிடிக்க முடிந்தது.

II - இனப்பெருக்கக் காலங்களில் குழுஅமைப்பு

இனப்பெருக்கக் காலங்களில் குழுவில் தலைவிக்குதான் பல முன்னுரிமைகள் அளிக்கப்படுகின்றன. உதாரணமாக காதலர்களின் காவலோடு தங்களது எல்லைகுட்பட்ட உணவகங்களில்(குப்பைத்தொட்டி) முதலில் உணவருந்துதல், பின்னர் மற்ற காதலர்களுடன் பகிர்தல். தன்னுடைய எல்லைக்குள் வேறு ஒரு பெண் நுழைந்துவிட்டால் தாக்குதலை முன்னின்று நடத்துதல். இங்கு, அதீத தீவிரத்துடன் முன்னின்று தாக்குதலை நடத்துபவர் பெண்தான். ஒருவேளை, எல்லைக்குள் நுழைந்த பெண் தனது முன்னால் காதலியாயிருந்தால்கூட ஆணுக்குப் பரிவுகாட்டும் உரிமை கிடையாது, தாக்குதலுக்கும், எல்லையைத்தாண்டி விரட்டுவதற்கும் துணைபோகத்தான் வேண்டும். பெரும்பாலும் தாக்குதலில் காயப்படுத்தப் படும் பகுதிகள், முகம், கழுத்து மற்றும் பின்கால்த் தொடைகள். இனப்பெருக்க காலங்களில் நடைபெரும் எல்லை ஊடுறுவலிலான தாக்குதல், ஊடுருவியவரின் மரணம் வரைச் செல்லக்கூடியதாயிருக்கலாம், சிலவேளைகளில் மரண ஓலத்தினால் பரிதாபப்பட்டு அருகிலிருக்கும் மனிதர்கள் தலையிட்டு காப்பாற்றினால்தான் உண்டு. நான்கைந்து காதலர்களுடன், கூட்டாக வாழ்ந்தாலும், உடலுறவில் யாருக்கு முன்னுரிமை என்பது எதனடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்பதை எங்களால் சரியாகக் கவனிக்க இயலவில்லையென்றாலும். உயிரியலின் அடிப்படையான தேர்வுமுறைதான் இருக்கவேண்டும், என்று கருதுகிறேன்.

இதில் குறிப்படுத்தகுந்ததும் எங்களை வியக்கவைத்ததும், எல்லை ஊடுறுவலை தன் காதலர்களிடம் அவை அறிவிக்கும் விதமும், வேகமும். மரநிழலில் காதலர்கள் ஓய்வெடுத்துக்கொண்டிருக்க, அவற்றின் முன் சென்று தன் பரபரப்பை வெளிப்படுத்தி, ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் மொத்தப் பரிவாரத்தையும் தாக்குதலுக்குத் தயார்படுத்திவிடுகிறது. சில நேரங்களில், எதிராளி அல்லது ஊடுறுவியவள் கண்களுக்குச் தெரியும் வரை காதலர்கள் ஒருவிதப் பரபரப்புடன் பின் தொடர்கிறார்கள், ஓடிக்கொண்டிருப்பவள் கண்களுக்குத் தென்பட்டவுடன், தன் முழுத்திரனையும் பயன்படுத்தி ஓடமுனைகின்றனர்.


இங்கு ஒரு விசயத்தைக் குறிப்பிடவேண்டியிருக்கிறது, காதலியின் பரபரப்பைப் பார்த்துக் காரணம் தெரியாமல், பின் தொடர்ந்து, பின்னர் காரணம் தெரிந்தவுடன் முழுதீரத்துடன் தொடர்கிறார்களா காதலர்கள், அல்லது ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவர்களின் உடலில் அதே பரபரப்பையும் தீரத்தையும் உண்டுசெய்ய தேவைப்படும் கால அவகாசமா என்பது தெளிவாகப் புரியவில்லை. இரண்டாவதாகத்தான் இருக்கவேண்டும் என்றெண்ணுகிறேன், ஏனெனில், அவர்களின் சமூகத்தில், எதிர்த்துத் தாக்கவேண்டிய பரபரப்புக்கான காரணம் எல்லை ஊடுறுவலைத் தவிர வேறு என்ன இருக்கமுடியும்.

ஆனால் ஊடுறுவுபவர் தன் காதலர்களுக்கிணையான வலுவான ஆணாயிருந்தால், எதிர்கொள்ளல்கள் மாறுபடுகிறது. பதிவின் நீலம் கருதி அதைப் பற்றி விரிவாக வேறு சமயத்தில் பார்க்கலாம்.

III - சமூகக் குழு

சூழல் - மிகவும் மனிதசஞ்சாரமும், போக்குவரத்தும் நிறைந்த ஒரு சிறிய கிராமத்தின் இரயில் நிலையம். அப்பகுதி தலைவரும் அவரது மூன்று சகாக்களும், அன்றைய சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு, பெட்டிக்கடை அருகே ஓய்வெடுத்துக்கொண்டிருந்தனர். தலைவர் மிகவும் ஆஜானுபாகுவானவர் (9-10 வயதிருக்கலாம்), அவருக்கு அடுத்தபடியான இளைஞர்கள் இருவர் (6-7 & 4-5), மூன்றாமவர் சிறுவன் (2-3).

பயணம்நிமித்தம் எங்கள் கைகளில், சில ரொட்டித் துண்டுகள் இருந்தன. பின்பகற்பொழுது என்பதால், உணவுக்கான சுற்றுப்பயணமும் முடிந்திருக்கவேண்டுமென்றே நினைக்கிறேன். நான்கு பேரும் புழுதிச்சாலையின் ஓரத்தில் அவரவர்க்குரிய இடைவெளியில் படுத்திருந்தனர். இப்போது, ஒரு சிறு துண்டை சிறுவனை நோக்கி வீசினோம், எங்களுக்கு மிக அருகிலேயே விழுந்ததால், உணவின் ஈர்ப்பையும் மீறிய மனிதன் மீதான நம்பகத்தன்மையால், தொலைவிலேயே நின்று எங்களையும் ரொட்டியையும் மாறி மாறி வேடிக்கை பார்த்தான் சிறுவன். சரியென்று, அவனுக்கு அருகிலே விழுமாறு வீசினோம், இப்பொது சிறுவனுக்கு மூத்தவருக்கும் அன்றைய உணவுவேட்டையில் போதிய பங்குகிடைத்திருக்காதென்று நினைக்கிறேன், அவரும் வந்து மெதுவாக அய்க்கியமானார்.

இப்போது எங்கள் குரங்கு மூளை சும்மாயிருக்குமா? நாங்கள் இங்கே உணவு வழங்குகிறோம், கொஞ்சமும் மரியாதையில்லாமல் திமிராக உட்கார்ந்திருக்கும் தலைவரை எப்படியாவது ஈர்க்கவேண்டுமென்று அவருக்கு அருகிலே வீசினோம், சிறுவன் உடனடியாகச் சென்று அதை உண்ணமுற்பட்டான், உடனே தலைவர், தனது தலையை திருப்பி ஒரு பார்வை பார்த்தார், அந்த ஒரு பார்வையில் அப்படியே உறைந்து போய்விட்டான் சிறுவன். பின்னர் தலைவர் ரொட்டித்துண்டை முகர்ந்துவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டுவிட்டார், பின்னர் அச்சிறுவன் மிகவும் பவ்யத்துடன் அதை தலைவரிடமிருந்து சற்று தொலைவிற்கு எடுத்துவந்து பின்னர் அதை உண்டான்.


மீண்டும் எங்கள் குரங்குமூளை வேளை செய்தது, இப்போதும் எங்கள் ரொட்டித் துண்டை தலைவருக்கருகிலேயே வீசினோம், தற்போது இரண்டாவது இளைஞர், தலைவர்தான், கண்டுகொள்ளவேயில்லையே என்ற தைரியத்தில் அதனை உண்ணநெருங்கியது, அப்போது புரிந்தது எங்களுக்கு அவர் ஏன் தலைவராயிருக்கிறாரென்று. அந்த இளைஞர் தலைவருக்கு அருகிலிருக்கும் துண்டை முகரஎத்தனித்த அடுத்த வினாடி, இளைஞர் தரையிலிருக்கிறார், தலைவரின் ஒற்றைக்கால் அவரது மார்பிலும், தலைவரின் வாய் இளைஞனின் கழுத்திலும் இருக்கிறது. இந்த வினாடிக்கும் குறைவான நேரத்தில் தலைவர் எழுந்து, இளைஞனை கீழே தள்ளி, அவனது கழுத்தில் தனது பற்களையும், மார்பில் தனது கால்களையும் வைத்திருக்க வேண்டும்.

ஆனால் இதில் எங்களை ஆச்சர்யப்படுத்திய விசயம் என்னவெனில், தற்போது தலைவர் ரொட்டித்துண்டை உண்டார், ஆனால், சிறுவன் உண்ண முற்பட்டபோது உண்ணவில்லை. தலைமைப் பொறுப்பைத் தக்கவைத்துக்கொள்ளவும், வலிமையை நிலைநாட்டவும் மட்டுமே அவர் அதை உண்டிருக்க வேண்டுமென்றே எண்ணுகிறேன்.

IV - இறப்பு

மனிதனின் தொந்தரவுகளும் வேறு விபத்துக்களும் நிகழாமல் இயற்கையாக இறப்பு நேர்ந்தால், பெரும்பாலும், ஒரு சருகு உதிர்வது போன்ற ஒரு அமைதியான நிகழ்வாகத்தான் இருக்கிறது. ஒரு முதியவர் தமக்கென்று பெரிய விஸ்தாரமான எல்லையையெல்லாம் வைத்துக் கொள்வதில்லை, ஏதாவது ஒரு உணவகத்தின் (குப்பைத்தொட்டி) அருகிலேயே தனது வாசத்தை வைத்துக்கொள்கிறார். மேலும் அப்பகுதி தலைவனுடனோ, அல்லது தலைவியுடனோ எவ்வித சலசலப்பையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் யாருமற்ற நேரத்தில் கிடைத்ததை உண்டு அங்கேயே அருகிலேயே உறங்கிக்கொள்கிறார். மற்ற சமூக உறுப்பினர்கள் முதியவர்கள் மீது தனிப்பட்ட பரிவும் காட்டுவதில்லை, தொந்தரவும் செய்வதில்லை, அவர் அங்கே இருக்கிறார் (exists) அவ்வளவுதான்.

தனது இறுதிக்காலம் நெருங்கிவிட்டது என்பதை தெளிவாகவே உணர்ந்த அம்முதியவர் உணவுக்காக எவ்வித முனைப்பையும் செய்யாமல், அப்படியே தன் இறுதி உறக்கத்திற்கான இடத்தையும் தேர்வு செய்துகொள்கிறார். காய்ந்த சருகுகளின் இடையே தன்னை அப்படியே கிடத்திக் கொண்டார். இரண்டு நாட்கள் உடலில் லேசான அசைவுகளையும், கண்களில் அவ்வப்போது விழிப்பு நிலையையும் காணமுடிந்தது, பின்னர் அசைவற்று நிரந்தர உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டார். எங்களால் காண முடிந்த இயற்கையாக இறக்க நேர்ந்த ஒரே சமூக உறுப்பினர் இவர்தான்.


சில பொதுவான குணாதிசயங்கள் - உதாரணமாக, சிறுநீர் மற்றும் கால்களால் தரையைக்கீறி எல்லையையும் செல்லும் பாதையையும் குறித்தல். வாலைப் பின்கால்களுக்குள் நுழைத்து தரையில் அமர்தல் - அடங்கிப்போதலையும், அதனைத் தொடர்ந்து தரையில் மல்லாந்து கால்களைமேல் நோக்கி நீட்டினால் - சரணடைதலையும் குறிக்கும். ஓரளவுக்கு இணையான எதிரியாயிருந்தால் வாலை முதுகெலும்பிற்கு இணையாகவும், முகத்தில் ஒருபக்க உதடுகளைத் தூக்கி தன் நீண்ட பற்களைக் காண்பித்தல் - தாக்க முனைந்தால் தற்காப்புக்காகத் தாக்கவேண்டியிருக்கலாம் என்பதையும் குறிக்கும். காதுகள் சிலிர்த்து, முதுகு மயிர்களும், வாலும் செங்குத்தாகவும், விழிகளுக்கு மேல் ஒரு உக்கிரச் சுருக்கமும், கண்கள் நேருக்குநேர் நோக்கியிருந்தால், தாக்குதலுக்கு தயார் நிலையையும் குறிக்கும். மனிதர்களிடமும் கூட அவை தமது உணர்வுகளை வெளிப்படுத்த இவ்வகை உடல்மொழிகளையே கையாள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வுடல் மொழிகளை அவை மிகுந்த கண்ணியத்துடன் கடைபிடிப்பவை, உதாரணமாக நீங்கள் ஒரு "மனம்பிறழாத" சமூக அங்கத்தினரை எதிர்கொள்ளநேர்ந்தால், அப்படியே நின்று கைகளைக்கட்டிக்கொண்டு வானத்தை நோக்குங்கள் போதும், எக்காரணத்தைக் கொண்டும் அவரின் கண்களை நோக்கவேண்டாம். இதை எனது நேரடி அனுபவமாகக் கூடக் கொள்ளலாம், அதுவும் ஒருவரோடல்ல, ஒரேசமயத்தில் இருவரோடு.. :))

உங்களுக்கு ஒருவேளை இவ்வீதிச்சமூகத்தினரைத் தாக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், கூடுமான வரை அவர்களின் கால்களையோ முகத்தையோ காயப்படுத்தாதீர்கள். அவர்களின் வாழ்வியல் ஆதாரமே அவைதான்.

_________________

மொழி என்பது எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு கருவி என்றால், அவை பயன்படுத்தும் உடல் மொழிகளின் துணையால் நம்மை விட வேகமாகவே தொடர்பு கொள்கின்றன. மொழி என்பது மனிதனின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு என்பதை, சீரான பல எண்ணிக்கையிலான ஒலிவடிவங்களின் கூட்டமைப்பையும் அதற்கான வடிவ அமைப்பையும் அளித்தது மட்டும்தான் மொழியில் மனிதனின் பரிணாம வளர்ச்சியாகப் புரிந்து கொள்ளவேண்டுமென்றே கருதுகிறேன்.

சில நிகழ்வுகள் மனிதவிலங்குக் குழுக்களோடு ஒத்திருப்பதைக் காணமுடிந்தாலும் அவற்றை நேரடியாகத் தொடர்புபடுத்திப் பார்ப்பது தவறான முடிவுகளுக்கு இட்டுச்செல்லும். ஆதலால், கூடுமான வரையில் இதை சக உயிரினக்குழுக்களின் பண்புகள் (behaviorism) என்ற அளவிலேயே புரிந்து கொள்ளவேண்டும் என்று இக்கட்டுரையை முழுவதுமாக வாசித்த உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.


இந்த இரண்டு ஆண்டுகளில் எங்களுடன் இருந்து பழகி, எங்களால் "ஹாப்ஸ்" என்றும், மேலும் பலரால், எங்களின் காதலி என்றழைக்கப்பட்டு, இப்போது உயிருடன் இருக்கிறாளா இல்லையா எனத் தெரியாத எங்கள் தோழிக்கு இக்கட்டுரையை சமர்ப்பிக்கிறேன். இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ள பல பொதுவானவற்றிர்க்கு விதிவிலக்காகவே அவள் வாழ்ந்தாள். உதாரணமாக ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகாலம் சக இனத்தில் ஒரே துணையுடன், எவ்வித இனப்பெருக்கமுமின்றி வாழ்ந்தாள் (வீட்டில் பாதுகாப்புடன் வளர்பவருடன் குழப்பிக்கொள்ளவேண்டாம்).

Friday, November 16, 2007

"எல்லாம் தனக்கு வந்தால் தெரியும்" - பொய்க்கப் போகும் சொல் வழக்குகள்

"வயிற்று வலியும் தலை வலியும் தனக்கு வந்தால் தெரியும்" என்பது போன்ற சொல்வழக்குகள் கூடிய விரைவில் பொய்த்துப் போகலாம் என சமீபத்திய அறிவியல் கண்டுபிடுப்புகள் கூறுகின்றன.

மனித மூளையின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மின்முனைகளைப் (electrodes) புகுத்தி, அப்பகுதிகளிலிருந்து வரக்கூடிய நியூரல் சமிஞ்சைகளைப் (neural signals) பயன்படுத்தி ஒருவரின் வலியின் செறிவை அளவிட முடியும் எனக் கண்டுபிடுத்துள்ளனர்.

இக்கண்டுபிடிப்பு, இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Morten Kringelbach, மற்றும் அவரது ஆராய்ச்சிக் குழுவினர் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் மூலம் விளைந்துள்ளது. இவர்கள் ஆராய்ந்த இந்நியூரல் சமிஞ்சைகளை ஒருவர் உணரக்கூடிய வலியின் செறிவுடன் தொடர்புபடுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

முதலில் விழிப்பு நிலையில் இருக்கக்கூடிய 12 மனிதர்களின் மூளையில் வலியுடன் தொடர்புடைய பகுதிகளுக்கிடையே இரண்டு மின்முனைகளைப் பொருத்தி அப்பகுதிகளிலிருந்து வெளிப்படும் மீச்சிறு அதிர்வெண்கொண்ட மின்சமிஞ்சைகளை (low frequency brain waves) அளப்பதன் மூலம் ஒருவர் உணரும் வலியின் செறிவைக் கணக்கிட முடியும் என்று கூறுகின்றனர். அம்மனிதர்களின் உடலில் வலி நிறைந்த பகுதிகளையும் வலியற்ற பகுதிகளையும் தொடும்போது இச்சமிஞ்சைகளில் ஏற்படும் மாறுபாடுகளைக் கொண்டு வலியின் செறிவுடன் தொடர்புபடுத்தியுள்ளனர். இச்சமிஞ்சைகளின் தொடர் இருப்பு அல்லது தோற்றம் வலி செறிவுமிகுந்தது எனவும் தோன்றியவுடன் மறைந்தால் வலி செறிவு குறைந்தது எனவும் புரிந்துகொள்ளலாம். இச்சமிஞ்சைகளின் ஆயுட்காலம் வலியின் செறிவுடன் தொடர்புடையது எனப் புரிந்துகொள்ளலாம்.

இதற்கு முன் மூளையின் பல பகுதிகளில், மூலக்கூறு, மற்றும் நியூரான் செல்கள் அடிப்படையில் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அவற்றின் முடிவுகள் பெரும்பாலும் “Yes or No” போன்ற பதிலையே அளித்ததாகவும், இவ்வாராய்ச்சியின் மூலம் வலியினை அளவிட முடியும் என்றும் கூறியுள்ளனர்.
அறுவைசிகிச்சையின் போதும் வேறு பல தருணங்களில் தரப்படும் வலிநிவாரணிகளின் செயல்பாடுகள், போன்றவற்றை அறிந்துகொள்ள இப்புதிய சமிஞ்சைகளின் கண்டுபிடுப்பு மேலும் வழிவகைசெய்யும் எனக்குறிப்பிடுகின்றனர்.

உணர்வுகளை அளவிடக்கூடிய இவ்வகை ஆராய்ச்சி இன்னும் ஆராய்ச்சிக்கூடங்கள் அளவிலேயே இருந்தாலும், இப்புதிய கண்டுபிடிப்பு இவ்வகை ஆராய்ச்சிகளை ஒரு படி முன்னோக்கி நகர்த்தியிருக்கிறது என்றே கொள்ளலாம்.

இது என் தனிப்பட்ட கருத்து, இப்போது வலி என்ற உணர்வை அளவிட்டாலும், கூடிய விரைவில் இன்னும் பல உணர்வுகளை அளவிடுவதற்கான புதிய வழித்தடமாக இக்கண்டுபிடிப்பு அமையலாம். இவையெல்லாம் உணரப்பட வேண்டியவை என்ற தர்க்கவாதங்கள் கூட அழிந்து போகலாம். மேலும், மூளை - மனது (Brain – Mind paradox) கோட்பாடுகளிலும் மாறுதல்கள் வரலாம்.

எனக்குள் எழுந்த ஒரு நகைச்சுவைச் சந்தேகம், இது ஒரு புதிய அளவீடு என்றால் அந்த அளவையை என்ன அலகுகளில் குறிப்பார்கள். அதாவது, மருத்துவர்கள் உங்கள் உடலின் வெப்பநிலை இவ்வளவு டிகிரி செல்ஷியஸ் என்று கூறுவது போல் உங்கள் உடலில் இவ்வளவு வலி என்று கூறப்போகும் நாளை உங்களைப்போல் நானும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.


http://www.nature.com/news/2007/071114//full/450329b.html

Monday, November 12, 2007

சகோதரக் குடும்ப அட்டையில் புதிய உறுப்பினர் சேர்க்கை


இதுவரை நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்கள், மிகப் பெரியனவாகவும், அதீதவெப்பநிலையையும், தங்களின் சூரியனைச்சுற்றி ஒரு சீரற்ற பாதையில் உழல்பவையாகவும் இருந்தன. மேலும், அப்படிக் கண்டுபிடிக்கப்பட்ட வெகு சில கிரகங்களும் நட்சத்திரத்திற்கு ஒன்று என்ற விகிதத்திலேயே இருந்தன.

ஆனால், 41 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் 55- Cancri என அழைக்கப்படும் ஒரு நட்சத்திரத்திற்கு மட்டும் இதுவரை நான்கு கிரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொலைநோக்கிகளின் மேம்பாட்டாலும், 18 ஆண்டுகள் தொடர்கண்காணிப்பின் விளைவாலும், தற்போது மேலும் ஒரு புதிய ஐந்தாவது கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சான்ஃபிரான்ஸிஸ்கோ மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Debra Fischer மற்றும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Geoffrey Marcy ஆகியோரின் தலைமையிலான விஞ்ஞானக்குழு இதனை இணைந்து கண்டறிந்துள்ளனர்.

இப்புதிய கிரகம் பூமியைவிட 45 மடங்கு அதிக நிறையையும், அதன் சூரியனைச் சுற்றிவர 260 நாட்களும், யுரேனஸ் மற்றும் நெப்டியூனில் காணப்படும் கருப்பொருட்களுக்கு இணையான கருப்பொருட்கள் கொண்டதாயும் இருப்பதாகக் கூறுகின்றனர். உயிர்த்தோற்றத்திற்கான அத்தியாவசியச் சூழலுக்கான வரம்புகளின் உள்விளிம்பில் இப்புதிய கிரகத்தின் அமைப்பு இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இதே நட்சத்திரத்தின் குடும்பத்தில் மேலும் புதிய கிரகங்கள் அல்லது துணைக்கோள்கள் கண்டுபிடிக்கப் படுமாயின், அவற்றில் பூமியை ஒத்த உயிர்த்தோற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அதற்கு நாம் தொழில்நுட்பம், மற்றும் அறிவியல் வளர்ச்சி மற்றுமொரு படிநிலைத் தாண்டும்வரைக் காத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றனர்.

நமது சூரிய குடும்பம் போல வேறு சில குடும்பங்களும் இருக்கலாம், என்ற அனுமானம், இக்கண்டுபிடிப்பினால், மேலும் ஒருபடி உறுதியாக்க நிலை நோக்கி நகர்ந்திருக்கிறது என்றே கருதலாம்.

Wednesday, October 17, 2007

இருவழிப்பாதை - தோழியுடன் ஓர் பயணம்


நீ எப்போது எப்படி எனக்கு அறிமுகமானாய் என்றெனக்கு நினைவிலில்லை. எத்தனையோ அறிமுகங்களின் நிகழ்வுகள் நினைவற்றுப் போவதுபோல் உன்னுடைய அறிமுக ஆச்சர்யங்கள் எதுவும் நினைவில் இல்லை. ஆனால் உன்னுடனான உறவு இனி இறுதிவரை நீளப்போகின்ற ஒன்று என்பது உனக்கு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

நிகழ்வுகளின் தாக்கங்களில் சலிப்புற்றிருந்தாலும் சரி, சோம்பலின் வெளிப்பாடாய் முடங்கிக் கிடந்தாலும் சரி, நான்கு சுவற்றுக்குள் சிறைவைத்துக்கொண்ட என்னைப் பிடரியில் இடித்து, எனக்கும் இவ்வுலகிற்குமான நெருக்கத்தைப் புரிய வைப்பாய். அறைக்குள் முடங்கிக் கிடந்த என்னை அழைத்து மழைச் சாரலின் இன்பத்தையும், மாமரக் குயிலின் ஒலியீர்ப்பையும் உணர வைத்தவள் நீ. துக்கம், இன்பம், சலனம் என்றெந்தவொரு மனோநிலையையும் ஒரு மெல்லிய தென்றலினுதவியில் சீர்செய்து சமன் செய்யும் வித்தையை நீ எங்கு கற்றாய்.

உன்னுடனான இருத்தலைவிட உன்னோடான எனது பயணங்கள் எப்போதும் சுகமளிப்பவை. என்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்து இன்றுவரை, ஏன் என்றுமே உன் தோள்களில் தலைசாய்த்து பயணிப்பதையே விரும்புகிறேன்.


என் பயணங்களின் நோக்கமும், மார்க்கமும் எதுவாயினும் உன்னுடனான பயணம் ஒரு சுகானுபவமே. இவ்வுலகத்தின் பல்வேறு பிரதேசங்கள், மக்கள், அவர்களின் வாழ்வியல், அறிமுகமில்லாக் குழந்தைகளின் கையசைப்பு அறிமுகம் என்று உன்னோடு கதைத்துக்கொண்டே செய்த எனது வாழ்வியல் பயணங்களில் எனது வாழ்க்கைப்பயணத்தை செழுமைப்படுத்தினாய்.
ஊடலும் கூடலும் கலந்த களவுவாழ்வுபோல் உன்னுடனான பூசல்கள், உன் கண்களை மறைத்து ஆடை அணிவித்து என் ஆடை களைந்த வேளைகள் மட்டுமே. என்ன செய்வது நீ என்னை மட்டுமா இவ்வுலகிற்கு அறிமுகப் படுத்துகிறாய், எப்போதும் இருவழிப்பாதையாகவே இருக்கிறாய்.
நீயில்லாத ஒரு அறை சிறைக்கூடமாகவும், நீ இல்லாத ஒரு வாழ்வு தண்டனையாகவும் இருப்பதில் வியப்பொன்றுமில்லை.
உன் தோழமையின் பெருமையுணர்ந்ததால்தான் பில்கேட்ஸ் கூட அவர் மென்பொருளுக்கு "windows" என்று உன் பெயரை வைத்திருப்பாரோ...!!!

Sunday, October 7, 2007

இந்தியா - அமெரிக்க அணு உடன்படிக்கை மற்றும் இந்திய அணு ஆற்றல்..!!??

இந்தியா - அமெரிக்கா இடையேயான உடன்படிக்கையைப்பற்றிப் பல காரசாரமான விவாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், பொதுவெளியில் பெரிதும் பேசப்படாத சிலவற்றை இங்கே பதித்து வைக்கிறேன்.

அணு ஆற்றல் மற்றும் அணு உலைகள் தொடர்பான தொழில்நுட்பங்களில் இந்தியாவிற்கும் வெளிநாடுகளுக்கும் இருக்கும் தொடர்பு ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகால வரலாறு. அதைப்பற்றிய சில குறிப்புகளை இங்கே காண முடியும்[1]. சமீபத்திய இந்திய - அமெரிக்கா உடன்பாட்டினைப் பற்றி நமது பிரதமர் திரு. மன்மோகன் சிங் மற்றும் அமெரிக்க அதிபர் திரு. புஷ் இந்தியாவிற்கு வருகை புரிந்தபோது வெளியிட்ட கூட்டறிக்கையில், இவ்வுடன்படிக்கை, மருத்துவம், பொருளாதாரம், கல்வி மற்றும் ஆராய்ச்சி, இராணுவப் பயிற்சி மற்றும் முக்கியமான இந்த அணு ஆற்றல் துறையின் வளர்ச்சி என அனைத்துவகையிலும் இவ்வுடன்படிக்கையினால் இந்தியா பெறும் நன்மைகளைப் பட்டியலிட்டனர்[2].


இவ்வுடன்படிக்கையினால் இந்தியா பெறும் நன்மைகளைப் பற்றிப் பலரும் பட்டியலிட்டுள்ள இவ்வேளையில், இவ்வுடன்படிக்கையினால் அமெரிக்காவிற்கு என்ன லாபம். ஏன் இந்தியாவின் மேல் அதற்கு இவ்வளவு அக்கறை..???? எனப் பலத் தொடர்கேள்விகள் எழுவது நியாயமான ஒன்று.

இவ்வுடன்படிக்கையில் கையொப்பமிட்டு வெள்ளை மாளிகையில் அதிபர் புஷ் தம் மக்களுக்கு ஆற்றிய உரையில் இவ்வுடன்படிக்கைப் பற்றி நான்கு முக்கியமான காரணிகளை குறிப்பிட்டுள்ளார் [3,4].


(i) இவ்வுடன்படிக்கை ஆற்றல் துறையில் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவைப் பலப்படுத்தும். மேலும், உலகில் தற்போது ஆற்றல் தேவை மற்றும் பயன்பாட்டில் ஐந்தாம் இடத்தில் இந்தியா இருப்பதாகவும், மேலும் இத்தேவை 2015 ஆம் ஆண்டிற்குள் இருமடங்காக உயரும் எனவும், இத்தேவையை இந்தியா நிறைவேற்றிக்கொள்ள இந்தியாவிற்கு உதவுவதற்காகவும், சுற்றுப்புறச் சூழலுக்கு ஊறுவிளைவிக்காத வண்ணம் ஆற்றல் உற்பத்தியைப் பெறுக்கிக் கொள்ளவும் இவ்வுடன் படிக்கை உதவும். [this act will strengthen cooperation between India and United states on Energy, one of the most important challenges of the 21st Century].

(ii). இவ்வுடன்படிக்கை பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும். அமெரிக்காவின் அணுக்கரு தொழில்நுட்பத்தில் முதலீடு செய்திருக்கும் தொழிற்சாலைகளுக்கு இந்தியா ஒரு புதிய வர்த்தகமாக விளங்கும். [This Act will help economic growth...]

(iii). இவ்வுடன்படிக்கை, ஆற்றல் உற்பத்தியில் தற்போது 70% நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்வதால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசுக்களிலிருந்து இந்தியா தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வழிவகுக்கும். மேலும் வளிமண்டலத்தை மாசுபடுத்தாமல் இந்தியா தன் ஆற்றல் தேவையை பூர்த்தி செய்துகொள்ள வழிவகுக்கும். [This act will help make it possible for India to reduce emissions and improve its environment].

(iv). இவ்வுடன்படிக்கை இந்தியாவை அணு ஆயுதத் தடுப்புக்கான சர்வதேசமுயற்சிகளில் பங்கெடுக்க வழிவகுக்கும். இதன் மூலம் அது அமெரிக்காவின் பாதுகாப்பிற்கும் வழிவகுக்கும். [This Act will help keep america safe, by paving way for india to join the global effort to stop the spread of nuclear weapons].

மேலும் புஷ் தமது உரையில், அமெரிக்காவும், இந்தியாவும் தங்களுக்கிடையே ஆழ்ந்த நட்பையும், நேசத்தையும் கொண்ட நாடுகள் என்றும், இவ்விரண்டு குடியரசுகளும் தீவிரவாதத்திற்கெதிரான போரில் ஒருங்கிணைந்து செயல்படும் என்றும் குறிப்பிட்டுகிறார். மேலும், இவ்வுடன்படிக்கை ஏற்படக் காரணமாக இருந்த அனைத்து அமெரிக்க அலுவலர்களையும், அக்கூட்டத்திற்கு வருகை புரிந்திருக்கும் இந்திய அமெரிக்கப் பிரதிநிதிகளையும், இவ்வுடன்படிக்கை ஏற்படுவதற்காக அவர்கள், இந்தியா மற்றும் அமெரிக்கவில் அவர்கள் ஆற்றிய பணி முக்கியம் வாய்ந்தது என்றும் புகழுரைத்திருக்கிறார் [4].

எப்படிப் பார்த்தாலும் புஷ் அவர்கள் கூறியிருக்கும் நான்கு காரணிகளில் அமெரிக்காவிற்கு இலாபகரமாக இருக்கப் போவது, இரண்டு காரணிகள்தான். அமெரிக்க அணு உலைத் தொழிற்சாலைகளுக்கான புதிய மற்றும் நிரந்தரமான வர்த்தகமாக இந்தியாவை மாற்றுவது, மற்றும் அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கெதிரான புனிதப் போர்களில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர்களுக்குத் துணைபோவது. இதுதான் அமெரிக்கா பெறும் லாபம் அல்லது பயன் என்பதை புஷ்ஷின் உரையிலுருந்து தெளிவாக உணர முடிகிறது. மற்றயிரண்டு காரணிகளும், இந்தியாவிற்குச் சாதகமானது போல் தோன்றினாலும் மறைமுகமாக அவை முந்தய இரண்டு காரணிகளுக்கான துணைக்காரணங்கள் என்பது தெளிவாகிறது.

இடையில் யார் இந்த இந்திய அமெரிக்கர்கள்? அவர்கள் ஏன் இந்த உடன்படிக்கை ஏற்பட பாடுபடவேண்டும். அவர்களுக்கு இந்திய-அமெரிக்க வெளியுறவு உடன்படிக்கையில் வெள்ளை மாளிகை ஏன் நன்றி கூறுகிறது? இவர்கள் சில தலைமுறைகளுக்கு முன்னால் அமெரிக்காவில் சென்று குடியேறி குடியுரிமை பெற்ற இந்தியர்கள். அமெரிக்க அரசியலில் இவர்கள் பங்கு தற்போது தவிர்க்கமுடியாததாகிவிட்ட ஒன்று. இவ்வுடன் படிக்கையை செயல் படுத்த இவர்கள் முனைப்புடன் இருக்கக் காரணம், பதிலுதவியாக அமெரிக்க அரசாட்சித் துறைகளில், குறிப்பிட்ட சில பணியிடங்களில் இவர்களையோ அல்லது இவர்களது வாரிசுகளையோ அமர்த்துவதற்கு இருக்கும் தடைகளைத் தளர்த்த அமெரிக்கா பரிசீலித்திருக்கிறது. மேலும், ஹிலாரி மற்றும் ஒபாமா போன்ற தேர்தல் போட்டியாளர்களுக்கு இவர்களது ஒருங்கிணைந்த வாக்கு எண்ணிக்கை முக்கியம் வாய்ந்ததாகிறது[5]. இவர்களது அரசியல் நடவடிக்கைகளைப் பற்றி வேறு தனி பதிவில் விரிவாகப் பார்க்கலாம். ஆனால் இவ்வுடன்படிக்கையில் இவர்களின் தலையீடு புறக்கணிக்க முடியாத ஒன்று.


அமெரிக்கத் தரப்பில் முன்னிறுத்தப்பட்ட காரணிகள் இவ்வாறிருக்கையில் இந்தியா அறிவியல் ரீதியாக முன்வைக்கும் சில வாதங்களைப் பற்றிப் பார்ப்போம். இந்தியத் தரப்பில் பலதரப்பட்ட நன்மைகளை முன்வைத்தாலும் அணு ஆற்றல் துறையின் தற்போதைய நிலைமையையும் பங்களிப்பையும் மட்டும் விமர்சித்திருக்கிறேன்.


முதலில் இந்தியா ஏன் யுரேனியம் தாதுக்களை இறக்குமதி செய்யவேண்டும்? இந்தியாவிலுள்ள பெரும்பாலான அணுக்கரு உலைகள், இந்தியாவிலுள்ள யுரேனியம் தாதுவின் தட்டுப்பாட்டை மனதில் வைத்தே வடிவமைக்கப்பட்டவை. இதற்காக நிச்சயம் விஞ்ஞானி ஹோமி பாபாவின் விஞ்ஞான அறிவிற்கு இந்தியா கடமைப்பட்டுள்ளது.


இந்தியாவிலுள்ள யுரேனியம் தாதுவின் தரம் மற்றும் அளவு மிகவும் குறைவு. சர்வதேசத் தர அடிப்படையில் 0.06% தான் இந்தியாவிலுள்ள யுரேனியத் தாதுவின் அளவு. அமெரிக்கா, கனடா போன்ற சர்வதேச நாடுகளில் 0.25% என்ற தர அளவிற்குக் கீழுள்ள நிலப் பகுதிகளை அந்நாடுகள் யுரேனியச் சுரங்கங்களாகப் பயன்படுத்துவதில்லை. அப்படியானால் இந்தியாவில் யுரேனியம் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம்[7]. இப்படி 0.06% தாதுவை வைத்துக்கொண்டு ஆற்றலைப் பெருக்க நினைப்பது நிச்சயம் பாராட்டத்தக்க செயல் அல்ல. யுரேனியத் தேவைக்காக மேலும் மேலும் தாதுக்களை வெட்டுவதனால் இயற்கைச் செல்வங்கள் பலவற்றை இழக்கும் அபாயம் உள்ளது. இந்தக் கண்ணோட்டத்தில் யுரேனியம் தாதுவை இறக்குமதி செய்வது என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடுகிறது.

அப்படி யுரேனியம் தாதுவை இறக்குமதி செய்வது தவிர்க்க முடியாத ஒன்று என்றால், யுரேனியம் ஏற்றுமதி மற்றும் தரம் ஆகியவற்றில் முதல் இடத்தில் இருக்கும் கனடாவிடம்தானே உடன்படிக்கையை செயல்படுத்தியிருக்க வேண்டும்[6]. அதைவிடுத்து சர்வதேச அளவில் யுரேனியத் தாதுக்களின் அளவு மற்றும் தர வரிசையில் 13 வது இடத்தில் இருக்கும் இந்தியா 8 ஆம் இடத்தில் இருக்கும் அமெரிக்காவுடன் ஏன் உடன்படிக்கை செய்துகொள்ளவேண்டும், என்ற கேள்வி எழுவதை தவிர்க்கமுடியவில்லை.

இவற்றுக்கெல்லாம் ஏதாவது புத்திசாலித்தனமாக மற்ற ஆதாயங்களைப் பேசினாலும், வல்லரசுக் கனவு காணும் இந்தியாவின் அணுக்கரு உலைகளின் தரம், குறுகிய காலத்தில் வல்லரசாகத் துடிக்கும் மக்களின் தேசப்பற்றையும் எப்படி பிரதிபலிக்கிறது என்று பார்ப்போம். இந்தியாவைப் பொறுத்தவரை இரகசியங்கள் என்பது, அதிகார வர்க்கத்தின் மெத்தனத்தையும் தவறுகளையும் மறைப்பதற்காக மட்டுமே பயன்படும் ஒரு ஆயுதம், என்பதற்கு அணு ஆற்றல் துறை எந்த வகையிலும் விதிவிலக்கல்ல.


(1) இராஜஸ்தானிலுள்ள ராவட்பாட்ட(Rawatbhata) அணு உலையைச் சுற்றியுள்ள 50 கி.மீ நிலப்பரப்பிலுள்ள கிராம மக்களின் உடல் நலம் பலவகைகளில் பாதிக்கப்பட்டிருக்கிறது. உடலில் மேல்புறம் மற்றும் உள்ளே தோன்றும் கட்டிகள் (Tumours) இந்தியாவின் சராசரி விகிதத்தைவிட பல மடங்கு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. விசித்திரமான வடிவக் கோளாருகளுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 1000 திற்கு 77.5 என (14 வட மாநிலங்களின் சராசரி 9.5/1000) கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் கருக்களைவு, உடல் கோளாருகளுடன் பிறக்கும் குழந்தைகள், இப்பகுதி மக்களின் சராசரி ஆயுட்காலம் மற்றவரைவிட 11ஆண்டுகள் குறைவாக இருப்பது என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது [7].


(2) உத்தரப்பிரதேசத்தில் நரோரா அணுக்கரு உலையில் 31 மார்ச் 1993 அன்று டர்பைன் கட்டுபாட்டு ஆறை திடீர் தீவிபத்துக்குள்ளானது மட்டுமல்லாமல் கட்டுப்பாடில்லாமல் இரண்டு மணிநேரம் எரிந்திருக்கிறது. இதனால், அணு உலைக்குச் செல்லும் மின்சாரம் 17 மணிநேரம் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இப்படி நிறுத்திவைக்கப் பட்டாலும், அணு உலையின் கதிரியக்க மையப்பகுதிக்குத் தொடர்ந்து நீர் சுழற்சி இருக்க வேண்டியது அவசியம். ஆதாலால், கையில் டார்ச் விளக்குடன் இரண்டு பொறியாளர்கள் அணுக்கரு உளையின் மேல் தவழ்ந்து சென்று தங்களது கைகளாளேயே திறந்திருக்கின்றனர். அதன் மூலம் நரோரா மற்றொரு ஹிரோஷிமாவாக மாறுவதைத் தடுத்திருந்தாலும், ஒட்டு மொத்த கதிரியக்கத்தையும் தங்கள் மேல் தாங்கியுள்ளனர் அவ்விருவர்[7].

இதில் கொடுமையின் உச்சகட்டம் என்னவெனில், டர்பைனில் இருந்த இக்குறைபாடு அணு ஆற்றல் துறைக்கு முன்னரே தெரியும் என்பதுதான். ஜெனரல் எலக்ட்ரிகல்ஸ்(GE), UKவைச் சேர்ந்த டர்பைன் வடிவமைப்பாளர் அணு உலையை நிறுவும் போதே இதை அறிவித்திருக்கிறார்[8].


(3) நரோராரிவில் ஏற்பட்ட தீவிபத்தினால் இந்தியாவின் அணு உலைகள் முழுவதும் முடக்கப்பட்டிருந்த நேரத்தில், குஜராத்தில் 16 ஜுன் 1994 அன்று ஏற்பட்ட வெள்ளம், கக்ராபர் அணு உலையினுள் புகுந்துவிட்டது. இதில் கொடுமை என்னவெனில் கதிரியக்கக் கழிவுக்களங்கள் நீரில் மிதந்து செல்லத் துவங்கிவிட்டனவாம். பின்னர் அவ்வூழியர்கள் மாரளவுத் தண்ணீரில் சென்று மிதந்து கொண்டிருந்த அக்கழிவுக் கலன்களைப் பத்திரப் படுத்தியுள்ளனர்[7,9]. இவ்வேளையில் அணு உலை இயக்க நிலையில் இருந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று தனியாக விளக்கத் தேவையில்லை.


(4) இந்திய அணு ஆற்றல் துறையின் தலைமையிடமான BARC எந்த வகையிலும் குறைந்து விடவில்லை என்பது போல், அங்கு ஏற்பட்ட ஒரு திடீர் விபத்தில் கதிரியக்க நீர் கடலுக்குள் பாய்ந்துவிட்டது. இவ்விபத்திற்குப் பிறகு பல நூறு மீட்டர்களுக்கு அப்பால் கடலுக்கடியில் எடுக்கப்பட்ட மணலில் சீஷியம் - 137 என்ற கதிரியக்கப் பொருள் பெரிதும் கலந்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

மேலும் 1991ல் சைரஸ் மற்றும் துருவா அணு உலைகளுக்கு இடையேயான நீர்க்குழாய் வெடித்துச் சிதறியதில் அதிலுள்ள கதிரியக்கத் தன்மை கொண்ட நீர் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒப்பந்த ஊழியர்கள் மேல் பாய்ந்துவிட்டது. பின்னர் அவர்களைக் குளிக்கச் செய்து மாற்று உடை கொடுத்து அனுப்பிவிட்டது நிர்வாகம். குறைந்த பட்சம் 300 - 1000 மில்லிரெட் அளவிலான கதிரியக்கத்திற்கு அவர்கள் உட்பட்டிருக்கலாம் என்று பின்னர் அந்நீரினை ஆராய்ந்த மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்[7].


இப்படி பல விபத்துகளைப் பட்டியல் போட்டுக்கொண்டே செல்லலாம். மேலும் அறிந்து கொள்ள ஆர்வம் இருக்குமாயின் கீழுள்ள தரவுகளில் 7 வதை மட்டுமாவது வாசித்துப் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

ஆனால் இது போன்ற விபத்துக்கள் எல்லா மின் உற்பத்தித் துறையிலும் உண்டு என்றும் வளர்ச்சிக்குப் பரிசாக சிலவற்றைக் கொடுக்க வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டிற்குச் செல்லும் முன்னர் யுரேனியத் தாதுக்களை வெட்டி எடுக்கும் சுரங்களைப் பற்றியும் பார்த்துவிடலாம்.


ஏறத்தாழ இந்தியாவின் மொத்த யுரேனியம் தாதுக்களும், அதைப் பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபடும் இந்திய யுரேனியம் கார்பரேஷனும் (UCIL) பீகாரின் ஜடுகுடா மலைப்பகுதிகளில் உள்ளது. வழக்கம் போல் எல்லா இடத்திலும் பூர்வீக மக்களை வஞ்சிக்கும் வழிமுறைகளான, வேலைவாய்ப்பு, சரியான இடப்பெயர்வு வசதிகள் இல்லாமை என்ற எந்த வகையிலும் இம்மலைப் பகுதிகளில் வாழும் ஆதிவாசிகளும் தப்பித்துவிடவில்லை. மேலும் வேலை வாய்ப்பு என்ற பெயரில் பாதுகாப்பற்ற முறையில் கதிரியக்கத் தாதுக்களை தோண்டி எடுக்கவும், தோண்டி எடுக்கப்பட்ட தாதுக்களை UCILக்கு கொண்டு செல்லுதல் போன்ற கதிரியக்க ஆபத்து நிறைந்த வேலைகளுக்கு மட்டுமே இவர்கள் பயன்படுத்தப் படுகின்றனர்.

இப்பகுதிகளிலிருந்து ஓராண்டிற்கு சுமார் 200டன் யுரேனியம் தாது வெட்டி எடுக்கப்படுகிறது. அப்படியாயின் இதுவரை ஏறத்தாழ 3,30,000 - 3,60,000 டன்கள் யுரேனியம் பிரித்தெடுக்கப் பட்ட கழிவுகளாக வெளியேற்றப் பட்டிருக்கலாம் என்கிறது ஆய்வு. இக்கழிவுகள் பாதுகாப்பான முறையிலோ அல்லது ஆதிவாசிகளுக்கு பாதிப்பில்லாத இடங்களிலோ வெளியேற்றப்படுவதில்லை. ஆதிவாசிகள் குடிநீருக்காகவும், அன்றாடத் தேவைகளுக்காகப் பயன் படுத்தும் ஏரிகளுக்கு வெகு அருகில் இக்கழிவுகள் வெளியேற்றப் படுகின்றன[7,10]. இத்தாதுகளிலிருந்து யுரேனியம் பிரித்தெடுக்கப் பட்டாலும், தோரியம் - 230, ரேடியம் - 226, ரேடான் - 222 போன்ற கதிரியக்கப் பொருட்களும், தீங்கிழைக்கக்கூடிய, ஜின்க் (Zn), காரீயம் (Pb), மான்ங்கனீசு (Mn), காட்மியம் (Cd), மற்றும் ஆர்சனிக்(As) எனப் பல நச்சுதன்மை கொண்ட வேதிப்பொருட்கள் இக்கழிவுகளில் மிகுதியாக இருப்பவை.


சுரங்கத்திலுருந்து UCILக்கு கொண்டு செல்லப்படும் தாதுக்கள் எவ்வளவு பாதுகாப்புடனும், மற்றும் அவ்வூழியர்களுக்கு எவ்வளவு பாதுகாப்புக் கவசங்கள் அளிக்கப்படுகிறது என்பது மேலயுள்ள படத்தில் தெளிவாகத் தெரியும். மேலும், அவர்கள் செல்லும் பாதைகளில் இருக்கும் ஆதிவாசிக் குடில்களுக்கிடையேயான பாதை சீராக இல்லாததால் தளும்பும் தாதுக்களினால் சாலையோரங்களில் எல்லாம் பெறுமளவு கதிரியக்கத் தன்மை கொண்ட தாதுக்களை அள்ளித் தெளித்துக் கொண்டே செல்கின்றன இவ்வூர்திகள். இதனால் ஏற்படும் எண்ணற்ற உடல் நலக் கோளாறுகளுள் ஒன்று வடிவக் கோளாறுகளுடனான குழந்தைகள் பிறப்பது. இதைப் பற்றியும் மேலயுள்ள இரண்டாவது படம் ஆயிரம் பதிவுகள் பேசும்.
தற்போது ஏற்படவுள்ள ஒப்பந்தத்தினால் இறக்குமதி செய்யப்போகும் யுரேனியத் தாதுக்களிலிருந்து யுரேனியத்தைப் பிரித்தெடுக்கும் பணியைக் கூட UCIL தான் செய்யவுள்ளது என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்று.


சர்வதேச அளவில் உலகிலுள்ள அனைத்து கதிரியக்கக் கழிவுகளையும் நிரந்தரமாகச் சேர்த்து, அச்சுரங்கம் நிரம்பியபின் அதை நிரந்தரமாக மூடிவிடும் பணியில் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து ஃபின்லாந்து நாட்டில் அச்சுரங்கத்தைத் தோண்டியிருக்கின்றனர். 2020ல் மூடப்படவிருக்கும் அச்சுரங்கத்தைப் பற்றி அந்நாட்டு மக்களும், அரசும் விஞ்ஞானிகளிடம் கேட்டுக் கொள்ளும் ஒரே விசயம், 1000 ஆண்டுகளுக்குப் பின்னர் வாழப்போகும் தங்கள் சந்ததியினருக்கும் இப்படி தங்கள் பூமிக்கு அடியில் கதிரியக்கச் சுரங்கம் இருக்கிறது என்பதே தெரியாத அளவிற்கு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதுதான்.
ஆயிரம் ஆண்டுகள் கழித்து வாழப்போகும் சந்ததியினருக்காக வருத்தப்படும் பொறுப்புள்ள அரசு மற்றும் விஞ்ஞானிகள் ஒருபுறம்... கண் முன்னே ஒரு ஊனமான அடுத்த தலைமுறையை உருவாக்கிய சுவடு கொஞ்சமும் இல்லாமல் பாரத ரத்னாக்களுடனும், வல்லரசுக் கனவுகளுடனும் வலம் வரும் நம் தேசிய விஞ்ஞானிகளும், அரசியல் வாதிகளும், மற்றும் நாம்... மறுபுறம்.

அணு ஆற்றலைப் பொறுத்த வரையில் சர்வதேச மதிப்பீட்டில் இந்தியாவிடம் நிச்சயம் தற்போது யுரேனியம் தாதுக்கள் இல்லை என்றே கொள்ளலாம். அப்படியாயின் எல்லோரும் திரும்பக் கற்காலத்திற்கே செல்லமுடியுமா என்ன? ஆனால் மேலும் மேலும் மூலப்பொருள் இல்லாத ஆற்றல் வழிமுறையை விரிவுபடுத்தாமல், சுயமாக ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் வழிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டிய காலத்தின் கட்டாயப்பிடியிலிருக்கிறோம். வருடத்தின் சில மாதங்களில் மட்டுமே 5 மணி நேரத்திற்குமேல் சூரியனைப் பார்க்கும் சில நாடுகளே சூரிய ஆற்றலை இயன்றவரை உபயோகப்படுத்தும் போது.. நம் நாட்டில் சூரிய ஆற்றல் பெரிதும் வீணடிக்கப்படுகிறது என்றுதான் தோன்றுகிறது. தற்போது ஏதோ அவசரத் தேவை என்கின்ற ரீதியில் இவ்வுடன்படிக்கை நிகழ்ந்தாலும் அல்லது நிகழாவிட்டாலும் 20 ஆண்டுகள் கழித்து நிரந்தரமாகக் கையேந்தாமல் இருக்க நாம் நம்மைத் தயார் படுத்திக் கொள்ளவேண்டியுள்ளது காலத்தின் கட்டாயம். இப்போது கூட நாம் ஆற்றல் மற்றும் எரிபொருள் தேவைகளில் விழித்துக்கொள்ளவில்லையென்றால்..... ??????
[1]. M.R.Srinivasan, Current Science, Vol 90, 1316 (2006). http://www.ias.ac.in/currsci/may252006/1316.pdf
[3].http://www.whitehouse.gov/news/releases/2006/12/20061218-1.html
[6].http://www.uic.com.au/nip41.htm
[7] http://www.anawa.org.au/india/india.PDF- "Nuclear India" a report on No nukes asia forum 1999.
[8]“Issues of Nuclear Safety”, A. Gopalakrishnan, Frontline magazine March 26, 1999, http://www.frontlineonnet.com/fl1606/16060820.htm
[9]An overview of the Indian nuclear program: Report to the No Nukes Asia Forum 1997, held in the
Philippines. http://members.tripod.com/~no_nukes_sa/overview.html
[10] "War and Peace", A documentry movie by Anand Patwarthan.

**The Figures used in this article are reproduced from reference 7 and is used only for information and creation of awareness. The author claims no commercial interest over the same.

Saturday, September 22, 2007

கடல் நீருக்கடியிலுள்ள இந்திய - இலங்கை நில இணைப்பு

சேது சமுத்திரத்திட்டம், இந்திய - இலங்கை கடல்நீருக்கடியிலுள்ள நில இணைப்பு, இதைப்பற்றி இணையத்தில் பலரும் அவர்களுடைய கருத்துக்களைப் பதித்துவிட்ட நிலையில், இந்நிகழ்வு பற்றியும் அதற்குத் தொடர்புடைய சிலவற்றையும், இந்தக் கையேட்டில் பதித்து வைக்கிறேன்.

நாசாவின் புகைப்படம் பெரிதும் பயன்படுத்தப்பட்டிருக்கும் இவ்வேளையில், நாசா இப்புகைப்படம் பற்றி என்ன சொல்லியிருக்கிறது. நாசா, இந்திய - இலங்கைக்கிடையேயான இந்நில அமைப்பின் வடிவம் மற்றும் அதன் கருப்பொருட்கள் ஆகியவற்றைப் பற்றி ஒற்றை வரியில் கூறியிருக்கிறது[1]. இது மனிதனால் அமைக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என்ற ஒரு யூகத்தையே இலங்கையின் தொல்பொருள் ஆராய்ச்சி முடிவுகளும் வெளிப்படுத்தியிருக்கின்றன [2,3]. இந்நில அமைப்பு மனிதனால்தான் எழுப்பப்பட்டது என்பதற்கான போதிய ஆதாரங்களில்லையென்றுதான் இலங்கையின் தொல்பொருள் ஆராய்ச்சி தெரிவிக்கிறது[2,3]. கால அளவுகளைப் பொருத்து இது இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கால அளவுடன் ஒத்திருப்பதாக அறிவித்திருக்கின்றனர். இந்து மித்தாலஜி என்று நாம் கூறினால் கூட அந்நில அமைப்பிற்கு இராமர் பாலம் என்று பெயரிடாமல் ஆதாம் பாலம் என்றுதான் பெயர் சூட்டியிருக்கிறது நாசா. இதற்காக நீங்கள் புஷ்ஷின் தலையையெல்லாம் கேட்கக் கூடாது.
இப்படிப்பட்ட ஒரு நில இணைவு வரலாற்றில் முக்கியம் வாய்ந்த மற்றொரு நிகழ்விலும் இருக்கிறது. இங்கே கி.மு 332. கிரேக்க மன்னனாகிய மாவிரன் அலெக்சாண்டர் உலகை வெற்றி கொள்ளப் படையெடுத்த போது, தற்போதைய லெபனானும் அப்போது ஃபினீஷியன் நகரங்களான பிப்லோஸ் மற்றும் சிடான் ஆகிய நகரங்களைக் கைப்பற்றியவுடன் அருகில் இருக்கும் டையர் என்ற தீவினை நோக்கிப் போர் தொடுக்கும் போது கடலில் அவனது பொறியாளர்கள் எழுப்பிய பாலத்தை வரலாற்று அதிசயமாகவே அனைவரும் சிலாகித்தனர்[4].

ஆனால் ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுப்புறச்சூழல் மற்றும் புவிஅறிவியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தைச் (Center for Research and teaching on the geoscience of the environment (CEREGE)) சேர்ந்த நிக் மரினர் (Nick Marriner) தலைமையில், 10,000 ஆண்டுகளுக்கு முன்னரிலிருந்து ஏற்பட்ட நிலப் படிமங்களை(sediments) ஆராய்ந்து, இப்பாலம் பற்றிய உண்மையை ஆராய்ச்சி செய்து அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அவ்வறிக்கையில் 5500 ஆண்டுகளுக்கு முன்னரிலிருந்து, அருகிலிருந்த லிடானி டெல்டா பகுதிகளிலிருந்து வந்த நிலப் படிமங்கள், டையர் தீவிற்க்கும், தற்போதைய லெபனானிற்கும்மிடையே நீருக்கடியில் ஒரு நிலப்பரப்பைத் தோன்றச் செய்ததாகவும், மேலும், டையர் தீவு லெபனானை நோக்கி வந்த பெருவாரியான கடலலைகளைத் தடுத்ததோடல்லாமல், மேலும் நிலப்படிமங்கள் எளிதாக அத்தீவிற்கும் லெபனானிற்குமிடையே சேர்வதற்குத் துனைபுரிந்திருக்கிறது, என்று கூறியுள்ளனர். இவ்வாய்வறிக்கையைப் பற்றி வாஷிங்டன் டி.சி.யிலுள்ள Jean Stanley (Smithsonian Institution) எனும் geoarcheologist (புவியியத்தொல்பொருள் ஆரய்ச்சியாளர்-இந்த மொழிபெயர்ப்பு சரியா என்று தெரியவில்லை) கூறுகையில், நீரோட்டங்களினால் ஏற்படும் படிம நகர்வு மாற்றங்களைப் பற்றி ஆராய்ந்தால் இப்படி நீருக்கடியில் ஏற்படும் நிலப்பாலங்கள் வியக்கத்தக்க ஒன்று அல்ல என்றும் அதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும் இவ்வாராய்ச்சியின் மூலம் 332 B.C யில் 10 மீட்டர் ஆழம் கொண்ட கடலில் அலெக்சாண்டரின் பொறியாளர்கள் பாலம் எழுப்பினார்கள் எனும் வரலாற்றுச் செய்தி உண்மையல்ல என்றும், அது இயற்கையாகவே ஏற்பட்ட ஒன்று என்றும் அவ்வறிக்கையின் மூலம் நிரூபித்துள்ளனர் [4].

ஒரு தீவிற்கும் அருகிலிருக்கும் நிலப்பரப்பிற்கும் இடையே நீருக்கடியில் எழும் நில இணைப்பு இயற்கையான ஒன்று என்றாலும், இங்கே அதன் வடிவத்தை நிர்ணயிப்பது எது? அதற்குப் பல காரணிகள் இருந்தாலும், நிச்சயம் தீவின் வடிவம் மற்றும் அருகிலிருக்கும் பெரிய நிலப்பரப்பின் கடற்கரைகள் மற்றும் நில அமைப்பு ஆகியவை உடனடியாகத் தோன்றும் காரணிகள், புவியியல் படித்தவர்களால் இதைவிடச் சிறப்பான மற்றும் முக்கியமான காரணிகளைக் கூறமுடியும்.

இலங்கைத் தீவின் நில அமைப்பையும், வடிவத்தையும், பாலம் தோன்றிய இடத்தையும் பார்க்கும் போது, நிச்சயம் பாலத்திற்கு இரண்டு பக்கங்களிலிருந்து வரும் கடல் நீரோட்டம் சமமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. மேலும், தென்னிந்திய மற்றும் இலங்கையின் கடற்கரையோரப் பகுதிகளிலுள்ள நிலத்தின் தன்மை மற்றும் கருப்பொருள், இத்தனை இலட்சம் ஆண்டுகளாக ஏற்பட்ட கடல் நீரோட்ட மாற்றங்கள், மற்றும் புவியியல் மாற்றங்கள் எனப்பலதரப்பட்ட காரணிகளைக் கொண்ட ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதா, அப்படியாயின் அவற்றின் முடிவுகள் என்ன??

இப்படி இந்தியா - இலங்கைக் கிடையே நீருக்கடியிலுள்ள நில இணைப்பு மனிதனால் கட்டப்பட்டது என்று திட்டவட்டமாக, ஆதாரப்பூர்வமாகக் கூறுவதற்கான போதிய சான்றுகள் இல்லை எனும் நிலையில், இதைக் கட்டிய கொத்தனார் யார் மற்றும் சித்தாள் யார் என்பது போன்ற கேள்விகள் இன்னும் பின்னுக்குத்தள்ளப்படவேண்டிய ஒன்று.

இவ்விவகாரத்தில் பெரும்பாண்மை மக்களின் நம்பிக்கைக்கு ஊறுவிளைவிக்கக் கூடாது என்று கூறும் சிலருக்கான கேள்விகள்.

செயற்கை மழை பொழிய வைக்க விஞ்ஞானிகளை அழைத்தபோது, வருண பகவான், என்ற நம்பிக்கை அழிந்துபோகவில்லையா, விளக்கையும், சூடத்தையும் பற்றவைக்க சிவகாசியின் குழந்தைத் தொழிலாளர்கள் தயாரித்த தீப்பெட்டியை உரசும்போது அக்னிதேவன் என்ற நம்பிக்கை பொசுங்கவில்லையா, சூர்ய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஆகியவற்றைப் பற்றிய அறிவியல் உண்மைகள் இராகு, கேது ஆகிய நம்பிக்கைகளைக் கேளிசெய்யவில்லையா மேலும், சூரியன் ஒரு நட்சத்திரம் என்றும் அதன் தோற்றத்தையும், அதன் ஆயுட்காலத்தில் பாதி முடிவடைந்துவிட்டது என்பது போன்ற உண்மைகள், சூர்ய தேவன் என்ற நம்பிக்கைக்கு ஊறுவிளைவிக்கவில்லையா.

அறிவியல் மனித உணர்வுகளுக்கு அப்பார்ப்பட்டு உண்மைகளை விளக்கவல்லது. அது, ஆறு நாட்களில் உலகம் படைக்கப்பட்டது என்ற பைபிளை எதிர்க்கும் டார்வினின் கொள்கையாயிருந்தாலும் சரி, வேறு அடிப்படைவாத சிந்தனை கொண்ட எந்த மூட நம்பிக்கையாயிருந்தாலும் சரி, அதனை எதிர்த்து அறிவியல் உண்மைகள் காலப் போக்கில் வெளிவந்து கொண்டுதானிருக்கும். இங்கே அந்த நம்பிக்கை எந்த பெயரைத் தாங்கிக்கொண்டு வருகிறது என்பது அறிவியல் பார்வைக்கு ஒரு பொருட்டே அல்ல என்பதுதான் உண்மை.


இப்படிப்பட்ட அறிவியல் ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு தாயாரிக்கப் பட்ட விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கையை நம் அரசு கையாண்டிருக்கும் விதம் மிகவும் கண்டனத்துக்குறியது. அரசியல் காரணங்களுக்காக ஆய்வுகள் அடிப்படையில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையை ஏதோ தட்டச்சுப் பிழையைத் திருத்துவது போல் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப திருத்திக்கொள்வதாயிருந்தால் எதற்காக இவ்வரசுக்கு விஞ்ஞானிகள். காங்கிரஸ் உயர்மட்டக் குழுவே கூடி ஒரு முடிவெடுத்திருக்கலாமே.

பெருவாரியான மக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் கருத்துக்களை அவ்வாய்வறிக்கை தெரிவிப்பதாயிருந்தால், அவ்விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் பிரதியை, சர்வதேச அளவிலும், இந்தியாவிலும் இருக்கும் மற்ற, தொல்பொருள், ஆராய்ச்சியாளர்களின் துணையோடு சரிபார்த்திருக்கலாம், அல்லது சர்வதேச தொல்பொருள் விஞ்ஞான இதழ்களுக்கு சமர்ப்பித்து ஆய்வுகளையும் அதன்வழி எடுக்கப்பட்ட முடிவுகளையும் சரி பார்த்திருக்கலாம். இதனை விடுத்து அறிவியல் ஆய்வறிக்கையை தங்களின் வசதிக்கேற்ப மாற்றி எழுதிக்கொள்வது, சர்வாதிகார ஆட்சிகளில் நடக்கக்கூடிய ஒரு நிகழ்வு என்பது வரலாறு கூறும் உண்மை.

அப்படி இராமர் பற்றிய அறிக்கையை சமர்ப்பித்த விஞ்ஞானிகளின் ஆய்வு மற்றும் அதன் வழி எடுக்கப்பட்ட முடிவுகள் ஆகியவை சர்வதேச தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அது ஆதாரப்பூர்வமான உண்மை எனும்பட்சத்தில், காஷ்மீரிலிருந்து, குமரிவரை அனைவருடைய நம்பிக்கையும் பொய்த்துப்போனாலும் சரி அதை தம்முடைய மக்களுக்குச் சொல்ல வேண்டியது ஒரு ஜனநாயக அரசின் கடமை. ஒருவேளை அவ்விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கையிலுள்ள கூற்றுக்களுக்கு போதிய ஆதாரங்களோ அல்லது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் குறைபாடும் இருக்குமாயின், அவ்விஞ்ஞானிகளின் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்கலாம்.

3- ஜனவரி 2007 அன்று சிதம்பரத்தில் நடந்த 94 வது இந்திய அறிவியல் கூட்டமைப்பை (94th- Indian Science Congress) துவங்கி வைத்து ஆற்றிய உரையில், இந்திய அறிவியல் கல்வித்தரம், மற்றும் ஆராய்ச்சித் தரம் ஆகியவை குறைந்து வருவதாகவும், மேலும் இந்நிலைத் தொடருமானால், ஆராய்ச்சிக் கூடங்களை சர்வதேசத் தர ஆய்வுகளுக்கு உட்படுத்தப்போவதாகவும் தெரிவித்தவர் நம் பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்கள்[5]. இப்படிக் கூறிய அவரது அரசு ஒரு ஆய்வுக்கட்டுரையைக் கையாண்டிருக்கும் விதம் கண்டனத்துக்குரிய, மற்றும் வேதனைக்குரிய விசயமாகும்.

அரசின் இத்தகைய நடவடிக்கைகள் அறிவியல் ஆராய்ச்சியின் தரத்தை நிச்சயமாகக் குறைத்துவிடும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.


அந்த ஆய்வறிக்கை உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை அரசியல் காரணங்களுக்காகவும், மத சிந்தனைகளுக்காவும் அரசு அவ்வறிக்கையை மூடிமறைக்குமானால், பல தலைமுறைகளைத் தாண்டி எதிரொளிக்கக் கூடிய ஒரு தவறுக்குப் பொறுப்பேற்கின்றன, நம் அரசியல் கட்சிகளுள் பல. மேலும் அவ்வாய்வறிக்கை உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதை ஒரு சமூக நலன் கருதி அரசு வெளியிடுமானால் தற்போது ஆட்சி கவிழலாம், அல்லது கலவரங்கள் எழலாம் ஆனால் இது வரும் காலங்களில் தொடரவுள்ள பல அடிப்படைவாத செயல்களுக்கு ஒரு முற்றுப் புள்ளிவைக்கும் என்பதில் மாற்றுக் கருத்திருக்கமுடியாது. ஒரு வகையில் பைபிலுக்கும், டார்வின் மற்றும் கலிலியோ கூறிய விஞ்ஞான உண்மைகளுக்கும் இடையே நடந்த ஒரு போராட்டத்திற்கு இணையானது இந்நிகழ்வு.

இனி என் தனிப்பட்ட கருத்துக்கள் - அவ்விஞ்ஞானிகளின் ஆய்வு மற்றும் அதன்வழி எடுக்கப்பட்ட முடிவுகள் சரியென்று சர்வதேச விஞ்ஞானிகளால் ஒப்புக்ககொள்ளப்படுமானால், நிச்சயம் அவ்விஞ்ஞானிகளுக்குத் தலைவணங்குவேன்.

சர்வதேச அளவில், மானுடவியல், தொல்பொருள் ஆராய்ச்சி, மொழியியல் மற்றும் மரபணு சோதனைகள் ஆகியவற்றின் ஒரு கூட்டாய்வின் மூலம் பல வரலாற்றுத் திரிபுக்கதைகளின் பின்புலத்திலிருக்கும் உண்மைகளை அறிவியல் உலகம் விளக்கிக்கொண்டிருக்கிறது. மனிதன் தோன்றிய இடத்தையும், அங்கிருந்து எப்படியெல்லாம் பிரிந்து பல்வேறு நிலப்பரப்புகளுக்குச் சென்று இன்றைக்கு வெவேறு இனமாக, நாடாக, சமூகக்குழுக்களாகப் பிரிந்து சென்றான் என்ற உண்மையை ஒரளவுக்கு நெருங்கிவிட்டது அறிவியல் உலகம்.

அப்படிப்பட்ட உண்மையை உலகுக்கு உணர்த்துவதற்கு மற்றும் விடைதெரியாத சில புதிர்களை விளக்குவதற்கும் இந்தியா-இலங்கை இடையே நீருக்கடியில் இருக்கும் இப்பாலம் மிகவும் இன்றியமையாதது. பெரிங் ச்ட்ரைட் என்று சொல்லப்படக்கூடிய இடத்தில் ஒரு நில இணைப்பு இருந்ததற்கான சில ஆதாரங்களும் தற்போது அவ்விணைப்பு இல்லாததாலும் இருக்கும் ஆராய்ச்சிக்கான முட்டுக்கட்டைகள் ஏராளம்[6].

இந்தச் சூழலில் இலங்கையில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த மனிதக் கூட்டம் பற்றியும், அவர்களுக்கும் தென்னிந்தியாவிற்குமிருக்கும், இருந்த தொடர்புகள் பற்றியும் பல குழப்பமான அனுமானங்களுக்கான சில தீர்வுகளுக்கு இப்பாலம் உறுதுணையாக இருக்கலாம். இந்திய நிலப்பரப்பிற்கு வெவேறு காலகட்டத்தில் வந்த திரவிட மற்றும் ஆரிய இனங்கள் பற்றிய உண்மையை உலகிற்கு உணர்த்தியது மரபணு சோதனைகள். மேலும், இராமன் இருக்கிறானா இல்லையா என்பதை ஆராய்வதற்குக் கூட அப்பாலம் இடிக்கப்படாமல் இருப்பது அவசியமே.

மீண்டும் என் தனிப்பட்ட கருத்தை தெளிவுபடுத்துவது நல்லது. இப்புவிப்பரப்பில், மனிதனின் தோற்றம், சமூக வாழ்வு, மற்றும் வெவ்வேறு கண்டங்களுக்கான அவனது பயணம், என்பது போன்ற உலக வரலாற்றை நிர்ணயிப்பவை இந்த நில இணைப்புகள். ஆதலால், இப்படிப்பட்ட அறிவியல் உண்மைகள் இப்பாலத்தை இடிப்பதனால் வரக்கூடிய பொருளாதாரத்தை விட நிச்சயம் முக்கியமான ஒன்று. ஆதலால் அந்தப் பாலம் இன்னும் சிறிது காலம் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லாவிடில் இன்னும் பல தலைமுறைகளுக்கு, பொய்க் கூற்றுக்களும், செவிவழிச்செய்திகளும் நிரந்தரமான வரலாறாகிவிடும் அபாயம் இருக்கிறது.[1].http://photojournal.jpl.nasa.gov/catalog/PIA06670
[2].
http://www.geocities.com/uk20020/bridge_Srilanka_review.htm
[3].
http://www.lankalibrary.com/geo/dera2.html
[4].John Simpson, Science NOW, 14 May 2007. http://sciencenow.sciencemag.org/cgi/content/full/2007/514/1?etoc
[5]. K.S. Jayaraman, Nature, Volume 445, 134 ( 11th Jan 2007).

[6]. http://www.sciencedaily.com/releases/2002/08/020816072026.htm

**References 4 and 5 might require subscribtion.

Sunday, September 9, 2007

நமக்கான அறிவியல்...!!!???

நமக்கான மொழி, கலாச்சாரம், இசை, வரலாறு என்று பரவலாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், நமக்கான அறிவியல் என்று ஒன்று இருக்கிறதா என்கிற சிந்தனையின் பயனாக எழுதப்பட்டது இப்பதிவு. இங்கே நாம், நமக்கான, என்று பொதுவான சொல்லாடல் இருப்பதால் இந்த நாம் என்பதற்கான பயன்பாட்டினை விளக்கிவிடுவது நல்லது. நாம் என்பது பழமை பற்றிப் பேசும்போது தமிழர்களையும், பின்னர் நவீன கால எடுத்துக்காட்டுகளின் போது ஒருங்கிணைக்கப்பட்ட மாநிலங்களைக் கொண்ட இந்தியாவையும், குறிப்பதாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. விவாதக் கருத்தின் காலங்களைப் பொறுத்து இந்த நாம் பற்றிய ஒரு புரிதலை வாசகரிடம் விட்டுவிடுகிறேன்.

நமது பண்டைய இலக்கியங்களில் உள்ள அறிவியல் சிந்தனைகள் பற்றிய கேள்வியெழும்போது, எட்டுத்தொகை நூல்களுல் ஒன்று நினைவிற்கு வந்தது. அதில் வேம்பையும் அதன் பண்புகளைப் பற்றி பத்துப்பாடல்கள், வயலில்வாழும் நண்டுபற்றிப் பத்துப் பாடல்கள் என்று தொகுக்கப்பட்டிருக்கும். இப்படி வாழ்வியலோடு இயைந்த பலவற்றைப் பற்றி பத்துப் பத்துப்பாடல்களாக தொகுக்கப்பட்டிருக்கும். இப்போது நிழல்படக்கருவியையும், தொழில்நுட்பத்தையும் வைத்து நேஷனல் ஜியாகரஃபி தொலைக்காட்சி செய்வதை மிக எளிதாக மொழிவடிவத்தில் இலக்கியத்தில் பதியவைத்திருப்பது நிச்சயம் அதிசயிக்க வைக்கின்ற ஒன்று. இலக்கியமும், கலையும், வாழ்வியலுடன் பிண்ணிப் பிணைந்திருந்தால் மட்டுமே இரண்டிலுமே வளர்ச்சியிருக்கும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இருந்தது கிடையாது. அதே போல் சித்தர் பாடல்களில் மருத்துவம், மற்றும், பல அறிவியல் சார்ந்த கூறுகளைக் காண இயலும். இங்கே எடுத்துக்காட்டாக எனக்குத் தெரிந்த சிலவற்றை மட்டுமே கூறியிருக்கிறேன். தமிழை தன்னார்வத்துடன் படித்தவர்கள் நிச்சயம், இதைவிடச் சிறந்த பல உதாரணங்களைக் கூறமுடியும். ஆனால் பக்தி இலக்கியங்கள் பெருகியபின் இலக்கியத்தில் அறிவியல் பார்வை எந்த அளவு இருந்தது என்பதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பதே உண்மை. ஆனால், எல்லாம் நீயே, என்று தொழுது எழுதப்பட்டிருக்கும் அக்கடினமான மொழிவடிவங்களுக்கிடையே அறிவியல் கூறுகளைத் தேடுவது சற்று அயர்ச்சியாக இருக்கிறது என்பதுதான் உண்மை. அப்படியே ஏதாவது தோன்றினால் கூட அது என் கற்பனையா அல்லது பாடலாசிரியரின் உண்மையான கூற்றா என்கின்ற சந்தேகமே விஞ்சுகிறது. எப்படியிருந்தாலும் பண்டைய இலக்கியங்களில் வாழ்வியலோடு சேர்ந்த அறிவியல் கூற்றுகள் நிரம்பக்காணக் கிடைக்கிறது.

நவீன அல்லது தற்போது நாம் வாழ்கின்ற சமூகத்தில் வாழ்வியலும் அறிவியலும் இணைந்து இருக்கிறதா என்பதற்கான தேடுதலில் சிக்கியவற்றைப் பார்ப்போம். நவீன அறிவியலைப் பற்றி நாம் பேசும் முன்னர் இந்த அறிவியல் என்ற வார்த்தையின் பயன்பாட்டினை வரையறுத்துவிடுவது நல்லது. பொறியியல், தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல், கணிதவியல் எனப் பகுக்கப் பட்டகாலங்கள் மாறி எல்லாமே அறிவியல் என்ற ஒரு பொது வரையறைக்குள் மீண்டும் புகுந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதுதான் உண்மை. ஆனால் நமது வசதிக்காக அடிப்படை அறிவியல் பயன்பாட்டு அறிவியல் என இரண்டே பிரிவுகளாக வைத்துக்கொள்வோம். உதாரணமாக ஒரு கோழிமுட்டையை எடுத்துக் கொள்வோம், ஏன் அது கோளவடிவத்தில் இல்லாமல் நீள்கோள வடிவில் இருக்கிறது, அதனுள்ளே இருக்கும் கூழ்மங்கள் ஏன் ஒன்றோடொன்று கலப்பதில்லை என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் தேடுவது அடிப்படை அறிவியல் எனவும், முட்டை உற்பத்தியை பெருக்குவதற்கு, மற்றும் அவற்றைப் பாதுக்காப்பதற்கான சாதனங்களைச் செய்வது போன்றவற்றை பயன்பாட்டு அறிவியல் எனவும் பிரிப்பது ஒரு குறைந்த அல்லது ஏறத்தாழ சரியான வரையறை (close to proper definition) எனக்கொள்ளலாம். ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அறிவியல் வளர்ச்சியும் மிகவும் இன்றியமையாதது என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. இதில் அடிப்படை அறிவியல் என்பது உடனடியாகப் பயன்பாட்டிற்கு உதவாமலும், அல்லது அது ஒரு அறிவுத்தேடல் என்பதோடு நின்றுவிடுவது போலவும் ஒரு தோற்ற மயக்கத்தை அளிக்கக்கூடியது. ஆனால் சற்று உற்றுநோக்கினால் இதுபோன்ற அடிப்படை அறிவியல் சிந்தனைகள் பல பொதுவான அறிவியல் உண்மைகளை விலக்கவல்லவை. ஆதலால் சமுதாயத்தின் மொத்த அறிவியல் வளர்ச்சிக்கு இரண்டுமே இன்றியமையாதது. இப்போது நம்முடைய சமுதாயத்தில் வாழ்வியலும் அறிவியலும் ஒரு சேர இருக்கிறதா என்பதற்கான விளக்கங்களைச் சில எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம்.
ஒரு வசதிக்காக விவசாயம் மற்றும் மருத்துவம் ஆகிய இரண்டையும் முதன்மையாக வைத்துக்கொள்வோம். சமீபத்தில், வெளிவந்த பூங்கா மின்னிதழில் ஒருவர் புற்றுநோய் பற்றியும் அச்சிகிக்கைக்கான மருத்துவச் செலவுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள தொகைகள் மலைக்க வைக்கின்றன, நடுத்தர வர்க்கத்து மக்களால்கூட கொடுக்க இயலாத ஒரு தொகை. இந்த தொகை மிகுதியாக இருப்பதற்குப் பல சமுதாய மற்றும் மருத்துவமனையின் பேராசை எனப் பல காரணங்கள் இருந்தாலும், ஒரு நேரடிக்காரணமாகப் பல வெளிநாட்டு மருத்துவக் கருவிகளுக்கான இறக்குமதிச் செலவு மிகுதியாக இருப்பதுவும் ஒன்றாகும். இங்கே அறிவியலின் பயன்பாடு என்ன செய்துவிடமுடியும் என்பதையும் ஒரு எடுத்துக்காட்டுடன் பார்த்துவிடலாம். தமிழகத்தில் உள்ள அரவிந்த் கண்மருத்துவமனை, 1990 ஆம் ஆண்டுவரை கேடராக்ட் சிகிச்சைமுடிந்தபின் பொருத்தப்படும் கான்டாக்ட் லென்சுகளை தலா 200$ என்கின்ற மதிப்பில் இறக்குமதி செய்தன. ஆனால் அவற்றை நம் நாட்டிலேயே தயாரித்து, மற்றும் அதற்கான தொழில்நுட்பத்தையும் தாமே வடிவமைத்து, பின்னர் இந்திய விஞ்ஞான மையத்தில் உள்ள ஒரு ஆய்வகத்துடன் இணைந்து, அந்த லென்சுகளின் புறப்பரப்பை ஃபுளோரினேற்றம் செய்து பயன்பாட்டினை மேம்படுத்துதல் ஆகியவற்றைச் செய்து தற்போது அதே லென்சுகளை தலா 5$ என்கின்ற மதிப்பில் ஏற்றுமதி செய்கின்ற அளவிற்கு வளர்ந்துள்ளனர்[1].
சமீபத்தில் ரிலையன்ஸ் மற்றும் வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்களின் வருகையை ஆதரித்து ஒருவர் கூறுகிறார் "மூக்கைச் சிந்திப்போட்ட கைகளால் அளக்கப்படும் காய்கறிகளையும், நசுங்கி, அழுகிய பழங்களையும் எத்தனை நாட்களுக்கு உண்பது" என்று. ஏதோ அவர்கள் தங்களுடைய மூக்கை ஒழுகிய நிலையில் வைத்துக் கொண்டிருப்பதையே பெருமையாக நினைப்பது போலவும், நகரத்து மக்களுக்கு அழுகிய பழங்களையும் காய்கறிகளையுமே விற்பது என்று சபதம் எடுத்திருப்பது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இந்தியாவின் பழங்கள் மற்றும் தானிய உற்பத்தி மேம்பட, அல்லது எதிர்பார்த்த அளவு மேம்படாமல் இருப்பதற்கான காரணிகளாக, தன்னுடைய 2006 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் உலக வங்கி சிலவற்றை முன்வைக்கிறது. அவற்றுள், போதிய மின்சார மற்றும் நீர்வளமின்மை, போதிய சேமிப்பு வசதிகள், கிடங்குகள் இல்லாமை எனப்பலக் காரணங்களையும் கூறியுள்ளது[2]. மேலும் வேதியல் உரங்கள் மற்றும் பருவகால மாற்றங்களால், பயிர்களைத்தாக்கும் புதியவகை நோய்க்கிருமிகள், என இவையும் உற்பத்தியை வெகுவாக பாதிக்கக்கூடியவை. இங்கே சமுதாய அடிப்படையிலான பல்வேறு இன்னல்கள் இருந்தாலும் அறிவியல் துணைகொண்டு அழிக்கக்கூடிய நேரடிப் பிரச்சனைகளை மட்டுமே கூறியுள்ளேன்.
இவை போன்ற சில வாழ்வியல் பிரச்சனைகளுக்கான தீர்வுகளில் நம்முடைய தேசிய விஞ்ஞான ஆய்வகங்கள் மற்றும் பல்கலைக்கழங்களின் பங்களிப்பு என்பது இல்லையென்றே சொல்லலாம், அல்லது மிகமிகச் சொற்பம் என்று சொல்லலாம். இப்பங்களிப்பை நிகழச்செய்வதற்கு, இந்தியாவின் பல்கலைக்கழகங்கள், மற்றும் தேசிய நிறுவனங்கள் என அனைத்தும், சமுதாயத்தில் கடைநிலையில் உள்ள அடிப்படைப் பிரச்சனைகளுக்கான அறிவியல் தீர்வுகளில் தங்களது ஆராய்ச்சிகளை ஈடுபடுத்த வேண்டும், அல்லது ஈடுபட அரசால் ஊக்குவிக்கப்பட வேண்டும். இவைபோன்ற ஆராய்ச்சிகள் அடிப்படை மற்றும் பயன்பாட்டு அறிவியல் என இரண்டிலும் ஒரு சேர மேம்படவேண்டும். இப்படியான ஒரு முன்னேற்றம் நிகழ இந்தியாவிலுள்ள, பல்கலைக்கழங்கள், மற்றும் ஆராய்ச்சிக் கூடங்கள் ஆகியவற்றுக்கிடையே ஒரு கூட்டு முயற்சிக்கான இணைப்பு மிக அவசியம். இக்கூட்டுமுயற்சி பல வகைகளில் பயனளிக்கக் கூடியது, 1. ஒரே வழிமுறையில், ஒரே பிரச்சனைக்கானத் தீர்வை இருவர் அல்லது இருகுழுக்கள் முயல்வதைத் தவிர்க்கும், 2. ஆராய்ச்சிக் கூடங்களிலும், பல்கலைகழக ஆய்வகங்களிலும் இருக்கும் உபகரணங்களைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளிக்கும், 3.சிந்தனைப் பகிர்வுகள் எனப்பல வகைகளில் இந்தக் கூட்டுமுயற்சி உதவிபுரியும். பல்கலைக்கழக அறிவியல் துறைகளை, தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் (DST/CSIR) துறையின் ஆய்வகங்களுடன் இணைத்தல். இங்கே இணைத்தல் என்பது தேசிய ஆய்வுக்கூடங்களில் இருக்கும் விஞ்ஞானிகளையும், பல்கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கிடயேயான கலந்துரையாடல் மற்றும் ஆய்வுகளை ஒருசேரச் செய்தல் என்ற அர்த்தத்தில் புரிந்துகொள்ளவேண்டும். மேலும் பல்கலைக்கழகங்கள், கடைநிலை மக்களிடம் நேரடித்தொடர்புள்ள, மருத்துவமனைகள், வேலாண் அலுவலகங்கள் ஆகியவற்றுடனான தொடர்புகளை அதிகப்படுத்தவேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் நாட்டின் தேசிய ஆராய்ச்சிக் கூடங்களுக்கும், மக்களுக்குமான ஒரு தொடர்பு அல்லது உறவைப் பலப்படுத்தமுடியும்.
இங்கே, முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது, இந்தத் தொடர்பு ஏதோ ஏட்டில் படித்தவன் ஏட்டில் படிக்காதவனுக்கு அளிக்கும் அறிவுரையாக இல்லாமல் இருவழிப்பாதையாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் பல தலைமுறைகளாக ஒரு துறையில் அனுபவம் உள்ளவர்கள் ஏட்டில் படித்ததைவிட சிலவற்றில் மதிநுட்பம் உடையவர்களாக இருப்பர். இதற்கு உதாரணமாக இயற்கை விவசாயத்தைக் கொள்ளலாம். மேலும், மரக்காணம் பாலா அவர்களின் புகைப்படங்களில் பனங்கள்ளில் பல்லி விழுந்தால் அது நச்சுத்தன்மை பெறுவதில்லை எனவும் குறிப்பிடிருந்தார். இதை நேரில் கண்ட மற்றும் புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில் அனுபவ உண்மையாகக் கொள்வோம். இவை போன்ற அனுபவ அறிவுகளின் பின் உள்ள அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்தால் அவை மிகுந்த பயனளிக்கக்கூடும். உதாரணமாக, பல்லி விழுந்தால் அக்கள் ஏன் நச்சுத்தன்மை பெறுவதில்லை என்பதை உயிர்வேதியல் மற்றும் மூலக்கூறு அடிப்படையிலான ஒரு ஆய்வை அருகிலுள்ள பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகமும், தேசிய வேதியல் ஆய்வகமும் இணைந்து கண்டறிவதாகக் கொள்வோம். இக்கண்டுபிடிப்பானது, சத்துணவுக் கூடங்களில் உணவில் பல்லி விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கான ஒரு மருந்து தயாரிக்கப்பயன்படலாம். ஆதலால், மக்களுக்கும் ஆராய்ச்சி மையங்கலுக்குமான உறவு இருவழிப்பதையாக இருக்கவேண்டியது அவசியம்.
இப்படி ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சி நடைபெறுவதற்கு நிச்சயம் மூலதனம் ஒரு தடையல்ல, ஏனெனில், 2005-06 ஆம் ஆண்டிற்கான நிதியாண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான வளர்ச்சி நிதியில் 20% செலவிடப்படவேயில்லை எனக்கூறுகிறார் குடியரசுத் தலைவர் [3]. அதனால் பழியை எளிதாக அரசியல்வாதிகளின் மேல்போட்டுவிட்டுத் தப்பிக்க முடியாது. ஆனால் இது சாத்தியப்படுவதற்கு, தேசிய நிறுவனங்கள், பல்கலைக்கழங்களைத் தாழ்வாகவும், பல்கலைக்கழகங்கள் அவற்றுக்குக் கீழுள்ள கல்விநிறுவனங்களைத் தாழ்வாகவும் நோக்காமல் இருக்க வேண்டும். இந்த ஏற்றத்தாழ்வு மனப்பான்மை நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு நிச்சயம் பெருந்தடையாக இருக்கும். ஆக, நமக்கான அறிவியலைச் சாத்தியப்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த பல அறிவியல் கூட்டணிகள் தேவைப்படுகிறது.
எல்லாம் சரி, 70% கிராமப்புற மாணவர்களைக் கொண்ட நம் நாட்டில் உள்ள பாடப்புத்தகத்தில், குடும்பப் படத்தில் தந்தையார் கப் அன்ட் ஸாசரில் தேநீர் அருந்துவது போன்ற படங்களுடன் கூடிய கல்வித்திட்டத்தையும், காலையில் அணுக்கரு இணைவு மற்றும் பிளவு பற்றிப் பாடம் நடத்திவிட்டு மாலையில் வீட்டில் தம் குழந்தைகளுக்கு அனுமார் சூரியனைப் பிடித்த கதைகளைச் சொல்லும் ஆசிரியர்களையும், இந்தப் பட்டம் வேண்டுமா இவ்வளவு கொடு என்று கேட்கின்ற பல்கலைக்கழகங்களையும், மனுதர்மத்திர்க்கு எவ்வித தீங்கும் வந்துவிடக்கூடாது என்று கவனத்துடன் அதன் சுற்றுச்சுவர்களுக்குள் பாதுகாக்கும் பணியிலேயே பாதி நேரத்தைச் செலவிடும், இந்திய விஞ்ஞான, தொழில்நுட்ப, மருத்துவ மற்றும் மேலாண்மை நிறுவனங்களையும், மற்றும் விண்வெளிக்குச் செயற்கைகோள் அனுப்பும் போதுகூட இராகு காலம் எமகண்டம் பார்க்கும் ஆராய்ச்சிக் கூடங்களையும், வைத்துக் கொண்டு நான் ஒரு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் நமக்கான அறிவியல் என்று கனவு காண்கிறேன் என்பது உண்மைதான். என்ன செய்வது 2020 க்குள் இந்தியாவை வல்லரசாக்க வேண்டுமே அதனால்தான் கனவு காண்கிறேன். சரி ஒன்றும் கவலைப்படாதீர்கள், அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் வந்துவிட்டது, அணுகுண்டுகளைக் கூடையில் சுமந்து விற்றாவது வல்லரசாக்கிவிடலாம். என்ன இது இவ்வளவு துர்நாற்றம், ஓ வீட்டின் கீழே இருக்கும் பாதாள சாக்கடைக் குழி நிரம்பிவழிகிறது, இந்த நாற்றத்தால் கனவு பெரிதும் தடைபடுகிறது. அந்த சாக்கடைக்குள் மூழ்கி அடைப்பை எடுக்கும் தொழிலாளி நாளைதான் வருவாராம், அதனால் என்ன.. நம் வல்லரசுக் கனவுகளை ஒரு நாள் ஒத்திவைப்போம்.
[3] K.S. Jayaraman, Nature, vol 445, 134 (2007).

Friday, August 31, 2007

மன்னிப்புக் கடிதம்

மரணம் என்கின்ற வாழ்வியல் யதார்த்தத்தை எந்த நொடியிலும் நான் சந்திக்க நேருமாதலால், இக்கடிதத்தை உனக்காக இப்போதே எழுதிவைக்கிறேன். முதலில் என்னை மன்னித்துவிடு. சரி, நான் செய்த குற்றங்களும், துரோகங்களும் மன்னிக்க முடியாதவைதான், ஒப்புக்கொள்கிறேன்.

அதனால் தயவு செய்து என்னை மன்னித்துவிடாதே.

குற்றங்களும் துரோகங்களும் எண்ணிலடங்காதவை, நீ பிறந்தவுடனேயே உன்னைப் பால்வகைப்படுத்தி அடையாளப்படுத்தும் அவலத்தை வளரவிட்டமைக்கும், நீ கொஞ்சி விளையாடிய உன் மழலை மொழியல்லாத வேற்றுமொழியில் உனக்கு இவ்வுலகத்தை அறிமுகப்படுத்தும் பழக்கங்களைப் போற்றியமைக்காகவும், நான் உனக்காக வைத்திருக்கும் ஒரு கல்விமுறையை, தினமும் பள்ளிமுடிவின் மணியோசையில் பீரிட்டு எழும்பிய சந்தோசக்கூக்குரல் அதை எள்ளி நகையாடியதைப் புரிந்துகொள்ளாமைக்கும், குறிப்பிட்ட குடிலில் பிறந்தமைக்காக நீ இந்தப் பிரிவைச் சேர்த்தவன் என்றும், இந்தக் கடவுளைத்தான் நீ வணங்க வேண்டும் என்பவை போன்ற அடிப்படை மனித உரிமையைத் தட்டிப்பறிக்கின்ற அவலத்தை வளரவிட்டமைக்கும், நீ வளர்ந்தபின் உயிரியலின் அடிப்படைச் சாரமான காதலை வெளிப்படுத்துவதற்குக்கூட நீ ஒரு கள்வனைப்போல் பயந்து பதுங்கிச் செய்கின்ற ஒரு ஈனத்தை வளரவிட்டமைக்கும், பின்னர் உயர்கல்வி என்கின்ற போர்வையில் முகம்தெரியாத முதலாளியின் தேவைக்கேற்ப உன்னைத் தயார்படுத்தும் அவலநிலையை வளர விட்டமைக்கும், உன் வாழ்க்கைத்துணையத் தேர்ந்தெடுப்பதைக்கூடக் கண்மூடிச் சடங்குகளால் வியாபாரமாக்கியதற்கும், போலியான தேசியவாதம், மற்றும் ஒடுக்குமுறைகள், என ஏராளமான அவலங்களைக் களையாமல் விட்டுச் செல்வதற்காகவும் அல்லது இந்தச் சூழலில் உன்னைத் தவிக்கவிடுவதற்காகவும் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன்.

மேற்கூறிய குற்றங்களுக்கெல்லாம் நீ ஒருவேளை என்னை மன்னிக்கலாம், ஆனால் மன்னிப்புக் கோருவதற்குக் கூட அருகதையற்ற ஒரு மாபெரும் குற்றம், இல்லை, ஒரு நம்பிக்கை துரோகம் இழைத்திருக்கிறேன். நீ வாழப்போகும் சூழலை ஒரு குப்பைத் தொட்டியாக்கி, நீ சுவாசிக்கப் போகும் காற்றைக் கரியாக்கி, குடிநீருக்காகக் கூட நீயொரு போராட்டம் நடத்த வேண்டிய அவலநிலையை விட்டுவைக்கிறேன். இத்துரோகத்திற்காக ஒரு இரக்கமற்ற தண்டனையைக் கொடுத்துவிடு நிச்சயம் மன்னித்துவிடாதே.

ஆனால், இக்கடிதத்தை நீ படிக்கும் போது இக்கடிதத்திற்கான அவசியமில்லாமலிருக்க வேண்டும் என்பது என்னுடைய ப்+ஏஏஏஏஏஏ.... ராசை. ஆனால் நீயும் இப்படி ஒரு கடிதம் எழுதிவிடக்கூடாது என்பது என்னுடைய கனவு.

ஒரு வேளை இக்கடிதத்துடன் நான் உன்னை நோக்கிப் பயணிக்கும்போது மரணித்திருந்தால், யாராவது இக்கடிதத்தை இன்று புதிதாய்ப் பிறந்த ஒரு குழந்தையிடம் சேர்த்துவிடுங்களேன். தயவுசெய்து இதை அரசு மருத்துவமனையிலுள்ள தொட்டில் குழந்தையிடம் கொடுத்துவிடாதீர்கள். அது படிக்கும் முன் கிழித்துவிடும், "தண்டனை கொடுக்கும் முன் தப்பிவிட்டான் துரோகி" என்று.


இப்படிக்கு,

நிகழ்காலம்.

கையேடுபற்றி

தோன்றியவற்றை, படித்தவற்றை மற்றும் சிந்தித்தவற்றையும் பதித்து வைக்க ஒரு ஏடு.

என்னைப்பற்றி.....

என்னுடைய பதிவுகள் உங்களிடம் எனக்கான என்ன பிம்பத்தை உருவாக்குகிறதோ, அதுதான் நான்.

"நிகழ்வுகளின் புரிதல்களில் தெரிவது பார்வையாளரேயன்றி நிகழ்வுகளன்று" - எங்கேயோ படித்தது :)).