போனபகுதியில நாம பேசுனது ஒன்னும் ஞாபகமில்லாவிட்டாலும் பரவாயில்லை இப்பகுதி உரையாடலுக்கு சில அடிப்படைகள் மட்டும் நினைவிலிருந்தால் போதும். ஆங்காங்கே தேவைப்பட்டால் எட்டிப்பார்த்துவிட்டு தொடர்ந்து பேசுவோம்.
நாம் சுற்றுப்பயணம் செய்துவிட்டு செல்லிற்கு வெளியே வரும்போது, ஒரு பரபரப்புசூழல் உருவானது என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
ஏன் அந்த பரபரப்பு?
இப்போது கவனித்தீர்களா செல்லின் மேல் இருந்த lymph திரவத்தின் ஓட்டம் குறைந்திருக்கிறது. ஆனால் இந்த திரவம் இரத்தஓட்டத்துடன் சம்பந்தப்பட்டது என்றல்லவா பார்த்தோம், இப்போது அதன் ஒட்டம் குறைந்திருக்கிறது என்றால்..?? ஆமாம் நீங்கள் ஊகித்தது சரிதான் இவ்விருதயச் செல்லான மையோகார்டியல் (myocardial) செல்லுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் ஏதோ குறைபாடு. அதனால் தான் இந்த லிம்ப் திரவத்தின் ஓட்டத்திலும் குறைபாடு இருக்கிறது.
அது என்னங்க குறைபாடு? ஏன் இந்தக் குறைபாடு? அதவிடுங்க.. அதுவா முக்கியம், ஒரு செல்லுக்கு.. அதுவும் இருதயச்செல்லுக்கு இரத்தம் செல்லவில்லையென்றால்..என்ன ஆகும்!? இது ஒரு மோசமான அறிகுறியாச்சே? மனித உடலிலுள்ள ஒரு செல்லுக்கு இரத்தம் போகலைன்னா என்ன அர்த்தம்? அச்செல்லுக்கு உணவும், ஆக்ஸிஜனும் போகவில்லையென்று அர்த்தம். ஒரு செல்லுக்குள் உணவும் ஆக்ஸிஜனும் செல்லவில்லையென்றால் என்னாவது? இருப்பு போதவில்லை அல்லது போதிய காச்சாப்பொருளின்மையால் தனது ஆற்றல் உற்பத்தியை உடனடியாக நிறுத்திக்கொள்கிறார் ஆற்றல் மூலங்கள் என்றழைக்கப்படும் மைட்டோகாண்டிரியா (mitochondria). உங்கள் பதட்டம் புரிகிறது , மைட்டோகாண்டிரியா தனது வேலையை செய்யமுடியாத சூழலில் இருந்தால் என்னாவது, செல்லின் உயிர்த்தலுக்குத் தேவையான ATP (adenosine triphosphate) இல்லாமல் போய்விடும்.
ATP இல்லையென்றால் செல்லின் மற்ற உறுப்புகளின் செயல்பாட்டிற்குத் தேவையான ஆற்றல் இல்லையென்று அர்த்தம். செல்லுக்குள் ATP ன் அளவு தேவையான அளவைவிடக் குறைய ஆரம்பிக்கிறது. நம் செல் இது போன்ற சூழ்நிலைகளை எதிர்பார்க்காத ஒன்றல்ல, உடனடியாக மாற்று ஆற்றல் மூலங்கள் முடுக்கிவிடப்படுகின்றன. அது என்ன மாற்று ஆற்றல் மூலம்? செல்லுக்குள்ளேயே இருக்கும், கொழுப்பு மற்றும் சில புரதங்களை ஆற்றலாக மாற்றிக் கொண்டு இவ்வாற்றல் தேவையை சமாளிப்பது. (செல்கள் கூட மாற்று ஆற்றலின் அவசியத்தை உணர்ந்திருக்கின்றன). ஆனால் இது ஒத்திப்போடுதலுக்கான ஒரு முனைப்பேயன்றி இதுமட்டுமே தீர்வல்ல. செல்லின் உயிர்ப்பு இயக்கம் உறைநிலையை நோக்கிச் சென்றுவிட்டது அல்லது செல்லுக்குளிருக்கும் இயந்திரங்கள் அனைத்தும் ஸ்தம்பித்து நின்றுவிட்டன.
ஏறக்குறைய அந்நிகழ்வு துவங்கியாகிவிட்டது. மேலே விளக்கப்பட்ட நிகழ்வில் பெரிதும் பாதிக்கப்படுபவை செல்லின் சுவற்றில் இருக்கும் பம்புகள்தான். இவற்றின் முக்கியப் பணியே, உள்ளே இருக்கும் பொட்டஷியம் அயனியின் செறிவை சீராக வைத்திருப்பதும், உள்ளே புகும் நீரையும் கால்ஷியம் அயனியையும் கட்டுக்குள் வைத்திருப்பதும்தான் என்று பார்த்தோம். மீண்டும் இயல்புநிலை திரும்பும் வரை இறப்பு நேராமல் இருப்பதற்கு இப்பம்புகளின் செயல்பாடு மிகவும் அவசியம். செல்லின் செயல்பாடுகளையும் மீறி வாழ்வா? சாவா? என்ற ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது நம் செல். இந்நிலையில் செல்லின் மற்ற உறுப்புகளுக்குச் செல்ல வேண்டிய ஆற்றல் அனைத்தையும் இப்பம்புகளுக்கே வழங்குகிறது செல்.**
செல்லுக்குள்ளிருக்கும் புரதத்தாயாரிப்புகள் அப்படியே உறைநிலையில் வைக்கப்பட்டுவிட்டன, மேலும் உட்கருவிலிருந்து வரும் கட்டளைகள் உறுப்புகளுக்குப் போய்ச் சேராமல், உறைந்து கிடக்கின்றன. இப்படி வேளை செய்யாத உறுப்புகள் எல்லாம் அப்படியே கழிவு போல தனது மறுசுழற்சியாளரான லைசோசோம்களுக்குள் தள்ளப்படுகின்றன. ஆனால், போதிய ஆற்றலின்மையால் அவையும் திணறிக்கொண்டிருக்கின்றன. இப்போது, செல்லுக்குள் எங்கு நோக்கினும் ஒரே கேள்வி, எங்கே ATP ?
என்னதான் கையிருப்பு ஆற்றலை செல்லின் சுவரில் இருக்கும் பம்புகளுக்கு மட்டுமே கொடுத்தாலும், தொடர் பற்றாக்குறையினால் பம்புகளும் இப்போது வேலை செய்ய முடியாமல் திணறி தனது முயற்சியை கைவிட்டு அமைதியாகின்றன. இதற்காகவே காத்திருந்தது போல் கால்ஷியம் அயனி மெதுவாக செல்லுக்குள் நுழைந்து அனைத்து உறுப்புகளையும் அரிக்கத் துவங்குகின்றன. மேலும், வெளியிலிருக்கும் நீர் மெதுவாக செல்லின் உள்ளே நுழைந்து, அச்செல்லை ஒரு பலூன் போல உப்பச் செய்து விடுகிறது. ஓரளவிற்கு மேல் செல்லை அதன் சுற்றுப்புறத்திலிருந்து காத்துவந்த செல்சுவரில் விரிசல்விழத் துவங்குகிறது. பின்னர் நீரின் அழுத்தத்தால், தன் உறுப்புகளை உடலின் இருளில் உமிழ்ந்துவிட்டு சலனமற்று கிழிந்து தொங்குகிறது அச்செல்.
இப்படி இறப்பதற்கு நிர்பந்திக்கப்படும் இறப்பு முறை நெக்ரோசிஸ் (Necrosis) என்றழைக்கப்படுகிறது.
சரி இப்போ இது ஏன் நிகழ்ந்தது? அல்லது இச்செல் இறப்பதற்கு நிர்பந்தித்தக் குறைபாடு என்ன? என்று பார்ப்போம். எல்லாம் கொழுப்புதான்.. அட திட்டலங்க.. கொழுப்புதான் காரணம். இருதயத்திற்கு செல்லும் இரத்தப் பாதையில் சேர்ந்த கொழுப்பு, இரத்த செல்களின் இறந்த உடல் என ஒரு குப்பையான கலவை அதன் சீரான ஓட்டத்தை தடைசெய்து கொண்டே இருந்து ஒரு நாள் அதுவே மிகப்பெரிய அபாயமாக மாறிவிட்டது. இதுபோன்ற கழிவுகளின் சேர்க்கையைக் களைவதற்கு உடலில் தற்காப்பு வீரர்கள் இருந்தாலும் நிலமை கட்டுக்கடங்காமல் போய்விட்டால் அவையும் இத்தடையை அப்படியே விட்டுவிடுகின்றனர். இப்படிப் பலநாட்கள் சேர்ந்த கழிவுகள் தீடீரென்று ஒருநாள் இருதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டத்தையே தடுத்துவிடுவதால், இருதயச் செல்கள் இறப்பதற்கு நிர்பந்திக்கப்படுகின்றன. இதை மாரடைப்பு என்ற பெயரில் புற உடலில் இதன் தாக்கங்களைப் பற்றி பலரும் அறிந்த ஒன்றுதான்.
அப்படியானால், இவ்விருதயத்துக்கு சொந்தக்காரர்.. ஆம், அவரை இப்போது உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கவேண்டும் அதனை அவருடைய துணைவியாரும் உறவினர்களும் பார்த்துக் கொண்டதால் அவரது நிலமையையும் அவரது தாக்கத்தையும் பற்றி மீண்டும் வேறு பகுதியில் மீண்டும் வந்து பார்ப்போம்.
ஆனால் செல்களின் இறப்பு என்பது இப்படிப்பட்ட கொடூரமான நிகழ்வுதானா? வேறு வழிகளில் செல்கள் இறப்பதற்கான வழிமுறைகளே கிடையாதா? என்ற கேள்வி நியாயமானதுதானே. ஆனால், உயிரியலில் இறப்பு என்பது இப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் (நெக்ரோசிஸ்) என்று பலகாலம் நம்பிவந்தனர் விஞ்ஞானிகள். ஆனால் பிறப்பைவிட அல்லது அதற்கு இணையான சுவாரஸ்யமான விசயம் இயற்கை இறப்பு. Programmed cell death (PCD) அல்லது அபோப்டிஸ் (Apoptosis) என்றழைக்கப்படும் இறப்பு முறை பின்னர் கண்டறியப்பட்ட ஒன்றுதான். இதன் கிரேக்க அர்த்தம் மலரிலிருந்து உதிரும் இதழ்கள் என்பது. இவ்வகை இறப்புமுறை தான் பரிணாமத்தில் விளைந்தது. இதைப் பற்றி விரிவாக அடுத்த பகுதியில் உரையாடுவோம்.
************************************
1. "SEX & THE ORIGINS OF Death", by William R. Clark
** குறிப்பு
//இந்நிலையில் செல்லின் மற்ற உறுப்புகளுக்குச் செல்ல வேண்டிய ஆற்றல் அனைத்தையும் இப்பம்புகளுக்கே வழங்குகிறது செல்.** //
இவ்வாக்கியத்தில் ஒரு மிக முக்கியமான உண்மை புதைந்திருக்கிறது என்றே கருதுகிறேன். வாழ்வதற்கான முனைப்பில் அச்செல் அதன் முக்கியப் பணியான சுருங்கி விரிதல் குறித்து முக்கியத்துவம் கொடுக்காமல், தனது உயிரைக்காப்பாற்றுவதற்கான முயற்சிகளிலேயே கவனம் செலுத்தியிருக்கிறது. இதை இரண்டு வகைகளில் அனுகலாம், 1. இது போன்ற சூழ்நிலையில், இச்செல் உயிர்த்திருந்தால்தான் மொத்த விலங்கும் உயிரோடு இருக்க முடியும் என்பதால் இப்படிப்பட்ட செயலைச் செய்ய அதற்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம். 2. தாம் ஒரு பகுதியாக இருக்கின்ற விலங்கின் உயிர்ப்போ அல்லது இறப்போ பற்றிக் கவலையில்லாமல், தன்னுடைய உயிரைக்காத்துக் கொள்வதில் அச்செல் முனைப்புடன் இருக்கலாம்.
இயற்கையாக இறக்கின்ற ஒரு மனிதனின் உடலில் ஒருவரது மூளையும், இருதயமும் முழுவதுமாக (இயற்கையாக) இறந்துவிட்டபின்னும், உடலின் பல பகுதிகளிலிருக்கும் உறுப்புகளின் செல்கள் இயற்கையாக இறக்காமலிருக்கும். மேலும், அவை பின்னர் இறப்பதற்கு நிர்பந்திக்கப்பட்டு நெக்ரோசிஸ் இறப்பு முறையில் இறக்கின்றன. இந்நிகழ்வு நாம் மேற்கூறிய இரண்டு காரணிகளில் இரண்டாவது காரணியையே முன்னிலைப்படுத்துகிறது.
உயிரியலின்(உலகின்) அடிப்படைச் சாரமே வாழ்தலுக்கான முனைவு என்றுதான் கருதத் தோன்றுகிறது. வெறும் முனைவு என்பதைவிட இம்முனைப்பில் ஏற்பட்ட மாற்றங்களும், பரிணாமங்களும் பிரமிக்க வைக்கின்றன அல்லது மிகவும் சிறுக்க வைக்கின்றன என்றுதான் கூறவேண்டும்.