இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிப்புகள் வெளிவரத் துவங்கிவிட்டன. நேற்று அக்.4, 2010. மருத்துவத்துறைக்கான சிறந்த கண்டுபிடுப்புக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு, மருத்துவத் துறையில் செயற்கை கருத்தரிப்பு முறையைக் (invitro fertilization IVF) கண்டுபிடித்ததற்காக வழங்கப்படுகிறது. இப்பரிசு இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் எட்வார்ட்ஸ் Dr.Robert Edwards,க்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவர் 1950 ஆம் ஆண்டு செயற்கை கருத்தரிப்பு முறைகள் குறித்த தனது ஆய்வுப்பணிகளைத் துவங்கியிருக்கிறார். இவரது அயராத உழைப்பின் மூலம், 25 ஜூலை 1978 ஆம் ஆண்டு டெஸ்ட் டியூப் பேபி என்று சொல்லப்படும் முதல் ஆய்வுக்குழாய் குழந்தை பிறந்தது.
மருத்துவத்துறையில் இவர் ஒரு புதிய துறையையே திறந்துவைத்திருக்கிறார் என்றால் மிகையில்லை என்றுதான் கூறவேண்டும். இது குறித்த விரிவான அறிவிப்பு இங்கே: http://nobelprize.org/nobel_prizes/medicine/laureates/2010/press.html
முதலில் அவரது உழைப்பிற்குண்டான மரியாதையையும் வாழ்த்துகளையும் வழங்கிவிடுவோம்.
டாக்டர். ராபர்ட் அவர்களினது உழைப்பை எவ்வித குறைந்த மதிப்பீடுகளுக்கும் உள்ளாக்காத அதே வேளையில், டாக்டர் சுபாஷ் முகர்ஜி என்ற இந்தியரைப் பற்றி இவ்வேளையில் குறிப்பிடுவதும் வருந்துவதும் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஏன் அவருக்காக வருந்த வேண்டும்?
டாக்டர் சுபாஷ் முகர்ஜி எனும் இந்திய மருத்துவர், சுனித் முகர்ஜி மற்றும் சரோஜ் கண்டி பட்டாச்சார்யா ஆகிய இருவருடன் இணைந்து செயற்கை கருத்தரிப்பு முறைகளைப்பற்றி ஆய்வு செய்தவர். இவரது ஆய்வின் முடிவில் 3 அக்டோபர் 1978 ல் உலகின் இரண்டாவதும் ஆசியாவின் முதலாவதுமான ஆய்வுக்குழாய் குழந்தையை உருவாக்கியவர். முதல் மற்றும் இரண்டாம் குழந்தையின் பிறப்பின் தேதிகளை மீண்டும் கவனியுங்கள். வெறும் 69 நாட்கள் இடைவெளியில் அடுத்த குழந்தை பிறந்திருக்கிறது.
இன்றைய நவீன காலத்திலேயே குறைந்த பட்சம் மூன்று மாத இடைவெளி அறிவுத்திருட்டு அல்லாத இணையான கண்டுபிடிப்பாக ஒப்புக்கொள்ளப்படுகிறது.
அப்படி இருக்கையில் 1978-ல் தகவல் தொடர்பு மற்றும் ஆய்வுக்கட்டுரைகளினது பரிமாற்றம் இவை எதுவும் தற்போதிருக்கும் நிலையில் இல்லாத காலத்தில் வெறும் 69 நாட்கள் இடைவெளியில் ஒரு கண்டுபிடிப்பு என்பது சற்றேரக்குறைய உலகின் முதல் கண்டுபிடிப்பு என்ற தகுதியுடையதுதான்.
மேலும் முக்கியமாக டாக்டர் சுபாஷின் வழிமுறைகள் இங்கிலாந்தின் ராபர்ட் எட்வார்ட்ஸின் வழிமுறைகளிலிருந்து மாறுபட்டது என்பதும் கவனிக்கப்படவேண்டும்.
மருத்துவத் துறை சார்ந்த வார்த்தைகள் இருப்பதால் அவரது சாதனைகளாக அறியப்படுபவற்றை அப்படியே கொடுத்திருக்கிறேன்.
Some of his remarkable achievements are:




இப்போது நாம் டாக்டர் சுபாஷ் இவ்விருதைத் தவறவிட்டதற்காக வருந்த வேண்டியதில்லை அதைவிட அதிகமாக வருந்த வேண்டிய செய்தி வேறு இருக்கிறது.
ஆம், 3-அக்டோபர் 1978 அவர் தனது ஆய்வு முடிவின் வெற்றியை அறிவிக்கிறார். இவரது ஆய்வின் முடிவுகளைச் சரிபார்க்க ஒரு குழு அமைக்கப்படுகிறது. இக்குழு அவரது முடிவுகளை தவறு என்று மறுக்கிறது, அதோடு அவரது ஆய்வு முறைகளையும், கண்டுபிடிப்பையும் விரிவாக விவரித்து ஒரு கட்டுரை எழுதவும், பின்னர் அக்கட்டுரையை ஜப்பானில் நடக்கவிருந்த ஒரு கருத்தரங்கில் சமர்பிக்கவும் அவருக்கு விடுப்பு மறுக்கப்படுகிறது.
அதோடு நிற்கவில்லை, அவரது கண்டுபிடிப்புகள் ஏமாற்று வேளையெனவும் அதற்கான தண்டனையாக அவரை துறைமாற்றம் செய்கிறது அரசு. இந்த அவமானத்தைத் தாங்கிக்கொள்ள இயலாமல் அவர் 1981 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சில முக்கிய நிகழ்வுகள்.
3 அக்டோபர்1978 - தனது கண்டுபிடிப்பை உலகுக்கு அறிவிக்கிறார்.
1978 ல் ஹார்மோனல் ஸ்டெராய்ட்ஸ் குறித்த சர்வதேச கூட்டமைப்பிலும், 1979 ஜனவரியில் இந்திய அறிவியல் கூட்டமைப்பிலும் தனது முடிவுகளை சமர்ப்பிக்கிறார்.
தனது ஆய்வின் முடிவுகளுக்கான நிரூபனங்களை அரசு ஏற்றுக்கொள்ளாததோடு அவரது ஆய்வின் நேர்மையும் சந்தேகத்திற்கிடமானதால், 1981-ல் தற்கொலை செய்துகொள்கிறார்.
அவரது இறப்பிர்க்குப் பிறகு 19 ஜூன், 1985 ல் ஜாதவ்பூரில் (மேற்கு வங்காலம்) அவருடைய பெயரில் உயிரியல் இனப்பெருக்கம் குறித்த ஒரு ஆய்வு மையம் நிறுவப்பட்டது.
பின்னர் 1991 ல் அவரது வாழ்க்கையை முன்வைத்து Ek doctor ki maut என்ற ஹிந்தித் திரைப்படம் தயாரிக்கப்பட்டது, பின்னர் அதற்கு தேசிய விருது கிடைத்தது என்பது தனிக்கதை.
ஆனால், முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது 1997 - 8 பிப்ரவரியில், மும்பையைச் சேர்ந்த உயிரியல் இனப்பெருக்க ஆய்வு மையத்தின் முன்னால் இயக்குனர் டாக்டர். டி.சி. ஆனந்த குமார் அவர்கள் புறஉதவியில் கருத்தரிப்பு தொழில்நுட்பம் குறித்த மூன்றாவது சர்வதேச கருத்தரங்கில், டாக்டர் சுபாஷ் முகர்ஜி நினைவுரை ஒன்றை ஆற்றுகிறார். டாக்டர் டி.சி ஆனந்த குமார், அவ்வுரையை நிகழ்த்தும் போது இந்தியாவில் முதல் செயற்கை கருத்தரிப்பு குழந்தையை உருவாக்கியவர் என்ற பெருமையைத் தாங்கி நிற்பவர் எனபது குறிப்பிடத்தக்கது.
அவ்வுரையில், டாக்டர் டி.சி ஆனந்த குமார் அவர்கள், டாக்டர் சுபாஷ் முகர்ஜி 1978-ல் வெளியிட்ட ஆய்வுக்குறிப்புகள், மத்திய மாநில அரசுகளிடம் சமர்ப்பித்த ஆய்வுமுடிவுகள் மற்றும் அவர் வெளியிடாமல் வைத்திருந்த அவரது ஆய்வுக்குறிப்புகள், நூலேடுகள் கட்டுரை என அனைத்தையும், ஒன்று திரட்டி, அவற்றைச் சரிபார்த்து பின்னர் அதன் முடிவகளையும் அதே உரையில் குறிப்பிடுகிறார். அவரது உரையில் இந்தியாவில் முதல் ஆய்வுக்குழாய் குழந்தையை உருவாக்கியவர் டாக்டர் சுபாஷ் முகர்ஜியே என்றும் அவருக்குத்தான் அந்தப் பெருமை உரித்தாகும் என்றும் குறிப்பிடுகிறார்.
அதோடு நில்லாமல், அதே ஆண்டு 10ஏப்ரல்1997 ல் "current science" என்ற இந்திய அறிவியல் பத்திரிக்கையில் இதனை விவரித்து கட்டுரையாக எழுதியிருக்கிறார் டாக்டர்.டி.சி ஆனந்த குமார் அவர்கள். இந்த நேரத்தில் டாக்டர் டி.சி ஆனந்த் குமார் அவர்களினது நேர்மையையும் பாராட்டுவது பொருத்தமாக இருக்கும்.
டாக்டர் சுபாஷ் முகர்ஜி அவர்களினது ஆய்வை அலட்சியப்படுத்தாமல் இருந்திருந்தால், சுதந்திரத்திற்குப் பின்னர் முழுக்க முழுக்க உள்நாட்டு உழைப்பிலும் சிந்தனையிலும் உருவான ஒரு அரிய கண்டுபிடிப்பிற்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும்.
டாக்டர் சுபாஷ் அவர்களினது வாழ்வின் முக்கிய தருணங்களை விளக்கும் சுட்டி இங்கே:
http://drsubhasmukherjee.com/doctor_subhas_mukherjee_recognition.html
http://drsubhasmukherjee.com/doctor_subhas_mukherjee_recognition.html
டாக்டர் சுபாஷ் முகர்ஜி குறித்த அலுவல் வலைத்தளம் இங்கே: http://www.drsubhasmukherjee.com/index.html