ஒரு வழியாக நந்தலாலா பாத்தாச்சு, என்ன ஒரேயொரு குறை, நாங்கள் வசிக்கும் இடத்தில் நந்தலாலா போன்ற படங்களை திரையரங்கில் வெளியிட யாரும் முன்வருவதில்லை. இராவணன், எந்திரன் எல்லாம் திரையரங்கில் ஒருநாள் காட்சியாக வெளியிட்டார்கள் பாத்தாச்சு ஆனா இந்த படத்துக்கெல்லாம் கூட்டம் வராது அதனால வாங்கறதில்லைன்னு சொல்லிட்டாங்க. சரி நாம நந்தலாலாவுக்கு வருவோம். திரையரங்கில் பார்க்கும் வரை பொறுமையில்லை இணையத்தில் கிடைத்த ஓரளவுக்குத் தரமான சுட்டிகளில்தான் பார்த்தேன் - மிஷ்கின் மன்னிப்பார்னு நம்புறேன்.
வாழ்த்துகள் மிஷ்கின் - எனக்கு ரொம்ப பிடிச்சது படம்.. அப்புறம் இளையராஜா எனும் சூரியனுக்கு என்னுடைய டார்ச் தேவையில்லை, ஆனாலும் மயக்குறார்னுதான் சொல்லனும். என்றும் இளமையென நிரூபித்துக்கொண்டேயிருக்கிறார், சாரு போன்ற இசை விமர்சகர்களை உங்களைப் போலவே நாங்களும் புறந்தள்ளப் பழகிவிட்டோம்.
என்னதான் அம்மா செண்டிமெண்ட் இல்லை என்று சொன்னாலும், என்னைப் போன்ற சராசரிப் பார்வையாளனுக்கு அப்படித் தோன்றுவதைத் தவிர்க்க முடியலை. இப்போதான் இடைவேளையே வருதான்னு தோணுவதையும் தவிர்க்க முடியலை. பின்னர் அந்த இராணுவ உடையில் வரும் இருவர் கதைக்கும் சூழலுக்கு ஒட்டாதது போன்ற நெருடல், ஒருவேளை இங்கதான் கிகுஜிரோ வருதோ என்னவோ. கால்களை வைத்துக் கதை சொல்லும் முறையை தனது முத்திரையாக்கிக முயற்சி செய்யறார் மிஷ்கின்னு தான் தோணுது. அஞ்சாதேவில் காட்சியோடு ஒட்டி இரசிக்க முடிந்த அளவிற்கு, நந்தலாலாவில் இரசிக்க முடியவில்லை, தேவையை யொட்டி கதை சொல்லும் முறையை வைத்திருக்கலாம், வலிந்து கால்கள் காட்ச்சியை திணிக்கத் தேவையில்லை. குறைன்னு சொல்லனும்னா எனக்கு மேல சொன்னவைதான் மற்றவையெல்லாம் நிறைதான்.
பல இடங்களில் வசனத்திலும், நடிப்பிலும், காட்சியமைப்பிலும், பிரமிக்கவும் இரசிக்கவும் வைத்திருக்கிறார் மிஷ்கின்..
உதாரணமாகக் காப்பகத்திலிருந்து தப்பி வந்தபின் ரோட்டில் நடந்து வரும் போது பின்னணியில் மணியடித்தபின் வயிற்றைத் தடவிக்கொண்டு அருகில் இருப்பவரிடம் சென்று பசிக்குது என்று சொல்லும் காட்சி. ஒழுங்குமுறையில் வளர்க்கப்படும் ஒரு மனித மூளை தனது உடல் தேவையினைக் கூட எப்படி புறவயமானதொன்றோடு தொடர்பு படுத்திக்கொள்கிறது எனும் உளவியலை காட்டும் ஒரு நுட்பமான காட்சி அது.
அந்தச் சிறுவனைப் போல வயிற்றைத் தடவிவிட்டு மூன்று விரலைக் காட்டிவிட்டு ஓடுவது, மாற்றுத்திரன் கொண்டவர் தனது கோலை வெட்டும்ப்போது கால் என்று அழுவதும், இறுதிவரை அந்தக் கோலையே காலாகப் பற்றிக்கொண்டு அழும் காட்சி.
இறுதியில் உங்க அம்மா செத்துட்டா என்றவுடன், வரும் சிறுவனின் முகத்தில் தெரியும் நடிப்பு மிக அருமை. அதை வெளிக்கொணர்ந்த மிஷ்கினும் பாராட்டுக்குரியவரே. ஒரு சிறுவன் எப்படி எதிர்வினை புரிவானோ அப்படியே இருந்தது அந்தக் காட்சி முழுவதும், வசனமும் வசன உச்சரிப்புகளும். "போடா மெண்டலில்" போடாவின் அழுத்தம் இன்னமும் காதுகளில் கேட்கிறது. அதனைத் தொடர்ந்து மிஷ்கினின் நடிப்பும் அருமை. பொதுவாக குழந்தைகளின் எதிர்வினைகளில் இந்த போடா அல்லது போடியில் உள்ள அழுத்தம்தான் அதிகமாக இருக்கும், அடுத்து வரும் வசவுச்சொல்லில் இருக்காது. அதை நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார் மிஷ்கின்.
வசனங்களில் பல இடங்களில் திடீரென நுழையும் நகைச்சுவை, மிகவும் இரசிக்க வைக்குது.
இருவரும் ஒருவரையொருவர் ஏமாற்ற முயன்று தோற்கும் பேருந்திநிலையக் காட்சி, இருவருமே அதற்கு சொல்லும் ஒரே காரணம்,
பஸ் ரோட்ல போகுது, வாய் ஊமையாயிடும், அய்யோ ராத்திரியாயிடுச்சு, அப்பந்தானே ஓடுவான் நீயேன் ஓடுன போன்ற வசனங்கள் மிக நேர்த்தியாக சரியான நேரத்தில் தெரித்து விழுவது இரசிக்க வைக்கின்றன.
ஆனால் எனக்கு சில இடங்களில் ஏன் அப்படிப்பட்ட காட்சியமைப்புன்னு புரியாம இருந்தது.
1. உப்புமாவில் இருக்கும் இந்தப் பச்சப் புல் சிவப்பு புல்லுன்னு எதைச் சொல்றார்னு தெரியலை.
2. ஏன் ஒரு மலைப்பாம்பு ஊர்ந்து போறதைக் காட்டினார்னு நானும் மனைவியும் பேசிகிட்டோம். எங்களுக்குத் தோன்றியது அவர்கள் அவ்வளவு அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் அதனால் அவர்களால் தங்களது வாகனம் உடைக்கப்படுவதை உணரமுடியவில்லை ன்னு நாங்களாகவே ஒரு லாஜிக்கை உருவாக்கிக் கொண்டோம். அப்புறம் இயற்கை மனிதன் அப்படின்னு கொஞ்சம் தத்துவம் பேசியும் பாத்தாச்சு, ஆனா சரியா வருமான்னு தெரியலை, யாராவது தெரிஞ்சா சொல்லுங்களேன்.
மொத்தமாக எங்களுக்கு மிகவும் பிடித்த படங்களுள் நந்தலாலாவும் ஒன்று - குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.