"மதம் சாராத ஆன்மீகம் என்பது, மனிதனின் சூழல் மற்றும் கிரகிப்புத் தன்மை சார்ந்த, பொதுஅறிவின் சுயஆர்வத்தினால் ஏற்பட்ட கருத்தாக்கத்தின் பரிணாம வெளிப்பாடு." - இத்தொடரின் கருப்பொருளாகயிருப்பதால் மீண்டும் ஒருமுறை நினைவூட்ட வேண்டிய முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
II.ஆன்மீகம் - இயற்கை.
ஆன்மீகம் என்றால் என்ன? ஆன்மீகம் என்பது ஒரு தேடல், மெய்யியல் அல்லது உண்மை குறித்தான தேடல் என்று பரவலான வரையறையாக ரிக் வேதம் முன்வைப்பதாகக் கூறுகின்றனர்[1]. ஆன்மீகவாதி அல்லது சாது என்பவன், முதலில் அனைத்தையும் துறக்கவேண்டும், அதாவது பொருள் என்று தனக்கென எதுவும் வைத்துக்கொள்ளாமல் இருத்தல், மிகக்குறைந்த பட்ச ஆடைகளை அணிதல் அல்லது முழுவதுமாக ஆடைகளைத் துறத்தல், பூசனைகளைத் துறத்தல், மதம், மொழி, இனம் என அனைத்தையும் சாராமல் (பற்றில்லாமல்) இலக்கை நோக்கிய தேடலை மேற்கொள்ளுதல். உலகத்தின், உண்மையைத் தேடுதல், மற்றும் உலக மக்களுக்கு தாம் உணர்ந்த உண்மைகளைப் பற்றி அறியத்தருதல்.[1] ஆன்மீகம் ஒரு முழுமை (perfection) மற்றும் முந்நிர்மாணிக்கப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பு (pre-determined), இயக்கங்கள் அனைத்துக்குமான ஒற்றை நோக்கம் மற்றும் ஒற்றை மூலம் போன்ற கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளப்படுகிறது.
எப்படியும் ஆன்மீகம் என்பது ஒரு முழுமையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆன்மீகம் என்பது இயற்கையுடன் இரண்டறக் கலப்பது அல்லது இயற்கை என்ற ஒரு முழுமைதான் ஆன்மீகம் போன்ற கருதுகோல்கள் உலாவுகின்றன. இவ்வான்மீகக் கருத்து கால மாற்றங்களாலும் சமூகச் சூழல் மாற்றங்களாலும் எப்படி மாறியது அல்லது மாற்றப்பட்டது என்பது பிரிதொரு ஆய்வுக்கான கருப்பொருள். ஆன்மீகம் என்பது ஒரு முழுமையென்றால், இயற்கை ஒரு முழுமையல்ல, தவறுகள் இழைத்து பின் திருத்திக்கொள்ளும் ஒரு சீரற்ற நிகழ்வே உயிரிகள் சார்ந்த இயற்கை. ஆதலால், ஆன்மீகம் என்பது இயற்கையோடு இணையும் ஒரு நிகழ்வு என்று குறிப்பிடுவது முற்றிலும் புறந்தள்ள வேண்டிய ஒன்று.
இயற்கை என்பது என்ன? இயற்கை ஒரு முழுமையா... என்றால் நிச்சயமாக இல்லை. இயற்கை சூழ்நிலைகளின் மாற்றத்திற்கிணங்க, சீரற்ற (random) மற்றும் நிகழ்தகவின் (probablistic) அடிப்படையில், இயங்கும் ஒன்று. நமது உடல் தோன்றியது ஒரு நிகழ்தகவு, ஆயிரம் விந்துக்களில், இரண்டாவதிருக்கும் விந்து முந்தியிருந்தால், இப்போதிருக்கும் “நாம்” “நாமாக” இருந்திருக்க முடியாது. இப்போதிருக்கும் நாம் தோன்றியதற்கான நிகழ்தகவு ஏறத்தாழ 1/சிலஆயிரம். பூமியின் கருப்பொருளில் சிறு மாறுபாடு இருந்திருக்குமானால், உயிரே தோன்றியிருக்க முடியாது. ஒரு உதாரணத்திற்கு இவ்வண்டத்தில் ஓராயிரம்கோடி கோள்கள் இருக்குமானால், உயிர்தோற்றத்தின் தற்போதைய நிகழ்தகவு குறைந்த பட்சமாக 1/ ஓராயிரம்கோடி.
இப்படிப்பட்ட இயற்கை, சூழல் மாற்றத்திற்கிணங்கப் பல தவறுகளைச் செய்யக்கூடியது.(சூழலுக்கு ஒவ்வாத அல்லது தாக்குப்பிடிக்க முடியாத ஒன்றை உருவாக்கி பின் அழித்தல்) அப்படிப்பட்ட தவறுகளைப் பின்னர் திருத்திக் கொண்டு, மேலும் உயிரியில் சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டே வந்த பரிணாமக் கிளைகளில், பரிணமித்த ஒரு சிறு கிளை உயிரியாக நாம் இருக்கிறோம். அப்படியானால், இயற்கை என்பது முழுமையள்ள, சூழலுக்கு ஏற்றார்போல் மாறுவதும், தவறிழைப்பதும் (சூழலுக்கு ஒவ்வாத அல்லது தாக்குப்பிடிக்க முடியாத ஒன்றை உருவாக்கி பின் அழித்தல்), திருத்திக்கொள்வதுமான ஒரு நிகழ்வாகவே உயிர்கள் சார்ந்த இயற்கை இருக்கிறது.
ஒருவேளை, மனிதன் தனது ஆன்மாவின் உன்னதத்தால், முற்றுமுணர்ந்திருந்தாலும், பூமிக்கு ஆயிரம் மைல் அருகில் ஒரு எரிகல் வந்தாலும், அதன் சூழல் விளைவுகளைத் தாங்கிக்கொள்ள முடியாத பலவைகையான உயிரிகள் இல்லாமல் போய்விடும். பேரண்டத்தின் சூட்சுமத்தை உணர முற்படும் தன்மையுள்ள ஒரு உயிரியைத்(மனிதனைத்) தாங்கிக் கொண்டிருக்கிறோம் என்று பூமி, அதற்கான எதிர்வினையைப் புரியாமலிருக்காது.
கால்களில் மோதும் நுரைத்த கடலலை, வானும், கடலும் இணையும் மாயப்புள்ளி, பரந்தவெளியில் தனித்திருக்கும் ஒற்றை மரம், அதிகாலைக் கதிரவன், தென்றலும் நிலவும் மட்டுமே துணைக்கிருக்கும் ஆற்றங்கரை மெளனம், மாலையின் தனிமையில் சுழலும் பறவைகளின் இசை, உதிர்கின்ற சருகு, குழந்தையின் சிரிப்பு, ஒரு சவம், எனப் பல கணங்களில் ஒரு வெறுமையும் நம்மைச் சுற்றியிருக்கும் பல கற்பிதங்களும் கட்டமைப்புகளும் கலைந்திருக்கலாம். அந்நொடிப்பொழுதின் போதைக்கான ஈர்ப்பு, அதன் நீட்சிக்கானத் தேடலின் துவக்கப் புள்ளியாகயிருக்கலாம். (இவ்வெடுத்துக்காட்டுகள் கூட எனது சூழல் மற்றும் கிரகிப்புத்தன்மை சார்ந்தவையே )
ஆனால், இவையணைத்தும் இயற்கையின் முன் நாம் சிறுத்துப் போகும் கணங்களேயன்றி அதனோடு இணைந்த கணங்களல்ல.
தற்போது மனிதன் பரிணமித்திருக்கும் ஒரு நிலையில் அவன் மீண்டும் இயற்கையுடன் இணைவது முற்றிலும் இயலாத காரியம். இயற்கையுடன் இணைவதில் முதல் படியாக மனிதன் ஆடைகளைக் களைய வேண்டும், உணவை உற்பத்தி செய்யாமல், இயற்கை உருவாக்கும் உணவை மட்டுமே நம்பியிருக்க வேண்டும், இயற்கைச் சூழலுக்கேற்ப தனது வாழ்விடத்தையும், வாழ்க்கைமுறையையும் மாற்றிக்கொண்டேயிருக்க வேண்டும். மேற்கூறிய எதுவுமே தற்போது பெரும்பாண்மையான மனிதயினத்திற்கு விருப்பமிருந்தாலும் சாத்தியமில்லாத ஒன்று.(ஒருவேளை, ஆப்பிரிக்க, தென்னமெரிக்கா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தனித்து வாழ்ந்து கொண்டிருக்கும் வெகுசில ஆதிவாசிக் குழுக்களுக்கு சாத்தியமாகயிருக்கலாம்).
உயிரியல் சார்ந்த இயற்கையில், மனிதன் இவ்வகைச்செயல்பாடுகளிலிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொண்டதனாலேயே பரிணாமக் கிளையில் மனிதன் எனும் விலங்கின் இறுதியான புள்ளியாகத் தற்போதைய மனிதன் கருதப்படுகிறான்.
ஒரு ஆன்மீகவாதி முதலில் செய்ய வேண்டியது தன்னிடம் இருக்கும் அனைத்தையும் துறத்தல், மிகக்குறைந்த பட்சமான உடையைக் கொள்ளுதல் அல்லது முழுவதுமாகவோ துறத்தல்[1]. ஆனால், ஆன்மீகவாதி அல்லது ஆன்மீகம் என்பது இவ்வொரு காரணி மட்டுமல்ல என்பதால், இவ்வொரு கருத்தை மட்டும் வைத்து ஆன்மீகவாதி இயற்கையோடு இயைந்தவனாகக் கருதயியலாது. ஒரு வகையில், மனிதனை உயிர்ச் சார்ந்த இயற்கைச் சூழலிருந்து புறந்தள்ளி, வெளியேற்றியதே இந்த ஆன்மா, மனது ஆகிய கருத்தாக்கங்கள்தான். அதனால், மனிதனுக்கும் உயிர் சார்ந்த இயற்கைக்கும் இடையே இருந்த இடைவெளியை அதிகப்படுத்தியது ஆன்மா, குறித்த கருத்துக்கள்.
தமக்கான உணவை உற்பத்தி செய்துகொண்டதன் மூலம் அடுத்த கட்டமாக மனிதன் எனும் விலங்கு இயற்கையிலிருந்து தன்னைப் பெரிதும் அந்நியப்படுத்திக் கொண்டது.
சமூகம், உணவு உற்பத்தி போன்ற செயல்பாடுகளிலிருந்து தன்னைத் தனிமைப் படுத்திக்கொள்ளும் ஆன்மீகம், உயிரியின் இனப்பெருக்கம் என்ற மற்றொரு மிகவும் அடிப்படையானதொரு இயற்கை நிகழ்வைப் புறந்தள்ளியதன் மூலம் உயிர் சார்ந்த இயற்கையிலிருந்து முற்றிலுமாக விடுவித்துக் கொண்டது என்றுதான் கருதவேண்டும்.
ஆனால், ஆன்மீகம் பெரிதும் பேசும் இயற்கை என்பது பேரண்டத்தைப் பற்றியது, உயிரற்ற கோள்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கங்களும், தோற்றமும் குறித்தானது. இதன் மூலம் நமக்கும், இப்பிரபஞ்சத்திற்கும் ஒரு நேரடி ஆற்றல் பரிமாற்றம் பற்றிய கதையாடலாக இருக்கிறது. அதாவது உயிர் சார்ந்ததாகயில்லாமல் பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் இயக்கம் குறித்தான தேடலாக இருக்கிறது. அண்டத்தில் திளைத்து பிண்டத்தைத் மறக்கும்/துறக்கும் ஒரு கதையாடல். ஆனால், இயற்கை அனைத்தையும் உள்ளடக்கியது, உயிரிகள் உட்பட. (இப்புள்ளிக்கும் மீண்டும் வருவோம்).
[1].The sadhus and Indian civilization - Vijay prakash sharma, Amol publications, NewDelhi (1998).