Sunday, August 10, 2008

ஆன்மீகம் - கிரகிப்பு - I


இதுபோன்ற கட்டுரைகளை எழுதத்தான் வேண்டுமா, என்ற அயற்சியினூடே பலகாலமாக இதுபோன்ற பேசுபொருட்களிலிருந்து விலகியேயிருந்தாலும், எனக்குள்ளிருக்கும் சாத்தான் “இருள் பரவட்டும்” என்ற நோக்கில் எனது கணினியையும் எனது நேரத்தையும் எடுத்துக்கொண்டது. அதனால், போற்றுதலும் தூற்றுதலும் போகட்டும் இறைவனை வாழவைக்கும் சாத்தானுக்கே.[1]


இக்கட்டுரை அறிவுரையுமல்ல, அறவுரையுமல்ல, ஒரு உரையாடல்.

கடவுள் - இந்த ஒற்றை வார்த்தை செய்யும் ஜாலம் உண்மையில் வியக்க வைக்கிறது. இவ்வார்த்தை வெறும் வார்த்தையல்ல, மொழியின் உணர்வு ரீதியிலான ஆளுமையை சர்வ வல்லமையுடனும், வீச்சுடனும் தெரியப்படுத்தும் ஒரு வார்த்தை. இவ்வார்த்தையும், அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளும் (அல்லது அவ்வார்த்தையின் போர்வைக்குள்) மட்டுமே தற்போதைக்கு, உலகின் பெரும்பாலான வன்முறைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் காரணமென்று கூறலாம்.

கடவுள் - சர்வவல்லமை படைத்த படைப்பாளி, ஆதியிலிருந்து அந்தம் வரை அனைத்துப் பருப்பொருட்களும் எவ்வாறிருக்கும் அல்லது இருக்கவேண்டும் என்ற வரையறையை வகுத்தவன்(ள்). ஆனால், யாரும் கண்டறியமுடியா உருவமுமில்லா, வரையறையுமில்லாத ஒன்றாக குவார்க்குகளுக்கும் (quarks - அணுவின் உட்கருவுக்குள்ளிருக்கும் துகள்) நெபுலாக்களுக்குமிடையே (nebulas - பேரண்டத்தில் இருக்கும் அடர்வான ஹைட்ரஜனைப் பெரிதும் உள்ளடக்கிய வாயு) கூடுவிட்டு கூடு பாய்ந்து கொண்டிருக்கும் அச்சர்வவல்லமை. உருவமில்லாதது என்றவுடனேயே, கோயில்களுக்குள் இருக்கும் உருவங்களெல்லாம் வெறும் கலைவடிவங்களாகவும், அக்கற்சிலைகளைவிட அதைச் செதுக்கிய சிற்பி அதிக மதிப்பையும் பெற்றுவிடுகிறான் என்பதுதான் உண்மை. அப்படியானால் உருவம் கொடுத்த படைப்பாளி சிறந்தவனாகிவிடுகிறான். அது அவனது உணர்தலுக்கான உருவமெனில், அதே கடவுளரை நிர்வாணமாக உணரும் ஒரு படைப்பாளி நாடு கடத்தப்படவேண்டியவனாகவோ அல்லது தேசத்துரோகியாகவோ சித்தரிக்கவேண்டிய அவசியமில்லையென்றாகிறது, அல்லது, அப்படிச் சித்தரிக்கப்படவேண்டிய நிர்பந்தத்தின் பின்னிருக்கும் பக்தி கேள்விக்குறியதாகிறது. (இப்புள்ளிக்கு மீண்டும் வருவோம்)

குவார்க்குளையும், நெபுலாக்களையும், கடவுள் படைத்தானா? என்ற விடை தெரியாத கேள்வி ஒரு புறமிருந்தாலும், உயிரையும் உயிருள்ளவற்றையும் படைத்தது கடவுள் அல்ல என்பது ஆய்வகங்களிலேயே நிரூபிக்கப்பட்டுவிட்டது[2]. அப்படியானால், உயிருள்ளவற்றுக்கு கடவுள் தேவையில்லை, ஏனெனில் அவற்றைக் கடவுள் படைக்கவில்லை. உயிரற்ற குவார்க்குக்கும், நெபுலாவுக்கும் ஒருவேளை நன்றிக்கடனாக அது (கடவுள் என்ற கருத்தாக்கம்) தேவைப்படலாம்.

உருவமுள்ள மற்றும் ஓரிடத்தில் அமர்ந்து படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முப்பணிகளைச் செய்யும் கடவுளே அவசியமற்றதாகிவிட்டது எனும்போது அதனைச் சுமந்துகொண்டிருக்கும் மதங்களும் மத அடையாளங்களும் குப்பையில் வீசப்பட வேண்டியவையாகிவிடுகிறது. அதனால், முப்பணிகளைச் செய்யும், உருவமுள்ள கடவுள் மற்றும் மதம் ஆகிய இரண்டுவார்த்தைகளையும் அதனுடன் சேர்ந்த விவாதங்களையும் இப்போதே புறந்தள்ளிவிடலாம். அவை அயற்சி தருபவை. ஆன்மீகக் கருத்துக்களையும், சிந்தனைகளையும் குறித்த உரையாடலாகத் தொடரலாம்.

“ஆன்மீகம்”, ஒரு அதிர்வை நம்மைச் சுற்றி உருவாக்ககூடிய வார்த்தை, நமக்கும் இப்பிரபஞ்சத்திற்குமிடையே உள்ள தொடர்பை அற்ப மானிடருக்குப் புரிய வைக்கும், கடவுளுக்கிணையான மற்றொரு வார்த்தை. இப்படியான கருத்துருவாக்கத்துக்குப் பின்னிருக்கும் கலாச்சாரம், சமூகச்சூழல், அரசியல், அறிவியல், மாயப் பிம்பங்கள், உணர்வுகள் என இது குறித்தான உரையாடலைத் தொடர்வோம்.

“ஆன்மீகம்” - முழுமையை நோக்கிய தேடல், ஒருமுகப்பட்ட சிந்தனை, அல்லது வெறுமையை நோக்கிய பயணம், ஆன்மாவின் உன்னதத் தேடல், ஒரு வகையான உயரிய உணர்வு, பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் இயக்கத்தையும் நடத்தும் ஒற்றைச் சக்தி மூலத்தை உணர்தல், நமக்கும் அண்டவெளிக்குமிடையே ஒரு தொடர்பை உணரச்செய்பவை, மனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்தி, செழுமைப்படுத்தும், முழுமைப்படுத்தும் ஒரு உணர்வு ... என அடுக்கிகொண்டே போகலாம். இவ்வார்த்தையின் வாழ்வாதாரமே அது தெளிவான வரையறையற்றிருப்பதுதான் அல்லது வரையறுக்கமுடியாதது என்ற வரையறையைச் சுமந்து கொண்டிருக்கும் ஒரு முரண்.

மதம் சாராத ஆன்மீகம் என்பது, மனிதனின் சூழல் மற்றும் கிரகிப்புத் தன்மை சார்ந்த, பொதுஅறிவின் சுயஆர்வத்தினால் ஏற்பட்ட கருத்தாக்கத்தின் பரிணாம வெளிப்பாடு என்ற திசையில் உரையாடல் தொடரும்.



3 comments:

கோவி.கண்ணன் said...

கையேடு அவர்களே,

இறைவன், ஆன்மிகம் பற்றிய புரிதல்களில் நம் சிந்தனைகள் ஒரே திசையில் பயணிக்கின்றன.

ஏன் எனது ஆன்மிகம் தொடர்புடைய கட்டுரைகளில் ஆர்வமுடன் ஏன் பின்னூட்டமிடுகிறீர்கள் என்று
தற்பொழுது தான் ஒரு உண்மை எனக்கு புரிகிறது.

நன்றி !

எல்லாவற்றையும் அறிந்த (உருவாக்கிய அல்ல) சாட்சி நிலையில் இருக்கும் இறைவன் இருக்கலாம். மற்றபடி படைத்து காத்து அழிக்கிறது என்று சொல்வதெல்லாம் உடான்ஸ் தான்.

கையேடு said...

//ஏன் எனது ஆன்மிகம் தொடர்புடைய கட்டுரைகளில் ஆர்வமுடன் ஏன் பின்னூட்டமிடுகிறீர்கள் என்று
தற்பொழுது தான் ஒரு உண்மை எனக்கு புரிகிறது.//

:)

நன்றி.

// உடான்ஸ் தான்.//

:)

தருமி said...

மன்னிக்கணும் - இந்த நல்ல பதிவுகளை நான் இதுவரை பார்க்காமைக்கு.