Thursday, November 13, 2008

மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை - பரிணாம விளக்கமும், விளக்கப் பரிணாமமும்


மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை - பரிணாமக் கொள்கை குறித்த தவறான புரிதலுக்கான விளக்கமும், பின்னூட்டத்தின் விளக்கப் பரிணாமமும்

1. பரிணாமம் என்றால் என்ன?

பரிணாமம் என்பது இயற்கை மாற்றத்தினால் ஒரு உயிர் எப்படிப் பலவகை உயிரிகளாக மாறுகிறது/மாறியது என்பதை விளக்கும் ஒரு உயிரியல் கொள்கை. பரிணாமம் உயிரின் தோற்றத்தை விளக்கும் ஒரு கொள்கையல்ல, மாறாக உலகிலுள்ள அனைத்து "உயித்தொகுப்புகளும்" (species) காலச்சக்கரத்தில் பின்னோக்கி நகர்ந்தால் ஒரே மூதாதையரைக் கொண்டிருப்பவை எனபதை விளக்கும் ஒரு கொள்கை. சுருக்கமாகச் சொன்னால் "எல்லோரும் ஒரு மரத்துப் பறவைகளே" என்பதுதான் பரிணாமக் கொள்கையின் அடிப்படைச் சாரம்.

2. பரிணாமத்தை எப்படிப் புரிந்து கொள்வது?

இவ்வுலகில் தோன்றிய முதல் உயிர் தனது சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு தனது இருத்தலுக்காக உள்ளான மாற்றமே பரிணாமம். மிக முக்கியமானதொன்றைக் குறிப்பிட விரும்புகிறேன், இம்மாற்றத்தை அவ்வுயிர் தேர்ந்தெடுக்கவில்லை மாறாக இயற்கை நிகழ்வாக சுயமாக நிகழ்கிறது. இம்முதல் உயிரிலிருந்து பிரிந்து விரிந்த ஒரு மரமாக இன்றைய அனைத்து உயிர்களையும் நோக்கலாம். இச்சூழல் மாற்றத்தினடிப்படையில் தகவமைத்துக் கொள்ளும் பண்பையே சார்லஸ் டார்வின் "natural selection" என்று தனது பரிணாமக் கொள்கையில் குறிப்பிடுகிறார்.

3. அது என்ன பரிணாம மரம்?


படம் 1. http://www.peabody.yale.edu/exhibits/treeoflife/convergent.html

பரிணாமத்தை ஒரு மரமாக பாவித்து விளக்குகின்ற முறையை "phylogeny" என்றழைக்கின்றனர். இதற்கான விளக்கப்படத்தை (படம் 1.)காணலாம். ஒரு உயிர் முதலில் தோன்றி அதன் பின்னர் வெவ்வேறு காலத்தில் சூழல் மாற்றங்களுக்கேற்றவாறு வெவ்வேறு வகையான உயிர்த்தொகுப்புகளாக மாறியதைப் பற்றிய ஒரு விளக்கத்தையே இப்பரிணாம மரம் விளக்குகிறது. இம்மரத்தின் ஆதி புள்ளியிலிருந்து நகர்ந்தால் முதலில் கிளைக்கும் புள்ளி வெவ்வேறு வகை உயிரிகளாகப் பிரிந்த தருணத்தைக் குறிக்கிறது. ஒரு கிளையின் நுணியில் இருந்து பின்னோக்கி நகர்ந்தால் சந்திக்கும் முதல் கிளைத்தல்-புள்ளி மிகச் சமீபத்தில் அவ்வுயிரினம் மாற்றம் அடைந்த தருணத்தைக் குறிக்கிறது. சூழலுக்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் போது மாற்றங்கள் சீரானவையாகவும் இருக்கலாம் சீரற்ற தாவல்களாகவும் இருக்கலாம்.

அதில் மனிதனும் குரங்கும் ஏதோவொரு சூழல் மாற்றத்தினால் ஒரு புள்ளியில் துவங்கிய இரண்டு உயிரிகள். ஒரே துவக்கப்புள்ளியைக் கொண்ட இரண்டு சிறு கிளைகள் மிகவும் நெருங்கிய உடல்கூறுகள், மற்றும் வாழ்வுமுறைகளைக் கொண்டதாகவும்,(நமது குடும்பத்தில் இருக்கும் நெருங்கிய உறவினரைப் போல) ஒரு பெருங்கிளையினைத் துவக்கப் புள்ளியாகக் கொண்டப் பலவகை உயிரிகளுக்கு அடிப்படையான பொது உயிரமைப்பும் கொண்டிருக்கும் (நமது தூரத்து உறவினர் போல). ஆனால், சிறுகிளைகள் வெகுதூரத்தில் இணைந்தாலும் அவற்றுக்கிடையே அடிப்படையானதொரு பெரும் ஒப்புமை இருக்கலாம். இதனாலேயே மருந்துகளுக்கான சோதனைகள் முதலில் எலிகளில் பெரும்பாலும் செய்யப்படுகின்றன. அதாவது மனிதன் உள்ளிட்ட பல்வேறு உயிர்த்தொகுப்புகள் துவங்கும் ஒரு பெரும்கிளையின் துவக்கப்புள்ளியில் இருப்பவை எலிகள்.
அப்பெருங்கிளையில் இருக்கும் அனைத்து உயிரிகளுக்கும் அடிப்படையானதொரு ஒப்புமை இருக்கும்.


4. குரங்கிலிருந்து மனிதன் தோன்றினானா?

கண்டிப்பாக இல்லை. மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை. இப்படியான கருதுகோல், பரிணாமத்தைப் பற்றிய தவறானபுரிதல்களில் முதன்மையானது. ஒருவேளை, இப்படியான கருதுகோலை உருவாக்கிப் பரப்பியதில் சமூகத்தில் விரவியிருந்த நம்பிக்கைகள் மற்றும் ஊடகங்களின் பங்கு முதன்மையானதாக இருக்கலாம். அல்லது ஏற்கனவே தனக்கென்று சிறப்பான குணாதீசியங்கள் உண்டு என்றும், தான் மற்ற விளங்குகளிடமிருந்து தனித்த ஒரு சிறப்பான உயிரி என்ற எண்ணத்தில் இருக்கும் போது "நீயும் குரங்கும் நெருங்கிய உறவினர்கள்" என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத அகம்பாவமாகயிருக்கலாம்.


5. அப்படியானால் குரங்கிற்கும் மனிதனுக்கும் உள்ள ஒப்புமையை எப்படிப் புரிந்து கொள்வது?




படம் 2. http://evolution.berkeley.edu/evolibrary/article/0_0_0/evo_05

மனிதனும் குரங்கும் பரிணாம மரத்தில் பின்னோக்கிச் சென்றால் சமீபத்திய புள்ளியில் துவங்கிய இரு உயிரிகள் (நெருங்கிய உறவினர்கள்). தமக்குள்ளே உடல் கூறுகள் மற்றும் பண்புகள் எனப் பலவற்றில் பெரும் ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்ளும் இரு உயிரிகள்.


6. இப்போ கடைசியா என்னதான் சொல்ல வர்றாங்க இந்த பரிணாம உயிரியலாளர்கள் (evolutionary biologists)?

படம் 3. ( http://evolution.berkeley.edu/evosite/misconceps/IBladder.shtml)

பரிணாமம் என்பது ஒரு மரத்தைப் போன்றது, ஏணியைப் போன்றதல்ல. ஒற்றைச் செல் உயிரிகள் துவங்கி இன்றைய மனிதன் வரை சுழல் மாற்றத்திற்கிணங்க தன்னை மாற்றியமைத்துக் கொண்ட ஒற்றை உயிர் மூலக்கூறின் வெவ்வேறு வடிவங்களே இப்படியாகப் பரிணமித்திருக்கும் அனைத்து உயிரினங்களும். அதனால், அனைத்து உயிரிகளும் ஒன்றோடொன்று சக காலத்தில் உயிரோடிருக்க முடியும் (மிகவும் அபரிவிதமான திடீர் சூழல் மாற்றங்கள் நிகழாதவரை). எல்லோரும் ஒரு மரத்துப் பறவைகளே என்பதுதான் பரிணாமக் கொள்கையின் அடிப்படைச் சாரம்.


7. சரி அப்போ அந்த முதல் உயிர் எங்கிருந்து வந்தது?

முதலில் இக்கேள்விக்குப் பரிணாமக் கொள்கை பதிலளிக்கத் தேவையில்லை. ஏனெனில், ஏற்கனவே குறிப்பிட்டது போல் அது "உயிரின்" மூலத்தை விளக்கும் ஒரு கொள்கையல்ல, மாறாக "உயிர்த்தொகுப்புகளின்" மூலத்தை விளக்கும் ஒன்று. (It does not explain "origin of life", it (tries to) explains "origin of species").

இப்போ ஒற்றை உயிர் பற்றிய கேள்விக்கு வருவோம் அது பூமியின் கருப்பொருட்கள் மற்றும் சூழல் மாற்றங்களை முன்னிறுத்தி அனுமானிக்கப்பட்டது. அனுமானம் என்றாலும் ஆய்வங்களில் அப்படியான சூழலைச் செயற்கையாக உருவாக்கி உயிர் மூலக்கூறுகளின் அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கியதன் மூலம் இவ்வனுமானம் தற்போது ஏற்புடையதாகயிருக்கிறது. முன்னரே, இங்கே( இறப்பு - உரையாடல் - II - உயிர்த் தோற்றம், செல்-அற...) சிறிது விளக்கியிருக்கிறேன்.


8. பரிணாமம் முழுமையடைந்துவிட்டதா? மேலும் பரிணாமம் நிகழுமா?

பரிணாமம் ஒரு தொடர் நிகழ்வு, அது நிகழ்ந்து கொண்டேயிருக்கும். உதாரணமாகச் சரியாகப் பள்ளி உணவு இடைவேளகளில் குழந்தைகள் மரத்தடிகளில் உணவு உட்கொள்வதால் சிதறுபவற்றை உண்பதற்காக அங்கே வந்தமரும் பறவைகள். (இது பரிணாம மாற்றமல்ல, தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலுக்கேற்றவாறு உணவு வேட்டையை மாற்றிக் கொள்ளும் அப்பறவைகளின் செயல்பாடுகளுக்கான ஒரு மிக எளிமைப்படுத்தப்பட்ட ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இது போல பல எடுத்துக் காட்டுகளை நாம் எல்லோராலும் நினைவுக்கு கொண்டுவர முடியும்.) சரி இப்போது எதற்கு இவ்வெடுத்துக்காட்டு. பரிணாம மரத்தில் மனிதன் தவிர அனைத்து உயிரினங்களும் இன்றும் தங்கள் வாழ்வியல் ஆதாரத்திற்குத் தனது சூழல் மற்றும் இயற்கையுடன் நேரடியிணைப்பில் இருக்கின்றன. அதனால், பரிணாமம் முற்றுப்பெறாத தொடர் நிகழ்வு (மிகவும் அபரிவிதமான திடீர் சூழல் மாற்றங்கள் நிகழாதவரை).


9. மற்ற உயிரினங்கள் இயற்கைச் சூழலோடு இணைந்து வாழும் போது, இன்றும் பல உயிரினங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன என்று கூப்பாடு போடுவதேன்?

பரிணாமம் ஒரு தொடர் நிகழ்வாகயிருந்தாலும், பரிணாம மாற்றங்கள் நிகழும் கால அளவு பல்வேறு உயிரிகளின் ஆயுட்காலத்தோடு ஒப்பிடுகையில் பன்மடங்கு அதிகம். மனிதன் எனும் உயிரி தனது வாழ்வியல் சூழலை மாற்றிக் கொண்டதன் மூலம் இவ்வுலகில் ஏற்படுத்திய சூழல் மாற்றங்கள் மிகவும் ஆபத்தானது, மற்றும் அதிவிரைவானது.மிகக்குறுகிய காலத்திலேயே உலகின் இயற்கைச் சூழலை பெரிதும் நாசமாக்கிவிட்டது மனிதன் எனும் உயிரி (ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்குள்). பரிணாம மாற்றங்கள் நிகழும் கால அளவோடு ஒப்பிட்டால் ஏறத்தாழ 4 அடுக்குகள்(மடங்கு அல்ல) சிறிய கால அளவு. இவ்விரைவான சூழல் மாற்றத்தினைத் தாக்குப் பிடிக்கமுடியாத பல்வேறு உயிரிகள் சத்தமில்லாமல் அழிந்து கொண்டிருக்கின்றன. "சில" உயிரினங்களைப் பொருத்தவரை 1000 ஆண்டுகளில் மாற்றம் என்பது அதிவிரைவான சூழல் மாற்றமே.


10. அப்படியானால் மனித உயிரி பரிணமிக்குமா?

இன்றைய சூழலைக் கருத்தில் கொண்டால் மனிதன் இனி பரிணமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென்று கருதுகின்றனர். இது தொடர்பாகச் சிலர் கருத்துக்களை கூறும் போது "மனிதன்" எனும் உயிரியிலிருந்து மற்றொரு பரிணாமம் நடை பெற்றால் மனிதன் அவ்வுயிரியின் முதல் உயிரை விட்டுவைக்க மாட்டான்" என்பது. இக்கூற்றைப் பகடிக்காக மட்டுமே பயன்படுத்துவோருண்டு. இதனை ஒரு கருதுகோலாக நோக்கினால் உடனடியாக இது சரியானதல்ல என்பது விளங்கிவிடும். பரிணாமம் என்பது ஒரு தொடர் நிகழ்வு, மேலும் அது நிகழும் கால அளவு மனிதனின் ஆயுட்காலத்தோடு ஒப்பிட்டால் மிக அதிகம். அதனால், மனிதன் எனும் உயிரி பரிணமித்துக் கொண்டிருக்கிறதா என்பதை உணர்ந்துகொள்வதே கடினம். இது மேலேயுள்ள கருதுகோளுக்கான எதிர் கருத்து மட்டுமே.

ஆனால், மனிதன் எனும் உயிரியின் சிறு கிளை மேலும் கிளைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதற்கு வேறு பல அறிவியல் சான்றுகளை முன்வைக்கின்றனர். அப்படியென்ன சான்று? மனிதன் இயற்கையிலிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டதாகக் கருதுகின்றனர். பெண்களுக்கு அதிகமாக உருவாகும் சொத்தைப் பல்லை இதற்கான சான்றுகளுள் ஒன்றாக நோக்கலாம். அதைப்பற்றிய விரிவான இடுகைக்கு முன் இப்படியொரு இடுகையின் அவசியம் இருப்பதை உணர முடிந்தது. அதனால் இப்பதிவு.

குறிப்பு:
பரிணாம உயிரியலை நான் ஆய்ந்து அறிந்தவனல்ல, வெறும் வாசிப்பும் மொழிபெயர்ப்பும் மட்டுமே. எனது புரிதலில் தவறிருந்தால் சு(கு)ட்டலாம்.
சுட்டிகளில் நேரடியாகவும் வாசித்துச் சரிபார்த்துப் புரிந்துகொள்ளலாம்.

பின்வரும், பகுதி அறிவியல் (என்ற) மதம் ! என்ற பதிவில் நிகழ்ந்த பின்னூட்ட உரையாடலினால் எழுதப்பட்டது.

புராண அவதாரங்கள் பரிணாமத்தைத்தான் குறிக்கின்றனவா?
கண்டிப்பாக சார்லஸ் டார்வினின் தொகுப்பிற்கிணையாக எந்த புராண, இதிகாச, புனித நூல்களிலும் விளக்கங்களோ ஆதாரங்களோ இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

அதே சமயம், பரிணாமக் கொள்கையின் ஆழ்ந்த புரிதல்களுக்கிணையாக இல்லாவிடினும், உயிர்களுக்கிடையேயான ஒருவகை ஒப்புமையை மனிதன் எனும் உயிரி உணர்ந்ததன் விளைவாக அப்படியான கதைகளையும் வகைப்படுத்தல்களையும் தங்கள் இலக்கியங்களில் புகுத்தியிருக்கலாம். புராணத்தை எழுதியவனும் சிந்தனைத்திறனுடைய ஒரு மனிதனாகத்தானே இருக்க வேண்டும். மேலும், மனிதனின் சூழல் குறித்த பார்வைதானே இலக்கியங்களில் பதியவைக்கப் படுகின்றன. அவை நம்பிக்கைகளாக மாறுகின்றனவா அல்லது இதிகாசமாக மாறுகின்றனவா அல்லது புனித நூலாக மாறுகின்றனவா என்பது மனிதச்சமூகத்தின் சூழல் சார்ந்தது.

ஆனால், பரிணாமக்கொள்கையைத் தான் புராண இதிகாசங்கள் விளக்குகின்றன என்ற கூற்று மிகைப்படுத்தலேயன்றி வேறல்ல.


ஆனால், அனைத்து மதங்களையும் சார்ந்த இவ்விதிகாச புராணங்கள் புழங்கும் சமூகச் சூழல்களைப் பார்க்கும் போது ஒன்றைச் சொல்லத் தோன்றுகிறது.

"It is more difficult to unlearn, than learning" என்று ஒரு சொல்வழக்குண்டு. தற்போதைய சமூகச் சூழலில் இருக்கும் குழப்பங்களுள் முதன்மையானவற்றுள் ஒன்றாக இதைக் காண முடிகிறது "எதை, unlearn செய்வது..??..!!".

எந்தெந்தச் சூழலில் மனித சமூகம் எதை "learn" செய்கிறது எதை "unlearn" செய்கிறது என்பது சமூகவியல், உளவியல், ஊடகவியல் என பண்முகத் தன்மைகொண்டு பயணிக்குமொரு நீண்ட உரையாடலுக்கான கருப்பொருளாகயிருக்கலாம்.

இறுதியாக, உண்மை புராணத்தில் இருந்தால் என்ன, அறிவியலில் இருந்தாலென்ன, இயற்கை மற்றும் இயற்கை நிகழ்வுகள் முன் நாம் சிறுத்துப் போவதுதாம் உண்மை.

தகவல் மூலங்கள்:

http://www.peabody.yale.edu/exhibits/treeoflife/learn.html
http://evolution.berkeley.edu/evolibrary/article/0_0_0/evo_toc_01

பரிணாமத்தை விளக்கும் ஒரு குறும்படம்
http://www.peabody.yale.edu/exhibits/treeoflife/film_discovering.html

"Phylogeny" குறித்த விரிவான விளக்கங்களுக்கு
http://evolution.berkeley.edu/evolibrary/article/phylogenetics_02

படங்களுக்கருகேயுள்ள சுட்டிகளிலும் சில விளக்கங்கள் உள்ளன.


பின்னூட்டத்தில் ஒரு அனானி குறிப்பிட்டதற்கிணங்க species என்பதற்கான பயன்பாடு உயிரித்தொகுப்பு என பின்னர் திருத்தி வெளியிடப்பட்டுள்ளது.


Tuesday, November 4, 2008

சினிமா - தொடர் பதிவு

சினிமா பற்றிய கேள்விகளுக்கான தொடர் பதிவில், நண்பர் Sen's senses..- செந்திலின் அழைப்பை ஏற்று ஒரு சினிமா பதிவு.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எந்த வயது என்பது சரியாக நினைவிலில்லை. ஆனால், சிறு வயதில் அதிகம் விரும்பியது சண்டைக்காட்சிகள் நிறைந்த திரைப்படங்களையே. எனது ஆரம்பப் பள்ளி பருவங்களில் திரையுலகில் முக்கியப் பங்கு வகித்தவை டி.இராஜேந்தரின் திரைப்படங்களே. மேலும், அப்போதைய அவரது தி.மு.க ஆதரவினால் கொட்டகைக்குமுன் அவரது திரைப்படங்களுக்கென்று பிரத்யேகமாக கட்சிக்கொடி அலங்காரங்கள் இருக்கும். அதனால், அத்திரைப்படங்களே நான் ஆரம்ப காலங்களில் பார்த்தவையாகத் தற்போது நினைவில் இருப்பவை. மேலும், அப்போது எனக்கு தோன்றிய சந்தேகங்கள் இப்போதும் பசுமரத்தானிபோல் இருக்கின்றன. ஒரு திரைப்படத்தின் இறுதியில் டி.இராஜேந்தர் இறப்பதுபோன்ற காட்சி வரும். பின்னர் அவரது அடுத்த படம் வந்தவுடன் அவர்தான் போன படத்திலேயே இறந்துவிட்டாரே மீண்டும் எப்படி மற்றுமொரு படம் என்று அனைவரையும் (அவர்கள் என்னையும்)புரட்டியெடுக்கும் கேள்விகள் கேட்பதுண்டு?

எனது இக்கேள்வியைப்பற்றி எழுதும்போது எங்கேயோ வாசித்தது நினைவில் வருகிறது. கிராமத்தில் எம்.ஜி.ஆரின் திரப்படத்தைப் பற்றி இரு பெரியவர்கள் பேசிக்கொள்ளும்போது "எப்படி அந்த ஊர் கொட்டகையிலும் அவரது படம் ஓடுது, நம்மூர் கொட்டகையிலும் அவரது வேறொரு படம் ஓடுது?" என்று கேட்டாராம். அதற்கு அருகில் இருந்த பெரியவர் கூறினாராம் "இரண்டு கொட்டகைக்கும் அடியில் சுரங்கம் இருக்கிறது, அவர் அச்சுரங்கம் வழியே இரண்டு கொட்டகைக்கும் இடையே ஓடி ஓடி நடிப்பார் என்று. இடையில் சுரங்கத்திலேயே உடை மாற்றமும் செய்துகொள்வார்" என்று கூறினாராம். இதை ஏதோவொரு புத்தகத்தில்தான் வாசித்தேன், எழுதியவர் யார்? என்ன புத்தகம் என்பது தற்போது நினைவிலில்லை.

சரி விசயத்துக்கு வருவோம், எனக்கு நினைவிலிருப்பவை டி.ஆரின் ஆரம்பகாலத் திரைப்படங்களே, ஏனெனில், படம் பார்த்தபின் ஒரு வாரத்திற்கு எங்கள் விளையாட்டுகளில் எல்லாம் அவரது வசனங்களே தெரிக்கும். இது தவிர திரைப்படம் பார்க்காத தன் நண்பர்களுக்கு என் அக்கா கதை சொல்ல அதைக் கேட்டுக்கொண்டே பள்ளிக்கு நடந்து் செல்வது போன்ற நிகழ்வுகளே அவற்றை நினைவில் நிறுத்துபவை. ஆறாம் வகுப்பின் துவக்கத்திலிருந்து எனது பொழுதுபோக்கு சிந்தனை என அனைத்தையும் ஆக்கிரமித்தது கால்பந்தாட்டம் (எல்லாம் சேர்ந்த பள்ளி அப்படி). அதனால் அதன்பிறகு சினிமாவில் சொல்லிக்கொள்ளும்படி ஆர்வமேயிருந்ததில்லை. அதற்காக நான் பெரிய கால்பந்தாட்டவீரனென்றெல்லாம் நினைக்காதீர்கள், கடைசிவரை ஒரேயொரு ஆண்டு மட்டும் மாற்று ஆட்டக்காரனாயிருந்தேன், அதுவும் ஒரேயொரு ஆட்டத்தில் அவ்வளவுதான். மற்றபடி தெருவில் விளையாடுவதோடு சரி.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

கடைசியாக அரங்கில் பார்த்த சினிமா வேட்டையாடு விளையாடு என்று நினைக்கிறேன்.


3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

கடைசியாக அரங்கிலன்றி, இணையத்தில் பார்த்த தமிழ் சினிமா "ஈ". என்ன உணர்ந்தேன் என்பதை அடுத்த கேள்வியில் சேர்த்து பதிலளித்துவிடுகிறேன்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

மிகவும் தாக்கிய தமிழ்சினிமா என்பதைவிட சில சினிமாக்கள் இருக்கின்றன.
அவற்றில், உதிரிப்பூக்கள், மகாநதி, அன்பேசிவம், மொழி மற்றும் கடைசியாகப் பார்த்த "ஈ".
மேலே குறிப்பிட்ட பல திரைப்படங்கள் குறித்து பலரும் எழுதிவிட்டதால் "ஈ" குறித்த எனது பார்வையை மட்டும் குறிப்பிடுகிறேன்.

சினிமா குறித்த எனது பார்வை மிகவும் குறுகியது, மேலும், பல திரைப்படங்களை நான் பார்த்ததுகிடையாது, என்றாலும் திரு.சீவநாதன் இயக்கத்தில் வந்த "ஈ" திரைப்படம் என்னைப் பொறுத்த வரை நிச்சயமாக ஒரு மாறுபட்ட திரைப்படம். அதிலும் பல குறைகள் உண்டு ஆனால் அதைப் பற்றி இறுதியாகப் பார்க்கலாம். எனக்குத்தெரிந்த வரை மிகவும் குவிமையப்படுத்தி ஒரு முக்கியமான சமூகப் பிரச்சனையை பகிரங்கமாக வேறெந்த படமும் பேசியதில்லையென்றே கருதுகிறேன். இத்திரைப்படத்தினைப் பல வகைகளில் அனுகலாம். நூறு ரூபாய்க்காகத் திருட்டுத்தனமாக செய்ல்படும் பிணவறைத் தொழிலாளியோ, அல்லது அப்பேட்டை தாதாவோ அல்லது அவனது கையாளோ ஏதோயொரு வல்லரசின் பின்புலத்தில் நடக்குமொரு மிகப்பெரிய ஆபத்திற்குத் துணைபோகலாம் அவருக்குத் தெரியாமலேயே, அல்லது அப்படியான மலினப்பட்ட இலஞ்ச இலாவன்யமும் அறியாமையில் இருக்கும் மக்கள்தான் அவ்வலரசுகளுக்கு தேவையாகவும் இருக்கலாம். உலகமயமாக்கலினால் உருவாகக்கூடிய மோசமான விளைவுகளுள் ஒன்றை இத்திரைப்படம் நிச்சயம் தோலுரித்திருக்கிறது. இதே போல சமூகச் சிக்கல்களை நேரடியாகத் தாக்கிய வேறு சில திரைப்படங்கள் இருந்தாலும், ஏதோயொரு வகையில் ஒரு அரசியல் அடையாளத்தையே அவை முன்னிறுத்தின என்பது எனது பார்வை.
ஆனால், "ஈ" திரைப்படத்தில் வணிக ரீதியான சிலவற்றை சேர்த்திருந்தாலும் இரண்டு விடயங்களைக் குறையாகக் காண்கிறேன்.

ஒரு முக்கியமான சமூகப் பிரச்சனையை முன்னிறுத்தியது பாராட்டப்படவேண்டியதே, ஆனால், அனைத்து மருத்துவர் மற்றும் அனைத்து மருத்துவச் சோதனைகள் குறித்தும் ஒரு நிரந்தர பீதியையும், அச்சத்தையும் உருவாக்கி அதனை அப்படியே விட்டுவிட்டதை ஒரு குறையாகவே காண்கிறேன்.
அதைவிட முக்கியமாக அதே திரைப்படத்தில் வழக்கமான இதிகாச, புராண கதைகளின் அடிப்படையான வாய்ப்பட்டைப் பயன்படுத்தும் வழக்கமான தமிழ்சினிமா பாணியிலேயே முடித்திருப்பது. மக்களுக்கு ஏதோவொரு சமூகப் பிரச்சனையென்றால், உடனே அநாதரட்சகனாகவும், அவதாரமாகவும் யாராவது தோன்றி தீமையை அழித்துவிட்டு மக்களைக் காப்பாற்றுவது. மக்கள் தங்கள் சமூகப் பிரச்சனைகளுக்காக சிந்தித்து அதற்காக உழைக்கவோ போராடவோ வேண்டாம், கைகளை மேல்தூக்கி ஒரு தவத்தையோ, முறையீடையோ வைத்தால் போதும், அங்கே நாயகன் தோன்றுவார் என்ற புண்ணாக்குத் தனத்தை எப்போதுதான் விடுவார்களோ தெரியவில்லை. (சரி, இன்றும் நமது குழந்தைகளுக்கு ஒரு யானை, மக்களை ஆட்சி செய்யப் போகும் அரசரைத் தேர்ந்தெடுத்தது என்ற அம்புலிமாமாக் கதைகளைத்தானே சொல்லிகொண்டிருக்கிறோம், அதனால் அதன் நீட்சி இப்படித்தான் இருக்கும்.) இந்த அடிப்படையிலேயே "ஈ" திரைப்படத்திலும் நெல்லைமணி என்ற ஒரு போராளி/தீவிரவாதி இப்படிப்பட்ட மருத்துவர்களைக் கொல்வார், பின்னர் முடிவில் அதனையே நாயகனும் தொடர்வார். மிகவும் முக்கியமான சமூகப் பிரச்சனையைக் கதையில் கையாண்டுவிட்டு, கடைசியில் அதற்கான முடிவாக தீவிரவாதத்தை முன்வைப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது என்றுதான் சொல்லவேண்டும். இவை இரண்டும் எனது பார்வையில் "ஈ" திரைப்படத்தின் குறைபாடுகளாகக் காண்கிறேன்.


5.அ உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ஒன்றுமில்லை.


5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

எனக்கு சினிமா குறித்த தொழில் நுட்ப அறிவு சுத்தமாகக் கிடையாது. ஆனால், (அக்காலத்தைய) புதிய தொழில்நுட்பம் ஒன்று மிகவும் அனுபவித்தது, வியந்தது இன்றும் நினைவிலிருக்கும் ஒன்று என்றால் அது முப்பரிமாண விளைவுகளோடு வந்த "மைடியர் குட்டிச் சாத்தான்" திரைப்படம். பல இடங்களில் ஏமாந்த அனுபவம் இன்றும் நினைவில் இருக்கிறது.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

தீவிரமாக வாசிப்பதில்லை, அவ்வப்போது உண்டு.

7.தமிழ்ச்சினிமா இசை?

தமிழ்த்திரைப்படப் பாடல்கள் மட்டுமே எனது இசை குறித்த அறிவு. திரைப்பாடல்களில் எல்லா சூழ்நிலைகளுக்கும், காலத்திற்கும் ஏற்ற இசையும் பாடல் வரிகளும் உண்டு என்றே கருதுகிறேன்.


8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

"உலக மொழி சினிமா? " இக்கேள்வி ஆங்கிலத்தைக் குறிக்கிறது என்று நினைக்கிறேன். எனது பார்வையில் எல்லா மொழிகளும் உலக மொழியே.. :)

தாய்மொழியல்லாத வேற்றுமொழிப் படங்கள் என்றால்
கடந்த 5 ஆண்டுகளாக அதிகம் பார்த்ததுண்டு.
ஹிந்தி, சுத்தமாகப் புரியாது, அதையும் மீறி ஹிந்தியில் பார்த்த ஒரு படம் "லகான்" மட்டுமே.


அநேகமாக அனைத்து புரூஸ்லீயின் திரைப்படங்களும் பார்த்ததுண்டு. எல்லாமே தாக்கும் படங்கள்தான்..:) ஒரு ஆர்வக்கோளாரில் ஓராண்டு காலம் குங்ஃபூ வகுப்புக்குச் செல்லும் அளவிற்குத் தாக்கியவை.

பல ஆங்கிலப் படங்கள் பார்த்ததுண்டு மனதளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை மூன்று ஆங்கிலத் திரைப்படங்கள்.
The Pianist, Life is Beautiful.

மூன்றாவது் திரைப்படம் "Wait until dark" - இது ஒரு கருப்பு-வெள்ளைத் திரைப்படம். படம் முழுவதும் ஒரு பூட்டிய வீட்டுக்குள் ஒரு கண்தெரியாத பெண் மற்றும் அவளது கணவன் இல்லாத நேரத்தில் அவளுக்குத் தெரியாமல் அவ்வீட்டில் பதுங்கும் இரண்டு கொலைகாரர்கள் என நீளும். அந்நடிகையின் பெயரோ அல்லது அத்திரைப்படம் குறித்த வேறெந்த குறிப்புமோ நினைவிலில்லை, யாருக்காவது தெரிந்தால் தெரியப்படுத்துங்கள். அந்நடிகையின் இறுதிக்காட்சி நடிப்பு நிச்சயம் பிரமிக்க வைக்கும்.

ஆங்கிலம் அல்லாத மொழியில் என்றால் பிரெஞ்ச் மற்றும் ஈரானியத் திரைப்படம் ஒன்று "subtitles" உதவியுடன் பார்த்தது முறையே "Amelie" மற்றும் "children of heaven".


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை எவ்வித நேரடித்தொடர்புமில்லை.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எதிர்காலம் பற்றிக் கூறும் அளவிற்கு கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் உற்றுநோக்கியதில்லை.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?


பழகிவிடும் அல்லது வேறுயேதோவொன்று அவ்விடத்தை நிரப்பிவிடும். ஒரு வேளை மெகா சீரியல்களின் எண்ணிக்கைகள் அதிகரிக்கலாம்.

வேறு சிலரை அழைக்க வேண்டும் என்பது விளையாட்டின் விதி. அநேகமாகப் பலரும் எழுதியிருப்பார்கள் அதனால் பொதுவான அழைப்பாக வைத்து விடுகிறேன். விருப்பமிருப்பவர்கள் எழுதுங்கள்.

ஒரேயொரு வரை மட்டும் கண்டிப்பாக எழுத அழைக்கிறேன். பலகாலமாக வெறும் புகைப்படங்கள் மட்டும் பதிவிலேற்றும் எங்கள் அன்பு அண்ணன்
உடுக்கை அடிக்கும் உடுக்கை முனியாண்டி அவர்களை அழைக்கிறேன்.