காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது சங்கரனின் கையிலிருந்த தினசரியின் பக்கங்கள். காலை வெயிலில் மொட்டைமாடியில் கையில் தினசரியும், அருகில் ஆவிபறக்கும் காபியும் சேராவிட்டால் அன்றைய தினம் முழுமையடையாது சங்கரனுக்கு.
"இந்தாங்க காபி" என்றாள் மனைவி. "என்னங்க போட்ருக்கு பேப்பர்ல" என்றாள். "ரொம்ம்ப.. முக்கியம், டிபன் ரெடியா? இன்னிக்கு சீக்கிரம் ஆபீஸ்போகணும்" என்றான். கழுத்தில் வழிந்த வியர்வையின் எரிச்சலை தனது புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டே கீழிறங்கிச் சென்றாள்.
ஆவிபறக்கும் காபியுடன் போட்டிபோடுமா செய்திகள் என்று அப்படியே தினசரியில் மேய்ந்து கொண்டிருந்தான். சூனா பானாக்களின் உலகப் பயணம், ராசி பலன், மணப்பந்தல், சினிமா விமர்சனம் என்று போய்க்கொண்டிருந்தது. கீழே, தன்னுடைய "டை"யைப் பிடித்து தொங்கிக் கொண்டே பள்ளிக்குச் செல்ல அழுதுகொண்டிருக்கும் எதிர்வீட்டுச் சிறுவன், உந்துருளியின் உள்ளே திணிக்கப்படுவதைப் பார்த்து ஒரு புன்முறுவலுடன் தினசரியைத் தொடர்ந்தான்.
ஆர்வம் குறைந்து மேலோட்டமாக மேய்ந்து கொண்டிருந்தவனை 8ஆவது பக்கத்தில் இருந்த அச்சிறிய பெட்டிச் செய்தி் கவர்ந்தது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்குலக நாடுகளில் தயாராகும் சில மருந்துப் பொருட்களுக்கான முதல்கட்ட பரிசோதனையை, இந்திய மக்களின்மேல் பரிசோதித்துக்கொள்ள இந்தியா அனுமதி வழங்கியிருப்பதாகச் சொன்னது செய்தி. செய்தியைப் பற்றி முழுவிபரம் தெரியாவிட்டாலும், இச்செய்தி ஏற்படுத்திய அதிருப்தியால் வாசிப்பைப் பாதியில்விட்டு அருகிலுள்ள தரிசு நிலத்தை வெறித்துக்கொண்டிருந்தான்.
தரிசு நிலத்தில் சில செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும் மேய்ந்து கொண்டிருந்தன. அவை ஏதோவொன்றுக்கு கட்டுப்பட்டதுபோல் அந்த மேய்ச்சல் நிலத்துக்குளேயே மேய்ந்து கொண்டிருந்தன. அவ்வப்போது மேய்ந்து கொண்டே அந்நிலத்தைத் தாண்ட எத்தனிக்கும் போதெல்லாம் ஒரு குரல் அவற்றைத் தடுத்தது. ஒரேயொரு ஆட்டுக்குட்டி மட்டும் குரலை கவனியாதது போல அந்நிலத்தைத் தாண்ட முயன்றது. உடனே நான்குகால் பாய்ச்சலில் அருகில் வந்தன அந்த காவல் நாய்கள் இரண்டும். குலைநடுங்கிப் போன ஆட்டுக்குட்டி மந்தையுடன் கலந்தது.
நாய்களின் பாய்ச்சலில் இருந்த வேகமும், குரலும், ஒட்டுமொத்தமாக மந்தையையே நடுங்கச் செய்துவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக பயம் கலந்த "ம்மே"க்கள் முனகல்களாக வந்து கொண்டிருந்தன. மீண்டும் இப்படியொரு செயலைச் செய்ய யாருக்காவது திணவிருக்கா என்ற ரீதியில் மந்தையை நோக்கி ஒரு மிடுக்குப் பார்வை பார்த்தன நாய்கள். பின்னர் கழுத்துப்பட்டையின் அரிப்பை பின்கால்களால் சுகமாக சொறிந்து விட்டுக்கொண்டு தனது சகாவுடன் சேர்ந்து வலம் வந்துகொண்டிருந்தன காவல் நாய்கள்.
இதையெல்லாம் மரத்தடியில் மேய்ந்து கொண்டிருந்த மாடு ஒன்று பார்த்துக்கொண்டிருந்தது. இவ்வளவு நேரம் ஈ விரட்டுவதற்காகச் சிலிர்த்தக் காதுகள், இப்போது ஏதோ ஒரு உணர்வு அடிப்படையில் சிலிர்ப்பது போல ஒட்டு மொத்தமாகத் தலையோடு சேர்த்து வேகமாக ஆட்டியது. கழுத்து மணிச் சிணுங்க, அந்த ஆட்டுக் கூட்டத்தை நோக்கிச் சென்றது மாடு.
ஆடுகள் இந்த புதுவரவைப் பெரிதுபடுத்தாமல் அவை தன் மேய்ச்சலைக் கவனித்தன. கழுத்தின் கீழ் ஏற்பட்ட அரிப்பை நாக்கால் சொறிந்துவிட்டுக் கொண்டு பெச ஆரம்பித்தது மாடு. "ஓ ஆட்டு மந்தைகளே ! ஏனிப்படியிருக்கிறீர்கள், எங்கு வேண்டுமானாலும் மேய்வது உங்களுக்குள்ள உரிமை, அதைத் தடுப்பதற்கும், தண்டிப்பதற்க்கும் இந்த நாய்களுக்கு ஏது அதிகாரம்" என்று செருமியது.
இந்தச் செருமலுக்கு ஒன்றிரண்டு ஆடுகள் தலை நிமிர்த்திவிட்டு, இது ஏதோ விவகாரம் என்று சொல்லி சற்றுத்தொலைவில் சென்று மேய ஆரம்பித்தன. ஓரு சில ஆடுகள் லேசாகத் தன் மேய்ச்சலை நிறுத்திவிட்டு பின் தலையைக் கூடத் தூக்காமல் மேய ஆரம்பித்தன. ஒரு சில இளம் ஆடுகள் ஏதோ புதிய ஒளியைக் கண்டது போல் அந்த மாட்டினருகில் வந்தன. ஒரு சில ஆடுகள் ஏதோ நடக்கப் போகுது நல்லா வேடிக்கை பார்க்கலாம் என்ற நினைப்பில் அருகில் வந்தன.
தனது செருமலுக்குக் கிடைத்த இந்தக் குறைந்த அளவு அங்கீகாரத்துடன் பேச ஆரம்பிடித்தது, "நண்பர்களே ! எங்கு வேண்டுமானலும் மேய்வது உங்களது உரிமை, அதைத் தடுப்பதற்கு இந்த நாய்களுக்கு உரிமையில்லை" என்று மீண்டும் கூறியது. மேலும் உங்களுக்கு எது விருப்பமோ அதை உங்கள் விருப்பப்படி உண்ண அனுமதிக்க வேண்டும், அதை விடுத்து உங்களை இந்த நிலத்திற்குள் இந்த வட்டத்திற்குள் மேயவேண்டும் என்று தடுப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கழுத்தின் அரிப்பை நாவால் சொறிந்தபடியே பேசி முடித்தது.
உடனே ஒருசில ஆடுகள், "சரிண்ணே... நீங்க சொல்றதெல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா யாரு கடிபடறது, வரப்புகிட்ட போனா குலை நடுங்கறா மாதிரியில்ல குலைக்குதுங்க. அதுக்குமேலே இந்த இடத்திலேயே நின்னு மேஞ்சுட்டுப் போவமே இப்ப என்னாதான் குறைஞ்சு போச்சு" என்றன.
"நீங்கெல்லாம் விவரம் தெரியாமல் இருக்கீங்க, நான் இதுவரைப் பல ஊருக்குப் போயிப் பல "கிடை"களைப் பார்த்திருக்கேன் தெரியுமா. இப்படியெல்லாம் உங்களை அடிமைபோல் வைத்திருக்கக்கூடாது . அதுமட்டுமா உங்களுடைய அடிப்படை உரிமைகளைக் காக்க, நமது சுற்றுப்புறத்தைக் காக்க இப்படிப் பல விசயங்களுக்குக் குரல் கொடுக்கப் பல குழுக்கள் இருக்கிறார்கள் தெரியுமா. இதெல்லாம் உங்களுக்கு எங்கே தெரியப் போவுது என்னைப் போல் நாலு இடங்களுக்குப் போயி நாலு பேருடன் பழகினாதானே தெரியும்" என்று தன் நீண்ட சொற்பொழிவை முடித்துவிட்டு மீண்டும் கழுத்தில் ஏற்பட்ட அரிப்பை நாக்கால் சரி செய்தது.
"அண்ணே நீங்க நாலு எடத்துக்குப் போயிட்டு வந்தவரு அதனால வெவரமா பேசறீங்க. எங்களுக்கு இந்த வயக்காட்டவுட்டா என்னா தெரியும் அதுவும் புதுசா இந்த நாய்கள் தொல்லை வேற, நாங்க இப்ப என்னதான் செய்யணும் அதையும் வெவரமா சொல்லுங்க."
"நீங்க இத்தனைப்பேர் இருக்கீங்க அதுகரெண்டே ரெண்டு நாய்தான் அதுங்களை உங்களாலே ஒன்னா நின்னு முட்ட முடியாது ? நீங்க எல்லோரும் சேர்ந்து நின்னோஅதுங்களால ஒன்னும் செய்ய முடியாது..." என்று முடிக்கும் முன்னரே அங்கு வேடிக்கைப் பார்க்க வந்த சில ஆடுகள் இது ஏதோ விவகரம் என்பதுபோல நழுவ ஆரம்பித்தன.
சரியென்று ஒரு சுபயோகக் கனத்தில் இரண்டு வெள்ளாடுகளும் இரண்டு செம்மறியாடுகளும் சிலிர்த்துக் கொண்டு பொறுப்பேற்றன. அதன்படி அவை தங்கள் கூட்டத்திடம் சென்று பல சொற்பொழிவுகள் ஆற்றி அனைவரும் ஒன்றுகூடி வரப்பைக் கடப்போம் என்று முடிவு செய்தன. அப்படியே , வெள்ளாடுகள் ஒரு குழுவாகவும் செம்மறியாடுகள் ஒரு குழுவாகவும் வரப்பை நோக்கி முன்னேறின. ஆனால் வரப்பருகே சென்றவுடன் எழுந்த குரலில் பின்னாலிருந்த ஆடுகள் பாதி சிதறி ஓடின மீதி பீதியுடன் நடுங்கிக் கொண்டிருந்தன. நாய்கள் அருகில் வந்தவுடன் அனைத்தும் ஓட்டமாகச் சிதறி மேய்ச்சல் நிலத்திற்கு நடுவில் வந்தன.
இப்போது அந்த நான்கு ஆடுகள் மட்டும் தனியே நின்றன, தமக்குப் பின்னால் ஒரு போர்ப்படையே இருப்பது பொன்ற நினைப்பில் நின்றுருந்தவை இப்போது லேசாக நடுங்க ஆரம்பித்தன. பின்னர் மெதுவாக அச்சத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மற்ற ஆடுகளைப் பயங்கொள்ளிகள் என்று திட்டிக்கொண்டே மந்தையோடு ஒன்று சேர்ந்தன.
இதைக் கவனித்துக்கொண்டிருந்த மாடு, அந்த ஆட்டுமந்தையை ஒரு அலட்சியப் பார்வைப் பார்த்தது. பின்னர் நீங்களெல்லாம் எங்கே முன்னேறப்போகிறீர்கள், உங்களுக்கு மேய்வதற்கான இடத்தைத் தேர்வு செய்யவும் உரிமையில்லை, அதை வாங்கும் தைரியமும் இல்லை என்பதுபோல ஒரு சிலிர்ப்பு சிலிர்த்துவிட்டு மேய ஆரம்பித்தது.
இப்போது தனக்கு மிக அருகில் அதற்கு மிகவும் பிடித்தனமான ஒரு செடியிருப்பதைப் பார்த்தது. உடனே மிகவும் ஆனந்தத்துடன் அதன் அருகே செல்ல யத்தனித்தது.
இவ்வளவு நேரம் வெறும் அரிப்பு மட்டுமேயிருந்த கழுத்தில் இப்போது ஏதோவொன்று அதைப் பின்னோக்கியிழுப்பது போல் தோன்றியது. பின்னர் அது எவ்வளவோ முயன்றும் அந்தச் செடியின் இலைகளை தனது நுனிநாக்கால் நக்க மட்டுமே முடிந்தது. பின்னர் முயற்சியைக் கைவிட்டுப் பின்புறம் நோக்கியது, அது படுத்திருந்த மரத்தடி சற்று தொலைவில் இருப்பது தெரிந்தது.
அப்படியே அந்தப்பக்கம் திரும்பியது, ஒரு ஆட்டுக்குட்டியை வரப்பிலிருந்து விரட்டிக்கொண்டிருந்தது நாய். சறிது நேரம் அந்தக் குட்டியைப்பார்த்தது, பின்னர் அந்தச் செடியையே முறைத்துப் பார்த்துவிட்டு தான் படுத்திருந்த மரத்தடியே சென்று அசைபோட ஆரம்பித்தது.
இந்த நிகழ்ச்சியைப் பார்த்து முடித்த சங்கரன் செய்தியைவிட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான். அந்த ஒப்பந்தத்தை எதிர்த்த, பொதுநல வாதிகள், ஒருமித்த கருத்து கொண்ட தோழர்கள், பொதுமக்கள் எனப் பலரும் சிறையில் அடைக்கப்பட்டனர் என்றது செய்தி. ஏதோ ஒரு கோபம் கலந்த வருத்தம் இருந்தது அவனது கடிகாரம் அலுவலகம் செல்லும் நேரத்தைக் காட்டும் வரை..
கழுத்தின் பின்புறம் இருந்த அரிப்பை தனது சுண்டு விரலால் லாவகமாக சொறிந்து கொண்டே "டிபன் ரெடியா.." என்று கீழேயிறங்கிச் சென்றான். அன்றைக்கு மருந்துகள் பரிந்துரைக்கச் செல்ல வேண்டிய இடங்கள் மனதில் ஒடியது.
************************************************************************************************************
உரையாடல் சிறுகதைப் போட்டிக்காகத்தான் எழுதினேன். ஆனால், நான் ஏற்கனவே எழுதிய ஒரு சிறுகதையின் தழுவலிலேயே இருப்பதாக வாசித்த நண்பர்கள் குறிப்பிட்டதால் போட்டிக்கில்லாமல் உங்கள் பார்வைக்கு மட்டும் இருக்கட்டும் என்றும் இங்கே.
3 comments:
கதை நல்லா வந்திருக்கு...
அது சரி, கீழே இருக்கும் வரிகளுக்கும் செம்மறியாட்டுக் கூட்டத்திற்கும் ஏதாவது தொடபு இருக்குதா???
//சூனா பானாக்களின் உலகப் பயணம்//
;))))) நான் எதுவும் சொல்லலை !!!!
நன்றி பதி.. :)
Post a Comment