Tuesday, July 21, 2009

சத்யாவின் பட்டறை

நீங்கள் வாரயிறுதி நாட்களில் அண்ணா பல்கலைக்கழகம் அல்லது சென்னைப் பல்கழைக்கழகத்தின் (கிண்டி) வளாகங்களைக் கடந்திருக்கிறீர்களா, அப்படியென்றால் உணவு இடைவேளையின்போது வளாக உணவகங்களில் இவரை நிச்சயம் சந்தித்திருக்கலாம். இருபதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கிடையில் தன்னை மறந்து கைகளால் அபிநயம் பிடித்துக் காற்றில் படம் வரைந்து கொண்டிருக்கிறாரா ஒருவர் அப்படியானால் அவர் 'சத்யா'வாகயிருக்கலாம்.

ஆந்திர மாநிலம் குண்டூரில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றின் கம்பவுண்டரின் மகனாகப் பிறந்து தெலுங்கு வழியிலேயே பனிரெண்டாம் வகுப்புவரைக் கல்விகற்று, மைசூரின் கல்விக்கான மண்டலக் கல்லூரியில் முதுகலை இயற்பியல் படித்தவர் "சத்யா (எ) சத்யநாராயணன்". பின்னர் "GATE" எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் தேர்ச்சிபெற்று கல்பாக்கம் இந்திரா காந்தி அணுவாராய்ச்சி மையத்தில்(IGCAR) தனது முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டவர். பின்னர் அதே IGCAR'ல் விஞ்ஞானியாகவும் இணைந்தவர். "CHAOS"ல் தனது முனைவர் பட்டத்துக்கான கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டார். பின்னர் புரோட்டின்களின் அமைப்பு மற்றும் உயிரியல் மூலக்கூறுகளின் இயக்கம் என அவரது ஆராய்ச்சிகளும் விரிவடைந்தன, இன்றைக்கும் விரிவடைந்து கொண்டிருக்கிறது.

இதிலென்ன சிறப்பிருக்கிறது, இந்தியாவில் பலரும் இப்படித்தானே, கிராமத்தில் படித்து பின்னர், வாழ்க்கையில் முன்னேறியவர்கள்தானே என்று உங்களுக்குத் தோன்றக்கூடும். ஆனால், சத்யாவைப் பற்றி இன்னும் இருக்கிறது சொல்வதற்கு.

சென்னை மற்றும் வடதமிழ்நாட்டின் பல கிராமப் புற மாணவர்களுக்கு, இயற்பியல் ஆய்வு மேற்படிப்புக்கான தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கும், தேசிய உயர்கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களின் நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்காக (CSIR, NET, GATE, IISc, TIFR, IIT, ...) இன்றைக்கும் இலவசமாக பயிற்சியளிப்பவர்தான் சத்யா. சென்னைப் பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்திலுள்ள, அணுக்கரு இயற்பியல் துறையின் ஒரு வகுப்பறையில்தான் துவங்கியது சத்யாவின் பட்டறை. இவ்வகுப்புகள் துவங்கிய நாட்களில் ஞாயிற்றுக்கிழமை காலைவேளைகளில் மட்டும் நடந்து வந்தன. இலவச வகுப்பு என்பதால் அந்த ஆண்டுக்கான முதல் வகுப்பில் வகுப்பறை நிரம்பி வழியும், எப்படியும் சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் என 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பார்கள். ஆனால், அப்படியே தேய்ந்து ஆண்டு இறுதியில் சராசரியாக 20 மாணவர்கள் எஞ்சியிருப்பார்கள்.

தொலைவிலிருந்து வரும் மாணவர்களுக்காக, ஞாயிற்றுக்கிழமை மாலை வரை வகுப்புகளை நீட்டித்தார்.
அதில் ஒருவர் வேலூருக்கருகிலுள்ள போலூர் எனும் கிராமத்திலிருந்து அதிகாலை நான்கு மணிக்குக் கிளம்பி 9.30 மணிக்கு வகுப்புக்கு வந்து சேர்ந்து பின்னர் மாலை வகுப்பு முடிந்து பின்னர் நள்ளிரவு நேரத்திற்கு வீட்டிற்கு செல்பவரும் உண்டு. அவரது பயண உழைப்பை அறிந்து கொள்வதற்காக அவருடனேயே ஒருமுறை பயணம் செய்தும் பார்த்தார் சத்யா. அடுத்தடுத்த ஆண்டுகளில், வகுப்பின் இறுதிவரை தொடரும் மாணவர்கள் பெரும்பாலும் புறநகர் மற்றும் கிராமப் புற மாணவர்களாகவேயிருப்பதால், வாரத்தில் இரண்டு நாட்கள் என சனி மற்றும் ஞாயிறு என்று நீட்டித்தார், ஒரு சில மாணவர்களை ஒரு இரவுக்குத் தமது வீட்டிலேயே தங்கிக்கொள்ளவும் உதவிகள் செய்தார்.

இதே போல், நாகர்கோயில் அருகில் ஒரு கிராமத்திலிருந்து வந்த மாணவி முதுகலைப் படிப்பிற்கே போராடித்தான் சேர்ந்திருந்தார். சத்யாவின் வகுப்பிற்குப் பின்னர், இந்திரா காந்தி அணுஆராய்ச்சி மையத்தில் ஒரு விஞ்ஞானியாகச் சேருவதற்கு தேர்ச்சி பெற்றுப் பணியாற்றிவருவதோடல்லாமல், பின்னர் அவரது வாழ்க்கைத் துணையாகவும் இப்போது வகுப்பறைத் துணையாகவும் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

வருடத்தில் இரண்டு முறை நடக்கும் CSIR நுழைவுத் தேர்வுகளின் போது சில மாணவர்கள் அவரோடு அவரது வீட்டிலேயே திருவான்மியூரில் தங்கிவிடுவதும் உண்டு. தேர்வு முடியும் வரை அவர்களோடு சேர்ந்து நள்ளிரவு வரை கண்விழிப்பார் சத்யா. பொதுவாக கல்பாக்கத்தில் தனக்காக வழங்கப்பட்ட தனி வீடொன்று இருந்தாலும், தேர்வு சமயங்களில் மாணவர்களுக்காக தினமும் மாலை சென்னையிலிருக்கும் அவரது வீட்டிற்கு வந்துவிடுவார். தனது தாய், தங்கை என மூன்று பேர் மட்டுமே வாழக்கூடிய ஒரு சாதாராண ஓட்டுவீடுதான் சத்யாவினுடையது, ஆனாலும், மாணவர்களுக்காக ஒரு வாரம் அந்தக் குடும்பமே கண்விழிக்கும், உணவு சமைக்கும்.

முதலில், ஞாயிற்றுக்கிழமை காலைகளில் தொடங்கி, பின்னர், ஞாயிறு மற்றும் சனி பகல் வேலை முழுவதுமாக எனப் பரிணமித்து பத்தாண்டுகளைக் கடந்துவிட்டது சத்யாவின் பட்டறை. மேலும், முதலில், தனது வகுப்பறையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கிய சென்னைப் பல்கலைக்கழகம், பின்னர், இவ்வகுப்பின் வெற்றியையும், மாணவர்களினது ஆர்வத்தையும் கண்டு, பல இருக்கை வசதிகளும், பலகை வசதிகளையும் உள்ளடக்கிய கருத்தரங்குகளுக்கான தனது சிறப்பு அறையைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதியளித்தது. இன்றைக்கும் இவ்வகுப்புகள் இலவசமாகவே சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

இயற்பியலுக்கான ஒவ்வொரு CSIR தேர்விலும், தமிழகத்தின் மொத்த தேர்ச்சி எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே இருந்தாலும், அதில் இருவர் கண்டிப்பாக சத்யாவினது வகுப்பு மாணவராயிருப்பர். CSIR தேர்வுகளில் எல்லா தேர்வுகளிலும் அவரது வகுப்பிலிருந்து குறைந்தது ஐந்திலிருந்து பத்து மாணவரைத் தேர்ச்சி பெறவைப்பதையே அவர் அவரது வகுப்பினது வெற்றிக்கான அளவுகோலாக வைத்திருந்தாலும், அவரது பட்டறையின் துவக்க காலங்களில் அவரிடம் பயின்றவர்களுள் சிலர் இன்றைக்கு,IIT, மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் போன்றவற்றில் துணைப் பேராசிரியாரகவும், பலர், இந்திய அரசின் ஆய்வுக்கூடங்களில் விஞ்ஞானிகளாகவும், பல தேசிய ஆய்வுக்கூடங்களில் ஆய்வு மாணவர்களாகவும் பணி புரிகின்றனர்.

இன்னும் பத்தாண்டுகளில் தமிழகத்திலிருந்து இந்தியாவின் பல ஆய்வு நிறுவனங்களிலும் ஆராய்ச்சிக் கூடங்களிலும் இணையும் பலர் சத்யாவின் பட்டறையிலிருந்து வந்தவராகயிருப்பர் என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும்

மாணவருக்கும், ஆசிரியருக்குமான இடைவெளி கரைந்து நண்பர்கள் குழுவொன்று அறிவியல் விவாதிப்பது போன்ற சூழலை வகுப்பறையில் கொண்டுவருவார். இதுவே அவரின் பலம் அல்லது அந்த வகுப்பறையின் பலம். இவரது மாணவர்கள் பெரும்பாலும், முதுகலை இயற்பியல் படிப்பவர்களே. இவ்விடுகையப் படித்து உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரைக்கலாம்.

சத்யா என்று உரிமையோடும் நட்போடும் அழைத்தாலும், அவர் இப்போது ஒரு மத்திய பல்கலைக்கழத்தில் மூத்த விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். ஆம் மாணவர்களுடன் நெருங்கிப் பழகுவதற்காகவே கல்பாக்கத்தில் பணியை விட்டுவிட்டு பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.


புகைப்படம்: மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் சத்யா.
(புகைப்படம் outlook அங்கில இதழில் திரு ஆனந்த் அவர்களால் வகுப்பரையிலேயே நேர்முகம் காணப்பட்டு வெளிவந்த கட்டுரையிலிருந்து எடுக்கப் பட்டது.)
அவரது வகுப்பு குறித்து டிசம்பர் 2004ல் "outlook" இதழில் வெளிவந்த கட்டுரையின் சுட்டி கீழே.

http://www.outlookindia.com/article.aspx?226027

சத்யாவைப் பற்றிப் பேச இவ்வொரு இடுகை போதாது. ஒரு ஞாயிற்றுக்கிழமைக் காலையில் உண்டுவிட்டு வெட்டிக்கதை பேசும்போதுதான் சத்யாவைப்பற்றிக் குறிப்பிட்டார் எங்களுக்கு முந்தைய ஆண்டு மாணவரான நண்பர் குருவெங்கட். அன்றிலிருந்து இன்றுவரை ஞாயிற்றுகிழமைகளில் சென்னையிலிருந்தால் சத்யாவின் பட்டறைக்குச் செல்வது என்பது எழுதப்படாத விதியாகவே இருக்கிறது. ஆனால், எல்லா வகுப்பறையிலும் கடைசிபெஞ்ச் மாணவனாகவேயிருந்ததாலோ என்னவோ இந்தப் பட்டறையிலும் கடைசிபெஞ்ச்தான்.

அவரிடம் பயின்ற மாணவரும் எனது நெருங்கிய தோழியுமான ஒருவர் சத்யாவின் தீவிர மாணவியாகி கடும் பயிற்சிக்குப் பின்னர் CSIR தேர்வில் வெற்றிபெற்றுவிட்டு பின்னர் அவரிடம் முடிவைத் தெரிவிக்கும் போது இருவருமே கண்ணீர் மல்க நின்றகாட்சி இன்றும் பசுமையாக இருக்கிறது.

இப்படியான ஒரு உணர்வுப் பூர்வமான தருணத்தை என்னால் உங்களுக்கு வழங்கமுடியாமல் போயிருக்கலாம் சத்யா, ஆனால், ஒவ்வொரு மனிதரது வாழ்க்கையும் அவரவர்க்கு ஒரு கலைக்கூடமெனில், எனது கலைக்கூடத்தின் சுவர்கள் நீங்கள் சத்யா....


25 comments:

மணிநரேன் said...

அருமையான தொகுப்பு இரஞ்சித்.சத்யாவை பற்றி தெரியாத பல விடயங்களை அறிந்துகொள்ள முடிந்தது.
பத்து ஆண்டுகள் ஆகிவிட்டதா? காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது. இனிமையாக கழிந்த ஞாயிறுகளை நினைவுபடுத்தியது பதிவு.

கல்வெட்டு said...

!!!!!!

என்ன ஒரு உழைப்பு !!

பிரதிபலன் பாராமல் உழைக்கிறார் என்றே எண்ணுகிறேன். தன்னிடம் படித்துப் பயன் பெற்றவர்கள் ஏதோ ஒரு வகையில் இலவச கல்விப்பணியை எங்காகிலும் யாருக்காவது தொடரவேண்டும் என்று ஒரு குரு சத்தியம் வாங்கிக் கொள்ளலாம்.

இது போன்ற நல்ல செயல்கள் மல்டிலெவெல் மார்கெட்டிங் போல தொடரவேண்டும் என்பதே இதன் நோக்கம்..

ponnuswamy said...

I learnt about satya class through my senior Ranjith, when we are chating on sundays after breakfast(vadaikari and idly in Anna university mess).
Ranjith advised us to attend these classes even if we don't understand,I did it.
Satya used to request us to call him by his name.This brought us friendly atmosphere rather than teacher-student class room atmosphere.
I think more than 150 students may be pursuing research by the constant encouragement of Satya.
History of tamil nation in the field of science cannot neglect the role of Satya.
He is a good role model for a teacher,good human being and scientist.
venky

Prabhu said...

There are a few people who are pleasure to know and Satya is someone who is up there top in the list. I am someone who is fascinated by this soul for his sheer commitment, hardwork, clarity, presentation and the list just goes on. I sincerely feel it is a few good souls like this which sincerely bear the torch for some good words in the dictionary.
I sincerely congratulate Ranjith for documenting the services of Satya. Now it is "there" written and documented.

கையேடு said...

நன்றி மணி,
நன்றி வெங்கி,
நன்றி பிரபு.

கையேடு said...

//என்ன ஒரு உழைப்பு !!//

உண்மைதாங்க கல்வெட்டு,

சத்யாவின் உழைப்பு நம்பமுடியாதது. பேருந்து பயணத்தின் போதே உறங்கிக் கொண்டு வந்துவிட்டேன் என்று கூறி வந்தவுடனேயே வகுப்பெடுக்கத் துவங்கிவிடும் அவரதுஆர்வமும் உழைப்பும், அர்ப்பணிப்பும் மிகவும் போற்றத்தக்கது.

//இது போன்ற நல்ல செயல்கள் மல்டிலெவெல் மார்கெட்டிங் போல தொடரவேண்டும் என்பதே இதன் நோக்கம்.//

ஆம், தற்போது அவரது மாணவர்களாலேயே விழுப்புரத்தில் ஒரு கிளைபோன்றதொரு அமைப்பை ஏற்படுத்தி மாதத்தில் ஒரு முறை சத்யா அங்கே சென்று வருகிறார், மற்ற நாட்களில் அவரது மாணவர்களில் சிலரே தொடர்கின்றனர்.

மேலும், சென்னையிலும், அவரது வகுப்பின் மாணவர்கள் பலர் ஆய்வுப் பணியோடு சேர்த்து இவ்வகுப்புப் பணிகளையும் கவனித்து வருகின்றனர்.

நிச்சயமாக சத்யா இதனை ஒரு ஆலமரம் போல விரிவாக்குகிறார், அல்லது சத்யா என்ற ஒற்றை மனிதனின் ஆளிமை பலரை அவர்பின் செல்லவும் தூண்டுகிறது.

நன்றிங்க கல்வெட்டு.. :)

saran said...

Thank u ranjith anna . When I first came to Chennai , i was literally down as that was the first time I was away from my parents . When I heard of sathya sirs class , I went their on sundays though i could not understand anything still i used to attand his class . His classes instilled me a sense of satisfaction that i am not wasting my time in chennai . His life itself is a standing example for what hardwork can bring

Thank u for sending the link

கையேடு said...

நன்றிகள் சரண்யா.

பதி said...

அருமையான அனுபவப் பகிர்வு இரஞ்சித் !!!!

நண்பர்களுக்கு அனுப்பிவைக்கின்றேன்..

கையேடு said...

நன்றி பதி..

மின்னுது மின்னல் said...

க்ரேட் சார் !!

ஜோசப் பால்ராஜ் said...

Dear Prof.
அருமையான பதிவு. என்ன ஒரு அர்பணிப்பு சத்யாவிடம். அவரது முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கவை.

அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்களும் அவரது பணியில் இணைந்தால் இந்தப் போட்டித்தேர்வுகளில் நம் மாணவர்கள் பலரும் வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கும்.

அப்பறம் நம்ம கல்லூரியில் படிக்கும் பலருக்கு இந்தமாதிரி சில ஆராய்சி சார்ந்த படிப்புகள் இருப்பது கூட தெரிந்திருக்காமல் இருக்கலாம். நீங்கள் ஊருக்கு செல்லும் போது நம் கல்லூரிக்கு சென்றுவாருங்கள். நான் தனி மடல் அனுப்புறேன்.

தருமி said...

i salute the great man .

RAMYA said...

அருமையான அனுபவப் பகிர்வு!!

திரு.சத்யா அவர்கள் அவரைப்போலவே பல சத்யாக்களை உருவாக்குவார் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

பகிர்வுக்கு நன்றி !!

cheena (சீனா) said...

அன்பின் ரஞ்சித்

உயர்திரு சத்யாவினைப் பற்றிய அழகிய அருமையான அறிமுகக் கட்டுரை. தன்னலம் கருதாது - அனைவர்க்கும் கல்வியினைக் கற்றுக் கொடுக்கும் நல்ல உள்ளம் வாழ்க !

நல்வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்க வேண்டுகிறேன்

பகிர்ந்தமைக்கு நன்றி

கையேடு said...

மின்னுது மின்னல், ரம்யா, தருமி ஐயா மற்றும் சீனா ஐயா.. எல்லோருக்கும் நன்றி.

கையேடு said...

வாங்க பால்,

சத்யாவின் வகுப்பிற்குப் பின் நிச்சயாமாக இத்தேர்வுக்குத் தயார் செய்வோர் மற்றும் தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கை வளர்ந்து கொண்டிருக்கிறது.

மற்றவை மின்னஞ்சலில் பேசலாம்.

Anonymous said...

நல்ல பதிவு. நல்ல பகிர்வு. சத்யா போன்றோர்கள்தான் அணைந்து போகவிருக்கும் நம்பிக்கை விளக்கினை தன்னிரு கைகளால் பொத்திப் பாதுக்காக்கின்றனர். அறியத் தந்தமைக்கு நன்றி.

SurveySan said...

hats off to Satya and thanks to you for highlighting his good deeds.

தவறு said...

கையேடு கையேட்டில் இதுபோன்ற பல நல்ல உள்ளங்களை தங்களது அனுபவ பயணத்தில் வெளிப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

வாழ்த்துகள்

கையேடு said...

திரு.வடகரை வேலன்,
சர்வேசன் மற்றும் தவறு, எல்லோருக்கும் நன்றி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

திரு. சத்யா அவர்களுக்கு ஒரு பெரிய சல்யூட் வைக்கலாம் போலிருக்கிறது.

பகிர்வுக்கு நன்றி.

கையேடு said...

// திரு. சத்யா அவர்களுக்கு ஒரு பெரிய சல்யூட் வைக்கலாம் போலிருக்கிறது.//

நிச்சயமா வைக்கலாம்..

நன்றிங்க அமிர்தவர்ஷினி அம்மா.

Dewdrop said...

Arumaiyaana padhivu.

Thagavalukku nandri.

கையேடு said...

நன்றிங்க "பனித்துளி"..