Friday, December 3, 2010

வேறொரு உயிர்

உயிர் குறித்து தத்துவார்த்தமான, மத ரீதியான, கடவுள் படைத்த மற்றும் அறிவியல் ரீதியான புரிதல்கள் பல உள்ளன.

அறிவியல் ரீதியாக கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், கந்தகம் (சல்பர்) மற்றும் பாஸ்பரஸ் போன்ற தனிமங்களே உயிரின் அடிப்படைக் கட்டுமானப் பொருளாக அறியப்பட்டது. அதில் பாஸ்பரஸ் பெரும்பான்மையான உயிரியின் மரபணுச் செய்திகளை உள்ளடக்கிய டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ ஆகிய வேதிப்பொருட்களின் முதுகெலும்பாகக் கருதப்பட்டு வந்தது. மேலும், பெரும்பான்மையான செல்களின் ஆற்றல் சுமக்கும் மூலக்கூறாகவும், செல் இழைகளில் லிபிட்களாகவும் பாஸ்பரஸ் அடிப்படையிலான மூலக்கூறு செயல்படுகிறது.

வேதி அட்டவனையில், பாஸ்பரஸிற்கு இணையான வேதிப்பண்புகளையுடைய தனிமமாக ஆர்சனிக் கருதப்படுகிறது. ஆனால், ஆர்சனிக் மனிதனுக்கும் மற்ற பெரும்பான்மையான உயிரிகளுக்கும் பெரும் தீங்கு விளைவிக்கக் கூடிய ஒரு தனிமம். அவை உடனடியாக உயிரின் வளர்சிதை மாற்றத்தை (metabolism) பாதிக்கக்கூடிய தனிமமாக கருதப்பட்டது.

பாஸ்பரஸிற்கு இணையான வேதிப் பண்புகளைக் கொண்ட ஆர்சனிக் உயிரிகளுக்கான நச்சுப் பொருளாக இருக்கும் முரண் ஆர்வமூட்டும் செய்தியாகவே இருந்து வந்தது.அதே சமயம், ஒரு சில பாக்டிரியாக்கள் மட்டும் ஆர்சனிக்கை சுவாசிக்கக் கூடிய பண்புகளைக் கொண்டிருந்தன என்பதுவும் அறியப்பட்டிருந்தது.




ஆனால், தற்போது கலிஃபோர்னியாவில் இருக்கும் "MonoLake" என்ற ஏரியில் GFAJ-1 என்ற புதிய நுண்ணுயிரி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது, அவ்வுயிர் பொது பாக்டீரியா வகையைச் சேர்ந்தது என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் அவ்வுயிர், பாஸ்பரஸிற்கு பதிலாக ஆர்சனிக்கைக் கொண்டு கட்டமைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பாஸ்பரஸிற்கு பதிலாக ஆர்சனிக்கை மாற்றுவது என்பது கணக்கீடு அளவிலேயே இருந்தது. முதல் முறையாக ஆய்வு ரீதியாக நிரூபனம் செய்யப்பட்டிருக்கிறது.

கலிஃப்போரினியாவில் இருக்கும் "Mono lake" எனும் ஏரியின் அடியிலே இவ்வகை உயிர் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவ்வேரி நீரில் உள்ள அசாதாரணமான உப்பும், காரத்தன்மையும் கொண்ட வேதியியல் அமைப்பிற்காகவே இவ்வேரியை ஆய்விற்காக தேர்ந்தெடுத்தனர் என்று குறிப்பிடுகின்றனர்.

இவ்வுயிரியை ஆய்வகத்தில் வைத்து, மிகக்குறைந்த பாஸ்பரஸும், அதிக அளவிளான ஆர்சனிக் சூழலையும் உருவாக்கி, அதிக ஆர்சனிக் சூழலில் மட்டுமே இவ்வுயிர் வளர்வதைக் கண்டிருக்கின்றனர்.

மேலும், இவ்வுயிரில் ஆர்சனிக், பாஸ்பரஸை முழுவதுமாக பதிலீடு செய்திருக்கிறதா என்பதை பல்வேறு ஆய்வுக்குழுக்களின் உதவியுடனும் அதியுயர் தொழில்நுட்பங்கள் மூலமும் நிரூபித்திருக்கின்றனர்.

"நமக்கு அருகில் பூமியில் இப்படி எதிர்பாராத ஒன்று நிகழுமாயின், நமக்குப் புலப்படாத அதிசயங்கள் இன்னும் எத்தனையோ இருக்கலாம்" என்று இவ்வாய்வில் முக்கியப்பங்காற்றிய "Felisa Wolfe-Simon" குறிப்பிடுகிறார்.

தகவல் (புகைப்பட) மூலம்:http://science.nasa.gov/science-news/science-at-nasa/2010/02dec_monolake/

மூலக் கட்டுரை: http://www.sciencemag.org/content/early/2010/12/01/science.1197258.full.pdf (ஆர்வமிருப்போர் (kaiyedu@gmail.com) தொடர்புகொண்டால் கட்டுரயை மின்னஞ்சலில் பெறலாம்)

http://gizmodo.com/5704158/ - இவ்விணைப்பில் காணொளி விளக்கமும் உள்ளது - நன்றி பதிவர் கும்மி அவர்களுக்கு.

இவ்வுயிர் குறித்து உரையாட அறிவியல் ரீதியாக விளக்கப்படாத பல கேள்விகள் உள்ளன, எப்படியாயினும் இது ஒரு ஆர்வமூட்டும் துவக்கம் மட்டுமே.

*************************************************************************************


தங்கள் மதப் புத்தகத்திற்கு எதிராக இவ்வாய்வு குறிப்பிடுகிறது அதனால் ஏற்க முடியாது என்று ஜல்லி அடிக்க விரும்புவோர் கீழுள்ள முகவரிக்கு தங்களது அய்யங்களை எழுதி தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

dr.tony.phillips@earthlink.net - நாசா கட்டுரையின் தொகுப்பாசிரியர்
felisawolfesimon@gmail.com - ஆய்வுக் கட்டுரையின் தொடர்பாசிரியர்.

26 comments:

உமர் | Umar said...

இந்தச் சுட்டியில் வீடியோவும் இணைத்துள்ளனர்.

கையேடு said...

நன்றிங்க கும்மி..
இடுகையில் சேர்த்து விடுகிறேன்.

Thekkikattan|தெகா said...

அதிசியமான உண்மை! நேற்றிலிருந்து astrobiologyலைன்ல இருக்கிற மக்களுக்கு செம தீணி. நம் வாழும் பூமியிலேயே நமக்கு இணையாக வெளி கிரகத்தில் இருந்து வந்து வாழும் ஓர் உயிர் போன்று இந்த பாக்டீரியம் பூமி உயிரினங்களுக்கு எதிர் முனையிலிருந்து தன்னோட பொழப்ப நடத்திக்கிட்டு இருக்கின்னா, வாவ்!

எனக்கு 99% வேற்று பூமியொத்த கிரகங்களில் உயிரினங்கள் இருக்க அனேக வாய்ப்பிருக்கிறது என்று நம்புகிறேன், நம்புகிறேன்... :)

ஆனா, போயி பார்த்திட்டோம் எல்லாம் தலை கீழா மாறிப் போயிடும் ;)

http://thavaru.blogspot.com/ said...

புதிய தகவல் கையேடு.மேலும் இதுபோன்ற புதிய செய்திகளை கையேட்டில் எதிர்பார்க்கிறோம்.

தருமி said...

கொஞ்சம் புரிந்தது

கையேடு said...

உண்மைதாங்க தெகா.. மிகவும் ஆர்வமூட்டும் ஒரு செய்திதான் இது. வேற்றுகிரக உயிர் குறித்த நிகழ்தகவு சுழியாகும் என்று யார்தான் கூறமுடியும்.. :)

நன்றிங்க தவறு..

நன்றிங்க தருமி.. எனக்கும் கொஞ்சம்தான் புரிஞ்சது.

Thekkikattan|தெகா said...

இதில என்ன தருமியிம், கையேடும் எனக்கும் கொஞ்சமே புரிஞ்சிருக்கின்னு சொல்லிக்கிறியள்.

//மேலும் அவ்வுயிர், பாஸ்பரஸிற்கு பதிலாக ஆர்சனிக்கைக் கொண்டு கட்டமைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.//

அதன்படி பூமியில் அறியப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் பாஸ்பரஸிற்கான மூலக்கூறுகளைக் கொண்டே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனா, இந்தப் புது பாக்டீரியம் நம் வேதிய அட்டவனைக்கு தாண்டிய, மற்ற உயிரினங்களுக்கு நச்சாகவும், வளர்சிதை மாற்றத்தை உடனே இழைத்து தருவதுமாகிய ஆர்சனிக்கின் மூலக்கூறுகளை அடிப்படையாக கொண்டே இந்தப் பக்டீரியம் உயிரித் தன்மையை எட்டியிருப்பதால், ஆஸ்ட்ரோபயோலஜிகளின் நீண்ட நாள் கூற்றான - ஏனைய கிரகங்களில் கிடைக்கும் சூழலைக் கொண்டு உயிரினங்கள் கட்டமைக்கப்பட்டிருக்கலாம் என்ற hypothesis இங்கு பூமியிலேயே இப்படி ஒரு எதிர் முனையில் அமைந்த பாக்டீரியத்தை கண்டறிந்ததின் மூலமாக மென்மேலும் ஊர்ஜிதப் படுத்திக் கொள்கிறார்கள்.

அந்த கருதுகோளின் படி பல பில்லியன் சூரியன்களைச் சுற்றி எத்தனை எத்தனையோ கிரகங்கள் சுத்தி வருகின்றன அவைகளில் இது போன்ற, எந்த வகையான வேதிய சூழல்களைக் கொண்டும் உயிரினங்கள் வாழ வகையுள்ளது என்று கூறி எக்கச் சக்க குதியா குதிக்கிறாங்க.

Make sense!?

கையேடு said...

//எந்த வகையான வேதிய சூழல்களைக் கொண்டும் உயிரினங்கள் வாழ வகையுள்ளது என்று கூறி எக்கச் சக்க குதியா குதிக்கிறாங்க. //

உயிர் என்பதன் அடிப்படை வரையறையை மாற்றிக் கொள்ளாமல்,

1.வேறு எந்தெந்த தனிமங்கள் இப்படியான அமைப்பைப் பெறும் சாத்தியம் கொண்டுள்ளன?

2. வேறு எவ்வகையான அமைப்பு உயிருக்கான வரையறையை பூர்த்தி செய்யும் சாத்தியம் கொண்டுள்ளது?

இவ்விரண்டு கேள்விகளுக்கும் தெளிவான விடை தெரியாத வரை, எந்தச் சூழலிலும் எதனைக்கொண்டும் உயிர் உருவாகலாம் அல்லது உருவாகியிருக்கலாம் என்பது அதீதமான அனுமானமாகவே தோன்றுகிறது.

ஏனெனில், உயிரற்ற எண்ணிலடங்கா கரிம வேதிப் பொருட்கள் கார்பனைக் கொண்டு உருவாவது போல, அதன் மிக நெருங்கிய தனிமமான சிலிகானைக் கொண்டு பதிலீடோ அல்லது அதைப்போலவோ உருவாக்க செய்யப்பட்ட முயற்சிகள் பெரும் தோல்வியைச் சந்தித்த கதையெல்லாம் உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

வருண் said...

I could download this article from science express! Thanks, Ranjith. I will check it out!

Thekkikattan|தெகா said...
This comment has been removed by the author.
Thekkikattan|தெகா said...

:-) ரொம்ப ஆழமா போயிருக்கீக. உயிர் கட்டுமான பொருட்கள் அங்கே கிடைக்கும் கனிமங்களைக் கொண்டே. அன்மையில் ஒரு விசயம் கேள்விப்பட்டேன் ஒரு பாறையில் 4500 விதமான வேதிய தனிமங்கள்(?!) இருப்பதாக அதனை உள்ளடக்கியதே நமது உடம்பில் உள்ள கட்டுமான வஸ்துகளும்மென...

ஹ்ம்ம்ம் நல்ல கேள்வியாத்தான் கேட்டுருக்கீங்க. இயற்கையின் சித்துல எப்படி கோணமானால விளையாண்டு வைச்சிருக்கும்னு புடிபடலையே ;-)

ஆனா, யோசிக்க நல்லாருக்கு - சிலிகானைக் கொண்டு உயிரின கட்டுமானம் பண்ணி எழுதப்பட்ட நாவல் ஏதாவது இருக்கா?

உமர் | Umar said...

@தெகா

நெஜம்மாவே தெரியாமதான் கேட்குறீங்களா? ம்ஹூம் நான் நம்பமாட்டேன்.

சுட்ட களிமண்ணிலிருந்து மனிதனை படைத்ததாக கூறப்பட்டுள்ளது. அதிலும், சில வசனங்களில், மண் என்றும் கூட கூறப்பட்டுள்ளது. சிலிக்கானில் இருந்து உருவாக்கப்பட்டிருந்தால், மனித உடலில் கார்பன் மிகுதியாக இருப்பது ஏன் என்று கேள்வி கேட்டால், காதில் விழாதது போல் சென்று விடுவார்கள்.

இப்பொழுது, வேதி அட்டவனையில் பாஸ்பரஸிற்கு இணையான வேதிப்பண்புகளையுடைய ஆர்செனிக், பாஸ்பரசிற்கு இணையான செயல்களை செய்திருப்பது தெரிந்ததும், கார்பனின் தன்மைகளை விடுத்து அங்கே சிலிக்கானை வைக்க முடியும் என்று கூறினாலும் கூறுவார்கள். இதை 1400 வருடங்களுக்கு முன்னரே எங்கள் வேதபுத்தகத்தின் மூலம் சொல்லப்பட்டுள்ளது என்றும் கூறி முடிப்பார்கள்.

ஊரு ஒலகத்துல பத்து பதினஞ்சி டயலாக் படிச்சிட்டெல்லாம் எல்லாரும் நிம்மதியா இருக்காங்க. இந்த ஒரு டயலாக படிச்சிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே ... அய்ய்யோ!

உமர் | Umar said...

@தெகா

//சிலிகானைக் கொண்டு உயிரின கட்டுமானம் பண்ணி எழுதப்பட்ட நாவல் ஏதாவது இருக்கா//

நீங்கள் கேட்ட இந்த கேள்விக்கான பின்னூட்டம்தான் மேலே உள்ளது. முந்திய பின்னூட்டத்தில் ஒட்ட மறந்துவிட்டேன்.

கையேடு said...

நன்றிங்க வருண், படிச்சுட்டு உங்க பார்வையையும் எழுதுங்க..

உண்மைதாங்க தெகா.. இயற்கையின் விளையாட்டில் இன்னும் எத்தனை அதிசயங்கள் இருக்கப் போகுதோ.

நாவல் வாசிக்கிற பழக்கமெல்லாம் ரொம்ப இல்லங்க.. அதனால தெரியலை யாராவது இப்படி எழுதியிருக்காங்களான்னு.

நன்றிங்க கும்மி.. ;)

தருமி said...

நன்றி தெக்ஸ்

//சிலிகானைக் கொண்டு உயிரின கட்டுமானம் பண்ணி எழுதப்பட்ட நாவல் ஏதாவது இருக்கா? //

ரொம்ம்ம்ம்ம்ப வருஷத்துக்கு முந்தி ஒரு கார்ட்டூனில் நீங்கள் கேட்ட மாதிரி ஒரு படம் பார்த்தேன். ஒரு உயிரி 'அமோனியா .. அமோனியா' என்று தவியாய் தவித்துக் கொண்டு ஒரு பாலவனத்தில் மனிதன் 'தண்ணீர் தண்ணீர்' என்று போவது போல் போகும்

நானும் SETI-ல் ஏதாவது புது செய்தி வந்திராதான்னு பார்த்துக்கிட்டே இருக்கேன்.

தருமி said...

கால்நூற்றாண்டுக்கு முன் ஒரு கதை. ரொம்ப நல்லா இருந்திச்சி. ரேடியோ அலைகள் மூலம் அழிந்து போகும் நிலையில் உள்ள ஓர் உயிரினம் சில செய்திகள் அனுப்பும். ஒரு படமும் வரும். கிறித்துவர்களின் சம்மனசாக அது உருவகப்படுத்தப் படும். ரொம்ப நல்ல கதை. அதை ஒட்டி இன்னொரு நூலில் எப்படி வேறு கிரகத்தில் உயிரினங்கள் இருக்க முடியுமென்றும் ஒரு விஞ்ஞான் நூல் வாசித்தேன்.அன்றிலிருந்து seti மேல் ஒரு லவ்ஸ்!

கையேடு said...

//நானும் SETI-ல் ஏதாவது புது செய்தி வந்திராதான்னு பார்த்துக்கிட்டே இருக்கேன்.//
உண்மைதாங்க.. எப்போதான் நடக்கும்னு ஒரு ஆவல் இருக்கத்தான் செய்யுது.

Thekkikattan|தெகா said...

கையேடு உங்க கட்டுரை வாசிச்சிட்டு மறுமொழி செஞ்சிட்டு இருக்கும் போதே எனக்குத் தோணிச்சு தனியா பேசாம ஒரு பதிவு போட்டுருவோமான்னு. போட்டுட்டேன். நேத்தே. தெரிஞ்சிக்கிட்டீங்க பை எனி ச்சான்ஸ்?

அங்க உங்களுக்கும் ஓர் இணைப்பு கொடுத்து மக்கள் வெள்ளத்தை உங்க வீட்டுக்கு அனுப்பி வைச்சிருப்பேனே ;-)...

நம்ம சுட்டி இந்தாங்க பூமி பாக்டீரியம் சொல்கிறது வேற்றுக் கிரகத்தில் உயிர் : GFAJ-1

Thekkikattan|தெகா said...

நெஜம்மாவே தெரியாமதான் கேட்குறீங்களா? ம்ஹூம் நான் நம்பமாட்டேன்.

சுட்ட களிமண்ணிலிருந்து மனிதனை படைத்ததாக கூறப்பட்டுள்ளது. //

அட! கும்மி நான் அந்தக் கதையையா தெரியாதுன்னு சொன்னேன் :). நான் கேட்டது science fictionஅ பொருத்தளவில ...புரிஞ்சிதோ!

கையேடு said...

நன்றிங்க தெகா.

Anonymous said...

இதையும் பாருங்கள் கையேடு. தெளிவு கிடைக்கலாம்
http://procrustes.blogtownhall.com/2010/12/02/alien_life.thtml>ALIEN LIFE?
(The Darwinian prediction has failed yet again.)
by
Raja

Anonymous said...

இதையும் பாருங்கள் கையேடு. தெளிவு கிடைக்கலாம்
ALIEN LIFE?

கையேடு said...

சுட்டிக்கு நன்றிங்க ராஜா,

நீங்கள் அளித்த சுட்டியை வாசித்தேன்.

பொதுவாக ஒரு மூலக்கூறிலோ அல்லது திடப்பொருளிலோ ஓரணுவிற்கு பதிலாக மற்றொன்றைப் பதிலீடு செய்வது என்பது பலவாண்டுகளாக நடைபெற்றுவரும் ஒரு நிகழ்வுதான். அப்படி பதிலீடு செய்யும் போது முதலில் கணக்கில் கொள்வது அவ்வயனியின் ஆரமும், மின்சுமைப் பண்புகளும்தான். அந்த வகையில் நீங்கள் அளித்த சுட்டியில் வைத்திருக்கும் ஆயனிஆரம் குறித்த குற்றச் சாட்டு வலுவற்றது.

ஏனெனில் ஆதாரக் கட்டுரையில் ஆர்சனிக்கிற்கும் அதன் அருகிலிருக்கும் அயனிகளுக்கும் இடையே உள்ள பிணைப்பு தூரங்கள் கணக்கிடப்பட்டிருக்கின்றன. மேலும் ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸின் விகிதங்களும் ஆய்வு ரீதியாக கணக்கிடப் பட்டிருக்கிறது அந்த அடிப்படையில் //And if you hit that change of gauge at 30 mph, there's going to be a train wreck. None of the critical DNA machinery is going to like swapping out even one phosphorus atom, much less all of them!//
மேலேயுள்ள குற்றச்சாட்டு ஆதாரமற்றது. மேலும் அந்தச் சுட்டியில் அவர்கள் குறிப்பிடும் அயனி ஆர ஒப்பீடானது தவறானது, முழுமையான ஒப்பிடல்ல.

அந்தச் சுட்டியில் இருக்கும் கட்டுரை, வேற்றுகிரக உயிர் மற்றும் டார்வினிசம் இரண்டையும் பிரதானக் குற்றச் சாட்டாக வைக்கிறது.

உண்மை என்னவெனில், இவை இரண்டைப் பற்றியும் அறிவியல் கட்டுரை பேசவேயில்லை. அதனால் அந்தச்சுட்டியில் இருக்கும் கட்டுரை, எங்கே டார்வினிசம் வலுப்பெற்றுவிடுமோ என்ற அச்சத்துடனும், பதட்டத்துடனும்தான் எழுதப்பட்டிருக்கிறது.

வேற்றுகிரக உயிர் என்பது குறித்த நாசவின் குறிப்பு மிகவும் நாசூக்காக நமது புரிதலை மாற்றியமைத்துக்கொள்ளவேண்டும் என்றே குறிப்பிடுகிறது. ஆனால், நீங்கள் அளித்த சுட்டியில் இருக்கும் விமர்சனக் கட்டுரை இதையே வேற்றுகிரக உயிர் என்று நாசா அறிவித்ததைப் போல இவ்வாய்வின், முடிவுகளை அனுகியிருக்கிறது.

நிற்க..

இதுவரை உயிர் என்ற ஒன்றிற்கான அடிப்படைக் கட்டுமானப் பொருளாக நாம் கருதியிருந்தவை ஒன்று, ஆனால் தற்போது பெரும்பான்மையான உயிரியின் எதிரியாகக் கருதப்பட்ட ஒரு தனிமம் தற்போது ஒரு உயிரின் அடிப்படைக் கட்டுமானப் பொருளாக இருக்கிறது என்ற ஒரு செய்தியே இக்கண்டுபிடிப்பைக் கொண்டாடுவதற்கும் அது குறித்து ஆர்வமைடைவதற்கும் போதுமானதாக இருக்கிறது.

இது டார்வினிஸத்தை பொய்யாக்குகிறது, என்பது எங்கே டார்வினிசம் மேலும் மேலும் வலுப்பட்டுவிடுமோ என்ற அவசரத்திலும், பதட்டத்திலும் முன்வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டேயன்றி வேறில்லை.


வேற்றுகிரக உயிர் பற்றிய குறிப்பு வெகுசன மக்களைக் கவரும் நாசாவின் ஒரு வியாபாரத் தந்திரமாகவே பார்க்கிறேன். ( இது எனது தனிப்பட்ட கருத்து).

கையேடு said...

நண்பர் ராஜா அளித்த அதே சுட்டியை அளித்த அனானி நண்பருக்கு - நண்பர் ராஜாவிற்கு அளித்த பதிலுரையே உங்களுக்குமானதாகக் கொள்ளவும்.

yasir said...

கையேட்டுத் தோழர்,

வணக்கம் இப்பொழுதுதான் பதிவை பார்வையிட்டேன் அருமை. நான் கற்றுக் கொள்ள இன்னும் வலைகளை விரிக்கவேண்டியுள்ளது. விரித்த வரையில் தங்களைப்போல் விரிவடையும் அறிவியல் தளங்களும்,அறிவியல் தாங்கிய‌ மதபழைமைவாத தளங்களையும் பார்வையிட நேர்ந்தது. சுய அறிவோடு பகுத்து அறிவு வளர அறிவியலே துணையிருக்கும் என்பதை கற்றுக்கொண்டவைகளிலிருந்து பெற்றுக்கொண்டேன். சரிதானே?

கையேடு said...

நன்றிங்க யாசிர்..
தேடல் எல்லா தளங்களிலும் இருக்க வேண்டியதுதான். தேடலைத் தவிர வேறு எது நமக்கு அறிவூட்ட முடியும். :)