Thursday, January 27, 2011

ஞான போண்டா

இந்தப் புனைவைப் படிக்கனும்னா ஒரு நிபந்தனை.

இதைப் படிக்கும் போது தமிழின் ஆகச் சிறந்த நவீன இலக்கியவாதிகள் யாரையும் மனசுல நினைச்சுகாம படிக்கணும்.. என்ன சரியா?

*****************************************************************************

நிலைகொல்லாமல் வாசலுக்கும் அடுக்களைக்கும் நடந்து கிட்டே ,
"எங்க நம்ம எடுப்பை இன்னும் காணும்?" னு ஒரே கலக்கத்தில் இருந்தாரு நம்ம "போண்டா" மோகன். தூரத்துல வர்ற எடுப்பைப் பார்த்ததும்தான் கொஞ்சம் நிம்மதியானார்.

என்னடா இவ்வளவு நேரம் வர்றதுக்கு, வர வர உனக்கு நம்ம போண்டாவோட மகிமை தெரியாம போயிருச்சு.. ம்ம்ம்.

அப்படி எல்லாம் இல்லீங்க... பசிக்கு சோறு தின்னுட்டு வந்தேங்க.

சரி சரி வா, நான் கூட எங்க வேற கடைக்கு போயிட்டியோன்னு நினைச்சேன். அதென்னடா பசிச்சா நேரா இங்க வரவேண்டியதான, போண்டா சாப்பிட அத விட்டுட்டு எங்கயோ போயி சாப்டுட்டு வர்றேன்ற.

இல்லங்க வீட்டுலதான் சோறு சாப்டுட்டு வர்றேன். (மனதிற்குள்: ம்ம்க்கும், சும்மாவே உன் போண்டாவை வாயில வக்க முடியாது இதுல பசிக்கிற நேரத்துல வேறயா)

அதெப்படிங்க வேற எடத்துக்குப் போவேன், அதெல்லாம் பேசுன பேரத்துல கரெக்டா இருப்பேங்க . பல சரக்கு வியாபாரிங்ககிட்ட நீங்க என்னையப் பத்தி பெருசா சொல்றேன்னு சொல்லிருக்கீங்க அப்படி இருக்கும் போது வேற இடத்துக்கு போவனா நானு.

சரி அதெல்லாம் இருக்கட்டும்..அப்புறம் வீட்ல, ஊர்ல ஏதாவது விசேசம்னா நம்ம தலைமைல ஏற்பாடு பண்ணு, அப்பதான் "பாருடா போண்டா மோகனே நேர்ல வந்திருக்காருன்னு" உன்னையும் நாலு பேரு மதிப்பான், நம்ம போண்டாவும் நல்லா விக்கும். என்ன புரிஞ்சிதா..??

ம்ம். சரிங்க.. (மனதிற்குள்: ம்ம்க்கும் நீங்க ஒழுங்கா போண்டா போட்டா தானா வித்துட்டு போவுது)

இன்னிக்கு போண்டாவுல என்னங்க புதுசா செஞ்சிருக்கீங்க?

அப்படிக் கேளு இன்னிக்கு நம்ம கடைல ஒரு புது போண்டா போட்ருக்கேன்..

எப்படிங்க நீங்க மட்டும் தினம் ஒரு புது போண்டா போட்றீங்க?

அதெல்லாம் வியாபார இரகசியம், உனக்கு இப்போ புரியாது.

(.. ம்ம்க்கும் இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை) முந்தா நேத்து போட்ட போண்டாவுக்கும் இப்படித்தான் புதுசுன்னு சொன்னீங்க.

டேய் முந்தாநாள் போண்டாவில வெங்காயத்தை சிறுசா நறுக்கிப் போட்ருந்த்தேன்..

அப்போ நேத்து போட்டதுல?

நேத்தைக்கு முந்தா நேத்து போட்டதைவிட வெங்காயம் இன்னும் பொடியா நறுக்கி போட்ருந்தேன்.

அப்போ இன்னைக்கு?

வெங்காயமே போடலை. அதான் இதோட சிறப்பு.

அட என்னங்க நீங்க.. ஏன் போடலை?

அடேய் அந்த வெங்காயக்காரன் நம்ம பலசரக்கு முதலாளி பேச்சைக் கேட்க மாட்டேங்கிறானாம், முதலாளி பயந்து போயி கெடக்காரு, அதான் அவரை சமாதானம் படுத்த வெங்காயமே போட்றதில்லைன்னு வாக்கு குடுத்துட்டேன்.

( ..ம்ம்ம் அதான் நேத்தேலேருந்து அவரப் பத்தி இல்லாததும் பொல்லாததுமா சொல்லிகிட்டிருந்தீங்களா...) சரிங்க.. இந்த போண்டாவுக்கு என்ன பேரு வெச்சிருக்கீங்க?

அப்படிக் கேளு.. இந்தப் போண்டாவை செய்யறதுக்காக நான் பக்கத்து ஊருல இருக்கிற பல பாட்டிகள்கிட்ட போயி சூடு பட்டிருக்கேன், அதோட பல ஊருகளுக்குப் போயி ஊசுனப் போண்டா, நூலான போண்டான்னு பல குப்பைத்தொட்டியையும், தேடி துழாவி பின்னர் இதன் சூத்திரத்தைக் கண்டுபிடிச்சு செஞ்சிருக்கேன்.

(மனதிற்குள்: ம்ம்.. வெளியூரு பாட்டி போண்டா செஞ்சதை ஒளிஞ்சிருந்து பாத்து உள்ளூரில வியாபாரம் பண்றீங்க.. அதானே)

என்னடா அமைதியா இருக்கே?

ஒன்னும் இல்லீங்க நீங்க போண்டா பேரச் சொல்லுங்க.

அப்படிக் கேளு பல ஊருல தேடிப்போயி அறிஞ்சுகிட்டு செஞ்சதனால இதற்கு பெயர்.. "ஞான போண்டா"

அட!!.. பேரே அமர்க்களமா இருக்கு.. அப்படி என்னங்க சிறப்பு இந்த போண்டாவில.

இந்த போண்டாவைச் சாப்பிடாட்டி நீ ஞான சூன்யமாவே இருப்ப.

எப்படிங்கய்யா நேத்துதான் தெருமுக்குக் கடையிலயும் புதுசா போண்டா ஒன்னு போட்டாங்களாம் நீங்களும் இன்னிக்குப் புதுசா ஒன்னு போட்ருக்கீங்க.

அட அந்தக் "காம போண்டா" வைத்தானே சொல்ற, அதெப்படிடா போட்டிக்கடைக்காரனோட ஒவ்வொரு அசைவையும் பாத்துதானே நாமளும் புதுசு புதுசா செய்யிறோம். ஆமா இது நீ கேள்விப் பட்டதானே அந்தக் கடை பக்கம் ஒன்னும் போயி சாப்ட்டுபாத்திடலயே..

இல்லங்கய்யா.. அதெல்லாம் இல்லை கேள்விப்பட்டதுதான். ஆமாங்கய்யா ஒரு வினை பிடிச்ச ஆளு நீங்கள் யாரோ ஒரு அம்மா சுட்ட போண்டாவைத்தான் உங்களோடதுன்னு விக்கிறீங்கன்னு சொல்லிக்கிட்டிருக்காரே ஊரு முழுக்க.

அதையெல்லாம் நாம பெரிசு படுத்தக் கூடாதுடா.. அப்படி வினையான யாராவது ரொம்ப பெரிசு படுத்தினா அவருக்கு தொகையா ஏதாவது குடுத்து சரிக்கட்ட முடியுதான்னு பாருங்கடா.. இல்லன்னா அவனப்பத்தி கன்னபின்னான்னு ஏதாவது எழுதுங்க, நம்ம கடைக்கு வர்றவுங்களுக்கு விநியோகம் பண்ணுவோம்.

( ம்ம்க்கும்.. உங்களுக்கு நேர்ல பேச திராணியில்லாதப்ப எல்லாம் நாங்கதான் சிக்குனமா) சரிங்கய்யா இந்த ஞான போண்டாவை வெச்சி என்ன பண்றது. பக்கத்து தெருவுல பசியோட இருக்குற பள்ளிக்கூட புள்ளங்களுக்கு ஏதாவது போடலாமா.

அடப் போடா.. இந்த ஞான போண்டாவை வெச்சி, செய்முறை, பயிற்சி வகுப்புன்னு நாம ஒரு போண்டா இரசிகக்கூட்டத்தையே உருவாக்குறோம். அப்படியே ஞான போண்டா பேரில ஒரு "ஞான போண்டா உரையாடல் குழுமம்னு" ஒன்னு ஆரம்பிச்சு அப்படியே டெவலப் பண்றோம். புரியுதா.. அத விட்டுட்டு பக்கத்து ஊருல சாப்பாடு போட்றதுக்கா போண்டா கடை நடத்துறேன்.

நீங்க போற இடத்துலயெல்லாம், ஞான போண்டாவைப் பத்தி நல்ல விதமா பேசணும், இந்தப் போண்டாவைச் சாப்பிடாதவன் ஞான சூன்யம்னு தொடர்ந்து சொல்லனும். அதோட மத்தக் கடை போண்டாவையெல்லாம் மட்டமா சொல்லணும்டா அதுதான் ரொம்ப முக்கியம். கொதிக்கிற எண்ணெயில விழுந்த போண்டா மாதிரி துள்ளி வேலை பார்க்கணும் புரியுதா..? அப்பதான் பலசரக்கு கடை முதலாளி நம்மள நல்லா கவனிச்சிப்பாரு.. என்ன புரியுதா..?

சரிங்கய்யா.. ( ம்ம்க்கும்.. தினம் ஏதாவது புது போண்டான்னு சொல்லி தின்னுட்டு வாந்தியெடுக்கறதே வேலையாப் போச்சு இந்தாளுக்கு)
******************************************************************************

2 comments:

கல்வெட்டு said...

ம்ம்... இது "பொந்து ஞான மரபு போண்டா" பற்றியதா?‌

கையேடு said...

வாங்க கல்வெட்டு,

பொதுவா.. கோஷ்டிகளையும், இரசிக மனோபாவத்தையும் ஊட்டி வளர்க்கும் அறிவுசார் சமூகத்தைப் பற்றியது.

இவர்களது எழுத்து வியாபாரத்திற்கும்.. சாலையில் போட்டிபோட்டு பண்டம் விற்பவருக்கும் எந்த வேறுபாடும் காணமுடிவதில்லை. அதனால ஒரு கடுப்புல எழுதினது.. :)