Monday, June 27, 2011

சமச்சீர் கல்வி - 2011




சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து பலரும் பேசியாகிவிட்டது நாம் என்ன புதிதாகச் சொல்லப் போகிறோம் என்ற எண்ணமும், எல்லாவற்றைப் பற்றியும் ஏதாவது சொல்லித்தான் ஆகவேண்டுமா என்ற அயர்ச்சியும் இருந்தாலும், மனதில் தோன்றிவிட்டது எங்காவது இறக்கி வைத்து விடலாம் என்பதால் சமச்சீர்கல்வி குறித்து இங்கே சில குறிப்புகளும் எண்ணங்களும்.

சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட, பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தின் மென்பதிப்பு பார்வைக்குக் கிடைத்தது.

புத்தகத்தின் உள்ளடக்கத்தில் சில புதியவை சேர்க்கப்பட்டுள்ளன. பழைய பாடத்திட்டத்திற்கும் இதன் உள்ளடக்கத்திற்கும் பெரிய அளவில் மாற்றமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

ஆனால், அவை விளக்கப்பட்டுள்ள முறை நிச்சயமாக பாராட்டத்தக்க வகையிலேயே இருந்தது. பாடத்தின் பின்னிருக்கும், பயிற்சி மற்றும் கேள்விகள் மிகச் சிறப்பாக கவனத்துடன் கையாளப்பட்டுள்ளன. வழக்கமாக புத்தகத்தை திறந்தவுடன் எந்திரவியலோ அல்லது அளவீடுகள் என்று வறட்டுத்தன்மையோடு துவங்கும் ஆனால் இப்புத்தகம் பரிணாம உயிரியலுடன் உயிர்ப்புடன் துவங்குகிறது.. :)

பயிற்சிக் கேள்விகள் மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கேள்விகள் மாணவரின் மனனத்திறமையையும், மீதமிருக்கும் கேள்விகள் மாணவரின் புரிதலை வெளிப்படுத்தும் விதமாகவும், சில கேள்விகள் பள்ளிக்கு வெளியே உள்ள சூழலில் மாணவர்களின் அவதானத்தையும், அதை பாடத்துடன் தொடர்புபடுத்தி அறிந்து கொள்ளும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இதில் குறிப்பிட்டு கூறவேண்டியது அதே துறையில் சமகாலத்தில் என்னென்ன மாற்றங்கள் நடைபெற்றுவருகின்றன என்ற குறிப்புகளும் ஆங்காங்கே வழங்கப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில் மிகவும் பாராட்டத்தக்க வகையிலே இருந்தது இம்மாற்றம். ஆங்காங்கே சில அச்சுப் பிழைகளும், முழுமையின்மையும் இருக்கலாம், ஆனால் அவை இக்கல்வித்திட்டத்தையே புறக்கணிக்கும் அளவில் இல்லை. அப்படியே இருந்தாலும், அவை வடிவமைப்பு மற்றும் அச்சுப்பணியின் கோளாறேயன்றி கல்வித்திட்டத்தின் கோளாறல்ல.

இக்கல்வித்திட்டம் நிச்சயம் மாணவர்களுக்கு ஒரு புதிய கல்வியனுபவத்தை வழங்கும் மாற்றுக்கருத்தில்லை, ஆனால், பாடங்களுக்குப் பின் இருக்கும் பயிற்சிக் கேள்விகளை முறையாக அதன் சாரம் குறையாமல் ஆசிரியர்கள் முன்னெடுத்துச் செல்வார்களா என்பதுதான் அய்யத்திற்குரியது.

இக்கல்வித்திட்டம் கண்டிப்பாக மாணவ-ஆசிரிய கூட்டுழைப்பை வேண்டி நிற்கிறது. மாணவர்களைப் பொருத்தவரை இவ்வகையான கல்வித்திட்டத்திற்கு அவர்கள் தயாராக இருப்பார்கள் என்று இப்பயிற்சியை வைத்து நான் உரையாடிய சில மாணவர்களின் ஆர்வத்திலிருந்து தெரிகிறது. ஆசிரியர்கள் தங்களை முழுமையாகத் தயார் நிலையில் வைத்திருக்கிறார்களா என்பது கேள்விக்குரியது.

தொடர்ந்து நோட்ஸ் வியாபாரம் செய்யும் ஆசிரியர்கள், நகல் எடுக்கும் எந்திரம் போல இதுவரை உள்ள கல்வித்திட்டத்திற்காக பயிற்று முறை தயாரித்து வைத்திருந்த நாமக்கல் வகையறா தனியார்க் கல்விநிறுவனங்கள், வினா-வங்கிப் பதிப்பகங்கள், உயர்ந்த கல்விமுறை என்ற கற்பிதத்தில் வாழ்க்கை நடத்திய மெட்ரிக் பள்ளிகள் போன்ற கூட்டு வியாபாரிகள் இக்கல்வித்திட்டத்தை எதிர்ப்பதில் இருக்கும் நோக்கத்தை எளிதாகப் புரிந்து கொள்ளமுடிகிறது.

இதுவன்றி இதனைத் தடைசெய்வதற்குப் பின்னிருக்கும் அரசியல் அனைவருக்கும் தெரிந்ததுதான் அதுகுறித்துப் பேச ஒன்றுமில்லை.

இணையத்தில் நான் வாசித்தவரை கால்புள்ளி இல்லை, அரைப்புள்ளி என்று அச்சுப்பிழைகள், இலக்கணப் பிழைகள் குறித்து பகுதி பகுதியாகவும், தரமில்லை என்று மேம்போக்கான குற்றச் சாட்டுகளும், மற்ற அரசியல் காரணங்களும் மட்டுமே சொல்லப்படுகின்றன, யாரும் காத்திரமான உரையாடலையோ அல்லது புறக்கணிக்க வலுவான காரணங்களோ முன்வைத்ததாகத் தெரியவில்லை.

எந்தக் கல்வித்திட்டமாகவும், எந்தப்பதிப்பகத்தைச் சேர்ந்ததாகவும் இருக்கட்டும், தமிழகத்தில் பிழையற்ற (அச்சு, இலக்கணம், தகவல், தவறான விளக்கம், ஆங்கிலம்/தமிழ்) ஒரு கல்விசார் புத்தகத்தை யாராவது பரிந்துரைத்தால் நன்றியுடவனாவேன்.

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தைப் பொறுத்தவரை சமச்சீர் கல்வித் திட்டம், பயிற்று முறை, வாசிப்பு, அவதானம் மற்றும் பொருத்திப் பார்த்து அறிந்துகொள்ளுதல் என அனைத்திலும், ஆசிரியர் - மாணவரின் கூட்டுழைப்பை வேண்டி நிற்கிறது.

இக்கல்வித்திட்டதினை தடை செய்வதற்கு என்னால் கீழ்வரும் ஒரேயொரு காரணத்தைப் புரிந்து ஏற்றுக் கொள்ளமுடிகிறது.

"பெரும்பான்மை ஆசிரியர்கள் இதனைக் கையாள போதுமான பயிற்சியும் வாசிப்பும் இல்லாமல் இருக்கிறார்கள். ஆசிரியர்களை முறையாகப் பயிற்றுவித்தபின் இதனை அறிமுகப்படுத்தலாம்."



Tuesday, June 21, 2011

உலோகம் - ஜெயமோகன்

நண்பர் ஒருவர் மூலம், ஜெயமோகனின் உலோகம் புத்தகம் வாசிக்கக் கிடைத்தது.

இதுவரை ஜெ.மோவின் இலக்கியப் படைப்பு எதையும் வாசித்தது கிடையாது. ஆனால் அவரது இணைய எழுத்துக்களில் பெரும்பான்மையை வாசிப்பதுண்டு.

பெரும்பாலும், சுயதம்பட்டம், மற்றவரைப் பற்றிய அக்கப்போர் வகை எழுத்து, இலைமறை காயாக அடிப்படை வாத சிந்தனைகளை முன்வைப்பது, இது தவிர இணையத்தில் அவர் ஏதாவது எழுதியிருந்தால் அதை தவறவிட்டது என் தவறுதான். இதனாலேயே அவரது நாவல்களில் ஒன்றை வாசித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் நெடுநாட்களாக இருந்து வந்தது.

அவரது இணைய எழுத்தில் இருந்த வசீகரத்தினாலும் அவர் எழுத்தைக் கையாளும் எளிமையும் ஒரு மிகுந்த எதிர்பார்ப்பை அவரது படைப்புகளை நோக்கி உருவாக்கியிருந்தன. உலோகத்தை வாசித்துக் கொண்டிருக்கும் போதே தோன்றிய முதல் கேள்வி " இதை ஜெமோதான் எழுதினாரா?" அந்த அளவிற்கு ஈர்ப்பில்லாத எழுத்து. ஒரேமுச்சில் வாசித்து முடிக்கும் வகையில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் திறந்தேன்.

வெறும் 200 பக்கம் கொண்ட இந்த புத்தகத்தை ஒரு வாரம் அவ்வப்போது வாசித்து முடிப்போம் என்ற கடனுக்காக வாசித்து முடித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். இதை ஜெமோ எழுதியிருந்தால் மன்னிக்கவும் ஜெமோ அப்படியே கட்டிப்போடும் என்ற எண்ணத்தில் துவங்கிய எனக்கு ஏமாற்றம்தான்.
அந்த வகையில் ஜெமோ வைப் பற்றி பிரபலங்களும் பதிவுகளும் பேசும் அளவிற்கு "உலோக"த்தில் தரமில்லை. சிறந்ததாக அறியப்படும் அவரது வேறு இலக்கியப் படைப்புகளையும் வாசித்துப் பார்க்க வேண்டும் ஒர் இறுதியான தீர்மானத்திற்கு வருவதற்கு.

ஈழத்து மொழியைக் கையாள்வதில் இவருக்கு சிக்கல் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அதற்கான சமாதானத்தை அவரது முன்னுரையிலேயும், பாத்திரங்களின் வழியாகவும் சொல்லிவிட்டார். அம்மொழியை சற்று உள்வாங்கிக்கொண்டு அல்லது அதற்கான உழைப்பைச் செய்துவிட்டு இக்கதைக்களனைக் கையாண்டிருக்கலாம். என்ன அவசரமோ அவருக்கு தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக ஈழம் பற்றிய செவிவழிச்செய்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவசரத்தில் புனையப்பட்டது போன்றதொரு எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. இன்னும் கொஞ்சம் உழைப்பைச் செலுத்தியிருக்கலாம் என்ற எண்ணம்தோன்றியது.

மேலே சொன்னவை அனைத்தும் உலோகத்தை ஒரு புனைவாக/படைப்பாக மட்டுமே அணுகினால் தோன்றியவை. ஆனால் உலோகம் ஒரு படைப்பிலக்கியம் என்ற நோக்குடன் எழுதப்பட்டதும் அல்ல அதனை ஒரு இலக்கியப் படைப்பாக மட்டுமே அனுகவும் வேண்டியதில்லை என்பதற்கு அப்புத்தகத்திலேயே போதுமான சான்றுகள் உண்டு.

இதில் அரசியல் எதுவுமில்லை என்று துவங்கும் முன்னுரையிலேயே இதில் நாம் அரசியலை எதிர்பார்க்க வேண்டும் என்ற மனநிலையை விதைத்துவிடுகிறார். அதற்குத் தகுந்தார்போல் எழுதப்பட்ட பின்னட்டை உரையில், புனைவைத் தாண்டி பாத்திரங்களின் உண்மைத்தன்மையை உணரவேண்டும் என்று வாசகனிடம் சொல்லியாயிற்று. அதனால் இதற்கு மேலும், அது படைப்பிலக்கியம், அரசியலற்றது என்றால் நகைத்துவிட்டு நகர மட்டும்தான் முடியும்.

எனக்குப் புரிந்தவரை இதன் அரசியல் என்றால் இப்புத்தகம் சிலவற்றை நிறுவ முற்படுவதுதான்.

ஈழத்திலிருந்து வரும் ஒவ்வொருவரையும் நீங்கள் ஏதாவதொரு இயக்கத்தோடு தொடர்படுத்தி அய்யக் கண்ணோட்டத்தோடு பார்க்கலாம்.

இயக்கங்களில் இருந்தாலும் சுயத்தன்மையில்லாமல் ஒரு எந்திரம் போல செயல்படுவார்கள்.

அப்படியே இருந்தாலும், எவரும் எந்த இயக்கத்திற்கும் உண்மைத்தன்மையோடு இல்லாமல், தாவும் வகையைச் சேர்ந்தவராகவும் துரோகியாக எந்நேரமும் மாறுபவராகவுமிருப்பார்.

இயக்கம் போராட்டம் எல்லாம், ஒன்றுக்கும் ஆகாமல் போய்விடும் (இதை ஒரு இயக்கத்தைச் சேர்ந்தப் பாத்திரம் மூலமே ஒன்றரை பக்கத்திற்கு நமக்கு வகுப்பெடுக்கிறார்).

இப்படி மேலே சொன்ன முடிவுகளுக்கு நம்மை எளிதாகக் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறது - "உலோகம்".

ஒருவேளை இம்முடிவுகளை நோக்கி வாசகனை செலுத்துவது மட்டுமே "உலோக"த்தின் நோக்கமாக இருக்குமோ என்று அய்யப்பட வைக்கும் அளவில்தான் இருக்கிறது.

படைப்புக் கண்ணோட்டத்தில் "உலோக"த்தில் ஒன்றுமில்லை ஒரு சராசரி நாவல் அவ்வளவுதான். அரசியல் கண்ணோட்டத்தில் இன்னும் சிறப்பானதொரு விமர்சனத்தை ஈழ அரசியல் குறித்து ஆழ்ந்த அறிவிருப்பவர்கள் யாராவது முன்வைக்கலாம்.

Friday, June 17, 2011

மாரிச்செல்வம் - மின்னஞ்சலில் வந்தது

மின்னஞ்சலில் வந்தது - இங்கேயும் இருக்கட்டும் என்று இங்கே பதிந்து வைக்கிறேன்.


கட்டுரை மூலம் - http://gomannar.blogspot.com/2011/06/blog-post_17.html


மாரிச்செல்வம் - துயரங்களுக்கு மத்தியில் ஒரு சாதனை


சில வருடங்களுக்கு முன் எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி (அப்புசாமி சீதாப்பாட்டி புகழ்), + 2 தியாகிகள் என்ற தலைப்பில் தேர்வு எழுதச் செல்லும் பிள்ளைகளின் பெற்றோர் படும்பாட்டை எழுதியிருந்தார். பெற்றோர்கள் என்னதான் பரீட்சை எழுதச் செல்லும் பிள்ளைகளுக்கு பார்த்துப் பார்த்துச் செய்தாலும், அந்தப் பிள்ளைகள், பெற்றோரைத் தலைகுனிய வைக்குமளவுதான் மதிப்பெண்கள் எடுக்கின்றார்கள். நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் பிள்ளைகளைப் பார்க்கும் நடுத்தரக் குடும்பத்துப் பெற்றோரெல்லாம், இது மாதிரி நமக்கு ஒண்ணு பிறக்கலையே என்று ஏங்க ஆரம்பிக்கின்றார்கள். பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்டாலும் பள்ளத்தில் விழுந்தே தீருவேன் என்று சபதமிட்டு பெற்றோரை பரிதவிக்கவிடும் பிள்ளைகளுக்கு மத்தியில், தாயைப் போன்று தன்னை வளர்த்த அக்காவின் பிணத்தருக்கே அழுகையோடு படித்து, மதிப்பெண்களை அள்ளிஎடுத்து தன் அக்காவின் கனவை நனவாக்கிய ஒரு ஏழைச் சிறுவனனின் சாதனைக் கதை. இது மாதிரி ஒரு பிள்ளையோ, சகோதரனோ நமக்கு இருந்திருக்கக் கூடாதா என்று படிப்பவர்களை ஏங்கவைக்கும் ஒரு முன்னுதாரணம்

சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு (SSLC) முடிவுகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்த நேரம். தேர்வு எழுதிய மாணவர்கள் எல்லாம் தங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ள இணையத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, தன் தாயார் சண்முகத்துடன் முதல் நாள் மூட்டிவைத்த கரிமூட்டதில் இருந்து கரி அள்ளிக்கொண்டிருந்தான் மாரி. அவனும் இந்த முறை SSLCதேர்வு எழுதியவன்தான். ஆனால் முடிவுகளைத் தெரிந்துகொள்ள அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.


மாரி... யாரோ உன்னத் தேடி வந்திருக்காங்க...என்று அவனுடைய மூன்றாவது அக்கா பானுப்ரியா சொல்ல, அள்ளிப்போட்டுக்கொண்டிருந்த கரியை அப்படியே வைத்துவிட்டு வந்தவனை, அவனுடைய பள்ளி நண்பர்கள் வாரி அணைத்துத் தூக்கிக்கொண்டனர். மாரி! நீ 490 மார்க் எடுத்திருக்கடா! District First டா...என்று கூறி அவனைத் தூக்கிக் கொண்டாடியபோது, எதுவும் புரியாவிட்டாலும் தன் மகன் ஏதோ சாதித்துவிட்டான் என்று உணர்ந்து கண்கள் கலங்கி நின்றார் மாரியின் தாய் சண்முகம். .....


மேலும் வாசிக்க - http://gomannar.blogspot.com/2011/06/blog-post_17.html