Tuesday, June 21, 2011

உலோகம் - ஜெயமோகன்

நண்பர் ஒருவர் மூலம், ஜெயமோகனின் உலோகம் புத்தகம் வாசிக்கக் கிடைத்தது.

இதுவரை ஜெ.மோவின் இலக்கியப் படைப்பு எதையும் வாசித்தது கிடையாது. ஆனால் அவரது இணைய எழுத்துக்களில் பெரும்பான்மையை வாசிப்பதுண்டு.

பெரும்பாலும், சுயதம்பட்டம், மற்றவரைப் பற்றிய அக்கப்போர் வகை எழுத்து, இலைமறை காயாக அடிப்படை வாத சிந்தனைகளை முன்வைப்பது, இது தவிர இணையத்தில் அவர் ஏதாவது எழுதியிருந்தால் அதை தவறவிட்டது என் தவறுதான். இதனாலேயே அவரது நாவல்களில் ஒன்றை வாசித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் நெடுநாட்களாக இருந்து வந்தது.

அவரது இணைய எழுத்தில் இருந்த வசீகரத்தினாலும் அவர் எழுத்தைக் கையாளும் எளிமையும் ஒரு மிகுந்த எதிர்பார்ப்பை அவரது படைப்புகளை நோக்கி உருவாக்கியிருந்தன. உலோகத்தை வாசித்துக் கொண்டிருக்கும் போதே தோன்றிய முதல் கேள்வி " இதை ஜெமோதான் எழுதினாரா?" அந்த அளவிற்கு ஈர்ப்பில்லாத எழுத்து. ஒரேமுச்சில் வாசித்து முடிக்கும் வகையில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் திறந்தேன்.

வெறும் 200 பக்கம் கொண்ட இந்த புத்தகத்தை ஒரு வாரம் அவ்வப்போது வாசித்து முடிப்போம் என்ற கடனுக்காக வாசித்து முடித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். இதை ஜெமோ எழுதியிருந்தால் மன்னிக்கவும் ஜெமோ அப்படியே கட்டிப்போடும் என்ற எண்ணத்தில் துவங்கிய எனக்கு ஏமாற்றம்தான்.
அந்த வகையில் ஜெமோ வைப் பற்றி பிரபலங்களும் பதிவுகளும் பேசும் அளவிற்கு "உலோக"த்தில் தரமில்லை. சிறந்ததாக அறியப்படும் அவரது வேறு இலக்கியப் படைப்புகளையும் வாசித்துப் பார்க்க வேண்டும் ஒர் இறுதியான தீர்மானத்திற்கு வருவதற்கு.

ஈழத்து மொழியைக் கையாள்வதில் இவருக்கு சிக்கல் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அதற்கான சமாதானத்தை அவரது முன்னுரையிலேயும், பாத்திரங்களின் வழியாகவும் சொல்லிவிட்டார். அம்மொழியை சற்று உள்வாங்கிக்கொண்டு அல்லது அதற்கான உழைப்பைச் செய்துவிட்டு இக்கதைக்களனைக் கையாண்டிருக்கலாம். என்ன அவசரமோ அவருக்கு தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக ஈழம் பற்றிய செவிவழிச்செய்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவசரத்தில் புனையப்பட்டது போன்றதொரு எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. இன்னும் கொஞ்சம் உழைப்பைச் செலுத்தியிருக்கலாம் என்ற எண்ணம்தோன்றியது.

மேலே சொன்னவை அனைத்தும் உலோகத்தை ஒரு புனைவாக/படைப்பாக மட்டுமே அணுகினால் தோன்றியவை. ஆனால் உலோகம் ஒரு படைப்பிலக்கியம் என்ற நோக்குடன் எழுதப்பட்டதும் அல்ல அதனை ஒரு இலக்கியப் படைப்பாக மட்டுமே அனுகவும் வேண்டியதில்லை என்பதற்கு அப்புத்தகத்திலேயே போதுமான சான்றுகள் உண்டு.

இதில் அரசியல் எதுவுமில்லை என்று துவங்கும் முன்னுரையிலேயே இதில் நாம் அரசியலை எதிர்பார்க்க வேண்டும் என்ற மனநிலையை விதைத்துவிடுகிறார். அதற்குத் தகுந்தார்போல் எழுதப்பட்ட பின்னட்டை உரையில், புனைவைத் தாண்டி பாத்திரங்களின் உண்மைத்தன்மையை உணரவேண்டும் என்று வாசகனிடம் சொல்லியாயிற்று. அதனால் இதற்கு மேலும், அது படைப்பிலக்கியம், அரசியலற்றது என்றால் நகைத்துவிட்டு நகர மட்டும்தான் முடியும்.

எனக்குப் புரிந்தவரை இதன் அரசியல் என்றால் இப்புத்தகம் சிலவற்றை நிறுவ முற்படுவதுதான்.

ஈழத்திலிருந்து வரும் ஒவ்வொருவரையும் நீங்கள் ஏதாவதொரு இயக்கத்தோடு தொடர்படுத்தி அய்யக் கண்ணோட்டத்தோடு பார்க்கலாம்.

இயக்கங்களில் இருந்தாலும் சுயத்தன்மையில்லாமல் ஒரு எந்திரம் போல செயல்படுவார்கள்.

அப்படியே இருந்தாலும், எவரும் எந்த இயக்கத்திற்கும் உண்மைத்தன்மையோடு இல்லாமல், தாவும் வகையைச் சேர்ந்தவராகவும் துரோகியாக எந்நேரமும் மாறுபவராகவுமிருப்பார்.

இயக்கம் போராட்டம் எல்லாம், ஒன்றுக்கும் ஆகாமல் போய்விடும் (இதை ஒரு இயக்கத்தைச் சேர்ந்தப் பாத்திரம் மூலமே ஒன்றரை பக்கத்திற்கு நமக்கு வகுப்பெடுக்கிறார்).

இப்படி மேலே சொன்ன முடிவுகளுக்கு நம்மை எளிதாகக் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறது - "உலோகம்".

ஒருவேளை இம்முடிவுகளை நோக்கி வாசகனை செலுத்துவது மட்டுமே "உலோக"த்தின் நோக்கமாக இருக்குமோ என்று அய்யப்பட வைக்கும் அளவில்தான் இருக்கிறது.

படைப்புக் கண்ணோட்டத்தில் "உலோக"த்தில் ஒன்றுமில்லை ஒரு சராசரி நாவல் அவ்வளவுதான். அரசியல் கண்ணோட்டத்தில் இன்னும் சிறப்பானதொரு விமர்சனத்தை ஈழ அரசியல் குறித்து ஆழ்ந்த அறிவிருப்பவர்கள் யாராவது முன்வைக்கலாம்.

6 comments:

saarvaakan said...

வணக்கம்,
பொதுவாக இக்காலகட்டத்தில் ஊடகங்கள் செய்யும் வேலையை ஜெ.மோ வும் செய்து இருப்ப்து ஆச்சரியம் இல்லை,தன் மனதில் உள்ள கருத்தைனை வலியுறுத்த வரலாற்று களம் தேவையில்லை.
நிலத்தில் வாழும் உயிருக்கு நீரில் வாழும் உயிரின் வாழ்வு புரியாது.ஒரு இனப் பிரச்சினை,அது சார்ந்த போர் குறித்து எழுதும் போது எதார்த்த சூழ்நிலைககளை எழுதுவதே சரியான கண்ணோட்டம்.
பகிர்வுக்கு நன்றி

கல்வெட்டு said...

சட்டி அகப்பைக் கதைதான்.
அவருக்குத் தெரிந்ததை விற்க கடை விரித்திருக்கிறாரே தவிர வரலாற்றை அல்லது அரசியலை சொல்ல அல்ல என்று நினைக்கிறேன்.

Thekkikattan|தெகா said...

நேரக் கொலை!

//அவருக்குத் தெரிந்ததை விற்க கடை விரித்திருக்கிறாரே//

அப்படியெல்லாம் சொல்லி அவரை அண்டர் எஸ்டிமேட் செய்வதற்கில்லை ;-). குதர்க்கமாக சொல்ல வந்ததை திரித்து அப்’பாவிகளின் மனதில் விதைத்திருப்பதாக அமையவே அவசர அவசரமாக சமைத்து வெளிக் கொண்டு வந்திருப்பார்.

எதிலும் அரசியல் எல்லாவற்றிலும் அரசியல்- படிச்சவன் பொய் சொன்னா அய்யோன்னு போயிருவானாம்ல !! அப்படியா!!

கையேடு said...

//பொதுவாக இக்காலகட்டத்தில் ஊடகங்கள் செய்யும் வேலையை ஜெ.மோ வும் செய்து இருப்ப்து ஆச்சரியம் இல்லை//

உண்மைதாங்க சார்வாகன்.

// வரலாற்றை அல்லது அரசியலை சொல்ல அல்ல என்று நினைக்கிறேன்.//

பொதுவான பிம்பத்தைக் கட்டமைக்க சமைக்கப்பட்டதோ என்று கூடத் தோன்றியது வாசித்து முடித்ததும்.

// படிச்சவன் பொய் சொன்னா அய்யோன்னு போயிருவானாம்ல !! அப்படியா!!//


அப்படி ஒன்னும் போகிறமாதிரி தெரியலைங்க தெகா.. அய்யோன்னு இருப்பவந்தான் மேலும் அங்கேயே தள்ளப்படுறான்.

ஜமாலன் said...

அந்நாவல் நான் படிக்கவில்லை. ஒரு நண்பர் சொன்னார் என்பதற்காக இரவு படித்தேன். அது நிதியாணந்தா கதையை பாலகுமாரன் எழதியிருந்தால் இன்னுமு் சிறப்பாக இருந்திருக்குமோ என்று தோன்றியது. அவரது விஷ்னுபுரம் ஒரு அசாத்தியமான நாவல். அதன் கற்பனையும் புனைவும் நன்றாக இருக்கும். இடையில் தத்துவ வகுப்பு நிறைய உண்டு. அதில் வழக்கமான அவரது அரசியல் உண்டு. அது இந்துத்துவாவை தூக்கிப்பிடிக்கும் நாவல் என்கிற விமர்சனங்களும் உண்டு. இந்நாவல் பற்றி பலரது கருத்துக்களும் அதான். நீங்கள் அதை வாசித்து எளிமையாக உங்கள் கருத்தை முன்வைத்திருக்கிறீர்கள். தொடர்ந்து இலக்கிய பிரதிகளும் வாசியுங்கள்.

Anonymous said...

i hav read most of his works....never agreed with his views.Mostly thru libraries but never bought any.Still many eelam tamils believe that he is sympathizer of their cause.