Thursday, February 14, 2008

இறப்பு - உரையாடல் - III - நெக்ரோசிஸ் - சீரற்ற இறப்பு முறை

இறப்பு குறித்த இத்தொடர் உரையாடலில், முதல் இரண்டு பகுதிகளில் உயிர்த்தோற்றம் பற்றிய ஒரு சிறு உரையாடலும், செல்கள் குறித்தும் உரையாடினோம். செல்லுக்குள்ளான நமது சுற்றுப்பயணம் உங்களையும் வியக்கவைத்திருக்குமென்று நினைக்கிறேன். 10 மைக்ரான் இருந்து கொண்டு உள்ளே ஒரு தனி அரசாங்கம் செய்துகொண்டிருப்பது மட்டுமல்லாமல் வெளியே இருக்கும் ஒரு பெரிய மிருகக்கூட்டை (நாமதான்)இயக்கிக்கொண்டிருக்கிறது.

போனபகுதியில நாம பேசுனது ஒன்னும் ஞாபகமில்லாவிட்டாலும் பரவாயில்லை இப்பகுதி உரையாடலுக்கு சில அடிப்படைகள் மட்டும் நினைவிலிருந்தால் போதும். ஆங்காங்கே தேவைப்பட்டால் எட்டிப்பார்த்துவிட்டு தொடர்ந்து பேசுவோம்.

நாம் சுற்றுப்பயணம் செய்துவிட்டு செல்லிற்கு வெளியே வரும்போது, ஒரு பரபரப்புசூழல் உருவானது என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஏன் அந்த பரபரப்பு?

இப்போது கவனித்தீர்களா செல்லின் மேல் இருந்த lymph திரவத்தின் ஓட்டம் குறைந்திருக்கிறது. ஆனால் இந்த திரவம் இரத்தஓட்டத்துடன் சம்பந்தப்பட்டது என்றல்லவா பார்த்தோம், இப்போது அதன் ஒட்டம் குறைந்திருக்கிறது என்றால்..?? ஆமாம் நீங்கள் ஊகித்தது சரிதான் இவ்விருதயச் செல்லான மையோகார்டியல் (myocardial) செல்லுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் ஏதோ குறைபாடு. அதனால் தான் இந்த லிம்ப் திரவத்தின் ஓட்டத்திலும் குறைபாடு இருக்கிறது.

அது என்னங்க குறைபாடு? ஏன் இந்தக் குறைபாடு? அதவிடுங்க.. அதுவா முக்கியம், ஒரு செல்லுக்கு.. அதுவும் இருதயச்செல்லுக்கு இரத்தம் செல்லவில்லையென்றால்..என்ன ஆகும்!? இது ஒரு மோசமான அறிகுறியாச்சே? மனித உடலிலுள்ள ஒரு செல்லுக்கு இரத்தம் போகலைன்னா என்ன அர்த்தம்? அச்செல்லுக்கு உணவும், ஆக்ஸிஜனும் போகவில்லையென்று அர்த்தம். ஒரு செல்லுக்குள் உணவும் ஆக்ஸிஜனும் செல்லவில்லையென்றால் என்னாவது? இருப்பு போதவில்லை அல்லது போதிய காச்சாப்பொருளின்மையால் தனது ஆற்றல் உற்பத்தியை உடனடியாக நிறுத்திக்கொள்கிறார் ஆற்றல் மூலங்கள் என்றழைக்கப்படும் மைட்டோகாண்டிரியா (mitochondria). உங்கள் பதட்டம் புரிகிறது , மைட்டோகாண்டிரியா தனது வேலையை செய்யமுடியாத சூழலில் இருந்தால் என்னாவது, செல்லின் உயிர்த்தலுக்குத் தேவையான ATP (adenosine triphosphate) இல்லாமல் போய்விடும்.

ATP இல்லையென்றால் செல்லின் மற்ற உறுப்புகளின் செயல்பாட்டிற்குத் தேவையான ஆற்றல் இல்லையென்று அர்த்தம். செல்லுக்குள் ATP ன் அளவு தேவையான அளவைவிடக் குறைய ஆரம்பிக்கிறது. நம் செல் இது போன்ற சூழ்நிலைகளை எதிர்பார்க்காத ஒன்றல்ல, உடனடியாக மாற்று ஆற்றல் மூலங்கள் முடுக்கிவிடப்படுகின்றன. அது என்ன மாற்று ஆற்றல் மூலம்? செல்லுக்குள்ளேயே இருக்கும், கொழுப்பு மற்றும் சில புரதங்களை ஆற்றலாக மாற்றிக் கொண்டு இவ்வாற்றல் தேவையை சமாளிப்பது. (செல்கள் கூட மாற்று ஆற்றலின் அவசியத்தை உணர்ந்திருக்கின்றன). ஆனால் இது ஒத்திப்போடுதலுக்கான ஒரு முனைப்பேயன்றி இதுமட்டுமே தீர்வல்ல. செல்லின் உயிர்ப்பு இயக்கம் உறைநிலையை நோக்கிச் சென்றுவிட்டது அல்லது செல்லுக்குளிருக்கும் இயந்திரங்கள் அனைத்தும் ஸ்தம்பித்து நின்றுவிட்டன.

ஏறக்குறைய அந்நிகழ்வு துவங்கியாகிவிட்டது. மேலே விளக்கப்பட்ட நிகழ்வில் பெரிதும் பாதிக்கப்படுபவை செல்லின் சுவற்றில் இருக்கும் பம்புகள்தான். இவற்றின் முக்கியப் பணியே, உள்ளே இருக்கும் பொட்டஷியம் அயனியின் செறிவை சீராக வைத்திருப்பதும், உள்ளே புகும் நீரையும் கால்ஷியம் அயனியையும் கட்டுக்குள் வைத்திருப்பதும்தான் என்று பார்த்தோம். மீண்டும் இயல்புநிலை திரும்பும் வரை இறப்பு நேராமல் இருப்பதற்கு இப்பம்புகளின் செயல்பாடு மிகவும் அவசியம். செல்லின் செயல்பாடுகளையும் மீறி வாழ்வா? சாவா? என்ற ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது நம் செல். இந்நிலையில் செல்லின் மற்ற உறுப்புகளுக்குச் செல்ல வேண்டிய ஆற்றல் அனைத்தையும் இப்பம்புகளுக்கே வழங்குகிறது செல்.**

செல்லுக்குள்ளிருக்கும் புரதத்தாயாரிப்புகள் அப்படியே உறைநிலையில் வைக்கப்பட்டுவிட்டன, மேலும் உட்கருவிலிருந்து வரும் கட்டளைகள் உறுப்புகளுக்குப் போய்ச் சேராமல், உறைந்து கிடக்கின்றன. இப்படி வேளை செய்யாத உறுப்புகள் எல்லாம் அப்படியே கழிவு போல தனது மறுசுழற்சியாளரான லைசோசோம்களுக்குள் தள்ளப்படுகின்றன. ஆனால், போதிய ஆற்றலின்மையால் அவையும் திணறிக்கொண்டிருக்கின்றன. இப்போது, செல்லுக்குள் எங்கு நோக்கினும் ஒரே கேள்வி, எங்கே ATP ?

என்னதான் கையிருப்பு ஆற்றலை செல்லின் சுவரில் இருக்கும் பம்புகளுக்கு மட்டுமே கொடுத்தாலும், தொடர் பற்றாக்குறையினால் பம்புகளும் இப்போது வேலை செய்ய முடியாமல் திணறி தனது முயற்சியை கைவிட்டு அமைதியாகின்றன. இதற்காகவே காத்திருந்தது போல் கால்ஷியம் அயனி மெதுவாக செல்லுக்குள் நுழைந்து அனைத்து உறுப்புகளையும் அரிக்கத் துவங்குகின்றன. மேலும், வெளியிலிருக்கும் நீர் மெதுவாக செல்லின் உள்ளே நுழைந்து, அச்செல்லை ஒரு பலூன் போல உப்பச் செய்து விடுகிறது. ஓரளவிற்கு மேல் செல்லை அதன் சுற்றுப்புறத்திலிருந்து காத்துவந்த செல்சுவரில் விரிசல்விழத் துவங்குகிறது. பின்னர் நீரின் அழுத்தத்தால், தன் உறுப்புகளை உடலின் இருளில் உமிழ்ந்துவிட்டு சலனமற்று கிழிந்து தொங்குகிறது அச்செல்.

இப்படி இறப்பதற்கு நிர்பந்திக்கப்படும் இறப்பு முறை நெக்ரோசிஸ் (Necrosis) என்றழைக்கப்படுகிறது.


சரி இப்போ இது ஏன் நிகழ்ந்தது? அல்லது இச்செல் இறப்பதற்கு நிர்பந்தித்தக் குறைபாடு என்ன? என்று பார்ப்போம். எல்லாம் கொழுப்புதான்.. அட திட்டலங்க.. கொழுப்புதான் காரணம். இருதயத்திற்கு செல்லும் இரத்தப் பாதையில் சேர்ந்த கொழுப்பு, இரத்த செல்களின் இறந்த உடல் என ஒரு குப்பையான கலவை அதன் சீரான ஓட்டத்தை தடைசெய்து கொண்டே இருந்து ஒரு நாள் அதுவே மிகப்பெரிய அபாயமாக மாறிவிட்டது. இதுபோன்ற கழிவுகளின் சேர்க்கையைக் களைவதற்கு உடலில் தற்காப்பு வீரர்கள் இருந்தாலும் நிலமை கட்டுக்கடங்காமல் போய்விட்டால் அவையும் இத்தடையை அப்படியே விட்டுவிடுகின்றனர். இப்படிப் பலநாட்கள் சேர்ந்த கழிவுகள் தீடீரென்று ஒருநாள் இருதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டத்தையே தடுத்துவிடுவதால், இருதயச் செல்கள் இறப்பதற்கு நிர்பந்திக்கப்படுகின்றன. இதை மாரடைப்பு என்ற பெயரில் புற உடலில் இதன் தாக்கங்களைப் பற்றி பலரும் அறிந்த ஒன்றுதான்.

அப்படியானால், இவ்விருதயத்துக்கு சொந்தக்காரர்.. ஆம், அவரை இப்போது உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கவேண்டும் அதனை அவருடைய துணைவியாரும் உறவினர்களும் பார்த்துக் கொண்டதால் அவரது நிலமையையும் அவரது தாக்கத்தையும் பற்றி மீண்டும் வேறு பகுதியில் மீண்டும் வந்து பார்ப்போம்.

ஆனால் செல்களின் இறப்பு என்பது இப்படிப்பட்ட கொடூரமான நிகழ்வுதானா? வேறு வழிகளில் செல்கள் இறப்பதற்கான வழிமுறைகளே கிடையாதா? என்ற கேள்வி நியாயமானதுதானே. ஆனால், உயிரியலில் இறப்பு என்பது இப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் (நெக்ரோசிஸ்) என்று பலகாலம் நம்பிவந்தனர் விஞ்ஞானிகள். ஆனால் பிறப்பைவிட அல்லது அதற்கு இணையான சுவாரஸ்யமான விசயம் இயற்கை இறப்பு. Programmed cell death (PCD) அல்லது அபோப்டிஸ் (Apoptosis) என்றழைக்கப்படும் இறப்பு முறை பின்னர் கண்டறியப்பட்ட ஒன்றுதான். இதன் கிரேக்க அர்த்தம் மலரிலிருந்து உதிரும் இதழ்கள் என்பது. இவ்வகை இறப்புமுறை தான் பரிணாமத்தில் விளைந்தது. இதைப் பற்றி விரிவாக அடுத்த பகுதியில் உரையாடுவோம்.

************************************

1. "SEX & THE ORIGINS OF Death", by William R. Clark


** குறிப்பு


//இந்நிலையில் செல்லின் மற்ற உறுப்புகளுக்குச் செல்ல வேண்டிய ஆற்றல் அனைத்தையும் இப்பம்புகளுக்கே வழங்குகிறது செல்.** //


இவ்வாக்கியத்தில் ஒரு மிக முக்கியமான உண்மை புதைந்திருக்கிறது என்றே கருதுகிறேன். வாழ்வதற்கான முனைப்பில் அச்செல் அதன் முக்கியப் பணியான சுருங்கி விரிதல் குறித்து முக்கியத்துவம் கொடுக்காமல், தனது உயிரைக்காப்பாற்றுவதற்கான முயற்சிகளிலேயே கவனம் செலுத்தியிருக்கிறது. இதை இரண்டு வகைகளில் அனுகலாம், 1. இது போன்ற சூழ்நிலையில், இச்செல் உயிர்த்திருந்தால்தான் மொத்த விலங்கும் உயிரோடு இருக்க முடியும் என்பதால் இப்படிப்பட்ட செயலைச் செய்ய அதற்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம். 2. தாம் ஒரு பகுதியாக இருக்கின்ற விலங்கின் உயிர்ப்போ அல்லது இறப்போ பற்றிக் கவலையில்லாமல், தன்னுடைய உயிரைக்காத்துக் கொள்வதில் அச்செல் முனைப்புடன் இருக்கலாம்.


இயற்கையாக இறக்கின்ற ஒரு மனிதனின் உடலில் ஒருவரது மூளையும், இருதயமும் முழுவதுமாக (இயற்கையாக) இறந்துவிட்டபின்னும், உடலின் பல பகுதிகளிலிருக்கும் உறுப்புகளின் செல்கள் இயற்கையாக இறக்காமலிருக்கும். மேலும், அவை பின்னர் இறப்பதற்கு நிர்பந்திக்கப்பட்டு நெக்ரோசிஸ் இறப்பு முறையில் இறக்கின்றன. இந்நிகழ்வு நாம் மேற்கூறிய இரண்டு காரணிகளில் இரண்டாவது காரணியையே முன்னிலைப்படுத்துகிறது.

உயிரியலின்(உலகின்) அடிப்படைச் சாரமே வாழ்தலுக்கான முனைவு என்றுதான் கருதத் தோன்றுகிறது. வெறும் முனைவு என்பதைவிட இம்முனைப்பில் ஏற்பட்ட மாற்றங்களும், பரிணாமங்களும் பிரமிக்க வைக்கின்றன அல்லது மிகவும் சிறுக்க வைக்கின்றன என்றுதான் கூறவேண்டும்.

8 comments:

ஜமாலன் said...

//உயிரியலின்(உலகின்) அடிப்படைச் சாரமே வாழ்தலுக்கான முனைவு என்றுதான் கருதத் தோன்றுகிறது.//

ஒவ்வொரு செல்லிற்குள்ளும் இருத்தப்படடிற்கும் இருப்பிற்கான செய்தி இதுவாகத்தான் இருக்க வேண்டும். உயிர்த்தலின் தர்கக்ம் என்பது செல் அடிப்படையிலானது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.அல்லது இதனை உயரித்தலின் விஞ்ஞானம் என்று சொல்லலாம். 'மெல்ல எரிதலே உயிர்த்தல்' என்றார் லவாய்சியர் எனகிற விஞ்ஞானி. நாம் செல்களின் 'உயிர்த்தலுகான முனைப்பே வாழ்தல்' எனலாம்.

தொடருங்கள்....

கையேடு said...

//'உயிர்த்தலுகான முனைப்பே வாழ்தல்'//
மிகவும் சரியாகச் சொல்லியுள்ளீர்கள் திரு.ஜமாலன்.
----------------

இவ்வடிப்படைச் செய்தி, மூலக்கூறுகளிலிருந்து எப்படி முதல் செல்லுக்குள் நுழைந்திருக்க முடியும் என்ற கேள்வி மிகவும் நிலைகுலையச்செய்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
_______
நன்றி..

sury siva said...

அறிவு பூர்வ‌மான‌ ஒரு ப‌திவுக்கு வந்து படித்தது மனதிற்கு இதமாக இருக்கிறது. இதுபோன்ற பதிவுகள் தமிழில் மிகக்குறைவே. விரலை விட்டு எண்ணி விடலாம்.

விவரமாக விளக்கமாக இறப்பு நிகழ்வதை ஒரு
வீடியோ படம் போல எடுத்துச் சொல்லியிருக்கிறீகள்.
இந்த பதிவுக்கு நான் காட்டாறு பதிவு மூலமாக வந்தேன்.
திடீர் இற்ப்புக்கும் தொடர் இறப்புக்கும் உள்ள வித்தியாசம்
என என்று விவரித்திருப்பது துல்லியமாக உள்ளது.

உங்கள் அனுமதியினை பெற்று எனது "அர்த்தமுள்ள‌
வலைப்பதிவுகள்' எனும் வலையில் இந்த வலைப்பதிவுதனை
சேர்க்கலாம் என நினைக்கிறேன்.

தீபக் சோப்ராவின் Ageless Mind Timeless Body
எனும் புத்தகம் நீங்கள் முன்னமேயே படித்திருப்பீர்கள்.
அண்டத்தில் நடக்கும் யாவையும் நமது பெள்தீக உடலிலும்
அவ்வாறே நடக்கிறது எனச் சித்தரிக்கிறார். உயிர் தோன்றக்
காரணமாயுள்ள வேதியப்பொருள்கள் ஏன், எவ்வாறு, எந்தக்
கால கட்டத்தில், எதனால் உந்தப்பட்டு, ஒன்று சேர்ந்தன என்பது
புரியாத புதிராகவே உள்ளது.
இதை த‌ற்செய‌ல் என‌ச்சொல்வ‌தும் இல்லை pre-designed
என‌ச்சொல்வ‌தும் அவ‌ர‌வ‌ர் முன்ன‌மே தாம் எடுத்துக்கொண்ட‌
நிலைக‌ளுக்கு ஒப்ப‌வே உள்ள‌ன். இது குறித்து ஏதேனும்
objective analysis இருப்பின் தெரிய‌ப்ப‌டுத்த‌வும்.

ம‌றுப‌டியும் என‌து பாராட்டுக்க‌ள்>

மேலும் மேலும் ம‌னித‌ அறிவு பெருகும்போது, இது வ‌ரை பெற்றிருக்கும்
அறிவு, பெற‌ இருக்கும் அறிவுட‌ன் ஒப்பிடுகையில் க‌ட‌ல் ம‌ண்ணில் ஒரு
துளி போல். க‌ற்ற‌து கைம‌ண் அள‌வு, க‌ல்லாத‌து உல‌க‌ள‌வு என்ப‌ர். மேலும்
மேலும் மேலும் நுண்ணிய‌ அறிவினைப் பெறும்போது, ந‌ம‌து த‌ற்ச‌ம‌ய‌
அறிவின் எல்லைக‌ளை அல்ல‌து ப‌ரிமாண‌ங்க‌ளை வைத்துக்கொண்டு, தெரியாத‌வ‌ற்றை
இல்லை என‌வோ அல்ல‌து சாத்திய‌க்கூறு இல்லை என‌வோ சொல்ல‌ இய‌லாது என‌வே
நினைக்கிறேன். தாங்க‌ள் நினைப்ப‌து என்ன‌ என‌க் கூற‌வேண்டும்.

சுப்பு ர‌த்தின‌ம்.
த‌ஞ்சை.
http://anewworldeveryday.blogspot.com
http://arthamullaValaipathivugal.blogspot.com
http://meenasury.googlepages.com/home

கையேடு said...

//அறிவு பூர்வ‌மான‌ ஒரு ப‌திவுக்கு வந்து படித்தது மனதிற்கு இதமாக இருக்கிறது. இதுபோன்ற பதிவுகள் தமிழில் மிகக்குறைவே. விரலை விட்டு எண்ணி விடலாம்.

விவரமாக விளக்கமாக இறப்பு நிகழ்வதை ஒரு
வீடியோ படம் போல எடுத்துச் சொல்லியிருக்கிறீகள்.
இந்த பதிவுக்கு நான் காட்டாறு பதிவு மூலமாக வந்தேன்.
திடீர் இறப்புக்கும் தொடர் இறப்புக்கும் உள்ள வித்தியாசம்
என என்று விவரித்திருப்பது துல்லியமாக உள்ளது.//

தங்களது வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி திரு. சுப்புரத்தினம்.

//உங்கள் அனுமதியினை பெற்று எனது "அர்த்தமுள்ள‌
வலைப்பதிவுகள்' எனும் வலையில் இந்த வலைப்பதிவுதனை
சேர்க்கலாம் என நினைக்கிறேன்.//

எனது பதிவுகள் உங்களுக்கு அவ்வெண்ணத்தைக் கொடுக்குமாயின், நீங்கள் தாராளமாக இணைத்துக் கொள்ளலாம்.
எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

//தீபக் சோப்ராவின் Ageless Mind Timeless Body
எனும் புத்தகம் நீங்கள் முன்னமேயே படித்திருப்பீர்கள்.
அண்டத்தில் நடக்கும் யாவையும் நமது பெள்தீக உடலிலும்
அவ்வாறே நடக்கிறது எனச் சித்தரிக்கிறார். //

நீங்கள் குறிப்பிட்டிருக்கிற அப்புத்தகத்தை நான் படித்ததில்லை, ஆனால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கருப்பொருள் கொண்ட சில புத்தகங்களை வாசித்திருக்கிறேன்.

//உயிர் தோன்றக்
காரணமாயுள்ள வேதியப்பொருள்கள் ஏன், எவ்வாறு, எந்தக்
கால கட்டத்தில், எதனால் உந்தப்பட்டு, ஒன்று சேர்ந்தன என்பது
புரியாத புதிராகவே உள்ளது.
இதை த‌ற்செய‌ல் என‌ச்சொல்வ‌தும் இல்லை pre-designed
என‌ச்சொல்வ‌தும் அவ‌ர‌வ‌ர் முன்ன‌மே தாம் எடுத்துக்கொண்ட‌
நிலைக‌ளுக்கு ஒப்ப‌வே உள்ள‌ன். இது குறித்து ஏதேனும்
objective analysis இருப்பின் தெரிய‌ப்ப‌டுத்த‌வும்.//

இது குறித்து மிகவும் அருதியிட்டு இப்படித்தான் என்று கூறமுடியாமல் இருந்தாலும், சில அனுமானங்கள் இருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக பூமியிலுள்ள கருப்பொருட்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள். உதாரணமாகப் பூமியின் கருப்பொருட்கள் முதலில் மிகவும் வேறுபட்டும் அதன் வளிமண்டலத்தில் தற்போதிருக்கும் அளவிளான ஆக்ஸிஜன் இல்லாமலும் இருந்தது.

ஆனால், உயிர் மூலக்கூறுகள் அல்லது உயிர்த்தோற்றத்துக்கான வேதிவினைக்கு ஆக்சிஜன் மிகவும் முக்கியமானதாக இருப்பது ஆய்வுகள் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆனால், தோற்றத்தின் துவக்க காலங்களில் பூமியின் பரப்பில் போதிய ஆக்ஸிஜன் இல்லாமல் இருந்தது. இவ்வாக்ஸிஜன் பூமியின் கருப்பொருளுக்குள் இருந்த இரும்பு ஆக்ஸைடிலிருந்து தொடர்ந்து உமிழப்பட்டதால், வளிமண்டலத்தில் மிகுந்த மாற்றங்கள் ஏற்பட்டு, ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்க ஆரம்பித்தது. உயிர்தோற்றத்திற்கான, சூழல் இப்படியாக உருவாகியது, என்றொரு கோட்பாடு இருக்கிறது. இது, தற்போதைக்கு ஓரளவுக்கு ஏற்புடையதாக இருக்கிறது. இது குறித்த மேலதிக ஆய்வுகள், மற்றும் இது குறித்தான தொடர்புடைய சுட்டிகளை நாளைத் தருகிறேன். இப்பின்னூட்டத்திலேயே அளிக்க முடியாத சூழலில் உள்ளேன்.

//ம‌றுப‌டியும் என‌து பாராட்டுக்க‌ள்>//

நன்றிகள் பல..

//மேலும் மேலும் ம‌னித‌ அறிவு பெருகும்போது, இது வ‌ரை பெற்றிருக்கும்
அறிவு, பெற‌ இருக்கும் அறிவுட‌ன் ஒப்பிடுகையில் க‌ட‌ல் ம‌ண்ணில் ஒரு
துளி போல். க‌ற்ற‌து கைம‌ண் அள‌வு, க‌ல்லாத‌து உல‌க‌ள‌வு என்ப‌ர். மேலும்
மேலும் மேலும் நுண்ணிய‌ அறிவினைப் பெறும்போது, ந‌ம‌து த‌ற்ச‌ம‌ய‌
அறிவின் எல்லைக‌ளை அல்ல‌து ப‌ரிமாண‌ங்க‌ளை வைத்துக்கொண்டு, தெரியாத‌வ‌ற்றை
இல்லை என‌வோ அல்ல‌து சாத்திய‌க்கூறு இல்லை என‌வோ சொல்ல‌ இய‌லாது என‌வே
நினைக்கிறேன். தாங்க‌ள் நினைப்ப‌து என்ன‌ என‌க் கூற‌வேண்டும்.//

தங்களுடைய இக்கருத்து மிகவும் ஏற்புடையது. தற்போதைய புரிதலில், சிலவற்றை முழுவதுமாகப் புரிந்து கொள்ளயியலாமல் இருக்கிறோம் என்பதுதான் உண்மை. இப்புரிதலும், ஒருவகையில் பரிணமிக்கவேண்டும், வரும் தலைமுறையினரின் உழைப்பில்.

"நமக்கு முன்னர் இருந்த விஞ்ஞானிகள், அறிவியலில் நம்மை ஒரு சமுத்திரத்தின் கரையில் நிறுத்தியிருக்கின்றனர். இன்னும் எதிரே ஒருசமுத்திரம் இருக்கிறது புரிந்து கொள்வதற்கு. இக்கடலை அவ்விஞ்ஞானிகளின் தோள்களில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம்.(On the Shoulders of Giants)" - என்று கூறுகிறார் Sir. Stefen Hawkings.

Source of Phrase: "On the Shoulders of Giants"

"What Des-Cartes did was a good step. You have added much several
ways, & especially in taking ye colours of thin plates into philosophical
consideration. If I have seen further it is by standing on ye shoulders
of Giants." --Newton to Hooke, 5 Feb. 1676;

தங்களது ஊக்கத்திற்கும், பாராட்டுக்கும் நன்றிகள் பல.

கையேடு said...

திரு. சுப்புரத்தினம் அவர்களுக்கு,

http://www.onelife.com/evolve/cellev.html

http://www.onelife.com/toc.html

இங்கு ஓரளவுக்கு விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. முதல் சுட்டி, உயிர்த்தோற்றத்தில் ஆக்ஸிஜன் குறித்தும், இரண்டாவது சுட்டி அதே வலைப்பக்கத்தின் முகப்பு.

நன்றி.

கையேடு said...

முந்தய பின்னூட்டத்தில் "Sir" Stefen Hawking என்பது தவறு. அவர் இன்னும் நோபல் பரிசு பெறாதவர்.
அதற்கான காரணமாகக் கூறப்படுவது, அவருடைய, கோட்பாடுகள் மிகவும் கடினமானவை, அதனால் அவை இன்னும் ஆய்வு அடிப்படையில் நிரூபிக்கப்படவில்லை என்பது.

தருமி said...

//அப்படியானால், இவ்விருதயத்துக்கு சொந்தக்காரர்.. ஆம், அவரை இப்போது உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கவேண்டும் அதனை அவருடைய துணைவியாரும் உறவினர்களும் பார்த்துக் கொண்டதால் அவரது நிலமையையும் அவரது தாக்கத்தையும் பற்றி மீண்டும் வேறு பகுதியில் மீண்டும் வந்து பார்ப்போம்./

ம்ம்..ம்ம்....ம்

தருமி said...

//sury said...
அறிவு பூர்வ‌மான‌ ஒரு ப‌திவுக்கு வந்து படித்தது மனதிற்கு இதமாக இருக்கிறது. //

அப்படியே ...