Tuesday, June 21, 2011

உலோகம் - ஜெயமோகன்

நண்பர் ஒருவர் மூலம், ஜெயமோகனின் உலோகம் புத்தகம் வாசிக்கக் கிடைத்தது.

இதுவரை ஜெ.மோவின் இலக்கியப் படைப்பு எதையும் வாசித்தது கிடையாது. ஆனால் அவரது இணைய எழுத்துக்களில் பெரும்பான்மையை வாசிப்பதுண்டு.

பெரும்பாலும், சுயதம்பட்டம், மற்றவரைப் பற்றிய அக்கப்போர் வகை எழுத்து, இலைமறை காயாக அடிப்படை வாத சிந்தனைகளை முன்வைப்பது, இது தவிர இணையத்தில் அவர் ஏதாவது எழுதியிருந்தால் அதை தவறவிட்டது என் தவறுதான். இதனாலேயே அவரது நாவல்களில் ஒன்றை வாசித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் நெடுநாட்களாக இருந்து வந்தது.

அவரது இணைய எழுத்தில் இருந்த வசீகரத்தினாலும் அவர் எழுத்தைக் கையாளும் எளிமையும் ஒரு மிகுந்த எதிர்பார்ப்பை அவரது படைப்புகளை நோக்கி உருவாக்கியிருந்தன. உலோகத்தை வாசித்துக் கொண்டிருக்கும் போதே தோன்றிய முதல் கேள்வி " இதை ஜெமோதான் எழுதினாரா?" அந்த அளவிற்கு ஈர்ப்பில்லாத எழுத்து. ஒரேமுச்சில் வாசித்து முடிக்கும் வகையில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் திறந்தேன்.

வெறும் 200 பக்கம் கொண்ட இந்த புத்தகத்தை ஒரு வாரம் அவ்வப்போது வாசித்து முடிப்போம் என்ற கடனுக்காக வாசித்து முடித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். இதை ஜெமோ எழுதியிருந்தால் மன்னிக்கவும் ஜெமோ அப்படியே கட்டிப்போடும் என்ற எண்ணத்தில் துவங்கிய எனக்கு ஏமாற்றம்தான்.
அந்த வகையில் ஜெமோ வைப் பற்றி பிரபலங்களும் பதிவுகளும் பேசும் அளவிற்கு "உலோக"த்தில் தரமில்லை. சிறந்ததாக அறியப்படும் அவரது வேறு இலக்கியப் படைப்புகளையும் வாசித்துப் பார்க்க வேண்டும் ஒர் இறுதியான தீர்மானத்திற்கு வருவதற்கு.

ஈழத்து மொழியைக் கையாள்வதில் இவருக்கு சிக்கல் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அதற்கான சமாதானத்தை அவரது முன்னுரையிலேயும், பாத்திரங்களின் வழியாகவும் சொல்லிவிட்டார். அம்மொழியை சற்று உள்வாங்கிக்கொண்டு அல்லது அதற்கான உழைப்பைச் செய்துவிட்டு இக்கதைக்களனைக் கையாண்டிருக்கலாம். என்ன அவசரமோ அவருக்கு தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக ஈழம் பற்றிய செவிவழிச்செய்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவசரத்தில் புனையப்பட்டது போன்றதொரு எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. இன்னும் கொஞ்சம் உழைப்பைச் செலுத்தியிருக்கலாம் என்ற எண்ணம்தோன்றியது.

மேலே சொன்னவை அனைத்தும் உலோகத்தை ஒரு புனைவாக/படைப்பாக மட்டுமே அணுகினால் தோன்றியவை. ஆனால் உலோகம் ஒரு படைப்பிலக்கியம் என்ற நோக்குடன் எழுதப்பட்டதும் அல்ல அதனை ஒரு இலக்கியப் படைப்பாக மட்டுமே அனுகவும் வேண்டியதில்லை என்பதற்கு அப்புத்தகத்திலேயே போதுமான சான்றுகள் உண்டு.

இதில் அரசியல் எதுவுமில்லை என்று துவங்கும் முன்னுரையிலேயே இதில் நாம் அரசியலை எதிர்பார்க்க வேண்டும் என்ற மனநிலையை விதைத்துவிடுகிறார். அதற்குத் தகுந்தார்போல் எழுதப்பட்ட பின்னட்டை உரையில், புனைவைத் தாண்டி பாத்திரங்களின் உண்மைத்தன்மையை உணரவேண்டும் என்று வாசகனிடம் சொல்லியாயிற்று. அதனால் இதற்கு மேலும், அது படைப்பிலக்கியம், அரசியலற்றது என்றால் நகைத்துவிட்டு நகர மட்டும்தான் முடியும்.

எனக்குப் புரிந்தவரை இதன் அரசியல் என்றால் இப்புத்தகம் சிலவற்றை நிறுவ முற்படுவதுதான்.

ஈழத்திலிருந்து வரும் ஒவ்வொருவரையும் நீங்கள் ஏதாவதொரு இயக்கத்தோடு தொடர்படுத்தி அய்யக் கண்ணோட்டத்தோடு பார்க்கலாம்.

இயக்கங்களில் இருந்தாலும் சுயத்தன்மையில்லாமல் ஒரு எந்திரம் போல செயல்படுவார்கள்.

அப்படியே இருந்தாலும், எவரும் எந்த இயக்கத்திற்கும் உண்மைத்தன்மையோடு இல்லாமல், தாவும் வகையைச் சேர்ந்தவராகவும் துரோகியாக எந்நேரமும் மாறுபவராகவுமிருப்பார்.

இயக்கம் போராட்டம் எல்லாம், ஒன்றுக்கும் ஆகாமல் போய்விடும் (இதை ஒரு இயக்கத்தைச் சேர்ந்தப் பாத்திரம் மூலமே ஒன்றரை பக்கத்திற்கு நமக்கு வகுப்பெடுக்கிறார்).

இப்படி மேலே சொன்ன முடிவுகளுக்கு நம்மை எளிதாகக் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறது - "உலோகம்".

ஒருவேளை இம்முடிவுகளை நோக்கி வாசகனை செலுத்துவது மட்டுமே "உலோக"த்தின் நோக்கமாக இருக்குமோ என்று அய்யப்பட வைக்கும் அளவில்தான் இருக்கிறது.

படைப்புக் கண்ணோட்டத்தில் "உலோக"த்தில் ஒன்றுமில்லை ஒரு சராசரி நாவல் அவ்வளவுதான். அரசியல் கண்ணோட்டத்தில் இன்னும் சிறப்பானதொரு விமர்சனத்தை ஈழ அரசியல் குறித்து ஆழ்ந்த அறிவிருப்பவர்கள் யாராவது முன்வைக்கலாம்.