Sunday, September 9, 2007

நமக்கான அறிவியல்...!!!???

நமக்கான மொழி, கலாச்சாரம், இசை, வரலாறு என்று பரவலாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், நமக்கான அறிவியல் என்று ஒன்று இருக்கிறதா என்கிற சிந்தனையின் பயனாக எழுதப்பட்டது இப்பதிவு. இங்கே நாம், நமக்கான, என்று பொதுவான சொல்லாடல் இருப்பதால் இந்த நாம் என்பதற்கான பயன்பாட்டினை விளக்கிவிடுவது நல்லது. நாம் என்பது பழமை பற்றிப் பேசும்போது தமிழர்களையும், பின்னர் நவீன கால எடுத்துக்காட்டுகளின் போது ஒருங்கிணைக்கப்பட்ட மாநிலங்களைக் கொண்ட இந்தியாவையும், குறிப்பதாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. விவாதக் கருத்தின் காலங்களைப் பொறுத்து இந்த நாம் பற்றிய ஒரு புரிதலை வாசகரிடம் விட்டுவிடுகிறேன்.

நமது பண்டைய இலக்கியங்களில் உள்ள அறிவியல் சிந்தனைகள் பற்றிய கேள்வியெழும்போது, எட்டுத்தொகை நூல்களுல் ஒன்று நினைவிற்கு வந்தது. அதில் வேம்பையும் அதன் பண்புகளைப் பற்றி பத்துப்பாடல்கள், வயலில்வாழும் நண்டுபற்றிப் பத்துப் பாடல்கள் என்று தொகுக்கப்பட்டிருக்கும். இப்படி வாழ்வியலோடு இயைந்த பலவற்றைப் பற்றி பத்துப் பத்துப்பாடல்களாக தொகுக்கப்பட்டிருக்கும். இப்போது நிழல்படக்கருவியையும், தொழில்நுட்பத்தையும் வைத்து நேஷனல் ஜியாகரஃபி தொலைக்காட்சி செய்வதை மிக எளிதாக மொழிவடிவத்தில் இலக்கியத்தில் பதியவைத்திருப்பது நிச்சயம் அதிசயிக்க வைக்கின்ற ஒன்று. இலக்கியமும், கலையும், வாழ்வியலுடன் பிண்ணிப் பிணைந்திருந்தால் மட்டுமே இரண்டிலுமே வளர்ச்சியிருக்கும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இருந்தது கிடையாது. அதே போல் சித்தர் பாடல்களில் மருத்துவம், மற்றும், பல அறிவியல் சார்ந்த கூறுகளைக் காண இயலும். இங்கே எடுத்துக்காட்டாக எனக்குத் தெரிந்த சிலவற்றை மட்டுமே கூறியிருக்கிறேன். தமிழை தன்னார்வத்துடன் படித்தவர்கள் நிச்சயம், இதைவிடச் சிறந்த பல உதாரணங்களைக் கூறமுடியும். ஆனால் பக்தி இலக்கியங்கள் பெருகியபின் இலக்கியத்தில் அறிவியல் பார்வை எந்த அளவு இருந்தது என்பதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பதே உண்மை. ஆனால், எல்லாம் நீயே, என்று தொழுது எழுதப்பட்டிருக்கும் அக்கடினமான மொழிவடிவங்களுக்கிடையே அறிவியல் கூறுகளைத் தேடுவது சற்று அயர்ச்சியாக இருக்கிறது என்பதுதான் உண்மை. அப்படியே ஏதாவது தோன்றினால் கூட அது என் கற்பனையா அல்லது பாடலாசிரியரின் உண்மையான கூற்றா என்கின்ற சந்தேகமே விஞ்சுகிறது. எப்படியிருந்தாலும் பண்டைய இலக்கியங்களில் வாழ்வியலோடு சேர்ந்த அறிவியல் கூற்றுகள் நிரம்பக்காணக் கிடைக்கிறது.

நவீன அல்லது தற்போது நாம் வாழ்கின்ற சமூகத்தில் வாழ்வியலும் அறிவியலும் இணைந்து இருக்கிறதா என்பதற்கான தேடுதலில் சிக்கியவற்றைப் பார்ப்போம். நவீன அறிவியலைப் பற்றி நாம் பேசும் முன்னர் இந்த அறிவியல் என்ற வார்த்தையின் பயன்பாட்டினை வரையறுத்துவிடுவது நல்லது. பொறியியல், தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல், கணிதவியல் எனப் பகுக்கப் பட்டகாலங்கள் மாறி எல்லாமே அறிவியல் என்ற ஒரு பொது வரையறைக்குள் மீண்டும் புகுந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதுதான் உண்மை. ஆனால் நமது வசதிக்காக அடிப்படை அறிவியல் பயன்பாட்டு அறிவியல் என இரண்டே பிரிவுகளாக வைத்துக்கொள்வோம். உதாரணமாக ஒரு கோழிமுட்டையை எடுத்துக் கொள்வோம், ஏன் அது கோளவடிவத்தில் இல்லாமல் நீள்கோள வடிவில் இருக்கிறது, அதனுள்ளே இருக்கும் கூழ்மங்கள் ஏன் ஒன்றோடொன்று கலப்பதில்லை என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் தேடுவது அடிப்படை அறிவியல் எனவும், முட்டை உற்பத்தியை பெருக்குவதற்கு, மற்றும் அவற்றைப் பாதுக்காப்பதற்கான சாதனங்களைச் செய்வது போன்றவற்றை பயன்பாட்டு அறிவியல் எனவும் பிரிப்பது ஒரு குறைந்த அல்லது ஏறத்தாழ சரியான வரையறை (close to proper definition) எனக்கொள்ளலாம். ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அறிவியல் வளர்ச்சியும் மிகவும் இன்றியமையாதது என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. இதில் அடிப்படை அறிவியல் என்பது உடனடியாகப் பயன்பாட்டிற்கு உதவாமலும், அல்லது அது ஒரு அறிவுத்தேடல் என்பதோடு நின்றுவிடுவது போலவும் ஒரு தோற்ற மயக்கத்தை அளிக்கக்கூடியது. ஆனால் சற்று உற்றுநோக்கினால் இதுபோன்ற அடிப்படை அறிவியல் சிந்தனைகள் பல பொதுவான அறிவியல் உண்மைகளை விலக்கவல்லவை. ஆதலால் சமுதாயத்தின் மொத்த அறிவியல் வளர்ச்சிக்கு இரண்டுமே இன்றியமையாதது. இப்போது நம்முடைய சமுதாயத்தில் வாழ்வியலும் அறிவியலும் ஒரு சேர இருக்கிறதா என்பதற்கான விளக்கங்களைச் சில எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம்.
ஒரு வசதிக்காக விவசாயம் மற்றும் மருத்துவம் ஆகிய இரண்டையும் முதன்மையாக வைத்துக்கொள்வோம். சமீபத்தில், வெளிவந்த பூங்கா மின்னிதழில் ஒருவர் புற்றுநோய் பற்றியும் அச்சிகிக்கைக்கான மருத்துவச் செலவுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள தொகைகள் மலைக்க வைக்கின்றன, நடுத்தர வர்க்கத்து மக்களால்கூட கொடுக்க இயலாத ஒரு தொகை. இந்த தொகை மிகுதியாக இருப்பதற்குப் பல சமுதாய மற்றும் மருத்துவமனையின் பேராசை எனப் பல காரணங்கள் இருந்தாலும், ஒரு நேரடிக்காரணமாகப் பல வெளிநாட்டு மருத்துவக் கருவிகளுக்கான இறக்குமதிச் செலவு மிகுதியாக இருப்பதுவும் ஒன்றாகும். இங்கே அறிவியலின் பயன்பாடு என்ன செய்துவிடமுடியும் என்பதையும் ஒரு எடுத்துக்காட்டுடன் பார்த்துவிடலாம். தமிழகத்தில் உள்ள அரவிந்த் கண்மருத்துவமனை, 1990 ஆம் ஆண்டுவரை கேடராக்ட் சிகிச்சைமுடிந்தபின் பொருத்தப்படும் கான்டாக்ட் லென்சுகளை தலா 200$ என்கின்ற மதிப்பில் இறக்குமதி செய்தன. ஆனால் அவற்றை நம் நாட்டிலேயே தயாரித்து, மற்றும் அதற்கான தொழில்நுட்பத்தையும் தாமே வடிவமைத்து, பின்னர் இந்திய விஞ்ஞான மையத்தில் உள்ள ஒரு ஆய்வகத்துடன் இணைந்து, அந்த லென்சுகளின் புறப்பரப்பை ஃபுளோரினேற்றம் செய்து பயன்பாட்டினை மேம்படுத்துதல் ஆகியவற்றைச் செய்து தற்போது அதே லென்சுகளை தலா 5$ என்கின்ற மதிப்பில் ஏற்றுமதி செய்கின்ற அளவிற்கு வளர்ந்துள்ளனர்[1].
சமீபத்தில் ரிலையன்ஸ் மற்றும் வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்களின் வருகையை ஆதரித்து ஒருவர் கூறுகிறார் "மூக்கைச் சிந்திப்போட்ட கைகளால் அளக்கப்படும் காய்கறிகளையும், நசுங்கி, அழுகிய பழங்களையும் எத்தனை நாட்களுக்கு உண்பது" என்று. ஏதோ அவர்கள் தங்களுடைய மூக்கை ஒழுகிய நிலையில் வைத்துக் கொண்டிருப்பதையே பெருமையாக நினைப்பது போலவும், நகரத்து மக்களுக்கு அழுகிய பழங்களையும் காய்கறிகளையுமே விற்பது என்று சபதம் எடுத்திருப்பது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இந்தியாவின் பழங்கள் மற்றும் தானிய உற்பத்தி மேம்பட, அல்லது எதிர்பார்த்த அளவு மேம்படாமல் இருப்பதற்கான காரணிகளாக, தன்னுடைய 2006 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் உலக வங்கி சிலவற்றை முன்வைக்கிறது. அவற்றுள், போதிய மின்சார மற்றும் நீர்வளமின்மை, போதிய சேமிப்பு வசதிகள், கிடங்குகள் இல்லாமை எனப்பலக் காரணங்களையும் கூறியுள்ளது[2]. மேலும் வேதியல் உரங்கள் மற்றும் பருவகால மாற்றங்களால், பயிர்களைத்தாக்கும் புதியவகை நோய்க்கிருமிகள், என இவையும் உற்பத்தியை வெகுவாக பாதிக்கக்கூடியவை. இங்கே சமுதாய அடிப்படையிலான பல்வேறு இன்னல்கள் இருந்தாலும் அறிவியல் துணைகொண்டு அழிக்கக்கூடிய நேரடிப் பிரச்சனைகளை மட்டுமே கூறியுள்ளேன்.
இவை போன்ற சில வாழ்வியல் பிரச்சனைகளுக்கான தீர்வுகளில் நம்முடைய தேசிய விஞ்ஞான ஆய்வகங்கள் மற்றும் பல்கலைக்கழங்களின் பங்களிப்பு என்பது இல்லையென்றே சொல்லலாம், அல்லது மிகமிகச் சொற்பம் என்று சொல்லலாம். இப்பங்களிப்பை நிகழச்செய்வதற்கு, இந்தியாவின் பல்கலைக்கழகங்கள், மற்றும் தேசிய நிறுவனங்கள் என அனைத்தும், சமுதாயத்தில் கடைநிலையில் உள்ள அடிப்படைப் பிரச்சனைகளுக்கான அறிவியல் தீர்வுகளில் தங்களது ஆராய்ச்சிகளை ஈடுபடுத்த வேண்டும், அல்லது ஈடுபட அரசால் ஊக்குவிக்கப்பட வேண்டும். இவைபோன்ற ஆராய்ச்சிகள் அடிப்படை மற்றும் பயன்பாட்டு அறிவியல் என இரண்டிலும் ஒரு சேர மேம்படவேண்டும். இப்படியான ஒரு முன்னேற்றம் நிகழ இந்தியாவிலுள்ள, பல்கலைக்கழங்கள், மற்றும் ஆராய்ச்சிக் கூடங்கள் ஆகியவற்றுக்கிடையே ஒரு கூட்டு முயற்சிக்கான இணைப்பு மிக அவசியம். இக்கூட்டுமுயற்சி பல வகைகளில் பயனளிக்கக் கூடியது, 1. ஒரே வழிமுறையில், ஒரே பிரச்சனைக்கானத் தீர்வை இருவர் அல்லது இருகுழுக்கள் முயல்வதைத் தவிர்க்கும், 2. ஆராய்ச்சிக் கூடங்களிலும், பல்கலைகழக ஆய்வகங்களிலும் இருக்கும் உபகரணங்களைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளிக்கும், 3.சிந்தனைப் பகிர்வுகள் எனப்பல வகைகளில் இந்தக் கூட்டுமுயற்சி உதவிபுரியும். பல்கலைக்கழக அறிவியல் துறைகளை, தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் (DST/CSIR) துறையின் ஆய்வகங்களுடன் இணைத்தல். இங்கே இணைத்தல் என்பது தேசிய ஆய்வுக்கூடங்களில் இருக்கும் விஞ்ஞானிகளையும், பல்கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கிடயேயான கலந்துரையாடல் மற்றும் ஆய்வுகளை ஒருசேரச் செய்தல் என்ற அர்த்தத்தில் புரிந்துகொள்ளவேண்டும். மேலும் பல்கலைக்கழகங்கள், கடைநிலை மக்களிடம் நேரடித்தொடர்புள்ள, மருத்துவமனைகள், வேலாண் அலுவலகங்கள் ஆகியவற்றுடனான தொடர்புகளை அதிகப்படுத்தவேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் நாட்டின் தேசிய ஆராய்ச்சிக் கூடங்களுக்கும், மக்களுக்குமான ஒரு தொடர்பு அல்லது உறவைப் பலப்படுத்தமுடியும்.
இங்கே, முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது, இந்தத் தொடர்பு ஏதோ ஏட்டில் படித்தவன் ஏட்டில் படிக்காதவனுக்கு அளிக்கும் அறிவுரையாக இல்லாமல் இருவழிப்பாதையாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் பல தலைமுறைகளாக ஒரு துறையில் அனுபவம் உள்ளவர்கள் ஏட்டில் படித்ததைவிட சிலவற்றில் மதிநுட்பம் உடையவர்களாக இருப்பர். இதற்கு உதாரணமாக இயற்கை விவசாயத்தைக் கொள்ளலாம். மேலும், மரக்காணம் பாலா அவர்களின் புகைப்படங்களில் பனங்கள்ளில் பல்லி விழுந்தால் அது நச்சுத்தன்மை பெறுவதில்லை எனவும் குறிப்பிடிருந்தார். இதை நேரில் கண்ட மற்றும் புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில் அனுபவ உண்மையாகக் கொள்வோம். இவை போன்ற அனுபவ அறிவுகளின் பின் உள்ள அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்தால் அவை மிகுந்த பயனளிக்கக்கூடும். உதாரணமாக, பல்லி விழுந்தால் அக்கள் ஏன் நச்சுத்தன்மை பெறுவதில்லை என்பதை உயிர்வேதியல் மற்றும் மூலக்கூறு அடிப்படையிலான ஒரு ஆய்வை அருகிலுள்ள பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகமும், தேசிய வேதியல் ஆய்வகமும் இணைந்து கண்டறிவதாகக் கொள்வோம். இக்கண்டுபிடிப்பானது, சத்துணவுக் கூடங்களில் உணவில் பல்லி விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கான ஒரு மருந்து தயாரிக்கப்பயன்படலாம். ஆதலால், மக்களுக்கும் ஆராய்ச்சி மையங்கலுக்குமான உறவு இருவழிப்பதையாக இருக்கவேண்டியது அவசியம்.
இப்படி ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சி நடைபெறுவதற்கு நிச்சயம் மூலதனம் ஒரு தடையல்ல, ஏனெனில், 2005-06 ஆம் ஆண்டிற்கான நிதியாண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான வளர்ச்சி நிதியில் 20% செலவிடப்படவேயில்லை எனக்கூறுகிறார் குடியரசுத் தலைவர் [3]. அதனால் பழியை எளிதாக அரசியல்வாதிகளின் மேல்போட்டுவிட்டுத் தப்பிக்க முடியாது. ஆனால் இது சாத்தியப்படுவதற்கு, தேசிய நிறுவனங்கள், பல்கலைக்கழங்களைத் தாழ்வாகவும், பல்கலைக்கழகங்கள் அவற்றுக்குக் கீழுள்ள கல்விநிறுவனங்களைத் தாழ்வாகவும் நோக்காமல் இருக்க வேண்டும். இந்த ஏற்றத்தாழ்வு மனப்பான்மை நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு நிச்சயம் பெருந்தடையாக இருக்கும். ஆக, நமக்கான அறிவியலைச் சாத்தியப்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த பல அறிவியல் கூட்டணிகள் தேவைப்படுகிறது.
எல்லாம் சரி, 70% கிராமப்புற மாணவர்களைக் கொண்ட நம் நாட்டில் உள்ள பாடப்புத்தகத்தில், குடும்பப் படத்தில் தந்தையார் கப் அன்ட் ஸாசரில் தேநீர் அருந்துவது போன்ற படங்களுடன் கூடிய கல்வித்திட்டத்தையும், காலையில் அணுக்கரு இணைவு மற்றும் பிளவு பற்றிப் பாடம் நடத்திவிட்டு மாலையில் வீட்டில் தம் குழந்தைகளுக்கு அனுமார் சூரியனைப் பிடித்த கதைகளைச் சொல்லும் ஆசிரியர்களையும், இந்தப் பட்டம் வேண்டுமா இவ்வளவு கொடு என்று கேட்கின்ற பல்கலைக்கழகங்களையும், மனுதர்மத்திர்க்கு எவ்வித தீங்கும் வந்துவிடக்கூடாது என்று கவனத்துடன் அதன் சுற்றுச்சுவர்களுக்குள் பாதுகாக்கும் பணியிலேயே பாதி நேரத்தைச் செலவிடும், இந்திய விஞ்ஞான, தொழில்நுட்ப, மருத்துவ மற்றும் மேலாண்மை நிறுவனங்களையும், மற்றும் விண்வெளிக்குச் செயற்கைகோள் அனுப்பும் போதுகூட இராகு காலம் எமகண்டம் பார்க்கும் ஆராய்ச்சிக் கூடங்களையும், வைத்துக் கொண்டு நான் ஒரு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் நமக்கான அறிவியல் என்று கனவு காண்கிறேன் என்பது உண்மைதான். என்ன செய்வது 2020 க்குள் இந்தியாவை வல்லரசாக்க வேண்டுமே அதனால்தான் கனவு காண்கிறேன். சரி ஒன்றும் கவலைப்படாதீர்கள், அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் வந்துவிட்டது, அணுகுண்டுகளைக் கூடையில் சுமந்து விற்றாவது வல்லரசாக்கிவிடலாம். என்ன இது இவ்வளவு துர்நாற்றம், ஓ வீட்டின் கீழே இருக்கும் பாதாள சாக்கடைக் குழி நிரம்பிவழிகிறது, இந்த நாற்றத்தால் கனவு பெரிதும் தடைபடுகிறது. அந்த சாக்கடைக்குள் மூழ்கி அடைப்பை எடுக்கும் தொழிலாளி நாளைதான் வருவாராம், அதனால் என்ன.. நம் வல்லரசுக் கனவுகளை ஒரு நாள் ஒத்திவைப்போம்.
[3] K.S. Jayaraman, Nature, vol 445, 134 (2007).

9 comments:

ஆழியூரான். said...

வியக்க வைக்கிற தரவுகளுடன் எழுதப்பட்டிருக்கும் கட்டுரை. அறிவியலின் ஆய்வு பிரிவுகளை சுட்ட நீங்கள் பயன்படுத்தியிருக்கிற முட்டை உதாரணம் எளிமையாகவும் புரிந்துகொள்ள வசதியாகவும் இருக்கிறது. கட்டுரை, இடையிடையே பேசுபொருளிலிருந்து விலகிச்செல்வதாக தோன்றுகிறது.

பழைய இலக்கியங்களில் நமக்கான அறிவியல் செய்திகள் ஒழிந்திருப்பதாக பேசுகிறோம். அதில் உண்மையும் இருக்கலாம்/இருக்கும். அதே சமயம், நெற்றியில் திருநீறு பூசுவது முதல் கோயிலுக்குள் பெண்கள் ஏன் வரக்கூடாது என்பது வரைக்கும் பல மூடத்தனங்களை தன்னகத்தேக் கொண்டிருக்கும் இந்து மதம், அவற்றுக்கெல்லாம் இப்போது ஒரு அறிவியல் பின்னணிக் கொடுப்பதையும் கவனிக்க வேண்டும். இன்னும் கொஞ்ச காலத்தில் சாதி, தீண்டாமை, சிவன்.. என அனைத்துக்கும் இவர்கள் அறிவியல் பூர்வமான விளக்கங்களைத் தரக்கூடும். அதனால், பழைமையின் அறிவியல் பற்றிய வாதங்களில் ஒழிந்திருக்கும் அரசியல் பற்றியும் கவனித்தாக வேண்டியிருக்கிறது.

(மற்ற கட்டுரைகளை இன்னும் படிக்கவில்லை. படித்துவிட்டு வருகிறேன் நண்பா..)

ranjith said...

தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி திரு. அழியூரான். பதிவை முடித்தபின் எனக்குக் கூட அந்த தொடர்பற்ற ஒரு தன்மை இருப்பது போன்ற ஒரு நெருடல் இருந்தது உண்மை. கட்டுரையை எனது ஏட்டில் எழுதி முடித்த பின்னர் தட்டச்சு செய்யும் போது அதிலிருந்து சில பத்திகளை விலக்கிவிட்டேன், அதுகூடக் காரணமாக இருக்கலாம். இனி வரும் பதிவுகளில் தரத்தை உயர்த்திக் கொள்ள முயற்சிக்கிறேன்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள போலி அறிவியல் பற்றிய கருத்துக்களுடன் முழுவதும் உடன்படுகிறேன். அவை போன்றவற்றைக் களைவது அறிவியல், மற்றும் அறிவியலாளார்களின் தலையாய கடமை என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் அதைப்பற்றி வேறு பதிவில் பேசலாம் என்ற எண்ணத்தில் தீவிரமாக விவாதிக்கவில்லை.

- உடுக்கை முனியாண்டி said...

தமிழ் இணையத்தில் அறிவியலைப் பற்றிய சிந்தனைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே காணப் படும் வேளையில் இப்படியான கட்டுரை மிகத் தேவையான ஒன்று.

கட்டுரைக்கு நன்றி.

Gven said...

அறிவியலின் பெயரால் சில சமயம் மக்கள் ஏமாற்றப் படுவதும் உண்மை,
நமது பாரம்பரிய (திராவிட) வழிகளில் உள்ள அறிவியலை ஆராய்ந்து அதை பயன்னுள்ள வகையில்
பயன்படுத்த முயற்ச்சி செய்வது சிறந்தது என தோன்றுகிறது.

ஜமாலன் said...

நண்பர் ரஞ்சித்திற்கு..

ரொம்பவும் நிலமைகளை அற்புதமாக அலசக்கூடிய ஒரு கட்டுரைர. உங்களிடம் ஒரு சுயத்தன்மையும் சிந்தனையும் எழுத்தும் உள்ளது. பாராட்டுகக்ள. நீங்கள் கூறியுள்ள ஒருங்கிணைந்த ஆய்வு முறை அவசியமானதுதான். நமக்கான அறிவியல் குறித்து மக்கள் அறிவியல் இயக்கம் ஒன்று முன்பு துவங்கப்பட்டு சிறிதுகாலம் இயங்கினார்கள். பின நின்ற போனது. தற்பொழுது அந்த விழிப்புணர்வை பெறுவதற்கான முயற்சி பற்றி பேசுகிறது உங்கள் கட்டுரை.

நான் இரண்டு விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதி உள்ளேன். 1. பிரபஞ்ச அலைவில் ஐந்தாம் விசை - fifth force பற்றிது. 2. உடல்களின் எண்ட்ரபி - வெப்ப இயக்கவியலைப் பயன்படுத்தி சிந்தனைமுறை பற்றிய ஒரு மாதிரி..

அவைகள் கொஞ்சம் கடுமையான நடையில் இருப்பதால் புரிதல் பிரச்சனை வரலாம் என பதிவில் வெளியிடவில்லை. இருந்தாலும் as a record ஆக அதை சீக்கிரத்தில் வெளியிடலாம் என உள்ளேன்.

நீங்கள் எனக்கு மின் அஞ்சல் அனப்பினால் அதனை உங்களுக்கு PDF ல் அனுப்புகிறேன்.

உங்களது அறிவியல் குறித்த சிந்தனைகள் என்னுடன் ஒத்ததிர்வு கொண்டதாக உள்ளது. பேசலாம்..

கையேடு said...

//நமது பாரம்பரிய (திராவிட) வழிகளில் உள்ள அறிவியலை ஆராய்ந்து அதை பயன்னுள்ள வகையில் //

நன்றி திரு. அறிவியல் ஆயிரம். ஆனால், அறிவியல் உண்மைகள் எந்தப் பாரம்பரியத்தில் இருந்தால் என்ன, ஏற்றுக்கொள்ள வேண்டியவைதான்.

நன்றி திரு.ஜமாலன்.

Joseph Paulraj said...

ஒருங்கிணைந்த ஆராய்சி திட்டங்கள் தேவை என்னும் உங்கள் கருத்து மிக தேவையானது.
நம் நாட்டில் அறிவியல் ஆய்வுக்கூடங்களும், அறிஞர்களும் மிகுதியாய்தான் இருக்கின்றார்கள். ஆனால் எல்லோரும் அடிப்படை அறிவியலில்தான் கவனம் செலுத்துகின்றார்கள் போல.
வாழ்வியலசார்ந்த ஆய்வுகளில் கவனம் செலுத்தினால் எத்தனையோ புதுகண்டுபிடிப்புகளை படைத்திருக்கலாமே?

புத்தகத்தில் உள்ளதை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் மெக்காலே கல்வி முறையில் இருந்து நாம் வெளிவரவேண்டியது காலத்தின் கட்டாயம்.
உங்களை போன்ற திறமையாளர்கள் வெளிநாட்டில் கற்க வேண்டியவைகளை விரைவில் கற்றறிந்துவிட்டு, விரைவில் தாய்நாடு திரும்ப வேண்டும்.
நான் எல்லாம் நாட்டைவிட்டு வெளியே இருப்பது நாட்டுக்கு நல்லது என்றால், நீங்கள் எல்லாம் நம் நாட்டிலேயே இருப்பது தான் நாட்டிற்கு நல்லது.

கையேடு said...

//எல்லோரும் அடிப்படை அறிவியலில்தான் கவனம் செலுத்துகின்றார்கள் போல.
//

அடிப்படை அறிவியலிலும் மிகவும் பின்தங்கித்தான் இருக்கிறோம்.

நன்றி பால். :)

Anonymous said...

[p]50 classic [url=http://www.louissvuittonbags2012.com]vintage louis vuitton bags[/url] Louis Vuitton Alma handbags
Louis Vuitton Epi leather series was given a color magic, burst out of a whole new outlook . The brand new the [url=http://www.lvbagsfactoryoutlet.com]lv handbags outlet[/url] Epi series of magic debut . Gucci and Louis Vuitton launched the quaint charm of advertising and marketing activities, the ad shows craftsmen [url=http://www.lvbagsfactoryoutlet.com]lv bags outlet[/url] painstakingly screen productions . The director of this video --- Aur篓娄lien Dupuis, already in the last few quarters Longchamp "Longchamp" producer [url=http://www.llouisvuittononlineshopping.com]where to buy louis vuitton online[/url] of a series of fun and creative video . The interaction of the people sharing the fluorescent color bag with tide
In 2013, you influx of people has its own beloved bag, Xiao [url=http://www.lvbagsfactoryoutlet.com]lv outlet online[/url] Bian personally very fond of is bright the color of the fluorescence package . 8, suede leather requires the use of soft animal brush to remove surface dust and dirt, pollution is more serious, may be tried with an eraser gently push bulk remove dirt evenly to the Quartet . Temi as its most [url=http://www.louissvuittonbags2012.com]buy louis vuitton bags[/url] high-end series, Trolltech pinnacle ultimate . 8, suede [url=http://www.lvbagsfactoryoutlet.com]lv factory outlet[/url] leather requires the use of soft animal brush to remove surface dust and dirt, pollution is more serious, may be tried with an eraser gently push bulk remove dirt evenly to the Quartet.[/p]