Wednesday, October 17, 2007

இருவழிப்பாதை - தோழியுடன் ஓர் பயணம்


நீ எப்போது எப்படி எனக்கு அறிமுகமானாய் என்றெனக்கு நினைவிலில்லை. எத்தனையோ அறிமுகங்களின் நிகழ்வுகள் நினைவற்றுப் போவதுபோல் உன்னுடைய அறிமுக ஆச்சர்யங்கள் எதுவும் நினைவில் இல்லை. ஆனால் உன்னுடனான உறவு இனி இறுதிவரை நீளப்போகின்ற ஒன்று என்பது உனக்கு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

நிகழ்வுகளின் தாக்கங்களில் சலிப்புற்றிருந்தாலும் சரி, சோம்பலின் வெளிப்பாடாய் முடங்கிக் கிடந்தாலும் சரி, நான்கு சுவற்றுக்குள் சிறைவைத்துக்கொண்ட என்னைப் பிடரியில் இடித்து, எனக்கும் இவ்வுலகிற்குமான நெருக்கத்தைப் புரிய வைப்பாய். அறைக்குள் முடங்கிக் கிடந்த என்னை அழைத்து மழைச் சாரலின் இன்பத்தையும், மாமரக் குயிலின் ஒலியீர்ப்பையும் உணர வைத்தவள் நீ. துக்கம், இன்பம், சலனம் என்றெந்தவொரு மனோநிலையையும் ஒரு மெல்லிய தென்றலினுதவியில் சீர்செய்து சமன் செய்யும் வித்தையை நீ எங்கு கற்றாய்.

உன்னுடனான இருத்தலைவிட உன்னோடான எனது பயணங்கள் எப்போதும் சுகமளிப்பவை. என்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்து இன்றுவரை, ஏன் என்றுமே உன் தோள்களில் தலைசாய்த்து பயணிப்பதையே விரும்புகிறேன்.


என் பயணங்களின் நோக்கமும், மார்க்கமும் எதுவாயினும் உன்னுடனான பயணம் ஒரு சுகானுபவமே. இவ்வுலகத்தின் பல்வேறு பிரதேசங்கள், மக்கள், அவர்களின் வாழ்வியல், அறிமுகமில்லாக் குழந்தைகளின் கையசைப்பு அறிமுகம் என்று உன்னோடு கதைத்துக்கொண்டே செய்த எனது வாழ்வியல் பயணங்களில் எனது வாழ்க்கைப்பயணத்தை செழுமைப்படுத்தினாய்.
ஊடலும் கூடலும் கலந்த களவுவாழ்வுபோல் உன்னுடனான பூசல்கள், உன் கண்களை மறைத்து ஆடை அணிவித்து என் ஆடை களைந்த வேளைகள் மட்டுமே. என்ன செய்வது நீ என்னை மட்டுமா இவ்வுலகிற்கு அறிமுகப் படுத்துகிறாய், எப்போதும் இருவழிப்பாதையாகவே இருக்கிறாய்.
நீயில்லாத ஒரு அறை சிறைக்கூடமாகவும், நீ இல்லாத ஒரு வாழ்வு தண்டனையாகவும் இருப்பதில் வியப்பொன்றுமில்லை.
உன் தோழமையின் பெருமையுணர்ந்ததால்தான் பில்கேட்ஸ் கூட அவர் மென்பொருளுக்கு "windows" என்று உன் பெயரை வைத்திருப்பாரோ...!!!

4 comments:

Unknown said...

தலைவா!
தாங்களின் இரு வழிப்பாதை இனிதே தொடர்ந்து
இனிமைகளின் அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ள
விரும்பும்

அன்புடன்
அன்பரசு.ம

கையேடு said...

வாங்க அன்பு, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//தலைவா!// ... இருக்கிற தலைவருங்க போதுங்க.

ஜமாலன் said...

//உன் தோழமையின் பெருமையுணர்ந்ததால்தான் பில்கேட்ஸ் கூட அவர் மென்பொருளுக்கு "windows" என்று உன் பெயரை வைத்திருப்பாரோ...!!!//

நானும் சீரியஸான காதல் கதை போலிருக்கு என்ற படித்தேன்.. அருமை.

//உன்னுடனான இருத்தலைவிட உன்னோடான எனது பயணங்கள் எப்போதும் சுகமளிப்பவை. என்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்து இன்றுவரை, ஏன் என்றுமே உன் தோள்களில் தலைசாய்த்து பயணிப்பதையே விரும்புகிறேன்.//

மழை வருவதுபோன்ற மூட்டம் கொண்ட வானத்தின் அரை இருளில் மாலைநேர குளீர்காற்றை சுவாசித்தபடி பயணிப்பது ஒரு சுகாணுபவம்தான். எனக்கம் பிடித்தமான ஒன்றுதான்.

கையேடு said...

நன்றி திரு. ஜமாலன் - நீங்கள் எனது பதிவைப்படித்ததோடல்லாமல், பாராட்டிப் பின்னூட்டமிட்டது இரயில் பயணங்களில் சன்னலோர இருக்கை கிடைத்த குழந்தையின் குதூகலத்தைக் கொடுத்தது.