

இந்தியா - அமெரிக்கா இடையேயான உடன்படிக்கையைப்பற்றிப் பல காரசாரமான விவாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், பொதுவெளியில் பெரிதும் பேசப்படாத சிலவற்றை இங்கே பதித்து வைக்கிறேன்.
அணு ஆற்றல் மற்றும் அணு உலைகள் தொடர்பான தொழில்நுட்பங்களில் இந்தியாவிற்கும் வெளிநாடுகளுக்கும் இருக்கும் தொடர்பு ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகால வரலாறு. அதைப்பற்றிய சில குறிப்புகளை இங்கே காண முடியும்[1]. சமீபத்திய இந்திய - அமெரிக்கா உடன்பாட்டினைப் பற்றி நமது பிரதமர் திரு. மன்மோகன் சிங் மற்றும் அமெரிக்க அதிபர் திரு. புஷ் இந்தியாவிற்கு வருகை புரிந்தபோது வெளியிட்ட கூட்டறிக்கையில், இவ்வுடன்படிக்கை, மருத்துவம், பொருளாதாரம், கல்வி மற்றும் ஆராய்ச்சி, இராணுவப் பயிற்சி மற்றும் முக்கியமான இந்த அணு ஆற்றல் துறையின் வளர்ச்சி என அனைத்துவகையிலும் இவ்வுடன்படிக்கையினால் இந்தியா பெறும் நன்மைகளைப் பட்டியலிட்டனர்[2].
இவ்வுடன்படிக்கையினால் இந்தியா பெறும் நன்மைகளைப் பற்றிப் பலரும் பட்டியலிட்டுள்ள இவ்வேளையில், இவ்வுடன்படிக்கையினால் அமெரிக்காவிற்கு என்ன லாபம். ஏன் இந்தியாவின் மேல் அதற்கு இவ்வளவு அக்கறை..???? எனப் பலத் தொடர்கேள்விகள் எழுவது நியாயமான ஒன்று.
இவ்வுடன்படிக்கையில் கையொப்பமிட்டு வெள்ளை மாளிகையில் அதிபர் புஷ் தம் மக்களுக்கு ஆற்றிய உரையில் இவ்வுடன்படிக்கைப் பற்றி நான்கு முக்கியமான காரணிகளை குறிப்பிட்டுள்ளார் [3,4].
(i) இவ்வுடன்படிக்கை ஆற்றல் துறையில் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவைப் பலப்படுத்தும். மேலும், உலகில் தற்போது ஆற்றல் தேவை மற்றும் பயன்பாட்டில் ஐந்தாம் இடத்தில் இந்தியா இருப்பதாகவும், மேலும் இத்தேவை 2015 ஆம் ஆண்டிற்குள் இருமடங்காக உயரும் எனவும், இத்தேவையை இந்தியா நிறைவேற்றிக்கொள்ள இந்தியாவிற்கு உதவுவதற்காகவும், சுற்றுப்புறச் சூழலுக்கு ஊறுவிளைவிக்காத வண்ணம் ஆற்றல் உற்பத்தியைப் பெறுக்கிக் கொள்ளவும் இவ்வுடன் படிக்கை உதவும். [this act will strengthen cooperation between India and United states on Energy, one of the most important challenges of the 21st Century].
(ii). இவ்வுடன்படிக்கை பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும். அமெரிக்காவின் அணுக்கரு தொழில்நுட்பத்தில் முதலீடு செய்திருக்கும் தொழிற்சாலைகளுக்கு இந்தியா ஒரு புதிய வர்த்தகமாக விளங்கும். [This Act will help economic growth...]
(iii). இவ்வுடன்படிக்கை, ஆற்றல் உற்பத்தியில் தற்போது 70% நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்வதால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசுக்களிலிருந்து இந்தியா தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வழிவகுக்கும். மேலும் வளிமண்டலத்தை மாசுபடுத்தாமல் இந்தியா தன் ஆற்றல் தேவையை பூர்த்தி செய்துகொள்ள வழிவகுக்கும். [This act will help make it possible for India to reduce emissions and improve its environment].
(iv). இவ்வுடன்படிக்கை இந்தியாவை அணு ஆயுதத் தடுப்புக்கான சர்வதேசமுயற்சிகளில் பங்கெடுக்க வழிவகுக்கும். இதன் மூலம் அது அமெரிக்காவின் பாதுகாப்பிற்கும் வழிவகுக்கும். [This Act will help keep america safe, by paving way for india to join the global effort to stop the spread of nuclear weapons].
மேலும் புஷ் தமது உரையில், அமெரிக்காவும், இந்தியாவும் தங்களுக்கிடையே ஆழ்ந்த நட்பையும், நேசத்தையும் கொண்ட நாடுகள் என்றும், இவ்விரண்டு குடியரசுகளும் தீவிரவாதத்திற்கெதிரான போரில் ஒருங்கிணைந்து செயல்படும் என்றும் குறிப்பிட்டுகிறார். மேலும், இவ்வுடன்படிக்கை ஏற்படக் காரணமாக இருந்த அனைத்து அமெரிக்க அலுவலர்களையும், அக்கூட்டத்திற்கு வருகை புரிந்திருக்கும் இந்திய அமெரிக்கப் பிரதிநிதிகளையும், இவ்வுடன்படிக்கை ஏற்படுவதற்காக அவர்கள், இந்தியா மற்றும் அமெரிக்கவில் அவர்கள் ஆற்றிய பணி முக்கியம் வாய்ந்தது என்றும் புகழுரைத்திருக்கிறார் [4].
எப்படிப் பார்த்தாலும் புஷ் அவர்கள் கூறியிருக்கும் நான்கு காரணிகளில் அமெரிக்காவிற்கு இலாபகரமாக இருக்கப் போவது, இரண்டு காரணிகள்தான். அமெரிக்க அணு உலைத் தொழிற்சாலைகளுக்கான புதிய மற்றும் நிரந்தரமான வர்த்தகமாக இந்தியாவை மாற்றுவது, மற்றும் அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கெதிரான புனிதப் போர்களில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர்களுக்குத் துணைபோவது. இதுதான் அமெரிக்கா பெறும் லாபம் அல்லது பயன் என்பதை புஷ்ஷின் உரையிலுருந்து தெளிவாக உணர முடிகிறது. மற்றயிரண்டு காரணிகளும், இந்தியாவிற்குச் சாதகமானது போல் தோன்றினாலும் மறைமுகமாக அவை முந்தய இரண்டு காரணிகளுக்கான துணைக்காரணங்கள் என்பது தெளிவாகிறது.
இடையில் யார் இந்த இந்திய அமெரிக்கர்கள்? அவர்கள் ஏன் இந்த உடன்படிக்கை ஏற்பட பாடுபடவேண்டும். அவர்களுக்கு இந்திய-அமெரிக்க வெளியுறவு உடன்படிக்கையில் வெள்ளை மாளிகை ஏன் நன்றி கூறுகிறது? இவர்கள் சில தலைமுறைகளுக்கு முன்னால் அமெரிக்காவில் சென்று குடியேறி குடியுரிமை பெற்ற இந்தியர்கள். அமெரிக்க அரசியலில் இவர்கள் பங்கு தற்போது தவிர்க்கமுடியாததாகிவிட்ட ஒன்று. இவ்வுடன் படிக்கையை செயல் படுத்த இவர்கள் முனைப்புடன் இருக்கக் காரணம், பதிலுதவியாக அமெரிக்க அரசாட்சித் துறைகளில், குறிப்பிட்ட சில பணியிடங்களில் இவர்களையோ அல்லது இவர்களது வாரிசுகளையோ அமர்த்துவதற்கு இருக்கும் தடைகளைத் தளர்த்த அமெரிக்கா பரிசீலித்திருக்கிறது. மேலும், ஹிலாரி மற்றும் ஒபாமா போன்ற தேர்தல் போட்டியாளர்களுக்கு இவர்களது ஒருங்கிணைந்த வாக்கு எண்ணிக்கை முக்கியம் வாய்ந்ததாகிறது[5]. இவர்களது அரசியல் நடவடிக்கைகளைப் பற்றி வேறு தனி பதிவில் விரிவாகப் பார்க்கலாம். ஆனால் இவ்வுடன்படிக்கையில் இவர்களின் தலையீடு புறக்கணிக்க முடியாத ஒன்று.
அமெரிக்கத் தரப்பில் முன்னிறுத்தப்பட்ட காரணிகள் இவ்வாறிருக்கையில் இந்தியா அறிவியல் ரீதியாக முன்வைக்கும் சில வாதங்களைப் பற்றிப் பார்ப்போம். இந்தியத் தரப்பில் பலதரப்பட்ட நன்மைகளை முன்வைத்தாலும் அணு ஆற்றல் துறையின் தற்போதைய நிலைமையையும் பங்களிப்பையும் மட்டும் விமர்சித்திருக்கிறேன்.
முதலில் இந்தியா ஏன் யுரேனியம் தாதுக்களை இறக்குமதி செய்யவேண்டும்? இந்தியாவிலுள்ள பெரும்பாலான அணுக்கரு உலைகள், இந்தியாவிலுள்ள யுரேனியம் தாதுவின் தட்டுப்பாட்டை மனதில் வைத்தே வடிவமைக்கப்பட்டவை. இதற்காக நிச்சயம் விஞ்ஞானி ஹோமி பாபாவின் விஞ்ஞான அறிவிற்கு இந்தியா கடமைப்பட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள யுரேனியம் தாதுவின் தரம் மற்றும் அளவு மிகவும் குறைவு. சர்வதேசத் தர அடிப்படையில் 0.06% தான் இந்தியாவிலுள்ள யுரேனியத் தாதுவின் அளவு. அமெரிக்கா, கனடா போன்ற சர்வதேச நாடுகளில் 0.25% என்ற தர அளவிற்குக் கீழுள்ள நிலப் பகுதிகளை அந்நாடுகள் யுரேனியச் சுரங்கங்களாகப் பயன்படுத்துவதில்லை. அப்படியானால் இந்தியாவில் யுரேனியம் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம்[7]. இப்படி 0.06% தாதுவை வைத்துக்கொண்டு ஆற்றலைப் பெருக்க நினைப்பது நிச்சயம் பாராட்டத்தக்க செயல் அல்ல. யுரேனியத் தேவைக்காக மேலும் மேலும் தாதுக்களை வெட்டுவதனால் இயற்கைச் செல்வங்கள் பலவற்றை இழக்கும் அபாயம் உள்ளது. இந்தக் கண்ணோட்டத்தில் யுரேனியம் தாதுவை இறக்குமதி செய்வது என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடுகிறது.
அப்படி யுரேனியம் தாதுவை இறக்குமதி செய்வது தவிர்க்க முடியாத ஒன்று என்றால், யுரேனியம் ஏற்றுமதி மற்றும் தரம் ஆகியவற்றில் முதல் இடத்தில் இருக்கும் கனடாவிடம்தானே உடன்படிக்கையை செயல்படுத்தியிருக்க வேண்டும்[6]. அதைவிடுத்து சர்வதேச அளவில் யுரேனியத் தாதுக்களின் அளவு மற்றும் தர வரிசையில் 13 வது இடத்தில் இருக்கும் இந்தியா 8 ஆம் இடத்தில் இருக்கும் அமெரிக்காவுடன் ஏன் உடன்படிக்கை செய்துகொள்ளவேண்டும், என்ற கேள்வி எழுவதை தவிர்க்கமுடியவில்லை.
இவற்றுக்கெல்லாம் ஏதாவது புத்திசாலித்தனமாக மற்ற ஆதாயங்களைப் பேசினாலும், வல்லரசுக் கனவு காணும் இந்தியாவின் அணுக்கரு உலைகளின் தரம், குறுகிய காலத்தில் வல்லரசாகத் துடிக்கும் மக்களின் தேசப்பற்றையும் எப்படி பிரதிபலிக்கிறது என்று பார்ப்போம். இந்தியாவைப் பொறுத்தவரை இரகசியங்கள் என்பது, அதிகார வர்க்கத்தின் மெத்தனத்தையும் தவறுகளையும் மறைப்பதற்காக மட்டுமே பயன்படும் ஒரு ஆயுதம், என்பதற்கு அணு ஆற்றல் துறை எந்த வகையிலும் விதிவிலக்கல்ல.
(1) இராஜஸ்தானிலுள்ள ராவட்பாட்ட(Rawatbhata) அணு உலையைச் சுற்றியுள்ள 50 கி.மீ நிலப்பரப்பிலுள்ள கிராம மக்களின் உடல் நலம் பலவகைகளில் பாதிக்கப்பட்டிருக்கிறது. உடலில் மேல்புறம் மற்றும் உள்ளே தோன்றும் கட்டிகள் (Tumours) இந்தியாவின் சராசரி விகிதத்தைவிட பல மடங்கு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. விசித்திரமான வடிவக் கோளாருகளுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 1000 திற்கு 77.5 என (14 வட மாநிலங்களின் சராசரி 9.5/1000) கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் கருக்களைவு, உடல் கோளாருகளுடன் பிறக்கும் குழந்தைகள், இப்பகுதி மக்களின் சராசரி ஆயுட்காலம் மற்றவரைவிட 11ஆண்டுகள் குறைவாக இருப்பது என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது [7].
(2) உத்தரப்பிரதேசத்தில் நரோரா அணுக்கரு உலையில் 31 மார்ச் 1993 அன்று டர்பைன் கட்டுபாட்டு ஆறை திடீர் தீவிபத்துக்குள்ளானது மட்டுமல்லாமல் கட்டுப்பாடில்லாமல் இரண்டு மணிநேரம் எரிந்திருக்கிறது. இதனால், அணு உலைக்குச் செல்லும் மின்சாரம் 17 மணிநேரம் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இப்படி நிறுத்திவைக்கப் பட்டாலும், அணு உலையின் கதிரியக்க மையப்பகுதிக்குத் தொடர்ந்து நீர் சுழற்சி இருக்க வேண்டியது அவசியம். ஆதாலால், கையில் டார்ச் விளக்குடன் இரண்டு பொறியாளர்கள் அணுக்கரு உளையின் மேல் தவழ்ந்து சென்று தங்களது கைகளாளேயே திறந்திருக்கின்றனர். அதன் மூலம் நரோரா மற்றொரு ஹிரோஷிமாவாக மாறுவதைத் தடுத்திருந்தாலும், ஒட்டு மொத்த கதிரியக்கத்தையும் தங்கள் மேல் தாங்கியுள்ளனர் அவ்விருவர்[7].
இதில் கொடுமையின் உச்சகட்டம் என்னவெனில், டர்பைனில் இருந்த இக்குறைபாடு அணு ஆற்றல் துறைக்கு முன்னரே தெரியும் என்பதுதான். ஜெனரல் எலக்ட்ரிகல்ஸ்(GE), UKவைச் சேர்ந்த டர்பைன் வடிவமைப்பாளர் அணு உலையை நிறுவும் போதே இதை அறிவித்திருக்கிறார்[8].
(3) நரோராரிவில் ஏற்பட்ட தீவிபத்தினால் இந்தியாவின் அணு உலைகள் முழுவதும் முடக்கப்பட்டிருந்த நேரத்தில், குஜராத்தில் 16 ஜுன் 1994 அன்று ஏற்பட்ட வெள்ளம், கக்ராபர் அணு உலையினுள் புகுந்துவிட்டது. இதில் கொடுமை என்னவெனில் கதிரியக்கக் கழிவுக்களங்கள் நீரில் மிதந்து செல்லத் துவங்கிவிட்டனவாம். பின்னர் அவ்வூழியர்கள் மாரளவுத் தண்ணீரில் சென்று மிதந்து கொண்டிருந்த அக்கழிவுக் கலன்களைப் பத்திரப் படுத்தியுள்ளனர்[7,9]. இவ்வேளையில் அணு உலை இயக்க நிலையில் இருந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று தனியாக விளக்கத் தேவையில்லை.
(4) இந்திய அணு ஆற்றல் துறையின் தலைமையிடமான BARC எந்த வகையிலும் குறைந்து விடவில்லை என்பது போல், அங்கு ஏற்பட்ட ஒரு திடீர் விபத்தில் கதிரியக்க நீர் கடலுக்குள் பாய்ந்துவிட்டது. இவ்விபத்திற்குப் பிறகு பல நூறு மீட்டர்களுக்கு அப்பால் கடலுக்கடியில் எடுக்கப்பட்ட மணலில் சீஷியம் - 137 என்ற கதிரியக்கப் பொருள் பெரிதும் கலந்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
மேலும் 1991ல் சைரஸ் மற்றும் துருவா அணு உலைகளுக்கு இடையேயான நீர்க்குழாய் வெடித்துச் சிதறியதில் அதிலுள்ள கதிரியக்கத் தன்மை கொண்ட நீர் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒப்பந்த ஊழியர்கள் மேல் பாய்ந்துவிட்டது. பின்னர் அவர்களைக் குளிக்கச் செய்து மாற்று உடை கொடுத்து அனுப்பிவிட்டது நிர்வாகம். குறைந்த பட்சம் 300 - 1000 மில்லிரெட் அளவிலான கதிரியக்கத்திற்கு அவர்கள் உட்பட்டிருக்கலாம் என்று பின்னர் அந்நீரினை ஆராய்ந்த மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்[7].
இப்படி பல விபத்துகளைப் பட்டியல் போட்டுக்கொண்டே செல்லலாம். மேலும் அறிந்து கொள்ள ஆர்வம் இருக்குமாயின் கீழுள்ள தரவுகளில் 7 வதை மட்டுமாவது வாசித்துப் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.
ஆனால் இது போன்ற விபத்துக்கள் எல்லா மின் உற்பத்தித் துறையிலும் உண்டு என்றும் வளர்ச்சிக்குப் பரிசாக சிலவற்றைக் கொடுக்க வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டிற்குச் செல்லும் முன்னர் யுரேனியத் தாதுக்களை வெட்டி எடுக்கும் சுரங்களைப் பற்றியும் பார்த்துவிடலாம்.
ஏறத்தாழ இந்தியாவின் மொத்த யுரேனியம் தாதுக்களும், அதைப் பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபடும் இந்திய யுரேனியம் கார்பரேஷனும் (UCIL) பீகாரின் ஜடுகுடா மலைப்பகுதிகளில் உள்ளது. வழக்கம் போல் எல்லா இடத்திலும் பூர்வீக மக்களை வஞ்சிக்கும் வழிமுறைகளான, வேலைவாய்ப்பு, சரியான இடப்பெயர்வு வசதிகள் இல்லாமை என்ற எந்த வகையிலும் இம்மலைப் பகுதிகளில் வாழும் ஆதிவாசிகளும் தப்பித்துவிடவில்லை. மேலும் வேலை வாய்ப்பு என்ற பெயரில் பாதுகாப்பற்ற முறையில் கதிரியக்கத் தாதுக்களை தோண்டி எடுக்கவும், தோண்டி எடுக்கப்பட்ட தாதுக்களை UCILக்கு கொண்டு செல்லுதல் போன்ற கதிரியக்க ஆபத்து நிறைந்த வேலைகளுக்கு மட்டுமே இவர்கள் பயன்படுத்தப் படுகின்றனர்.
இப்பகுதிகளிலிருந்து ஓராண்டிற்கு சுமார் 200டன் யுரேனியம் தாது வெட்டி எடுக்கப்படுகிறது. அப்படியாயின் இதுவரை ஏறத்தாழ 3,30,000 - 3,60,000 டன்கள் யுரேனியம் பிரித்தெடுக்கப் பட்ட கழிவுகளாக வெளியேற்றப் பட்டிருக்கலாம் என்கிறது ஆய்வு. இக்கழிவுகள் பாதுகாப்பான முறையிலோ அல்லது ஆதிவாசிகளுக்கு பாதிப்பில்லாத இடங்களிலோ வெளியேற்றப்படுவதில்லை. ஆதிவாசிகள் குடிநீருக்காகவும், அன்றாடத் தேவைகளுக்காகப் பயன் படுத்தும் ஏரிகளுக்கு வெகு அருகில் இக்கழிவுகள் வெளியேற்றப் படுகின்றன[7,10]. இத்தாதுகளிலிருந்து யுரேனியம் பிரித்தெடுக்கப் பட்டாலும், தோரியம் - 230, ரேடியம் - 226, ரேடான் - 222 போன்ற கதிரியக்கப் பொருட்களும், தீங்கிழைக்கக்கூடிய, ஜின்க் (Zn), காரீயம் (Pb), மான்ங்கனீசு (Mn), காட்மியம் (Cd), மற்றும் ஆர்சனிக்(As) எனப் பல நச்சுதன்மை கொண்ட வேதிப்பொருட்கள் இக்கழிவுகளில் மிகுதியாக இருப்பவை.
சுரங்கத்திலுருந்து UCILக்கு கொண்டு செல்லப்படும் தாதுக்கள் எவ்வளவு பாதுகாப்புடனும், மற்றும் அவ்வூழியர்களுக்கு எவ்வளவு பாதுகாப்புக் கவசங்கள் அளிக்கப்படுகிறது என்பது மேலயுள்ள படத்தில் தெளிவாகத் தெரியும். மேலும், அவர்கள் செல்லும் பாதைகளில் இருக்கும் ஆதிவாசிக் குடில்களுக்கிடையேயான பாதை சீராக இல்லாததால் தளும்பும் தாதுக்களினால் சாலையோரங்களில் எல்லாம் பெறுமளவு கதிரியக்கத் தன்மை கொண்ட தாதுக்களை அள்ளித் தெளித்துக் கொண்டே செல்கின்றன இவ்வூர்திகள். இதனால் ஏற்படும் எண்ணற்ற உடல் நலக் கோளாறுகளுள் ஒன்று வடிவக் கோளாறுகளுடனான குழந்தைகள் பிறப்பது. இதைப் பற்றியும் மேலயுள்ள இரண்டாவது படம் ஆயிரம் பதிவுகள் பேசும்.
தற்போது ஏற்படவுள்ள ஒப்பந்தத்தினால் இறக்குமதி செய்யப்போகும் யுரேனியத் தாதுக்களிலிருந்து யுரேனியத்தைப் பிரித்தெடுக்கும் பணியைக் கூட UCIL தான் செய்யவுள்ளது என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்று.
சர்வதேச அளவில் உலகிலுள்ள அனைத்து கதிரியக்கக் கழிவுகளையும் நிரந்தரமாகச் சேர்த்து, அச்சுரங்கம் நிரம்பியபின் அதை நிரந்தரமாக மூடிவிடும் பணியில் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து ஃபின்லாந்து நாட்டில் அச்சுரங்கத்தைத் தோண்டியிருக்கின்றனர். 2020ல் மூடப்படவிருக்கும் அச்சுரங்கத்தைப் பற்றி அந்நாட்டு மக்களும், அரசும் விஞ்ஞானிகளிடம் கேட்டுக் கொள்ளும் ஒரே விசயம், 1000 ஆண்டுகளுக்குப் பின்னர் வாழப்போகும் தங்கள் சந்ததியினருக்கும் இப்படி தங்கள் பூமிக்கு அடியில் கதிரியக்கச் சுரங்கம் இருக்கிறது என்பதே தெரியாத அளவிற்கு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதுதான்.
ஆயிரம் ஆண்டுகள் கழித்து வாழப்போகும் சந்ததியினருக்காக வருத்தப்படும் பொறுப்புள்ள அரசு மற்றும் விஞ்ஞானிகள் ஒருபுறம்... கண் முன்னே ஒரு ஊனமான அடுத்த தலைமுறையை உருவாக்கிய சுவடு கொஞ்சமும் இல்லாமல் பாரத ரத்னாக்களுடனும், வல்லரசுக் கனவுகளுடனும் வலம் வரும் நம் தேசிய விஞ்ஞானிகளும், அரசியல் வாதிகளும், மற்றும் நாம்... மறுபுறம்.
அணு ஆற்றலைப் பொறுத்த வரையில் சர்வதேச மதிப்பீட்டில் இந்தியாவிடம் நிச்சயம் தற்போது யுரேனியம் தாதுக்கள் இல்லை என்றே கொள்ளலாம். அப்படியாயின் எல்லோரும் திரும்பக் கற்காலத்திற்கே செல்லமுடியுமா என்ன? ஆனால் மேலும் மேலும் மூலப்பொருள் இல்லாத ஆற்றல் வழிமுறையை விரிவுபடுத்தாமல், சுயமாக ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் வழிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டிய காலத்தின் கட்டாயப்பிடியிலிருக்கிறோம். வருடத்தின் சில மாதங்களில் மட்டுமே 5 மணி நேரத்திற்குமேல் சூரியனைப் பார்க்கும் சில நாடுகளே சூரிய ஆற்றலை இயன்றவரை உபயோகப்படுத்தும் போது.. நம் நாட்டில் சூரிய ஆற்றல் பெரிதும் வீணடிக்கப்படுகிறது என்றுதான் தோன்றுகிறது. தற்போது ஏதோ அவசரத் தேவை என்கின்ற ரீதியில் இவ்வுடன்படிக்கை நிகழ்ந்தாலும் அல்லது நிகழாவிட்டாலும் 20 ஆண்டுகள் கழித்து நிரந்தரமாகக் கையேந்தாமல் இருக்க நாம் நம்மைத் தயார் படுத்திக் கொள்ளவேண்டியுள்ளது காலத்தின் கட்டாயம். இப்போது கூட நாம் ஆற்றல் மற்றும் எரிபொருள் தேவைகளில் விழித்துக்கொள்ளவில்லையென்றால்..... ??????
[1]. M.R.Srinivasan, Current Science, Vol 90, 1316 (2006). http://www.ias.ac.in/currsci/may252006/1316.pdf
[3].http://www.whitehouse.gov/news/releases/2006/12/20061218-1.html
[6].http://www.uic.com.au/nip41.htm
[7] http://www.anawa.org.au/india/india.PDF- "Nuclear India" a report on No nukes asia forum 1999.
[8]“Issues of Nuclear Safety”, A. Gopalakrishnan, Frontline magazine March 26, 1999, http://www.frontlineonnet.com/fl1606/16060820.htm
[9]An overview of the Indian nuclear program: Report to the No Nukes Asia Forum 1997, held in the
Philippines. http://members.tripod.com/~no_nukes_sa/overview.html
Philippines. http://members.tripod.com/~no_nukes_sa/overview.html
[10] "War and Peace", A documentry movie by Anand Patwarthan.
**The Figures used in this article are reproduced from reference 7 and is used only for information and creation of awareness. The author claims no commercial interest over the same.
14 comments:
மிகவும் அவசியமான கட்டுரை, ஆனால், இதை எப்படி அனைவரையும் சென்று அடைய வைப்பது ?, இதை பற்றி ஏதேனும் யோசனை உள்ளதா
//மிகவும் அவசியமான கட்டுரை, ஆனால், இதை எப்படி அனைவரையும் சென்று அடைய வைப்பது ?, இதை பற்றி ஏதேனும் யோசனை உள்ளதா//
பொது மக்களுக்கு இத்தகைய விழிப்புணர்வு ஏற்படுத்த நிச்சயம் அரசு இயந்திரம் மற்றும் சில
விஞ்ஞானிகள் விரும்பமாட்டார்கள் என்பது கண்கூடான உண்மை. இதிலே பொது மக்களிடம் செய்திகளைக் கொண்டு சேர்க்கும் வெகுசன ஊடகம் பற்றி நான் எதுவும் சொல்லத் தேவையில்லை, ஏனெனில் இதில் மதவாதமும் இல்லை, சினிமாவும் இல்லை,மக்கள் நலன் மட்டுமே உள்ளது.
ஆனால் தனிப்பட்ட முறையில் இதைப்பற்றி மக்களிடம் கொண்டு செல்லும் முழுநேரத் திட்டங்கள் எதுவும் தற்போது இல்லை யென்றாலும், இணையத்தில் இதைப் பற்றி பதியவைத்தால் ஓரிருவருக்காவது இது ஒர் புதிய செய்தியாகவும் விழிப்புணர்வாகவும் இருக்கும் என்ற நம்பிக்கைதான். - நன்றி Gven.
நண்பர் கையேடு அவர்களுக்கு..
உங்களது கட்டுரைகள் மிகவும் ஆழ்ந்த புரிதலுடன் எழுதப்பட்டுள்ளது. அவற்றை பிரதி செய்து தற்பொழுதுதான் படித்தேன். குறிப்பாக விஞ்ஞானம் பற்றிய புரிதலுடன் எழுதியுள்ளீர்கள். தொழில் அறிவியல் என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள. எனக்கும் அறிவியலில் தீவிர ஆர்வம் உண்டு.
உங்களின் இக்கட்டுரையை மீண்டும் படித்தவிட்டு NRI களைப்பற்றிய குறிப்புகளுடன் ஒரு மீள்பதிவாக எனது பதிவில் இடலாம் எனத் தோன்றகிறது. காரணம் நேற்று எனக்கும் எனது நண்பர் ஒரு நண்பருக்கும் எனக்கம் இடையில் இந்த 123 குறித்து நீண்ட விவாதம் நடந்தது. அதற்கு சில பதில்களை இதில் பெற முடிகிறது.
தொடர்ந்து எழுதுங்கள். அடிப்படை அறிவியல் பற்றிய ஒரு கூட்டுப்திவு உருவாக்கவதைப்பற்றி யோசிக்கிறேன். தாங்கள் கருத்தை எனக்கு எழுதுங்கள்.
விவாதிப்போம் தொடர்ந்து..
இந்த கட்டுரைக்கு இணைப்பு கொடுத்துள்ள தெகாவுக்கு முதலில் நன்றி. என்னுள் இருக்கும் பல கேள்விகளை நீங்கள் அழகாக தொகுத்து கொடுத்து இருக்கீங்க. வேறொன்றும் சொல்லத் தெரியல.
நன்றி.
முடிந்தவரைக்கும் என் தொடர்பில் இருக்கும் அத்தனை இடங்களிலும் இதை வெளியிட்டு வைக்கின்றேன். நிச்சயம் பலர் கண்களில் படும். குறைந்த பட்சம் அடுத்த தலைமுறைகளின் கண்களிலாவது ஒருவர் அப்பொழுதே இப்படி எழுதி வைத்துள்ளார் என்றாவது தோன்றும்.
நன்றிங்க ஜோதிஜி..
மிக மிக அவசியமான பதிவு! நன்றி. இதை face book மற்றும் பல வழிகளில் இணையத்தில் பரப்பலாம்.
கையேடு,
நல்ல விரிவான,தெளிவான பதிவு,ஆனால் பலரும் தெரிந்தாலும் உண்மையை ஏற்றுக்கொள்வதில்லை என்பதே கசப்பான உண்மை.
//அப்படி யுரேனியம் தாதுவை இறக்குமதி செய்வது தவிர்க்க முடியாத ஒன்று என்றால், யுரேனியம் ஏற்றுமதி மற்றும் தரம் ஆகியவற்றில் முதல் இடத்தில் இருக்கும் கனடாவிடம்தானே உடன்படிக்கையை செயல்படுத்தியிருக்க வேண்டும்[6]. அதைவிடுத்து சர்வதேச அளவில் யுரேனியத் தாதுக்களின் அளவு மற்றும் தர வரிசையில் 13 வது இடத்தில் இருக்கும் இந்தியா 8 ஆம் இடத்தில் இருக்கும் அமெரிக்காவுடன் ஏன் உடன்படிக்கை செய்துகொள்ளவேண்டும்,//
இதற்கான பதில் அமெரிக்காவே NSG நாடுகளைக்கட்டுப்படுத்துவதில் முன்னிலை வகிக்கிறது. மேலும் ஆரம்பத்தில் ஒம்பந்தத்தில் கனடா,ஆஸ்த்இரேலியா ஆகிய நாடுகளிடம் பேசி செரிவூட்டப்பட்ட யுரேனியம் வாங்கி தர அமெரிக்கா ஏற்பாடு செய்யும் என இருந்தது, பின்னர் அமெரிக்கா தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு , இப்போது வாய்மொழியாக பேசி ஏற்பாடு ச்செய்யும், எழுத்தில் அது உடன்படிக்கையில் வராது என்று கையை விரித்து விட்டது.ஆனாலும் மன்மோஹன் அமெரிக்க விசுவாசத்துடன் கையொப்பம் இட்டார்.சிங்கின் மகள் அமெரிக்க குடியுரிமைப்பெற்றவர். நீங்கள் சொன்னது போல அமெரிக்கவாழ் இந்தியர்கள் திரைமறைவில் பெரும் பங்காற்றியுள்ளனர்.
//கொடுமையின் உச்சகட்டம் என்னவெனில், டர்பைனில் இருந்த இக்குறைபாடு அணு ஆற்றல் துறைக்கு முன்னரே தெரியும் என்பதுதான். ஜெனரல் எலக்ட்ரிகல்ஸ்(GE), UKவைச் சேர்ந்த டர்பைன் வடிவமைப்பாளர் அணு உலையை நிறுவும் போதே இதை அறிவித்திருக்கிறார்[8]//
தெரிந்தாலும் ஏன் இந்திய அணு விஞ்ஞானிகள் வாங்க ஒப்புக்கொண்டார்கள், மில்லியன் டாலர் கேள்வி? ஏகப்பட்ட கையூட்டு இதிலும் உண்டு. மேலும் இங்கு வேலை செய்த பலர் விரைவில் அமெரிக்காவில் வேலை வாங்கிக்கொண்டு செட்டில் ஆகி விடுவதிலும் மர்மம் உண்டு.
//1991ல் சைரஸ் மற்றும் துருவா அணு உலைகளுக்கு இடையேயான நீர்க்குழாய் வெடித்துச் சிதறியதில் அதிலுள்ள கதிரியக்கத் தன்மை கொண்ட நீர் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒப்பந்த ஊழியர்கள் மேல் பாய்ந்துவிட்டது. பின்னர் அவர்களைக் குளிக்கச் செய்து மாற்று உடை கொடுத்து அனுப்பிவிட்டது நிர்வாகம்.//
உண்மையில் அணு உலையில் சென்சிடிவான பகுதிகளில் அதிகம் ஒப்பந்த தொழிலார்கள், புதிதாக வந்த அப்ரண்டீஸ்களே வேலை செய்கிறார்கள்,அதாவது விஞ்ஞானிகள் கிட்டே கூட போக மாட்டார்களாம்.அவ்வளவு பயம்.
அணு வடிவமைப்பில் உள்ள குறைப்பாடு, என்ன தான் பாதுகாப்பாக செய்தாலும் கொஞ்சமாவது கதிரியக்க கசிவு இருக்கும் என்பதை ஒரு பதிவாக போட்டுள்ளேன், நேரம் இருப்பின் படிக்கவும்.அமெரிக்க அணு உலைகளில் 26 இல் கசிவு இருப்பதாக அமெரிக்க அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்தின் தளத்திலேயே இருக்கு.பின்னர் சரி செய்யப்பட்டுள்ளது.அவர்களிடம் இருக்கும் வெளிப்படைத்தன்மை கூட நம்மவர்களிடம் கிடையாது. வெடித்தால் கூட இல்லை என சாதிப்பர்கள்.
நம்ம கம்யூனிஸ்ட் தோழர்களோ அமெரிக்க 123 ஒப்பந்ததை எதிர்ப்பார்கள், கூடன் குளத்துக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். ஒரே காமெடி தான்!
1991 - இல் நான் எழுதிய இந்தச் சிறுகதையை நண்பர்கள் சற்று நேரம் ஒதுக்கி படியுங்கள்.
http://seenimohan.blogspot.com/2011/11/blog-post_13.html
நன்றிங்க வவ்வால்..
நன்றிங்க திரு.சீனுமோகன். ஆனால் எழுத்துறு எதுவும் தெரியவில்லை எனது கணினியில்.
அதனால் உங்கள் கதையை வாசிக்க முடியவில்லை.
////(2) உத்தரப்பிரதேசத்தில் நரோரா அணுக்கரு உலையில் 31 மார்ச் 1993 அன்று டர்பைன் கட்டுபாட்டு ஆறை திடீர் தீவிபத்துக்குள்ளானது மட்டுமல்லாமல் கட்டுப்பாடில்லாமல் இரண்டு மணிநேரம் எரிந்திருக்கிறது. இதனால், அணு உலைக்குச் செல்லும் மின்சாரம் 17 மணிநேரம் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இப்படி நிறுத்திவைக்கப் பட்டாலும், அணு உலையின் கதிரியக்க மையப்பகுதிக்குத் தொடர்ந்து நீர் சுழற்சி இருக்க வேண்டியது அவசியம். ஆதாலால், கையில் டார்ச் விளக்குடன் இரண்டு பொறியாளர்கள் அணுக்கரு உளையின் மேல் தவழ்ந்து சென்று தங்களது கைகளாளேயே திறந்திருக்கின்றனர். அதன் மூலம் நரோரா மற்றொரு ஹிரோஷிமாவாக மாறுவதைத் தடுத்திருந்தாலும், ஒட்டு மொத்த கதிரியக்கத்தையும் தங்கள் மேல் தாங்கியுள்ளனர் அவ்விருவர்[7]. /////
நரோராவில் ஏற்பட்ட தீ வெடிப்பு ஹைடிரஜன் வாயுக் கசிவில் நேர்ந்தது. அணுமின் உலை தானாக நின்றது. நிறுத்த வெப்பத் தணிப்பு நீரோட்டம் இயங்க ஏற்பாடு செய்யப் பட்டு அணுமின் உலைப் பாதுகாப்பில் எந்த இடரும் நேரவில்லை. நிலையம் இருட்டடிப்பு ஆனதால் சிரமங்கள் நேர்ந்தன. ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பு ஒவ்வாத உயர்வு நவிற்சியில் எப்படி இந்த விமர்சனத்தில் வந்தது ?
http://jayabarathan.wordpress.com/
http://jayabarathan.wordpress.com/2011/03/19/narora-atomic-power-plant/
சி. ஜெயபாரதன், கனடா.
////(2) உத்தரப்பிரதேசத்தில் நரோரா அணுக்கரு உலையில் 31 மார்ச் 1993 அன்று டர்பைன் கட்டுபாட்டு ஆறை திடீர் தீவிபத்துக்குள்ளானது மட்டுமல்லாமல் கட்டுப்பாடில்லாமல் இரண்டு மணிநேரம் எரிந்திருக்கிறது. இதனால், அணு உலைக்குச் செல்லும் மின்சாரம் 17 மணிநேரம் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இப்படி நிறுத்திவைக்கப் பட்டாலும், அணு உலையின் கதிரியக்க மையப்பகுதிக்குத் தொடர்ந்து நீர் சுழற்சி இருக்க வேண்டியது அவசியம். ஆதாலால், கையில் டார்ச் விளக்குடன் இரண்டு பொறியாளர்கள் அணுக்கரு உளையின் மேல் தவழ்ந்து சென்று தங்களது கைகளாளேயே திறந்திருக்கின்றனர். அதன் மூலம் நரோரா மற்றொரு ஹிரோஷிமாவாக மாறுவதைத் தடுத்திருந்தாலும், ஒட்டு மொத்த கதிரியக்கத்தையும் தங்கள் மேல் தாங்கியுள்ளனர் அவ்விருவர்[7]. /////
நரோராவில் ஏற்பட்ட தீ வெடிப்பு ஹைடிரஜன் வாயுக் கசிவில் நேர்ந்தது. அணுமின் உலை தானாக நின்றது. நிறுத்த வெப்பத் தணிப்பு நீரோட்டம் இயங்க ஏற்பாடு செய்யப் பட்டு அணுமின் உலைப் பாதுகாப்பில் எந்த இடரும் நேரவில்லை. நிலையம் இருட்டடிப்பு ஆனதால் சிரமங்கள் நேர்ந்தன. ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பு ஒவ்வாத உயர்வு நவிற்சியில் எப்படி இந்த விமர்சனத்தில் வந்தது ?
http://jayabarathan.wordpress.com/
http://jayabarathan.wordpress.com/2011/03/19/narora-atomic-power-plant/
சி. ஜெயபாரதன், கனடா.
திரு ஜெயபாரதன் ஐயா அவர்களுக்கு,
//நிறுத்த வெப்பத் தணிப்பு நீரோட்டம் இயங்க ஏற்பாடு செய்யப் பட்டு அணுமின் உலைப் பாதுகாப்பில் எந்த இடரும் நேரவில்லை//
இயங்க ஏற்பாடு செய்யப்பட்ட விதத்தையும் அதற்காக இரண்டு அலுவலர்கள் செய்த செயலையும் சேர்த்துதான் அக்கட்டுரை குற்றம் சாட்டுகிறது.
ஒருவேளை அவ்வூழியர்கள் அச்செயலை செய்யவில்லை அல்லது செய்ய முடியாத ஒரு சூழ்நிலை உருவாகியிருந்தால் நீர்ச்சுழற்சி என்னவாகியிருக்கு?
வெப்பத் தனிப்புக்கான நீர்ச்சுழற்சி இல்லாத அணுக்கருவுளையின் அடுத்த நிலை என்ன?
////இயங்க ஏற்பாடு செய்யப்பட்ட விதத்தையும் அதற்காக இரண்டு அலுவலர்கள் செய்த செயலையும் சேர்த்துதான் அக்கட்டுரை குற்றம் சாட்டுகிறது.
ஒருவேளை அவ்வூழியர்கள் அச்செயலை செய்யவில்லை அல்லது செய்ய முடியாத ஒரு சூழ்நிலை உருவாகியிருந்தால் நீர்ச்சுழற்சி என்னவாகியிருக்கு?
வெப்பத் தனிப்புக்கான நீர்ச்சுழற்சி இல்லாத அணுக்கருவுளையின் அடுத்த நிலை என்ன? ///
இயற்கையாக எழும் வெப்பச் சுழற்சியில்(Thermal convection circulation)மெதுவாக வெப்பம் அணு உலையில் தணியும்.
சி. ஜெயபாரதன்
Post a Comment