Monday, August 11, 2008

ஆன்மீகம் - கிரகிப்பு - II - இயற்கை


ஆன்மீகம் - கிரகிப்பு - I முந்தய பதிவின் தொடர்ச்சி.

"மதம் சாராத ஆன்மீகம் என்பது, மனிதனின் சூழல் மற்றும் கிரகிப்புத் தன்மை சார்ந்த, பொதுஅறிவின் சுயஆர்வத்தினால் ஏற்பட்ட கருத்தாக்கத்தின் பரிணாம வெளிப்பாடு." - இத்தொடரின் கருப்பொருளாகயிருப்பதால் மீண்டும் ஒருமுறை நினைவூட்ட வேண்டிய முக்கியத்துவத்தைப் பெறுகிறது.


II.ஆன்மீகம் - இயற்கை.
ஆன்மீகம் என்றால் என்ன? ஆன்மீகம் என்பது ஒரு தேடல், மெய்யியல் அல்லது உண்மை குறித்தான தேடல் என்று பரவலான வரையறையாக ரிக் வேதம் முன்வைப்பதாகக் கூறுகின்றனர்[1]. ஆன்மீகவாதி அல்லது சாது என்பவன், முதலில் அனைத்தையும் துறக்கவேண்டும், அதாவது பொருள் என்று தனக்கென எதுவும் வைத்துக்கொள்ளாமல் இருத்தல், மிகக்குறைந்த பட்ச ஆடைகளை அணிதல் அல்லது முழுவதுமாக ஆடைகளைத் துறத்தல், பூசனைகளைத் துறத்தல், மதம், மொழி, இனம் என அனைத்தையும் சாராமல் (பற்றில்லாமல்) இலக்கை நோக்கிய தேடலை மேற்கொள்ளுதல். உலகத்தின், உண்மையைத் தேடுதல், மற்றும் உலக மக்களுக்கு தாம் உணர்ந்த உண்மைகளைப் பற்றி அறியத்தருதல்.[1] ஆன்மீகம் ஒரு முழுமை (perfection) மற்றும் முந்நிர்மாணிக்கப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பு (pre-determined), இயக்கங்கள் அனைத்துக்குமான ஒற்றை நோக்கம் மற்றும் ஒற்றை மூலம் போன்ற கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளப்படுகிறது.
எப்படியும் ஆன்மீகம் என்பது ஒரு முழுமையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆன்மீகம் என்பது இயற்கையுடன் இரண்டறக் கலப்பது அல்லது இயற்கை என்ற ஒரு முழுமைதான் ஆன்மீகம் போன்ற கருதுகோல்கள் உலாவுகின்றன. இவ்வான்மீகக் கருத்து கால மாற்றங்களாலும் சமூகச் சூழல் மாற்றங்களாலும் எப்படி மாறியது அல்லது மாற்றப்பட்டது என்பது பிரிதொரு ஆய்வுக்கான கருப்பொருள். ஆன்மீகம் என்பது ஒரு முழுமையென்றால், இயற்கை ஒரு முழுமையல்ல, தவறுகள் இழைத்து பின் திருத்திக்கொள்ளும் ஒரு சீரற்ற நிகழ்வே உயிரிகள் சார்ந்த இயற்கை. ஆதலால், ஆன்மீகம் என்பது இயற்கையோடு இணையும் ஒரு நிகழ்வு என்று குறிப்பிடுவது முற்றிலும் புறந்தள்ள வேண்டிய ஒன்று.

இயற்கை என்பது என்ன? இயற்கை ஒரு முழுமையா... என்றால் நிச்சயமாக இல்லை. இயற்கை சூழ்நிலைகளின் மாற்றத்திற்கிணங்க, சீரற்ற (random) மற்றும் நிகழ்தகவின் (probablistic) அடிப்படையில், இயங்கும் ஒன்று. நமது உடல் தோன்றியது ஒரு நிகழ்தகவு, ஆயிரம் விந்துக்களில், இரண்டாவதிருக்கும் விந்து முந்தியிருந்தால், இப்போதிருக்கும் “நாம்” “நாமாக” இருந்திருக்க முடியாது. இப்போதிருக்கும் நாம் தோன்றியதற்கான நிகழ்தகவு ஏறத்தாழ 1/சிலஆயிரம். பூமியின் கருப்பொருளில் சிறு மாறுபாடு இருந்திருக்குமானால், உயிரே தோன்றியிருக்க முடியாது. ஒரு உதாரணத்திற்கு இவ்வண்டத்தில் ஓராயிரம்கோடி கோள்கள் இருக்குமானால், உயிர்தோற்றத்தின் தற்போதைய நிகழ்தகவு குறைந்த பட்சமாக 1/ ஓராயிரம்கோடி.


இப்படிப்பட்ட இயற்கை, சூழல் மாற்றத்திற்கிணங்கப் பல தவறுகளைச் செய்யக்கூடியது.(சூழலுக்கு ஒவ்வாத அல்லது தாக்குப்பிடிக்க முடியாத ஒன்றை உருவாக்கி பின் அழித்தல்) அப்படிப்பட்ட தவறுகளைப் பின்னர் திருத்திக் கொண்டு, மேலும் உயிரியில் சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டே வந்த பரிணாமக் கிளைகளில், பரிணமித்த ஒரு சிறு கிளை உயிரியாக நாம் இருக்கிறோம். அப்படியானால், இயற்கை என்பது முழுமையள்ள, சூழலுக்கு ஏற்றார்போல் மாறுவதும், தவறிழைப்பதும் (சூழலுக்கு ஒவ்வாத அல்லது தாக்குப்பிடிக்க முடியாத ஒன்றை உருவாக்கி பின் அழித்தல்), திருத்திக்கொள்வதுமான ஒரு நிகழ்வாகவே உயிர்கள் சார்ந்த இயற்கை இருக்கிறது.
ஒருவேளை, மனிதன் தனது ஆன்மாவின் உன்னதத்தால், முற்றுமுணர்ந்திருந்தாலும், பூமிக்கு ஆயிரம் மைல் அருகில் ஒரு எரிகல் வந்தாலும், அதன் சூழல் விளைவுகளைத் தாங்கிக்கொள்ள முடியாத பலவைகையான உயிரிகள் இல்லாமல் போய்விடும். பேரண்டத்தின் சூட்சுமத்தை உணர முற்படும் தன்மையுள்ள ஒரு உயிரியைத்(மனிதனைத்) தாங்கிக் கொண்டிருக்கிறோம் என்று பூமி, அதற்கான எதிர்வினையைப் புரியாமலிருக்காது.


கால்களில் மோதும் நுரைத்த கடலலை, வானும், கடலும் இணையும் மாயப்புள்ளி, பரந்தவெளியில் தனித்திருக்கும் ஒற்றை மரம், அதிகாலைக் கதிரவன், தென்றலும் நிலவும் மட்டுமே துணைக்கிருக்கும் ஆற்றங்கரை மெளனம், மாலையின் தனிமையில் சுழலும் பறவைகளின் இசை, உதிர்கின்ற சருகு, குழந்தையின் சிரிப்பு, ஒரு சவம், எனப் பல கணங்களில் ஒரு வெறுமையும் நம்மைச் சுற்றியிருக்கும் பல கற்பிதங்களும் கட்டமைப்புகளும் கலைந்திருக்கலாம். அந்நொடிப்பொழுதின் போதைக்கான ஈர்ப்பு, அதன் நீட்சிக்கானத் தேடலின் துவக்கப் புள்ளியாகயிருக்கலாம். (இவ்வெடுத்துக்காட்டுகள் கூட எனது சூழல் மற்றும் கிரகிப்புத்தன்மை சார்ந்தவையே )

ஆனால், இவையணைத்தும் இயற்கையின் முன் நாம் சிறுத்துப் போகும் கணங்களேயன்றி அதனோடு இணைந்த கணங்களல்ல.

தற்போது மனிதன் பரிணமித்திருக்கும் ஒரு நிலையில் அவன் மீண்டும் இயற்கையுடன் இணைவது முற்றிலும் இயலாத காரியம். இயற்கையுடன் இணைவதில் முதல் படியாக மனிதன் ஆடைகளைக் களைய வேண்டும், உணவை உற்பத்தி செய்யாமல், இயற்கை உருவாக்கும் உணவை மட்டுமே நம்பியிருக்க வேண்டும், இயற்கைச் சூழலுக்கேற்ப தனது வாழ்விடத்தையும், வாழ்க்கைமுறையையும் மாற்றிக்கொண்டேயிருக்க வேண்டும். மேற்கூறிய எதுவுமே தற்போது பெரும்பாண்மையான மனிதயினத்திற்கு விருப்பமிருந்தாலும் சாத்தியமில்லாத ஒன்று.(ஒருவேளை, ஆப்பிரிக்க, தென்னமெரிக்கா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தனித்து வாழ்ந்து கொண்டிருக்கும் வெகுசில ஆதிவாசிக் குழுக்களுக்கு சாத்தியமாகயிருக்கலாம்).


உயிரியல் சார்ந்த இயற்கையில், மனிதன் இவ்வகைச்செயல்பாடுகளிலிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொண்டதனாலேயே பரிணாமக் கிளையில் மனிதன் எனும் விலங்கின் இறுதியான புள்ளியாகத் தற்போதைய மனிதன் கருதப்படுகிறான்.


ஒரு ஆன்மீகவாதி முதலில் செய்ய வேண்டியது தன்னிடம் இருக்கும் அனைத்தையும் துறத்தல், மிகக்குறைந்த பட்சமான உடையைக் கொள்ளுதல் அல்லது முழுவதுமாகவோ துறத்தல்[1]. ஆனால், ஆன்மீகவாதி அல்லது ஆன்மீகம் என்பது இவ்வொரு காரணி மட்டுமல்ல என்பதால், இவ்வொரு கருத்தை மட்டும் வைத்து ஆன்மீகவாதி இயற்கையோடு இயைந்தவனாகக் கருதயியலாது. ஒரு வகையில், மனிதனை உயிர்ச் சார்ந்த இயற்கைச் சூழலிருந்து புறந்தள்ளி, வெளியேற்றியதே இந்த ஆன்மா, மனது ஆகிய கருத்தாக்கங்கள்தான். அதனால், மனிதனுக்கும் உயிர் சார்ந்த இயற்கைக்கும் இடையே இருந்த இடைவெளியை அதிகப்படுத்தியது ஆன்மா, குறித்த கருத்துக்கள்.

தமக்கான உணவை உற்பத்தி செய்துகொண்டதன் மூலம் அடுத்த கட்டமாக மனிதன் எனும் விலங்கு இயற்கையிலிருந்து தன்னைப் பெரிதும் அந்நியப்படுத்திக் கொண்டது.

சமூகம், உணவு உற்பத்தி போன்ற செயல்பாடுகளிலிருந்து தன்னைத் தனிமைப் படுத்திக்கொள்ளும் ஆன்மீகம், உயிரியின் இனப்பெருக்கம் என்ற மற்றொரு மிகவும் அடிப்படையானதொரு இயற்கை நிகழ்வைப் புறந்தள்ளியதன் மூலம் உயிர் சார்ந்த இயற்கையிலிருந்து முற்றிலுமாக விடுவித்துக் கொண்டது என்றுதான் கருதவேண்டும்.

ஆனால், ஆன்மீகம் பெரிதும் பேசும் இயற்கை என்பது பேரண்டத்தைப் பற்றியது, உயிரற்ற கோள்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கங்களும், தோற்றமும் குறித்தானது. இதன் மூலம் நமக்கும், இப்பிரபஞ்சத்திற்கும் ஒரு நேரடி ஆற்றல் பரிமாற்றம் பற்றிய கதையாடலாக இருக்கிறது. அதாவது உயிர் சார்ந்ததாகயில்லாமல் பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் இயக்கம் குறித்தான தேடலாக இருக்கிறது. அண்டத்தில் திளைத்து பிண்டத்தைத் மறக்கும்/துறக்கும் ஒரு கதையாடல். ஆனால், இயற்கை அனைத்தையும் உள்ளடக்கியது, உயிரிகள் உட்பட. (இப்புள்ளிக்கும் மீண்டும் வருவோம்).


[1].The sadhus and Indian civilization - Vijay prakash sharma, Amol publications, NewDelhi (1998).

10 comments:

Kulapam said...

முன்பு படித்ததே. இருந்த போதும் மறுவாசிப்பு நன்றாகவே இருந்தது.

கையேடு said...

பாராட்டுக்கு நன்றி திரு.குழப்பம்.

அறிவகம் said...

திரு. கையேடு ஆன்மீகம் குறித்து விளக்கம் பெற தாங்கள் எடுத்திருக்கும் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

ஆன்மீகம் என்பது நம்மை(உடலையும் அறிவையும்) பிரபஞ்சத்துக்கு ஏற்றவாறு வளைத்துக்கொள்வது., அறிவியல் என்பது பிரபஞ்சத்தை நமக்கு ஏற்றவாறு வளைத்துக்கொள்வது.

ஆன்மீகவாதி என்றால் ஆடைகளையும் உடைமைகளையும் தொலைக்கவேண்டும் என்பது மதங்கள் ஆன்மீகத்தை தவறாக புரிந்துகொண்டதன் விளைவு.

கடவுள் இல்லாத ஆன்மீகம் என்பது தவறான ஆராய்ச்சி., கடவுளையும் ஆன்மீகத்தையும் பிரிக்கமுடியாது. கடவுள் இருக்கிறார். அதை அறிவியல் நிரூபனங்களுடன் நிரூபிக்கும் முயற்சி தான் அறிவகம்.

தங்களை போன்ற ஆய்வாளர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அறிவகம் பெரிதும் எதிர்பார்க்கிறது. வாருங்கள் இணைந்து சிந்திப்போம். நமது சிந்தனைகள் உலகுக்கு விடிவெள்ளியாகலாம் அல்லவா?

www.tamilarivu.blogspot.com (அறிவகம்)

பின்குறிப்பு: அறிவகம் குறித்து குறிப்பிட்டமைக்கு மன்னிக்கவும். தங்கள் பதிவுக்கும், பின்னூட்டத்திற்கும் நெருங்கிய சம்மந்தம் இருப்பதால் மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். தவறு இருந்தால் எடுத்துவிடுங்கள். நன்றி.

கையேடு said...

தங்களது விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி திரு. அறிவகம். கட்டுரையின் அடுத்த பகுதியில் உங்களது பின்னூட்டத்திற்கு தொடர்புடைய உரையாடலைத் தொடருகிறேன்.
நன்றி.

RATHNESH said...

கையேடு சார்,

இரண்டு மூன்று முறை கவனமாக வாசித்தும் ஒரு வித வெறுமை. தொடர்ந்து வாசித்தால் தான் பதிவு குறித்து ஏதும் சொல்ல இயலும் என்று தோன்றுகிறது.

ஓர் அடிப்படை சந்தேகம்:

இயற்கையையும் மனிதனையும் ஏன் பிரித்துப் பார்க்க வேண்டும்? மனிதனும் இயற்கையின் ஓர் அங்கம் தானே?

கையேடு said...

முதல் வருகைக்கு நன்றி. திரு.இரத்னேஷ்.

ஒரு வெறுமையினால்தான் இப்பதிவையே எழுதினேன்.. :)

ஆனால், உங்கள் கேள்விக்கு:

மனிதன் இயற்கையின் ஓர் அங்கம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துகிடையாது.

மனிதனின் செய்கைகள் பலவற்றால், அவனது இருப்பையும், பரிணாமத்தையும் இயற்கை நேரடியாக நிர்ணயிப்பதில்லை.
உதாரணத்தில் முதன்மையானது மனிதனது உணவு உற்பத்தி.

"பரிணாமக் கிளையில் மனிதன் எனும் விலங்கின் இறுதியான புள்ளியாகத் தற்போதைய மனிதன் கருதப்படுகிறான்"

இது குறித்து தனியாக ஒரு இடுகை எழுதவேண்டும்.

கையேடு said...

திரு.இரத்னேஷ் அவர்களுக்கு,
சார் எல்லாம் வேண்டாம், நீங்கள் இரஞ்சித் என்று பெயரிட்டே அழைக்கலாம்.. :)

கோவி.கண்ணன் said...

//இப்படிப்பட்ட இயற்கை, சூழல் மாற்றத்திற்கிணங்கப் பல தவறுகளைச் செய்யக்கூடியது.(சூழலுக்கு ஒவ்வாத அல்லது தாக்குப்பிடிக்க முடியாத ஒன்றை உருவாக்கி பின் அழித்தல்) அப்படிப்பட்ட தவறுகளைப் பின்னர் திருத்திக் கொண்டு, மேலும் உயிரியில் சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டே வந்த பரிணாமக் கிளைகளில், பரிணமித்த ஒரு சிறு கிளை உயிரியாக நாம் இருக்கிறோம். அப்படியானால், இயற்கை என்பது முழுமையள்ள, சூழலுக்கு ஏற்றார்போல் மாறுவதும், தவறிழைப்பதும் (சூழலுக்கு ஒவ்வாத அல்லது தாக்குப்பிடிக்க முடியாத ஒன்றை உருவாக்கி பின் அழித்தல்), திருத்திக்கொள்வதுமான ஒரு நிகழ்வாகவே உயிர்கள் சார்ந்த இயற்கை இருக்கிறது.
//

இயற்கை நிகழ்வில் ஒழுங்கு ஒழுங்கற்ற என்ற இரு நிலைகள் இருப்பதாகத் தெரியவில்லை, எப்போதும் மாறிக் கொண்டு இருக்கும் இயக்கம் மட்டுமே என்றே நான் கருதுகிறேன். நமக்கு உயிர்த்தன்மையும் சிந்திக்கும் திறனும் இருப்பதால் ஒழுங்கு / ஒழுங்கின்மையை நாமாகத்தான் தீர்மாணித்து பொருத்திப் பார்க்கிறோம் என்றே நினைக்கிறேன்.

இயற்கையின் இயக்கம் ஒரு தொடர் நிகழ்வு அல்லது ஒரு முடிவை நோக்கிய பயணம், முடிந்த பிறகு அதே இடத்தில் தொடங்கும் ஒரு சுழற்சி. நாம் எதோ ஒரு இடத்தில் இருந்து அதன் இயக்கத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். பிறப்பற்ற தன்மை என்பது இறைவனுக்கு இருப்பதாகச் சொல்லுவதால் இவற்றை பார்த்துக் கொண்டு இருப்பதைத் தவிர்த்து அது பற்றிய அறிவுகளை பெறும் சக்தியை இறைவன் கொடுத்துக் கொண்டு இருப்பார் என்று மட்டுமே என்னால் இறைவனையும் இயற்கையையும் பற்றி நினைக்க முடிகிறது

கையேடு said...

தாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும் திரு.கோவி கண்ணன்.

//இயற்கை நிகழ்வில் ஒழுங்கு ஒழுங்கற்ற என்ற இரு நிலைகள் இருப்பதாகத் தெரியவில்லை, எப்போதும் மாறிக் கொண்டு இருக்கும் இயக்கம் மட்டுமே என்றே நான் கருதுகிறேன்.//

நீங்கள் தேர்ந்தெடுத்த எனது்பத்தியில் உயிர்கள் சார்ந்த இயற்கை பற்றி மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன். உயிர்கள் மற்றும் அவற்றின் ஆயுட்காலம், அவற்றுக்கான உணர்வுகள் அடிப்படையில் சரி, தவறு என்ற இயற்கை குறித்த மதிப்பீடுகளைப் பற்றி குறிப்பிட்டேன்.

ஒரு கழுகுப்பார்வையில் இயற்கை என்பது தொடர்நிகழ்வன்றி வேறொன்றுமில்லை, என்ற உங்கள் கருத்தில் உடன்படுகிறேன்.

ஆனால், தொடக்கம், முடிவு, சுழற்சி என்பதான பார்வைகூட நமது சிந்தனை வேட்கையை தனிப்பதற்காக ஏற்படுத்திக்கொள்ளும் அனுமானங்கள் என்பதே எனது பார்வை.

//நாம் எதோ ஒரு இடத்தில் இருந்து அதன் இயக்கத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். பிறப்பற்ற தன்மை என்பது இறைவனுக்கு இருப்பதாகச் சொல்லுவதால் இவற்றை பார்த்துக் கொண்டு இருப்பதைத் தவிர்த்து அது பற்றிய அறிவுகளை பெறும் சக்தியை இறைவன் கொடுத்துக் கொண்டு இருப்பார் என்று மட்டுமே என்னால் இறைவனையும் இயற்கையையும் பற்றி நினைக்க முடிகிறது//

மேலே உள்ள வரிகளில் நாம் வெறும் பார்வையாளன் மட்டுமே என்பதில் மட்டும் உடன்பாடுண்டு. :)

Sivamjothi said...

கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது

ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.

இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.

தவம் செய்ய வேண்டும்!!!

தவம் செய்ய நாம் காட்டுக்கு போக வேண்டியதில்லை! குடும்பத்தை விட்டு ஓட வேண்டியதில்லை! காவி உடுத்து தாடி முடி வளர்த்து உருத்திராட்சம் அணிந்து உலகம் சுற்ற வேண்டியதில்லை! நமது உடலை வெறுத்து வருத்தாது துன்புருத்தாது இருக்க வேண்டும்! உணவை வெறுத்து இலை உணவாக வேண்டாம்! கடுமையான ஜப தாபங்கள் வேண்டாம்! சுருக்கமாக கூறுவதனால் ஒன்றும் செய்ய வேண்டாம்! சும்மா இருந்தாலே போதும்! திருமணம் ஞானம் பெற ஒரு தடையல்ல!

தவம் எப்படி செய்ய வேண்டும்? தவம் என்றால் மந்திர ஜபமல்ல! தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல! தவம் என்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ இன்னபிற யோகங்களோ அல்ல! தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல! தவம் என்றால், நான் யார்? என அறிய உணர மெய்ஞ்ஞான சற்குருவிடம் ஞானதானம் பெற்று கேட்டதை உணர்ந்து அறிய சும்மா இருந்து செய்யும் பயிற்சியே! முயற்சியே!

நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.

இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.

திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.

உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.

அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.

லிங்க்ஐ படியுங்க.

http://tamil.vallalyaar.com/?page_id=80


blogs

sagakalvi.blogspot.com
kanmanimaalai.blogspot.in

video
ஞானிகள் ஏன் கோயிலை உருவாக்க வேண்டும்?
http://www.youtube.com/watch?v=dLIBK-eptxg