Thursday, October 2, 2008

ஆன்மீகம் - கிரகிப்பு - III - அறிவியல்









ஆன்மீகம் - கிரகிப்பு - I , ஆன்மீகம் - கிரகிப்பு - II - இயற்கை


என்ற முந்தைய இரண்டு இடுகைகளின் தொடர்ச்சியாக ஆன்மீகம் - அறிவியல், குறித்த உரையாடலாக இப்பகுதி தொடர்கிறது. சமூகத்தில், ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் இடையே இருக்கும் ஒப்புமையும் வேற்றுமையும் வெவ்வேறு காலங்களில், விவாதிக்கப்பட்டிருக்கிறது. இரண்டுமே தேடல் அடிப்படையிலானது என்பதால் இவையிரண்டும் பெரிதும் ஒப்புமைப்படுத்தப்படுகின்றன.

ஆன்மீகம் மற்றும் அறிவியல் இவையிரண்டும் ஒன்றா? இரண்டுமே தேடல் அடிப்படையிலானவையெனில் அவையிரண்டும் ஒன்றுதானே...??

ஆன்மீகம், ஒரு இலக்கு நோக்கிய தேடல். ஆனால், அறிவியல் இலக்கற்றத் தேடல். இவையிரண்டும் அடிப்படையிலேயே முரணானவை.


ஆன்மீகம் என்பது முடிவுகளை எழுதிவிட்டு செய்யப்படும் ஆய்வுக்கிணையானது. முடிவுகளுக்குச் சாதகமானவை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.அறிவியல் என்பது ஆய்வுகளின் அடிப்படையில் முடிவுகளை அனுகுவது. முன்னனுமானங்கள் அறிவியலிலும் இருக்கலாம், ஆனால் அவ்வனுமானங்களுக்கு முற்றும் எதிரான முடிவுகளையும் ஏற்றுக் கொள்ளக்கூடியது.

சூழல் குறித்தான பார்வையில் விளைவதாலேயே, அறிவியல் ஆன்மீகம் இரண்டுமே பரிணாமத்தில் மனிதனுக்கான சிந்தனைத் திறன் தோன்றியவுடனேயே துவங்கியவையாக இருக்க வேண்டும்.

ஒரு மூலம் இருக்கிறது என்ற நம்பிக்கையை முன்வைத்துவிட்டு அதனை நோக்கிய தேடலும், நம்மைச் சுற்றியிருப்பவை பற்றிய புரிதலை நோக்கிய தேடலும், முற்றிலும் முரணானவை.


இரண்டின் துவக்கப் புள்ளியும் சூழல் குறித்தான பார்வையில் துவங்குவதாலேயே அவை இணையும் புள்ளிகள் பல இருக்கலாம், பல இடங்களில் அப்படியொரு தோற்ற மயக்கத்தைக் கொடுக்கலாம். அப்படிச் சந்தித்தாலும், ஆன்மீகத்திற்கு அதன் நம்பிக்கையை வலுப்படுத்திக்கொள்ள இச்சந்திப்பு புள்ளிகள் தேவைப்படலாம். ஆனால், அறிவியலுக்கு இவ்விணைவுப் புள்ளிகள் தேவையா என்றால், தேவையற்றதாகவேயிருக்கிறது.


உதாரணமாக ஆன்மீகத்தில் ஆற்றல் குறித்த கதையாடல் எப்போதும் ஒளிவடிவமாக வர்ணிக்கப்படுவதைக் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. இப்புள்ளியில் ஆன்மீகம் பேசும் “ஆற்றல்” மனிதனின் சூழல் குறித்தான கிரகிப்புத்தன்மையில் (perception) விளைந்தது என்பது தெளிவாகிறது. ஆன்மீகம் என்பதும் வளர்சூழலிருந்து தோன்றிய ஒன்றாகயிருப்பதால் சூழல் குறித்தான நிகழ்வுகளையும், விளைவுகளையும் அடிப்படையாகக் கொண்டு விளைந்தவையாகவேயிருக்கின்றன. அதனாலேயே ஆற்றல் குறித்தான ஆன்மீகக் கதையாடல் அனைத்தும் கண்ணுறு ஒளிவடிவமாகவே ஆற்றலை உருவகப்படுத்துகின்றன. ஆனால், அறிவியல் பல வகை ஆற்றல்களைப் பற்றிய புரிதல் கொண்டுள்ளது. ஆன்மீகம் பேசும் ஆற்றல் என்பது எப்போதும் கண்ணுறு ஒளிவடிவமாகவேயிருப்பதற்கான முக்கியக் காரணிகளில் ஒன்று ஆதிகால மனிதனின் ஆற்றல் குறித்தான கிரகிப்புத்தன்மை சார்ந்தது. இவை ஒரு வகையான கட்டமைப்பின் அடிப்படையில் பழக்கப்படும்/பழக்கப்படுத்தப்படும் நிகழ்வுகள். இது வெறும் விவாதத்திற்கான எடுத்துக்காட்டு மட்டுமே.

ஆனால், மனிதனது மூளையின் செயல்பாடுகளுள் பல இப்படியான கிரகிப்புகளின் அடிப்படையில் இயங்குவதுதான். இதனடிப்படையிலேயே நமது மூளை தொடர்பற்ற நிகழ்வுகளைத் தொடர்புபடுத்திப் பொருளறிந்து பார்த்து, தமக்கான முடிவுகளை ஏற்றுக் கொண்டு சமாதானமடையும் ஒரு கருவியாகவேயிருக்கிறது. இதனடிப்படையிலேயே ஆன்மீகம் பெரும்பாலும், பொருண்மை குறித்த கதையாடலைத் துவங்குகிறது. ஆதாவது மூளை என்னும் பொருண்மையில் தோன்றும் மனது/சிந்தனை மற்றும் அதன் செயல்பாடுகளினது ஆற்றலானது இப்பிரபஞ்ச இயக்கம் மற்றும் அவ்வாற்றல் மூலத்திற்குமான தொடர்பு, குறித்தான கதையாடலாகயிருக்கிறது.

இக்கூற்றுகளில் எதுவும் தவறிருப்பதுவாகத் தெரியாது, ஏனெனில் மனித மூளையில் தோன்றும் மனது என்பது உருவமற்றது (மனது என்ற கருத்தே கேள்விக்குறியாகிக் கொண்டுதானிருக்கிறது). மனித மூளையின் செயல்பாடுகளிலிருந்து வெளிப்படும் மின் மற்றும் காந்த சமிஞ்சைகள் குறித்து அறிவியல் பேசியதால், இதைத்தான் ஆன்மீகம் குறிப்பிடுகிறது என்று எளிமையாகத் தொடர்புபடுத்த முடிந்தது. இம்மனதிலிருந்து தோன்றும் ஆற்றலானது இப்பிரபஞ்சத்தின் ஆற்றல் மூலத்துடன் நம்மைத் தொடர்புபடுத்துவதாகவும் எளிதாகத் தொடர்பு படுத்த முடிந்தது. அப்படித் தொடர்பு படுத்துவது என்ன தவறா? எப்படியானாலும் அதைத்தானே அறிவியலும் சொல்கிறது என்பதுதான் மனித மூளையின் உடனடிச் செயல்பாடு. இது, ஒரு வகையில் மனிதனின் சிந்தனைத் திறத்தினால் எழும் வேட்கையினைத் தணிப்பதற்காக உருவாக்கிக்கொள்ளும் ஒரு அனுமானம் அல்லது முடிவு.

இப்புள்ளியில் மேம்போக்காக வெறும் கருத்தாகப் பார்த்தால் அறிவியலும் ஆன்மீகமும் இணையத்தான் செய்கின்றன. ஆனால், அறிவியல் மூளையிலிருந்து மின் மற்றும் காந்த விசைகளின் செயல்பாடுகளைக் குறித்துப் பேசினாலும் அதோடு நின்றுவிடுவதில்லை. மூளை எனும் மின்வேதிமக்கலனில் இருக்கும் நியூரான்கள் அணுக்களாலும் மூலக்கூறுகளாலும் ஆனவை. ஒருவர் தியானம் அல்லது அமைதியான வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் போது, நமது மூளையில் உருவாகக் கூடிய சில வேதி மாற்றங்கள் மற்றும் நியூரான்களின் இணைப்புகளின் மாற்றத்தினால் ஏற்படும் செயல்பாட்டு மின்னழுத்தம் 0.0005 - 0.0015 வோல்டுகளாகவும், இவ்வகை மின்சமிஞ்சைகளின் வீச்சு 0.000010 - 0.000050 வோல்டுகளாகவும், இருப்பதாக அளவிடப்பட்டிருக்கிறது. மூளையில் நிகழும் அயனி இயக்கங்களின் நிகழ்வுகளால் ஏற்படும் மின் மாற்றங்களை மனிதனின் மண்டையோட்டு எலும்புகளுக்கு வெளியே அளவிடுவது இயலாத காரியம். ஆனால், இவ்வகை அயனிகளின் இயக்கங்களினால் ஏற்படும் காந்தப்புலம் அளவிடக் கூடியது. இப்படி அளவிடப்பட்ட காந்தப்புலமானது ஏறத்தாழ ~10ன் அடுக்கு -15 டெஸ்லா (காந்தப் புலத்தின் அலகு). இக்காந்தப்புலத்தின் எண்மதிப்பு பூமியின் காந்தப் புலத்தைவிட(~10-6T)ஏறத்தாழ ஒன்பது அடுக்குகள்(ஒன்பது மடங்குகள் அல்ல ஒன்பது அடுக்குகள்) குறைந்தது. இவ்வலிமை குறைந்த புலத்தை பூமியின் புறவிசைகளிலிருந்து தனித்து அளக்க வேண்டுமெனில் அது அவ்வளவு எளிதான காரியமல்ல.[1]

இப்படிப்பட்ட அமைதிநிலையில் தியானித்திருக்கும் ஒருவர், பூமியுடன் சேர்ந்து மணிக்கு 1,038 மைல்கள் வேகத்தில் சுழன்று கொண்டும், சூரியனைச் சுற்றி வினாடிக்கு 18.5 மைல்கள் வேகத்திலும், பால்வழியிண்டத்தின் மையத்தைச் சுற்றி வினாடிக்கு 150 மைல்கள் வேகத்தில் சுற்றிக் கொண்டும், பேரண்டவெளியில் ஏறத்தாழ வினாடிக்கு 1000 மைல்கள் வேகத்தில் நகர்ந்து கொண்டுமிருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் மனிதனது மூளையிலிருந்து வெளிப்படும் இவ்வலிமை குறைந்த காந்த விசையின் செறிவு, மற்றும் அவ்விசைகளின் பாயம் செயல்படும் வெளியின் அளவு, ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால், இப்பேரண்டத்தின் ஏதோ ஒரு புள்ளியில் இருப்பதாக நம்பப்படும் ஒரு ஆற்றல் மூலத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டிருப்பது சாத்தியமா..??[1]

இயற்கை மற்றும் சூழல் குறித்த பார்வை, இரண்டிலும் பெரிதும் குவிமையப்படுத்தப்படுவது, இப்பேரண்டமும் பிரபஞ்ச இயக்கங்களும் மட்டுமே. உயிர், உடல் குறித்தான பார்வைகள் முதன்மைப்படுத்தப்படுதில்லை. இவ்வகையான, அண்டத்தில் திளைத்து பிண்டத்தைத் துறக்கும் மெய்யியல் மற்றும் மனிதகுல வாழ்வையும் உலகத்தின் உண்மையும் "உணரும்" கதையாடலைக் கொண்ட ஆன்மீகம் மனித சமூகத்தின் கண்காணிப்பாளனாகத் தம்மை மாற்றிக் கொண்டதும் அதனைத் தொடர்ந்து சிந்தனைகள் அசைக்கமுடியா நம்பிக்கைகளாக மாறியதையும் அதன் எதிர்விளைவுகளைக் குறித்தும் அடுத்த பகுதியில் தொடர்வோம். மேலும், உணர்வுகளுக்கிடையான ஏற்றத்தாழ்வு அரசியலை மையப்படுத்தியதன் மூலம் அதன் நிறுவனத்தன்மையை உறுதிபடுத்திக்கொண்டது.

நிறுவனப்படுத்தப்பட்ட அறிவியலில் கூட இவ்வகையான ஏற்றத்தாழ்வுகளும் நம்பிக்கைகளும் உண்டு ஆனால் அது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. உதாரணமாக அறிவியல்/விஞ்ஞானம் என்றாலே பேரண்டம், பேரண்ட இயக்கம், துகள்பொளதீகம் போன்றவற்றை முன்னிறுத்துதல்.


அறிவியலை விமர்சிக்கும்(**) மற்றும் ஆழமான புரிதலில் விவாதிக்கும் வேறு பல கட்டுரைகள் .(*)

(*)
தமிழனின் இட்லியும் ஏகாதிபத்தியமும் - மீன்துள்ளியான்

http://ravisrinivas.blogspot.com/2008_06_01_archive.html

அழிவின் அறத்தில் உயிரும் பொருளும் - நாகார்ஜூனன்

ப்ரூனோ லத்தூர் - விஞ்ஞானமும் உண்மை-உருவாக்கமும் - நாகார்ஜூனன்

எரியும் பிரபஞ்சம் தலையில் சுழல்கிறது - ராஜன்குறை(சுட்டி-மீள்பதிவு ஜமாலன்)

திரு. நாகார்சுனன், ரவிஸ்ரினிவாஸ் ஆகிய இருவரின் கட்டுரைகள் மற்றும் ராஜன்குறையின் இக்கட்டுரையும், ஆழ்ந்த கருப்பொருட்களை முன்னிறுத்தி விவாதிப்பவை. இதைப்பற்றித்தான் பேசுகிறார்கள் என்று எனக்கு ஓரளவிற்குப் புரிந்த கட்டுரைகளை மட்டுமே இணைப்பு கொடுத்துள்ளேன்.


(**)

கண்மூடித்தனமாக அறிவியலை நம்பலாமா? - எதார்த்தவாதிகளே உஷார்!

ஏன் அறிவியலை கேள்வி கேட்க கூடாது?

ஆன்மீகத்தை கேள்வி கேட்கும் பகுத்தறிவுவாதிகள் ஏன் அறிவியலை கேள்வி கேட்பது இல்லை?


அறிவியல்-ஆன்மீகம் குறித்த வேறுசில கட்டுரைகள்.

http://cyrilalex.com/?p=403
http://cyrilalex.com/?p=400
http://cyrilalex.com/?p=401

[1].
“Prayer - A neurological Inquiry” - David C.Haas.

6 comments:

Anonymous said...

Waste of time..

அறிவகம் said...

திரு. கையேடு தங்களின் ஆன்மீக கிரகிப்பு பதிvil நிறைய விடயங்கள் விவாதிக்கவேண்டி உள்ளது. தற்போது நான் கோவைக்கு பணிஇடமாற்றம் செய்ப்பட்டுள்ளதால் விரிவான விவாதங்களில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை. தீபாவளிக்கு பின்னர் விவாதங்களை தொடரலாம். நன்றி.

கையேடு said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

ஜமாலன் said...

//எரியும் பிரபஞ்சம் தலையில் சுழல்கிறது - ஜமாலன் //

இது எனத கட்டுரை அல்ல. நண்பர் ராஜன்குறை எழதியது. அதை நான் மீன்பதிவு செய்தேன். திருத்திவிடுங்கள்.

//திரு. நாகார்சுனன், ஜமாலன், ரவிஸ்ரினிவாஸ் ஆகிய மூவரின் கட்டுரைகள் பலவும் பல ஆழ்ந்த கருப்பொருட்களை முன்னிறுத்தி விவாதிப்பவை. இதைப்பற்றித்தான் பேசுகிறார்கள் என்று எனக்கு ஓரளவிற்குப் புரிந்த கட்டுரைகளை மட்டுமே இணைப்பு கொடுத்துள்ளேன்//

இதிலும் ஜமாலன் என்பதற்கு பதிலாக ராஜன்குறை என்று இருக்க வேண்டும்.

உங்கள் பதிவு குறித்த எனது கருத்தக்கள பிறகு எழுதுகிறேன்.

நன்றி.

ஜமாலன்.

கையேடு said...

//திருத்திவிடுங்கள்.//

திருத்தியிருக்கிறேன்.
கவனக்குறைவிற்கு அனைவரும் மன்னிக்கவும்.

சு(கு)ட்டியதற்கு நன்றிங்க ஜமாலன்.

Unknown said...

உங்களது ஆன்மீக தகவல்கள் அனைத்தும் அருமை. நான் சமீபத்தில் http://www.valaitamil.com/spiritual என்ற இணையதள முகவரியை பார்த்தேன். அதில் ஆன்மீக தகவல்கள். சிறப்பாக தொகுக்கப்பட்டிருந்தது.