Friday, January 9, 2009

டார்வின்-200, பரிணாமக்கொள்கை-150


Image: http://fisher.berkeley.edu/cteg/images/photos/darwin.jpg


2009 - சார்லஸ் டார்வினின் 200வது பிறந்தநாள் காணும் ஆண்டாகவும், பரிணாமக் கொள்கையினை வெளியிட்டு 150ஆவது நிறைவு ஆண்டாகவும் திகழ்கிறது. 19 -ஆம் நூற்றாண்டின் சிறந்த இயற்கை விஞ்ஞானியாகவும், பரிணாமக் கொள்கையின் தந்தையாகவும் போற்றப் படுபவர் சார்லஸ் டார்வின். தமது வாழ்நாளில் பரிணாமக் கொள்கை குறித்து ஏறத்தாழ 16 புத்தகங்களும், 5000க்கும் மேற்பட்ட கட்டுரைகளும் எழுதியவர் டார்வின்.


பிறப்பு : 12 பிப்ரவரி 1809, இறப்பு: 19 ஏப்ரல் 1882,


பரிணாம விளக்கங்கள் உள்ளடக்கிய "Origin of species" வெளியீடு - 22 நவம்பர்1859


டார்வீனது 200 ஆவது பிறந்த ஆண்டு மற்றும் பரிணாமக் கொள்கையின் 150 ஆவது நிறைவு ஆண்டு ஆகிய இரண்டையும் கொண்டாடும் வண்ணம் அறிவியல் கட்டுரைகளுக்கான சர்வதேச இதழ்களுள் முதன்மையானவற்றுள் ஒன்றான "அறிவியல்(science)" வாரயிதழ் ஒரு மாத காலத்திற்கு, பரிணாமம் குறித்த சிறப்புக் கட்டுரைகள் மற்றும் உரையாடல்களையும் தொகுக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது, இத்தொகுப்பு அனைவருக்கும் இலவசமாகயிருக்காது, ஆனால், "Origins" என்ற தலைப்பில் ஒருசிறப்பு வலைப்பதிவு ஒன்றைத் துவங்கியிருக்கிறது. இவ்வலைப்பதிவிலும் பரிணாமம் மற்றும் டார்வின் பற்றிய செய்திகள், ஆய்வுகள், விமர்சனங்கள் என பலவும் இடம்பெறும் என அறிவித்திருக்கிறது. ஆனால், வலைப்பதிவின் கட்டுரைகளை முழுவதும் இலவசமாக வாசிப்பதற்கு, பெயர்ப் பதியவைத்தலும் அதற்காக வழங்கப்பட்ட கடவுச்சொல்லும் தேவைப்படும்.

இவ்வலைப்பதிவின் முதல் கட்டுரை உயிர்த்தோற்றம் பற்றிய டார்வினின் பார்வை மற்றும் நவீன கண்டுபிடுப்புகள் மற்றும் கருத்துக்கள் என விரிகிறது. உயிரினங்களின் தோற்றம் குறித்து விவரித்த டார்வினின், உயிர்த்தோற்றம் பற்றிய கருத்து குறித்தும் பேசப்பட்டிருக்கிறது.

டார்வினின் பரிணாமக் கொள்கை பற்றி ரிச்சர்ட் டாக்கின்ஸ் "ஒருவேளை வேற்று கிரகம் ஒன்றில் பூமியை ஒத்த உயிரினங்களின் தோற்றம் இருந்து, மனிதனையொத்த ஒருவுயிரினமும் இருந்து அவ்வுயிரினத்தை நான் பூமியில் சந்திக்க நேர்ந்தால், அவர்களை நோக்கிய எனது முதல் கேள்வி இதுவாகத்தான் இருக்கும்; பரிணாமக் கொள்கையை கண்டுபிடித்துவிட்டீர்களா....!!!???" என்று குறிப்பிடுகிறார்.

ரிச்சர்ட் டாக்கின்ஸ் - பரிணாமம் பற்றிய ஒரு மரபணுப்பார்வை என்ற கருத்தினை முன்னிருத்தி "The selfish gene" மற்றும் "The God Delusion" ஆகிய புகழ்பெற்ற புத்தகங்களை எழுதியவர்.

டார்வின் பற்றிய தனிப்பட்ட செய்திகள், பிறப்பு, இறப்பு, குடும்பம் போன்ற தகவல்களை இங்கே காணலாம்.


இனி டார்வின் மற்றும் பரிணாமக் கொள்கை பற்றிய எனது பார்வை

எனக்கு மிகவும் பிடித்த அல்லது ஆர்வமுடன் வாசிக்கும் ஒரு விஞ்ஞானத்துறை பரிணாமம். என்னை மிகவும் கவர்ந்த விஞ்ஞானிகளுள் முக்கியமானவரும் முதன்மையானவரும் சார்லஸ் டார்வின்.

நியூட்டன், கலிலியோ, ஐன்ஸ்டீன், நீல் போர், மாக்ஸ் பிளான்க், ஹாக்கிங்ஸ், ஃபியன்மேன் எனப்பல உலப்புகழ் பெற்ற விஞ்ஞானிகள் சிறந்த கண்டுபிடிப்புகளையும், அறிவியல் சித்தாந்தங்களையும் முன்மொழிந்த சிந்தனையாளர்கள் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லையெனினும், அவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டுப் பயன்படுத்துமொரு நியூட்டனின் புகழ்பெற்ற வாசகம் "On the shoulders of the giants". பலரது சிந்தனைகளைப் புரிந்து கொண்டு பின்னர், புரிதலின் விளிம்புகளை மாற்றியும் திருத்தியும் அமைத்தனர் என்பதற்கான ஒரு தன்னிலை விளக்க வாசகமாக இதனை நோக்கலாம்.

ஆனால், இயற்கை பற்றிய ஒரு ஆழமான மற்றும் அகன்ற பார்வையையும், சில தாவர மற்றும் உயிரியல் ஆய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய சிந்தனையைத் தோற்றுவித்து அச்சிந்தனை முறையையே டார்வினிஸம் என்று அழைக்குமளவிற்கு ஒரு புதியசெய்தியை உலகுக்கு அறிவித்தவர் டார்வின்.

மேலும், பூமியில் தோன்றி ஊன்றிய பல்வேறு கலாச்சாரங்கள், மற்றும் அக்கலாச்சாரக் குழுக்களின் நம்பிக்கைகள் எனப் பலவகைப்பட்ட மனித சமூகக் குழுக்களுள் இருந்த ஒற்றுமைகளுள் ஒன்று படைப்புத்தத்துவம். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ படைப்புத்தத்துவம் மனிதச் சமூகத்தின் அடிப்படை நம்பிக்கைகளுள் ஒன்றாகயிருந்தது. அப்படியானதொரு சூழலில், மொத்த உலகத்தின் பார்வையிலிருந்து தனித்து ஒரு சிந்தனை மற்றும் அதன்பயன் எழுந்த மாற்றுப்பார்வையை முன்வைப்பது என்பது எளிதல்ல.

டார்வினின் 200வது பிறந்த ஆண்டாக கொண்டாடும் வேளையில் இவ்வாண்டின் முதல் இடுகை டார்வின் குறித்து எழுதநேர்ந்ததில் மகிழ்ச்சி.

7 comments:

ஜமாலன் said...

நல்ல ஆரம்பம்...

தொடர்ந்து சிறப்பான விஞ்ஞானப் பதிவுகள் தர வாழ்த்துக்கள்.

டார்வினின் 200 வது ஆண்டை நிச்சயமாக தனிச்சிறப்பான ஒரு கௌரவ ஆண்டாக கொண்டாட வேண்டும். காரணம் மனித சிந்தனையில் நிழ்ந்த தலையாயப் புரட்சிகளில் ஒன்று அவரது பரிணாமக் கோட்பாடு. அதனால்தான் கார்ல் மார்க்ஸ் தனிது உலகப் புகழ்பெற்ற படைப்பான மூலதனத்தை டார்வினுக்கு அர்ப்பணிக்க விரும்பினார். டார்வின் சம்மதிக்காததால் அதனை செய்ய இயலவில்லை என் குறிப்பிட்டுள்ளார்.

டார்வின் கண்டுபிடிப்புகள் கண்டிப்பாக மகத்தானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அன்புடன்
ஜமாலன்.

முபாரக் said...

டார்வின் குறித்தும், பரிணாமக்கொள்கை குறித்தும் மேலும் நீங்கள் எழுதவேண்டும் என்ற ஆவலுடன் இருப்பவர்களில் நானும் ஒருவன். உங்களின் கடந்த டார்வின் குறித்த இடுகை மிகவும் பிடித்திருந்தது. இதுகுறித்து தொடர்ந்து எழுதுங்கள்

டார்வினின் origin of species ஆய்வு நூலுக்குப்பிறகு இவ்வுலகம் ஒருபோதும் பழைய வரையறைகளுக்கு திரும்பவில்லை.

வாழ்த்துகள்

சினேகபூர்வம்,
முபாரக்

கையேடு said...

//தொடர்ந்து சிறப்பான விஞ்ஞானப் பதிவுகள் தர வாழ்த்துக்கள்.//

மார்க்ஸ்-டார்வின் பற்றிய புதிய செய்திக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க ஜமாலன்.

கையேடு said...

//டார்வின் குறித்தும், பரிணாமக்கொள்கை குறித்தும் மேலும் நீங்கள் எழுதவேண்டும் என்ற ஆவலுடன் இருப்பவர்களில் நானும் ஒருவன்.//

வாழ்த்துக்களுக்கும், ஊக்கத்திற்கும் நன்றிங்க முபாரக்.
பரிணாமம் குறித்தும், டார்வின் குறித்தும்,இயன்ற வரை எளிமைப்படுத்தப்பட்ட கட்டுரைகளை இவ்வாண்டில் எழுத முயற்சிக்கிறேன்.

தருமி said...

a nice article at right time. great.
thanks

கையேடு said...

//a nice article at right time. great.//

நன்றிகள் பல.

வழிப்போக்கன் said...

டார்வினின் பரிணாமக் கொள்கையை மிகச் சிறந்த அறிவியலாகவே கருதுகிறேன். அது பற்றி தமிழில் ஏதேனும் நல்ல வலைத்தளங்கள் இருந்தால் குறிப்பிடுங்கள் அன்பரே. மற்றபடி உங்கள் பதிவுகள் அருமை.