Monday, June 22, 2009

சில நேரங்களில் சில முகங்கள்

மறத்தல், நினைத்தல், மறந்தது போல் நடித்தல், பின் மீண்டும் நினைத்தல், மறத்தல்...... என்பதாகவே நகர்ந்துகொண்டிருக்கிறது வாழ்வு.

பல சமயங்களில் இவையெல்லாம் மறந்து போனால் என்ன? என்று தோன்றுவதுண்டு. இவற்றை எனது மூளைச் செல்களின் இடுக்குகளில் துழாவி எடுத்து வெளியே எறிய முடிந்தால் எவ்வளவு நன்றாகயிருக்கும் என்று கூடத் தோன்றுவதுண்டு.

வகைதொகையில்லாமல் ஒன்று கூடி பித்து நிலைக்கு விரட்டிவிடுவதுண்டு சில முகங்கள்.

அவர்கள் இப்போது எப்படியிருப்பார்கள்? என்னவாகியிருக்கும் அவர்களுக்கு?
என திடீரென்று மின்னலாய் வெட்டிச் செல்லும் சில நினைவில் தங்கிய முகங்கள் பற்றிய ஒரு மீள்பார்வையே இவ்விடுகை.

**********************************************************************************************

மழையினை இரசிக்காத நாளும், ஆளுமுண்டா? ஆனால், அப்படியொரு மழைச்சாரலில் திடீரென தோன்றும் சில கேள்விகள் இவை "அவர்கள் இப்போது எப்படி இருப்பார்கள்? என்னவாகியிருக்கும் அவர்களுக்கு? "

சர்தார் சரோவர் அணைக்கட்டின் உயரத்தினை உயர்த்தி தனது பெருமையை உயர்த்தத் துடித்துக்கொண்டிருந்தது அரசு. அதன் விளைவாக அங்கே வாழ்ந்து கொண்டிருந்த ஆதிவாசிகள் இடம்பெயற நிர்பந்திக்கப்பட்டனர், வழமைபோல், சரியான மாற்று நிலங்கள் வழங்காமை, மற்றும் போதிய பதிலீடு செய்யாமை என அரசின் எல்லா குப்பைச் செயல்பாடுகளும் இங்கேயும் உண்டு. மேலும், அதிகமான ஊழல் நடந்துள்ளதாக உலக வங்கி பின்வாங்கிக் கொண்ட பெருமைமிகு செயல்பாடுகளும் இவ்வணைக்கட்டுத் திட்டத்திலுண்டு.





புகைப்படம்: http://www.narmada.org/images/satyagraha2003/sat8.jpg

"Narmada Bachao Andolan" மற்றும் மேதா பட்கர் உண்ணாநிலை ஆகியவை அநேகமாகப் பலருக்கும் நினைவிருக்கும். ஆனால், அதைப்பற்றி ஒன்றும் பேசப் போவதில்லை. அதுகுறித்த விரிவான கட்டுரையொன்று இங்கே
(நர்மதா தரும் செய்தி - http://rozavasanth.blogspot.com/2006/06/blog-post_04.html) இருக்கிறது. இது குறித்து மேலதிகத் தகவல்கள், தற்போதைய நிலவரம் மற்றும் புகைப்படங்களுக்கு இங்கே செல்லவும்: http://www.narmada.org/

இவ்வணைப் பிரச்சனையை முன்வைத்து "Drowned out" என்ற ஆவணப்படமொன்று வெளிவந்தது. அதிலே புகாரியா மற்றும் அவரது மனைவி என்றொரு சிறு அதிவாசிக் குடும்பம் வரும். திடீரென மழை பொழியும் நாட்களில் அவர்களைப் பற்றிய நினைவு வரும். அப்போதே அவர்கள் வீட்டு வாசல்வரை தண்ணீர் வந்திருந்தது, "அவர்கள் இப்போது எப்படி இருப்பார்கள்? என்னவாகியிருக்கும் அவர்களுக்கு? " கீழே அவ்வாவணப்படத்தின் சிறு பகுதியொன்று இருக்கிறது.




அத்திரைப்படத்தில் வரும் ஆதிவாசிகள் பலரும் பயன்படுத்தும் வார்த்தைகள் "அவர்கள் " - "நாங்கள்" ... எவ்வளவு அந்நியப்பட்டிருக்கிறோம் வல்லரசு இந்தியாவின் நவீனப் பிரஜைகள், மண்ணின் மைந்தர்களிடமிருந்து.. திரைப்படத்தின் இறுதிக்காட்சிகளில் புகாரியின் மனைவி "அவர்கள் நாங்கள் சாக வேண்டுமென்று நினைக்கிறார்கள்" - என்று குறிப்பிட்டு ஒரு விநாடி நிறுத்துவார், விழிகளிலிருந்து ஒரேயொரு சொட்டுக் கண்ணிர் விழும். அவ்வொருவிநாடி மொளனமும் ஒரு சொட்டுக் கண்ணீரும் ஏற்படுத்தும் வலி ..........

*************************************************************************************************

அடுத்ததாக கீழேயுள்ள ஆவணப்படம், ஆனந்த் பட்வர்தன் அவர்களால் எடுக்கப்பட்ட மற்றொரு ஆவணப்படம் "War and Peace". தலா 50 நிமிடங்கள் ஓடக்கூடிய அளவில் இரண்டு குறுந்தகடுகளாக கிடைத்தது. இப்படத்திலும் அரசியல் தளத்தில் உரையாடப பல இருந்தாலும், அதுபற்றி பேசப்போவதில்லை. கீழே கொடுக்கப்பட்ட சிறுபகுதியில் கூட அரசியல் உரையாடல் மட்டுமே இருக்கும், வேறு பகுதிகள் இணையத்தில் கிடைக்கவில்லை தற்போதைக்கு இதுதான் கிடைத்தது.







இவ்வாவணப் படத்திலும், பீகாரின் ஜடுகுடா மலைப்பகுதிகளில் இருக்கும் அதிவாசிகள் சமூகத்தினர் பற்றிய சில பகுதிகள் உண்டு. அங்கேயே பிறந்து வளர்ந்து, பின் மருத்துவம் பயின்ற மருத்துவர் மீண்டும் தம்மக்களிடமே சென்று அங்கே அவரது மக்களுக்கு யூரேனியத் தாதுக்களினால் ஏற்படும் கதிரியக்கக் பாதிப்புகளுக்கான சிகிச்சை அளித்து வந்திருக்கிறார். இறுதியில் அவருக்கும் புற்றுநோய் தாக்க, கண்கள் மட்டும் வெளித்தெரியும் படி ஒரு முகமூடியுடன் "உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறேன்" என்று பேட்டி அளித்திருப்பார்.

"அவர் இப்போது எப்படி இருப்பார்? என்னவாகியிருக்கும் அவருக்கு? "

அங்கேயிருக்கும் மக்களும் தங்கள் உரையாடலில் பயன்படுத்தும் சில வார்த்தைகள் "அவர்கள்"-"நாங்கள்"... ஆம் அவர்களினது வடுக்களின் மீது ஏறிநின்றுதான் நாம் தினமும் மாலையில் மின்விளக்கையேற்றுகிறோம்/ ஏற்றப்போகிறோம் வல்லரசுக் கனவுகளோடு.

***********************************************************************************

இவ்விடுகையை எழுதிக்கொண்டிருக்கும் இதே வேளையில் மேற்கு வங்கத்தின் "லால்கார்க்"கில் சில முகங்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன.
மேலும் விபரங்களுக்கு http://sanhati.com/front-page/1083/


தமிழில்: இந்தியாவிடமிருந்து சுதந்திரம் வாங்கிய 50 கிராமங்கள்!
இங்கேயும்: http://www.thenaali.com/thenaali.aspx?A=349
புகைப்படம் 29/06/09 அன்று பிற்சேர்க்கையாகச் சேர்க்கப்பட்டது.
************************************************************************************

இதெல்லாவற்றுக்கும் மேல் பித்து நிலைக்கு் விரட்டும் முகங்கள் சிலவுண்டு.

சில மாதங்களுக்கு முன் பி.பி.சி தனது வலைத்தளத்தில், பதுங்கு குழிகளுக்குள்ளே இருந்து மருட்சியோடு வானை நோக்கும் ஈழத்துப் பள்ளிச் சிறுவர் சிறுமியர் சிலரினது புகைப்படத்தை வெளியிட்டது. குண்டடிபட்ட இறந்த உடல்களைவிட இக்குழந்தைகளின் மருட்சி ஏற்படுத்தும் பாதிப்பு அதிகமாகவேயிருக்கிறது. மேலேயுள்ள எல்லா முகங்களும் குற்றவுணர்ச்சியில் சிறுகச் செய்தாலும், இக்குழந்தைகளின் முகங்கள் என்கைகளில் இருக்கும் உறைந்து போன இரத்தக் கறையின் வாடையோடு வந்து போகிறது. என்ன செய்து கழுவுவது....
????

************************************************************************************
மனிதனாக இப்பூமியில் வாழ்ந்து முடிப்பதற்குள் இன்னும், எத்தனை முகங்களையும், எத்தனை குற்றங்களையும் சுமக்க வேண்டியிருக்குமோ ......

9 comments:

Anonymous said...

மிகவும் அருமை.மனதை என்னமொ செய்கிறது

கையேடு said...

நன்றிங்க சுபாஷ்..

மணிநரேன் said...

//மறத்தல், நினைத்தல், மறந்தது போல் நடித்தல், பின் மீண்டும் நினைத்தல், மறத்தல்...... என்பதாகவே நகர்ந்துகொண்டிருக்கிறது வாழ்வு.//

ஒரு நிகழ்வாக இருந்தால் மறக்காமல் இருக்கலாம். ஆனால் இவ்வாறான விடயங்கள் ஒரு தொடர் சங்கிலி போல நடந்துகொண்டே இருக்கின்றன. ஒரு பிரச்சினைகான தீர்வை யோசிக்க முற்படுவதற்குள் அடுத்த பிரச்சினை எங்காவது எப்படியும் ஆரம்பித்துவிடுகின்றது. அதன் தாக்கம் அதிகமாக இருக்க முதல் பிரச்சினை மனதில் புதைந்து போகின்றது.

ஆனால் ஒன்று....மறதி என்ற வரம் நமக்கு கிட்டாமல் இருந்திருந்தால் நேரடியாக பாதிக்கப்படாத நாமெ(னெ)ல்லாம் ஒன்று ஏதாவது செய்யமுற்பட்டு இறந்திருப்போம் இல்லை நடைபிணமாய் வாழ்ந்திருப்போம்.

//மனிதனாக இப்பூமியில் வாழ்ந்து முடிப்பதற்குள் இன்னும், எத்தனை முகங்களையும், எத்தனை குற்றங்களையும் சுமக்க வேண்டியிருக்குமோ ......//

இதற்கு கணக்குவழக்கு இருக்காது என நினைக்கிறேன். அடுத்த சந்ததியினர்முன் நாமெல்லாம் குற்றவாளிகளே...

கையேடு said...

//அடுத்த சந்ததியினர்முன் நாமெல்லாம் குற்றவாளிகளே...//

மிகவும் உண்மை மணி..
நன்றி..

கையேடு said...

//மறதி என்ற வரம் நமக்கு கிட்டாமல் இருந்திருந்தால் நேரடியாக பாதிக்கப்படாத நாமெ(னெ)ல்லாம் ஒன்று ஏதாவது செய்யமுற்பட்டு இறந்திருப்போம் இல்லை நடைபிணமாய் வாழ்ந்திருப்போம்.//

ஆனால், சிலவற்றை மறவாமல் இருக்க வேண்டிய அவசியமும் இருக்கிறதே மணி..

ஜோசப் பால்ராஜ் said...

தேவையற்ற நினைவுகளை அகற்ற மருந்து கண்டுபிடித்தால் எனக்கும் கொஞ்சம் அனுப்பி வையுங்கள்.

கையேடு said...

//தேவையற்ற நினைவுகளை அகற்ற மருந்து கண்டுபிடித்தால் எனக்கும் கொஞ்சம் அனுப்பி வையுங்கள்.//

இவ்விடுகை எழுதி முடித்தவுடன் எனக்கும் அப்படித்தான் தோன்றியது. அதனைத் தொடர்ந்து குரங்கு மூளைக்கு வேறுசிலவும் தோன்றியது.அதைப்பற்றி பின்னர் எப்போவாவது விரிவாப் பேசலாம்.. :)

நன்றி பால்..

பதி said...

சில முகங்களையும் நினைவுகளையும் வாழ்வின் கடைசி வரைக்கும் மறக்க கூடாது என்று நினைத்துள்ளேன்... சில/பல சமயம் அந்த நினைவுகள் தரும் வலிகளே நாம் சென்று கொண்டிருக்கும் பாதையினை சீராக்குகின்றன...

//மனிதனாக இப்பூமியில் வாழ்ந்து முடிப்பதற்குள் இன்னும், எத்தனை முகங்களையும், எத்தனை குற்றங்களையும் சுமக்க வேண்டியிருக்குமோ ......//

அதுவும் வல்லரசுக் கனவுகளோடு.....

கையேடு said...

உண்மைதான் பதி.. :(