Monday, January 31, 2011

தமிழீழப் பெண்களும் அவர்கள் வேற்று மொழி உள்வாங்குதலும்

சமீபத்தில், மேலேயுள்ள தலைப்பில் ஒரு உரையைக் கேட்க நேர்ந்தது. உரையைக் கொடுத்தவர், மும்பையைச்(பிறந்து வளர்ந்த) சேர்ந்த தமிழ்ப் பெண். அவரது உரை மேலே குறிப்பிட்ட பொதுவான தலைப்பின் அடிப்படையிலேயே இருந்தாலும், அவரது ஆய்வு தமிழீழப் பெண்களின் சமூகப் பிண்ணனியும் (ஜெர்மானிய) மொழியை உள்வாங்குதலும், என்ற நுட்பமான கருவை நோக்கியது. அவரது உரையின் சில முக்கியப் புள்ளிகளைப் பகிர்ந்து கொள்ளவே இவ்விடுகை.

சமூகப் பிண்ணனியை அடிப்படையாகக் கொண்டதாலும், ஈழத்தில் நடக்கும் அவலம் பற்றி அறிந்திருந்ததாலும், பெண்களிடம் மட்டுமே உரையாடுவது என்று குறுக்கிக் கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

ஆய்வு முறையானது, உரையாடலுக்குத் தயாராகயிருக்கும் பெண்களைத் தேடிக்கண்டடைவது, குறிப்பாக, ஈழத்திலிருந்து வெவ்வேறு கால கட்டத்தில் வெளியேறிய பெண்களுடன் உரையாடுவது, அவர்களது மொழி அறிவு குறித்து உரையாடுவது என பிரித்துக்கொள்ளப் பட்டிருக்கிறது.

இங்கே வெவ்வேறு காலகட்டத்தை அவர் தேர்ந்தெடுத்தற்கான காரணங்களில் ஒன்று, 1983 ஜூலை நிகழ்வுக்குப் பின் வந்தவர்கள் பற்றியும், 2000 மாவது ஆண்டிற்குப் பின் ஜெர்மனியில் குடியேறியவர்கள் பற்றியுமானதாக இருந்தது. நோக்கம் இரண்டு தலைமுறைகளும் எப்படி இங்கு வேற்று மொழியை உள்வாங்குகிறார்கள் என்பதில் வேறுபாடுகளைக் கண்டடைவது. மற்றொன்று, ஜெர்மானிய அரசு, தனது அனுமதி வழங்குதலில்
ஜெர்மன் மொழிப் பயில்வதைக் கட்டாயமாக்கியதற்கு முன்னும் பின்னும் எனும் துணைக்காரணிகள் உள்ளடக்கியது.

மொழிப் பயிற்சியைக் கட்டாயமாக்கும் முன் அவர் ஜெர்மனி வந்தபின் மொழியை உள்வாங்குவார் அம்மொழி பேசப்படும் ஒரு சூழலில், கட்டாயமாக்கிய பின், அவர் இலங்கையிலேயே மொழி வகுப்புக்குச் செல்வார். அதாவது ஒரு மொழியை வேற்றுப் பிரதேசத்தில் உள்வாங்குவதற்கும், அதே மொழியை அம்மொழி பேசப்படும் நிலப்பிரதேசத்தில் உள்வாங்குவதற்கும் இடையே இருக்கும் வேறுபாட்டைக் கண்டடைவது, என ஆய்வின் உட்பிரிவுகளை விளக்கிக் கொண்டிருந்தார்.

உரையாடல்களில் என்னைக் கவர்ந்த மற்றும் தமிழ்ச் சமூகம் மிகவும் கருத்தில் கொள்ள வேண்டிய இரண்டு பெண்களின் உரையாடலை மட்டும் இங்கே கொடுக்கிறேன்.

உயர்ந்ததாக அறியப்படும் சாதியில் பிறந்த ஒரு பெண், தனக்கு இங்கே, படிப்பதற்கும், வேலை பார்ப்பதற்கும் அனுமதிகள் மறுக்கப்படுவதும், கட்டுபாடுகள் விதிக்கப்படுவதும் எண்ணிப்பார்க்கவே முடியாததாய் இருந்தது. அங்கே சமூக அங்கீகாரமும் பெருமைக்குமுரிய சாதியிலும் இருந்துவிட்டு இங்கு வந்து இருக்கும் நிலையை உள்வாங்கிக் கொள்ள மிகவும் கடினமாக இருந்தது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

தாழ்ந்ததாக அறியப்படும் மற்றும் அடக்குமுறைக்கு உள்ளான சாதியில் இருந்து வந்த பெண்மணி, இங்கே மிகவும் மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும், சுயசிந்தனையோடும் வாழ்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இலங்கையில் எழுதப் படிக்கத் தெரியாத தான், இங்கே(ஜெர்மனி) ஒரு குடும்பத்தையே சமாளிப்பதாகவும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இனி எனது பார்வை:

இவ்வுரையில், மொழியியல் வல்லுனர்களுக்கு எதுவும் புதிய செய்திகள் இருந்திருக்காது என்றுதான் எண்ணுகிறேன். ஆனால், பொது மக்களும், பல்வேறு துறை சார்ந்தோரும், பல்வேறு தேசத்தினரும், கூடும் ஒரு அரங்கில், கிடைத்த வாய்ப்பில் இலங்கை அரசின் மொழிக்கொள்கை, கறுப்பு ஜூலை, மற்றும் சுதந்திரத்திற்கு முன்னைய மக்கள் நிலையென, இலங்கையின் சமூக அவலத்திற்கு பெரும்பான்மையான நேரம் ஒதுக்கி, முக்கியப்படுத்தி உரையாற்றியது, தமிழனின் இன்றைய நிலையை கருத்தில் கொண்டால், மிகவும் பாராட்டத்தக்கதும் தேவையானதும் கூட.


மேலேயுள்ள இருவேறு பெண்களின் குரல்களிலிருந்து தோன்றிய எண்ணம் :

தமிழன் தன்னை மொழிஅடிப்படையிலான ஒரு இனமாகக் கருதி தனக்கான இக்கட்டான சூழல்களிலிருந்து தன்னை மீட்டெடுக்க வேண்டுமாயின், தனது தொன்மங்களை அப்படியே சுமந்து திரியாமல், மீள்பரிசோதனை செய்து கொண்டு, உலகளாவியதொரு பார்வையோடு ஒன்றிணைந்து சமூகத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியம்.


9 comments:

கையேடு said...

இவ்விடுகையை எழுதி முடித்த கையோடு வந்த செய்தி..

//விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் நரிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமம் தாமரைக்குளம். அங்குள்ள தலித்துகளின் 33 வீடுகளும் நேற்று (30.1.11) மாலை ஆறரை மணியளவில் தாமரைக்குளம் கள்ளர்களாலும் தச்சனேந்தல் தேவர்களாலும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. அங்கிருந்த கடையும் கூரைவீடுகளும் அறுவடை செய்து களத்திலிருந்த நெற்கதிர்களும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான ஆண்கள் வேலைநிமித்தமாக வெளியூர்களுக்கு சென்றுவிட்டிருந்த நிலையில் கைக்கு சிக்கிய பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் யாவரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். - ஆதவன் தீட்சன்யா //
http://www.facebook.com/home.php#!/note.php?note_id=196179163742362&id=100000182272728

ராஜ நடராஜன் said...

//தனது தொன்மங்களை அப்படியே சுமந்து திரியாமல், மீள்பரிசோதனை செய்து கொண்டு, உலகளாவியதொரு பார்வையோடு ஒன்றிணைந்து சமூகத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியம்.//

தனது தொன்மங்களையும் சுமந்து கொண்டு மீள் பரிசோசதனையாக உலகளாவிய பார்வையோடு ஒன்றிணைவதே தமிழ் சமூகத்தை முன்னெடுக்கும் என நம்புகிறேன்.

இன்னும் சொல்லப்போனால் புலம் பெயர்ந்தவர்களே தொன்மங்களையும் விடாமல் உலகளாவிய பார்வைக்குள்ளும் இணைகிறார்கள் என்பேன்.

கையேடு said...

நன்றிங்க ராஜநடராஜன்,

தொன்மம் குறித்து சமூக நோக்கில் உரையாட நிறைய இருக்கிறது. தற்போதைக்கு தனிமனிதப் பார்வையில் மட்டும்..

ஒரு தனிமனிதப் பார்வையில் தொன்மம் என்பது ஒரு பெரும்சுமைதானே.. ஏன் ஒருவர் அதை சுமந்துகொண்டு இருக்க வேண்டும் என்ற கேள்வியும் வருகிறது இல்லையா?

இச்சுமைதானே என்றோ ஒருநாள், அடையாள அரசியலுக்குள் நுழைந்து, சர்வாதிகாரமாகவும் மாறும் சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது.

Anna said...

"தனது தொன்மங்களை அப்படியே சுமந்து திரியாமல், மீள்பரிசோதனை செய்து கொண்டு, உலகளாவியதொரு பார்வையோடு ஒன்றிணைந்து சமூகத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியம்."


இக்கருத்தோடு முழுதாக ஒத்துப்போகின்றேன்.


ஆனால் அந்த இரு பெண்களிடையேயும் வேற்றுமொழி உள்வாங்களில் இருந்த வேறுபாடு தனியே சாதியால் மட்டும் தானா அல்லது அவர்கள் பிறந்ததிலிருந்து அவர்களின் வளர்ப்பு முறைகளால் அவர்கள் செதுக்கப்பட்டதிலிருக்கும் வேறுபாடுகளும் சேர்ந்ததா எனத் தெரியவில்லை. ஒருவரைக் கஸ்டப்பட்டு முயற்சித்து வெற்றி பெறச் செய்யும் தன்மையை மேற்கூறிய இரண்டாவது காரணமும் மிகப் பாதிக்கும்.

"உயர்ந்ததாக அறியப்படும் சாதியில் பிறந்த ஒரு பெண், தனக்கு இங்கே, படிப்பதற்கும், வேலை பார்ப்பதற்கும் அனுமதிகள் மறுக்கப்படுவதும், கட்டுபாடுகள் விதிக்கப்படுவதும் எண்ணிப்பார்க்கவே முடியாததாய் இருந்தது. அங்கே சமூக அங்கீகாரமும் பெருமைக்குமுரிய சாதியிலும் இருந்துவிட்டு இங்கு வந்து இருக்கும் நிலையை உள்வாங்கிக் கொள்ள மிகவும் கடினமாக இருந்தது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்."

இந்த கலாச்சார மாற்றம் எனக்குத்தெரிந்த பலர் மொழியில் மட்டுமல்ல அவர்கள் வேலைகளிலும் அனுபவித்துள்ளனர். உதாரணத்திற்கு இலங்கையில் வைத்தியர்கள் என்றால் கிட்டத்தட்ட கடவுளுக்கு சமமாக மதிக்கப்படுவர். பலர் நோயாளிகளை மதிப்பதேயில்லை, எதுவும் விளங்கப்படுத்துவது கூட இல்லை. Many are arrogant and rude. The philosophy that kindness will cure half the disease is not applied in many circumstances. பலருக்கு இங்கு வந்து நோயாளிகளைத் தாமகவே வந்து அழைத்து, அன்பாகக் கதைத்து, நோயை/மருந்துகளை விளக்குவது முதலில் பெரும்பாடாக இருக்கும்.

அதே மாதிரி ஆசிரியர்களும். அங்கு கடவுளுக்கு சமம். யாரும் எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாது. இங்கு எதிர்மாறு. எனக்குத்தெரிந்த இங்கு வந்த சில ஆசிரியர்கள், இங்கு வெலை செய்யவே முடியாதென்று தொழிலையே விட்டு விட்டனர். பலர் என்னும் திட்டித் திட்டியே தொழில் செய்கின்றனர்.

கையேடு said...

விரிவான உரையாடலுக்கு நன்றிங்க அனாலிஸ்ட்..

//ஆனால் அந்த இரு பெண்களிடையேயும் வேற்றுமொழி உள்வாங்களில் இருந்த வேறுபாடு தனியே சாதியால் மட்டும் தானா அல்லது அவர்கள் பிறந்ததிலிருந்து அவர்களின் வளர்ப்பு முறைகளால் அவர்கள் செதுக்கப்பட்டதிலிருக்கும் வேறுபாடுகளும் சேர்ந்ததா எனத் தெரியவில்லை//

உண்மைதான் அவ்விரண்டு பெண்களின் உரைகளில் மொழி உள்வாங்குதல் அடிப்படையிலான காத்திரமான புள்ளிகள் இல்லைதான். உரையைக் கொடுத்தவரும் மொழியியலோடு இதனைத் தொடர்பு படுத்தவேயில்லை. ஒருவேளை அவர் அங்கு வருவதற்கு முன்னர் நேரம் முடிந்திருக்கலாம்.

தொழில் அடிப்படையிலான சமூக மதிப்பீடுகள் பற்றி நீங்கள் குறிப்பிடுவதில் முழுவதும் உடன்படுகிறேன்.

ஆனால், இதில் கவனிக்கப்படவேண்டிய மற்றொன்று. அவர்களே இலங்கை/இந்தியா வந்துவிட்டால் வழமை போலவும், மேற்குலகில் மனிதநேயத்துடனும் நடந்து கொள்கின்றனர். மூளையில் ஒரு சுவிட்ச் இருக்கும் போல தாய்நாட்டிற்கான நியூரான் சுற்று, மேற்குலகிற்கான நியூரான் சுற்று என.. :)

Anna said...

"அவர்களே இலங்கை/இந்தியா வந்துவிட்டால் வழமை போலவும், மேற்குலகில் மனிதநேயத்துடனும் நடந்து கொள்கின்றனர்."

So true. இதை வாசிக்கும் போது நினைவுக்கு வந்தது: பஸ்ஸிலோ/தியேட்டரிலோ சீட்டு வாங்குவதற்கோ அல்லது வேறு எங்கேனும் நிறைய மக்கள் இருக்கும் இடத்திலோ ஒழுங்காக வரிசையாக நின்று இங்கு வேலை முடிக்கும் ஆட்கள் அங்கு போனதும் முண்டியடிப்பது. :(

Anonymous said...

//தாழ்ந்ததாக அறியப்படும் மற்றும் அடக்குமுறைக்கு உள்ளான சாதியில் இருந்து வந்த பெண்மணி, இங்கே மிகவும் மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும், சுயசிந்தனையோடும் வாழ்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இலங்கையில் எழுதப் படிக்கத் தெரியாத தான், இங்கே(ஜெர்மனி) ஒரு குடும்பத்தையே சமாளிப்பதாகவும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.//
இதில் எனக்கு ஆச்சரியமான விடயங்கள்.
1.இலங்கையிலும் சாதி வேறுபாடுகள் உண்டு. ஆனால் இந்தியாவில் உள்ள மாதிரி மோசமாக இல்லை.
2.இலங்கையில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் தொகை மிக அதிகம்.
3.எழுதப் படிக்கத் தெரிந்தவர்களால் தான் ஒரு குடும்பத்தை சமாளிக்க முடியும் என்று நினைப்பது.

கையேடு said...

//எழுதப் படிக்கத் தெரிந்தவர்களால் தான் ஒரு குடும்பத்தை சமாளிக்க முடியும் என்று நினைப்பது. //

இதைத் தவிர உங்களது மற்ற புள்ளிகள் குறித்து எனக்கு அதிகம் தெரியாது, அதனால் அதை இலங்கை பற்றி அறிந்தவரின் கருத்தாக ஏற்றுக்கொள்கிறேன்.

எழுதப் படிக்கத் தெரிந்தவர்களால் ஒரு குடும்பத்தை சமாளிக்க முடியுமா இல்லையா என்பதல்ல சிக்கல். அப்படி இருப்பவருக்கான சமூக மதிப்பீடுகள்தான் சிக்கலாக இருக்கின்றன, அம்மதிப்பீடுகள்தான் எண்ணங்களை கட்டமைக்கின்றன.

Anna said...

"1.இலங்கையிலும் சாதி வேறுபாடுகள் உண்டு. ஆனால் இந்தியாவில் உள்ள மாதிரி மோசமாக இல்லை.
2.இலங்கையில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் தொகை மிக அதிகம்."


As far as I know these are actually true.

Although the caste issues within SL Tamil population is utterly unacceptable, it is not as bad as India. அதனால் தான் சாதியோடு அவ்விருவரின் மற்றைய பின்புலங்களும் அறிந்தால் தான், மொழி உள்வாங்கல் தன்மையிலுள்ள வேறுபாட்டின் உண்மையான காரணத்தை அறியலாம் எனக் கூறியிருந்தேன். ஆனாலும் இலங்கையில் இன்னும் இருக்கும் சாதி ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட ஒருவரின் கருத்தைக் கேட்டால் நன்றாக இருக்கும். அப்படிப்பட்டவரின் கருத்து நிச்சயம் என்னுடையதையும் விட வலுவானதாக இருக்கும்.

என் துணைவனோடு I volunteer/work with quite a number of people who came as refugees here. I think superficially, the main differences in their efforts to succeed, the risks they are willing to take and generally how they perceive life's difficulties, mainly relates to how they were brought up (especially women). Does that even make sense? Sorry.

"எழுதப் படிக்கத் தெரிந்தவர்களால் ஒரு குடும்பத்தை சமாளிக்க முடியுமா இல்லையா என்பதல்ல சிக்கல். அப்படி இருப்பவருக்கான சமூக மதிப்பீடுகள்தான் சிக்கலாக இருக்கின்றன, அம்மதிப்பீடுகள்தான் எண்ணங்களை கட்டமைக்கின்றன."
Well said.