Monday, November 12, 2007

சகோதரக் குடும்ப அட்டையில் புதிய உறுப்பினர் சேர்க்கை


இதுவரை நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்கள், மிகப் பெரியனவாகவும், அதீதவெப்பநிலையையும், தங்களின் சூரியனைச்சுற்றி ஒரு சீரற்ற பாதையில் உழல்பவையாகவும் இருந்தன. மேலும், அப்படிக் கண்டுபிடிக்கப்பட்ட வெகு சில கிரகங்களும் நட்சத்திரத்திற்கு ஒன்று என்ற விகிதத்திலேயே இருந்தன.

ஆனால், 41 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் 55- Cancri என அழைக்கப்படும் ஒரு நட்சத்திரத்திற்கு மட்டும் இதுவரை நான்கு கிரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொலைநோக்கிகளின் மேம்பாட்டாலும், 18 ஆண்டுகள் தொடர்கண்காணிப்பின் விளைவாலும், தற்போது மேலும் ஒரு புதிய ஐந்தாவது கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சான்ஃபிரான்ஸிஸ்கோ மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Debra Fischer மற்றும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Geoffrey Marcy ஆகியோரின் தலைமையிலான விஞ்ஞானக்குழு இதனை இணைந்து கண்டறிந்துள்ளனர்.

இப்புதிய கிரகம் பூமியைவிட 45 மடங்கு அதிக நிறையையும், அதன் சூரியனைச் சுற்றிவர 260 நாட்களும், யுரேனஸ் மற்றும் நெப்டியூனில் காணப்படும் கருப்பொருட்களுக்கு இணையான கருப்பொருட்கள் கொண்டதாயும் இருப்பதாகக் கூறுகின்றனர். உயிர்த்தோற்றத்திற்கான அத்தியாவசியச் சூழலுக்கான வரம்புகளின் உள்விளிம்பில் இப்புதிய கிரகத்தின் அமைப்பு இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இதே நட்சத்திரத்தின் குடும்பத்தில் மேலும் புதிய கிரகங்கள் அல்லது துணைக்கோள்கள் கண்டுபிடிக்கப் படுமாயின், அவற்றில் பூமியை ஒத்த உயிர்த்தோற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அதற்கு நாம் தொழில்நுட்பம், மற்றும் அறிவியல் வளர்ச்சி மற்றுமொரு படிநிலைத் தாண்டும்வரைக் காத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றனர்.

நமது சூரிய குடும்பம் போல வேறு சில குடும்பங்களும் இருக்கலாம், என்ற அனுமானம், இக்கண்டுபிடிப்பினால், மேலும் ஒருபடி உறுதியாக்க நிலை நோக்கி நகர்ந்திருக்கிறது என்றே கருதலாம்.

3 comments:

வித்யா கலைவாணி said...

இது போன்ற அரிய அறிவியல் செய்திகளை அடிக்கடித் தர வாருங்கள் கையேடு

Kulapam said...

அரசியல் சார்ந்த பதிவை எதிர்பாத்தேன், அறிவியல் பதிவு .......

இந்த குடும்பத்தில், சொர்க்கம் எங்கே நரகம் எங்கேனு யாரவது ஆராய்சி செய்றங்களா?

:)

கையேடு said...

//வித்யா கலைவாணி said...
இது போன்ற அரிய அறிவியல் செய்திகளை அடிக்கடித் தர வாருங்கள் கையேடு//

முடிந்த வரை வந்து அறிந்தவரை தருகிறேன். நன்றி

நன்றி gven.
//அரசியல் சார்ந்த பதிவை எதிர்பாத்தேன், அறிவியல் பதிவு .......//

:)

//இந்த குடும்பத்தில், சொர்க்கம் எங்கே நரகம் எங்கேனு யாரவது ஆராய்சி செய்றங்களா? //

:))