இக்கட்டுரை நமது சக நண்பர்களான "நாய்கள்" சமூகத்தில் அன்றாடம் நடைபெறும் சில நிகழ்வுகள் பற்றியது. இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ள சம்பவங்கள் மற்றும் புரிதல்கள் எனது நண்பர் சீனிவாசனுடன் இணைந்து, வெவ்வேறு உறுப்பினர்களையும் சமூகக்குழுக்களையும் இரண்டாண்டுகள் கண்காணித்ததில் விளைந்தது.
இக்கட்டுரையை நீங்கள் முழுமையாகப் படிக்கும் முன்னர் ஒரு விசயத்தைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். இனி கட்டுரையில் அச்சமூகத்தில் அவ்வுறுப்பினர்களுக்கு இருக்கும் பொதுப்பெயர்கள் மற்றும் உயர்தினைச் சொற்கள் கொண்டே அழைக்கப்படுவர் [தாய், குழந்தை, காதலன், காதலி, தலைவர் (குழுவின் தலைவர்)....]. இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ள அனைத்துச் சம்பவங்களும் அச்சமூகத்தில் சுதந்திரமாகத் திரியும் உறுப்பினர்களை மட்டுமே கண்காணித்ததில் விளைந்தது (நம்மால் பாசத்தோடு "தெரு நாய்கள்" என்றழைக்கப்படுபவர்கள்). மேலும், இக்கட்டுரையை முழுவதுமாக வாசிப்பதற்கோ அல்லது நிகழ்வுகளை இரசிப்பதற்கோ ஓரளவுக்கேனும் விலங்குகள் மீது ஒரு பற்றுதலும், ஈடுபாடும் வேண்டும், இல்லையென்றால் காலவிரயம் என்ற அயர்ச்சிதான் மிஞ்சும்.
எந்த உயிரினமாயிருந்தாலும் முதலில் பிறப்பில்தானே ஆரம்பிக்கவேண்டும், ஆதலால் நாமும் பிறப்பிலிருந்தே ஆரம்பிப்போம்.
I - தாயும் குழந்தைகளும்
சூழல் - மனித நடமாட்டமும், சிறுவாகனங்களின் போக்குவரத்தும், வெகுவாக உள்ள ஒரு சாலைக்கருகே நான்கு குழந்தைகளுடன் மரங்களும் சில புதர்ச்செடிகளும் கொண்ட திறந்தவெளியில் தஞ்சமடைந்திருந்தது அக்குடும்பம்.
மனித சஞ்சாரமிகுந்த பகுதியாதலாலும், பல இன்னல்களிலிருந்து பாதுகாக்க வேண்டியிருப்பதாலும், குழந்தைகள் சாலையிலிருந்து 20 அடி தள்ளியிருக்கும் ஒரு புதரிலேயே உறங்கவைக்கப்பட்டிருந்தன. சாலையையும் அப்புதர்ப்பகுதிகளையும் தடுப்பது அரையடிக்கும் குறைவாக வெளியே தெரியும் கருங்கல் புதைக்கப்பட்ட எல்லை. ஒரு மாலை குழந்தைகளுக்கு உணவு வழங்கிவிட்டு புதரிலிருந்து வெளிப்பட்டதாயைப் பின் தொடர்ந்து குழந்தைகளும் சாலையை நோக்கி ஒடிவந்தன. சாலையை நெருங்கியவுடன் தாய் சற்று வேகமான பாய்ச்சலில் சாலையில் வந்து நின்று தன் குழந்தைகளை நோக்கித் திரும்பி ஒரு பார்வையை வீசினாள். குழந்தைகள் அப்படியே அந்த இடங்களில் உறைந்து போய் நின்றன. பின்னர் வெகுநேரம் தாய் செல்வதையே வேடிக்கை பார்த்த குழந்தைகள், மெதுவாகப் புதருக்குள் நுழைந்தன. இங்கு அவ்வெல்லையை தாண்டக்கூடாது என்பதை அனுபவரீதியாக அக்குட்டிகள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை, அப்படியிருக்கையில் தாய் இல்லாதபோது கூட அவ்வெல்லையைத் தாண்டஎத்தனிக்காத அளவிற்கு அர்த்தப்படும் அந்த பார்வையின் பொருளை அவை எவ்வாறு உணர்ந்திருக்க முடியும் என்பது வியக்கவைக்கிற ஒன்று.
திடீரென்று ஒரு கோடை மதியத்தில் மண்வாசனையுடனான மழைத் தூரல். இரவும் மழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் எங்களுக்கே தெரிந்தன, நான்கு குழந்தைகளுடன் பாதுகாப்பற்ற மர நிழலில் வாழும் அத்தாய்க்குத் தெரியாதா என்ன? இரவு மழை வலுப்பதற்குள் நான்கு குழந்தைகளையும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும்.
அன்று மாலை தன் குட்டிகளுக்கு உணவுவழங்கிய பின்னர், வழக்கம் போல் தன் குழந்தைகளுடன் விளையாட ஆரம்பித்தாள் அத்தாய். சிறிது நேரம் தனது நான்கு குழந்தைகளுடன் விளையாடிய அவள், ஒரே ஒரு குழந்தையின் மேல் அதிக கவனம் செலுத்தினாள். ஏறத்தாழ 10 நிமிடம் ஒரே குழந்தையிடம் விளையாடிய தாயின் செய்கை எங்களை வியப்பில் ஆழ்த்தியது போல் மற்றகுழந்தைகளையும் வியக்கவைத்திருக்கிறது. மற்றகுழந்தைகளும் விளையாட்டை நிறுத்திவிட்டு தாயின் இச்செய்கையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தன. வேடிக்கை பார்த்ததோடல்லாமல், தாயின் செயலுக்கான காரணம் புரியாததால், அக்குட்டிகள் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டன. என்ன நடக்கிறது? ஏன் நடக்கிறது? என்பது புரியாத தவிப்பு. இங்கு தவிப்பு என்று ஒற்றை வார்த்தையில் குறிப்பிட்டிருந்தாலும் அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாத செயல்பாடுகள் என்றுதான் குறிப்பிடவேண்டும், அல்லது, தவிப்பு என்ற வார்த்தையின் முழு வீச்சுக்கான செயல்வடிவம் என்று கொள்ளலாம்.
அங்கே நடைபெற்றதெல்லாம், குழந்தைகளின் இடமாற்றத்துக்கான முன்னேற்பாடுகள் என்பது எங்களுக்குப் புரிவதற்கே 15 நிமிடங்கள் ஆனது. குழந்தைகள் ஓரளவுக்குப் பெருத்துவிட்டதால் எளிதாக தாயின் வாயினுள் நுழையவில்லை. இதனால் தாயின் வேலைப்பளு இரட்டிப்பாகிவிட்டது, என்னதான் தனது குட்டியாயிருந்தாலும், இப்போது தனது தாயின் மீதான நம்பகத்தன்மையை இழந்திவிட்டிருந்தது அக்குழந்தை. கடைசியாக குழந்தையின் பின்னங்கால்களில் ஒன்றைக் கவ்விக்கொண்டு குழந்தையின் முன்னங்கால்களைத் தரையில் நடக்கவிட்டு தரையில் இழுத்துச் சென்றாள் அத்தாய். அன்றிரவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம், சிலவாரங்கள் பயன்படுத்தாமல் நிறுத்தப்பட்டிருந்த காரின் அடிப்புறம்.
இப்போது புதிய இடத்தில் இக்குழந்தை தனியாக இருக்க வேண்டுமே அதனால், மாற்றப்பட்ட குழந்தையுடன் சில நேரம் அத்தாய் செலவிடவேண்டியிருந்தது. பின்னர் ஒரு 15 நிமிடம் கழித்து மீண்டும் மற்ற குழந்தைகளிடம் வந்தாள் அத்தாய். ஒரு குழந்தையை இடமாற்றம் செய்ய அவள் எடுத்துக் கொண்ட நேரம் மட்டும் ஏறத்தாழ 45 நிமிடங்கள். இப்போது மீண்டும் அதே விளையாட்டு குழந்தைகளிடம், பின்னர் மீண்டும் ஒரே குழந்தை குறிவைக்கப்பட்டது, இப்போதும், அதே தொடர் நிகழ்வுகள், ஆனால் இப்படி உடனடியாக நிகழும் நிகழ்வுகளில் கூட அத்தாய் முன் செய்த தவறையே திரும்பவும் செய்தாள், அதாவது முதலில் தனது வாயினாலேயே கவ்விச் செல்ல முனைந்தது, இதனால் மீண்டும் தனது நம்பகத்தன்மைக்கான போராட்டத்தை நிகழ்த்த வேண்டியிருந்தது. இப்போதும் மற்றுமொரு 45 நிமிடம். ஆனால் அப்படித் தேர்ந்தெடுத்த இடமான அக் காரின் அடிப்புறம் தற்காலிகமானதுதான் என்பது எங்களுக்கு அடுத்த நாள் மாலைதான் புரிந்தது. குழந்தைகளை இடப்பெயர்ச்சி செய்வது ஒரு போராட்டமாகவே இருந்தது அத்தாய்க்கு. இந்நிகழ்வினிடையே சில மனிதர்கள், சில சக சமூக உறுப்பினர்கள் எனப் பலரையும் எதிர்கொள்ளவேண்டியிருந்தாலும், அதன் நுணுக்கங்களையும் அத்தாயின் எதிர்கொள்ளல்களையும் பதிவின் நீளம் கருதி விளக்கவில்லை.
இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ள சில நிகழ்வுகளில் மேலே குறிப்பிட்டுள்ள இந்நிகழ்வை மட்டும், எதிரேயிருக்கும் எங்கள் விடுதியின் மாடியிலிருந்து, நிழற்படக்கருவி மூலம் ஒரு மணி நேரம் நிகழக்கூடிய ஒரு நிகழ்வாகப் படம்பிடிக்க முடிந்தது.
இனப்பெருக்கக் காலங்களில் குழுவில் தலைவிக்குதான் பல முன்னுரிமைகள் அளிக்கப்படுகின்றன. உதாரணமாக காதலர்களின் காவலோடு தங்களது எல்லைகுட்பட்ட உணவகங்களில்(குப்பைத்தொட்டி) முதலில் உணவருந்துதல், பின்னர் மற்ற காதலர்களுடன் பகிர்தல். தன்னுடைய எல்லைக்குள் வேறு ஒரு பெண் நுழைந்துவிட்டால் தாக்குதலை முன்னின்று நடத்துதல். இங்கு, அதீத தீவிரத்துடன் முன்னின்று தாக்குதலை நடத்துபவர் பெண்தான். ஒருவேளை, எல்லைக்குள் நுழைந்த பெண் தனது முன்னால் காதலியாயிருந்தால்கூட ஆணுக்குப் பரிவுகாட்டும் உரிமை கிடையாது, தாக்குதலுக்கும், எல்லையைத்தாண்டி விரட்டுவதற்கும் துணைபோகத்தான் வேண்டும். பெரும்பாலும் தாக்குதலில் காயப்படுத்தப் படும் பகுதிகள், முகம், கழுத்து மற்றும் பின்கால்த் தொடைகள். இனப்பெருக்க காலங்களில் நடைபெரும் எல்லை ஊடுறுவலிலான தாக்குதல், ஊடுருவியவரின் மரணம் வரைச் செல்லக்கூடியதாயிருக்கலாம், சிலவேளைகளில் மரண ஓலத்தினால் பரிதாபப்பட்டு அருகிலிருக்கும் மனிதர்கள் தலையிட்டு காப்பாற்றினால்தான் உண்டு. நான்கைந்து காதலர்களுடன், கூட்டாக வாழ்ந்தாலும், உடலுறவில் யாருக்கு முன்னுரிமை என்பது எதனடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்பதை எங்களால் சரியாகக் கவனிக்க இயலவில்லையென்றாலும். உயிரியலின் அடிப்படையான தேர்வுமுறைதான் இருக்கவேண்டும், என்று கருதுகிறேன்.
இதில் குறிப்படுத்தகுந்ததும் எங்களை வியக்கவைத்ததும், எல்லை ஊடுறுவலை தன் காதலர்களிடம் அவை அறிவிக்கும் விதமும், வேகமும். மரநிழலில் காதலர்கள் ஓய்வெடுத்துக்கொண்டிருக்க, அவற்றின் முன் சென்று தன் பரபரப்பை வெளிப்படுத்தி, ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் மொத்தப் பரிவாரத்தையும் தாக்குதலுக்குத் தயார்படுத்திவிடுகிறது. சில நேரங்களில், எதிராளி அல்லது ஊடுறுவியவள் கண்களுக்குச் தெரியும் வரை காதலர்கள் ஒருவிதப் பரபரப்புடன் பின் தொடர்கிறார்கள், ஓடிக்கொண்டிருப்பவள் கண்களுக்குத் தென்பட்டவுடன், தன் முழுத்திரனையும் பயன்படுத்தி ஓடமுனைகின்றனர்.
ஆனால் ஊடுறுவுபவர் தன் காதலர்களுக்கிணையான வலுவான ஆணாயிருந்தால், எதிர்கொள்ளல்கள் மாறுபடுகிறது. பதிவின் நீலம் கருதி அதைப் பற்றி விரிவாக வேறு சமயத்தில் பார்க்கலாம்.
இவ்வுடல் மொழிகளை அவை மிகுந்த கண்ணியத்துடன் கடைபிடிப்பவை, உதாரணமாக நீங்கள் ஒரு "மனம்பிறழாத" சமூக அங்கத்தினரை எதிர்கொள்ளநேர்ந்தால், அப்படியே நின்று கைகளைக்கட்டிக்கொண்டு வானத்தை நோக்குங்கள் போதும், எக்காரணத்தைக் கொண்டும் அவரின் கண்களை நோக்கவேண்டாம். இதை எனது நேரடி அனுபவமாகக் கூடக் கொள்ளலாம், அதுவும் ஒருவரோடல்ல, ஒரேசமயத்தில் இருவரோடு.. :))
உங்களுக்கு ஒருவேளை இவ்வீதிச்சமூகத்தினரைத் தாக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், கூடுமான வரை அவர்களின் கால்களையோ முகத்தையோ காயப்படுத்தாதீர்கள். அவர்களின் வாழ்வியல் ஆதாரமே அவைதான்.
_________________
மொழி என்பது எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு கருவி என்றால், அவை பயன்படுத்தும் உடல் மொழிகளின் துணையால் நம்மை விட வேகமாகவே தொடர்பு கொள்கின்றன. மொழி என்பது மனிதனின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு என்பதை, சீரான பல எண்ணிக்கையிலான ஒலிவடிவங்களின் கூட்டமைப்பையும் அதற்கான வடிவ அமைப்பையும் அளித்தது மட்டும்தான் மொழியில் மனிதனின் பரிணாம வளர்ச்சியாகப் புரிந்து கொள்ளவேண்டுமென்றே கருதுகிறேன்.
7 comments:
நீண்ட நாட்களுக்குப் பின் ஆர்வமாய் வாசிக்க வைத்த பதிவு.
பதிவுக்கு நன்றி.
குழந்தைகளுக்கு எதாவது ஆயிருமோன்ற 'திக்திக்'க்கோட படிச்சேன்.
நல்ல அவதானம்.
நன்றி பாலு.
________________
//துளசி கோபால் said...
குழந்தைகளுக்கு எதாவது ஆயிருமோன்ற 'திக்திக்'க்கோட படிச்சேன்.
நல்ல அவதானம்.//
தங்கள் கருத்துக்கு நன்றி.
இரண்டு முறை எங்களுக்கும் அந்த பயம் தொற்றிக் கொண்டது. ஒன்று தன் வளர்ப்புத் தோழனுடன் நடைபயணம் வந்த ஒருவர் - எங்களின் முன்னெச்சரிக்கை சைகையைக் கண்டு மாற்றுப் பாதையை எடுத்துக் கொண்டார்.
இரண்டாவது முறை அவ்வெல்லைக்குச் சம்பந்தமில்லாத வேற்றுத் தலைவர் ஒருவரின் ஊடுறுவல். ஆனால் சக இனக்குழந்தைகள் என்பதாலோ என்னவோ, அவர் எவ்வித இடையூறும் செய்யாமல் அவர் வழியே சென்றுவிட்டார்.
இந்த இடமாற்றம் ஒரேவீச்சில் நடைபெற்றுவிடவில்லை முதலில் இரண்டு குழந்தைகளை தற்காலிக இடத்திற்கும், பின்னர் மற்ற இரண்டு குழந்தைகளை நேரடியாக நிரந்தர இடத்திற்கும் மாற்றினாள் அத்தாய். எங்களால் ஒரு மணிநேரம் மட்டுமே அதைப் படம்பிடிக்க முடிந்தால் கூட இவ்வொட்டுமொத்த நிகழ்வு மாலையில் தொடங்கி நள்ளிரவுக்குப் பின்னும் தொடர்ந்தது.
Hopps ...அவள் கண்களில் இருந்த கனிவு மறக்க முடியாதது
ரஞ்சித், ஏகப்பட்ட பதிவு போட்டுட்டீங்க. ஓன்னு ஒன்னா படிச்சிப் பாக்குறேன். இத்தனை நாளா வரமுடியலை. மன்னிக்கவும். எனக்கு ஒரு பின்னூட்டம் வந்தது. அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைத்து இப்பக்கம் வந்தேன்:
//அங்கிள் பிளிஸ் எங்க பிளாக் பார்க்கவும், உங்க உதவி தேவை.
Uncle please check http://kuttiescorner.blogspot.com/2007/11/teach-to-educate-child_16.html
we request you to give this article as a PPT or Word document so that we could reach it to 3500 school/college students who do not access Internet.
Please check www.focpune.blogspot.com & www.vidyaposhak.org
//
அருமையான மொழிநடை.மரணத்தை எதிர்நோக்கும் வீதிச்சமூக அங்கத்தினரின் இறிதிக்கட்ட விவரிப்பு நன்றாக இருக்கிறது.
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு. அகஆராய்ச்சியாளர்.
Post a Comment