Friday, November 16, 2007

"எல்லாம் தனக்கு வந்தால் தெரியும்" - பொய்க்கப் போகும் சொல் வழக்குகள்

"வயிற்று வலியும் தலை வலியும் தனக்கு வந்தால் தெரியும்" என்பது போன்ற சொல்வழக்குகள் கூடிய விரைவில் பொய்த்துப் போகலாம் என சமீபத்திய அறிவியல் கண்டுபிடுப்புகள் கூறுகின்றன.

மனித மூளையின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மின்முனைகளைப் (electrodes) புகுத்தி, அப்பகுதிகளிலிருந்து வரக்கூடிய நியூரல் சமிஞ்சைகளைப் (neural signals) பயன்படுத்தி ஒருவரின் வலியின் செறிவை அளவிட முடியும் எனக் கண்டுபிடுத்துள்ளனர்.

இக்கண்டுபிடிப்பு, இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Morten Kringelbach, மற்றும் அவரது ஆராய்ச்சிக் குழுவினர் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் மூலம் விளைந்துள்ளது. இவர்கள் ஆராய்ந்த இந்நியூரல் சமிஞ்சைகளை ஒருவர் உணரக்கூடிய வலியின் செறிவுடன் தொடர்புபடுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

முதலில் விழிப்பு நிலையில் இருக்கக்கூடிய 12 மனிதர்களின் மூளையில் வலியுடன் தொடர்புடைய பகுதிகளுக்கிடையே இரண்டு மின்முனைகளைப் பொருத்தி அப்பகுதிகளிலிருந்து வெளிப்படும் மீச்சிறு அதிர்வெண்கொண்ட மின்சமிஞ்சைகளை (low frequency brain waves) அளப்பதன் மூலம் ஒருவர் உணரும் வலியின் செறிவைக் கணக்கிட முடியும் என்று கூறுகின்றனர். அம்மனிதர்களின் உடலில் வலி நிறைந்த பகுதிகளையும் வலியற்ற பகுதிகளையும் தொடும்போது இச்சமிஞ்சைகளில் ஏற்படும் மாறுபாடுகளைக் கொண்டு வலியின் செறிவுடன் தொடர்புபடுத்தியுள்ளனர். இச்சமிஞ்சைகளின் தொடர் இருப்பு அல்லது தோற்றம் வலி செறிவுமிகுந்தது எனவும் தோன்றியவுடன் மறைந்தால் வலி செறிவு குறைந்தது எனவும் புரிந்துகொள்ளலாம். இச்சமிஞ்சைகளின் ஆயுட்காலம் வலியின் செறிவுடன் தொடர்புடையது எனப் புரிந்துகொள்ளலாம்.

இதற்கு முன் மூளையின் பல பகுதிகளில், மூலக்கூறு, மற்றும் நியூரான் செல்கள் அடிப்படையில் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அவற்றின் முடிவுகள் பெரும்பாலும் “Yes or No” போன்ற பதிலையே அளித்ததாகவும், இவ்வாராய்ச்சியின் மூலம் வலியினை அளவிட முடியும் என்றும் கூறியுள்ளனர்.
அறுவைசிகிச்சையின் போதும் வேறு பல தருணங்களில் தரப்படும் வலிநிவாரணிகளின் செயல்பாடுகள், போன்றவற்றை அறிந்துகொள்ள இப்புதிய சமிஞ்சைகளின் கண்டுபிடுப்பு மேலும் வழிவகைசெய்யும் எனக்குறிப்பிடுகின்றனர்.

உணர்வுகளை அளவிடக்கூடிய இவ்வகை ஆராய்ச்சி இன்னும் ஆராய்ச்சிக்கூடங்கள் அளவிலேயே இருந்தாலும், இப்புதிய கண்டுபிடிப்பு இவ்வகை ஆராய்ச்சிகளை ஒரு படி முன்னோக்கி நகர்த்தியிருக்கிறது என்றே கொள்ளலாம்.

இது என் தனிப்பட்ட கருத்து, இப்போது வலி என்ற உணர்வை அளவிட்டாலும், கூடிய விரைவில் இன்னும் பல உணர்வுகளை அளவிடுவதற்கான புதிய வழித்தடமாக இக்கண்டுபிடிப்பு அமையலாம். இவையெல்லாம் உணரப்பட வேண்டியவை என்ற தர்க்கவாதங்கள் கூட அழிந்து போகலாம். மேலும், மூளை - மனது (Brain – Mind paradox) கோட்பாடுகளிலும் மாறுதல்கள் வரலாம்.

எனக்குள் எழுந்த ஒரு நகைச்சுவைச் சந்தேகம், இது ஒரு புதிய அளவீடு என்றால் அந்த அளவையை என்ன அலகுகளில் குறிப்பார்கள். அதாவது, மருத்துவர்கள் உங்கள் உடலின் வெப்பநிலை இவ்வளவு டிகிரி செல்ஷியஸ் என்று கூறுவது போல் உங்கள் உடலில் இவ்வளவு வலி என்று கூறப்போகும் நாளை உங்களைப்போல் நானும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.


http://www.nature.com/news/2007/071114//full/450329b.html

3 comments:

ஜமாலன் said...

நல்லதொரு விஞ்ஞான பதிவு.

//இது என் தனிப்பட்ட கருத்து, இப்போது வலி என்ற உணர்வை அளவிட்டாலும், கூடிய விரைவில் இன்னும் பல உணர்வுகளை அளவிடுவதற்கான புதிய வழித்தடமாக இக்கண்டுபிடிப்பு அமையலாம். இவையெல்லாம் உணரப்பட வேண்டியவை என்ற தர்க்கவாதங்கள் கூட அழிந்து போகலாம். மேலும், மூளை - மனது (Brain – Mind paradox) கோட்பாடுகளிலும் மாறுதல்கள் வரலாம்.//

வலி என்பது என்ன என்பது குறித்து நீண்டகாலமாக ஒரு விஞ்ஞான விவாதம் இருக்கிறது. இது ஒரு குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம்தான். உங்கள் மேற்குறிப்பிட்ட வரிகள் பிரச்சனையை தத்துவ தளத்திற்கு நகர்த்துகிறது. பாராட்டுக்கள்.

தொடர்ந்து உங்கள் பதிவுகளை எதிர்நோக்குகிறேன்.

கையேடு said...

//நல்லதொரு விஞ்ஞான பதிவு.//

பாராட்டுக்கு நன்றி திரு. ஜமாலன்.

அறிவியல் கண்டுபிடுப்புகளுள் பல தத்துவத் தளங்களில் நேரடியான பல மாற்றங்களை உண்டாக்கியிருக்கின்றன என்பதைவிட பல சீர்திருத்தங்களைச் செய்திருக்கின்றன என்பது வரலாற்று உண்மை.

குறிப்பாக, இப்புதிய கண்டுபிடுப்பு உணர்வு மற்றும் உணர்வலைகளைப் பற்றிய எண்மதிப்பு அளவுகளைப் பற்றியது என்கிற வகையில் ஒரு புரட்சிகரமான அறிவியல் கண்டுபிடுப்பு என்றே கருதுகிறேன். ஆனால் இது தற்போதைக்கு ஆராய்ச்சிக்கூட அளவிலேயிருந்தாலும் இது பரந்துபட்ட உண்மையாக நிரூபிக்கப்பட்டால், தத்துவத் தளங்களில் இது குறிப்பிடத்தக்க பாதிப்பையுண்டாக்குமென்றே கருதுகிறேன்.

CVR said...

இதே போன்று விஞ்ஞான பதிவுகளை மேன்மேலும் தர வாழ்த்துக்கள்!! :-)