Sunday, January 20, 2008

தமிழ்வழிக்கல்வி - தமிழ்வழிச்சிந்தனை - சில முரண்களும் சந்தேகங்களும்

தமிழ், என்ற ஒரு மொழியாகத், தமிழின் இலக்கிய வளர்ச்சி மற்றும் அதன் வெவ்வேறு பரிமாணங்களையும் பற்றி எவ்வித ஆழ்ந்த அறிவுமில்லாததால், துறை சார்ந்த தமிழ் மற்றும் அதன் வளர்ச்சி குறித்து சில சந்தேகங்களையும், சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்கிறேன். துறை சார்ந்த தமிழ் என்பது நவீனக் கல்விமுறையின் பெரும் பிரிவுகளான அறிவியல், கணிதம், மருத்துவம் மற்றும் சில பொறியியல் சார்ந்த துறைகளுக்கான கலைச் சொற்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தாய்மொழிக்கல்வி பற்றியோ அல்லது அதன் முக்கியத்துவம் பற்றியோ எனக்கு எவ்வித ஐயப்பாடும் கிடையாது என்றாலும், தமிழ்வழிக் கல்வியில் அல்லது தமிழ்படுத்தப்படும் துறை சார்ந்த கல்வி முறையில் சில மாற்றங்களை முன்மொழியும் முயற்சியே இப்பதிவு. தாய்மொழிக் கல்வி பற்றிய முக்கியத்துவங்களைக் குறிப்பிடும் போது அது சிந்தனைக்கான மொழியாகவும், அந்நிய மொழியில் பயிலும்போதோ அல்லது பயன்படுத்தும் போதோ நம் மூளை ஒரு பண்பிறக்கம் செய்து தாய்மொழியிலேயே புரிந்து கொள்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

எனது சந்தேகத்தின் ஆணிவேரே அங்குதானிருக்கிறது என்று கருதுகிறேன். நமது துறை சார்ந்த சிந்தனைகளில் தமிழ் இன்னும் இருக்கிறதா? அல்லது இன்றும் நாம் தமிழில்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறோமா? இல்லையென்றே கருதுகிறேன் (தவறாக இருந்தால் நிச்சயம் மகிழ்ச்சியடைவேன்). ஏன்? என்பதை ஒரு சிறு நிகழ்வின் மூலம் விளக்க முயற்சிக்கிறேன். பல விவாதச் சிக்கல்களைக் குறைக்க நகர்புறங்களைப் புறந்தள்ளிவிட்டு கிராமங்களிலேயே கட்டுரை முழுவதும் வாசம்செய்வோம்.

மின்னோட்டம் - கரண்ட், அதிர்ச்சி - ஷாக் என்ற இரு வார்த்தைகளை எடுத்துக்காட்டாகக் கொள்வோம். மின்வசதியை எதிர்பாத்திருக்கும் சில கிராமங்களில் கூட கரண்ட் என்றும் ஷாக் என்றும் தான் பேச்சுவழக்கிலுள்ளது. தமிழ்வழியில் கல்வி பயிலும் ஒரு சிறுவன் மின்னோட்டம் பாய்கின்ற ஒரு மின்கம்பியின் அருகே கவனக்குறைவுடன் செல்ல முற்படுவதாகக் கொள்வோம். அச்சிறுவனை எச்சரிக்கை செய்யவேண்டும் என்றால் "ஏய்! கரண்ட்கம்பி ஷாக் அடிச்சிடும்" , "ஏய்! மின்கம்பி அதிர்ச்சியூட்டிடும்" என்ற இரண்டு எச்சரிக்கைகளில், அச்சிறுவனது மூளையின் பண்பிறக்கத் திசை எதிராக இருக்குமென்றே கருதுகிறேன்.

இவ்வெடுத்துக்காட்டைத் தேர்ந்தெடுத்ததற்கான மற்றொரு காரணம், இது ஒரு எச்சரிக்கை, அப்படியாயின் அச்சிறுவனது மூளை பண்பிறக்கம் செய்து , பின்னர் அதற்கான உடல் இயக்கத்தை முடுக்க வேண்டும். அப்படியாயின் பண்பிறக்கம் செய்யும் வேகமும் மிகவும் முக்கியமான ஒன்று (அனிச்சை செயலுக்கிணையான வேகம் தேவை). அல்லது, நேரடியாகச் சொல்ல வேண்டுமெனில் அச்சிறுவன் அவனது அறிவியல் புத்தகத்தில் மின்னோட்டம் என்ற வார்த்தைக்கு முதலில் அறிமுகப்படுத்தப்படும் போது மின்னோட்டம் என்ற வார்த்தையை கரண்ட் என்றுதான் அவனது மூளை பண்பிறக்கம் செய்திருக்கும். இங்கு சிந்தனைக் குழப்பம் நிகழும், நம்முள் பலருக்கும் நிகழ்ந்திருக்கும், ஆனால் நமக்கு நினைவிலில்லாமல் இருக்கலாம்.

எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தப் பட்டிருக்கும் இரண்டு வார்த்தைகளும் பேச்சுவழக்கில் தமிழுக்கிணையான ஒரு பயன்பாட்டையுடையவை போன்ற வேறு பல விவாதிக்கப்படவேண்டிய சிக்கல்கள் இருந்தாலும் அறிவியல் துறைசார்ந்த வார்த்தை என்பதற்கான எடுத்துக்காட்டாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. எப்படியும் துறை சார்ந்த முன்னேற்றத்தில் அல்லது புரிதலில், நமது சிந்தனை வெளியில் தமிழ் இல்லை அல்லது முழுமையாக இல்லை என்றே சொல்லலாம். இதுபோன்ற சிக்கல்களுக்கான முக்கியக் காரணங்களுள் ஒன்றாகத் தமிழரின் துறை சார்ந்த அறிவு மற்றும் வளர்ச்சி பற்றிய போதிய அறிமுகமின்மை என்று கருதுகிறேன். தமிழ்வழிக் கல்வி முறையாயிருந்தாலும் துறை சார்ந்த பாடங்கள் நேரடியாக மேற்கத்தியச் சிந்தனை முறையிலேயே அறிமுகப்படுத்தப்படுகின்றன.

இதற்கான தீர்வுகளில் ஒன்றாகத் "தமிழ்" மொழிப்பாடங்களில் சில மாறுதல்கள் கொண்டு வரலாம். தமிழாராய்ச்சி மற்றும் இலக்கிய ஆய்வுகளின் முடிவுகள் பெரும்பாலும் மீண்டும் தமிழ் என்ற மொழிப்பாடத்தினுள்ளேயே புகுத்தப்படுகிறது. அவற்றுள் துறைசார்ந்த முடிவுகளை முன்னிறுத்தும் பாடல்களை விளக்கங்களுடன் துறைசார்ந்த பாடத்திட்டங்களுள் புகுத்தலாம். உதாரணமாக, சுற்றுப்புற அறிவியல் என்ற தொடக்க நிலை அறிவியலில் வெவேறு நில அமைப்புகள், அதன் பண்புகள் பற்றிப் பேசும் திணை சார்ந்த பாடல்களை துறை சார்ந்த விளக்கங்களுடன் அறிமுகப் படுத்தவேண்டும். மேலும், இத்தனை ஆண்டுகாலம் நீடித்து நிற்கக்கூடிய நினைவுச் சின்னங்களை எழுப்பியவர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பம், மற்றும் அளவீடுகள், வெறும் கல்வெட்டுகளுள் புதைத்து வைப்பதைவிட, பண்டைய கால அல்லது வரலாற்று அளவீடுகள் என்ற தலைப்பில் ஒரு பாடமாக அறிவியல் புத்தகங்களுக்குள் நுழைக்கலாம். இறையியல்(நாட்டார் தெய்வங்கள் உட்பட) தொடர்பான பாடல்களைக்கூட வாழ்வியல் சார்ந்த குடிமையியல் பாடங்களாக விளக்கலாம். பல்வேறு துறைகளில் ஏற்பட்ட மாறுபாடுகள், மற்றும் வளர்ச்சி எனப்பல புரிந்துணர்வுகளைக் கொடுக்கும்.

இது துறைசார்ந்த நமது அறிவைப் பலப்படுத்துவதுடன், கற்கின்ற அனைத்தும் ஏதோ மேற்கத்திய மூளைகளுக்கு மட்டும் உதித்தவையல்ல என்ற உண்மையை விளங்கவைக்கும். மேலும் துறைசார்ந்த அறிவில், நமது நிலை எப்படியிருந்தது, தற்போதைய நிலையென்ன, மேலும் அக்காலத்தைய துறை சார்ந்த வளர்ச்சியை நிர்பந்தித்த சமூகத் தேவைகள் என்ன? எனப் பல புரிந்துணர்வுகளைக் கொடுக்கலாம். இதனைத் தொடர்ந்து தமிழாக்கங்கள், கலைச்சொற்களின் தேவை, போன்றவை மேலதிகமாகத் தேவைப்படும். ஆனால் சிந்தனைவெளியில் தமிழ் இல்லாமல், கலைச்சொற்களின் கண்டுபிடிப்பு, மொழிபெயர்ப்பு (அவசியமாயிருந்தாலும்) மட்டும் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துவிடமுடியாது.

இதில் மேலதிகமாக விவாதிப்பதர்க்குப் பல காரணிகள் இருந்தாலும், ஒரே ஒரு காரணியை மட்டும் கருத்தில் கொண்டு எழுதப்பட்டது.

இப்பதிவு எழுதுவதற்குக் காரணமாயிருந்தது சில கேள்விகள்.

1. இந்த சென்டிமீட்டர் எல்லாம் ஆங்கிலேயர் வந்ததுக்கப்புறம் வந்ததுன்னா, அதுக்கு முன்னடி நாம எப்படி அளந்தோம்? ஏன் நம் நாட்டில் எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லையா, எல்லாமே ஆங்கிலேயர் வகுத்துக்கொடுத்ததுதானா?

2. இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் எதுவும் என்னால் என்னைச் சுற்றிப்பார்க்க முடியவில்லையே ஏன்?

3. இந்தியாதான் 1947 ல் சுதந்திரம் வாங்கிடுச்சே அதுக்கப்புறம் இன்னியவரைக்கும், இந்தியாவில் என்ன நடந்ததுன்னு ஏன் எந்த புத்தகத்திலயும் போடறதில்லை?

மேற்குறிப்பிட்டுள்ள கேள்விகளுக்கு சொந்தமானவர் தமிழ்வழியில் கல்வி பயிலும் ஒரு ஐந்தாம் வகுப்புச் சிறுமி.







2 comments:

குடுகுடுப்பை said...

நல்ல பதிவு.

கையேடு said...

நன்றி திரு. குடுகுடுப்பை