Friday, January 25, 2008

குழந்தையும், இதுவும் அதுவும் - இடையில் நானும்

விழிப்புநிலையில் காலத்தைப் போக்கவேண்டுமே என நானும் குழந்தையும் விளையாட ஆரம்பித்தோம்.

எதை வைத்து விளையாடுவது.. என்று குழந்தைத் தனமாக நான் கேட்க, 'இந்தா பிடி நீ இதை வைத்துக்கொள் நான் அதை வைத்துக்கொள்கிறேன்' என்றது.
சரி விளையாடுவதற்கு முன் ஒரு சந்தேகம் என்றது குழந்தை..

இன்னும் ஆரம்பிக்கவேயில்லை அதுக்குள்ள சந்தேகமா என்றேன்..
'அது'க்குள்ள இல்ல 'இது'க்குள்ள என்றது..
இதுக்குள்ளயா அப்படீன்னா.. இதோ உன்கிட்ட இருக்கே 'இது' இதுக்குள்ள என்றது.. 'இது'க்குள்ளயா சரி கேள் என்றேன்.

'இது' ஏன் இப்படியிருக்கிறது என்றது.. இதுவா 'இது' இதனால் இப்படியிருக்கிறது என்றேன்.. உடனே 'அது..?' என்றது குழந்தை.. ஓ 'அது'வா அது அதனால் அப்படியிருக்கிறது என்றேன்..
சரி விளையாடுவோமா என்றேன்..

இதனால், இப்படியிருப்பதால் 'இது' ஏன் 'இது'வாக இருக்கவேண்டும்.. என்றது.. ம்ம்ம்ம்ம்... அதனால் அப்படியிருக்கும் 'அது' 'அது'வாக இருப்பதால் இப்படியிருக்கும் 'இது' இதனால் இதுவாக இருக்கிறது என்றேன்.. ம்ஹீம் புரியல.. என்றது.. ம்ம்.. 'இது' 'இது'தான் 'அது' 'அது'தான் சரியா... ம் என்றது..
'இது' இப்படித்தான் 'அது' அப்படித்தான் சரியா.. ம் என்றது..

சரி சரி நாம் விளையாடுவோமா.. என்றேன்..

'இது' 'அது'வாக முடியுமா என்றது.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... இதை அப்படியாக்கினால் அதனால் 'இது' 'அது'வாகிவிடும் என்றேன்.. அப்போ 'அது' 'இது'வாக முடியுமா..என்றது.. அதை இப்படியாக்கினால் இதனால் 'அது' 'இது'வாகிவிடும் என்றேன்..
இல்லையே அதிலிருந்து 'இது' 'அது'வாகத்தானே இருக்கிறது என்றது.. இல்லை இல்லை இதிலிருந்து 'இது' 'இது'வாகவும் 'அது' 'அது'வாகவும்தான் இருக்கும்.

சரி நீ போய் தூங்கு..என்றேன்..

இதிலிருந்து 'இது' 'இது'வாகவும் 'அது' 'அது'வாகவும், அதிலிருந்து 'அது' 'இது'வாகவும் 'இது' 'அது'வாகவும் இருந்தால் 'இது' 'இது'வா இல்ல 'அது'வா.. 'அது' 'அது'வா இல்ல 'இது'வா..

எனக்குப் பசிக்குது நீ போய் தூங்கு..

இப்போது குழந்தை நகைத்தது... என்ன?? என்றேன்.. இல்ல அங்க பாத்தியா ஒரு புதிய 'அது' இருக்கு, அதையும் வச்சு விளையாடுவோமா..

சரி.. வா.. அந்த 'அது' அதனால் அப்படியிருப்பதால் அதுவாகயிருந்தால் இந்த புதிய 'அது' புதிய அதனால் புதிய 'அது'வாக இருக்கா..!? என்றது.. ஆம் என்றேன்..

மீண்டும் குழந்தை ஆரம்பித்தது, இந்தப் புதிய 'அது' வந்தவுடன் பழைய 'இது'வும் 'அது'வும் சேர்ந்து 'அது'வாவும், இப்புதிய 'அது' புதிய 'இது'வாவும் ஆயிடுச்சே ஏன்.. என்றது.

நீ விளையாடுறத விட தூங்கறதுதான் நல்லது.. என்றேன்.. யாருக்கு?? என்றது..

சரி எனக்குப் பசிக்குது நீ போய் தூங்கு..

சரி நாளைக்கு புதிய 'அது'க்களையும் 'இது'க்களையும் வைத்துத் தொடருவோம் என்று கூறி கையில் ஒட்டியிருந்த கற்பூர வாசனையை முகர்ந்துகொண்டு குழந்தை உறங்கச் சென்றது..

கீழே சிதறியிருந்த வெங்காயத் தோல்களையும் காய்ந்து போன நீர்திவளைகளையும் பார்த்துவிட்டு உண்டு உறங்கச் சென்றேன்.


குறிப்பு: வெங்காயம் - நண்பருடனான உரையாடலில் கிடைத்தது.

No comments: