Wednesday, January 21, 2009

போர்ச்சூழலும், போரும் சூழலும்மற்றுமொருமுறை மும்பையைத் தீவிரவாதிகள் தாக்கியாயிற்று, அதனைத் தொடரும் பல்வகை நாடகங்களும் வழக்கம்போல் அரங்கேற்றப்பட்டுச் சிறப்பு வசூலயையும் பார்த்தாகிவிட்டது. ஆனால், இம்முறை மட்டும் கொஞ்சம் நீண்ட காலம் நீடிக்கிறது, அதுவும் வேறு பெரிய வசனங்களுடன். பொறுத்தது போதும், போர் தொடு, குண்டு போடு, அணுஆயுதம் அவனிடமும் இருக்கிறது என்பது போன்ற வசனங்களுடன் உணர்வுகள் பெருக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. (இந்த நேரத்தில் ""வாருங்கள், தேநீர் அருந்துங்கள், என்று அன்போடு அழைத்து எங்களுக்கு இந்தியாவுடன் சுமுகமான உறவு இருக்கவேண்டும், அதேபோல் இந்தியாவிலிருக்கும் சாமான்யனின் எண்ணங்கள் என்ன?"" என்று கேட்கும் பாகிஸ்தானில் தேநீர் ஆற்றுமொரு சாமான்யனின் நேர்முகக் காட்சிகள்வேறு நினைவுக்கு வந்து படுத்துகிறது. அட சாமான்யனின் விருப்பம்தானே, புறந்தள்ளிவிடலாம்.)

தீவிரவாதத் தாக்குதல்கள் நடக்கும் போதெல்லாம் ஒரு போர்ச்சூழல் உருவாகிறது. அணுஆயுதச் சோதனைக்குப் பின், உருவான போச்சூழல்களிலெல்லாம் அணு ஆயுதம் என்ற வார்த்தையைப் பயன்படுத்திப் பேசாதவர்கள் மிகக்குறைவு எனலாம். இப்போதும், போர், ஆணுஆயுதம் ஆகிய வார்த்தைகளே மிகச் சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இப்படிப்பட்ட வேளையில், தேச நலனில் அக்கறையில்லாத ஒரு கட்டுரை.

அணுஆயுதங்கள் ஒரு நாட்டின் பெருமையையும், பாதுகாப்பையும் தூக்கிப்பிடிக்கும் அளவுகோளாகக் கருதாமல், மனிதயினத்தின் நலன் என்ற நோக்கிலும் அனுகப்படவேண்டும்.
அணு ஆயுதங்களின் கதிர்வீச்சினால் ஏற்படும் நேரடித் தாக்கங்களும், அதனால் ஏற்படும் மனித அழிவும் ஹிரோஷிமா, நாகசாகி மூலம் அனைவரும் அறிந்ததே. ஆனால், அணு ஆயுதங்களின் பயன்பாடு, மற்றும் சோதனைகளால், சுற்றுச் சூழலில் ஏற்படும் தாக்குதல்கள் பற்றிய புதிய ஆய்வு முடிவுகளை முன்வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

அணுஆயுதங்களும் சுற்றுச் சூழலும் :

1986 ல் அமெரிக்கா மற்றும் உருசியா ஆகிய நாடுகளிடம் முறையே ஏறத்தாழ 36,000 மற்றும் 34,000 அணுகுண்டுகள் இருந்தன என்கின்றன அதிகாரப் பூர்வத் தகவல்கள். மொத்தத்தில் இவ்விரண்டு நாடுகளிடம் மட்டுமே ஏறத்தாழ 70,000 ஆணுகுண்டுகள் இருந்திருக்கின்றன. (அதிகாரப் பூர்வத் தகவலே இவ்வளவு எனில் உண்மை யாருக்குத் தெரியும்).

1980 களில் அமெரிக்க-உருசிய பனிப்போர் உச்சத்தை அடைந்திருந்த போது, சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் மூன்று தனித்தனிக்குழுக்கள், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் மற்றும் உருசிய அதிபர் கோர்பர்சேவிற்கும் ஒரு எச்சரிக்கை விடுத்தனர். அணுஆயுதங்களிலிருந்து வெளிப்படும் கடும் வெப்பம் மற்றும் கதிரியக்கம் ஆகிய நேரடித் தாக்கங்கள் மட்டுமல்லாமல், ஒரு அணுஆயுதத்திலிருந்து வெளிப்படும் கரும்புகை மற்றும் அதனால் ஏற்படும் சூழல் மாற்றங்கள், மனிதகுலத்திற்கே அழிவை ஏற்படுத்தும் அளவிற்கு ஆபத்தானவை என வலியுறுத்தினர். இக்குழுக்களின் அறிக்கைகளில் இருக்கும் உண்மையை ஆராயும் வண்ணம் உருசியாவின் சுற்றுச் சூழல் விஞ்ஞானிகளும், அமெரிக்காவின் தேசிய அறிவியல் குழுமம், மற்றும் விஞ்ஞான ஆய்வுக்குழுக்களின்
சர்வதேசக் குழுமம் ஆகிய மூன்றும் தனித்தனியே அவ்வாய்வுகளையும், அவ்வாய்வறிக்கை முன்னிறுத்திய முடிவுகளையும் சரி பார்த்தனர். பின்னர், அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் ஆணு ஆயுதங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் அபாயம் உண்மை என்று கண்டறியப்பட்டது. அப்படி என்ன குறிப்பிட்டிருந்தனர் அவ்வறிக்கையில்??

"அணுக்கருக் குளிர்காலம் (Nuclear winter)":

அவ்வாய்வறிக்கை அணுஆயுதங்களினால் ஏற்படும் நேரடி பாதிப்புகளால், வானிலையில் ஏற்படும் உடனடி மாற்றங்கள் குறித்த ஆபத்துக்களை முன்வைத்தது. அதாவது, திடீரென வருடம் முழுவதும் குளிர்காலமாகிவிடும் என்றும் அதனை "அணுக்கருக் குளிர்காலம்" என்றும் வழங்கினர். இதைப்பற்றி விரிவாகப் பார்க்கும் முன் அணுகுண்டுகளைப்பற்றிய ஒரு சிறிய முன்னுரை அவசியம்.

அணு ஆயுதங்கள் ஒரு பார்வை:

இரு நாடுகளுக்கிடையே நிகழும் போர்களிலும், அல்லது வழக்கமான வெடிகுண்டுகளிலும் பெரிதும் பயன்படுத்தப்படும் ஒரு வேதிப்பொருள் TNT (TriNitrotoluene). அவ்வெடிப்பொருளின் வேதிவினையினால் வெளிப்படும் வெப்பம் மற்றும் அழுத்த அதிர்வலைகள் ஆகியவை மனிதனையும், மற்ற பொருட்களையும் சிதைப்பதன் மூலம் பாதிப்பை உண்டாக்கும். இந்த
TNT என்ற வேதிப்பொருளின் நிறையளவு வெடிகுண்டுகளின் செறிவை நிர்ணயிக்கும் ஒரு அளவாகப் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக ஒரு கிலோ TNT கொண்ட ஒரு குண்டு சிறிய பாதிப்பையும், 10 கிலோ எடையுள்ள TNT கொண்ட வெடிகுண்டு அதிக அளவிளான பாதிப்பையும் உருவாக்கும். இவ்வடிப்படையில் அணுகுண்டுகளில் TNT முக்கிய வெடிப்பொருளாக இல்லாமலிருந்தாலும் ஒரு அணுகுண்டின் பாதிப்பினை அளப்பதற்கும் அதற்குச் சமானமான(equivalent) TNTன் அளவே பயன்படுத்தப்படுகிறது. ஒரு அணு குண்டிலிருந்து வெளிப்படும் ஆற்றலானது, சாதாரண ஏவுகணைகளைவிட சுமார் 10^6 - 10^8 மடங்குகள் அதிகம். ஒரு அணுகுண்டின் விளைவை ஏற்படுத்த வேண்டுமெனில் அதற்குச் சமானமாக எறத்தாழ ஆயிரத்திலிருந்து - பத்தாயிரம் டன்கள் (1 டன் - 1000 கிலோ) TNT தேவைப்படும்.

இது மட்டுமல்லாமல், ஒரு அணு ஆயுதம் வெடிக்கும் போது, அதிலிருந்து, வெப்பக் கதிர்வீச்சு, கதிரியக்கக் கதிர்வீச்சு மற்றும் அழுத்த அலைகள் ஆகியவற்றுடன், பல டெராகிராம்கள் (டெராகிராம் = 10^12கிராம்) அளவிலான SOOT எனப்படும் தனிமநிலைக்கார்பன் துகள்கள் வெளிப்படும். ஒரு அணுகுண்டிலிருந்து வெளிப்படும் இக்கார்பன் அணுத்துகள்களின் அளவு மற்றும் அவை ஏற்படுத்தும் சுற்றுச் சூழல் மாசு பற்றிய ஆய்வுகள் குறித்தே மேலே குறிப்பிடப்பட்டது.
(இனி கட்டுரை முழுவதும் "SOOT" எனப்படும் தனிமநிலைக் கார்பனை வெறும் கார்பன் அணுத்துகள் என்றே குறிப்பிடப்படும்)இந்த SOOT எப்படிப்பட்ட விளைவுகளை உண்டாக்கும்?

அணுஆயுதங்களிலிருந்து வெளிப்படும் கார்பன்துகள்கள் நேரடியாக வளிமண்டலத்தில் உள்ள அடுக்குகளுள்,
ஓசோன் படலத்தை உள்ளடக்கிய ஒன்றான stratoshpere-ல் கலக்கின்றன. இப்படிக் கலந்த கார்பன் துகள்கள் சூரிய ஒளி மற்றும் வெப்பம் ஆகியவை பூமியை வந்தடையவிடாமல் ஒருகுடையைப் போலத் தடுத்துவிடுகிறது. இதனால், பூமிப் பரப்பில் வெப்பநிலை குறைந்து, பருவ காலச் சுழற்சி முறை இடர்படுவதோடல்லாமல், ஆண்டு முழுவதும் குளிர்காலம் போன்ற தட்பவெப்ப சூழலை உருவாக்கிவிடுகிறது. அமெரிக்கா மற்றும் உருசியா ஆகிய நாடுகள் மொத்தமாக சுமார் 4400 அணு ஆயுதங்களை வெடிக்கச் செய்தால் அவை சுமார் 180 டெராகிராம்கள் அளவிற்கான கார்பன் துகள்களை உமிழும் எனவும், இந்த அளவுக்கான கார்பன் துகள்கள் குறுகிய காலத்தில் பூமிமுழுவதும் ஒரு குளிர்காலச் சூழலை உருவாக்கும் அளவிற்குப் போதுமானது எனவும் அறிவித்திருந்தனர். மேலும் இக்குளிர்காலத்தையே "அணுக்கருக் குளிர்காலம்" என்று வழங்கினர்.

இவ்வாய்வு முடிவின் முக்கியத்துவத்தை அறிந்து அமெரிக்காவும் உருசியாவும் தங்களுக்கிடையே SORT(Strategic Offensive Reductions Treaty) உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டன. இவ்வுடன்படிக்கைப்படி இவ்விருநாடுகளும் 2012-க்குள் தங்களது அணுஆயுதங்களின் எண்ணிக்கையை 1700-2200 ஆகக் குறைத்துக் கொள்ள முன்வந்தன.

சமீபத்திய ஆய்வுகளும் முடிவுகளும்

சரி அதுதான் அவர்கள் குறைத்துக் கொள்ள முடிவு செய்துவிட்டனரே இப்போ என்னவாயிற்று. இங்குதான் கட்டுரையின் ஆரம்பப் பத்திகளுக்கான காரணமே இருக்கு. 1980ல் மேற்கொண்ட அதே ஆய்வுக்குழு, அவ்வாய்வு முழுமையானதல்ல என்றும், அவ்வாய்வின் முடிவுகள் பலவகையான நேரடி மற்றும் மறைமுக ஆபத்துக்களை உள்ளடக்கியவையல்ல என்றும் குறிப்பிடுகின்றனர். கணினிகளின் மேம்பாட்டிலும், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாலும், பூமியின் பருவகால மாற்றங்களுக்கான புதிய மாதிரிகளை உருவாக்கி, மேலும் துள்ளியமாகக் கணக்கீடுசெய்திருக்கின்றனர்.

அப்படி என்ன வேறுபாடு?

1980 களில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கைகளில் ஆணுஆயுதம் வெடிக்கும்போது வெளிவரும் கார்பன் துகள்கள் மட்டுமே கணக்கிடப்பட்டு பின்னர் அவை ஓசோன் படலத்தில் தங்கினால் ஏற்படும் பாதிப்பு பற்றி மட்டுமே ஆராயப்பட்டன. அதனால், 4400 அணுஆயுதங்கள் வெடித்து சுமார் 180 டெராகிராம்கள் கார்பன் உமிழப்பட்டால் இப்பாதிப்பு உண்டாகும் என்று குறிப்பிட்டனர். அவ்வாய்வறிக்கையின் எல்லைகளைச் சரிவரப் புரிந்து கொள்ளாமலேயே பல நாடுகளின் அணுஆயுதச் சோதனைகள் மற்றும் ஒருசில அணுகுண்டுகளை வீசுதல், மற்றும் வீரியம் குறைந்த சிறிய அணுகுண்டுகளைப் பயன்படுத்துதல் போன்றவை அதீத ஆபத்தானவையாகக் கருதப்படவில்லை.

இப்போது என்ன புதுக்காரணிகளை உள்ளடக்கியது அவர்கள் ஆய்வு?

போர் என்று வரும்போது, எந்தவொரு நாடும் ஆள் அரவமற்ற பாலைவனப் பிரதேசங்களில் குண்டு வீசப்போவதில்லை. அடர்வான முக்கிய நகரங்களிலேயே குண்டுவீசப்படும். அதேசமயம், ஒரு அணு குண்டு வெடித்தபின் பலநாட்கள் வரை நீடிக்கப் போகும் அனல் காற்று, மற்றும் அது வெடித்த நகரத்திலிருந்த எரிபொருட்கள், மற்றும் கட்டுமானப் பொருட்கள் என அனைத்தும் எரிந்து சாம்பலாகப் போகிறது. அதனால், கார்பன் துகள்கள் மட்டுமல்லாமல், ஒசோன் படலத்திற்கு தீங்கு விளைவிக்கும், பல்வேறு, கரிம மூலக்கூறுகள், மற்றும், முக்கிய நகரங்களில் உள்ள மக்கள் தொகை மற்றும் அங்கே பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருட்கள், மற்றும் அவற்றிலிருந்து வெளிப்படும் நச்சுமூலக்கூறுகள், என அனைத்தையும் அனுமானித்து இப்புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உதாரணமாக, அடர்வான மக்கள் பெருக்கமும் கட்டுமானமும் கொண்ட இந்திய நகரம் ஒன்றில் வீசப்படும் ஒரேயொரு அணு குண்டின் விளைவும்,
அதே தன்மை கொண்ட அணு குண்டுகளை வேறுவித கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்பட்ட கட்டிங்களையும், மக்கள் தொகை மிகவும் குறைவாகவுமுள்ள ஐரோப்பிய நகரங்களில் வீசப்படும் 10 குண்டுகளின் விளைவும் ஒன்றாகயிருக்கலாம்.

அதேபோல் 1,00,000 டன்கள் (TNT) திறனுடைய குண்டுகள்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றில்லை. ஒரு அணுஆயுதத்தின் பாதிப்பு எல்லைகள் ஒன்றோடொன்று மேற்பொருந்தாமல் அருகருகே, வெறும் 15,000 டன்கள் திறனுடைய மூன்று குண்டுகள்
அதற்கிணையான அல்லது அதைவிட அதிகமான பாதிப்பை உண்டுசெய்துவிட முடியும் என்றும் குறிப்பிடுகின்றனர்.

1980களில் ஆய்வறிக்கை வெளியிட்ட அதே குழுக்களுள் சிலவும் புதியகுழுக்களும் சில ஆய்வு முடிவுகளை 2007 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளனர். 1980 மற்றும் 2007 ஆகிய இரண்டு ஆய்வுகளின் முடிவுகளையும் , உமிழப்படும் கார்பன் துகள்களின் அளவடிப்படையில் ஒப்பிட்டுச் சுருங்கச் சொன்னால் எளிதாகயிருக்கும்.

1980 களில் ஒரு அணுக்கருக் குளிர்காலம் என்றழைக்கப்படும் ஆண்டுமுழுமைக்குமான குளிர்கால நீட்டிப்பை உருவாக்க சுமார் 180 டெராகிராம்கள்(10^12) கார்பன் துகள்கள் உமிழப்படவேண்டும் என்றுகுறிப்பிட்டனர். ஆனால், தற்போதைய ஆய்வின்படி அதில் பாதி வெளியிடப்பட்டால் போதும், அதாவது 75 டெராகிராம்கள் இருந்தால், கடந்த 1000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பூமியின் வெப்பநிலை குறையும் என்றும், அப்படிக் குறையுமானால், Ice Age(medieval) என்ற வழங்கக்கூடிய பனிக்காலமே உருவாகிவிடும் என்றும் குறிப்பிடுகின்றனர். இது அணுக்கருக்குளிர்காலத்தைவிட ஆபத்தானது.

மேலும், தற்போதைய ஆய்வின்படி, வெறும் 5 டெராகிராம்கள் அளவிற்கு கார்பன் துகள்கள் உமிழப்பட்டால் போதும், உலகின் பல்வேறு பகுதிகளில் பருவகாலச் சுழற்சியில் 40% சதவிகித பாதிப்பு உண்டாகும் என்றும் குறிப்பிடுகின்றனர். அணுஆயுதங்களின் நேரடி பாதிப்புகளால் சுமார், ஒரு கோடி மக்கள் இறந்தால், அது ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் சீர்குலைவு சுமார் 100-200 கோடி மக்களை உலகெங்கும் பலிகொண்டுவிடும் என்று குறிப்பிடுகின்றனர்.

இந்தியா 1974ஆம் ஆண்டு செய்த சோதனையில் பயன்படுத்தப்பட்ட அணு ஆயுதத்தின் வீச்சு சுமார் 15,000 டன்கள் என்பதை நினைவுபடுத்திப்பார்ப்பது நன்று. மேலும், அதிலிருந்து வரும் கார்பனின் அளவு சுமார் 3.7 டெராகிராம்கள் என்றும் குறிப்பிடுகின்றனர். இது உணர்த்தும் செய்தி இந்தியாவும், பாகிஸ்தானும், தங்களிடமுள்ள மிகக்குறைந்த திறனுடைய ஒரு அணு குண்டைப் பரிமாறிக்கொண்டால் போதும், கூட்டாகச் சுமார் 6.7 டெராகிராம்கள் அளவிற்கான கார்பனை வெளியிடும். உலக தட்பவெப்ப மாறுபாட்டை ஏற்படுத்த தற்போது வெறும் 5 டெராகிராம்கள் போதும் என்ற ஆய்வு முடிவை இங்கே மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்க்கும் இடையே ஒரு அணு ஆயுதப் போர் துவங்கினால் போதும் அது ஒட்டுமொத்தமாக ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்கா என அனைத்து மக்களையும் ஒட்டுமொத்த அழிவிற்குத் தள்ளிவிடும்.

அரசுகளுக்கும் மக்களுக்குமான செய்தி

இனி, உலகின் ஒரு மூளையில் அணு ஆயுதப் போர் நடப்பதற்கான சாத்தியம் இருப்பின் அது ஒட்டுமொத்தமாக மனித இனத்தின் அழிவிற்கான சாத்தியம் என்பதை உணர்தல் வேண்டும். வல்லரசுகள், வளரும் நாடுகளுக்குள்ளான போர்களைத் தூண்டிவிட்டு அதில் குளிர்காய முடியாது. (இவ்வாய்வறிக்கைப் படி அவர்களுக்கு இன்னும் குளிர் அதிகமாகலாம்) மேலும், தீவிரவாதிகளின் கைகளில் "dirty bombs" என்று சொல்லப்படும் மிகச்சிறு அணுஆயுதங்கள் அகப்படாமல் இருக்கவேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றன.

ஈராக் மற்றும் ஆஃப்கானிஸ்தானின் மலைப்பகுதிகளில் சமீபத்தில் அமெரிக்கா இப்படிப்பட்ட வீரியம் குறைந்த "dirty bombs" எனப்படும் அணுஆயுதங்களைப் பயன்படுத்தியதாகவும் சில செய்திக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன.[**] இத்தகவல் உண்மையாகயிருப்பின் இது உலகின் கவனத்திற்கு வராமல் போனது அனைவரும் வருந்த வேண்டிய விசயமே. இப்படியான திருட்டுத்தனமான தாக்குதல்களை வல்லரசுகள் உடனே கைவிட்டாகவேண்டும்.

இனி், உலகின் ஏதோயொரு பகுதியில் ஒரு அணுஆயுதப் போர் உருவாகும் போர்ச்சூழல் இருந்தாலும், அது ஒட்டுமொத்த மனித இனத்திற்கே அழிவாக முடியும் அபாயம் இருக்கிறது் என்று பல முடிவுகளை அரசாங்க
ங்களுக்கு முன்மொழிகின்றனர் இவ்வாய்வாளர்கள். மேலும், அதீத ஆபத்தானவை மற்றும் மிகப்பெரிய அளவிலே மனித அழிப்பை ஏற்படுத்துபவை என்ற அடிப்படையில், இவ்வாய்வாளர்கள் அணுஆயுதத்தையும் அதன் நேரடியான மற்றும் மறைமுகமான பாதிப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றனர் என்றும், போரில், ஏற்படும் பல்வேறு குண்டுவீச்சுக்கள், அதிலிருந்து வரும் கார்பன மற்றும் நச்சுப்பொருட்களையும் இணைத்து சிந்திக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றனர்.

தற்போதைய காலகட்டத்தில், புவி வெப்பமடைதலால் உலகெங்கிலும் உணவு உற்பத்தியில் பாதிப்புகள் மிகவும் அதிகமாகிவிட்ட நிலையில் இவ்வாய்வறிக்கை மிக முக்கியமான மற்றும் அறிந்து கொண்டு செயலாற்ற வேண்டிய பல கடமைகளை மனிதகுலத்திற்கு வலியுறுத்தியிருக்கிறது.மேலேயுள்ள படம் போக்ரானில் 1974ல் செய்யப்பட்ட சோதனைக்குப் பின் எடுக்கப்பட்டது. உபரியாக இங்கே இருக்கட்டும் என்று கொடுத்திருக்கிறேன்.

1998-ல் செய்யப்ப்பட்ட சோதனைக்குப்பின் போக்ரானிலிருந்து 5 கி.மீ தொலைவில் இருக்குமொரு கிராமத்துப் பெரியவரின் நேர்முகத்தைக் காண நேரிட்டது. அவர் ஒரு கேள்வியை முன்வைத்தார்.

"பூமிக்கடியில் ஒரு சூரியன் புதைக்கப்பட்டது என்று பெருமைப்படுகிறீர்கள், அப்படியானால், அப்பகுதியில், வலைகளில் வாழ்ந்த முயல்கள், கீரிகள், பாம்புகள் மற்றும் அங்கிருந்து சிறிய உயிர்களெல்லாம் எப்படி இதைத் தாங்கிக்கொள்ளும்????"


இப்பூமி மிகவும் அழகான மற்றும் இரம்யமானதொரு் அமைதிப்பூங்காவாக மாறிவிடும், மனிதன் மட்டும் இல்லாவிட்டால் - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

இப்பூமியின் அழிவிற்கும் அதனுடாக தனது அழிவிற்கு வழிவகை செய்யும் மனிதகுலக் கண்டுபிடிப்பாக ஒன்று இருக்குமென்றால் அது தேசமும், தேசியமுமாக மட்டுமே இருக்கும்.

"National Interest" என்ற பெயரில் நடைபெரும் மனிதகுல அழிப்பிலிருந்து மீளவேண்டுமெனில், "On Human interest" என்ற பெயரில் தேசங்களையும், தேசியங்களையும் அழிக்கவேண்டியிருக்கும்.

*************************************************************************************************

தகவல் மூலங்கள்

இக்கட்டுரை "Environmental consequences of nuclear war", Physic today, page37, Dec 2008 - ல் வெளிவந்த கட்டுரையையும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

** http://www.willthomasonline.net/willthomasonline/US_Veteran_Reveals_Atomic_Bombs.html
http://www.willthomasonline.net/willthomasonline/Sleight_Of_Nuke.html

படம் 1: http://img.dailymail.co.uk/i/pix/2007/11_02/057bomb_468x454.jpg
படம் 2: http://science.nasa.gov/newhome/essd/atmos_layers.htm
படம் 3: http://www.fas.org/nuke/guide/india/nuke/first-pix.htm12 comments:

Anonymous said...

It’s a well written article and seems to be quite important.

The people who are involved in such nuclear tests and war bombings are not aware of the true chemistry and actual consequences of their acts. Infact, the after-effects of such nuclear tests and bombings could be even more disastrous beyond our imagination and the available scientific facts. Such acts should be condemned thoroughly.

I wish u to continue writing more articles in future.

கையேடு said...

The consequences look very serious and a global reaction to the situation is a must.

//I wish u to continue writing more articles in future.//

Thanks a lot.. Anony.

ஜமாலன் said...

மிகவும் சிந்தித்து தரவுகளுடன் அருமையாக எழுதப்பட்ட கட்டுரை. தொடரும் உங்கள் பதிவுகளின் பணி மிகவும் பயனுள்ள பலத் தகவல்களைத் தருகிறது.

இதுபோன்ற விஞஞானம் சார்ந்த பல கட்டுரைகளை உங்களிடம் எதிர் நோக்ககிறேன்.

ராஜ நடராஜன் said...

நல்ல பதிவு.அறியத் தந்தமைக்கு நன்றி.தேசமென்ற கோடே மனிதன் தனக்குத் தானே இட்டுக்கொண்ட பொய்யான கோடு.

கையேடு said...

//இதுபோன்ற விஞஞானம் சார்ந்த பல கட்டுரைகளை உங்களிடம் எதிர் நோக்ககிறேன்.//
தொடர் ஊக்கத்திற்கு நன்றிங்க ஜமாலன்

கையேடு said...

//நல்ல பதிவு.அறியத் தந்தமைக்கு நன்றி.//

நன்றிங்க ராஜநடராஜன்.

//தேசமென்ற கோடே மனிதன் தனக்குத் தானே இட்டுக்கொண்ட பொய்யான கோடு.//

உண்மைதான்.

thevanmayam said...

நல்ல பதிவு.அறியத் தந்தமைக்கு நன்றி.நிறைய எழுதவும்!!!

தேவா...

கையேடு said...

//நிறைய எழுதவும்!!!//

நன்றிங்க திரு.தேவா.

Newspaanai said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

கல்வெட்டு said...

//
இப்பூமி மிகவும் அழகான மற்றும் இரம்யமானதொரு் அமைதிப்பூங்காவாக மாறிவிடும், மனிதன் மட்டும் இல்லாவிட்டால் - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

இப்பூமியின் அழிவிற்கும் அதனுடாக தனது அழிவிற்கு வழிவகை செய்யும் மனிதகுலக் கண்டுபிடிப்பாக ஒன்று இருக்குமென்றால் அது தேசமும், தேசியமுமாக மட்டுமே இருக்கும்.//

well said

கையேடு said...

நன்றிகள் திரு.கல்வெட்டு..
நலமா?? பலூன் பதிவு ரொம்பநாளா ஒன்னும் காணவில்லையே??

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்