Thursday, November 13, 2008

மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை - பரிணாம விளக்கமும், விளக்கப் பரிணாமமும்


மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை - பரிணாமக் கொள்கை குறித்த தவறான புரிதலுக்கான விளக்கமும், பின்னூட்டத்தின் விளக்கப் பரிணாமமும்

1. பரிணாமம் என்றால் என்ன?

பரிணாமம் என்பது இயற்கை மாற்றத்தினால் ஒரு உயிர் எப்படிப் பலவகை உயிரிகளாக மாறுகிறது/மாறியது என்பதை விளக்கும் ஒரு உயிரியல் கொள்கை. பரிணாமம் உயிரின் தோற்றத்தை விளக்கும் ஒரு கொள்கையல்ல, மாறாக உலகிலுள்ள அனைத்து "உயித்தொகுப்புகளும்" (species) காலச்சக்கரத்தில் பின்னோக்கி நகர்ந்தால் ஒரே மூதாதையரைக் கொண்டிருப்பவை எனபதை விளக்கும் ஒரு கொள்கை. சுருக்கமாகச் சொன்னால் "எல்லோரும் ஒரு மரத்துப் பறவைகளே" என்பதுதான் பரிணாமக் கொள்கையின் அடிப்படைச் சாரம்.

2. பரிணாமத்தை எப்படிப் புரிந்து கொள்வது?

இவ்வுலகில் தோன்றிய முதல் உயிர் தனது சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு தனது இருத்தலுக்காக உள்ளான மாற்றமே பரிணாமம். மிக முக்கியமானதொன்றைக் குறிப்பிட விரும்புகிறேன், இம்மாற்றத்தை அவ்வுயிர் தேர்ந்தெடுக்கவில்லை மாறாக இயற்கை நிகழ்வாக சுயமாக நிகழ்கிறது. இம்முதல் உயிரிலிருந்து பிரிந்து விரிந்த ஒரு மரமாக இன்றைய அனைத்து உயிர்களையும் நோக்கலாம். இச்சூழல் மாற்றத்தினடிப்படையில் தகவமைத்துக் கொள்ளும் பண்பையே சார்லஸ் டார்வின் "natural selection" என்று தனது பரிணாமக் கொள்கையில் குறிப்பிடுகிறார்.

3. அது என்ன பரிணாம மரம்?


படம் 1. http://www.peabody.yale.edu/exhibits/treeoflife/convergent.html

பரிணாமத்தை ஒரு மரமாக பாவித்து விளக்குகின்ற முறையை "phylogeny" என்றழைக்கின்றனர். இதற்கான விளக்கப்படத்தை (படம் 1.)காணலாம். ஒரு உயிர் முதலில் தோன்றி அதன் பின்னர் வெவ்வேறு காலத்தில் சூழல் மாற்றங்களுக்கேற்றவாறு வெவ்வேறு வகையான உயிர்த்தொகுப்புகளாக மாறியதைப் பற்றிய ஒரு விளக்கத்தையே இப்பரிணாம மரம் விளக்குகிறது. இம்மரத்தின் ஆதி புள்ளியிலிருந்து நகர்ந்தால் முதலில் கிளைக்கும் புள்ளி வெவ்வேறு வகை உயிரிகளாகப் பிரிந்த தருணத்தைக் குறிக்கிறது. ஒரு கிளையின் நுணியில் இருந்து பின்னோக்கி நகர்ந்தால் சந்திக்கும் முதல் கிளைத்தல்-புள்ளி மிகச் சமீபத்தில் அவ்வுயிரினம் மாற்றம் அடைந்த தருணத்தைக் குறிக்கிறது. சூழலுக்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் போது மாற்றங்கள் சீரானவையாகவும் இருக்கலாம் சீரற்ற தாவல்களாகவும் இருக்கலாம்.

அதில் மனிதனும் குரங்கும் ஏதோவொரு சூழல் மாற்றத்தினால் ஒரு புள்ளியில் துவங்கிய இரண்டு உயிரிகள். ஒரே துவக்கப்புள்ளியைக் கொண்ட இரண்டு சிறு கிளைகள் மிகவும் நெருங்கிய உடல்கூறுகள், மற்றும் வாழ்வுமுறைகளைக் கொண்டதாகவும்,(நமது குடும்பத்தில் இருக்கும் நெருங்கிய உறவினரைப் போல) ஒரு பெருங்கிளையினைத் துவக்கப் புள்ளியாகக் கொண்டப் பலவகை உயிரிகளுக்கு அடிப்படையான பொது உயிரமைப்பும் கொண்டிருக்கும் (நமது தூரத்து உறவினர் போல). ஆனால், சிறுகிளைகள் வெகுதூரத்தில் இணைந்தாலும் அவற்றுக்கிடையே அடிப்படையானதொரு பெரும் ஒப்புமை இருக்கலாம். இதனாலேயே மருந்துகளுக்கான சோதனைகள் முதலில் எலிகளில் பெரும்பாலும் செய்யப்படுகின்றன. அதாவது மனிதன் உள்ளிட்ட பல்வேறு உயிர்த்தொகுப்புகள் துவங்கும் ஒரு பெரும்கிளையின் துவக்கப்புள்ளியில் இருப்பவை எலிகள்.
அப்பெருங்கிளையில் இருக்கும் அனைத்து உயிரிகளுக்கும் அடிப்படையானதொரு ஒப்புமை இருக்கும்.


4. குரங்கிலிருந்து மனிதன் தோன்றினானா?

கண்டிப்பாக இல்லை. மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை. இப்படியான கருதுகோல், பரிணாமத்தைப் பற்றிய தவறானபுரிதல்களில் முதன்மையானது. ஒருவேளை, இப்படியான கருதுகோலை உருவாக்கிப் பரப்பியதில் சமூகத்தில் விரவியிருந்த நம்பிக்கைகள் மற்றும் ஊடகங்களின் பங்கு முதன்மையானதாக இருக்கலாம். அல்லது ஏற்கனவே தனக்கென்று சிறப்பான குணாதீசியங்கள் உண்டு என்றும், தான் மற்ற விளங்குகளிடமிருந்து தனித்த ஒரு சிறப்பான உயிரி என்ற எண்ணத்தில் இருக்கும் போது "நீயும் குரங்கும் நெருங்கிய உறவினர்கள்" என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத அகம்பாவமாகயிருக்கலாம்.


5. அப்படியானால் குரங்கிற்கும் மனிதனுக்கும் உள்ள ஒப்புமையை எப்படிப் புரிந்து கொள்வது?




படம் 2. http://evolution.berkeley.edu/evolibrary/article/0_0_0/evo_05

மனிதனும் குரங்கும் பரிணாம மரத்தில் பின்னோக்கிச் சென்றால் சமீபத்திய புள்ளியில் துவங்கிய இரு உயிரிகள் (நெருங்கிய உறவினர்கள்). தமக்குள்ளே உடல் கூறுகள் மற்றும் பண்புகள் எனப் பலவற்றில் பெரும் ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்ளும் இரு உயிரிகள்.


6. இப்போ கடைசியா என்னதான் சொல்ல வர்றாங்க இந்த பரிணாம உயிரியலாளர்கள் (evolutionary biologists)?

படம் 3. ( http://evolution.berkeley.edu/evosite/misconceps/IBladder.shtml)

பரிணாமம் என்பது ஒரு மரத்தைப் போன்றது, ஏணியைப் போன்றதல்ல. ஒற்றைச் செல் உயிரிகள் துவங்கி இன்றைய மனிதன் வரை சுழல் மாற்றத்திற்கிணங்க தன்னை மாற்றியமைத்துக் கொண்ட ஒற்றை உயிர் மூலக்கூறின் வெவ்வேறு வடிவங்களே இப்படியாகப் பரிணமித்திருக்கும் அனைத்து உயிரினங்களும். அதனால், அனைத்து உயிரிகளும் ஒன்றோடொன்று சக காலத்தில் உயிரோடிருக்க முடியும் (மிகவும் அபரிவிதமான திடீர் சூழல் மாற்றங்கள் நிகழாதவரை). எல்லோரும் ஒரு மரத்துப் பறவைகளே என்பதுதான் பரிணாமக் கொள்கையின் அடிப்படைச் சாரம்.


7. சரி அப்போ அந்த முதல் உயிர் எங்கிருந்து வந்தது?

முதலில் இக்கேள்விக்குப் பரிணாமக் கொள்கை பதிலளிக்கத் தேவையில்லை. ஏனெனில், ஏற்கனவே குறிப்பிட்டது போல் அது "உயிரின்" மூலத்தை விளக்கும் ஒரு கொள்கையல்ல, மாறாக "உயிர்த்தொகுப்புகளின்" மூலத்தை விளக்கும் ஒன்று. (It does not explain "origin of life", it (tries to) explains "origin of species").

இப்போ ஒற்றை உயிர் பற்றிய கேள்விக்கு வருவோம் அது பூமியின் கருப்பொருட்கள் மற்றும் சூழல் மாற்றங்களை முன்னிறுத்தி அனுமானிக்கப்பட்டது. அனுமானம் என்றாலும் ஆய்வங்களில் அப்படியான சூழலைச் செயற்கையாக உருவாக்கி உயிர் மூலக்கூறுகளின் அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கியதன் மூலம் இவ்வனுமானம் தற்போது ஏற்புடையதாகயிருக்கிறது. முன்னரே, இங்கே( இறப்பு - உரையாடல் - II - உயிர்த் தோற்றம், செல்-அற...) சிறிது விளக்கியிருக்கிறேன்.


8. பரிணாமம் முழுமையடைந்துவிட்டதா? மேலும் பரிணாமம் நிகழுமா?

பரிணாமம் ஒரு தொடர் நிகழ்வு, அது நிகழ்ந்து கொண்டேயிருக்கும். உதாரணமாகச் சரியாகப் பள்ளி உணவு இடைவேளகளில் குழந்தைகள் மரத்தடிகளில் உணவு உட்கொள்வதால் சிதறுபவற்றை உண்பதற்காக அங்கே வந்தமரும் பறவைகள். (இது பரிணாம மாற்றமல்ல, தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலுக்கேற்றவாறு உணவு வேட்டையை மாற்றிக் கொள்ளும் அப்பறவைகளின் செயல்பாடுகளுக்கான ஒரு மிக எளிமைப்படுத்தப்பட்ட ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இது போல பல எடுத்துக் காட்டுகளை நாம் எல்லோராலும் நினைவுக்கு கொண்டுவர முடியும்.) சரி இப்போது எதற்கு இவ்வெடுத்துக்காட்டு. பரிணாம மரத்தில் மனிதன் தவிர அனைத்து உயிரினங்களும் இன்றும் தங்கள் வாழ்வியல் ஆதாரத்திற்குத் தனது சூழல் மற்றும் இயற்கையுடன் நேரடியிணைப்பில் இருக்கின்றன. அதனால், பரிணாமம் முற்றுப்பெறாத தொடர் நிகழ்வு (மிகவும் அபரிவிதமான திடீர் சூழல் மாற்றங்கள் நிகழாதவரை).


9. மற்ற உயிரினங்கள் இயற்கைச் சூழலோடு இணைந்து வாழும் போது, இன்றும் பல உயிரினங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன என்று கூப்பாடு போடுவதேன்?

பரிணாமம் ஒரு தொடர் நிகழ்வாகயிருந்தாலும், பரிணாம மாற்றங்கள் நிகழும் கால அளவு பல்வேறு உயிரிகளின் ஆயுட்காலத்தோடு ஒப்பிடுகையில் பன்மடங்கு அதிகம். மனிதன் எனும் உயிரி தனது வாழ்வியல் சூழலை மாற்றிக் கொண்டதன் மூலம் இவ்வுலகில் ஏற்படுத்திய சூழல் மாற்றங்கள் மிகவும் ஆபத்தானது, மற்றும் அதிவிரைவானது.மிகக்குறுகிய காலத்திலேயே உலகின் இயற்கைச் சூழலை பெரிதும் நாசமாக்கிவிட்டது மனிதன் எனும் உயிரி (ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்குள்). பரிணாம மாற்றங்கள் நிகழும் கால அளவோடு ஒப்பிட்டால் ஏறத்தாழ 4 அடுக்குகள்(மடங்கு அல்ல) சிறிய கால அளவு. இவ்விரைவான சூழல் மாற்றத்தினைத் தாக்குப் பிடிக்கமுடியாத பல்வேறு உயிரிகள் சத்தமில்லாமல் அழிந்து கொண்டிருக்கின்றன. "சில" உயிரினங்களைப் பொருத்தவரை 1000 ஆண்டுகளில் மாற்றம் என்பது அதிவிரைவான சூழல் மாற்றமே.


10. அப்படியானால் மனித உயிரி பரிணமிக்குமா?

இன்றைய சூழலைக் கருத்தில் கொண்டால் மனிதன் இனி பரிணமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென்று கருதுகின்றனர். இது தொடர்பாகச் சிலர் கருத்துக்களை கூறும் போது "மனிதன்" எனும் உயிரியிலிருந்து மற்றொரு பரிணாமம் நடை பெற்றால் மனிதன் அவ்வுயிரியின் முதல் உயிரை விட்டுவைக்க மாட்டான்" என்பது. இக்கூற்றைப் பகடிக்காக மட்டுமே பயன்படுத்துவோருண்டு. இதனை ஒரு கருதுகோலாக நோக்கினால் உடனடியாக இது சரியானதல்ல என்பது விளங்கிவிடும். பரிணாமம் என்பது ஒரு தொடர் நிகழ்வு, மேலும் அது நிகழும் கால அளவு மனிதனின் ஆயுட்காலத்தோடு ஒப்பிட்டால் மிக அதிகம். அதனால், மனிதன் எனும் உயிரி பரிணமித்துக் கொண்டிருக்கிறதா என்பதை உணர்ந்துகொள்வதே கடினம். இது மேலேயுள்ள கருதுகோளுக்கான எதிர் கருத்து மட்டுமே.

ஆனால், மனிதன் எனும் உயிரியின் சிறு கிளை மேலும் கிளைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதற்கு வேறு பல அறிவியல் சான்றுகளை முன்வைக்கின்றனர். அப்படியென்ன சான்று? மனிதன் இயற்கையிலிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டதாகக் கருதுகின்றனர். பெண்களுக்கு அதிகமாக உருவாகும் சொத்தைப் பல்லை இதற்கான சான்றுகளுள் ஒன்றாக நோக்கலாம். அதைப்பற்றிய விரிவான இடுகைக்கு முன் இப்படியொரு இடுகையின் அவசியம் இருப்பதை உணர முடிந்தது. அதனால் இப்பதிவு.

குறிப்பு:
பரிணாம உயிரியலை நான் ஆய்ந்து அறிந்தவனல்ல, வெறும் வாசிப்பும் மொழிபெயர்ப்பும் மட்டுமே. எனது புரிதலில் தவறிருந்தால் சு(கு)ட்டலாம்.
சுட்டிகளில் நேரடியாகவும் வாசித்துச் சரிபார்த்துப் புரிந்துகொள்ளலாம்.

பின்வரும், பகுதி அறிவியல் (என்ற) மதம் ! என்ற பதிவில் நிகழ்ந்த பின்னூட்ட உரையாடலினால் எழுதப்பட்டது.

புராண அவதாரங்கள் பரிணாமத்தைத்தான் குறிக்கின்றனவா?
கண்டிப்பாக சார்லஸ் டார்வினின் தொகுப்பிற்கிணையாக எந்த புராண, இதிகாச, புனித நூல்களிலும் விளக்கங்களோ ஆதாரங்களோ இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

அதே சமயம், பரிணாமக் கொள்கையின் ஆழ்ந்த புரிதல்களுக்கிணையாக இல்லாவிடினும், உயிர்களுக்கிடையேயான ஒருவகை ஒப்புமையை மனிதன் எனும் உயிரி உணர்ந்ததன் விளைவாக அப்படியான கதைகளையும் வகைப்படுத்தல்களையும் தங்கள் இலக்கியங்களில் புகுத்தியிருக்கலாம். புராணத்தை எழுதியவனும் சிந்தனைத்திறனுடைய ஒரு மனிதனாகத்தானே இருக்க வேண்டும். மேலும், மனிதனின் சூழல் குறித்த பார்வைதானே இலக்கியங்களில் பதியவைக்கப் படுகின்றன. அவை நம்பிக்கைகளாக மாறுகின்றனவா அல்லது இதிகாசமாக மாறுகின்றனவா அல்லது புனித நூலாக மாறுகின்றனவா என்பது மனிதச்சமூகத்தின் சூழல் சார்ந்தது.

ஆனால், பரிணாமக்கொள்கையைத் தான் புராண இதிகாசங்கள் விளக்குகின்றன என்ற கூற்று மிகைப்படுத்தலேயன்றி வேறல்ல.


ஆனால், அனைத்து மதங்களையும் சார்ந்த இவ்விதிகாச புராணங்கள் புழங்கும் சமூகச் சூழல்களைப் பார்க்கும் போது ஒன்றைச் சொல்லத் தோன்றுகிறது.

"It is more difficult to unlearn, than learning" என்று ஒரு சொல்வழக்குண்டு. தற்போதைய சமூகச் சூழலில் இருக்கும் குழப்பங்களுள் முதன்மையானவற்றுள் ஒன்றாக இதைக் காண முடிகிறது "எதை, unlearn செய்வது..??..!!".

எந்தெந்தச் சூழலில் மனித சமூகம் எதை "learn" செய்கிறது எதை "unlearn" செய்கிறது என்பது சமூகவியல், உளவியல், ஊடகவியல் என பண்முகத் தன்மைகொண்டு பயணிக்குமொரு நீண்ட உரையாடலுக்கான கருப்பொருளாகயிருக்கலாம்.

இறுதியாக, உண்மை புராணத்தில் இருந்தால் என்ன, அறிவியலில் இருந்தாலென்ன, இயற்கை மற்றும் இயற்கை நிகழ்வுகள் முன் நாம் சிறுத்துப் போவதுதாம் உண்மை.

தகவல் மூலங்கள்:

http://www.peabody.yale.edu/exhibits/treeoflife/learn.html
http://evolution.berkeley.edu/evolibrary/article/0_0_0/evo_toc_01

பரிணாமத்தை விளக்கும் ஒரு குறும்படம்
http://www.peabody.yale.edu/exhibits/treeoflife/film_discovering.html

"Phylogeny" குறித்த விரிவான விளக்கங்களுக்கு
http://evolution.berkeley.edu/evolibrary/article/phylogenetics_02

படங்களுக்கருகேயுள்ள சுட்டிகளிலும் சில விளக்கங்கள் உள்ளன.


பின்னூட்டத்தில் ஒரு அனானி குறிப்பிட்டதற்கிணங்க species என்பதற்கான பயன்பாடு உயிரித்தொகுப்பு என பின்னர் திருத்தி வெளியிடப்பட்டுள்ளது.


Tuesday, November 4, 2008

சினிமா - தொடர் பதிவு

சினிமா பற்றிய கேள்விகளுக்கான தொடர் பதிவில், நண்பர் Sen's senses..- செந்திலின் அழைப்பை ஏற்று ஒரு சினிமா பதிவு.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எந்த வயது என்பது சரியாக நினைவிலில்லை. ஆனால், சிறு வயதில் அதிகம் விரும்பியது சண்டைக்காட்சிகள் நிறைந்த திரைப்படங்களையே. எனது ஆரம்பப் பள்ளி பருவங்களில் திரையுலகில் முக்கியப் பங்கு வகித்தவை டி.இராஜேந்தரின் திரைப்படங்களே. மேலும், அப்போதைய அவரது தி.மு.க ஆதரவினால் கொட்டகைக்குமுன் அவரது திரைப்படங்களுக்கென்று பிரத்யேகமாக கட்சிக்கொடி அலங்காரங்கள் இருக்கும். அதனால், அத்திரைப்படங்களே நான் ஆரம்ப காலங்களில் பார்த்தவையாகத் தற்போது நினைவில் இருப்பவை. மேலும், அப்போது எனக்கு தோன்றிய சந்தேகங்கள் இப்போதும் பசுமரத்தானிபோல் இருக்கின்றன. ஒரு திரைப்படத்தின் இறுதியில் டி.இராஜேந்தர் இறப்பதுபோன்ற காட்சி வரும். பின்னர் அவரது அடுத்த படம் வந்தவுடன் அவர்தான் போன படத்திலேயே இறந்துவிட்டாரே மீண்டும் எப்படி மற்றுமொரு படம் என்று அனைவரையும் (அவர்கள் என்னையும்)புரட்டியெடுக்கும் கேள்விகள் கேட்பதுண்டு?

எனது இக்கேள்வியைப்பற்றி எழுதும்போது எங்கேயோ வாசித்தது நினைவில் வருகிறது. கிராமத்தில் எம்.ஜி.ஆரின் திரப்படத்தைப் பற்றி இரு பெரியவர்கள் பேசிக்கொள்ளும்போது "எப்படி அந்த ஊர் கொட்டகையிலும் அவரது படம் ஓடுது, நம்மூர் கொட்டகையிலும் அவரது வேறொரு படம் ஓடுது?" என்று கேட்டாராம். அதற்கு அருகில் இருந்த பெரியவர் கூறினாராம் "இரண்டு கொட்டகைக்கும் அடியில் சுரங்கம் இருக்கிறது, அவர் அச்சுரங்கம் வழியே இரண்டு கொட்டகைக்கும் இடையே ஓடி ஓடி நடிப்பார் என்று. இடையில் சுரங்கத்திலேயே உடை மாற்றமும் செய்துகொள்வார்" என்று கூறினாராம். இதை ஏதோவொரு புத்தகத்தில்தான் வாசித்தேன், எழுதியவர் யார்? என்ன புத்தகம் என்பது தற்போது நினைவிலில்லை.

சரி விசயத்துக்கு வருவோம், எனக்கு நினைவிலிருப்பவை டி.ஆரின் ஆரம்பகாலத் திரைப்படங்களே, ஏனெனில், படம் பார்த்தபின் ஒரு வாரத்திற்கு எங்கள் விளையாட்டுகளில் எல்லாம் அவரது வசனங்களே தெரிக்கும். இது தவிர திரைப்படம் பார்க்காத தன் நண்பர்களுக்கு என் அக்கா கதை சொல்ல அதைக் கேட்டுக்கொண்டே பள்ளிக்கு நடந்து் செல்வது போன்ற நிகழ்வுகளே அவற்றை நினைவில் நிறுத்துபவை. ஆறாம் வகுப்பின் துவக்கத்திலிருந்து எனது பொழுதுபோக்கு சிந்தனை என அனைத்தையும் ஆக்கிரமித்தது கால்பந்தாட்டம் (எல்லாம் சேர்ந்த பள்ளி அப்படி). அதனால் அதன்பிறகு சினிமாவில் சொல்லிக்கொள்ளும்படி ஆர்வமேயிருந்ததில்லை. அதற்காக நான் பெரிய கால்பந்தாட்டவீரனென்றெல்லாம் நினைக்காதீர்கள், கடைசிவரை ஒரேயொரு ஆண்டு மட்டும் மாற்று ஆட்டக்காரனாயிருந்தேன், அதுவும் ஒரேயொரு ஆட்டத்தில் அவ்வளவுதான். மற்றபடி தெருவில் விளையாடுவதோடு சரி.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

கடைசியாக அரங்கில் பார்த்த சினிமா வேட்டையாடு விளையாடு என்று நினைக்கிறேன்.


3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

கடைசியாக அரங்கிலன்றி, இணையத்தில் பார்த்த தமிழ் சினிமா "ஈ". என்ன உணர்ந்தேன் என்பதை அடுத்த கேள்வியில் சேர்த்து பதிலளித்துவிடுகிறேன்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

மிகவும் தாக்கிய தமிழ்சினிமா என்பதைவிட சில சினிமாக்கள் இருக்கின்றன.
அவற்றில், உதிரிப்பூக்கள், மகாநதி, அன்பேசிவம், மொழி மற்றும் கடைசியாகப் பார்த்த "ஈ".
மேலே குறிப்பிட்ட பல திரைப்படங்கள் குறித்து பலரும் எழுதிவிட்டதால் "ஈ" குறித்த எனது பார்வையை மட்டும் குறிப்பிடுகிறேன்.

சினிமா குறித்த எனது பார்வை மிகவும் குறுகியது, மேலும், பல திரைப்படங்களை நான் பார்த்ததுகிடையாது, என்றாலும் திரு.சீவநாதன் இயக்கத்தில் வந்த "ஈ" திரைப்படம் என்னைப் பொறுத்த வரை நிச்சயமாக ஒரு மாறுபட்ட திரைப்படம். அதிலும் பல குறைகள் உண்டு ஆனால் அதைப் பற்றி இறுதியாகப் பார்க்கலாம். எனக்குத்தெரிந்த வரை மிகவும் குவிமையப்படுத்தி ஒரு முக்கியமான சமூகப் பிரச்சனையை பகிரங்கமாக வேறெந்த படமும் பேசியதில்லையென்றே கருதுகிறேன். இத்திரைப்படத்தினைப் பல வகைகளில் அனுகலாம். நூறு ரூபாய்க்காகத் திருட்டுத்தனமாக செய்ல்படும் பிணவறைத் தொழிலாளியோ, அல்லது அப்பேட்டை தாதாவோ அல்லது அவனது கையாளோ ஏதோயொரு வல்லரசின் பின்புலத்தில் நடக்குமொரு மிகப்பெரிய ஆபத்திற்குத் துணைபோகலாம் அவருக்குத் தெரியாமலேயே, அல்லது அப்படியான மலினப்பட்ட இலஞ்ச இலாவன்யமும் அறியாமையில் இருக்கும் மக்கள்தான் அவ்வலரசுகளுக்கு தேவையாகவும் இருக்கலாம். உலகமயமாக்கலினால் உருவாகக்கூடிய மோசமான விளைவுகளுள் ஒன்றை இத்திரைப்படம் நிச்சயம் தோலுரித்திருக்கிறது. இதே போல சமூகச் சிக்கல்களை நேரடியாகத் தாக்கிய வேறு சில திரைப்படங்கள் இருந்தாலும், ஏதோயொரு வகையில் ஒரு அரசியல் அடையாளத்தையே அவை முன்னிறுத்தின என்பது எனது பார்வை.
ஆனால், "ஈ" திரைப்படத்தில் வணிக ரீதியான சிலவற்றை சேர்த்திருந்தாலும் இரண்டு விடயங்களைக் குறையாகக் காண்கிறேன்.

ஒரு முக்கியமான சமூகப் பிரச்சனையை முன்னிறுத்தியது பாராட்டப்படவேண்டியதே, ஆனால், அனைத்து மருத்துவர் மற்றும் அனைத்து மருத்துவச் சோதனைகள் குறித்தும் ஒரு நிரந்தர பீதியையும், அச்சத்தையும் உருவாக்கி அதனை அப்படியே விட்டுவிட்டதை ஒரு குறையாகவே காண்கிறேன்.
அதைவிட முக்கியமாக அதே திரைப்படத்தில் வழக்கமான இதிகாச, புராண கதைகளின் அடிப்படையான வாய்ப்பட்டைப் பயன்படுத்தும் வழக்கமான தமிழ்சினிமா பாணியிலேயே முடித்திருப்பது. மக்களுக்கு ஏதோவொரு சமூகப் பிரச்சனையென்றால், உடனே அநாதரட்சகனாகவும், அவதாரமாகவும் யாராவது தோன்றி தீமையை அழித்துவிட்டு மக்களைக் காப்பாற்றுவது. மக்கள் தங்கள் சமூகப் பிரச்சனைகளுக்காக சிந்தித்து அதற்காக உழைக்கவோ போராடவோ வேண்டாம், கைகளை மேல்தூக்கி ஒரு தவத்தையோ, முறையீடையோ வைத்தால் போதும், அங்கே நாயகன் தோன்றுவார் என்ற புண்ணாக்குத் தனத்தை எப்போதுதான் விடுவார்களோ தெரியவில்லை. (சரி, இன்றும் நமது குழந்தைகளுக்கு ஒரு யானை, மக்களை ஆட்சி செய்யப் போகும் அரசரைத் தேர்ந்தெடுத்தது என்ற அம்புலிமாமாக் கதைகளைத்தானே சொல்லிகொண்டிருக்கிறோம், அதனால் அதன் நீட்சி இப்படித்தான் இருக்கும்.) இந்த அடிப்படையிலேயே "ஈ" திரைப்படத்திலும் நெல்லைமணி என்ற ஒரு போராளி/தீவிரவாதி இப்படிப்பட்ட மருத்துவர்களைக் கொல்வார், பின்னர் முடிவில் அதனையே நாயகனும் தொடர்வார். மிகவும் முக்கியமான சமூகப் பிரச்சனையைக் கதையில் கையாண்டுவிட்டு, கடைசியில் அதற்கான முடிவாக தீவிரவாதத்தை முன்வைப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது என்றுதான் சொல்லவேண்டும். இவை இரண்டும் எனது பார்வையில் "ஈ" திரைப்படத்தின் குறைபாடுகளாகக் காண்கிறேன்.


5.அ உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ஒன்றுமில்லை.


5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

எனக்கு சினிமா குறித்த தொழில் நுட்ப அறிவு சுத்தமாகக் கிடையாது. ஆனால், (அக்காலத்தைய) புதிய தொழில்நுட்பம் ஒன்று மிகவும் அனுபவித்தது, வியந்தது இன்றும் நினைவிலிருக்கும் ஒன்று என்றால் அது முப்பரிமாண விளைவுகளோடு வந்த "மைடியர் குட்டிச் சாத்தான்" திரைப்படம். பல இடங்களில் ஏமாந்த அனுபவம் இன்றும் நினைவில் இருக்கிறது.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

தீவிரமாக வாசிப்பதில்லை, அவ்வப்போது உண்டு.

7.தமிழ்ச்சினிமா இசை?

தமிழ்த்திரைப்படப் பாடல்கள் மட்டுமே எனது இசை குறித்த அறிவு. திரைப்பாடல்களில் எல்லா சூழ்நிலைகளுக்கும், காலத்திற்கும் ஏற்ற இசையும் பாடல் வரிகளும் உண்டு என்றே கருதுகிறேன்.


8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

"உலக மொழி சினிமா? " இக்கேள்வி ஆங்கிலத்தைக் குறிக்கிறது என்று நினைக்கிறேன். எனது பார்வையில் எல்லா மொழிகளும் உலக மொழியே.. :)

தாய்மொழியல்லாத வேற்றுமொழிப் படங்கள் என்றால்
கடந்த 5 ஆண்டுகளாக அதிகம் பார்த்ததுண்டு.
ஹிந்தி, சுத்தமாகப் புரியாது, அதையும் மீறி ஹிந்தியில் பார்த்த ஒரு படம் "லகான்" மட்டுமே.


அநேகமாக அனைத்து புரூஸ்லீயின் திரைப்படங்களும் பார்த்ததுண்டு. எல்லாமே தாக்கும் படங்கள்தான்..:) ஒரு ஆர்வக்கோளாரில் ஓராண்டு காலம் குங்ஃபூ வகுப்புக்குச் செல்லும் அளவிற்குத் தாக்கியவை.

பல ஆங்கிலப் படங்கள் பார்த்ததுண்டு மனதளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை மூன்று ஆங்கிலத் திரைப்படங்கள்.
The Pianist, Life is Beautiful.

மூன்றாவது் திரைப்படம் "Wait until dark" - இது ஒரு கருப்பு-வெள்ளைத் திரைப்படம். படம் முழுவதும் ஒரு பூட்டிய வீட்டுக்குள் ஒரு கண்தெரியாத பெண் மற்றும் அவளது கணவன் இல்லாத நேரத்தில் அவளுக்குத் தெரியாமல் அவ்வீட்டில் பதுங்கும் இரண்டு கொலைகாரர்கள் என நீளும். அந்நடிகையின் பெயரோ அல்லது அத்திரைப்படம் குறித்த வேறெந்த குறிப்புமோ நினைவிலில்லை, யாருக்காவது தெரிந்தால் தெரியப்படுத்துங்கள். அந்நடிகையின் இறுதிக்காட்சி நடிப்பு நிச்சயம் பிரமிக்க வைக்கும்.

ஆங்கிலம் அல்லாத மொழியில் என்றால் பிரெஞ்ச் மற்றும் ஈரானியத் திரைப்படம் ஒன்று "subtitles" உதவியுடன் பார்த்தது முறையே "Amelie" மற்றும் "children of heaven".


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை எவ்வித நேரடித்தொடர்புமில்லை.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எதிர்காலம் பற்றிக் கூறும் அளவிற்கு கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் உற்றுநோக்கியதில்லை.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?


பழகிவிடும் அல்லது வேறுயேதோவொன்று அவ்விடத்தை நிரப்பிவிடும். ஒரு வேளை மெகா சீரியல்களின் எண்ணிக்கைகள் அதிகரிக்கலாம்.

வேறு சிலரை அழைக்க வேண்டும் என்பது விளையாட்டின் விதி. அநேகமாகப் பலரும் எழுதியிருப்பார்கள் அதனால் பொதுவான அழைப்பாக வைத்து விடுகிறேன். விருப்பமிருப்பவர்கள் எழுதுங்கள்.

ஒரேயொரு வரை மட்டும் கண்டிப்பாக எழுத அழைக்கிறேன். பலகாலமாக வெறும் புகைப்படங்கள் மட்டும் பதிவிலேற்றும் எங்கள் அன்பு அண்ணன்
உடுக்கை அடிக்கும் உடுக்கை முனியாண்டி அவர்களை அழைக்கிறேன்.



Friday, October 31, 2008

ஆன்மீகம் - கிரகிப்பு - IV - உணர்வு - கலாச்சாரம்



ஆன்மீகம் - பற்றிய முந்தய
ஆன்மீகம் - கிரகிப்பு - I, ஆன்மீகம் - கிரகிப்பு - II - இயற்கை & ஆன்மீகம் - கிரகிப்பு - III - அறிவியல் ஆகிய மூன்று பதிவுகளின் தொடர்ச்சியாக ஆன்மீக உணர்வு, நம்பிக்கை மற்றும் அதனடிப்படையில் விளையும் சமூகக் கலாச்சாரம் மற்றும் அதன் எதிர்வினைகள் என இக்கட்டுரை நீள்கிறது.

ஆன்மீகம், மனிதனின் வளர்சூழல் சார்ந்த பார்வையினடிப்படையில் எழும் உணர்வு ரீதியான தேடல் என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது. ஆனால், ஆன்மீக உணர்வுகள் வளர்சூழல் சார்ந்த கிரகிப்புகளினடிப்படையில் பழக்கப்படுத்திக்கொள்பவை என்ற கண்ணோட்டத்தில் அது இயற்கையிலேயே பிறக்கும்போது தோன்றுமோர் உணர்வல்ல. வளர்சூழலில் தோன்றியதாயிருந்தாலும் ஆன்மீகமும் மனிதனின் சிந்தனைத்திறத்தால் உருவாகும் ஓர் உணர்வே.

இவ்வுணர்வு ரீதியினாலான தேடலும், கடுமையான பயிற்சியின் மூலமே சாத்தியப்படுத்தப் படமுடியும் என்பதாக நம்பப்படுகிறது. மேலும், இப்பிரபஞ்ச இரகசியத்தை நோக்கிய ஒரு உண்ணதத் தேடல் என்றும், அத்தேடலின் விளைவால் அறிந்த உண்மைகளின் உதவியோடு சமூக வாழ்விலிருந்து மனிதனை உய்விப்பதையே தனது தலையாயக் கடமையாக வரிந்துக்கொள்கிறது ஆன்மீகம். மேலும், மனதை சுத்தப்படுத்துதல், அழிவில்லாத ஆன்மா, பிரபஞ்ச இரகசியத்தை உணர்தல் என்பன போன்ற கதையாடலாக சமூகத்தினுள் நுழைந்து தனது இருத்தலுக்கான அவசியத்தையும், நியாயத்தையும் கற்பிக்கிறது. இதனடிப்படையிலேயே ஆன்மீகத் தேடல் ஒருவனது வாழ்வினை முழுமைப்படுத்துவதாகவும், மனிதனின் பிறப்பே இத்தேடலுக்காக, போன்ற கருத்துக்கள் நம்பிக்கைகளாகின்றன. இவ்வகையான தத்துவ அடிப்படைகள் மெல்ல உடலைத் தாழ்த்தி, ஆன்மாவை முதன்மைப் படுத்து முனைகின்றன. இவ்வகையான தத்துவ அடிப்படைகளைக் கொண்ட இனக்குழுக்களின் உளவியல் எப்படியிருக்கிறது, அல்லது அதன் விளைவாகச் சமூகச் சூழல் எப்படி உருமாறியிருக்கிறது என்பது கருத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்று.

ஆன்மாவையும், மனதையும் முதன்மைபடுத்தி உடலை வருத்திக்கொள்ளும் அல்லது தாழ்த்திக்கொள்ளும் இனக்குழுக்களிடம் இருக்கும் பொதுவான பண்புகளில் சில:

1. குழந்தைகளுக்கு தண்டனையாக உடலில் வலியை ஏற்படுத்துதல்.

2. சமூகத் தண்டனைகளாக உடல் வன்முறைகளை அதிகமாகப் பயன்படுத்துதல்.

3. பெண்களை, ஒரு பொருளாகக் கருதுதல். மேலும், உடல்குறித்தான கட்டுப்பாடுகளை முன்னிறுத்தி பெண்களை ஒடுக்குதல். இதன் மூலம் திருமணங்களை ஒரு வியாபாரம் போல பாவித்து, பொருள் கொடுத்துப் பெண்ணின் உடலைக் கொள்ளுதல். (இது நமது சமூகத்தில் இன்னும் மோசமாகயுள்ளது, பெண்ணை ஒரு பயனுள்ள பொருளாகக் கூடக் கருதாமல், பெண்ணையும் பொருளையும் சேர்த்துக் கொடுத்தல்.)

4. இவ்வகைச் சமூகத்தின் இளைய தலைமுறையினருக்கு உடல் ரீதியான கட்டுப்பாடுகள் அதிகமாக இருப்பதால், மது, போதை ஆகியப் பழக்கங்களில் ஆர்வம் காட்டுதல்.

5. மணவாழ்க்கைக்கு வெளியே (குறிப்பாகப் பெண்கள்) உடலுறவு வைத்துக் கொள்ளுதல், உயிரை எடுக்கும் அளாவிற்கான குற்றமாகக் கருதுதல்.

6. ஆயுதம் தாங்கியக் கடவுளரை வழிபடுதல்.

இவை பல்வேறு தென்னாப்பிரிக்க மற்றும் தென்னமெரிக்கப் பழங்குடியினரையும், ஒப்பீடு செய்தும், வட அமெரிக்காவின் சில மாகாணங்களில் பெருகிவரும் வன்முறைக்கும், இளைஞர்களின் போதைகளுக்குமான காரணங்களாகவும் கண்டறியப்பட்டவை. இப்பண்புகளோடு நமது தற்ப்போதைய சமூகப் பண்புகளின் ஒப்புமையை வாசகரிடமே விட்டுவிடுகிறேன்.

மேலும், முன்னர் விடுத்த இரண்டு புள்ளிகளையும் நினைவு கூர்தல் நன்று. முற்றிலும் துறத்தல் என்பதில் துவங்கிய தத்துவங்கள் பின்னர் தங்களது இறை வடிவத்தில் கூட நிர்வாணத்தை ஏற்றுக் கொள்ளாதது, இயற்கை குறித்தான கருத்துக்களில் மனித விலங்கின் சமூக வாழ்விலிருந்து விலகி, பேரண்டம், பிரபஞ்சத்தின் தோற்றம், உண்மை அல்லது தோன்றவைத்து இயக்கிக் கொண்டிருக்கும் ஆற்றல்/சக்தி குறித்த கதையாடல்களுக்குள் நுழைந்தது, என தொடர்ச்சியாக உயிரும் பொருண்மையும் சிறுமைப்படுத்தப்பட்டதை உணர்தல் அவசியம்.

வளர்சூழலின் கிரகிப்பினடிப்படையில் தோன்றிய ஓர் உணர்வாகயிருந்தாலும், இப்படியானதொரு உணர்வை மறுப்பதற்கில்லை. சிந்தனைத் திறனால் ஏற்படும் அறிதல் வேட்கைக்கான ஒரு வடிகாலாகவே இவ்வகையுணர்வு செயல்படுகிறது. இவ்வுணர்வும், ஒருவகை போதைக்கிணையான ஒன்றாகவே நோக்கலாம். இவ்வகைச் செயல்பாடுகளின் போது மூளை எனப்படும் உயிர்வேதிக்கலனில் நடக்கும் வேதியியல் மாற்றங்களால் சுரக்கும் ஒரு வகைத் திரவம் அளிக்கும் சுகானுபவமே இவ்வுணர்வும். ஆன்மீகம் இவ்வகையானச் செயல்பாடே என்பதைச் செயற்கையாகத் தியானத்தின் உணர்வை ஒருவரின் மூளையின் சில பகுதிகளை மின் தூண்டியதன் மூலம் அறிவியல் நிரூபித்திருக்கிறது.[1,2] உணர்வுகளின் ஒன்றான வலியை முதன்முதலாக அருதியிட்டு எண்மதிப்பில் அளப்பதற்கான படிநிலையை அடைந்திருக்கின்றன ஆய்வுகள்[3]. வரும் காலங்களில் உணர்வுகள் உணரப்படவேண்டியவை போன்ற சொற்றொடர்கள் வழக்கொழிந்து போகலாம்.

ஆன்மீகம் எனும் உணர்வு குறித்த மதிப்பீடுகள் தனிமனித உரிமை சார்ந்தது. ஆனால், அது மனிதனின் பிறப்பின் போது இயற்கையாகத் தோன்றும் ஒரு உணர்வல்ல. அதுவே, சித்தாந்தமாக மாறி பின்னர் நம்பிக்கைகளாகச் சமூகக் கலாச்சாரத்தினுள் நுழைந்து இயற்கையான மற்றவுணர்வுகளைச் சிறுமைப்படுத்தும் ஏற்றத்தாழ்வு அரசியல் மற்றும் அதன்வழிப் பெருகும் உளவியல் வன்முறைகள் ஆகியவை கேள்விக்குட்படுத்தி அவற்றை மீள்பரிசோதனைக்குட்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

பிறக்கும் போது பாலூட்டிவிலங்குகளுக்குப் பொதுவானதாகத் தோன்றும் பலவகையுணர்வுகள் தவிர அனைத்தும் வளர்சூழல், மற்றும் கிரகிப்புத் தன்மை சார்ந்தவை. மனிதனின் சுற்றுச் சூழலும், அறிவியல் அறிவும் வளர்ந்து வரும் சூழலில், இவ்வகையுணர்வுகளும் அதனடிப்படையில் முளையில் உருவகிக்கப்படும் பிம்பங்களும் மாற்றமடைந்து வருவன. உதாரணமாகப் பிரபஞ்சம் குறித்த அரைகோள பிம்பம் துவங்கி பால்வழி அண்டத்தின் அமைப்பு வரை.

இப்பூமியில் உயிர் தோன்றியிருந்தாலும் அல்லது தோன்றாவிட்டாலும் பொருண்மை மற்றும் ஆற்றல் உறவினடிப்படையில் பிரபஞ்சங்கள் தோன்றிக் கொண்டும் அழிந்துகொண்டுமிருக்கும். இப்பிரபஞ்சம் ஏதோவொரு நோக்கத்தினடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கிறது, அல்லது இப்படியியக்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் குறித்த புரிதலில் ஒருவேளை ஆன்மீகத்தில் விடைகிடைத்தாலும் சூரியன் தன் அழிவை நிறுத்திவைத்துக் கொள்ளப் போவதில்லை. மேலும், இப்பிரபஞ்ச நிகழ்வுகள் அனைத்தும் ஒரு நோக்கத்துடன் நிகழ்கின்றன என்ற உணர்வே மனிதனின் சுயார்வத்தினால் விளைந்த கேள்விக்கான தேடுதல் வேட்கையைத் தணிப்பதற்கான அனுமானமேயன்றி, பூமிக்குச் சூரியனைச் சுற்றுவதற்கோ அல்லது தனது பரப்பில் உயிரைத் தோற்றுவித்திக் கொள்ளவேண்டுமென்ற நோக்கமோ எண்ணமோ கிடையாது.

உயிரின் இரகசியம்- ஆன்மீகத்தின் வாழ்வும் சாவும், இவையணைத்தும் இங்கே புதைந்திருக்கிறது பொருண்மை (உணவு).
இப்படியாக எழுதத் தூண்டிய சாத்தானின் உறக்கத்தினால், எனது இருள்நீங்கி துவங்குகிறது உங்களிருள், தற்காலிக முடிவுகளோடு தற்காலிகமாக முடிகிறது கட்டுரைத் தொடர். :)


1.
இனி அறிவியல் மூலமாக யோகநிலை அடையலாம் - சதுக்கபூதம்
2. http://www.nytimes.com/2007/08/23/science/23cnd-body.html?_r=2&hp&oref=slogin&oref=slogin
3. "எல்லாம் தனக்கு வந்தால் தெரியும்" - பொய்க்கப் போகும் சொல் வழக்குகள் - கையேடு

இதையும் வாசிக்கலாம்
காம அரசியல், காமத்தின் அரசியல், காமமே அரசியல் - பைத்தியக்காரன்.


புகைப்படம்: பிரெஞ்சு ஓவியம்.

Wednesday, October 22, 2008

ஈழம் - ஒரு பதிவு

Mike அவர்களின் ஈழம் குறித்த பதிவிற்கான அழைப்பைத் தொடர்ந்து இப்பதிவு.

இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனையின் வேர் என்ன?, என்பது குறித்த வரலாற்று உண்மைகள் எதுவாகயிருந்தாலும், அங்கே போராடும் குழுக்களின் போராட்ட வழிமுறைகள் எப்படியாயினும், அங்கே இனப்படுகொலையையும் மனித உரிமை மீறல்களையும் இலங்கை அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது என்பதையும் அங்கே தமிழர்கள் தங்கள் உரிமைக்காகப் போராட வேண்டியதற்கு அவசியமான சூழலையும் உருவாக்கியது என்பதையும் யாரும் மறுப்பதற்கில்லை.

இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிரான இன அழித்தொழிப்பை முனைப்புடன் செய்கிறது என்பது கண்கூடு. தமிழர் என்றில்லாமல், அண்டை தேசத்திலிருக்கும் எந்தவொரு இனமாகயிருந்தாலும், இப்படியானதொரு இன அழித்தொழிப்பு நடைபெற்றால் அதனை இந்தியா எதிர்க்க வேண்டும் என்பதே ஒரு இந்தியப் பிரஜையாக எனது விருப்பமாகயிருக்கும். அப்படியிருக்கையில், அதனை எதிர்க்காவிட்டாலும் அதற்குத் துணைபோகும் இந்தியாவின் அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது. மேலும், அதற்கான எனது கண்டங்களையும் இங்கு பதிவு செய்கிறேன்.நிற்க.

வன்மக்கணக்குகளை இரண்டு பக்கங்களிலும் சரிபார்த்துக் கொண்டுபோகாமல், சமரசமாக இலங்கையில் எல்லோரும் வாழலாம் என்பது போன்ற கருத்துக்கள் பலநூறுமைல்கள் தள்ளியிருக்கும் சில வரையறை சார்ந்த காந்தியவாதிகளுக்கு மட்டுமே சாத்தியம்.

ஈழத்தமிழர்கள் இழந்திருப்பது அதிகம், அதனால் அவர்கள் மனதளவில் சமரசம் அடைய வேண்டுமெனில், தனி ஈழம் அளிப்பதோடல்லாமல், இப்படியான இன அழித்தொழிப்பை மேற்கொண்டதற்காக, முறையாக இலங்கை அரசு (அதற்கு துணை போன இந்திய அரசும்) தமிழ்மக்களிடமும், சர்வதேச சமூகத்திடமும் மன்னிப்புக் கோருவதோடல்லாமல், அவ்வரசு வெட்கிக் குறுகிச் சிறுமைப்படவேண்டும். இதுவே நிரந்தரத் தீர்வாகவும் இருக்க முடியும். இது சாத்தியப்படுமா... ?? கால மாற்றத்தில் விடையிருக்கலாம்.

ஈழம் என்றில்லை எங்குமே ஒரு இனத்தை அழிக்க முற்படும் எந்தவொரு இனமும் அதற்காக வெட்கித் தலைகுனிந்து, பொதுவில் அதற்கான வருத்தத்தையும், மன்னிப்பையும் கோரினால் மட்டுமே சமரசத்திற்கான தளத்தில் நம்பிக்கை பிறக்கும். இது வரலாறு புகட்டும் உண்மையும் கூட.

ஈழத்தில் அமைதி திரும்பவேண்டும், திரும்பும் என்ற நம்பிக்கையில்..

4Nov2008 அன்று சேர்க்கப்பட்டது:
இதையும் கொஞ்சம் வாசிங்க
வன்னியிலிருந்து வந்த பத்திரிகைக்காரரைச் சந்தித்தேன் - நாகார்ஜுனன்

Thursday, October 2, 2008

ஆன்மீகம் - கிரகிப்பு - III - அறிவியல்









ஆன்மீகம் - கிரகிப்பு - I , ஆன்மீகம் - கிரகிப்பு - II - இயற்கை


என்ற முந்தைய இரண்டு இடுகைகளின் தொடர்ச்சியாக ஆன்மீகம் - அறிவியல், குறித்த உரையாடலாக இப்பகுதி தொடர்கிறது. சமூகத்தில், ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் இடையே இருக்கும் ஒப்புமையும் வேற்றுமையும் வெவ்வேறு காலங்களில், விவாதிக்கப்பட்டிருக்கிறது. இரண்டுமே தேடல் அடிப்படையிலானது என்பதால் இவையிரண்டும் பெரிதும் ஒப்புமைப்படுத்தப்படுகின்றன.

ஆன்மீகம் மற்றும் அறிவியல் இவையிரண்டும் ஒன்றா? இரண்டுமே தேடல் அடிப்படையிலானவையெனில் அவையிரண்டும் ஒன்றுதானே...??

ஆன்மீகம், ஒரு இலக்கு நோக்கிய தேடல். ஆனால், அறிவியல் இலக்கற்றத் தேடல். இவையிரண்டும் அடிப்படையிலேயே முரணானவை.


ஆன்மீகம் என்பது முடிவுகளை எழுதிவிட்டு செய்யப்படும் ஆய்வுக்கிணையானது. முடிவுகளுக்குச் சாதகமானவை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.அறிவியல் என்பது ஆய்வுகளின் அடிப்படையில் முடிவுகளை அனுகுவது. முன்னனுமானங்கள் அறிவியலிலும் இருக்கலாம், ஆனால் அவ்வனுமானங்களுக்கு முற்றும் எதிரான முடிவுகளையும் ஏற்றுக் கொள்ளக்கூடியது.

சூழல் குறித்தான பார்வையில் விளைவதாலேயே, அறிவியல் ஆன்மீகம் இரண்டுமே பரிணாமத்தில் மனிதனுக்கான சிந்தனைத் திறன் தோன்றியவுடனேயே துவங்கியவையாக இருக்க வேண்டும்.

ஒரு மூலம் இருக்கிறது என்ற நம்பிக்கையை முன்வைத்துவிட்டு அதனை நோக்கிய தேடலும், நம்மைச் சுற்றியிருப்பவை பற்றிய புரிதலை நோக்கிய தேடலும், முற்றிலும் முரணானவை.


இரண்டின் துவக்கப் புள்ளியும் சூழல் குறித்தான பார்வையில் துவங்குவதாலேயே அவை இணையும் புள்ளிகள் பல இருக்கலாம், பல இடங்களில் அப்படியொரு தோற்ற மயக்கத்தைக் கொடுக்கலாம். அப்படிச் சந்தித்தாலும், ஆன்மீகத்திற்கு அதன் நம்பிக்கையை வலுப்படுத்திக்கொள்ள இச்சந்திப்பு புள்ளிகள் தேவைப்படலாம். ஆனால், அறிவியலுக்கு இவ்விணைவுப் புள்ளிகள் தேவையா என்றால், தேவையற்றதாகவேயிருக்கிறது.


உதாரணமாக ஆன்மீகத்தில் ஆற்றல் குறித்த கதையாடல் எப்போதும் ஒளிவடிவமாக வர்ணிக்கப்படுவதைக் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. இப்புள்ளியில் ஆன்மீகம் பேசும் “ஆற்றல்” மனிதனின் சூழல் குறித்தான கிரகிப்புத்தன்மையில் (perception) விளைந்தது என்பது தெளிவாகிறது. ஆன்மீகம் என்பதும் வளர்சூழலிருந்து தோன்றிய ஒன்றாகயிருப்பதால் சூழல் குறித்தான நிகழ்வுகளையும், விளைவுகளையும் அடிப்படையாகக் கொண்டு விளைந்தவையாகவேயிருக்கின்றன. அதனாலேயே ஆற்றல் குறித்தான ஆன்மீகக் கதையாடல் அனைத்தும் கண்ணுறு ஒளிவடிவமாகவே ஆற்றலை உருவகப்படுத்துகின்றன. ஆனால், அறிவியல் பல வகை ஆற்றல்களைப் பற்றிய புரிதல் கொண்டுள்ளது. ஆன்மீகம் பேசும் ஆற்றல் என்பது எப்போதும் கண்ணுறு ஒளிவடிவமாகவேயிருப்பதற்கான முக்கியக் காரணிகளில் ஒன்று ஆதிகால மனிதனின் ஆற்றல் குறித்தான கிரகிப்புத்தன்மை சார்ந்தது. இவை ஒரு வகையான கட்டமைப்பின் அடிப்படையில் பழக்கப்படும்/பழக்கப்படுத்தப்படும் நிகழ்வுகள். இது வெறும் விவாதத்திற்கான எடுத்துக்காட்டு மட்டுமே.

ஆனால், மனிதனது மூளையின் செயல்பாடுகளுள் பல இப்படியான கிரகிப்புகளின் அடிப்படையில் இயங்குவதுதான். இதனடிப்படையிலேயே நமது மூளை தொடர்பற்ற நிகழ்வுகளைத் தொடர்புபடுத்திப் பொருளறிந்து பார்த்து, தமக்கான முடிவுகளை ஏற்றுக் கொண்டு சமாதானமடையும் ஒரு கருவியாகவேயிருக்கிறது. இதனடிப்படையிலேயே ஆன்மீகம் பெரும்பாலும், பொருண்மை குறித்த கதையாடலைத் துவங்குகிறது. ஆதாவது மூளை என்னும் பொருண்மையில் தோன்றும் மனது/சிந்தனை மற்றும் அதன் செயல்பாடுகளினது ஆற்றலானது இப்பிரபஞ்ச இயக்கம் மற்றும் அவ்வாற்றல் மூலத்திற்குமான தொடர்பு, குறித்தான கதையாடலாகயிருக்கிறது.

இக்கூற்றுகளில் எதுவும் தவறிருப்பதுவாகத் தெரியாது, ஏனெனில் மனித மூளையில் தோன்றும் மனது என்பது உருவமற்றது (மனது என்ற கருத்தே கேள்விக்குறியாகிக் கொண்டுதானிருக்கிறது). மனித மூளையின் செயல்பாடுகளிலிருந்து வெளிப்படும் மின் மற்றும் காந்த சமிஞ்சைகள் குறித்து அறிவியல் பேசியதால், இதைத்தான் ஆன்மீகம் குறிப்பிடுகிறது என்று எளிமையாகத் தொடர்புபடுத்த முடிந்தது. இம்மனதிலிருந்து தோன்றும் ஆற்றலானது இப்பிரபஞ்சத்தின் ஆற்றல் மூலத்துடன் நம்மைத் தொடர்புபடுத்துவதாகவும் எளிதாகத் தொடர்பு படுத்த முடிந்தது. அப்படித் தொடர்பு படுத்துவது என்ன தவறா? எப்படியானாலும் அதைத்தானே அறிவியலும் சொல்கிறது என்பதுதான் மனித மூளையின் உடனடிச் செயல்பாடு. இது, ஒரு வகையில் மனிதனின் சிந்தனைத் திறத்தினால் எழும் வேட்கையினைத் தணிப்பதற்காக உருவாக்கிக்கொள்ளும் ஒரு அனுமானம் அல்லது முடிவு.

இப்புள்ளியில் மேம்போக்காக வெறும் கருத்தாகப் பார்த்தால் அறிவியலும் ஆன்மீகமும் இணையத்தான் செய்கின்றன. ஆனால், அறிவியல் மூளையிலிருந்து மின் மற்றும் காந்த விசைகளின் செயல்பாடுகளைக் குறித்துப் பேசினாலும் அதோடு நின்றுவிடுவதில்லை. மூளை எனும் மின்வேதிமக்கலனில் இருக்கும் நியூரான்கள் அணுக்களாலும் மூலக்கூறுகளாலும் ஆனவை. ஒருவர் தியானம் அல்லது அமைதியான வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் போது, நமது மூளையில் உருவாகக் கூடிய சில வேதி மாற்றங்கள் மற்றும் நியூரான்களின் இணைப்புகளின் மாற்றத்தினால் ஏற்படும் செயல்பாட்டு மின்னழுத்தம் 0.0005 - 0.0015 வோல்டுகளாகவும், இவ்வகை மின்சமிஞ்சைகளின் வீச்சு 0.000010 - 0.000050 வோல்டுகளாகவும், இருப்பதாக அளவிடப்பட்டிருக்கிறது. மூளையில் நிகழும் அயனி இயக்கங்களின் நிகழ்வுகளால் ஏற்படும் மின் மாற்றங்களை மனிதனின் மண்டையோட்டு எலும்புகளுக்கு வெளியே அளவிடுவது இயலாத காரியம். ஆனால், இவ்வகை அயனிகளின் இயக்கங்களினால் ஏற்படும் காந்தப்புலம் அளவிடக் கூடியது. இப்படி அளவிடப்பட்ட காந்தப்புலமானது ஏறத்தாழ ~10ன் அடுக்கு -15 டெஸ்லா (காந்தப் புலத்தின் அலகு). இக்காந்தப்புலத்தின் எண்மதிப்பு பூமியின் காந்தப் புலத்தைவிட(~10-6T)ஏறத்தாழ ஒன்பது அடுக்குகள்(ஒன்பது மடங்குகள் அல்ல ஒன்பது அடுக்குகள்) குறைந்தது. இவ்வலிமை குறைந்த புலத்தை பூமியின் புறவிசைகளிலிருந்து தனித்து அளக்க வேண்டுமெனில் அது அவ்வளவு எளிதான காரியமல்ல.[1]

இப்படிப்பட்ட அமைதிநிலையில் தியானித்திருக்கும் ஒருவர், பூமியுடன் சேர்ந்து மணிக்கு 1,038 மைல்கள் வேகத்தில் சுழன்று கொண்டும், சூரியனைச் சுற்றி வினாடிக்கு 18.5 மைல்கள் வேகத்திலும், பால்வழியிண்டத்தின் மையத்தைச் சுற்றி வினாடிக்கு 150 மைல்கள் வேகத்தில் சுற்றிக் கொண்டும், பேரண்டவெளியில் ஏறத்தாழ வினாடிக்கு 1000 மைல்கள் வேகத்தில் நகர்ந்து கொண்டுமிருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் மனிதனது மூளையிலிருந்து வெளிப்படும் இவ்வலிமை குறைந்த காந்த விசையின் செறிவு, மற்றும் அவ்விசைகளின் பாயம் செயல்படும் வெளியின் அளவு, ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால், இப்பேரண்டத்தின் ஏதோ ஒரு புள்ளியில் இருப்பதாக நம்பப்படும் ஒரு ஆற்றல் மூலத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டிருப்பது சாத்தியமா..??[1]

இயற்கை மற்றும் சூழல் குறித்த பார்வை, இரண்டிலும் பெரிதும் குவிமையப்படுத்தப்படுவது, இப்பேரண்டமும் பிரபஞ்ச இயக்கங்களும் மட்டுமே. உயிர், உடல் குறித்தான பார்வைகள் முதன்மைப்படுத்தப்படுதில்லை. இவ்வகையான, அண்டத்தில் திளைத்து பிண்டத்தைத் துறக்கும் மெய்யியல் மற்றும் மனிதகுல வாழ்வையும் உலகத்தின் உண்மையும் "உணரும்" கதையாடலைக் கொண்ட ஆன்மீகம் மனித சமூகத்தின் கண்காணிப்பாளனாகத் தம்மை மாற்றிக் கொண்டதும் அதனைத் தொடர்ந்து சிந்தனைகள் அசைக்கமுடியா நம்பிக்கைகளாக மாறியதையும் அதன் எதிர்விளைவுகளைக் குறித்தும் அடுத்த பகுதியில் தொடர்வோம். மேலும், உணர்வுகளுக்கிடையான ஏற்றத்தாழ்வு அரசியலை மையப்படுத்தியதன் மூலம் அதன் நிறுவனத்தன்மையை உறுதிபடுத்திக்கொண்டது.

நிறுவனப்படுத்தப்பட்ட அறிவியலில் கூட இவ்வகையான ஏற்றத்தாழ்வுகளும் நம்பிக்கைகளும் உண்டு ஆனால் அது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. உதாரணமாக அறிவியல்/விஞ்ஞானம் என்றாலே பேரண்டம், பேரண்ட இயக்கம், துகள்பொளதீகம் போன்றவற்றை முன்னிறுத்துதல்.


அறிவியலை விமர்சிக்கும்(**) மற்றும் ஆழமான புரிதலில் விவாதிக்கும் வேறு பல கட்டுரைகள் .(*)

(*)
தமிழனின் இட்லியும் ஏகாதிபத்தியமும் - மீன்துள்ளியான்

http://ravisrinivas.blogspot.com/2008_06_01_archive.html

அழிவின் அறத்தில் உயிரும் பொருளும் - நாகார்ஜூனன்

ப்ரூனோ லத்தூர் - விஞ்ஞானமும் உண்மை-உருவாக்கமும் - நாகார்ஜூனன்

எரியும் பிரபஞ்சம் தலையில் சுழல்கிறது - ராஜன்குறை(சுட்டி-மீள்பதிவு ஜமாலன்)

திரு. நாகார்சுனன், ரவிஸ்ரினிவாஸ் ஆகிய இருவரின் கட்டுரைகள் மற்றும் ராஜன்குறையின் இக்கட்டுரையும், ஆழ்ந்த கருப்பொருட்களை முன்னிறுத்தி விவாதிப்பவை. இதைப்பற்றித்தான் பேசுகிறார்கள் என்று எனக்கு ஓரளவிற்குப் புரிந்த கட்டுரைகளை மட்டுமே இணைப்பு கொடுத்துள்ளேன்.


(**)

கண்மூடித்தனமாக அறிவியலை நம்பலாமா? - எதார்த்தவாதிகளே உஷார்!

ஏன் அறிவியலை கேள்வி கேட்க கூடாது?

ஆன்மீகத்தை கேள்வி கேட்கும் பகுத்தறிவுவாதிகள் ஏன் அறிவியலை கேள்வி கேட்பது இல்லை?


அறிவியல்-ஆன்மீகம் குறித்த வேறுசில கட்டுரைகள்.

http://cyrilalex.com/?p=403
http://cyrilalex.com/?p=400
http://cyrilalex.com/?p=401

[1].
“Prayer - A neurological Inquiry” - David C.Haas.

Monday, August 11, 2008

ஆன்மீகம் - கிரகிப்பு - II - இயற்கை


ஆன்மீகம் - கிரகிப்பு - I முந்தய பதிவின் தொடர்ச்சி.

"மதம் சாராத ஆன்மீகம் என்பது, மனிதனின் சூழல் மற்றும் கிரகிப்புத் தன்மை சார்ந்த, பொதுஅறிவின் சுயஆர்வத்தினால் ஏற்பட்ட கருத்தாக்கத்தின் பரிணாம வெளிப்பாடு." - இத்தொடரின் கருப்பொருளாகயிருப்பதால் மீண்டும் ஒருமுறை நினைவூட்ட வேண்டிய முக்கியத்துவத்தைப் பெறுகிறது.


II.ஆன்மீகம் - இயற்கை.
ஆன்மீகம் என்றால் என்ன? ஆன்மீகம் என்பது ஒரு தேடல், மெய்யியல் அல்லது உண்மை குறித்தான தேடல் என்று பரவலான வரையறையாக ரிக் வேதம் முன்வைப்பதாகக் கூறுகின்றனர்[1]. ஆன்மீகவாதி அல்லது சாது என்பவன், முதலில் அனைத்தையும் துறக்கவேண்டும், அதாவது பொருள் என்று தனக்கென எதுவும் வைத்துக்கொள்ளாமல் இருத்தல், மிகக்குறைந்த பட்ச ஆடைகளை அணிதல் அல்லது முழுவதுமாக ஆடைகளைத் துறத்தல், பூசனைகளைத் துறத்தல், மதம், மொழி, இனம் என அனைத்தையும் சாராமல் (பற்றில்லாமல்) இலக்கை நோக்கிய தேடலை மேற்கொள்ளுதல். உலகத்தின், உண்மையைத் தேடுதல், மற்றும் உலக மக்களுக்கு தாம் உணர்ந்த உண்மைகளைப் பற்றி அறியத்தருதல்.[1] ஆன்மீகம் ஒரு முழுமை (perfection) மற்றும் முந்நிர்மாணிக்கப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பு (pre-determined), இயக்கங்கள் அனைத்துக்குமான ஒற்றை நோக்கம் மற்றும் ஒற்றை மூலம் போன்ற கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளப்படுகிறது.
எப்படியும் ஆன்மீகம் என்பது ஒரு முழுமையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆன்மீகம் என்பது இயற்கையுடன் இரண்டறக் கலப்பது அல்லது இயற்கை என்ற ஒரு முழுமைதான் ஆன்மீகம் போன்ற கருதுகோல்கள் உலாவுகின்றன. இவ்வான்மீகக் கருத்து கால மாற்றங்களாலும் சமூகச் சூழல் மாற்றங்களாலும் எப்படி மாறியது அல்லது மாற்றப்பட்டது என்பது பிரிதொரு ஆய்வுக்கான கருப்பொருள். ஆன்மீகம் என்பது ஒரு முழுமையென்றால், இயற்கை ஒரு முழுமையல்ல, தவறுகள் இழைத்து பின் திருத்திக்கொள்ளும் ஒரு சீரற்ற நிகழ்வே உயிரிகள் சார்ந்த இயற்கை. ஆதலால், ஆன்மீகம் என்பது இயற்கையோடு இணையும் ஒரு நிகழ்வு என்று குறிப்பிடுவது முற்றிலும் புறந்தள்ள வேண்டிய ஒன்று.

இயற்கை என்பது என்ன? இயற்கை ஒரு முழுமையா... என்றால் நிச்சயமாக இல்லை. இயற்கை சூழ்நிலைகளின் மாற்றத்திற்கிணங்க, சீரற்ற (random) மற்றும் நிகழ்தகவின் (probablistic) அடிப்படையில், இயங்கும் ஒன்று. நமது உடல் தோன்றியது ஒரு நிகழ்தகவு, ஆயிரம் விந்துக்களில், இரண்டாவதிருக்கும் விந்து முந்தியிருந்தால், இப்போதிருக்கும் “நாம்” “நாமாக” இருந்திருக்க முடியாது. இப்போதிருக்கும் நாம் தோன்றியதற்கான நிகழ்தகவு ஏறத்தாழ 1/சிலஆயிரம். பூமியின் கருப்பொருளில் சிறு மாறுபாடு இருந்திருக்குமானால், உயிரே தோன்றியிருக்க முடியாது. ஒரு உதாரணத்திற்கு இவ்வண்டத்தில் ஓராயிரம்கோடி கோள்கள் இருக்குமானால், உயிர்தோற்றத்தின் தற்போதைய நிகழ்தகவு குறைந்த பட்சமாக 1/ ஓராயிரம்கோடி.


இப்படிப்பட்ட இயற்கை, சூழல் மாற்றத்திற்கிணங்கப் பல தவறுகளைச் செய்யக்கூடியது.(சூழலுக்கு ஒவ்வாத அல்லது தாக்குப்பிடிக்க முடியாத ஒன்றை உருவாக்கி பின் அழித்தல்) அப்படிப்பட்ட தவறுகளைப் பின்னர் திருத்திக் கொண்டு, மேலும் உயிரியில் சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டே வந்த பரிணாமக் கிளைகளில், பரிணமித்த ஒரு சிறு கிளை உயிரியாக நாம் இருக்கிறோம். அப்படியானால், இயற்கை என்பது முழுமையள்ள, சூழலுக்கு ஏற்றார்போல் மாறுவதும், தவறிழைப்பதும் (சூழலுக்கு ஒவ்வாத அல்லது தாக்குப்பிடிக்க முடியாத ஒன்றை உருவாக்கி பின் அழித்தல்), திருத்திக்கொள்வதுமான ஒரு நிகழ்வாகவே உயிர்கள் சார்ந்த இயற்கை இருக்கிறது.
ஒருவேளை, மனிதன் தனது ஆன்மாவின் உன்னதத்தால், முற்றுமுணர்ந்திருந்தாலும், பூமிக்கு ஆயிரம் மைல் அருகில் ஒரு எரிகல் வந்தாலும், அதன் சூழல் விளைவுகளைத் தாங்கிக்கொள்ள முடியாத பலவைகையான உயிரிகள் இல்லாமல் போய்விடும். பேரண்டத்தின் சூட்சுமத்தை உணர முற்படும் தன்மையுள்ள ஒரு உயிரியைத்(மனிதனைத்) தாங்கிக் கொண்டிருக்கிறோம் என்று பூமி, அதற்கான எதிர்வினையைப் புரியாமலிருக்காது.


கால்களில் மோதும் நுரைத்த கடலலை, வானும், கடலும் இணையும் மாயப்புள்ளி, பரந்தவெளியில் தனித்திருக்கும் ஒற்றை மரம், அதிகாலைக் கதிரவன், தென்றலும் நிலவும் மட்டுமே துணைக்கிருக்கும் ஆற்றங்கரை மெளனம், மாலையின் தனிமையில் சுழலும் பறவைகளின் இசை, உதிர்கின்ற சருகு, குழந்தையின் சிரிப்பு, ஒரு சவம், எனப் பல கணங்களில் ஒரு வெறுமையும் நம்மைச் சுற்றியிருக்கும் பல கற்பிதங்களும் கட்டமைப்புகளும் கலைந்திருக்கலாம். அந்நொடிப்பொழுதின் போதைக்கான ஈர்ப்பு, அதன் நீட்சிக்கானத் தேடலின் துவக்கப் புள்ளியாகயிருக்கலாம். (இவ்வெடுத்துக்காட்டுகள் கூட எனது சூழல் மற்றும் கிரகிப்புத்தன்மை சார்ந்தவையே )

ஆனால், இவையணைத்தும் இயற்கையின் முன் நாம் சிறுத்துப் போகும் கணங்களேயன்றி அதனோடு இணைந்த கணங்களல்ல.

தற்போது மனிதன் பரிணமித்திருக்கும் ஒரு நிலையில் அவன் மீண்டும் இயற்கையுடன் இணைவது முற்றிலும் இயலாத காரியம். இயற்கையுடன் இணைவதில் முதல் படியாக மனிதன் ஆடைகளைக் களைய வேண்டும், உணவை உற்பத்தி செய்யாமல், இயற்கை உருவாக்கும் உணவை மட்டுமே நம்பியிருக்க வேண்டும், இயற்கைச் சூழலுக்கேற்ப தனது வாழ்விடத்தையும், வாழ்க்கைமுறையையும் மாற்றிக்கொண்டேயிருக்க வேண்டும். மேற்கூறிய எதுவுமே தற்போது பெரும்பாண்மையான மனிதயினத்திற்கு விருப்பமிருந்தாலும் சாத்தியமில்லாத ஒன்று.(ஒருவேளை, ஆப்பிரிக்க, தென்னமெரிக்கா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தனித்து வாழ்ந்து கொண்டிருக்கும் வெகுசில ஆதிவாசிக் குழுக்களுக்கு சாத்தியமாகயிருக்கலாம்).


உயிரியல் சார்ந்த இயற்கையில், மனிதன் இவ்வகைச்செயல்பாடுகளிலிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொண்டதனாலேயே பரிணாமக் கிளையில் மனிதன் எனும் விலங்கின் இறுதியான புள்ளியாகத் தற்போதைய மனிதன் கருதப்படுகிறான்.


ஒரு ஆன்மீகவாதி முதலில் செய்ய வேண்டியது தன்னிடம் இருக்கும் அனைத்தையும் துறத்தல், மிகக்குறைந்த பட்சமான உடையைக் கொள்ளுதல் அல்லது முழுவதுமாகவோ துறத்தல்[1]. ஆனால், ஆன்மீகவாதி அல்லது ஆன்மீகம் என்பது இவ்வொரு காரணி மட்டுமல்ல என்பதால், இவ்வொரு கருத்தை மட்டும் வைத்து ஆன்மீகவாதி இயற்கையோடு இயைந்தவனாகக் கருதயியலாது. ஒரு வகையில், மனிதனை உயிர்ச் சார்ந்த இயற்கைச் சூழலிருந்து புறந்தள்ளி, வெளியேற்றியதே இந்த ஆன்மா, மனது ஆகிய கருத்தாக்கங்கள்தான். அதனால், மனிதனுக்கும் உயிர் சார்ந்த இயற்கைக்கும் இடையே இருந்த இடைவெளியை அதிகப்படுத்தியது ஆன்மா, குறித்த கருத்துக்கள்.

தமக்கான உணவை உற்பத்தி செய்துகொண்டதன் மூலம் அடுத்த கட்டமாக மனிதன் எனும் விலங்கு இயற்கையிலிருந்து தன்னைப் பெரிதும் அந்நியப்படுத்திக் கொண்டது.

சமூகம், உணவு உற்பத்தி போன்ற செயல்பாடுகளிலிருந்து தன்னைத் தனிமைப் படுத்திக்கொள்ளும் ஆன்மீகம், உயிரியின் இனப்பெருக்கம் என்ற மற்றொரு மிகவும் அடிப்படையானதொரு இயற்கை நிகழ்வைப் புறந்தள்ளியதன் மூலம் உயிர் சார்ந்த இயற்கையிலிருந்து முற்றிலுமாக விடுவித்துக் கொண்டது என்றுதான் கருதவேண்டும்.

ஆனால், ஆன்மீகம் பெரிதும் பேசும் இயற்கை என்பது பேரண்டத்தைப் பற்றியது, உயிரற்ற கோள்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கங்களும், தோற்றமும் குறித்தானது. இதன் மூலம் நமக்கும், இப்பிரபஞ்சத்திற்கும் ஒரு நேரடி ஆற்றல் பரிமாற்றம் பற்றிய கதையாடலாக இருக்கிறது. அதாவது உயிர் சார்ந்ததாகயில்லாமல் பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் இயக்கம் குறித்தான தேடலாக இருக்கிறது. அண்டத்தில் திளைத்து பிண்டத்தைத் மறக்கும்/துறக்கும் ஒரு கதையாடல். ஆனால், இயற்கை அனைத்தையும் உள்ளடக்கியது, உயிரிகள் உட்பட. (இப்புள்ளிக்கும் மீண்டும் வருவோம்).


[1].The sadhus and Indian civilization - Vijay prakash sharma, Amol publications, NewDelhi (1998).

Sunday, August 10, 2008

ஆன்மீகம் - கிரகிப்பு - I


இதுபோன்ற கட்டுரைகளை எழுதத்தான் வேண்டுமா, என்ற அயற்சியினூடே பலகாலமாக இதுபோன்ற பேசுபொருட்களிலிருந்து விலகியேயிருந்தாலும், எனக்குள்ளிருக்கும் சாத்தான் “இருள் பரவட்டும்” என்ற நோக்கில் எனது கணினியையும் எனது நேரத்தையும் எடுத்துக்கொண்டது. அதனால், போற்றுதலும் தூற்றுதலும் போகட்டும் இறைவனை வாழவைக்கும் சாத்தானுக்கே.[1]


இக்கட்டுரை அறிவுரையுமல்ல, அறவுரையுமல்ல, ஒரு உரையாடல்.

கடவுள் - இந்த ஒற்றை வார்த்தை செய்யும் ஜாலம் உண்மையில் வியக்க வைக்கிறது. இவ்வார்த்தை வெறும் வார்த்தையல்ல, மொழியின் உணர்வு ரீதியிலான ஆளுமையை சர்வ வல்லமையுடனும், வீச்சுடனும் தெரியப்படுத்தும் ஒரு வார்த்தை. இவ்வார்த்தையும், அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளும் (அல்லது அவ்வார்த்தையின் போர்வைக்குள்) மட்டுமே தற்போதைக்கு, உலகின் பெரும்பாலான வன்முறைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் காரணமென்று கூறலாம்.

கடவுள் - சர்வவல்லமை படைத்த படைப்பாளி, ஆதியிலிருந்து அந்தம் வரை அனைத்துப் பருப்பொருட்களும் எவ்வாறிருக்கும் அல்லது இருக்கவேண்டும் என்ற வரையறையை வகுத்தவன்(ள்). ஆனால், யாரும் கண்டறியமுடியா உருவமுமில்லா, வரையறையுமில்லாத ஒன்றாக குவார்க்குகளுக்கும் (quarks - அணுவின் உட்கருவுக்குள்ளிருக்கும் துகள்) நெபுலாக்களுக்குமிடையே (nebulas - பேரண்டத்தில் இருக்கும் அடர்வான ஹைட்ரஜனைப் பெரிதும் உள்ளடக்கிய வாயு) கூடுவிட்டு கூடு பாய்ந்து கொண்டிருக்கும் அச்சர்வவல்லமை. உருவமில்லாதது என்றவுடனேயே, கோயில்களுக்குள் இருக்கும் உருவங்களெல்லாம் வெறும் கலைவடிவங்களாகவும், அக்கற்சிலைகளைவிட அதைச் செதுக்கிய சிற்பி அதிக மதிப்பையும் பெற்றுவிடுகிறான் என்பதுதான் உண்மை. அப்படியானால் உருவம் கொடுத்த படைப்பாளி சிறந்தவனாகிவிடுகிறான். அது அவனது உணர்தலுக்கான உருவமெனில், அதே கடவுளரை நிர்வாணமாக உணரும் ஒரு படைப்பாளி நாடு கடத்தப்படவேண்டியவனாகவோ அல்லது தேசத்துரோகியாகவோ சித்தரிக்கவேண்டிய அவசியமில்லையென்றாகிறது, அல்லது, அப்படிச் சித்தரிக்கப்படவேண்டிய நிர்பந்தத்தின் பின்னிருக்கும் பக்தி கேள்விக்குறியதாகிறது. (இப்புள்ளிக்கு மீண்டும் வருவோம்)

குவார்க்குளையும், நெபுலாக்களையும், கடவுள் படைத்தானா? என்ற விடை தெரியாத கேள்வி ஒரு புறமிருந்தாலும், உயிரையும் உயிருள்ளவற்றையும் படைத்தது கடவுள் அல்ல என்பது ஆய்வகங்களிலேயே நிரூபிக்கப்பட்டுவிட்டது[2]. அப்படியானால், உயிருள்ளவற்றுக்கு கடவுள் தேவையில்லை, ஏனெனில் அவற்றைக் கடவுள் படைக்கவில்லை. உயிரற்ற குவார்க்குக்கும், நெபுலாவுக்கும் ஒருவேளை நன்றிக்கடனாக அது (கடவுள் என்ற கருத்தாக்கம்) தேவைப்படலாம்.

உருவமுள்ள மற்றும் ஓரிடத்தில் அமர்ந்து படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முப்பணிகளைச் செய்யும் கடவுளே அவசியமற்றதாகிவிட்டது எனும்போது அதனைச் சுமந்துகொண்டிருக்கும் மதங்களும் மத அடையாளங்களும் குப்பையில் வீசப்பட வேண்டியவையாகிவிடுகிறது. அதனால், முப்பணிகளைச் செய்யும், உருவமுள்ள கடவுள் மற்றும் மதம் ஆகிய இரண்டுவார்த்தைகளையும் அதனுடன் சேர்ந்த விவாதங்களையும் இப்போதே புறந்தள்ளிவிடலாம். அவை அயற்சி தருபவை. ஆன்மீகக் கருத்துக்களையும், சிந்தனைகளையும் குறித்த உரையாடலாகத் தொடரலாம்.

“ஆன்மீகம்”, ஒரு அதிர்வை நம்மைச் சுற்றி உருவாக்ககூடிய வார்த்தை, நமக்கும் இப்பிரபஞ்சத்திற்குமிடையே உள்ள தொடர்பை அற்ப மானிடருக்குப் புரிய வைக்கும், கடவுளுக்கிணையான மற்றொரு வார்த்தை. இப்படியான கருத்துருவாக்கத்துக்குப் பின்னிருக்கும் கலாச்சாரம், சமூகச்சூழல், அரசியல், அறிவியல், மாயப் பிம்பங்கள், உணர்வுகள் என இது குறித்தான உரையாடலைத் தொடர்வோம்.

“ஆன்மீகம்” - முழுமையை நோக்கிய தேடல், ஒருமுகப்பட்ட சிந்தனை, அல்லது வெறுமையை நோக்கிய பயணம், ஆன்மாவின் உன்னதத் தேடல், ஒரு வகையான உயரிய உணர்வு, பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் இயக்கத்தையும் நடத்தும் ஒற்றைச் சக்தி மூலத்தை உணர்தல், நமக்கும் அண்டவெளிக்குமிடையே ஒரு தொடர்பை உணரச்செய்பவை, மனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்தி, செழுமைப்படுத்தும், முழுமைப்படுத்தும் ஒரு உணர்வு ... என அடுக்கிகொண்டே போகலாம். இவ்வார்த்தையின் வாழ்வாதாரமே அது தெளிவான வரையறையற்றிருப்பதுதான் அல்லது வரையறுக்கமுடியாதது என்ற வரையறையைச் சுமந்து கொண்டிருக்கும் ஒரு முரண்.

மதம் சாராத ஆன்மீகம் என்பது, மனிதனின் சூழல் மற்றும் கிரகிப்புத் தன்மை சார்ந்த, பொதுஅறிவின் சுயஆர்வத்தினால் ஏற்பட்ட கருத்தாக்கத்தின் பரிணாம வெளிப்பாடு என்ற திசையில் உரையாடல் தொடரும்.



Sunday, March 9, 2008

அடையாளங்கள்




பல புறக்கனிப்புகளின் தொடர் விரட்டலில் ஓடிய பயனற்ற அடையாளத்தைக் கொண்ட அவன்(ள்), இறுதியில் இதோ இக்குப்பைத்தொட்டியினருகில் தனக்கான அடையாளத்தைக் கண்டெடுத்துக் கொண்டான். எத்தனை நாட்கள் தனது நெற்றியில் பலமுறை ஏதாவது ஒட்டப்பட்டிருக்கிறதா என்பதைத் தேடியும், ஒட்டியதைச் சுரண்டியதிலும், உலர்ந்து போன தனது சிராய்ப்புகளை வருடியவாறு கண்காணித்துக் கொண்டிருந்தான் அவ்வழியே செல்பவர்களின் நெற்றியை. இனி அடிக்கடி நெற்றியைச் சுரண்டத்தேவையில்லை, பயனற்ற ஓர் அடையாளத்தைக் குப்பைத்தொட்டியில் வீசப்போய் புதியவொன்றைக் கண்டுகொண்டான் உள்ளிருந்த இக்குழந்தையின் மூலம்.

குழந்தையின் சிரிப்பு அவனை தலைசாய்க்கவைத்து, முன்பு நிஜங்களாயிருந்தவை மாயங்களாய் கண்முன்னே விரிந்து அவனை உள்ளே விழச் செய்தது.

அவனை விரட்டிய அத்தனைக் கேள்விகளும், மீண்டுமொரு ஒத்ததிர்வை உருவாக்கக் காத்திருந்தன. துவங்கியது மீண்டும் அந்தக் கேள்வி, என்ன பெயரைக் கேட்டால், ம.. ம.. ன்னு சொல்லிகிட்டு என்ன மண்ணாங்கட்டியா? இப்படித்துவங்கியவை தொடர்ந்தன, நீ என்ன இன்ன.. ? "இல்லை நானும் ம.." ஓ இதில்லைன்னா அப்ப நீ அந்த..? "இல்லை நானும் ம.." இன்ன நம்பிக்கைக்காரனா..? "இல்லை நானும் ம.." ஓ அப்படின்னா நீ ...? "இல்லை நானும் ம.." இன்ன மொழி..? "இல்லை நானும் ம.." இன்ன..? இன்ன..? இப்போது பல "இன்ன"க்கள் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. அவன் இப்போது "நானும் ம.." என்று சொல்வதை நிறுத்தியிருந்தான். ஓவ்வொரு முறையும் அவனது நெற்றியில் இன்னக்கள் ஒட்டப்பட்டும் சுரண்டப்பட்டும் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது, யாருக்கும் புலப்படாமல்.

ஒரேயொருவன் மட்டும் அவனிடமிருந்ததை ஏற்றுக் கொண்டான், ஆனால், அவனும் ஆடைகளைக் கலையச்செய்து என்னவோ தேடினான், பின்னர் அவனும் நெற்றியைச் சுரண்டிவிட்டான்.

இப்படியான வெளியிலிருந்து தப்பித்து மீட்டுக்கொண்டு விழுந்தான் குப்பைத்தொட்டியினருகே. இன்னும் உடல் முழுவதும் அதிர்ந்துகொண்டிருந்தது.

சுயத்திற்குத் திரும்பியவனாய் குழந்தையின் மிருதுவான நெற்றியைத் தடவியவாறு சொன்னான், உனது நெற்றிகளில் சிராய்ப்புகள் தோன்றத் தேவையில்லையென்று.

இப்போது, குழந்தை சிரித்தது, அங்கு பார்த்தாயா, இன்ன பெயரைக் கொண்ட, இன்ன தொழில் புரியும், இன்ன பிரிவைச் சேர்ந்த, இன்ன மொழி பேசும், இன்ன நிலப்பரப்பில் பிறந்த, இன்ன நம்பிக்கைகளைக் கொண்ட, இன்ன சிந்தாந்தங்கள் வழிவாழும், என்று இன்ன பிற இன்ன(ல்)க்களைக் கொண்ட இருவரின் தொழிற்சாலையின் விளைபொருள் என்பதை நெற்றியில் சுமந்து கொண்டு ஒரு குழந்தை போகிறது, என்று கூறிக்கொண்டே அதன் நெற்றியைத் தடவியது குழந்தை.

இல்லை, "இன்ன"க்கள் இல்லாதவர் என்பது மட்டும்தான் இருக்கிறது, என்றான்.

இதற்கு முன் நீ ம.. யென்றென்ன சொல்லவந்தாய்?

அதுவா.. நான்(னும்) "ம"னிதன்.... என்று சொல்லிக்கொண்டிருந்தபோது, குப்பையிலிருந்து எட்டிப் பார்த்துப் புன்னகைத்தது வீசப்பட்ட அவனது பயனற்ற "ம"னித அடையாளம்.

சரி வா, இனி இவ்வின்னக்கள் இல்லாதவர்கள் என்றிருக்கச் செய்வோம் அனைவரையும்.
இவர்கள் சென்ற வழிநெடுகிலும் குப்பைத்தொட்டிகள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன பயனற்ற மனித அடையாளத்தால். அங்கே, இவர்களிடமிருந்து தப்பிய ஒருவன் நெற்றியில் காயங்களுடன் முனகிக்கொண்டிருந்தான் "நானும் ம.."

*************************************

Friday, March 7, 2008

இந்திய அறிவியல் ஆராய்ச்சிகளைப் பரிசோதிக்கப் புதிய குழு

சமீபத்தில் வெளிவந்த திருப்பதி, ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறைப் பேராசிரியரின் தவறுகள், உலகளவில் இந்திய அறிவியல் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சிகளின் தரத்தைக் கேள்விக்குள்ளாக்கியது. அப்பல்கலையைச் சேர்ந்த ப.சிரஞ்சீவி என்னும் வேதியியல் துறைப் பேராசிரியர் செய்த பல குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டது. http://www.pubs.acs.org/cen/science/86/8607sci1.html

ஒரே கட்டுரையை மிகச்சிறு மாற்றத்துடன் இருவேறு அறிவியல் இதழ்களுக்கு அனுப்புவது, பிறருடைய அறிவியல் கட்டுரைகளை அப்படியே எடுத்து வெகுசில மாற்றங்களைச் செய்து தமது பெயரில் வேறு அறிவியல் இதழ்களுக்கு அனுப்புவது, மற்றும் வேறு சிலரது பிரசுரிக்கப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளை எடுத்து தமது இணையான மூலக்கூறுகளுக்கான முடிவுகளாகப் பிரசுரிப்பது என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. 2004-2007 க்குள் ஏறத்தாழ 70 அறிவியல் கட்டுரைகளைத் தனது பெயரில் வெளியிட்டிருக்கிறார்.

அவரது மேற்பார்வையில் பணிபுரியும் ஆராய்ச்சி மாணவர்களிடம் அவர்களது முனைவர் பட்டத்திற்காகப் பணம் வசூலிப்பது. மேலும், அவர் செய்ததாகக் கூறி வெளியிடப்பட்டப் பல அறிவியல் கட்டுரைகளில், அப்பல்கலையில் அவ்வாய்வுகள் செய்ய வசதிகளோ உபகரணங்களோ இல்லாத போதும், அவற்றைச் செய்தது போல் எழுதுவது போன்ற பல தவறுகள் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதில் கொடுமையின் உச்சகட்டம் என்னவெனில், இத்தவறுகள், வெளிச்சத்துக்கு வந்தவுடன், வேறுசிலர் மேல், பழியைச் சுமத்திவிட்டுத் தப்பிக்கப்பார்த்திருக்கிறார்.

இந்நிகழ்வு, சர்வதேச அளவில் இதுவரைக் கண்டிராத அளவிளான அறிவியல் மோசடி என்றழைக்கின்றனர், அறிவியல் கட்டுரைகளை வெளியிடும் இதழாசிரியர்கள்.

இது போன்ற நிகழ்வுகளைக் குறைக்கவும், சர்வதேச அளவில் இந்திய அறிவியலின் தரத்தை நிலைநாட்டவும், இந்திய அறிவியல் ஆராய்ச்சிகளின் நேர்மையைப் பரிசோதிக்கவும் ஒரு குழு அமைப்பதற்குப் பரிந்துரை செய்யப்போவதாக, பிரதமர், திரு. மன்மோகன்சிங்கின் அறிவியல் ஆலோசகரும், இந்திய விஞ்ஞான மையத்தின் முன்னால் இயக்குனரும், தற்போதைய ஜவஹர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனருமான பேராசிரியர், C.N.R. Rao, அறிவித்திருக்கிறார்.

இவ்வறிவிப்பு வரவேற்கத் தக்கதே ஆனால், இக்குழுவில் யார் இருப்பார்கள், இதன் செயல்பாடு எப்படியிருக்கும், இக்குழுவில் இருக்கும் உறுப்பினர்களை யார் பரிசோதிப்பார்கள், எனப் பல கேள்விகள் இதிலுமுண்டு. இக்குழுவமையும் வரை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இப்படிப்பட்ட பரிசோதனைக்குழு அமைப்பதாக சர்வதேச விஞ்ஞானக் குழுக்களுக்கு அறிவிப்பு கொடுத்தாயிற்று, இனி இதுவும் கால மாற்றத்தில் மற்றுமொரு நிகழ்வாகப்போகுமா இல்லை பயனளிக்குமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இக்குழு குறித்த அறிவிப்பு சர்வதேச அறிவியலில் முதல் தரவரிசையிலிருக்கும் "Nature" என்ற அறிவியல் இதழில் வெளிவந்துள்ளது.

இங்கே: http://www.nature.com/news/2008/080305/full/452015d.html

இச்சுட்டியிலுள்ள செய்திக்கு கீழிருக்கும் பின்னூட்டங்கள் மிகவும் முக்கியமானவை. சர்வதேசத் தரம் வாய்ந்த ஒரு அறிவியல் இதழில் வெளியிடப்பட்டிருக்கும் இப்பின்னூட்டங்கள் புறக்கனிக்க முடியாத/கூடாத வை.

கால அவகாசமிருந்தால் அனைத்துப் பின்னூட்டங்களையும் வாசிக்கலாம். ஆனால், இரண்டு பின்னூட்டங்களின் ஒரு பகுதியை மட்டும் கிழே கொடுத்திருக்கிறேன்.

//Indian scientists are not coming from another planet. They are the products of the same Indian society which is corrupt to its core. Indian education system may be able to produce tuition and coaching enabled work force to supply scientific/technical manpower-starved western countries, but it miserably failed to groom and promote people with innovative mind, people who ask questions. As a result we produce mainly technicians, not scientists or technocrats in real sense. Quality and integrity of Indian science was much better when there was only 20 universities and 500 colleges in Indian subcontinent (i.e. including Bangladesh and Pakistan) when the British left (1947). Now there are 376 universities and 17,700 colleges in India only with many new institutes with fancy and world class physical infrastructure but hardly any world class scientist like Satyen Bose or CV Raman. Currently Indian science is dominated by mediocre and below mediocre people with proper connections, high greed and ambition without having required scientific/technical capability. It’s like committing suicide to oppose such highly powerful “scientists” by any adventurous and honest person, still there in Indian science. I have no doubt that such “regulatory body” will eventually be grabbed by these “sciento-crates” (thanks to Dr. U. C Lavania for the term) and the show will go on as usual. //

//Not surprisingly, Indian scientific research in bio-medical field is a laughable matter in the Western world. An extremely small group of researchers with their reputation intact in the West have any impact worth noticing. How to tackle this problem? The students are NEVER asked to do experiments in schools or colleges; they are told to reproduce results that are expected. Then again, the root cause is not to challenge the authority of the lame teachers/professors who have such fragile ego that I don't even want to go into that discussion.//


Monday, March 3, 2008

இறப்பு - உரையாடல் - IV - இதழுதிர்தல்

இறப்பு பற்றிய தொடருரையாடலில் சென்ற பகுதியில் இறப்பதற்கு நிர்பந்திக்கப்பட்ட ஒரு இருதயச்செல்லைப்பற்றிப் பேசினோம். அவ்வகை நிர்பந்திக்கப்பட்ட இறப்பு (Necrosis) முறை மிகவும் கொடூரமான அல்லது ஒரு சீரற்ற நிகழ்வு என்றும் பார்த்தோம். ஆனால், இறப்பு எப்போதும் கொடூரமானதாக இருப்பதில்லை. இயற்கை அல்லது நிர்ணயிக்கப்பட்ட செல் இறப்பு (Programmed Cell Death -PCD) அபோடொசிஸ் (Apoptosis) என்றழைக்கப்படுகிறது.

இந்நிகழ்வைச் செல்லின் தற்கொலை என்றே குறிப்பிடுகின்றனர். Apoptosis - ap'o-to'sis என்ற கிரேக்க வார்த்தயின் அடிப்படையில் வைக்கப்பட்ட பெயர். இதன் பொருள் மலரிலிருந்து இதழ் உதிரும் நிகழ்வைக்குறிக்கும். இது தற்கொலை என்றழைக்கப்பட்டாலும், இந்நிகழ்வு, சூழல் நிர்பந்தங்களினாலோ அல்லது தியாகத்தினாலோ எழுவதல்ல.

பின்னர் ஏன் அபோடொசிஸ் இறப்புமுறை தற்கொலையென்றழைக்கப்பட வேண்டும்?

ஏனெனில், ஒரு செல் இறக்கவேண்டுமென்ற கட்டளை அச்செல்லினுள்ளிருந்துதான் வருகிறது. செல்லிலுள்ள உறுப்புகளின் செயல்பபட்டிற்கான கட்டளைகள், அச்செல்லின் உட்கருவிலிருந்து வருவதை முந்தய பகுதிகளில் பார்த்தோம். அப்படி ஒரு செல் இறக்கவேண்டும் என்ற கட்டளையும், உட்கருவிலிருந்தே வருகிறது. ஆனால், இறப்பு குறித்தான இக்கட்டளையும் செல்லின் பிறப்பின் போதே உட்கருவில் பொறிக்கப்பட்ட ஒன்று. இதுதான் உட்கருவிலிருந்து வரும் செல்லிற்கான கடைசிக்கட்டளை. தன்னையே அழித்துக் கொள்ளும் இக்கட்டளையை வெளியிடுவதாலேயே இந்நிகழ்வு தற்கொலையென்றழைக்கப்படுகிறது.

இக்கட்டளையைப் பொறுத்தவரை செல்லிற்குத் தேர்வுச்சாத்தியங்கள் இல்லையென்றுதான் சொல்லவேண்டும், ஏற்றுக்கொண்டுதானாகவேண்டும் (It has no option). கட்டளை பிறப்பிக்கப்பட்டபின் மாற்றிக்கொள்ளவோ, அல்லது இறப்புக்கான கட்டளையை பிறப்பிக்காமலோ இருக்கமுடியாது. செல்லின் உட்கருவில் இருக்கும் DNA க்களில் இறப்பிற்கான கட்டளையும் சேர்ந்தே பதிக்கப்பட்டிருக்கிறது. செல்லின் செயல்பாட்டிற்கான கட்டளைகளைப் பிறப்பிப்பது போலவே, இறப்பிற்கான கட்டளையையும் பிறப்பிக்கிறது.

செல்லிறப்பு எனும் நிகழ்வின் துவக்கம், மேலே குறிப்பிட்ட கட்டளையில் துவங்குகிறது. இறப்பிற்கான இக்கடைசிக் கட்டளையைப் பிறப்பித்த பின்னர், இறப்பு என்கின்ற நிகழ்வு துவங்க ஆரம்பிக்கிறது. இக்கட்டளையை உட்கருவிற்கு வெளியில் செல்லுக்குள் இருக்கும் சைட்டோப்ளாஸம் எனும் திரவத்தின் மூலம் மற்ற உறுப்புகளுக்குப் பரவச்செய்துவிட்டு, கடமைகள் முடித்த ஒரு திருப்தியோடு தம்முடைய இறப்பைத் துவங்குகிறது. இக்கட்டளைக்குப் பின் செல்லின் உட்கருவிற்கும் செல்லின் மற்ற உறுப்புகளுக்கும் இருக்கும் தொடர்பை துண்டித்துக் கொள்கிறது. உட்கருவினுள் இருக்கும் DNA க்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன. (DNA என்பது ஒரு வகை நியூக்ளிக் அமிலம் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். மேலும், அதில் நியூக்ளியோடைடுகள் எனப்படும் நான்கு வகையான மூலக்கூறுகளின் சீரான அமைப்பை உடையது என்று ஏற்கனவே நான் அறிந்தது) இங்கு இச்சீரான அமைப்பிலிருந்து தனித்தனிச் சிறு மூலக்கூறுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இதையே DNA அழிக்கப்படுகிறது என்று குறிப்பிடுகின்றனர்.[*]

இது இயல்பாக நிகழும் ஒரு நிகழ்வாக தாமாகவே நடக்கிறது, அதாவது புறத்திலிருந்து எவ்வித நிர்பந்தங்களும் இல்லாத போதும். தாம் இருக்கும் செல், தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்கான கட்டளையைப் பிறப்பித்துவிட்டது என்பதை அறியாத உறுப்புகள் தமது பணியைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கின்றன. ஏனெனில், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட கட்டளைகள் வரிசையில் இருப்பதால், அவை இறப்பிற்கான கட்டளையை உணருவதில்லை. இது ஏறக்குறைய மனிதனின் மூளை இறந்தபின்னும், ஒரு சில உறுப்புகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதற்கு இணையான நிகழ்வு.

இந்த Programmed Cell Death (PCD) எனும் நிகழ்வை நேரடியாக நாம் தொலைநோக்கியில் நோக்கும் வாய்ப்பிருந்தால், அதன் நிகழ்வுகள் கீழுள்ள வரைபடத்திலுள்ள படிகளில் நிகழும்.



அபோப்டொசிஸ் இறப்பு முறையின் முதல் நிகழ்வாக அச்செல் தனது சுற்றுப்புறத்துடனான தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறது. பின்னர், தனியாக ஒரு ஒற்றைச்செல்லாகத் தனித்து நிற்கிறது. பின்னர், இறப்பிற்கான முதல் அறிகுறியாகச் செல்லின்சுவரான ப்ளாஸ்மா இழைச் சுருங்கத் துவங்குகிறது. இதைச் சுருக்கம் என்பதைவிட செல்சுவரின் சுருங்கி விரிதல் போன்ற ஒரு அலைவுறு இயக்கம் என்று கொள்ளலாம். இதனை செல்லின் இறப்பின் நடனம் (dance of death) என்றழைக்கின்றனர். பின்னர், தனது செல்சுவற்றை மிகவும் சுருக்கிக்கொள்கிறது. பின்னர், சிறு பகுதிகளாகப் பிரிந்து பின்னர் செல்லின் இறப்பிற்கான ஆதாரமாக அதன் உடலின் சிறு பகுதிகளாக மிதக்கத்துவங்கி விடுகிறது. அபோப்டொசிஸ் இறப்பின் படிநிலைகளை முதலில் 1972 ஆம் ஆண்டு விளக்கியவர்கள், University of Aberdeen ஐச் சேர்ந்த Scottish விஞ்ஞானிகள்.

இப்படியாகச் சிதைந்த அச்செல்லின் உடல் என்ன ஆகும்? ஆம், அவைச் சத்தமில்லாமல் அருகிலிருக்கும் செல்களினால் உணவாக உட்கொள்ளப்பட்டுவிடுகின்றன. சிலநேரங்களில், அருகிலிருக்கும் செல்லினுள் சென்றபின்னும் சில உறுப்புக்கள் முழுமையாகவே இருக்கும். இப்புதிய செல்லின் குப்பைத்தொட்டிக்குள் (lysosomes) தள்ளப்பட்டு மக்கிய சூப்பாக மாறும் வரை அவை தமது கடமையைச் செய்துகொண்டிருப்பதும் உண்டு, தாமிருந்த செல் இறந்துவிட்டது என்பதையறியாமல்.

இப்படியாகவொரு செல் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டுவிடுகிறது.

இயற்கை இறப்பு அல்லது செல் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுக்கு எடுத்துக்காட்டாக இரண்டு உதாரணங்களைப் பார்ப்போம்.

முதலில் ஒரு தாயின் கருவறைக்குள் நுழைவோம். எல்லாரும் அங்கிருந்துதான் வந்தோம் அதனால் இந்தக்கருவறைக்குள்ள யார்வேண்டுமானாலும் நுழையலாம், வாங்க. தாயின் கருவறைக்குள் முதல் எட்டு வாரம் ஏறக்குறைய தடையற்ற செல்களின் பிறப்பு மட்டுமே இருக்கும். இவ்வெட்டு வாரங்களில் மொத்த உடலுக்கான வரைவுத்திட்டம் தீட்டப்படுகிறது. எட்டாவது வாரத்தின் இறுதியில் ஏறக்குறைய மனித உருவத்தைப் பெறுகிறது கரு. இப்போது, அவ்வுறுவத்தின் கைகளும், கால்களும் ஒரு துடுப்பு போலவே இருக்கும். பின்னர், நிகழ்கின்ற தொடர் செல்லிறப்புகளினால் கைகளிலும், கால்களிலும் விரல்கள் தோன்ற ஆரம்பிக்கும். இறந்த செல்களை அருகிலிருப்பவையே உணவாக்கிக் கொள்கின்றன. இப்படியாகப் பல இறப்புகளினால் நமக்கு வடிவம் கிடைக்கிறது.

மற்றுமொரு முக்கியமான செல்லிறப்பு நிகழ்வு நியூரான்கள் எனப்படும் நரம்புச்செல்களில் நிகழ்வது. மூளையிலும், தண்டுவடத்திலும் (spinal cord) இருக்கும் நியூரான்கள் மற்ற உறுப்புக்களுடன் ஒரு நரம்பு இழையினால் இணைக்கப்பட்டிருக்கும். அவை, ஒரு மின் சமிஞ்சைகளின்(impulses) மூலம் தாம் தொடர்பு கொண்டிருக்கும் உறுப்புகளின் இயக்கத்திற்கான கட்டளைகளைப் பிறப்பிக்கும். இவ்விணைப்பை அவை ஏற்படுத்திக்கொள்ளும் விதம் மிகவும் அதிசயிக்கவைக்கும் நிகழ்வு.

கருவின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட காலத்தில், இந்நியூரான்கள் மிகவும் அதிக எண்ணிக்கையிலான நரம்பு இழைகளை எல்லா திசைகளிலும் தமது புறத்தில் உற்பத்தி செய்து அப்படியே படரவிட்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட இழை, இணைப்பு தேவைப்படும் ஒரு செல்லையோ, திசுவையோ சந்திக்க நேர்ந்தால் அவை தமக்குள் ஒரு இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும். இப்படி உடலில் தேவையான இணைப்புகள் நடந்து முடிந்து ஒரு வளர்ச்சி நிலையை அடைந்தவுடன் இணைக்கப்படாமல் நியூரான்களின் புறத்தில் இருந்த இழைகள் மெதுவாக இறக்கத்துவங்கும். வேறு செல்களுடனோ அல்லது உறுப்புகளுடனோ தொடர்பு கொண்டால் மட்டுமே இவை தொடர்ந்து வாழமுடியும். அப்படி இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளாவிட்டால் அவை இறக்கவேண்டும். இவ்விறப்பு நாம் மேலே பார்த்த அபோடொசிஸ் வகையைச் சேர்ந்தது. இந்நிகழ்வின்பின் பல வியப்பான அறிவியல் உண்மைகள் உள்ளன, பதிவின் நீளமும் பேசுபொருளும் கருதி அவற்றை வேறு பதிவுகளில் பார்க்கலாம்.

இது ஏறக்குறைய நம் கைகளில் ஒரு மின்மூலத்துடன் இணைக்கப்ட்ட ஒரு மின்கம்பிக்கற்றைகளைப் போலவும், அக்கம்பிகளில் நமக்குத் தேவையானவற்றை நாம் பயன்படுத்திக் கொண்டபின்னர், மின்சுற்றில் இணைக்கப்படாத மின்கம்பிகள் தாமாகவே மறைந்து போவதற்கு இணையான ஒரு நிகழ்வு.

இந்நியூரான்கள் குறித்த எடுத்துக்காட்டை தேர்ந்தெடுத்ததற்கான மற்றொரு காரணம் neural networks என்ற நியூரான்கள் குறித்த ஆய்வுகள் சமீப காலங்களில் மிகவும் பிரபலமானவையாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கின்றன.

ஆனால், இத்தொடரில் இதுவரை இறப்பின் வகை மற்றும், இறப்பின் போது நிகழும் நிகழ்வுகள் குறித்துதான் பார்த்திருக்கிறோம். மிகவும் முக்கியமான கேள்வி, ஒருசெல் ஏன் இறக்கவேண்டும்? இறப்பு ஏன் நிகழவேண்டும் என்பதுதான் சுவாரஸ்யமான புதிர். இனி வரும் தொடர்களில் ஏன் இறப்பு? மற்றும், இறப்பு என்ற நிகழ்வு பரிணாமத்தில் சில உயிர்களிடம் (செல்களிடம்) மட்டும் எப்படித் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியது என்று பார்ப்போம்.

இனி வரும் தொடர்களில் இறப்பு என்றால் அது அபோடொசிஸ் (PCD) இறப்பையே குறிக்கும்.

*******************
1."SEX & THE ORIGINS OF Death", by William R. Clark
Figure Source:

*******************
குறிப்பு:
[*]
//(DNA என்பது ஒரு வகை நியூக்ளிக் அமிலம் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். மேலும், அதில் நியூக்ளியோடைடுகள் எனப்படும் நான்கு வகையான மூலக்கூறுகளின் சீரான அமைப்பை உடையது என்று ஏற்கனவே நான் அறிந்தது) இங்கு இச்சீரான அமைப்பிலிருந்து தனித்தனிச் சிறு மூலக்கூறுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இதையே DNA அழிக்கப்படுகிறது என்று குறிப்பிடுகின்றனர்.[*]//

மேலே மீண்டும் பேசப்பட்ட வரிகளில், மிகவும் சுவாரஸ்யமான ஒரு அறிவியல் சிக்கல் புதைந்துள்ளது. ஒரு DNA அழிக்கப்படுகிறது என்பது அதில் இருக்கும் நியூக்ளியோடைடுகளின் சீரான அமைப்பைக் குலைப்பது என்பது ஒரு உயிரின் முடிவைக்குறிக்கிறது. அப்படியானால், அதன் உயிர்த்தலுக்கான பண்புகளுக்கு எது காரணம்? அது உருவாகியிருக்கும் மூலக்கூறுகளா அல்லது மூலக்கூறுகளின் அமைப்பா? Is it the Matter or Configuration?

ஒரு DNAவில் இருக்கும் நியூக்ளியோடைடுகளின் அமைப்பை அழித்தால் ஒரு DNAவை அழித்ததாகிறது என்றால், நாம் மேலே பேசிய கட்டளைகள் போன்றவை, அதன் அமைப்பிலேதான் பொதிந்திருக்க வேண்டும். அப்படியானால் அவ்வமைப்பில் எந்த ஒரு மூலக்கூறை உட்காரவைத்தாலும் அது ஒரு உயிர் ஆகிவிடுமா, என்றால் நிச்சயம் இல்லை. அப்படியானால் இரண்டுமே தேவை என்பது ஊகிக்க முடிகிறது.

ஆனால், இருப்பது நான்கு மூலக்கூறுகள் அதன் அமைப்பில் பிறப்பிலிருந்து இறப்புவரையான செய்திகள் பொதிக்கப்பட்டிருக்கின்றன என்றால், அது என்னவகையில் பொதிக்கப்பட்டிருக்கும்? அமைப்புமுறையிலிருந்து அந்தக் கட்டளைகள் எவ்விதம் மூலக்கூறுளாக சைட்டோப்ளாசத்தின் உதவியில் செல்லின் உறுப்புகளை சென்றடைகின்றன? (மனிதனின் பல்வேறு உறுப்புகளுக்கிடையேயான தொடர்போடு குழப்பிக்கொள்ள வேண்டாம்). அவை மூலக்கூறுகளாக இருந்தாலும் அவற்றைச் சுற்றியுள்ள மின்புலமும், மின்சமிஞ்சைகளும்தான் இத்தொடர்புக்கு முக்கியமானதா? ஒருவேளை, மின்புலத்தின் முக்கியத்துவம் கருதிதான், செல்லுக்குள் இருக்கும் பொட்டாசியம் அயனியின் செறிவு அதன் உயிர்த்தலுக்கான முக்கியத்துவம் வாய்ந்ததாகிறதா?

இப்படி உங்களுக்கு எழுந்தது போலவே எனக்கும் பல விடைதெரியாத கேள்விகள் அலைக்கழித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இதுகுறித்த தேடலில், ஏறகனவே சில முடிவுகள் தெரிந்தாலோ அல்லது எங்காவது விளக்கப்பட்டிருந்தாலோ தெரியப்படுத்துங்கள். நானும் தேடுகிறேன், ஏதாவது கிடைத்தால், கிடைத்தது புரிந்தால், இது குறித்து மேலும் உரையாடுவோம்.

உயிருள்ளவை, உயிரற்றவை என பேதமில்லாமல் இயற்கையில் இருக்கும் சீர்மையும் (Symmetry) மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. இது குறித்து வேறு சமயத்தில் விரிவாக உரையாடுவோம்.

Tuesday, February 19, 2008

பட்டொளி வீசி பறக்குது பாரீர்

பட்டொளி வீசி பறக்குது பாரீர் என்று இந்தியாவின் பெருமையை பலரும் பலவிதமாகப் பார்க்க நினைத்தனர். ஆனால் இப்படித்தான் வீசச்செய்வோம் என்று சிலர் முனைப்புடன் இருக்கின்றனர்.

இறப்பு தொடருக்கு இடையில் இப்படி ஒரு தகவல் பதிவு தேவையா? என்று யோசித்தாலும் பேசப்படவேண்டியவை என்பதால் பதிவிடுகிறேன்.

இதோ இந்த ஆண்டிலும் இந்தியாவிலிருந்து ஒரு அறிவியல் கயமைத்தனம். சென்ற ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை, இந்த ஆண்டு ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை.

//A Massive Case Of Fraud
Journal editors are left reeling as publishers move to rid their archives of scientist's falsified research
William G. Schulz
A CHEMIST IN INDIA has been found guilty of plagiarizing and/or falsifying more than 70 research papers published in a wide variety of Western scientific journals between 2004 and 2007, according to documents from his university, copies of which were obtained by C&EN. Some journal editors left reeling by the incident say it is one of the most spectacular and outrageous cases of scientific fraud they have ever seen.//

முழுத்தகவல் இங்கே.

http://www.pubs.acs.org/cen/science/86/8607sci1.html

பல வகையில் ஆராய்ந்து அனுகவேண்டிய ஒரு நிகழ்வு. பொறுத்திருந்து பார்ப்போம், இந்திய அறிவியல் ஆராய்ச்சிகளின் மற்றுமொரு நிகழ்வாய்ப் போகப்போகிறதா இல்லை ஏதாவது ஒரு மாற்றத்தின் துவக்கமாக இருக்குமா என்று.

Thursday, February 14, 2008

இறப்பு - உரையாடல் - III - நெக்ரோசிஸ் - சீரற்ற இறப்பு முறை

இறப்பு குறித்த இத்தொடர் உரையாடலில், முதல் இரண்டு பகுதிகளில் உயிர்த்தோற்றம் பற்றிய ஒரு சிறு உரையாடலும், செல்கள் குறித்தும் உரையாடினோம். செல்லுக்குள்ளான நமது சுற்றுப்பயணம் உங்களையும் வியக்கவைத்திருக்குமென்று நினைக்கிறேன். 10 மைக்ரான் இருந்து கொண்டு உள்ளே ஒரு தனி அரசாங்கம் செய்துகொண்டிருப்பது மட்டுமல்லாமல் வெளியே இருக்கும் ஒரு பெரிய மிருகக்கூட்டை (நாமதான்)இயக்கிக்கொண்டிருக்கிறது.

போனபகுதியில நாம பேசுனது ஒன்னும் ஞாபகமில்லாவிட்டாலும் பரவாயில்லை இப்பகுதி உரையாடலுக்கு சில அடிப்படைகள் மட்டும் நினைவிலிருந்தால் போதும். ஆங்காங்கே தேவைப்பட்டால் எட்டிப்பார்த்துவிட்டு தொடர்ந்து பேசுவோம்.

நாம் சுற்றுப்பயணம் செய்துவிட்டு செல்லிற்கு வெளியே வரும்போது, ஒரு பரபரப்புசூழல் உருவானது என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஏன் அந்த பரபரப்பு?

இப்போது கவனித்தீர்களா செல்லின் மேல் இருந்த lymph திரவத்தின் ஓட்டம் குறைந்திருக்கிறது. ஆனால் இந்த திரவம் இரத்தஓட்டத்துடன் சம்பந்தப்பட்டது என்றல்லவா பார்த்தோம், இப்போது அதன் ஒட்டம் குறைந்திருக்கிறது என்றால்..?? ஆமாம் நீங்கள் ஊகித்தது சரிதான் இவ்விருதயச் செல்லான மையோகார்டியல் (myocardial) செல்லுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் ஏதோ குறைபாடு. அதனால் தான் இந்த லிம்ப் திரவத்தின் ஓட்டத்திலும் குறைபாடு இருக்கிறது.

அது என்னங்க குறைபாடு? ஏன் இந்தக் குறைபாடு? அதவிடுங்க.. அதுவா முக்கியம், ஒரு செல்லுக்கு.. அதுவும் இருதயச்செல்லுக்கு இரத்தம் செல்லவில்லையென்றால்..என்ன ஆகும்!? இது ஒரு மோசமான அறிகுறியாச்சே? மனித உடலிலுள்ள ஒரு செல்லுக்கு இரத்தம் போகலைன்னா என்ன அர்த்தம்? அச்செல்லுக்கு உணவும், ஆக்ஸிஜனும் போகவில்லையென்று அர்த்தம். ஒரு செல்லுக்குள் உணவும் ஆக்ஸிஜனும் செல்லவில்லையென்றால் என்னாவது? இருப்பு போதவில்லை அல்லது போதிய காச்சாப்பொருளின்மையால் தனது ஆற்றல் உற்பத்தியை உடனடியாக நிறுத்திக்கொள்கிறார் ஆற்றல் மூலங்கள் என்றழைக்கப்படும் மைட்டோகாண்டிரியா (mitochondria). உங்கள் பதட்டம் புரிகிறது , மைட்டோகாண்டிரியா தனது வேலையை செய்யமுடியாத சூழலில் இருந்தால் என்னாவது, செல்லின் உயிர்த்தலுக்குத் தேவையான ATP (adenosine triphosphate) இல்லாமல் போய்விடும்.

ATP இல்லையென்றால் செல்லின் மற்ற உறுப்புகளின் செயல்பாட்டிற்குத் தேவையான ஆற்றல் இல்லையென்று அர்த்தம். செல்லுக்குள் ATP ன் அளவு தேவையான அளவைவிடக் குறைய ஆரம்பிக்கிறது. நம் செல் இது போன்ற சூழ்நிலைகளை எதிர்பார்க்காத ஒன்றல்ல, உடனடியாக மாற்று ஆற்றல் மூலங்கள் முடுக்கிவிடப்படுகின்றன. அது என்ன மாற்று ஆற்றல் மூலம்? செல்லுக்குள்ளேயே இருக்கும், கொழுப்பு மற்றும் சில புரதங்களை ஆற்றலாக மாற்றிக் கொண்டு இவ்வாற்றல் தேவையை சமாளிப்பது. (செல்கள் கூட மாற்று ஆற்றலின் அவசியத்தை உணர்ந்திருக்கின்றன). ஆனால் இது ஒத்திப்போடுதலுக்கான ஒரு முனைப்பேயன்றி இதுமட்டுமே தீர்வல்ல. செல்லின் உயிர்ப்பு இயக்கம் உறைநிலையை நோக்கிச் சென்றுவிட்டது அல்லது செல்லுக்குளிருக்கும் இயந்திரங்கள் அனைத்தும் ஸ்தம்பித்து நின்றுவிட்டன.

ஏறக்குறைய அந்நிகழ்வு துவங்கியாகிவிட்டது. மேலே விளக்கப்பட்ட நிகழ்வில் பெரிதும் பாதிக்கப்படுபவை செல்லின் சுவற்றில் இருக்கும் பம்புகள்தான். இவற்றின் முக்கியப் பணியே, உள்ளே இருக்கும் பொட்டஷியம் அயனியின் செறிவை சீராக வைத்திருப்பதும், உள்ளே புகும் நீரையும் கால்ஷியம் அயனியையும் கட்டுக்குள் வைத்திருப்பதும்தான் என்று பார்த்தோம். மீண்டும் இயல்புநிலை திரும்பும் வரை இறப்பு நேராமல் இருப்பதற்கு இப்பம்புகளின் செயல்பாடு மிகவும் அவசியம். செல்லின் செயல்பாடுகளையும் மீறி வாழ்வா? சாவா? என்ற ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது நம் செல். இந்நிலையில் செல்லின் மற்ற உறுப்புகளுக்குச் செல்ல வேண்டிய ஆற்றல் அனைத்தையும் இப்பம்புகளுக்கே வழங்குகிறது செல்.**

செல்லுக்குள்ளிருக்கும் புரதத்தாயாரிப்புகள் அப்படியே உறைநிலையில் வைக்கப்பட்டுவிட்டன, மேலும் உட்கருவிலிருந்து வரும் கட்டளைகள் உறுப்புகளுக்குப் போய்ச் சேராமல், உறைந்து கிடக்கின்றன. இப்படி வேளை செய்யாத உறுப்புகள் எல்லாம் அப்படியே கழிவு போல தனது மறுசுழற்சியாளரான லைசோசோம்களுக்குள் தள்ளப்படுகின்றன. ஆனால், போதிய ஆற்றலின்மையால் அவையும் திணறிக்கொண்டிருக்கின்றன. இப்போது, செல்லுக்குள் எங்கு நோக்கினும் ஒரே கேள்வி, எங்கே ATP ?

என்னதான் கையிருப்பு ஆற்றலை செல்லின் சுவரில் இருக்கும் பம்புகளுக்கு மட்டுமே கொடுத்தாலும், தொடர் பற்றாக்குறையினால் பம்புகளும் இப்போது வேலை செய்ய முடியாமல் திணறி தனது முயற்சியை கைவிட்டு அமைதியாகின்றன. இதற்காகவே காத்திருந்தது போல் கால்ஷியம் அயனி மெதுவாக செல்லுக்குள் நுழைந்து அனைத்து உறுப்புகளையும் அரிக்கத் துவங்குகின்றன. மேலும், வெளியிலிருக்கும் நீர் மெதுவாக செல்லின் உள்ளே நுழைந்து, அச்செல்லை ஒரு பலூன் போல உப்பச் செய்து விடுகிறது. ஓரளவிற்கு மேல் செல்லை அதன் சுற்றுப்புறத்திலிருந்து காத்துவந்த செல்சுவரில் விரிசல்விழத் துவங்குகிறது. பின்னர் நீரின் அழுத்தத்தால், தன் உறுப்புகளை உடலின் இருளில் உமிழ்ந்துவிட்டு சலனமற்று கிழிந்து தொங்குகிறது அச்செல்.

இப்படி இறப்பதற்கு நிர்பந்திக்கப்படும் இறப்பு முறை நெக்ரோசிஸ் (Necrosis) என்றழைக்கப்படுகிறது.


சரி இப்போ இது ஏன் நிகழ்ந்தது? அல்லது இச்செல் இறப்பதற்கு நிர்பந்தித்தக் குறைபாடு என்ன? என்று பார்ப்போம். எல்லாம் கொழுப்புதான்.. அட திட்டலங்க.. கொழுப்புதான் காரணம். இருதயத்திற்கு செல்லும் இரத்தப் பாதையில் சேர்ந்த கொழுப்பு, இரத்த செல்களின் இறந்த உடல் என ஒரு குப்பையான கலவை அதன் சீரான ஓட்டத்தை தடைசெய்து கொண்டே இருந்து ஒரு நாள் அதுவே மிகப்பெரிய அபாயமாக மாறிவிட்டது. இதுபோன்ற கழிவுகளின் சேர்க்கையைக் களைவதற்கு உடலில் தற்காப்பு வீரர்கள் இருந்தாலும் நிலமை கட்டுக்கடங்காமல் போய்விட்டால் அவையும் இத்தடையை அப்படியே விட்டுவிடுகின்றனர். இப்படிப் பலநாட்கள் சேர்ந்த கழிவுகள் தீடீரென்று ஒருநாள் இருதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டத்தையே தடுத்துவிடுவதால், இருதயச் செல்கள் இறப்பதற்கு நிர்பந்திக்கப்படுகின்றன. இதை மாரடைப்பு என்ற பெயரில் புற உடலில் இதன் தாக்கங்களைப் பற்றி பலரும் அறிந்த ஒன்றுதான்.

அப்படியானால், இவ்விருதயத்துக்கு சொந்தக்காரர்.. ஆம், அவரை இப்போது உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கவேண்டும் அதனை அவருடைய துணைவியாரும் உறவினர்களும் பார்த்துக் கொண்டதால் அவரது நிலமையையும் அவரது தாக்கத்தையும் பற்றி மீண்டும் வேறு பகுதியில் மீண்டும் வந்து பார்ப்போம்.

ஆனால் செல்களின் இறப்பு என்பது இப்படிப்பட்ட கொடூரமான நிகழ்வுதானா? வேறு வழிகளில் செல்கள் இறப்பதற்கான வழிமுறைகளே கிடையாதா? என்ற கேள்வி நியாயமானதுதானே. ஆனால், உயிரியலில் இறப்பு என்பது இப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் (நெக்ரோசிஸ்) என்று பலகாலம் நம்பிவந்தனர் விஞ்ஞானிகள். ஆனால் பிறப்பைவிட அல்லது அதற்கு இணையான சுவாரஸ்யமான விசயம் இயற்கை இறப்பு. Programmed cell death (PCD) அல்லது அபோப்டிஸ் (Apoptosis) என்றழைக்கப்படும் இறப்பு முறை பின்னர் கண்டறியப்பட்ட ஒன்றுதான். இதன் கிரேக்க அர்த்தம் மலரிலிருந்து உதிரும் இதழ்கள் என்பது. இவ்வகை இறப்புமுறை தான் பரிணாமத்தில் விளைந்தது. இதைப் பற்றி விரிவாக அடுத்த பகுதியில் உரையாடுவோம்.

************************************

1. "SEX & THE ORIGINS OF Death", by William R. Clark


** குறிப்பு


//இந்நிலையில் செல்லின் மற்ற உறுப்புகளுக்குச் செல்ல வேண்டிய ஆற்றல் அனைத்தையும் இப்பம்புகளுக்கே வழங்குகிறது செல்.** //


இவ்வாக்கியத்தில் ஒரு மிக முக்கியமான உண்மை புதைந்திருக்கிறது என்றே கருதுகிறேன். வாழ்வதற்கான முனைப்பில் அச்செல் அதன் முக்கியப் பணியான சுருங்கி விரிதல் குறித்து முக்கியத்துவம் கொடுக்காமல், தனது உயிரைக்காப்பாற்றுவதற்கான முயற்சிகளிலேயே கவனம் செலுத்தியிருக்கிறது. இதை இரண்டு வகைகளில் அனுகலாம், 1. இது போன்ற சூழ்நிலையில், இச்செல் உயிர்த்திருந்தால்தான் மொத்த விலங்கும் உயிரோடு இருக்க முடியும் என்பதால் இப்படிப்பட்ட செயலைச் செய்ய அதற்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம். 2. தாம் ஒரு பகுதியாக இருக்கின்ற விலங்கின் உயிர்ப்போ அல்லது இறப்போ பற்றிக் கவலையில்லாமல், தன்னுடைய உயிரைக்காத்துக் கொள்வதில் அச்செல் முனைப்புடன் இருக்கலாம்.


இயற்கையாக இறக்கின்ற ஒரு மனிதனின் உடலில் ஒருவரது மூளையும், இருதயமும் முழுவதுமாக (இயற்கையாக) இறந்துவிட்டபின்னும், உடலின் பல பகுதிகளிலிருக்கும் உறுப்புகளின் செல்கள் இயற்கையாக இறக்காமலிருக்கும். மேலும், அவை பின்னர் இறப்பதற்கு நிர்பந்திக்கப்பட்டு நெக்ரோசிஸ் இறப்பு முறையில் இறக்கின்றன. இந்நிகழ்வு நாம் மேற்கூறிய இரண்டு காரணிகளில் இரண்டாவது காரணியையே முன்னிலைப்படுத்துகிறது.

உயிரியலின்(உலகின்) அடிப்படைச் சாரமே வாழ்தலுக்கான முனைவு என்றுதான் கருதத் தோன்றுகிறது. வெறும் முனைவு என்பதைவிட இம்முனைப்பில் ஏற்பட்ட மாற்றங்களும், பரிணாமங்களும் பிரமிக்க வைக்கின்றன அல்லது மிகவும் சிறுக்க வைக்கின்றன என்றுதான் கூறவேண்டும்.